சொக்கனின் மீனாள் 9

நிச்சயதார்த்தம் முடிந்த மறுநாள் மாலை மதுரையில் இருக்கும் தனது கிளை அலுவலகத்தில் வேலை பார்த்து கொண்டிருந்த மீனாட்சிக்கு அழைத்த ராஜன், “மீனாட்சி நான் நெக்ஸ்ட் வீக் ஜெர்மனி போறேன். ரொம்ப மாசமா போட்ட பிளான் இது. இப்ப தான் கிளைண்ட்கிட்ட இருந்து அப்ரூவல் வந்துச்சு. டெம்பரவரி டிரிப் தான். ஒரு மாசத்துல ரிட்டர்ன் வந்துடுவேன்‌. எப்படியும் உங்க மேரேஜ்க்கு இங்க இருப்பேன்” என்றான்.

அடுத்த இரண்டு வாரத்தில் தங்களுக்கு திருமணம் என கூற முடியாத இயலாமையுடன் கேட்டிருந்தாள் மீனாட்சி. சுந்தரராஜனிடம் இந்த திருமணத்தை பற்றி சொல்ல கூடாது என சபையில் வைத்து தான் கல்யாணியிடம் உரைத்திருந்தான் சுந்தரேஸ்வரன்.

“கங்கிராட்ஸ் சுந்தர்” மனம் நிறைந்த மகிழ்வுடன் கூறியிருந்தாள்.

“நான்‌ இப்ப கால் செஞ்சது உங்களோட டிரான்ஸ்பர் பத்தி பேச தான் மீனாட்சி. மதுரை பிராண்ச்ல இருக்க நம்ம ஆபிஸ்க்கே உங்களை பர்மனென்ட் டிரான்ஸ்பர் செய்ய சொல்லி ஹெச் ஆர் கிட்ட பேசியிருக்கேன். நீங்களும் ஒரு தடவை பேசிடுங்க” என்றவன் கூற,

“நான் பேப்பர் போட்டுட்டேன் (ஐடியில் ரிசைன் செய்வதை இவ்வாறு சொல்வார்கள்) சுந்தர். இன்னிக்கு காலைல தான் ரெசிக்னேஷன் சப்மிட் செஞ்சேன். மூனு மாசம் நோட்டிஸ் பீரியட் மட்டும் மதுரை ஆபிஸ்ல ரிப்போர்ட் செய்ய ஒத்துக்கிட்டா போதும். நம்ம பிராஜக்ட்டுக்கே அந்த மூனு மாசமும் நான் வர்க் பண்றேன்” என்றாள்.

“மதுரைலயே ஆபிஸ் இருக்கும் போது ஏன் பேப்பர் போட்டீங்க மீனாட்சி? அண்ணா வேலையை விட சொன்னாங்களா? ஏன் என்கிட்ட முன்னாடியே சொல்லலை” என ஆதங்கத்துடன் கேட்டான்.

“இல்ல இல்ல அவங்கலாம் விட சொல்லலை! எனக்கு இந்த வேலைல அவ்ளோ விருப்பமில்ல. கொஞ்சம் நாள் பிரேக் எடுத்துட்டு திரும்ப வேணும்னா அப்ப வேலை தேடிக்கிறேன் சுந்தர். உங்ககிட்ட சொன்னா ஒத்துக்க மாட்டீங்கனு தான் சொல்லாம பேப்பர் போட்டேன். சாரி சுந்தர்” சற்று தயங்கியவாறே குற்றவுணர்வுடன் உரைத்தாள்.

“ஹ்ம்ம் ஆனாலும் மேரேஜ் நெருங்கிற டைம்ல பேப்பர் போட்டிருக்கலாம். நீங்க அவசரப்பட்டு முடிவு எடுத்துட்டீங்களோனு தோணுது. எப்படியோ இது உங்கள் சாய்ஸ். நான் கமெண்ட் பண்றது தப்பு” என்றவன்,

“வர்க் ஃப்ரம் ஹோம் எடுத்துக்கோங்க. ஆனா மூனு மாசமும் உங்களோட உழைப்பை முழுசா போடுங்க. ஆஸ் எ டீம் லீட்டா நான்‌ ரொம்பவே எக்ஸ்பெக்ட் செய்வேன்‌. அதுல நோ எக்ஸ்க்யூசஸ்! நான் ஜெர்மனி போன பிறகு வேலு உங்களுக்கு லீட்டா இருப்பாரு” என்றான்.

மீனாட்சி தனது அண்ணனை தான் மணக்க போகிறாள் என அறிந்த பின்பு வேலையில் அவளிடம் ராஜன் அதே கண்டிப்புடன் இருந்தாலும், அவளுக்கான டிரான்ஸ்ஃபர் மற்றும் பிற அலுவலக விஷயங்களில் அவனால் இயன்ற உதவியை அவள் கேட்காமலேயே செய்து கொடுத்தான்.

ராஜன் முன்பு போல் சிடுமூஞ்சியாய், கடுப்பேத்தும் டி எல்லாய் தன்னிடம் நடந்து கொள்வதில்லை என உணர்ந்திருந்தாள் மீனாட்சி. ஆனால் குறித்த நேரத்தில் வேலையை முடித்து கொடுக்க வேண்டும் என்பதில் அதே மாறாத டி எல்லாய் தான் இருக்கிறான் என்பதும் புரிந்திருந்தது.

“ஓகே தேங்க்ஸ் சுந்தர்” என்றதும்,

“ஓகே பை” என அவன் இணைப்பை துண்டிக்க போக,

“சுந்தர் ஒரு நிமிஷம்” என அவசரமாய் கூறி தடுத்தாள்.

“சொல்லுங்க மீனாட்சி” என்றவன் கேட்க,

“கொஞ்சம் பர்சனலா ஒரு விஷயம் கேட்கனும்” என்றவள் சொன்னதும்,

“எதுவா இருந்தாலும் தயங்காம கேளுங்க அண்ணி” என்றான்.

அவளின் பர்சனல் என்ற பதத்திலேயே நான் இப்பொழுது லீட் இல்லை, தங்களின் கொழுந்தன் தான் என்று உணர்த்துவதற்காக இவ்வாறு விளித்திருந்தான்.

முதன் முறையாக அண்ணி என்ற அவனின் விளிப்பில் பதறி போனவளாய், “எப்பவும் போல என்னை மீனாட்சினே கூப்பிடுங்க சுந்தர்” என்றாள் பதட்டத்துடன்.

“ஏன் என்கிட்ட உறவாலாம் பழக கூடாது! டிஸ்டன்ஸ் மெயின்டெயின் செய்யனும்னு அண்ணா சொன்னாங்களா?” என வேதனையான குரலில் அவன் கேட்க,

“அச்சோ அப்படிலாம் இல்லங்க. உங்களுக்கும் அவருக்கும் என்ன பிரச்சனைனு எனக்கு தெரியாது. ஆனா நேத்து விபத்து நடந்ததுக்கு உங்கப்பா தான் காரணம்னு சொன்னாரு. உங்கப்பாவால அவருக்கு இனியும் எதுவும் பிரச்சனை வராம பார்த்துக்க முடியுமானு கேட்க தான் கூப்டேன்” என்றாள்.

“அண்ணி நீங்க என்னை நல்லவன்னு நம்புறீங்களா?” எனக் கேட்டான்.

“உங்களை ஒரு வருஷமா தெரியும் சுந்தர்! உங்க குணநலன்கள் பழகுற விதம் வச்சி நல்லவர்னு தான் நம்புறேன் ஆனா உங்கப்பாவை தான் நம்ப முடியலை” தயக்கமாகவே கூறினாள்.

ஆழ்ந்த மூச்செடுத்தவனாய், “அப்படியே நான் சொல்றதையும் நம்புங்க அண்ணி. அண்ணாவை பழி வாங்குறேன்னு எந்த இடையூறும் இடைஞ்சலும் செய்ய கூடாதுனு அப்பாகிட்ட நான் சத்தியம் வாங்கிருக்கேன். அப்பா அதை மீறி கண்டிப்பா நடந்துக்க மாட்டாங்க. அப்பாவை தாண்டி இதை யாரு செஞ்சிருப்பானு அண்ணா கொஞ்சம் யோசிச்சாலும் போதும். அவங்க சுலபமா கண்டுபிடிக்கலாம். அண்ணாவை அப்படி யோசிக்க மட்டும் வையுங்க போதும்! அண்ணாக்கு தேவையான பாதுகாப்பை ஏற்பாடு செஞ்சிட்டு தான் போறேன். நீங்க கவலைப்படாதீங்க. நான் இங்க வந்து இதெல்லாம் செய்றது யாருனு கண்டுபிடிக்கிறேன். என்னை விட அண்ணா கண்டுபிடிக்கிறது சுலபம்ங்கிறனால தான் உங்ககிட்ட சொல்றேன்” என்றான்.

‘நான் சொல்லி அவர் கேட்பாரா?’ என யோசனையுடனேயே சரியென கூறி இணைப்பை துண்டித்திருந்தாள் மீனாட்சி.

தீரனை அழைத்த ராஜன் தனது வெளிநாட்டு பயணத்தை பற்றி உரைத்து விட்டு, “அந்த கணேசன் மேல கொஞ்சம் கண்ணு வச்சிக்கோடா தீரா! என்னக்கென்னமோ அவன் மேல் தான் சந்தேகமா இருக்கு” என்று கூற,

“ஏன் உன்னோட உளவாளிக்கிட்டயே இதை சொல்ல வேண்டியது தானே” என கோபத் தொனியில் தீரன் கேட்டான்.

“ஓ உன்னை நம்பாம வேற ஆளை பார்த்துட்டேன்னு கோபமா உனக்கு! சரி கோவிச்சிக்கோ கோவிச்சிக்கோ” என கேலி செய்தவன்,

“என்னோட உளவாளி பையன் இல்லடா பொண்ணு” என்றான்.

“யாரு நம்ம கல்யாணியா?” என நேரடியாக தீரன் கேட்க, “அது சஸ்பென்ஸ்” எனக் கூறி சிரித்தான் ராஜன்.

‘நமக்கு தெரியாம இவனுக்கு எந்த பொண்ணு உதவுவது இந்த ஊருல’ என யோசித்தவாறு ராஜனிடம் உரையாடி கொண்டிருந்தான் தீரன்.

இங்கு அலுவலகத்தில் ராஜனிடம் பேசி முடித்த மீனாட்சியோ,

“இவங்க அப்பா இல்லனா வேற யாரா இருக்கும். எதுக்காக இப்படி செய்றாங்க?” என சிந்தித்தவாறு அமர்ந்திருந்தவளை கைபேசியில் அழைத்திருந்தார் ருத்ரன்.

“சொல்லுங்க அப்பா” என்றவளிடம்,

“நீதானம்மா ஃபோன் செஞ்சிருந்த! அப்ப கால் வந்ததை கவனிக்கலை நானு! என்ன விஷயம் மீனு” எனக் கேட்டார்.

“அது வந்துப்பா! நான் சொல்வேன், நீங்க திட்டக் கூடாது” என்று பீடிகையுடன் அவள் தொடங்க,

“அப்படி திட்டுற மாதிரி என்ன செஞ்ச?” எனக் கேட்டார்.

“பேப்பர் போட்டுட்டேன்ப்பா” என்றாள் பட்டென்று.

“என்னது! பேப்பர் போட்டுட்டியா? டிரான்ஸ்ஃபர் கேட்டு வேற பிராஜக்ட்டுக்கு போறதுக்கு தானே கல்யாணம் செஞ்சி வைக்க சொன்ன! மதுரைல உன் கம்பெனி பிரான்ச் ஆபிஸ் இருக்கனால தான் ஈஸ்வரன் பிஸ்னஸ் செஞ்சாலும் பரவாயில்லைனு நான் இந்த சம்பந்தத்துக்கு ஒத்துக்கிட்டேன்‌. இப்ப யாரை கேட்டு நீ ரிசைன் செஞ்ச? உன் வருங்கால புருஷர் சொன்னாரா?” என கோபமாய் வினவினார்.

“அய்யோ இல்லப்பா! அவர் எதுவும் சொல்லலை! எனக்கு தான் இந்த வேலைல ரொம்ப ஸ்டெரஸ் ஆகுதுனு பேப்பர் போட்டுட்டேன்” என்றவளிடம்,

“இதை நீ என்னை நம்ப சொல்றியா? ஈஸ்வரன் சொல்லாம இப்பல்லாம் நீ எதுவும் செய்றதில்லைனு எனக்கு தெரியும்” எனத் தொடங்கி அவளை திட்டி தீர்த்து விட்டார்.

கண்ணில் நீருடன் இணைப்பை துண்டித்தவளுக்கு தந்தையின் இந்த மாற்றம் மனதை வதைத்தது.

‘எதுக்கெடுத்தாலும் ஏன் ஈஸ்வரை இழுத்து வச்சி திட்டுறாருனே புரியலை. என்னமோ பிடிக்காத லவ் மேரேஜை செஞ்சி வைக்கிற மாதிரியே பேசுறாரு’ என அழுது கொண்டே மனதோடு புலம்பி கொண்டிருந்தவளை கைபேசியில் அழைத்திருந்தான் ஈஸ்வரன்.

“சொல்லுங்க ஈசுப்பா” என்றவள் குரல் கேட்டதும்,

“பச்சக்கிளி ஆர் யூ ஆல்ரைட்?” எனக் கேட்டான்.

அவனின் கேள்வியில் இவளின் கண்ணீர் பெருக, “உங்களை பார்க்கனும் போல இருக்கு. என்னை வந்து கூட்டிட்டு போறீங்களா?” எனக் கேட்டாள்.

“ஏன்டா! என்னாச்சு? எதுவும் பிரச்சனையா” அனுசரணையான அவனின் கேள்விகள் அனைத்துக்கும் அவளின் கண்ணீர் பெருகியது.

“ஹ்ம்ம்” என அழுகையை கட்டுப்படுத்தியவளாய், “நேர்ல வாங்க சொல்றேன்” என கைபேசியை வைத்தவள், அவளது அத்தையின் கைபேசிக்கு அழைத்து ஆச்சியிடம் பேசியவள், ஈஸ்வரனுடன் அவனின் கடைக்கு செல்வதாய் உரைத்து தந்தையிடம் பக்குவமாய் தெரிவித்து விடுமாறு கூறினாள்.

அவள் அழைத்த உடனே கிளம்பி அரை மணி நேரத்தில் அவளின் அலுவலகத்தின் முன்பு நின்றிருந்தான் ஈஸ்வரன்.

அவனின் புல்லட் வண்டியில் பின்னே ஏறி அமர்ந்தவளின் முகத்தை உற்று நோக்கியவன், “அழுதியாடா பச்சக்கிளி” எனக் கேட்டான்.

ஹ்ம்ம் என தலை அசைத்தவள், ஏதேனும் கோயிலுக்கு தன்னை அழைத்து செல்லுமாறு கூறினாள்.

அவனுடனான முதல் பைக் பயணம், அதை ரசித்து மகிழும் மனநிலை இல்லாது வெறித்த பார்வையுடன் அவள் அமர்ந்திருக்க, கண்ணாடியின் வழியாய் அவளை பார்த்தவன், “என்னம்மா ஆச்சு! ஏன் இப்படி இருக்க?” எனக் கேட்டான்.

பேப்பர் போட்டது முதல் தந்தை அதற்காக அவளை திட்டியது வரை அனைத்தையும் உரைத்திருந்தாள்.

“நீ செஞ்சது தப்பு மீனு! மாமாக்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு பேப்பர் போட்டிருக்கலாம். அவருக்கு நீ வேலை செய்யனும்னு எவ்ளோ ஆசை தெரியுமா! பொண்ணுங்களை படிக்க வைக்கவே யோசிக்கிற பெற்றோர்கள் மத்தியில உன்னை படிக்க வச்சி, நீ ஒரு பெரிய பதிவில இருக்கனும்னு நினைக்கிற அவரோட ஆசை எனக்கு தப்பா தோணலை. என்ன உனக்கு பிடிக்காத ஐடி வேலைலயே இருக்கனும்னு அவர் சொன்னது தான் எனக்கு பிடிக்கலை” என்றவன் கூறவும்,

“ம்ப்ச் நீங்களும் அப்பா மாதிரி மொக்கை போடாதீங்கப்பா” என சலிப்பாய் உரைத்தாள்.

“இன்னும் சின்னப்பிள்ளை மாதிரி அப்பா என்னை திட்டிட்டாருனு அழுதுட்டு வந்து புகார் வாசிச்சிட்டு பேச்சை பாரு” என சிரித்தான்.

“ஈசுப்பாஆஆஆ” என அவன் முதுகில் நான்கடி போட்டாள். அவனின் கையில் இருந்த வண்டி தடுமாற, “ஹே பார்த்து பார்த்து” என அவன் உள்ளங்கை கட்டினை பார்த்தவாறு உரைத்து, அவனின் இரு தோள்களையும் கைகளினால் பற்றிக் கொள்ள, “ஈசி ஈசி! ஒன்னுமில்லை” என்று அவளின் பதட்டத்தை குறைத்தவன்,

“இப்படியே பிடிச்சிட்டே வரலாம்! தப்பில்லை” என கண்ணாடியில் அவளின் முகத்தினை பார்த்து உரைத்தான்.

“ஹான் ஆசை தான்” என லேசாய் அவன் தோளில் தட்டியவள் கைகளை எடுத்து கொண்டாள்.

“சரி அடுத்து என்ன செய்யலாம்னு பிளான்” என தீவிரமாய் அவன் கேட்க,

“இப்போதைக்கு உங்க கூட ஹேப்பியா வாழுறது மட்டும் தான் பிளான்” என்றவள் அதிதீவிரமாய் கூறவும், அவனின் இதழ்கள் சிரிப்பில் விரிந்தன.

மீனாட்சி அம்மன் கோவிலுக்கே அவளை அழைத்து சென்றவன் தரிசனத்தை முடித்து விட்டு தனது கடைக்கு அழைத்து சென்றான்.

தன்னுடைய அறையில் அவளை அமர்த்தி விட்டு, அவசர வேலை இருப்பதாய் கூறி தனது தொழிற்சாலைக்கு சென்றான்.

ஒரு மணி நேரம் கழித்து வந்து பார்க்கும் போது அவனின் அறையில் இருந்த கணிணியில் அவள் ஏதோ செய்து கொண்டிருந்தாள்.

“என்ன செஞ்சிட்டு இருக்க பச்சக்கிளி” எனக் கேட்டவாறு அவளருகில் ஒரு நாற்காலியை இழுத்து போட்டு அமர்ந்தான்.

“ஏன்ப்பா இந்த கஸ்டம்ர்ஸ் நம்ம சைட்ல செஞ்சிருக்க கம்ப்ளைண்ட் டிக்கெட்ஸ்லாம் வந்து பல மாசம் ஆகுது ஆனா ரெஸ்பாண்ட் செய்யாமலே இருக்கீங்க? இப்படி இருந்தா கஸ்டமர் எப்படி திரும்பவும் நம்ம கடைல பொருள் வாங்குவாங்க” எனக் கேட்டாள்.

அவளின் நம்ம கடை என்பதில் மனம் நிறைந்தவனாய், “நான் அந்த கஸ்டமர் கேர் பொண்ணுங்ககிட்ட கேட்டேன். இந்த இஷ்யூலாம் சால்வ் ஆகிடுச்சு. ஆனா டிக்கெட் க்லோஸ் செய்றதுல இஷ்யூ இருக்குனு சொன்னாங்க. நானும் அதை பத்தி நம்ம ஐடி டீம்கிட்ட சொல்லாம அப்படியே விட்டுட்டேன்” என்றான்.

“இந்த மாதிரி கிளோஸ் ஆகாம இருக்க டிக்கெட்க்குலாம் தினமும் உங்க மெயில்ல ஒரு அலர்ட் வர மாதிரி செட் பண்ண சொல்லுங்கப்பா. மிஸ் பண்ணாம இருப்போம். அப்புறம் நம்ம சைட்ல செய்ய வேண்டிய சேஞ்சஸ் நிறைய இருக்கு! அந்த ஐடி டீம் ஹெட்டை என்னை கான்டேக்ட் செய்ய சொல்லுங்க. நானே சொல்றேன்” என்றாள்.

“டீம் ஹெட்னு நீ சொல்ற அளவுக்கு லாம் இது பெரிய டீம் இல்ல! இரண்டு பேர் தான் இருக்காங்க. சேஞ்சஸ்லாம் பார்த்து பதமா சொல்லுமா! காசை தீட்டிருவாங்க” என்று உரைத்தவனை பார்த்து சிரித்தவளாய்,

“நீங்க இஞ்சினியரிங்ல ஐடி தானே படிச்சீங்க. உங்களுக்கே இதெல்லாம் தெரியும் தானே” எனக் கேட்டாள்.

“ஆமா காலேஜ்ல படிச்ச எவனுக்கு கோடிங் முழுசா தெரியும் சொல்லு! வேலைக்கு சேர்ந்த பிறகு தானே கோடிங் கத்துக்கிறீங்க” என்றவன் கூறவும்,

“ஆமா ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது கதை தான்” என சிரித்தாள்.

அவளின் சிரிப்பில் கனிந்தவனாய், அவள் அமர்ந்திருந்த நாற்காலியை தன் புறமாய் திருப்பி, “ஆர் யூ ஆல்ரைட் நௌ” எனக் கேட்டான்.

“ஹ்ம்ம்” என்றவள் வெகு அருகில் தெரிந்த அவனது கண்களை நேருக்கு நேராகப் பார்க்க முடியாமல் தலையை தாழ்த்த, அவளின் நாடி பிடித்து முகத்தை உயர்த்தியவன், “செம்ம அழகான கண்ணு உனக்கு பச்சக்கிளி!” என்றான்.

அவனின் பிடியில் இருந்த முகத்தை தாழ்த்த இயலாது அவள் கண்களை தாழ்த்த,”ப்பாஆஆ வெட்கத்துல என்னம்மா சிவக்குது உன் கன்னம்” ரசித்து கூறினான்.

“போங்க ஈசுப்பா” என அவன் கையை தட்டி விட்டு அவள் எழ முற்பட,

“ஸ்ஸ்ஸ்” என அடிப்பட்ட கையில் அவள் தட்டியதில் அவன் லேசாய் முணங்கினான்.

“அச்சோ வலிக்குதா?” என அவனின் கையினை பிடித்து பார்த்தவாறு அமர்ந்தாள்.

இல்லையென தலையசைத்தவன் தனது கைக்குள் அவளின் கையினை வைத்து வருடியவாறே, “இப்படியே கொஞ்ச நேரம் பேசிட்டு இருக்கலாம்” என்றான்.

இருவரின் உள்ளமும் காதலில் பூரித்து நெகிழ்ந்து இருந்தது‌. இருவரும் மற்றவரின் அண்மையை சுகித்து, இந்த நிமிடம் இப்படியே உறையாதா என்ற நிலையில் தான் உரையாடி கொண்டிருந்தனர்.

அன்றிரவு அவனின் யூ டியூப் நேரலையை நேரிலேயே கண்டுவிட்டு அவனுடனேயே தனது வீட்டுக்கு பயணித்தாள் மீனாட்சி.

ஆச்சியிடமும் அத்தையிடமும் ஈஸ்வரன் உடன் கடையில் இருப்பதாகவும், வர தாமதமாகும் எனவும் உரைத்திருந்தாள். ருத்ரனின் கோபத்திற்கு மேலும் தூபம் போட்டிருந்தாள்.

அவள் இல்லம் வந்ததும் ருத்ரன் விடாமல் அவளை வறுத்தெடுக்க, ஆச்சி தான் அவளை காப்பாற்றி அழைத்து சென்றார்.

ஆச்சியின் மடியில் அழுதவாறு படுத்திருந்தவள், “ஏன் ஆச்சி அப்பாக்கு ஈஸ்வரனை பிடிக்கலை! என்னமோ நான் லவ் செஞ்சி மேரேஜ் பண்ற மாதிரியே நடந்துக்கிறாரு! நான் எது செஞ்சாலும் ஈஸ்வர் சொல்லி செய்றதா நினைக்கிறாரு” எனக் கண் கலங்கினாள்.

“அது உன் அப்பாவை விட ஒருத்தனுக்கு நீ அதிகமான முக்கியத்துவம் கொடுத்து பேசுறனால வர்ற பொறாமை” என்று ஆச்சி கூறியதும், சட்டென எழுந்து அமர்ந்தவள்,

“என்னது பொறாமையா!” என வியப்பாய் கேட்க,

“உன் மேல உள்ள பாசத்துல வர்ற பொறாமை இது. அவரை விட யாராலையும் உன்னை இவ்வளோ அன்பா பார்த்துக்க முடியாது, உன்னை வழி நடத்த முடியாதுங்கிற அவரோட எண்ணத்துக்கு எதிராக ஒருத்தன் வந்து நிக்கும் போது கோபம் வரும் தானே. அதுலயும் ஈஸ்வரன் அவர் நினைச்சதுலாம் தான் உன்னை செய்ய வைக்கிறாருனு உன் அப்பாக்கு நினைப்பு” என்று ஆச்சி கூறி கொண்டிருக்கும் போதே,

“அவர் எங்க என்னை செய்ய வைக்கிறாரு! நான் எனக்கு பிடிச்சா தான் செய்றேன் ஆச்சி. எனக்கு இது பிடிக்கலைனு அவர்கிட்ட நான் அழுத்தமா சொன்னா அவர் வற்புறுத்தறது இல்ல ஆச்சி! நான் சொல்லாம‌ விட்டா தான் அவர் விருப்பப்படி செய்வாரு” என்று அவள் ஈஸ்வரனுக்கு பரிந்து வந்து பேச,

“என் ராசாத்தி” என பேத்திக்கு திருஷ்டி கழித்தவராய், “இப்பவே உன் புருஷனை இப்படி விட்டு கொடுக்காம பேசுறீயே! உன் அப்பனுக்கு பொறாமை வராம இருந்தா தான் அதிசயம்” என கேலி செய்தார்.

அடுத்த வந்த நாட்கள் இவர்களின் திருமண ஏற்பாடுகளில் பரபரப்பாய் கழிந்தன. அதில் ராஜன் ஈஸ்வரனிடம் கூற சொல்லிருந்ததை மறந்திருந்தாள் இவள்.

திருமண நாளன்று மீனாட்சியின் குல தெய்வக் கோவிலில் அவளுக்கு பிடித்தமான கத்திரிப்பூ பட்டுடுத்தி அவனருகில் அவளிருக்க, அவளின் கழுத்தில் மங்கல நாணை பூட்டி தனது மனம் கவர்ந்தவளை மனையாளாய் ஏற்று கொண்டான் மீனாட்சியின்‌ சுந்தரேஸ்வரன்.

மீனாட்சியின் குடும்பத்தினருக்கு, இப்படி யாருமில்லாமல் திருமணம் செய்வது போல் ஆகிவிட்டதே என்ற கவலையும், திருமணம் குறித்த மகிழ்வுமாய் கலவையான மனநிலையில் இருக்க, மீனாட்சியின் கண்களோ தனது தாயை நினைத்து கலங்கியது.

ஈஸ்வரனின் தாயிற்கோ சொந்தமென யாருமில்லா தங்களுக்கு மீனாட்சியின் குடும்பம் சொந்தமாய் அமைந்ததில் மனம் மகிழ்ச்சியில் திளைத்தது. அன்னம் பட்டு பாவாடை சட்டையில் அன்னமாய் வளைய வர, கல்யாணியோ மணப்பெண்ணுக்கு இணையாய் தன்னை அலங்கரித்திருந்தவாறு மகிழ்வாய் வளைய வந்தவள், ஈஸ்வரனுக்கு தெரிவிக்காது திருட்டுத்தனமாய் ராஜனுக்கு திருமண வீடியோவை அனுப்பி கொண்டிருந்தாள்‌.

சுந்தரேஸ்வரனின் தாயிடம் ஆசி வாங்கிய தம்பதிகள், மீனாட்சியின் தந்தை, ஆச்சி, தாய்மாமன் அத்தை என அனைவரிடமும் ஆசி பெற்றுக் கொண்டப்பின், அனைவரும் சுந்தரேஸ்வரனின் இல்லத்திற்கு பயணப்பட்டனர்.

அன்று மாலை மீனாட்சியின் குடும்பத்தினர் அனைவரும் சுந்தரேஸ்வரன் வீட்டிலிருந்து கிளம்ப, அழுதவாறு அவர்களை அனுப்பி வைத்தாள் மீனாட்சி. கல்யாணி மீனாட்சியுடன் அமர்ந்து பேசி அவளை இயல்புக்கு கொண்டு வந்தாள்.


அன்றிரவு அவனின் அறையில் அவனவளாய் வீற்றிருந்தாள் அவனின் மீனாட்சி.

தனது கை வளைக்குள் தன்னவளை கொண்டு வந்தவன், “இப்படி உன்னை என் கைக்குள்ள வச்சிக்க எவ்ளோ ஏச்சு பேச்சுகள் வாங்க வேண்டியதா போச்சு” என அவளின் நெற்றியில் முட்டினான்.

“அப்பா திட்டுறதை சொல்றீங்களா?” எனக் கேட்டாள்.

ஆமென அவன் தலையசைக்க, “இப்பவும் இப்படி யாருக்கும் சொல்லாம மேரேஜ் செய்ய வச்சிட்டீங்களேனு அவங்களுக்கு வருத்தம் தான்” என்றாள்.

“ஹ்ம்ம் எல்லாம் சரியாகிடும். சரி பண்ணிடலாம் பொண்டாட்டி” என்றவன் அவளை கைகளில் தூக்கி கொண்டான்.

“ஹே” என பதறி அவனின் கழுத்தில் கைகளை கோர்த்து கொண்டாள்‌.

முதல் மாடியில் இருந்த அவன் அறையை தாண்டி இரண்டாம் மாடியான மொட்டை மாடிக்கு படிக்கட்டு வழியாய் தூக்கி சென்றான்.

மாடியில் வெற்றிலை கொடி பந்தல் அமைக்கப்பெற்று சுற்றிலும் மல்லிகை செடி இருக்க, நடுநாயகமாய் இருந்தது ஒற்றை ஊஞ்சல்.

காற்றில் பரவிய பூக்களின் வாசத்தை சுவாசித்து கிறங்கியவாறு தன் நெஞ்சுக்குள் இழைந்து கிடந்தவளை, ஊஞ்சலில் அமர்ந்து தனது மடியில் அமர்த்தி கொண்டான்.

அவன் அமர வைத்ததும் அவனை நோக்கி அவள் திரும்ப, அதே சமயம் கால்களை நகர்த்தி அவன் ஊஞ்சலை ஆட்ட, பயந்து போனவளாய் அவனோடு ஒட்டி அமர்ந்து இடையினை கட்டி கொண்டு அவன் கழுத்தினில் தனது முகத்தை புதைத்து கொண்டாள்.

இவனும் அவளின் இடையை சுற்றி கைகளை போட்டு கொண்டு தன்னோடு இறுக்கி கொள்ள, இந்த நெருக்கத்தில் இருவருக்கும் உடல் சிலிர்த்தடங்கியது.

தென்றல் காற்றுடன் கூடிய பூக்களின் வாசமும், ஏகாந்த இரவும், தன் இணையுடனான இந்த நெருக்கமும் அணைப்பும் நிகழ் காலம் மறந்து வேறொரு உலகில் சஞ்சரிந்திருந்தனர் இருவரும்.

ஈஸ்வரன் தனது கைபேசியில் வானொலி பண்பலையை இயக்க இரவின் கானம் என்ற நிகழ்ச்சி ஒலிப்பரப்பாகி கொண்டிருந்தது.

அயிரம் இரவுகள் வருவதுண்டு
ஆனால் இது தான் முதல் இரவு

என்ற பாடல் ஒலிக்க தொடங்கவும்,

“செம்ம டைமிங்” என்று புன்சிரிப்புடன் கூறிய ஈஸ்வரனை நிமிர்ந்து பார்த்தவளின் முகத்திலும் வெட்கப் புன்னகை.

அக்கம் பக்கம்
யாருமில்லா பூலோகம் வேண்டும்
அந்திபகல் உன்னருகே
நான் வாழ வேண்டும்

அடுத்த பாடலை கேட்டதும் நிமிர்ந்து அவனை பார்த்தவள், அமைதியாய் மீண்டும் அவன் கழுத்தோடு முகத்தை புதைத்து கொண்டாள்.

என் ஆசை எல்லாம்
உன் நெருக்கத்திலே
என் ஆயுள்வரை
உன் அணைப்பினிலே
வேறென்ன வேண்டும்
உலகத்திலே இந்த இன்பம்
போதும் நெஞ்சினிலே
ஏழேழு ஜென்மம்
வாழ்ந்துவிட்டேன்

பாடலின் உணர்வில் தன்னை மீறி அவன் கழுத்தில் அவள் இதழ் பதிக்க, அவளின் கன்னத்தில் இதழ் பதித்து காதோடு இழைந்திருந்தான் அவன்.

காதோரத்தில் எப்போதுமே…
உன் மூச்சுக்காற்றின் வெப்பம் சுமப்பேன்.
கையோடுதான் கைகோர்த்துதான்
உன் மார்புச்சூட்டில் முகம் புதைப்பேன்.

இருவரின் கைகளும் கோர்த்துக் கொள்ள, அவன் மார்போடு ஒண்டியிருந்தாள் அவள்.

வேறென்ன வேண்டும் உலகத்திலே
இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே
ஏழேழு ஜென்மம் வாழ்ந்துவிட்டேன்

உணர்வின் பிடியில் சிக்கியிருந்த இருவருக்கும் இந்நிலையை கடந்து செல்ல பெரும் தயக்கம்.

அவளின் முகத்தினை கைகளில் ஏந்தியவன், இதழ்களால் முத்த கவிதை எழுத, இதழுடன் இதழ் கோர்த்து ஆழ்ந்த முத்தத்தில் திளைத்திருக்க, உணர்வின் பிடியில் உடல் சிலிர்த்து உள்ளம் நடுங்க வெட்கத்துடன் விலகி எழுந்தாள் அவள்.

அவளின் கைப்பற்றி தன்னை நோக்கி இழுத்தவன் எழுந்து நின்று தன்னோடு அவளை சேர்த்தணைத்தான்.

முதன் முதலாய் உணரும் ஆணின் ஸ்பரிசம் அவளை உணர்வுக்குவியலாக்கி கிறங்க செய்தது‌. உடல் முழுவதும் நடுக்கத்தை உணர்ந்தவள் அவனையே பற்றுக்கோலாக்கி இறுக அணைத்து நடுக்கத்தை குறைக்க முற்பட்டாள்.

இந்த மோன நிலையை கலைக்க விரும்பாதவனாய், அவளை கைகளில் ஏந்தியவாறு தனதறைக்கு சென்றான்.

அவனது கைபேசியில் தொடர்ந்து ஒலித்து கொண்டிருந்தது பாடல்கள்.

அவளை கட்டிலில் இறக்கியவனின் மயக்கும் பார்வை அவளை கூறு போட,

உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே

எனத் தொடங்கியது அடுத்த பாடல்.

கட்டிலில் அவள் பின்னோக்கி நகர, அவளுடன் இழைந்தவாறு நகர்ந்தான் இவன்.

அவளின் கழுத்தினில் குட்டி குட்டி முத்தங்கள் பதித்தவாறு அவன்‌ முன்னேறி செல்ல,

சொக்கி தானே போகிறேன் மாமா கொஞ்ச நாளா

என்ற வரியில் அவளை பார்த்து, “சொக்க வச்சிடலாமா?” என அதே மயக்கும் புன்னகையுடன் அவன் கேட்க, நாணச் சிரிப்புடன் முகத்தை திருப்பி கொண்டாள்.

விழிகள் கலந்து விரல்கள் கோர்த்து இணைசேர, இதழ்கள் அதன் துணைசேர, அவளுள் அவனும், அவனுள் அவனும் மூழ்கிப்போக, ஈருடல் ஓருயிராய் கலந்து வானில் பறக்க, “லவ் யூ பச்சக்கிளி” உணர்வுகளின் கொந்தளிப்பில் காதோடு உரைத்தவன் அவள் நெஞ்சோடு சாய்ந்திருந்தான்.

சொக்கி நின்றாள் இந்த
சொக்கனின் மீனாள்

வானொலியில் பாடல்கள் தொடர்ந்து ஒலிக்க,

தோளில் படுத்திருந்தவன் நிமிர்ந்து அவளை பார்க்க, கலைந்த தலை முடியும் சோர்ந்து வெட்கத்தில் சிவந்த முகமுமாய் அவனை அவள் நோக்க, “திரும்பவும் சொக்க வைக்கவா?” குறும்பு புன்னகையுடன் கண் சிமிட்டி கேட்டான்.

“ஹான் ஆளை விடுங்கப்பா” என அவள் எழ முற்பட, தன்னோடு அணைத்து தட்டிக் கொடுத்து அவளை உறங்க வைத்தான் மீனாளின் சொக்கன்.