ஜீவித்தேன் உந்தன் கவிதையில்-6
கவிதை-6
காலையில் குளித்து முடித்து கல்லூரிக்கு கிளம்ப சுடிதார் அணிந்தாள்.
எனக்குள் காதலெனும் பூகம்பம் நுழைந்து
கண்கட்டு வித்தையாய் என்னிதயத்திலேயே புதைந்து
என்னையே அடிமையாய் ஆளும் ராஜனாக
காதலென்னும் அம்பில் இதயத்தை வதைக்கின்றாய்
உன்னை பற்றி என்னும் தலைப்பில்
ஒரு கவிதை தானே
எழுது முயல்கின்றேன்.
உனக்குள் ஓராயிரம்
கவிதை தலைப்புகள் வெட்கமாய்
அடைபடுகிறதே…
நித்திலனை போல வரவில்லை ஆனால் தஸ்வின் இதயத்தில் ஆட்டிபடைக்க சிறு குழந்தையின் திக்கி திணறிய பேச்சாக முதல் கவிதை ரிதத்தினுள் எழும்பியது. அதனை எழுதி வைத்து தஸ்வினிடம் காட்ட ஆசையாக எடுத்து வைத்தாள். அவன் கோபம் லேசாய் மட்டுப்படலாம்
“எங்க கிளம்பற… இன்னிக்கு என்னை பொண்ணு பார்க்க வர்றாங்க. தெரியும் தானே. நீ பாட்டுக்கு காலேஜிக்கு கிளம்பினா யார் மத்த வேலையை பார்ப்பாங்க?” என்று கடிந்தாள் ரதி.
“இன்னிக்கா வர்றாங்க. நீ 15ஆம் தேதி தானே வர்றதா சொன்ன?” என்று தேதியை பார்க்க, இன்று தான் பதினைந்து என்று காலண்டர் கூறவும், “சாரி சாரி மறந்துட்டேன். அதான்… ஆனந்தி நான் லேட்டா எழுந்தாலும் திட்டலையா? காலேஜிக்கு லீவ் கூட சொல்லலை.” என்றாள்.
“அதெல்லாம் தெரியாது. குடும்பத்தோட நம்ம செல்வவிநாயகர் ஆலயத்துக்கு போகறோம். பொண்ணு பார்த்துட்டு அப்படியே வீட்டுக்கு வந்தாலும் வருவாங்க. அம்மா ஸ்வீட் செய்துட்டு இருக்காங்க” என்று ரதி வெட்கத்தோடு கூறினாள்.
“கமலேஷ் மாமா… போட்டோலயே பிடிச்சிருக்குனு சொல்லிட்டார் தானே. நேர வீட்டுக்கே வந்துடலாமே. ஏன் கோவிலுக்கு?” என்று ரிதம் சலித்தாள்.
“முதல் முறை கோவில்ல சந்திக்கணும்னு அவங்க அம்மா விருப்பப்படறாங்களாம். அதனால தான் பொன் கிடைச்சாலும் புதன் கிழமை கிடைக்காதுனு இன்னிக்கு நாள் குறிச்சிட்டாங்க.” என்று ரதி கூறிவிட, ரிதமோ ‘மாமியார் பயங்கரமா நாள் கிழமை பார்ப்பாங்களோ’ என்று நோட்டமிட்டாள்.
“நீ வேண்டுமின்னா உன் பிரெண்ட் கலாவிடம் சொல்லிடு.” என்றதும் போனை எடுத்தாள்.
ரிதம் கலாவிடம் தான் வரயியலாது என்ற காரணத்தை கூறிவிட்டப்பின், தஸ்வின் நினைவு வந்தது. கலா… சீனியர் கேட்டா எதுவும் சொல்லாத” என்று குறிப்பு வேறு கூறிவிட்டு வைத்தாள்.
‘அவனிடம் சொல்லலைனு வேற கத்துவான். ஆனா இப்படியே வளரவிட நான் தயாராயில்லை. இன்னிக்கு அவன் நினைப்பை மறந்து தூங்கறது பெஸ்ட்.’ என்று ஹாலில் ஓய்யாரமாய் போனும் கையுமாக இருந்தாள்.
ஆனந்தி வந்து போனை பிடிங்கி பிரிட்ஜ் மேலே வைத்து, சீவல் பிழியணும் வந்து உதவி பண்ணு” என்று சமையலறைப் பக்கம் இழுத்து சென்றார்.
இரண்டு மணி நேரம் சமையலில் சீவலை பிழிய வைத்து ரிதத்தை பிழிந்தெடுத்து விட்டார் ஆனந்தி.
“ம்மா…. என் முகமெல்லாம் ஆயிலா இருக்கு. இங்க பாரு டிரஸ்ஸெல்லாம் மாவு.” என்று கண்ணை கசக்கியவளிடம், “மறுபடியும் குளிச்சிட்டு லாஸ்டா எடுத்த சோலியை கட்டிக்கோ.” என்று கூறவும், கையை அலம்பிவிட்டு ஆனந்தியின் சேலையில் கையை துடைத்து முடித்து அறைக்கு வந்தாள்.
இங்கு தஸ்வின் முதல் ஹவரில் ரிதம் வரவில்லையென்றதும், பாடம் எடுத்து கிளாஸ் மேம் சென்றதும் ரிதம் வகுப்பறைக்கு வந்தான்.
ரிதத்தோடு இருக்கும் நட்பு வட்டத்தில் “ரிதம் வரலை? ஏன்?” என்று கேட்டான்.
“தெ…தெரியலை சீனியர். எங்களுக்கு எதுவும் தெரியாது” என்று மாறி மாறி கூறினார்கள்.
கலாவோ திருட்டு முழியில் நிற்கவும், “நிஜமா தெரியாது?” என்று கேட்க, தலையாட்டியவளின் போனை பிடுங்கி பார்க்க காலையில் ரிதத்திடமிருந்து அழைப்பு வந்த பதிவு காட்டியது.
“சீனியர்… அவ தான் எதுவும் சொல்லாதனு சொன்னா. அவங்க அக்காவுக்கு பொண்ணு பார்க்க வர்றாங்களாம். இவளையும் லீவு போட்டு வீட்ல இருக்க சொல்லிட்டாங்க. அவங்க வீட்டுக்கு பக்கத்துல செல்வ விநாயகர் கோவில் இருக்காம். அங்க தான் போகணும்னு சொன்னா.” என்று மடமடவென கூறினாள் கலா.
போனை அவள் மடியில் தூரயெறிந்து தஸ்வின் சென்றான்.
கல்லூரியிலிருந்து பைக்கை எடுத்து கிளம்பியவன் செல்வ விநாயகர் கோவில் முன்னால் இருந்த ஒரு சிற்றுண்டி கடையில் அமர்ந்து பழச்சாறை ஆர்டர் செய்தான்.
“மாப்பிள்ளை வீட்ல வந்துட்டாங்களாம். கிளம்பலாமா?” என்று ராஜலிங்கம் அழைக்க, ரதியோ சேலையணிந்து தயாராய் இருந்தாள். ஆனந்தியோ தொடுத்து வைத்த பூவை கத்தரித்து ரதிக்கு வைத்து விட்டு “இந்த ரிதம் எங்க?” என்று கதவை தட்ட, “ஐ அம் ரெடி” என்று ஒரு பக்கம் ஷாலை போட்டு தோளில் புரண்டு மறுபக்கம் கையில் சுற்றியபடி சோலியின் மேலாடையை அணிந்து வந்தாள்.
பளிச்சிட்ட இடையை கண்டு தலையில் அடித்தார் ஆனந்தி.
“இதை தாவணி மாதிரி கட்டிட்டு வாடி.” என்று திட்டவும், “சோலி இப்படி தான் போடணும்.” என்று உரைத்தவளிடம், “பல்லை தட்டப்போறேன். வாங்கும் போதே சொன்னேன். உன் பிரெண்ட்ஸ் கூட போனா எப்படியோ போட்டு தொலை. நான் சொல்லறப்ப தாவணி மாதிரி சுத்திக்கணும்னு” என்று விரட்டவும், தந்தையை துணைக்கு அழைத்தாள்.
“மாப்பிள்ளை வீட்ல எப்படி எடுத்துப்பாங்களோ. அம்மா சொல்லறாப்ள கட்டிக்கோடா” என்று செல்லம் கொஞ்சினார்.
கதவை தாழிட்டு மடமடவென ப்ளீட்ஸ் வைத்து சோலியை தாவணியாக கட்டி முடித்தாள்.
“தாவணியை தான் சோலியென்று மாத்தி புது டிசைனா வருது. நாம தாவணி எடுன்னா எங்க எடுக்கா. ஸ்டெயிலா சோலினு சொன்னா. இது என்னனா இந்த விலை விற்குது.” என்று ஆனந்தி நொடித்து கொண்டார்.
சோலி மூவாயிரம் கொடுத்து வாங்கியதிலிருந்தே ஆனந்தியின் புலம்பல் இது.
தருண் அக்காவின் தோளை சுரண்ட, “எருமை மாடே… நீ வேற கிளம்புடா” என்று ஆனந்தி மகனை அடித்து முன்னே தள்ளினார். “இதப்பாரு ரிதம் அங்க உங்கக்காவை பார்க்க வர்றாங்க. நீ பாட்டுக்கு வாயாடி தொலைக்காத” என்று கட்டளையிட, ‘ஆமா ஆமா.. வர்றவன் அப்படியே சின்ன பொண்ணை கட்டிக்கறேன்னு என் அழகுல விழுந்துடுவான். இந்தம்மாவுக்கு எப்பபாரு என்னை ஏதாவது சொல்லறதே வேலையா போச்சு’ என்று அமைதியாக வந்தாள்.
கோவிலுக்குள் நுழையும் போதே ராஜலிங்கம் போனில் அப்படியா நந்திக்கு பக்கத்துல இருக்கிங்களா. இதோ வந்துடறோம்” என்று அணைத்து வைத்தார்.
செல்வ விநாயகர் கோவில் பெரும்பாலும் ரொம்ப பெரிய கோவிலும் இல்லை. அதே சமயத்தில் சின்ன கோவிலாகவும் கருதயியலாது. விஷேச நாட்களென்றால் கூட்டமிருக்கும். மற்ற நாட்களில் வெறிச்சோடி இருக்கும்.
அமைதியான சூழலும், பெரிய அரசமரத்தடியும், டைல்ஸ் கற்களும் என்றிருக்க, குளுகுளுவென இருந்தது.
கமலேஷ் குடும்பத்தார் இவர்களை போலவே வந்திருந்தனர்.
கமலேஷின் தாய் தந்தை கமலேஷ் மற்றும் அவரது தம்பி அஜய் என்று நால்வர் வந்திருந்தார்கள்.
முதலில் நலம் விசாரித்து பேச துவங்கினார்கள்.
மூன்று பேர் தான் வர்றதா இருந்தது. நல்ல விசயத்திற்கு மூன்று பேர் போகக்கூடாதுனு நான் தான் அஜயை லீவு போட்டு வரச்சொன்னேன்.” என்று கமலேஷ் தாய் பார்வை ரிதத்தை அளந்தது.
ஏற்கனவே ரதியை கமலேஷை பேசி முடிவடையும் சந்தோஷத்தில் இருக்க, ரிதத்தின் பணிவும் புன்னகை முகமும் சின்ன மகனோடு சேர்த்து வைக்க சிந்தனையில் சுழன்றது.
ரதியும் கமலேஷும் கொஞ்ச நேரம் பேசிவிட்டு வர கூறிட, அவர்கள் சற்று தள்ளி சென்றிருந்தனர்.
“சின்ன மக என்ன படிக்கிறா” என்று கமலேஷ் தாய் சுலோச்சனா கேட்டதும், “பி.காம் பைனல் இயர்” என்று ஆனந்தி பதில் தந்தார்.
“அப்ப ரதிக்கு கல்யாணம் முடிச்சி அடுத்து ரிதத்துக்கு பார்ப்பிங்களா?” என்றதும் ராஜலிங்கமோ, “செலவோட தொகையை வச்சி தான் யோசிக்கணுங்க. அதிகப்படியா கடன் நகை என்று போனா, சின்னவளுக்கு லேட்டா கல்யாணம் பண்ணணும்.” என்றார்.
ரிதமோ, ‘காலேஜிக்கே போயிருக்கலாம். இவங்க என்ன அவளை விட்டுட்டு என்னை குறுகுறுனு பார்க்கறாங்க’ என்று நெளிந்தாள்.
சுலோச்சனா கணவர் திருமுருகனிடம் காதில் ஏதோ ஓதவும் அவரோ மகனை ஏறிட்டு நின்றார்.
திருமுருகனோ “உங்களிடம் கொஞ்சம் பேசணும்” என்று தனியாக அழைக்க, “தம்பி.. நீ வேண்டுமின்னா அண்ணியோட தங்கச்சி கூட கோவிலை சுத்திட்டு வா.” என்று அஜயை எழுப்பினார்.
அஜயோ சரியென்று எழுந்து விட்டான். வீட்டிலேயே லேசாய் கூறியே அழைத்து வந்தார்கள். சின்ன பொண்ணு பிடிச்சிருந்தா உனக்கு பேசவாடா?” என்று அஜய் அதற்கு முதல்ல பார்ப்போம்.” என்று பேச்சை முடித்துவிட்டான். இங்கு வந்ததும் ரிதத்தை அவனுக்கு பிடித்திருந்தது.
தருணிடம் பூஜைக்கு பூவை வாங்கி வர அனுப்பிடவும் அவன் வேகமாய் ஓடினான்.
திருமுருகனும், ராஜலிங்கமும் தனியாக டீக்கடை பக்கம் வந்திருந்தார்கள்.
விநாயகர் சன்னிதி ஒரத்தில் ஆனந்தி சுலோச்சனா இருக்க, அரசமரத்தடியில் கமலேஷ் ரதி பேசிக்கொண்டிருந்தனர்.
ரிதம் நடக்க, அவளை தொடர்ந்து அஜய் நடந்தான்.
பக்கவாட்டு புறம் வந்ததும் தஸ்வின் நேராக ரிதம் கையை பற்றி கோவிலின் சுவரோடு நிற்க வைத்து, “ஹலோ சார்… ஒரு போட்டோ மட்டும் எடுங்களேன். ரொம்ப ரேர்ரா ஆப்சேரி கட்டியிருக்கா.” என்று போனை கொடுக்க, அஜய் முழித்தான்.
ரிதமோ பயந்து நடுங்க, “ஹலோ யார் நீங்க? ரிதம் தோள் மேல கையை போடறிங்க” என்று கேட்டான் அஜய்.
“நானா… உரிமையா அவளை இழுத்து, இங்க என் பக்கத்துல நிற்கவச்சி போட்டோ எடுக்க தோள் மேல கைப்போட்டிருக்கேன். இன்னமும் தெரியலையா… இவ எனக்கு சொந்தமானவ.
தோள்ல கைப்போடுவேன் ஏன் இடுப்புலையும் கைவைப்பேன்.” என்று அவளை தன்னருகே நெருக்கினான்.
“தஸ்வின்.. ப்ளிஸ்.. இது கோவில் நம்ம காலேஜ் இல்லை.” என்று அவன் நெஞ்சில் கைவைத்து தள்ளவும் அஜயிற்கு ஏதோ புரிப்பட, சிலையாக நின்றான்.
“லுக்… போட்டோ எடுத்துட்டு கிளம்பறேன். உன்னை பார்க்கணும்னு வந்தேன். கண்ணுக்கு குளிர்ச்சியா பார்த்தாச்சு.” என்று அவளிடம் கூறிவிட்டு “பாஸ்…. போட்டோ எடுங்க” என்றான்.
அஜயோ ஒரு புறம் இரு அன்னைகள் பேசிக்கொண்டிருக்க, மறுபுறம் தன் அண்ணன் வருங்கால அண்ணியோடு பேசிட, நடுவில் கோவிலுக்கு பின்னால் ஏன் தனக்கு இந்த நிலை? என்று விழித்தான்.
“என்ன அஜய்.. ஒரு போட்டோ தானே எடுக்க சொன்னேன். ஏன் முழிக்கறிங்க… ஓ… ரிதத்தை உங்களுக்கு பேசறாங்கன்னா? பார்த்திங்கல… நாங்க லவ் பண்ணறோம். நடுவுல வர்றாதிங்க. வந்திங்க.. நரசிம்ம அவதாரம் எடுத்து குடலை உருவிடுவேன்.” என்று மிரட்ட ரிதமோ ‘என்னது எனக்கு இவரை பேசறாங்களா.?’ என்று விழித்தாள்.
“நீங்களாவே ரிதம் வேண்டாம்னு போயிடுங்க” என்றவன் போனில் செல்பி எடுத்து ரிதத்தின் கன்னம் தட்டி “கவிதை கவிதை கவிதைனு சுத்தற.. பிடிச்சிருந்ததா கிப்ட்?” என்று கேட்க அஜயை கண்டு கவலையாய் மாறி தானாக தலையாட்டினாள். அவள் தலையாட்டவும் தஸ்வின் வெளியேறினான்.
“என்னங்க இது உங்க லவ்வரா? வீட்ல தெரியுமா? உங்க அக்காவுக்கு?” என்று அஜய் கேட்க, “தெரியாது.” என்றாள் ரிதம்.
“என்னத்த கோவிலை சுத்த போய் உட்காருங்க. எங்க வீட்ல ஆளாளுக்கு பொண்ணு பிடிச்சா நம்ம விஷயமும் பேசலாம்னு இருந்தாங்க.” என்று சலித்து கொண்டு தனியாக போனான்.
ரிதமோ, தஸ்வின் எங்க போனான்? இப்ப அஜய் வீட்ல பேசி அக்கா கல்யாணம் நின்றிடுட்டா என்ன பண்ணறது.? என்று பயந்து போனாள்.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்