ஜீவித்தேன் உந்தன் கவிதையில்…-1

உந்தன் கவிதை-1

ரிதம் கல்லூரியிலிருந்து கிளம்பும் போதே குளிர் காற்று உடலை சில்லிட வைத்தது. முகமும் கைகளிலும் குளிர் பரவவும், உதட்டை ஈரப்படுத்தி முத்தமிட்டது மழைத்துளி.

     கல்லூரி கேட்டில் வாகனத்தை நிறுத்தியவள், என்ன கேட்காம எனக்கு முத்தம் தர்ற… உன்னை… என்னை அணைக்கறதுக்கு முன்ன வீட்டுக்கு போறேன் பாரு.’ என்று குறும்பாய் கூறிவிட்டு ஸ்கூட்டியை வேகமாக செலுத்தினாள்.

     என்னயே மிரட்டறியா… ஏ… மழைக்காதலியே… என்னை அணைக்க தடுக்கறதும் நீ தான். என்னை கண்டா தானா ஓடிவந்து உங்கப்பா அம்மா, அக்கா, மூன்று பேரும் ஒன்னு கூடி திட்ட ஆரம்பிச்சா பொருட்படுத்தாம நனைந்து என்னை தழுவி போறதும் நீ தான்.’ என்பது போல வானம் வேகமாய் அவளை அணைத்து கொள்ள மழையாய் பெய்தது.

   மெதுவாக சாலையில் பயணித்து நன்றாக நனைந்து, உதடு நடுக்கம் கொள்ள வீட்டுக்குள் வந்து சேர்ந்தாள்.

      செருப்பு வைக்கும் இடத்தில் நின்றபடி, “அம்மா… அம்மா… ரதிக்கா.. அங்க என்ன பண்ணிட்டு இருக்க டவல் எடுத்துட்டு வா” என்று அக்காவையும் அம்மாவையும் ஏலமிட்டு அழைத்தாள்.

     “ஆயிரம் முறை சொல்லியாச்சு. மழை வந்தா ஏதாவது கடையில நின்று மழை விட்டு வான்னு. நீயா இப்படி தொப்பக்கட்டையா நனைச்சிட்டு வர்ற. நாளைக்கு சளி ஜுரம்னு வந்து நில்லு.” என்று தலையில் நறுக்கென்று கொட்டி டவலை கொடுத்தார் ஆனந்தி. ஆனந்தி நாயகி ரிதத்தின் தாய். ரிதம் வந்ததும் ரதி எட்டி பார்த்துவிட்டு டிவியை பார்த்தாள்.

     தம்பி இன்னமும் வரவில்லையென அறிந்தை காலை நன்றாக மிதியடியில் துடைத்து விட்டு, கை கால் முகம் அனைத்தும் டவலில் துடைத்தபடி அறைக்குள் வந்தாள்.

     உடை மாற்ற கதவை சாற்றி விட்டு மடமடவென நைட் சூட் அணிந்தாள். தலையை துவட்டி விட்டு சேரிலேயே விரித்து வைத்தாள்.

     கதவு தட்டவும் திறக்க சூடாக காபி எடுத்து வரவும் அன்னையை கட்டிக்கொண்டு முத்தம் வைத்தாள்.

   சோ ஸ்வீட் மா” என்று கூறிவிட்டு பால்கனி திறந்து அங்கே ஊஞ்சலில் கால் மடக்கி அமர்ந்து, காபி மணத்தையும், மண் மணத்தையும் சுவாசித்தாள்.

    அவளுக்குள் அந்த சுவாசத்தில் ஜீவன் கலந்து சென்றது.

     மழையும் காபியும் கலந்துடுச்சு. அப்படியே ஏ.ஆர்.ரஹ்மான் பாட்டை போட்டுட்டு கவிதை வாசிப்போம்’ என்று போனை எடுத்தாள்.

    முகதூலில் கவிதைப் படிக்க என்று இருக்கும் குழுவில் ரதி தான் சேர்த்து விட்டாள். ரிதமிற்கு கவிதை பிடிக்குமென.

ரிதம் ஒரு இரசனைவாதி.
ரிதம் ஒரு கற்பனைவாதி.
ரிதம் ஒரு மழையின் காதலி.
ரிதம் ஒரு இயற்கை காதலி
ரிதம் ஒரு கனவும் கற்பனையும் விரும்புபவள்.
ரிதம் எப்பவும் யாருக்கும் செவிசாய்க்க மாட்டாள்.
அவள் ஒரு சுதந்திரமான அன்னப்பறவை. எதை எடுக்க வேண்டும் எதை எடுக்க கூடாதென அறியும் அறிவானவள்.
ரிதத்திற்கு கவிதை பிடிக்கும் கண்டதையும் அழகாய் கூறி தொலைக்கும் அவளுக்கு அதை எழுத்தாய் மாற்றும் வல்லமை மட்டும் அறியாது போனாள்.

   அதனால் எழுத்தாய் காணும் கவிதையை அள்ளி பருக விரையும் கழுகு. கவிதை என்றால் அவள் கண்ணிலிருந்து எடுக்க இயலாது வாசித்து விட்டு தான் மறுவேலை பார்ப்பாள்.

   ஆம் அழகான கதை கவிதைகள் என்றால் கண் விழித்து கூட அதில் தொலைந்து போகும் கழுகு ஆந்தைக்கு ஒப்பானவள். எத்தனை மணி நேரமானாலும் அவள் கண்ணிற்கும் கருத்திற்கும் படிக்க ஆசை அடங்கும் வரையோ அல்லது மலர்ந்த விழிகள் துயில் கலைய சொருகும் வேளையோ அது வரை படிப்பாள்.

   அப்படி ரிதம் புத்தகம் படிக்க ஆரம்பித்த போது தான், ரதி ‘கவிதை கடல்’ என்னும் குழுவில் சேர்த்து விட்டாள்.

   பெரும்பாலும் ஒரு நாளைக்கு எத்தனை எத்தனையோ கவிதைகள் வந்து குவியும். காதல் என்ற கிறுக்கு கவிதை முதல், காமம் சொட்டும் மோகக்கவிதை ஆரம்பித்து சமூககவிதை, தன்னம்பிக்கை கவிதை என்று பலவிதமாய் இருக்கும்.

    இந்த குழுவில் சேர்ந்து இரண்டு மாதம் நிறைவடைந்திருந்தில் யார் அழகாய் கவிதை புனைவது, யார் கிறுக்குவது என்று பிரித்தறிந்தாள்.

    அதில் தினமும் பன்னிரெண்டு பெயர் எது எழுதினாலும் ரசிக்கும்படியாக இருக்கும். அதனால் அவர்களுக்கு நட்பு அழைப்பு விடுத்து பாலோவ் செய்தாள்.

     அப்படி தான் நித்திலன் என்றவரையும் பாலோவ் செய்தாள்.

   இன்று இந்த நொடியை ரசித்தவள் நித்திலனின் கவிதை படிக்க படிக்க ‘அய்யோ… இப்ப வர்றப்ப நினைச்சேன் அந்த பீல் இந்த கவிதை’ என்று நித்திலனின் கவிதையை வாசித்தாள்.

      தேகம் சில்லிட – புது
      மோகம் சிலிரிக்க

      எனை கேளாது        
      இதழ்முத்தமிட்டாய்.

     தேனை குடித்தது போதாதென
     தீயாய்… மழைப் பேயாய்…
     ஆட்கொண்டு அணைத்ததேனோ!?

     உன்னில் பெற்ற சுகத்தை   
     என்னிலிருந்து விடைப்பெற,

     தேனீரை பருகி தொலைத்தேன்
     மீண்டும் உனக்குள் புதைய    
     கவிதையை சுவைத்தேன்.

     கவிதையை சுவைத்தேனா?!
     எனை விதைத்தேனா?!
     கண்டறிவாய் கார்காலமழையே!

           -நித்திலன்

       அதனை படித்தவளால் ஆனந்தம் பொருக்க மாட்டாமல், மடமடவென எதையும் யோசிக்காமல், ‘உங்க கவிதைகள் அழகா, ஆழமான வார்த்தைகள் அடங்கியிருக்கு. புத்தகமா இருந்தா சொல்லுங்க வாங்கிக்கறேன்’ என்று இத்தரை நாள் வாசித்த கவிதைகளை வைத்தும் தற்போது தன் எண்ணத்தை களவாடிய வார்த்தையாலும் உடனே மெஸேன்ஞரில் தட்டிவிட்டாள்.

     இரண்டு மூன்று முறை பார்த்து விட்டு மேலும் பல கவிதை படித்து முடிக்க மின்சாரம் தடைப்பட்டது.

     ‘போச்சா… ஓகே அடுத்து கரண்ட் எப்ப வருமோ. பேட்டரி வேஸ்டாக வேண்டாம்’ என்று முகநூலிலிருந்து வெளிவந்து விட்டாள்.

     பால்கனி கதவை திறந்து வைத்து உறங்க செய்தாள். சில்லென்ற காற்று மழையில் நனைந்த குளியல். உடனே உறக்கம் வந்தது. அரைமணி நேரம் உறங்கி எழுந்திருக்க சொப்புவாய் திறந்து கொட்டாவி விடுத்து சோம்பல் முறித்தாள்.

    முகமலம்பி பால்கனி வழியே வாசலை எட்டி பார்க் அங்கே பாவாடையை தூக்கி சேலையை சொருகி சென்ற பெண்மணியையும், மழை நின்றதும் அடுத்து கப்பல் விடும் குட்டி பசங்களையும் கண்டாள். உதட்டில் முறுவல் ஒட்டிக் கொண்டது.

    போரடிக்கே… திரும்ப போனை எடுப்போம் என்று போனை எடுக்க பேன் சுற்றியது. கரண்ட் எப்ப வந்தது, என்று போனை எடுத்தாள்.

       ‘எத்தனை பேர் ஆன்லைன்ல இருக்காங்க.. ஸப்பா… நான் தான் வெட்டினு நினைச்சா… எனக்கு மேல வெட்டியான்கள் இருக்காங்க.. சீ.. வெட்டியான்கள்னா வேறல மீனிங்…?
 
      வெட்டியா… யா… வெட்டியா… ம்ம்… எத்தனை பேர் வெட்டியா இருக்காங்க.. அடக்கடவுளே… முந்நூறு சம்திங் பிரெண்ட்ஸ்ல பாதிக்கிட்ட இங்க பச்சை டாட் தான் இருக்கு.

     இதென்ன மெஸேன்ஞர்ல…

     ‘ஓ காட் ஓ காட்.. நித்திலன் சார்கிட்டயிருந்து ரிப்ளே வந்திருக்கு.’ என்று மெஸேன்ஞரில் ஓபன் செய்தாள்.

    “உங்க கவிதைகள் அழகா, ஆழமான வார்த்தைகள் அடங்கியிருக்கு. புத்தகமா இருந்தா சொல்லுங்க வாங்கிக்கறேன்.” என்று அனுப்பி இருந்தாள்.

     “நான் இன்னமும் எந்த கவிதையும் புத்தகமா போடலை. போட்டா.. இன்பார்ம் பண்ணறேன். தேங்க்யூ” என்று வந்திருந்தது.

      அய்யோ… நான் பாட்டுக்கு மொட்டையா பேசியிருக்கேன். ப்ரைபைல் பிக்சர்லயும் ஏதோ வயசானவர் பிக்சர் தான் இருக்கு.’ என்று நகத்தை கடித்து யோசித்தாள்.

     நித்திலன் ஆன்லைனில் இருப்பதாய் காட்டவும், பதில் அனுப்ப ஆவல் கொண்டாள் ரிதம்.

     “ஐயா… தங்கள் கவிதைகள் ஒவ்வொன்றும் அற்புதமாக உள்ளது. காதல் கவிதையுமாகட்டும், சமூகத்தை எதிர்த்து சாடும் உங்கள் கோபமாகட்டும் என் மனதில் இருப்பதை எழுதுவதாக இருந்தது. ஒவ்வொரு நாளுக்கு ஒன்றென உங்கள் பக்கத்தில் வரும் கவிதையை காத்திருந்து படிப்பதை விட புத்தகமாக வாங்க ஆசைப்பட்டேன்.

   நீங்க புத்தகமாக போடலையென்று கூறிவிட்டீர்கள்.
  அப்படி புத்தகம் அச்சாக வெளியீட்டீர் என்றால் எனக்கு தெரியப்படுத்தவும் வாங்க ஆவலாய் காத்திருக்கின்றேன். நன்றி ஐயா’ என்று தமிழில் அச்சடித்து அனுப்பினாள். கீழே ரிதம் என்று அவளின் பெயரையும் தெளிவிட்டு எழுதினாள்.

    பிழையான வார்த்தையோ அவமரியாதையான சொற்களோ உள்ளதா என்று இருமுறை அறிந்தப்பின் நிம்மதியுற்றாள்.

    ஆனால் எதிர் பக்கம் இருந்த நித்திலனோ, “ஏய்.. ஐயா கொய்யானு… கால் மீ நித்திலன். நான் ஒன்னும் தாத்தா இல்லை.” என்று அனுப்பினான்.

   அதனை படித்து விட்டு ரிதம்  வேகமாக இதயத்தில் கை வைத்து லாக்அவுட் செய்து விட்டாள்.

   “கடவுளே பிள்ளையாரப்பா.” என்று முனங்கியவள் ஏதோ தப்பாய் பேசியதாக பயந்தாள்.

    தேவையற்ற பயம்… தற்கால வாழ்வில் கதையோ கவிதையோ பிடித்திருந்தால் பிடித்திருக்கின்றது என்று கூறுவதில் என்ன தவறு உள்ளது.

   தன்னிடம் தவறில்லையென்றதும் மீண்டும் முகநூலில் சைன் இன் செய்தாள்.

     இன்னமும் நித்திலன் இருப்பதாக பச்சை வட்டம் காட்டியது.

    “சாரி சார். ப்ரோபைல் பிக்ல ஏதோ தாத்தா பிக் இருக்கவும் நீங்க பெரியவரா இருப்பிங்கனு மரியாதை தந்தேன். இதுக்கு முன்ன எழுதின கவிதை எல்லாம் ரொம்ப முதிர்ச்சியா இருந்தது.” என்று அனுப்பினாள்.

    “ஓ… அப்ப இப்ப எழுதின கவிதை முதிர்ச்சியில்லைனு சொல்லற.” என்று வந்தது.

    ‘இதென்ன வம்பா இருக்கு.’ என்று “அப்படி சொல்லலை சார். இப்ப எழுதியது சுமாரா இருக்கு.” என்றாள்.

    “ஓ… 158 லைக்ஸ் 98 கமெண்ட்ஸ் உனக்கு சுமாரா இருக்கா?” என்றான்.

    “உண்மையை சொல்லணும்னா ஆமா… பட் இதுக்கு முன்ன எழுதியது எல்லாம் வேற லெவல். இது ஏதோ அவசரத்துல எழுதின மாதிரி இருந்தது. ஆனாலும் எனக்கு பிடிச்சிருக்கு.” என்று அனுப்பினாள்.

      “உன் பெயர் என்ன?” என்று அனுப்பியிருந்தான் நித்திலன்.

     “ரிதம்” என்று அனுப்பினாள்.

     “தேங்க்யூ ரிதம். மனசு திறந்து உண்மையை சொன்னதுக்கு. ஆக்சுவலி ப்ரிட்ஜ் மேல டிரால் பண்ணிட்டு இருந்தேன். அப்ப தோன்றியதை எழுதி அப்படியே போஸ்ட் பண்ணிட்டேன். எப்பவும் டைம் எடுத்து வார்த்தையை தேடி உபயோகிப்பேன். இன்னிக்கு சடனா அனுப்பிட்டேன். எனக்கே தெரியும் இது கொஞ்சம் மொக்கையா இருக்குனு.” என்று அனும்பினான்.

    பேச்சுக்கள் நீண்டது, அது அக்கணம் தவறாக தோன்றவில்லை.

     “அதெல்லாம் எனக்கு பிடிச்சிருக்கு. ஆக்சுவலி எனக்கு தோன்றியதை ரசித்ததை உங்க கவிதையில படிக்கிறப்ப ரொம்ப பிடிக்குது. இரண்டு மாதமா பார்த்தேன் தினமும் புதுகவிதை ஒன்றும் மீள்.. அதென்ன… மீள்.” என்று அனுப்பினாள்.

     “ஹாஹா அதுக்கு பெயர் மீள்பதிவு” என்று கூறினான்.

    “ஆஹ்.. அதுவும் போடறிங்க. எல்லாமே பத்து பதினைந்து வரி இருக்கா… அதனால புக்கா போட்டுயிருப்பிங்கனு நினைச்சி புக் கேட்டேன். சப்போஸ் புக் போட்டா இன்பார்ம் பண்ணுங்க சார்”என்று அனுப்பினாள்.
 
     “சாருனு சொல்லாதே.. கால் மீ நித்திலன்.” என்றதும் “ஏய்… ரிதம்… அப்பா மஷ்ரூம் வாங்கிட்டு வந்திருக்கார் சாப்பிட போறோம் வர்றியா இல்லையா.” என்று கேட்க “வர்றேன் என் பங்கை திண்ணாதே.” என்று கத்தினாள்.

    “பெயரை சொல்லியா.?” என்று கேட்டாள்.

    “ம்ம்.” என்று கூறவும் வலது கை கட்டைவிரலை கடித்து கொண்டு இடது கையில் போனை வைத்து விழிகளை இருபக்கம் உருட்டி “ஓகே” என்று அனுப்பினாள்.

     “வாட் ஓகே. கால் மீ” என்று வரவ்ம் அதேநேரம் “உன் மஷ்ரூம் தருண் காலிபண்ணறான்.” என்றதும் “ஓகே நித்திலன் நான் என் பங்கு மஷ்ரூம் சாப்பிட போறேன். இப்ப போகலை இந்த தம்பியென்ற குட்டிபிசாசு சாப்பிட்டடும் பைபை.” என்று டாட்டா எமோஜியை அனுப்பி விட்டு சைன் அவுட் செய்து ஹாலுக்கு ஓடினாள்.

-தொடரும்.
~பேரரளி.