ஜீவித்தேன் உந்தன் கவிதையில்…-3

கவிதை -3

      கல்லூரி பேருந்து ஏறியமரவும், பத்து நிமிடத்தில் பதினொன்று முறை போனை நோண்டிவிட்டாள். மெஸன்ஞரில் நித்திலன் இன்னமும் அவளின் குறுஞ்செய்தியை பார்க்கவில்லை. சற்று கவலையாக மாறியது.

    யாரோ ஒருவரின் பதில் குறுஞ்செய்தி வரவில்லையென்றதில் கலக்கம் எதற்கோ என்று சிந்திக்க முற்படவில்லை.
 
    கல்லூரி வந்ததும் போனை சைலண்டில் போட்டுவிட்டு பாடம் கவனித்தாள். மழை மீண்டும் பொழியவும் கல்லூரி பிரேக் மணியடிக்க, கேண்டீன் போக எழுந்தார்கள்.
  
   அவளுமே எழுந்து சென்றாள். கேண்டீன் கடையில் சூடாக சமோசா விற்றுக்கொண்டிருந்தது.

    முகநூலில் நுழைந்து அப் டவுன் என்று தொடுதிரையை தேய்க்க, சற்று முன் நித்திலன் பதிவிட்ட போஸ்ட் கண்ணில்பட்டது.

    நித்திரை கலைந்தாலும் கம்பலையகற்றாது
    குளிர் காற்றை அண்டிவிடாது
    வெட்பம் தழுவ போர்த்தி கொண்டிருந்தேன்.

    சூடான குளம்பி நறுமணம்
    மனதை தட்டி இழுப்ப,
    செடிகளில் முகப் பருவாக மாறிய,
    மழைத்துளியை சுண்டிவிட்டு ரசித்தேன்.

      தூரத்தில் காகித கப்பல் கவிழுந்து கிடக்க,
    பால்யத்தை கடந்தேன்.

    புகைப்படக் கருவியை கையிலெடுத்து கலைஞனாய் என்னை நானே பாவித்தேன்.

     சூடான எகிப்து பிரமிடை ஒத்த
     பெரியட்டி தேய்த்து எண்ணெயில் பொரித்த
      சமோசாவின் ஆன்மா மெதுவாய் மேலொழும்ப
     சுவைத்திடும் ஈரப்பதம் நாவை இழுத்தது.

     இரண்டை வாங்கி திண்றபடி சாலையில் மலர்ந்த பூக்களில் பன்னீர் தெளித்த பூக்களை
     புகைப்படக்கருவியில் காட்சியை சிறைப்படுத்தினேன்.

       கர்வமாய் தேசமே மலர்ந்து விட்டதென சுற்றி பார்க்க,
      பூங்காயருகே நடைபாதையை வீடுவாசலென மாற்றியிருந்த பெண்ணவளின்

      துவைத்து வைத்த அணையாடை மழைநீரில் ஈரமாக,
      அடிக்குட்டை முட்டுதுணிக்கு வேறொரு கதராடையை எங்கு தேடுவாளென்ற

    கேள்வியை தாங்கி நடந்தேன்.
    இது டிஜிட்டல் இந்தியா தானோ என்ற மற்றொரு கேள்வியும் ஒட்டிக்கொண்டது.

    -நித்திலன்
  
 
     அதனை வேகமாய் படித்தவள் குறுஞ்செய்தியில் சிவப்பு வண்ணம் காட்டி செய்தி வந்ததை பறைச்சாற்ற, அதனை பார்க்க சென்றாள்.

     “ஹாய்… ரிதம். நேற்று மழை பெய்ததா… எங்க ஏரியாலயும் மழை. டன்லப் அங்க இப்படி தான் பார்த்தேன். ஆமா உங்க ஏரியா எது.?
 
    சின்ன சின்ன தமிழ் வார்த்தைகள் தான் ரிதம். நிறைய வாசிச்சா தானா வார்த்தைகள் கத்துக்கலாம். அதோட நல்ல ரசனை இருந்தா கவிதையா கோர்க்க முடியும். சிம்பிள்…. உனக்கு கவிதைனா அவ்ளோ பிடிக்குமா? நீயும் ட்ரை பண்ணி பாரு.

   அப்பறம் கவிதை எழுதினா எனக்கு சொல்லு.” என்று அனுப்பியிருந்ததான் அவன்.

    “நித்திலன் சார் நீங்க டன்லப்பா… நான் எஸ்டேட். நியர் பை ஆனா ஏரியா வேற தான். பட் பக்கத்துல இருந்து பார்த்த மாதிரி கவிதை. எங்க வீட்ல எதிர்ல சேம் இன்சிடெண்ட். படிச்சதும் ஒரு கணம் எங்க தெருவுல இருந்திங்களோனு கூட நினைச்சேன்.” என்று அனுப்பினாள்.

     “மழையோட நமக்கிருக்குற ஒரே ரசனை தான் அப்படி நினைக்க வச்சிருக்கும் ரிதம்.
   ஆமா இந்த ஏரியா தானா… சூப்பர்” என்று அனுப்பினார்.

    “சார்… நீங்க படிச்ச ஸ்கூல்ல தான் எங்கக்கா படிச்சா. வாவ்.. டூ கனெக்ட்டிவ்” என்று அனுப்பவும் “அந்த ஸ்கூலா… எத்தனாவது பேட்ச் என்று போகவும் நித்திலா உடனடியாக வருடத்தை கணக்கிட்டு கூறினாள்.

  “சார்… உங்களுக்கு என்ன வயசு.” என்று கேட்டதும் “ஏன் என் பிக் பார்த்து தெரியலையா?” என்று கேட்டு விட, “பிக்சரா… உங்க பிரைபல் பிக்ல யாரோ ஒரு தாத்தா…தா…. பிக்ல இருக்கு” என்று அனுப்பினாள்.

    “அது ரமணமகரிஷி மா. ஒல்ட் பிக்சர்ல இருக்குமே” என்று நித்திலன் கேட்டதும் “இல்லை உங்க கவிதைகள் கவிதை குழுவுல காட்டுது. உங்க பிக்ல அந்த தாத்தா போட்டோ இருக்கு. அபௌட்ல ஸ்கூல் காலேஜ் நேம் போட்டிருக்கு அவ்ளோ தான் காட்டுச்சு.” என்று அனுப்பவும் “ஓ… அப்ப நீ என் பிரெண்ட் லிஸ்ட்ல இல்லைனு நினைக்கிறேன்.” என்று அனுப்பினார்.

     கல்லூரி மணியடிக்கவும் “ஓகே சார். கிளாஸ் ஸ்டாட் ஆகப்போகுது பை.” என்று அனும்பி விட்டு போனை பையில் வைத்தாள்.

    வகுப்பு வந்தப்பொழுது அருகேயிருந்தவளோ “பேட் இருக்காடி?” என்று காதில் கிசுகிசுத்து கேட்டாள் யமுனா.

    “ம்.. இருக்கு.” என்று எடுத்து கொடுத்தாள். ரிதத்திற்குள் புரியாத கவிதை வரிகளை வைத்து குழம்பியவள் அதனை நித்திலனிடம் கேட்க தயங்கி குகூளில் தேடினாள்.

   அவள் கணித்தது போல அது பெண்கள் மாதவிடாய் காலத்தில் அணியும் ‘பேடை’ தான் ‘அணையாடை’ என்று குறிப்பிட்டிருந்தார்.
 
      ஒரு ஆண் கவிஞன் எப்படி இதை எழுதுகின்றான். இதை பற்றி பொதுவில் பேசலாமா? அதற்கு வந்த நிறைய கருத்தையும் ரிதம் பார்வையிட்டிருந்தாள்.

  நிறைய பெண்மணிகளும் அதற்கு கருத்து பகிர்ந்தனர்.
  
     உதட்டில் முறுவல் வந்தது. பெண்கள் இதையும் பேசலாமென்ற சிந்தனை முதலில் உதிர்த்தது.

      வாழ்வின் பக்கங்களில் முதல் முறையாக ஆண்களோடு பேசுகின்றாள். இதற்கு முன் இப்படி பேசி இருக்கின்றாளென்றால் அது தம்பி தருணும் தந்தை ராஜலிங்கமும் தான்.

        அன்றைய நாட்கள் முழுவதும் நித்திலன் என்பவனே மனதில் ஆட்சி செய்தான்.

       மாலை பஸ்ஸில் ஏறிவிட்டு முகநூலில் நுழையவும் நித்திலனுக்கு நட்பு கோரிக்கையை முன் வைத்தாள்.

    அரை நொடிக்கு ஒரு முறை அது ஏற்கப்பட்டதா என்று ஆர்வம் மேலோங்க தொடுதிரையை தடவியே கைரேகை தேய நோண்டிக் கொண்டிருந்தாள்.

     வீட்டுக்கு சென்றதும் அம்மா கையால் காபி பருகி முகம் அலம்பினாள் ரிதம்.

   தருண் வரவும் புத்தகம் படிக்க ஆரம்பித்தான். தாயோடு சேர்ந்து ஸ்ரீராமஜெயம் எழுத ஆரம்பித்தாள்.

   இம்முறை ரதியும் ஸ்ரீராமஜெயம் எழுதினாள். என்னவென்று விசாரிக்க ‘அம்மா தான் எழுத சொன்னாங்க’ என்று சுட்டிக் காட்டினாள்.

     ஆனந்திக்கு ஒரு பழக்கம். மகள்கள் இருவருக்கும் பூஜை  வழிபாட்டை அப்படியே அடுத்த தலைமுறைக்கு கடத்தினார். அதில் ஒன்று தான் கோவிலுக்கு அழைத்து செல்வதும் ஏதேனும் பிரதோஷம் என்றால் அசைவம் சாப்பிடுவதை தவிர்ப்பது. நல்ல நாளென்றால் வழிபட்டு படைத்து காக்கைக்கு உணவை வைத்து உண்பது.

   மகள்கள் இருவரையும் ஸ்ரீராம ஜெயம் எழுத கூறுவது. பெரும்பாலும் ரிதம் கோவிலுக்கு போவது அப்படியொன்றும் பக்தியில் அல்ல. தாயின் அதட்டலுக்காக ஆனால் ஸ்ரீராம ஜெயம் எழுதுவது மட்டும் அவளுக்கு பிடிக்கும்.

   ரதியை பொறுத்தவரை கோவிலுக்கு செல்வது பக்தியாக இருப்பாள். ஏன் குலத்தெய்வ வழிபாட்டில் பொங்கல் கூட வைப்பாள். ஆனால் இந்த ஸ்ரீராம ஜெயம் எழுதுவது மட்டும் விரும்ப மாட்டாள்.

    இன்று அக்காவும் சேர்ந்து எழுதவும் “என்ன மாப்பிள்ளை பையன் செட்டாகிட்டானா. எப்ப பொண்ணு பார்க்க வர்றாங்க?” என்று கிசுகிசுத்தாள் ரிதம்.

    “அடுத்த வாரம் புதன்.” என்று ரதி கூறும் போதே வெட்கம் பூசி நின்றாள்.

     “பொண்ணு கிடைச்சாலும் புதன் கிடைக்காதுனு வர்றாங்களா.?” என்று ரிதம் கேட்டாள்.

    ரதி சிரிக்கவும் ரிதமோ “ஏய் பெயர் என்னப்பா… அன்னைக்கு என்னவோ பிகாம் சம்பளம் அதுயிதுனு தான் நினைவுயிருக்கு.” என்று கேட்டதும் ரதி நாவை ஈரப்படுத்தி “கமலேஷ்.” என்றாள்.
   
    “யாக்… கமலேஷ்… அயன் மடத்துல வர்ற வில்லனாட்டும் இருப்பாரா?” என்றதும் “போடிங்க… மோட்டோவை பாரு” என்று போனில் எடுத்தவையை அன்னை அறியாது காட்டினாள்.

   “இதை எதுக்கு ஒளிச்சி காட்டுற” என்று பார்க்கவும் அக்காவுக்கு பார்த்த மாப்பிள்ளை அக்காவோடு ஜோடி சேர்த்து பார்த்தாள்.

      “நல்லாயிருக்கு ஜோடி. ஏய் பொண்ணு பார்த்த பிறகு மாம்ஸை இன்டடியூஸ் பண்ணு.” என்று கொடுத்து விட்டு எழுந்தாள்.

     படிக்க எடுத்து பாதி அசைன்மெண்ட் எழுதியவளுக்கு தோழி யமுனா போன் செய்தாள். வகுப்பு ஆரம்பிக்கும் நேரம் பாத்ரூம் சென்றவளால் என்ன நடத்தினாங்க என்று ரிதத்திடம் கேட்டு பேசிவிட்டு வைத்தாள்.

  ரிதமும் நடத்தியதை சுருங்க கூறி முடித்து போனை கீழே வைக்கும் நேரம் முகநூல் நோட்டிபிகேஷன்  வந்து முன் நின்றது.

    ஆசையாய் அதனுள் செல்லவும் நட்பு கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டதென்று நித்திலனிடமிருந்து வந்தது.

    வேகமாய் அவரின் பழைய கவிதைகளை நோண்டினாள். படிக்க படிக்க வசனக்கவிதைகளாக இருந்தது. ஆனால் வார்த்தலயில் ஜாலம் காட்டி கவிதையில் கருவை ஏற்றி அழகாய் கொடுத்திருந்தார்.

     அனைத்தும் ரிதத்திற்கு எளிமையாக அதே நேரம் வாசிக்க சுவையாக இருந்தது.

     எப்படி இந்த மனுஷன் எழுதிட்டே இருப்பாரா… வந்துட்டே இருக்கே.’ என்று கவிதைகளாக வாசித்தாள்.

    வாசிக்க வாசிக்க வந்துக்கொண்டிருந்தது. அனைத்து கவிதைக்கும் குறைந்த பட்சம் நூறை தாண்டிய லைக்ஸும் நூற்றியம்பது கருத்துக்களும் இருந்தன.

   சட்டென்ற மின்னல் வெட்டியது. கவிதை எழுதியவனின் தோற்றம் தேட சொல்லி.

   உடனடியாக போட்டோ இருக்கும் பக்கம் சென்று தேடவும் நித்திலன் இருந்தான்.

    அடர்ந்த கேசம், பிறை நெற்றி, வசீகரிக்கும் விழிகள், கூர்நாசி, சிவந்த உதடு, அதில் வெண்ணிறமாக பற்கள் பளிச்சிட உள்ளம் கொள்ளை கொல்லும் வகையில் இருந்தான்.

     தன்னை மறந்து மீண்டும் மீண்டும்  அவனின் எல்லா புகைப்படத்தை பார்த்து நின்றாள்.

     சில புகைப்படம் அலுவலக புகைப்படமாக இருந்தது. கோர்ட் சூட் போட்டு அழகாய் இருந்தான். சிலது கேஸூவலாக காரில் அமர்ந்து இருந்த புகைப்படங்கள். அதிலும் ஒற்றை காலை மடக்கி ஒரு கையால் தலையை கோதியபடி நின்றது உள்ளத்தின் ஆழத்தில் பதிந்தது.

     நித்திலன் மற்றவரோடு பேசி பழகும் பாங்கை கண்டாள். சற்று முகம் சுருங்கியது. சில இடத்தில் பச்சையாய் கொச்சையாய் பதில்கள்.

   ஆனால் அவர்கள் நெருக்கமான நண்பர்கள் பேச்சு என்று புரிந்திட அதிக நேரம் தேவைப்படவில்லை. ஆனாலும் ரிதத்திற்கு சற்று வருத்தம் வந்து சென்றது.
  
    பேச்சு போதாதென்று ஒரு புகைப்படத்தில் கையில் மதுபானத்தை வைத்து இருந்தான். ரிதத்தின் இதயமே வெற்றிடமாக மாறிய நிலை.

   நித்திலன் நீ குடிப்பியா? ஓமைகாட்… ஆனா நீ ஆபிஸ் கேங்கோட டிரிங்க்ஸ் சாப்பிடறனு தெரியுது. ஆனாலும்… என்ற வருத்தம் அதிகமாகியது. இதே வேறொரு நபராக என்றால் மூடிவைத்து மனதில் திட்டி ‘போடாவென்று’ என்று துச்சமாய் கடந்திருப்பாள். 

    ஆனால் தான் நேசித்த கவிதையின் சொந்தக்காரன் இப்படியா என்ற மனதாங்கலோடு வேறு புகைப்படங்களை கண்டாள்.

   இம்முறை புகைப்படகலைஞன் போல சில போட்டோவை கண்டாள். கவிதையோட போட்டோகிராபி வேற தெரியுமோ அழகா எடுத்திருக்கார் என்று ரசித்தாள்.

   அடுத்து அதற்கு கீழே இருந்த நித்திலனின் புகைப்படத்தில் விளக்கொலியில் நித்திலன் கண்கள் பளிச்சிட அதில் விட்டில் பூச்சி போல அதையே மொய்த்து பார்த்தாள். அந்த கண்ணில் கண்ணனின் மாயம் இருந்தது. அவளை கட்டி இழுத்து சென்றது.

   யாரோ வரும் அரவம் கேட்கவும் மாயம் அறுபட்டது. பக்கென்று உள்ளம் பதற வேகமாய் முகநூல் கணக்கிலிருந்து லாக்அவுட் செய்து வெளிவந்தாள்.

     ஏதோ உள்ளத்தில் முதல் கள்ளம் புகுந்த உணர்வில் ரிதம் மனம் இருந்தது.

-தொடரும்.

பேரரளி (எ) பிரவீணா தங்கராஜ்.