ஜீவித்தேன் உந்தன் கவிதையில்-5
கவிதை-5
நீண்ட நேரமாக நித்திலனிடம் பேசலாமா வேண்டாமா என்று யோசனையில் ஆழ்ந்து பிறகு அவரிடம் “சார் உங்களிடம் பேசணும் போல இருக்கு. நிறைய கவிதை என் மனசுல படறதை அப்படியே எழுதறிங்க.” என்று அனுப்பிவிட்டு ப்ளு டிக் விழுந்ததா என்று ஆராய்ந்தாள்.
நித்திலன் பார்த்ததாய் காட்டவில்லை. சோகமாய் மெத்தையில் படுத்து கொண்டாள்.
எங்கோ ரிங் டோன் அடிக்கும் சத்தம் கேட்டு விதிர்த்து எழவும், தனது அலைப்பேசி என்று தூழாவி எடுத்து பெயரை பார்த்தாள்.
‘நித்திலன்’ என்றிருக்க தூக்கம் களைந்து அமர்ந்து அட்டன் செய்யும் முன் கைகள் நடுங்க ஆரம்பித்தது.
“ஹே ரிதம் எப்படியிருக்க?” என்றது நித்தலன் குரல் அலைப்பேசி வாயிலாக முதல் முறை கேட்கின்றாள். அந்த குரலை செவியில் ஏற்றி, மூளையில் பதிய வைத்து, இரசிக்கும் போது, “ஹலோ.. ரிதம்…?” என்றதும், “சார்..சார்.. நல்லாயிருக்கேன். நீங்க?” என்று கேட்டாள்.
“நல்லாயிருக்கேன் மா. நானே பேசலாமானு கேட்க இருந்தேன். நேரமே தோதுபடலை. அப்பறம் லைப் எல்லாம் எப்படி போகுது.?” என்றார்.
“எப்பவும் போல ஜாலியா.. எனக்கு பிடிச்ச மாதிரி. சார்… என்னால நம்பவே முடியலை. உங்களிடம் பேசறேன். எப்படி சார் கவிதையா எழுதி தள்ளறிங்க. அச்சோ.. ஒவ்வொன்னும் ஒரு குட்டிக்கதை மாதிரி இருக்கு.” என்று கூறினாள்.
இதற்கு முன் இத்தனை புகழ்ச்சியாய் யாரிடமும் அவள் பேசியதில்லை. அவளுக்கு ஒருபுறம் மகிழுச்சியென்றாலும் மறுபுறம் பார்த்து வார்த்தை உபயோகப்படுத்து என்று எச்சரித்தது. இத்தனை பெரிய கவிஞனிடம் தவறான பெயர் வாங்கிடக் கூடாதென்று.
“அட புதுசா சொல்லு ரிதம். நிறைய பேர் இதை சொல்லிட்டாங்க.” என்று கூறினான் நித்திலன்.
“ம்ம்… ஆமா ஆமா. உங்க கமெண்ட்ஸ்ல கூட நிறைய புகழறாங்க பார்த்திருக்கேன்.” என்றதும், “அப்பறம் என்ன சமையல்?” என்றான்.
“அம்மா.. வத்தக்குழம்பு செய்தாங்க. பீட்ரூட் பொரியல்.” என்றாள்.
“ஓ.. ஸ்ரீரங்கத்து தேவதையா நீ.” என்றதும், “சேசே இல்லை.. ஆனாலும் கிட்டதட்ட அப்படி தான்.” என்றாள்.
“ம்ம்.” என்றதும், “சார் நீங்க என்ன சாப்பிட்டிங்க?” என்றதும், “காலையில உப்புமாமா. மதியம் ஆபிஸ்ல டீம் லஞ்ச் மா. அதனால வூட்டம்மா இன்னிக்கு சமைக்கலை.” என்றதும் ரிதம் யோசனையோடு சிரித்தாள்.
“மேடம் உங்க கவிதையை வாசித்து என்ன சொல்வாங்க?” என்று நித்திலனை பேட்டி எடுத்தாள்.
‘தஸ்வி’ என்ற எண் செகண்ட் காலிங்கில் காட்டியது.
அதனை கண்டு ‘ஆமா இவன் சண்டை போடுவான், சந்தேகப்படுவான், பிறகு சமாதானம் செய்வான், நான் இந்தமுறை பேசப்போறதா இல்லை. எனக்கு தஸ்வி வேண்டாம்.’ என்ற முடிவோடு அவனது போன் காலை மதிக்காமல் நித்திலனிடம் பேசிக் கொண்டிருந்தாள்.
“அதெல்லாம் வீட்டம்மா எழுதறதை எப்பவாது வாசிப்பாங்க. மத்தபடி கண்டுக்க மாட்டாங்க.” என்று கூறினான் நித்திலன்.
“சார்… மேம் பெயர் என்ன? முகநூல்ல இருக்காங்களா?” என்று நித்திலனின் மனைவியையும் காணும் ஆவலில் ரிதம் பேசினாள்.
“பெயர் பார்கவி… அவங்க முகநூல்ல இல்லைம்மா. அவ்வளவா சோஷியல் மீடியா பிடிக்காது.” என்றதும் ஏனோ ரிதத்திற்கு சிறுவருத்தம் கூடியது.
“அப்பறம்… சார்… உங்களோட கவிதை என் வாழ்க்கையோட சில நிகழ்வை பிரதிபலிக்குது தெரியுமா. நான் ரசித்த நிகழ்ச்சி உங்க கவிதையில் வருதா… அதை படிக்கிறப்ப நமக்குள்ள என்ன வேவ் லென்த்? இதே யோசனையா இருக்கு.” என்று கூறவும் காலிங் பெல் கேட்டது.
தருண் கதவை திறந்தான். ரிதம் பெயருக்கு கொரியர் என்றதும், அவனே கையெழுத்து போடவும் கொரியரை வாங்கவும் முன்வந்தான். ஆனால் கொரியரை எடுத்து வந்தவனோ “ரிதம் என்ற பெயர் உள்ளவங்க தான் வாங்கணும். லாஸ்ட் டைம் இப்படி தான் ஒரு வாண்டு வாங்கி திருடிட்டாங்க. எங்க மேல தவறா குற்றம் வந்துடுச்சு. சோ நான் ரிதத்திடம் கொடுக்கணும்” என்று அழுத்தம் திருத்தமாய் கூறினான்.
தருணோ, “ரிதம்மக்கா… அக்கா.. யே லூசு.. யாரிடம் பேசிட்டு இருக்க. கதவை திற” என்று கதவை தட்டினான்.
“எருமை மாடே… போன் பேச விடறியா டா…” என்று வெளியே வந்தாள்.
“ஏய்… ரிதம் என்னனு பாரு… அப்பறம் பேசலாம் பை” என்றதும் பை சார். என்றவள் வாசல் பக்கம் வந்து என்னடா?” என்று தருணை காட்ட அவளோ போனை கையில் வைத்தபடி வாசல் முன் வந்தாள்.
ஆனால் அப்பொழுது தான் ‘Nithilan’ என்று கொட்டை எழுத்தில் பளிச்சிட்டு கால் பதிவு அணைந்தது.
அதனை கண்டு கொரியராய் வந்து நின்ற தஸ்வின் பற்கடிக்கும் சத்தம் கேட்டது.
ரிதமோ, தம்பியை காண அவனோ சூப்பர் விஜயில் ‘ரஜினிமுருகன்’ படம் பார்ப்பதில் தீவிரமானான்.
“இதுல சைன் போடுங்க” என்று கூறிவிட்டு மெதுவான குரலில், “உள்ள உனக்கு தான் வுமன்ஸ் டேவுக்கு கிப்ட் வாங்கியது. காலேஜ்ல கொடுக்க நிற்க சொன்னா மேடம் சல்லுனு வந்துட்டிங்க. நானும் போன் பண்ணினா எடுக்கலை… இங்க வந்து எவனோட பேசிட்டு இருக்க? அந்த கவிதை கடன்காரனா? நாளைக்கு காலேஜ் வருவ தானே… அப்ப இருக்கு டி” என்று சுட்டுவிரலால் அச்சுருத்தி சென்றான்.
ரிதமோ தஸ்வினை இங்கு எதிர்பார்க்கவில்லை… பயத்தில் வெடவெடத்து அந்த கொரியரை வாங்கிக்கொண்டாள்.
தருணோ “என்னது அது?” என்று கேட்டான். அதெல்லாம் காதில் வாங்காமல் தனதறைக்கு சென்று கதவை தாழிட்டாள்.
வேகமாக பால்கனி வந்து எட்டிபார்க்க, ஹெல்மெட் அணிந்து பைக் கீயை திருகி பால்கனியை ஒரு பார்வை பார்த்து நின்றான் தஸ்வின்.
அவனது ஒட்டு மொத்த சினமும் அந்த பைக்கில் காட்டி இயக்கினான்.
தஸ்வின் கார் ரேஸர். அதனால் பைக் ஓட்டும் போதும் இப்படி தான் முறுக்கி கொண்டு வருவான்.
அவன் கோபத்தை போலவே அதிவேகமாய் உறுமும்.
ரிதத்திற்கோ ‘போச்சு.. சத்யா கூட பேசாதனு சொல்லி அவன் சண்டை இழுக்க, நான் பேசுவேன்னு அடம் பிடிக்க அந்த பஞ்சாயத்தே இன்னமும் ஓயலை. இதுல நித்திலன் சாரோட பேசறதையும் இவன் பார்த்தாச்சு. இதுக்கும் திட்டப்போறான்.
பிரேக்கப் பண்ணிட்டேன்னு சொன்னாலும் காதுல வாங்கறதில்லை. நீ பிரேக்கப் பண்ணுவ. நான் பண்ண மாட்டேன். நான் பிக்ஸ்டு’ என்று கூறி அடம் பிடிக்கும் அதிகாரமும் அடங்க மறுக்கும் திமிர் பிடிச்ச பிசாசு அவன்.
மெத்தையில் தலையை தாங்கி பிடித்து அமர்ந்திருக்க, தொலைப்பேசி ரிங் அலறியது.
‘தஸ்வி’ என்றிருக்க எடுத்து காதில் வைத்தாள்.
“கவரை பிரிச்சியா? இல்லையா?” என்றதும், “ஆஹ்.. சிஸ்..சிஸ்ஸரை தேடறேன்.” என்று தடுமாறினாள்.
“சோ… இன்னமும் பிரிக்கலை. அப்படிதானே?” என்று வள்ளென எரிந்து விழுந்தான்.
“ப்ளிஸ் நாம பிரேக்கப் பண்ணிடலாம். எனக்கு உன்னை கண்டா பயமா இருக்கு. நீ ஓவர் ஆட்டிடியூட்” என்று கூறவும், “இதே காரணத்தை அக்சப்ட் பண்ணி தான் நீ என் காதலை ஏற்றது.
ஏன்… கிஸ் பண்ணினப்ப ஓவர் ஆட்டிடியூட் தஸ்வினு கன்னத்தை பிடிச்சி கொஞ்சின. சத்யாவோட பேசாதனு சொல்லவும் சண்டை பெரிசாகவும் பிரேக்கப்பா? முதல்ல கவரை பிரிச்சி பாரு” என்றான்.
வேண்டாவெறுப்பாய் கவரை பிரிக்க அதில் ஒரு பாரதியார் கவிதையும், கூடவே கார் ரேஸ் நடைப்பெறும் இடத்திற்கான நுழைவு சீட்டும் இருந்தது.
“எனக்கெதுக்கு டிக்கெட்?” என்று கேட்டாள் ரிதம்.
“நான் கலந்துக்கிட்டா நீ தானே வரணும்” என்றான் அவன்.
“பச்… பெங்களூர்னு போட்டிருக்கு. அப்பா விடமாட்டார்.” என்று கூறினாள்.
“எனக்கு அதெல்லாம் தெரியாது வர்ற.. உனக்கான டிக்கெட்.” என்று பட்டென அணைத்தான்.
ரிதமோ பாரதியார் புத்தகத்தை தடவினாள்.
காதலொருவனைக் கைப்பிடித்தே -அவன்
காரியம் யாவினும் கைகொடுத்து,
மாத ரறங்கள் பழமையைக் காட்டிலும்
மாட்சி பெறச் செய்து வாழ்வோமடி!
என்ற பாரதியார் வரிகளுக்குள் அந்த நுழைவு டிக்கெட்டை வைத்து அனுப்பியிருக்க, அதனை படித்து கண்ணீர் முத்துக்களோடு சிரிப்பையும் உதிர்த்தாள்.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.