ஜீவித்தேன் உந்தன் கவிதையில்…-2

உந்தன் கவிதை-2

       மஷ்ரூமை கண்டப்பின் கவிதை, மழை, நித்திலன் இதெல்லாம் மறந்தே போனாள். ‘நமக்கு சோறு தான் முக்கியம் குமாரு’ என்று தம்பியிடம் மல்லுக்கட்டி தருணிடமிருந்து தனது பங்கை விட அதிகமாகவே எடுத்து போட்டு சாப்பிட்டாள்.

    தருண் எப்பவும் போல சிகையை பிடித்து இழுத்து “போடி வினை பிடிச்சவளே. என்ன சாப்பிட்டாலும் உடம்புல ஒட்டாது.” என்று திட்டினான் பத்தாவது படிக்கும் குட்டி காளை.  

    “எனக்கு அதான் வேணும் தம்பி.” என்று இன்னமும் வெறுப்பேத்தினாள்.

   தருண் கோபமாய் முகம் திருப்ப, தம்பியை சமாதானமும் செய்து பாடலை போட்டு சிரிக்க வைத்தாள்  தந்தையோ ரிதத்தை பார்த்து “சின்னது என்னமா அழகா சிரிக்குது.” என்று ராஜலிங்கம் கூறவும் “கண்ணு வைக்காதிங்க.” என்று ஆனந்தி மணி ஏழாகவும் சுற்றி போட்டார்.

    “நம்ம ரதிக்கு தரகர் ஒரு வரன் கொடுத்திருக்கார்.” என்றதும் ரதி அன்னையும் தந்தையும் பார்த்துவிட்டு ஓரமாய் அமர்ந்தாள்.

    “ஏய் அக்காவை ஏறக்கட்டுங்க” என்று ரிதம் விசிலடிக்க, “என்னடி இது ஆம்பள பிள்ளை கணக்கா. பார்க்க பொறுக்கி மாதிரி இருக்கு” என்று திட்டினார் ஆனந்தி.
 
     “அம்மா… அக்காவுக்கு மாப்பிள்ளை ஆம்பிள பிள்ளையா தானே பார்க்கணும். இதுல பொறுக்கி மாதிரி இருக்குனு சொல்லற. கொண்டா… போட்டோ பார்ப்போம்” என்று பிடுங்கினாள்.

      “பாருங்க இவளை. இவளை சொன்னா இப்படி பேசறா. நானே இன்னமும் மாப்பிள்ளை போட்டோ பார்க்கலை.” என்று ஆனந்தி ரிதம் பிடுங்கியதால் கூறினாள்.

     அதற்கும் ரிதம் “என்னம்மா அப்பா போட்டோ இன்னமும் பார்க்கலையா. எப்படி கல்யாணம் பண்ணின” என்று கலாய்த்தாள்.

    “ரிதம் என்ன விளையாட்டு பேச்சு சரியில்லை.” என்று கோபமாய் அதட்டினார் ராஜலிங்கம்.

      “நான் என்ன சரியில்லாம பேசினேன். பார்க்குற உங்க பார்வை தான் தப்பா இருக்கு.” என்று ஆசையாய் அக்காவுக்கு பார்க்க வந்த மாப்பிள்ளை போட்டோவை பார்க்காமலேயே வைத்து விட்டு அறைக்கு சென்றாள்.

     “அவ போகட்டும் மா.” என்று தருண் முதலில் போட்டோ பார்த்தான்.

    “அழகா இருக்கார் மா. ஏய் அக்கா இங்க பாரு” என்று ரதியிடம் நீட்டவும் ரதியோ வாங்க தயங்கி தந்தையை ஏறிட்டாள். தருண் ரதியிடம் போட்டோ கொடுத்துவிட்டு ரிதத்திடம் கூற ஓடினான்.

    “நீ தான் மா பார்த்து சொல்லணும். பிடிச்சிருக்கானு சொல்லு” என்று கேட்டார்.

     ரதியோ தயக்கமாய் வாங்கி பார்த்தாள்.
    காதலிப்பவருக்கும் பெற்றோர் பார்க்கும் வரணுக்கும் ஒரே வித்தியாசம். காதல் செய்பவர்கள் எதச்சையமாய் பார்க்கும் சக வயது கொண்டவர்களை எல்லாம் களவாடும் பார்வை பொதிந்து ஒரு வித எதிர்பார்ப்பு கலந்து தேடுதலில் இருக்கும்.

   மனதுக்கு நெருக்கமான பிடித்தமான செய்கைகள் கொண்டவர்களை கண்கள் விரும்பி பார்க்கும். அதிலும் எதிர் புறமும் அதே ரியாக்ஷன் தெரிய வந்து, தைரியமாய் பகிர்ந்து இருவரும் தங்கள் எண்ணத்திற்கு அடிபணிந்து  காதல் என்று ஆரம்பிக்கின்றனர். அது திருமணத்தில் முடியவே இருவரும் போராடி சிலர் வெற்றியும் சிலர் தோல்வியும் அடைகின்றனர்.

   இதற்குள் அலைப்பேசி வாயிலாக நெருக்கமும் பேச்சும் கூடுதலாகும்.

   பெற்றோர் பார்த்து வைக்கும் திருமணம் என்றால் இதோ தந்தையே தனது மகளுக்கு இப்படியொருவன் தன்னை போல தன் குழந்தையை குழந்தையாய் பார்த்து கொள்வானென்ற நம்பிக்கையிலும், தனக்கு பிடித்ததவன் மகளுக்கும் பிடிக்கும் ஒரே ரசனை தட்டுப்படும் என்று எண்ணி புகைப்படமோ நேரிலோ பார்த்து மகளுக்காய் மெனக்கெடுவது.

    ரதி தயக்கமாய் வாங்கி பார்த்தவளின் கண்ணில் ஒரு வித மலர்ச்சி தெரியவும் ஆனந்தி ராஜலிங்கத்திடம் பார்வை பரிமாற்றத்தோடு பேசிக்கொண்டனர்.
 
    “உங்களுக்கு பிடிச்சா ஓகேப்பா” என்று கூறி முடித்தாள்.

      “எனக்கு பிடிச்சதால தான் டா. போட்டோ வீட்டுக்குள்ளே வந்திருக்கு.  ஜாதகமும் பொருந்தியதா அவங்க வீட்ல சொன்னாங்க. நம்ம பதிலை தான் தரகர் கேட்டு விட்டார்.” என்று ஆனந்தியை பார்க்க, “தாராளமா பொண்ணு பார்க்க வர சொல்லலாமா ரதி?” என்று ஆனந்தி ரதியிடம் கேட்க, “உங்கயிஷ்டம் பா” என்று ஓடினாள்.

     எத்தகைய ஆனந்தம். தாய் தந்தையர் மகளிடம் அபிப்ராயம் கேட்க, அதற்கு ‘உங்கஷ்டம் போல செய்யுங்கள்’ என்ற வார்த்தை பெற மகிழ்ந்தார். அதில் மகளை புரிந்து கொண்ட பெருமை கூடியிருந்தது.

    பெரும்பாலும் தற்போது இந்த பாக்கியம் பெற்றோருக்கு கிடைப்பதில்லையே. கண்குளிர தாய்தந்தையரின் அனுமதியோடு எத்தனை திருமணம் நடக்கின்றது. இதே தெருவில் தனது தோழி கோகிலாவின் இரண்டாவது மகள் திடுதிப்பென்று மணந்து வந்து விட்டாளே எத்தகைய வேதனை அடைந்தார் கொஞ்ச நாட்களில்.

    இங்கே தருணோ அக்காவுக்கு பார்த்த மாமாவோட போட்டோவை நான் தான் முதல்ல பார்த்தேனே. பௌவ் பௌவ்.” என்று தருண் இம்சை செய்ய, “தருண் இங்கிருந்து போயிடு. இல்லை மண்டையை உடைச்சிடுவேன்” என்று ரதி கூறினாள்.

     “ஏய்… அப்பா உன்னை திட்டவேயில்லை. அதுக்கே ஓவரா சீன் போட்டுட்டு வந்துட்ட. என் உன்னை அப்பா எதுவும் சொல்லக் கூடாதா. ரொம்ப பண்ணற பெரிய அக்காவுக்கு பதிலா பேசாம உன்னை பேக் பண்ணி அனுப்பிடலாம்  பேசாம நீ கல்யாணம் பண்ணிட்டு இங்கிருந்து போயிடு.” என்று தருண் கூற அவளருகே இருந்த பென் ஸ்டான்டை எடுத்து தூக்கியெறிந்தாள்.

    “ஏ ஏ.. படலையே படலையே.” என்று  ஓடினான். “சும்மா இருக்கியா அவ அப்பறம் நைட்லேம் தூக்கி போட்டுட போறா போடா ” என்று ரதி கூறவும், “லாஸ்ட் டைம் என்னோட வாட்ச் தூக்கி போட்டுட்டா. இப்படியே பண்ணினா அவளுக்கு பிடிச்ச கண்ணாடி பொருட்களா உடைப்பேன்.

    இவ மட்டும் கண்ணாடில இருக்கற கியூட் திங்க்ஸை கலெக்ட் பண்ணறா. ஆனா பழக்கத்தை பாரு… கோபம் வந்தா கண்டதையும் தூக்கி போடறா. ஏன் அவ திங்க்ஸை தூக்கி எறியலாம்ல” என்று தருண் கோபித்து கொண்டான்.

     “டேய் உன் ரூம்ல போய் படு” என்று ரதி அனுப்பவும் தருண் சென்றுவிட்டான்.

    ரிதத்திற்கு இந்த முரட்டு குணம் உண்டு. கோபம் கண்ணை மறைத்தால் கையிலிருப்பது உடைப்படும். அவளை கோபப்படுத்தி பார்பவர்களின் ஒன்று அவர்களுக்கு தான் நோக்காடு உண்டாகிவிடும். இல்லை அவர்களுக்கு பிடித்த பொருட்களோ கையிலிருப்பதோ உடைப்படும்.

    கோபப்படும் ஆட்கள் நேரில் இருந்தால் அவர்கள் மேலே கூட தூரயெறிவாள்.

    புசுபுசுவென கோபத்தோடு தம்பியை திட்டி அனுபுபியதும் ரதி பேசினாள்.

    “போட்டோ பார்த்தியா அவர் எப்படியிருக்கார். எனக்கு மேட்சிங்கா இருக்காரா?” என்று ரதி ஆசையாய் கேட்க, “நான் போட்டோ பார்க்காமலேயே கொடுத்திட்டு வந்துட்டேன். எனக்கு எதுக்கு பிடிக்குனும். உனக்கு பிடிச்சா போதாது.” என்று ரிதம் பேசவும் ரதி முகத்தில் சன்னமாய் நறுமுகை பரவியது.

     உறங்கும் நேரம் பாடலை கேட்க, “எனக்கு பிடிச்சிருக்கு ரிதம். பார்க்க நல்லாயிருக்கார்.” என்று வெட்கம் கொண்டு கூறினாள்.

    “வரேவாவ்… அப்போ மாமா பத்தி சொல்லு டைம் போகும்” என்று முகநூலுக்கு செல்லயிருந்தவள் போனை தனியாக வைத்து கதை கேட்க ஆரம்பித்தாள்.

    “B.com முடிச்சிட்டு அக்கவுண்டடன்டா இருக்காராம். இப்ப 22000 சம்பளமாம். ஒரே பையனாம், சொந்த வீடு இருக்காம். வீடும் இங்க தான் பக்கம் போல சேலையூர் போட்டிருந்தது.” என்று தாய் தந்தையருக்கு அருகே தான் சொந்த வீட்டில் இருக்க போகின்ற கரவில் கூறினாள் ரதி.

       “இதென்ன அப்பா பக்கத்திலயே என்ன ஜாதகம் அமையுதுனு தேடினாரா. அப்போ லோகேஷனால அமைந்ததா.?” என்று கேட்டு கலகலவென சிரித்தாள் ரிதம்

   “சொந்த வீடு இருக்கா… அப்ப இதென்ன வீடு படிப்பு எல்லாம் பார்த்துட்டு செட்டில்டுனு வருதா” என்று நகைத்தாள்.

    “இப்ப என்ன சொல்ல வர்ற?” என்று கடுகடுத்தாள் ரதி.

      “காதல்… அதுவா வரணும். பச்… நான் எல்லாம் லவ் மேரேஜ் பண்ண போறேன் பா” என்றதும் ரதி வாயை பிளந்து “யாரையாவது விரும்பறியா ரிதம்” என்றாள் ரதி.

     “அச்சோ… என் டேஸ்ட்டுக்கு எவனும் செட்டாகலையே. இதுவரை எட்டு பேர் பிரப்போஸ் பண்ணிருக்காங்க. எனக்கு யாரையும் பிடிக்கலை இந்த ‘பூம்’ ‘பட்டர்பிளை மூவிங்’ ‘ஹார்ட்ல பூ பூக்கறது’ எதுவும் வரலை.

     வெயிட்டிங் தி மௌமெண்ட். பிடிச்ச மாதிரி ஒருத்தன் வந்தா ராஜலிங்கத்திடம் உடனடியா சொல்லணும்” என்று கனவில் பேசுபவளை கண்டு, தலையிலடித்து படுக்க ஆயத்தமானாள்.

      மழை இன்னமும் விடாமல் இருக்க மெதுவாய் பால் கனி வந்தால், தூரத்தில் நாய் ஒன்று குலைக்க சாலையில் ஒருவர் சிகரெட்டை பிடித்து இழுத்து அதனை சட்டை செய்யாமல் சென்றார்.
  
     மற்றொரு இடுக்கு ரோட்டில் லேம்போஸ்ட் அருகே பைப் போன்றதொரு இடத்தில் உறங்கும் பிச்சைக்காரன் ஒருவன் மழையையும் பாராமல் ஓடிவந்தான். சட்டென கால்வாயில் போகும் தண்ணீரில் கைகளை விட்டு என்னவோ செய்ய ரிதம் அவனை நெற்றி சுருங்கி என்ன செய்கின்றானென கண்கானித்தாள்.

     அந்த பிச்சைக்காரனோ எதையோ எடுத்து விட்டு சிரிக்க, கால்வாய் நாற்றம் இங்கு அடிப்பது போல ரிதம் முகம் சுழித்தாள்.

      அங்கேயிருந்த தண்ணீரில் எடுத்த நாய் குட்டியை அலசி விட்டு முத்தமிட்டு தன்னோடு அணைத்து படுத்து கொண்டார்.

     ரிதத்திற்கு என்னவோ போன்றதொரு மகிழ்ச்சி ஆட்டிப்படைத்தது.

    அந்த பிச்சைகாரனை பாராட்ட வேண்டுமென்று ஆசைக் கொண்டாள்.

    இந்த இரவில் ரிதம் கதவை திறந்து சென்றால் ராஜலிங்கம் சிங்கமாய் கர்ஜித்திடுவார்.

    போதாதற்கு ஆனந்தி பைத்தியம் என்ற பட்டம் கட்டிவிடுவார்.

      அதனால் காலையில் பால் மற்றும் பிஸ்கேட் எடுத்து சென்று காணலாமென்று மழையில் கையை வைத்து ஆட்டி விட்டு படுக்க வந்து உறங்கிவிட்டாள்.

    அடுத்த நாள் அதிகாலை விழிப்பு வரவும் ரதி பணிக்கு கிளம்பவும் தருண் பள்ளிக்கு கிளம்பவும் என்று இருந்தனர்.

    6.55 மணிக்கு அலாரம் அடிக்க  தூக்கத்தில் போனு எடுத்து அணைத்து விட்டு பல் விளக்க ஆரம்பகத்தாள்.

    எல்லாம் ஐந்து மணிக்கு ஆறுமணிக்கு அலாரம் வைப்பாங்க. இவ மட்டும் ஏழு மணிக்கு அலாரம் வைப்பா.’ என்று ரதி முனங்கிக்கொண்டு தலையை பின்னினாள்.

    “தலையை மட்டும் பிண்ணிட்டு இரு. என்ன பத்தி கமெண்ட் பாஸ் பண்ணறது தெரிந்தது. உன்னை பிண்ணி பெடல் எடுத்துடுவேன்.” என்று பிரஷ் வைத்து கூறியவாறு சென்றாள்.

  ரதி தாம்பரத்தில் இருக்கும் ஒரு மெயின் பள்ளியில் ஏழாவது மற்றும் எட்டாவது வகுப்பு எடுக்கின்றாள்.

       சேலை கட்டிக்கொண்டு பொட்டு வைக்கும் நேரம் சுடிதாரை மாற்றிவிட்டு ரிதம் வந்தாள்.

     செண்டர் க்ளிப் போட்டு இருபக்கமும் விரித்து விட தோகை மயிலாக கருப்பருவி அலைபாய்ந்தது.

     போனை கையில் வைத்து கொண்டு முகநூலில் கண் பதித்து சாப்பிட துவங்கினாள்.

   இரண்டாவது இட்லியை பிய்த்து விழுங்கும் நேரம்.
 
    கடும் மழையல்ல
    சன்னமாய் பெய்துவிட்டு
    கடக்கும் சிறு மழையே.

    ஆறாம் விரலாய் பஞ்சு பொதியை
    நெருப்பில் வைத்து,
    நெஞ்சுக்கு பந்தமாய்
    உடலோடு நோய ஒட்டவைத்தான்
    வழிப்போக்கனொருவன்.
    பைரவன் அங்கு குலைத்திட,
    சிறு நெருப்புபொறியை தட்டிவிட்டு
    கடந்தவனவன். 

    கிழிந்த உடையும் நலுங்கிய தோற்றமும்
    கொண்டவொருவன்
    மழையை காதலியாய் எண்ணி     
    நனைய வந்தானோ,
    அந்த கிறுக்கனுக்கு
    அசூசை தோன்றவில்லை
     அடைப்பட்ட கால்வாயில்
     கையூன்றி எதையோயெடுத்து
    தன் நெஞ்சோடு அரவணைத்தான்.
    சின்னசிறு நாய்க்குட்டி ஒன்றை.

    காணும் எனக்குள்
    யாசகனிடம் ஒளிந்திருக்கின்றான்
    ரட்சகன் ஒருவன் என்ற பிம்பம்.

     -நித்திலன்

      படித்து கொண்டே உணவை விழுங்கிய ரிதத்திற்கு நேற்று தனக்கு நேர்ந்த விஷயம் போன்று இருக்கவும் வேகமாய் பால்கனி வந்து எட்டி பார்த்தாள்.

     அந்த பிச்சைக்காரனும் நாய்க்குட்டியும் இன்னமும் உருளைவடிவ குழாயில் படுத்து கிடந்தனர்.

    முகநூலில் நித்திலனுக்கு, “சார் நீங்க எங்க இருக்கிங்க. எனக்கும் இதே அனுபவம் நேற்று நடந்தது. ஆனா நீங்க யூஸ் பண்ணற ஆறாம் விரல், பஞ்சு பொதி, யாசகன் இப்படியெல்லாம் வச்சி அதை எழுத முடியலை. இது என்ன வகை கவிதை. எதுகை மோனை எதுவும் இல்லை. பார்க்க உரைநடை மாதிரி இருக்கு. ஆனா எனக்கு பிடிச்சிருக்கு.

  என்னவோ எங்க வீட்ல இருந்து இதே இன்சிடெண்ட் நீங்களும் பார்க்குற மாதிரி தெரியுது.

    ரியலி நைஸ் சார்” என்று அனுப்பினாள்.

     “காலேஜ் போற ஐடியா இருக்கா இல்லையா?” என்றதும் ஆனந்தியை முறைத்தபடி எழுந்தாள்.

    வீட்டிலிருந்த பால் பேக்கெட்டை எடுத்து கொண்டு பேமிலி ஐஸ்க்ரிம் வாங்கிய காலி டப்பாவை எடுத்து கொண்டாள்.

    அது எதுக்குடி? என்று ஆனந்தி கேட்க, அங்க பிச்சைகாரன் பக்கத்துல ஒரு நாய்குட்டிக்கு ஊத்த போதுமா ” என்று கூறி சென்றாள்.

    “ஒரு நாய் இன்னொரு நாயுக்கு பால் எடுத்துட்டு போகுதே… அடடா ஆச்சரியக்குறி” என்று தருண் கூற அவன் முகத்தில் டம்ளரிலிருந்த தண்ணிரை ஊற்றி விட்டு கிளம்பியிருந்தாள்.

     ரதியோ தம்பியை ட்ராப் செய்ய கிளம்ப கூறினாள்.

   ரிதம் மெதுவாய் போய் பிச்சைக்காரனிடம் கொடுக்க பயந்து அவன் அருகே அதனை வைத்து விட்டு ஓடினாள்.

     பஸ்ஸில் ஏறியதும் நித்திலன் ரிப்ளே செய்தானா என்று ஆராய இல்லை என்றதும் முகம் வாடினாள்.

-கவிதை தொடரும்.
-பேரரளி