சொக்கனின் மீனாள் 7

“ரொம்ப அநியாயம் பண்றீங்க நீங்க! எப்பவும் நீங்க நினைச்சது தான் நடக்கனும். அதுக்கேத்த மாதிரி பேசி ஒத்துக்கவும் வச்சிடுறீங்க” சுந்தரேஸ்வரனிடம் கைப்பேசியில் சற்று கோபமாக பேசி கொண்டிருந்தாள் மீனாட்சி.
அன்று மீனாட்சி மயங்கிய பிறகு, மீனாட்சியின் தாய்மாமன் முருகனுக்கு மீண்டுமாய் இந்த சம்பந்தத்தை பேச வேண்டுமா என்கின்ற தயக்கம் இருந்தது.
ஈஸ்வரனும் ஆச்சியும் இரு குடும்பத்தினருடனும் பேசி ஒத்துக் கொள்ள வைத்திருந்தனர்.
ஒரு மாதத்தில் நிச்சயம் எனவும் அதற்கடுத்த இரண்டு மாதத்தில் திருமணம் வைத்து கொள்ளலாம் எனவும் இரு குடும்பத்தாரும் பேசி முடிவு செய்திருந்தனர்.
மறுநாள் நிச்சயதார்த்தம் வைக்கப்பட்டிருக்க, முந்தைய நாள் இரவு அவர்களது வழமையான உரையாடல் நேரமான இரவு பதினொரு மணியளவில் இருவரும் பேசி கொண்டிருக்கின்றனர்.
அவள் கூறியதை கேட்டு, “நாம் பேச ஆரம்பிச்சு ஒரு மாசம் தான் ஆகுது. அதுக்குள்ள புகார் வாசிக்க ஆரம்பிச்சிட்டியே மீனு! இனி ஆயுசுக்கும் என்னை நீ சமாளிக்கனுமே” எனக் கூறி சிரித்தான்.
“பாருங்க! அப்ப கூட நான் அப்படி இல்லையேனோ இல்ல இனி அப்படி நடக்காம பார்த்துக்கிறேன்னோ சொல்ல வருதா உங்களுக்கு! நான் இப்படி தான் நீ அப்படியே ஏத்துக்கிட்டு தான் ஆகனும்ங்கிற மாதிரி தானே பேசுறீங்க” என்று ஆதங்கமாய் அவள் உரைக்க,
“அது தானே உண்மை” எனக் கூறி அதற்கும் சிரித்தான்.
அவள் அவனை முறைக்கும் ஸ்மைலியை வாட்ஸ்அப்பில் அனுப்பி விட, அதனை பார்த்து வாய்விட்டு சிரித்தவனாய், “ஓ மேடம் இப்ப கோபத்துல என்னை முறைச்சிட்டு இருக்கீங்களா?” எனக் கேட்டவன்,
“நீ வீடியோ கால்ல வந்து பேசினா இப்படி ஸ்மைலி அனுப்புற வேலை மிச்சம்ல” எனக் கேட்டான்.
“நான் கோபமா இருக்கேன். அதெல்லாம் முடியாது” ஆனால் அவளின் குரலோ அந்த கோபத்திற்கு எதிர்பதமாய் சாந்தமாய் ஒலித்து கொண்டிருந்தது.
“ஏனாம்?” குறும்பாய் அவன் கேட்க,
“ஆமா எதுவும் தெரியாது பாருங்க உங்களுக்கு. உங்க முகத்தை பார்த்து கோபமா பேசுற அளவுக்கு இன்னும் தைரியம் வரலை எனக்கு” குழைவான குரலில் தயங்கியவாறு உரைத்தாள்.
அதில் சத்தமாய் சிரித்தவன், “என் மேல என்ன கோபம்?” எனக் கேட்டான்.
“இன்னிக்கு மதுரைக்கு வந்ததும் எவ்ளோ ஆசையா அப்பா உங்களையும், உங்க கடையையும் பார்க்க வந்தாங்க தெரியுமா!”
“ஆமா சந்தோஷமா தானே இங்க இருந்து போனாங்க” என யோசனையுடன் அவன் கேட்க,
“ஆமா மருமகனோட வியாபார திறமையையும் பேச்சையும் பார்த்து அவருக்கு பெருமை தான். ஆனா என் வேலை பத்தி பேசினதுக்கு என்ன சொன்னீங்க? நான் நினைச்ச மாதிரி தான் நடக்கனும்ங்கிற மாதிரி பேசினீங்களாமே! அப்பாக்கு அதுல வருத்தம்” என்று ஆதங்கத்துடன் கூறினாள்.
“நீ தொடர்ந்து ஐடில வேலை பார்க்கனும்ன்றது அவரோட ஆசைனு சொன்னாரு. உங்க பொண்ணுக்கு விருப்பம்னா அவ தொடர்ந்து வேலை செய்யட்டும் மாமா, அதே சமயம் என் வியாபாரத்துலயும் அவளை இன்வால்வ் செய்யாம (ஈடுபடுத்தாம) விட மாட்டேன்னு சொன்னேன்” என்று அவன் முடிக்க,
“இதை சொல்லி தான் அப்பா வருத்தப்பட்டார். எப்படியானாலும் நீங்க நினைச்சதை செய்ய வச்சிடுவீங்க. உங்களை வச்சி எப்படி சமாளிக்க போறேனோனு சொன்னாங்க”
“இதுக்கேவா!” என்று இதற்கும் அவன் சிரிக்க,
“என்ன இதுக்கேவா? நாளைக்கு எங்கேஜ்மெண்ட்டுக்கு நான் வாங்க சொன்ன மோதிரம் என்ன? நீங்க வாங்கிருக்கிறது என்ன? என் பேரு போட்டு உங்களுக்கும், உங்க பேரு போட்டு எனக்கும் வாங்கலாம்னு தானே சொன்னேன். நீங்க என்னடானா மீனாட்சி சொக்கநாதர் படம் போட்டு இரண்டு பேருக்கும் ஒரே மாதிரி வாங்கி வச்சிருக்கீங்க” என தனது அதிருப்தியை உரைத்தாள்.
“இந்த கல்லு பொண்ணை என்ன செய்றது? உனக்கு சொல்ல கூடாதுனு சொல்லிருந்தேன் அவக்கிட்ட! நாளைக்கு இதை உன் கைல போடும் போது உன் முகம் போற போக்கை பார்க்க ஆவலாக காத்துட்டு இருந்தேனே! இப்படி சொதப்பிட்டாலே இந்த கல்லு பொண்ணு! அவளை காலைல கவனிச்சிக்கிறேன்”
“ஓ என்னை வெறுப்பேத்தி பார்க்கிறதுல சாருக்கு அவ்ளோ சந்தோஷம்”
கலகலத்து சிரித்தவனாய், “அப்படி இல்லடா மீனு. பேரு வச்சி செய்றது எல்லாரும் போடுற மோதிரம். இது நான் பிரத்யேகமா மீனாட்சி சுந்தரேஸ்வரர் போட்டோ கொடுத்து ஒரே மாதிரி இரண்டு மோதிரம் செய்ய சொல்லி ஆர்டர் கொடுத்து வாங்கினது. உன் ஆசைக்கு நம்ம பேரு போட்டு இன்னொன்னு கூட வாங்கிக்கலாம். ஆனா எங்கேஜ்மெண்ட் மோதிரமா இது இருக்கனும்னு நினைச்சேன். இதை சர்ப்ரைஸ்ஸா உனக்கு காண்பிக்கலாம்னு தான் உன்கிட்ட சொல்லாம இருந்தேன்” என நீண்ட விளக்கமாய் அவன் உரைக்க,
“அப்ப கிளி பச்சை பட்டு தான் வாங்கனும்னு வாங்கினது என்னவாம்! நான் வேற கலர் வாங்கலாம்னு சொன்னேன் தானே” சண்டை கோழியாய் சிலிர்த்து கொண்டு கேட்க,
“சரி உனக்கு பிடிக்கலைனா நாளைக்கே கூட காலைல நிச்சயத்துக்கு முன்னாடி வேற கலர்ல புடவை வாங்கிக்கலாம். ரெடிமேட் ப்ளவுஸ் கூட வாங்கிக்கலாம் போதுமா”
சட்டென வந்த கோபத்தில் தான் பட்டென இவ்வாறு உரைத்திருந்தான். ஆனால் அவனின் சட்டென மாறும் வானிலை குண இயல்பில் அக்கோபத்தை வெளியிடாது அடக்கி வாசித்தான்.
அவனின் குரலில் இருந்த பாவனையோ ஏதோ ஒன்று அவனை காயப்படுத்தி விட்டோமோ என்று இவளை தாக்க, “ஒன்னும் தேவையில்லை! எவ்ளோ ஆசையா அந்த புடவையை எடுத்தீங்க! நான் அதையே கட்டிக்கிறேன்” அமைதியாய் இவள் கூற, மீண்டும் வாய்விட்டு சிரித்திருந்தான்.
அவனின் சிரிப்பு மீண்டு வந்த மகிழ்வில், “ஈசுப்பாஆஆ” என அவள் அவனை வழமையாய் செல்லம் கொஞ்சும் பெயரால் அழைக்க,
“அடியேய் எனக்கு யேசப்பானு சொல்ற மாதிரியே இருக்குடி!” என நகைத்தான்.
“இருந்துட்டு போகட்டும்! கணவனே கண் கண்ட தெய்வம்னு இந்த பொண்ணு எப்படி கடவுளாய் கணவனை மதிக்குது பாருனு சொல்லுவாங்க” எனக் கூறி கலகலவென அவள் சிரிக்க,
இவனும் அவளுடன் இணைந்து சிரித்திருந்தான்.
இவர்களின் சிரிப்பு சத்தம் மட்டுமே இரண்டு நிமிடங்களாய் ஒலிக்க, “பயமா இருக்குப்பா” என்றாள் கலக்கமான குரலில்.
“என்னடா பயம் பச்சக்கிளி” எனக் கேட்டான்.
“அம்மா இறந்ததுலருந்தே இருக்கும் பயம் இது! ரொம்ப சிரிச்சிட்டாலோ இல்ல ரொம்ப சந்தோஷமா மனசு இருந்தாலோ உடனே ஏதோ கெட்டது நடக்குமோனு மனசு பயப்பட ஆரம்பிச்சிடும். அம்மா அந்த படிலருந்து விழுறதுக்கு முன்னாடி அவ்ளோ சந்தோஷமா இருந்தோம் எல்லாரும்” என்றவள் கவலையான குரலில் கூறி நிறுத்த,
“அது அந்த மாதிரியான நிகழ்வு திரும்ப நடந்துருமோங்கிற பயம் உன்னை அப்படி யோசிக்க வைக்குது மீனு. அந்த நேரம் நல்லதே நடக்கும்னு சொல்லிட்டே இரு! நல்லது மட்டும் தான் நடக்கும். நம்ம எண்ணங்களுக்கு சக்தி உண்டு பச்சக்கிளி. நம்மளை சுத்தி எல்லாமே பாசிட்டிவ்வா இருக்கணும்னா அதுக்கு நாம முதல்ல பாசிட்டிவ்வா இருக்கனும்” என்றான்.
“எனக்கும் புரியுது தான்ங்க. என்னை மீறி வரும் இந்த பயம் என்னை ரொம்பவே பலவீனமாக்கிடுது. கரண்ட் ஹேப்பினஸ்ஸை (நிகழ்கால சந்தோஷம்) அனுபவிக்க முடியாம ஒரு மாதிரி பயம் கலந்த கவலையா அந்த சந்தோஷம் மாறிடும்” தன்னிலையை அவள் உரைக்க,
“நானிருக்கேன்லடா பச்சக்கிளி! இனி அப்படி எதுவும் உணர விடாம நான் பார்த்துக்கிறேன்” என்றான்.
நிஜமாகவே அவனின் இந்த நானிருக்கிறேன் என்ற ஆறுதல் மொழி அவளை வெகுவாய் தேற்றியது. மனம் மகிழ்வு நிலைக்கு மாறியது.
“எனக்கொரு சந்தேகம்! அந்த மர ஏணி இரண்டு பேரு சேர்ந்து தாராளமா ஏறுற அளவுக்கு அகலமா பெரிசா தானே இருக்கு. அதுவும் அதை ஒருத்தரால அசைக்க கூட முடியாது. இரண்டு மூனு பேர் சேர்ந்தா தான் அசைக்கவே முடியும். அவ்ளோ பெரிய ராட்சஷ ஏணி மாதிரி இருக்கு. அதுலருந்து எப்படி விழுந்தாங்க?” எனக் கேட்டான்.
அவனின் கேள்வியில் அவளின் மனம் பழைய நினைவுகளை அசைப்போட, தாயுடனான தனது பந்தத்தினையும் அன்றைய நாளின் நிகழ்வுகளையும் அவனுடன் பகிர்ந்து கொள்ளலானாள்.
“அம்மா உங்களை போல் தான்! அவங்க எடுக்குற முடிவு தான் செயல்படுத்தனும்னு நினைப்பாங்க. ஆனா அவங்க எடுக்கிற முடிவு தான் சரியாகவும் இருக்கும். நான் முதல்லலாம் நீ சொல்றது தான் செய்யனுமானு கேட்டு சண்டைலாம் போட்டிருக்கேன். அப்புறம் அவங்க சொல்றது தான் சரியா இருக்குனு புரிஞ்ச பிறகு என்னோட எல்லா முடிவுகளையுமே அம்மாகிட்ட விட்டுட்டேன். என்னோட டிரஸ் செலக்சன்ல இருந்து படிப்பு வரைக்கும் எல்லாமே அம்மா சாய்ஸ் தான். அவங்க சாய்ஸ் எனக்கேத்த மாதிரி பெஸ்ட்டாவும் இருக்கும். நானே செலக்ட் செஞ்சிருந்தா கூட நல்லா இருந்திருக்காதுன்ற அளவுக்கு அம்மா செலக்ஷன் இருக்கும். நீங்க நினைச்சதை எப்படியாவது என்னை செய்ய வச்சிடுறீங்கனு நான் யோசிக்கும் போதெல்லாம் அம்மா ஓட இந்த மெமரீஸ்லாம் வந்துடும் எனக்கு” என்று நிறுத்தியவள்,
“அதுக்காக எப்பவும் நீங்க சொன்னதை கேட்டு நடந்துப்பேன்னுலாம் கனவு காணாதீங்க. என்னிக்காவது பொங்கி வெடிக்கவும் வாய்ப்பிருக்கு” எனக் கூறி சிரித்தாள்.
அவனும் உடன் சேர்ந்து சிரித்தவனாய், “யூ ஆர் வெல்கம் பொண்டாட்டி! என்னை அடிக்க, திட்ட, வச்சி செய்ய எல்லா உரிமையும் உனக்கு உண்டு பச்சக்கிளி” என்றான்.
அவனின் பொண்டாட்டி என்ற விளிப்பே அவளுள் சிலிர்ப்பை உண்டாக்க அமைதியாய் அவன் கூறியதை அசைப்போட்டு நெகிழ்ந்து கொண்டிருந்தாள்.
பின் தன்னை சமன் செய்தவளாய் அவனின் கேள்விக்கு பதிலளிக்கலானாள்.
“அந்த மர ஏணி இந்த வீடு கட்டும் போது இந்த இடத்துல படிக்கட்டு மாதிரி வைக்கிறதுக்காகவே செஞ்சதுனு அம்மா சொல்லுவாங்க. அம்மாக்கு ரொம்ப பிடிச்ச விஷயம் இந்த மர ஏணி மூலமா மாடிப்படி ஏறி போறது. அம்மா குழந்தையா இருக்கும் போதுலருந்தே உபயோகிச்சிட்டு இருக்க ஏணி இது!
எந்த பண்டிகையுமே நாங்க சென்னைல கொண்டாட மாட்டோம் ஈசுப்பா! அப்பாக்கு உடன் பிறந்தவங்கனு யாரும் இல்லாதனால, பண்டிகை எல்லாமே இந்த வீட்டுல தான் கொண்டாடுவோம். அப்பாவோட அம்மா அப்பா இருந்த போது, இங்க ஒரு நாள் அங்க ஒரு நாள்னு இருப்போம். அவங்க இறந்த பிறகு அந்த வீட்டை வாடகைக்கு விட்டுட்டு முழுக்க எங்களோட போக்குவரத்து இந்த வீட்டுக்கு மட்டும் தான்.
நான் பதினொன்னாவது படிக்கும் போது தீபாவளி பண்டிகை கொண்டாட இங்க வந்தோம். அந்த தீபாவளி முடிஞ்ச அன்னிக்கு வாழ்க்கைல எனக்கு இது மறக்க முடியாத தீபாவளினு நினைச்சிக்கிட்டேன். அந்தளவுக்கு அன்னிக்கு முழுக்க எனக்கு பிடிச்ச படம், பாட்டு, விளையாட்டு, ஊர் சுத்துறதுனு அவ்ளோ சந்தோஷமா போச்சு நாள். மறுநாள் காலைல நாங்க எழுந்ததே அம்மாவோட அலறல் குரல்ல தான்.
அம்மா படிக்கட்டுல இறங்கும் போது லோ பிபினால மயக்கம் வந்திருக்கு. அவங்க படிக்கட்டுல உட்காரப்போக மயக்கத்துல தடுமாறி பக்கத்துல இருந்த ஊஞ்சலோட முனைல மண்டைய இடிச்சிட்டாங்க போல. நாங்க எல்லாரும் வந்து பார்க்கும் போது மண்டைல இருந்து வழிஞ்ச இரத்த வெள்ளத்துல தரைல இருந்தாங்க அம்மா” என தேம்பி அழ ஆரம்பித்தாள் மீனாட்சி.
தன் தலையிலேயே அடித்து கொண்டான் ஈஸ்வரன். ‘இதை கேட்க இப்ப தான் நேரமா உனக்கு’ என தன்னை தானே திட்டி கொண்டவன், இணைப்பை துண்டித்து அவளை வீடியோ காலில் அழைத்தான்.
அவன் இணைப்பை துண்டித்ததை கூட கவனியாது அவள் அழுது கொண்டிருக்க, கைபேசியில் இருந்து வந்த அழைப்பொலியில் அவன் ஆடியோ காலில் அழைப்பதாய் எண்ணி அழைப்பை ஏற்க, அவனின் தரிசனமே கிட்டியது அவளுக்கு.
கட்டிலில் படுத்தவாறு பேசி கொண்டிருந்தவள், சட்டென தோன்றிய அவன் முகத்தில் பதட்டம் கொண்டவளாய் எழுந்து அமர்ந்தாள். தனது நைட்டி உடையை கழுத்துக்கு மேலே இழுத்து சரி பார்க்க,
“எல்லாம் சரியா தான் இருக்கு பச்சக்கிளி! நோ டென்ஷன்!” என அவளை ஆசுவாசப்படுத்த அவன் இயல்பாய் கூற, அவளுக்கு தான் வெட்கமும் கூச்சமுமாய் இருந்தது.
தலையை நிமிர்த்தி அவனை காண முடியாது தாழ்த்தி கொண்டிருந்தவளின் மனமோ, ‘எப்படி அழுதுட்டு இருந்தவளை இப்ப எப்படி வெட்கப்பட வச்சிக்கிட்டு இருக்கான் இவன்’ என்று மேலும் அவளை சீண்டி கொண்டிருந்தது.
“ஹே மீனு! இங்க பாரு! ஆர் யூ ஓகே நௌ?” எனக் கேட்டான்.
அவளின் வெட்கமெல்லாம் அவனுக்கு புரியவில்லை. தன்னிடம் அழுகையை மறைக்கவே தலையை தாழ்த்தி கொண்டிருக்கிறாளென எண்ணி கலங்கியவாறு தான் அவளை கேட்டான்.
“நான் ஒரு ஃபைவ் மினிட்ஸ் கழிச்சி கூப்டுறேனே” என சற்றாய் தலையை நிமிர்த்தி அவள் கூற,
“அதெல்லாம் ஒன்னும் தேவையில்ல! அழுறதா இருந்தாலும் என் முன்னாடி இப்படியே அழு! இப்ப உன்னை தனியா விடுறதா ஐடியா இல்லை” என்றான்.
அவனின் பேச்சில் உள்ளம் கனிந்தது அவளுக்கு.
“இல்ல நான் அழலை” என்றவாறு இரு கண்களையும் அழுத்தமாய் துடைத்து விட்டு அவனை பார்த்தாள்.
“குட்! அப்படியே கொஞ்சமா சிரிக்கலாம்! தப்பில்லை” என்றான்.
“சிரிக்கலாமே” என்றவள் ஈஈஇஇஇ என பல்லை காண்பிக்க,
“அய்யோ அம்மா பேய்இஇஇ” என போலியாய் அலற, அவள் கோபமாய் முறைத்திருந்தாள் அவனை.
அவளின் முகப்பாவனை கண்டு இவன் சிரிக்க, முறைப்பை கைவிட்டு சிரித்தாள் அவளும்.
“சாரி பச்சக்கிளி! இப்ப நான் அம்மாவை பத்தி கேட்டிருக்க கூடாது” என்று மன்னிப்பு கேட்க,
“ம்ப்ச் அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்லை. என்னைக்கா இருந்தாலும் உங்ககிட்ட நான் சொல்ல வேண்டிய விஷயம் தானே”
“அம்மா இறந்த பிறகு நான் ரொம்ப ஒடுங்கி போய்ட்டேன் ஈசுப்பா. அப்பாவும் நொடிஞ்சு போய்ட்டாங்க. யார்க்கிட்டயும் பேசாம ரூம்லயே இருந்தேன். அப்ப தான் ஆச்சி ஆறு மாசம் எனக்காக என் கூட சென்னைல எங்க வீட்டுல வந்து தங்கி என்னை இந்த அழுத்தத்துல இருந்து வெளில கொண்டு வந்தாங்க”
தொடர்ந்து அவள் தனது பழைய நினைவுகளை கூறி கொண்டிருக்க, அவளை பேச விட்டு அமைதியாய் கேட்டு கொண்டிருந்தவன், அவள் மனதிலுள்ளதை எல்லாம் கொட்டி முடித்ததும் அவளை வம்பிழுத்து சிரிக்க வைத்த பின்பே அவளை உறங்க வைத்தான்.
மறுநாள் காலை ஏழு மணியளவில் மீனாட்சியின் இல்லத்தில் அனைவரும் நிச்சயத்திற்கான வேலையில் ஈடுப்பட்டு கொண்டிருந்தனர்.
காலை பத்து மணியளவில் இருவரின் நேரடி குடும்பத்தினரை மட்டும் வைத்து எளிமையான நிச்சயமாய் தான் ஏற்பாடு செய்திருந்தனர்.
காலை எட்டு மணியளவில் மீனாட்சிக்கு மருத்துவமனையில் இருந்து கல்யாணி அழைப்பு விடுத்து பதட்டமாய் நடந்ததை கூற ருத்ரனுடன் மருத்துவமனை சென்றிருந்தாள்.
அங்கு மருத்துவமனையின் வரவேற்பறையில் கல்யாணியுடன் சுந்தரராஜனும் தீரனும் நின்றிருக்க, “அவருக்கு என்னாச்சு?” என கண்ணீருடன் பதட்டமாய் வினவியிருந்தாள்.
“அய்யோ அண்ணி நீங்க பயப்படுவீங்கனு தெரிஞ்சிருந்தா நான் உங்களுக்கு சொல்லிருக்கவே மாட்டேன். அண்ணன் சொல்லிச்சு உங்ககிட்ட சொல்ல வேண்டாம்னு! நான் தான் மனசு கேட்காம சொல்லிட்டேன். ஒன்னுமில்லை அண்ணி!” என கல்யாணி புலம்பலாய் தன்போக்கில் பேச,
“மாப்பிள்ளைக்கு என்னமா ஆச்சு” என அதே குறையாத பதட்டத்துடன் வினவினார் ருத்ரன்.
“ஒன்னுமில்லை மாமா! காலைல நிச்சயத்துக்கு கிளம்புறதுக்கு முன்னாடி கடையை ஒரு பார்வை பார்த்துட்டு வந்துடுறேன்னு புல்லட் வண்டில போனான். மெயின் ரோட்ல பின்னாடி வந்த வண்டி இவன் வண்டியை இடிக்க இவன் சமாளிக்க முடியாம சைட்ல இருந்த ஜல்லில விழுந்துட்டானாம். வண்டி கால்ல விழுந்து சைலன்சர் சூடு காலை கொஞ்சம் பதம் பார்த்துடுச்சு” என்றதும் அச்சச்சோ என்றனர் இருவரும்.
“கைல ஜல்லி கொஞ்சம் கிழிச்சிடுச்சு வேற” கல்யாணியின் முகத்தில் அத்தனையாய் கவலை ரேகைகள்.
இவர்கள் அனைவரின் முகப்பாவனைகளை கண்ட ராஜன், “அண்ணன் கல்யாணிக்கு ஃபோன் பண்ணி வர சொன்னான் போல! இவ பயந்து எனக்கு போன் செஞ்சிட்டா! நான் இந்த நிச்சயத்தை பார்க்க தான் சென்னைல இருந்து காலைல மதுரைக்கு வந்து சேர்ந்தேன். வந்ததும் இப்படி ஒரு சேதி கேட்டு நேரடியா ஹாஸ்பிட்டலுக்கு தான் வந்து நிக்கிறேன். நீங்க கவலைப்படுற அளவுக்கு பெரிசா எதுவும் இல்ல. இன்னிக்கே நிச்சயத்தை வச்சிக்கலாம்” என அவன் பேசிக் கொண்டே போக,
“நான் அவரை பார்க்கனும்” என்றாள் மீனாட்சி.
“அண்ணாக்கு அந்த ரூம்ல முழுங்கால்ல கட்டு போட்டுட்டு இருக்காங்க அண்ணி” என கூறும் போதே அந்த அறையிலிருந்து செவிலியர் வெளியே வந்ததை கண்ட கல்யாணி, “போங்க அண்ணி! நீங்க போய் பாருங்க” என அனுப்பி வைத்தாள்.
அவசரமாய் அறைக்குள் நுழைந்த மீனாட்சி, முழுங்காலிலும் உள்ளங்கையாலும் கட்டுடன் நெற்றியில் சிராய்ப்புடன் தலையை பின்னால் சாய்த்து சோர்ந்து அமர்ந்திருந்த ஈஸ்வரனை தான் கண்டாள்.
“ஈசுப்பாஆஆஆ” என அழுகை குரலில் அழைத்தவாறே கட்டிலினருகே அவள் செல்ல, அவளின் குரலில் விழுக்கென நிமிர்ந்த ஈஸ்வரன், “ஹே மீனு நீ எங்கே இங்க” எனக் கேட்டான்.
அவனின் கேள்வி எதுவும் அவள் காதை எட்டவில்லை என்பது போல் அவனின் நெற்றியிலிருந்த காயத்தை வருடியவளோ விசும்பலுடன், “நான் வேண்டாம் உங்களுக்கு ஈசுப்பா! நீங்க தூரமா இருந்தாலும் நல்லா இருந்தா போதும். என்னோட பொல்லாத நேரம் உங்களையும் ஏதாவது செஞ்சிடுமோனு பயமா இருக்கு” என கூறி வாயை மூடும் முன்பே,
“பைத்தியமாடி நீ” என கண்களில் கோபம் மின்ன கர்ஜித்திருந்தான் ஈஸ்வரன்.
அவனின் இந்த குரலில் அரண்டு போய் அவனை பார்த்தாள் மீனாட்சி.
சட்டென தன்னை கட்டுக்குள் கொண்டு வந்தவனாய், “நீ இல்லாம நான் ஒன்னும் செத்துட மாட்டேன் தான். ஆனா உணர்வில்லாத நடைப்பிணமா தான் வாழ்வேன் பரவாயில்லையா” அடக்கப்பட்ட கோபத்துடன் பல்லை கடித்து கொண்டு கேட்டான்.
அவள் அழுகையை அடக்கிய தேம்பலும் மிரண்ட விழிகளுமாய் அவனை பார்க்க, கை நீட்டி அவளை தன்னருகில் அழைத்தான்.
அவன் அமர்ந்திருந்த கட்டிலின் அருகில் அவள் செல்ல, அவளை இழுத்து தன்னருகே அமர வைத்தவன், “அழாதடா மீனு!” என கண்களை துடைத்தான்.
தோளை சுற்றி கையை போட்டு அவள் முகத்தை தன்னருகே திருப்பியவன் நெற்றியில் முத்தமிட்டான். அந்த முத்தம் மீண்டுமாய் அவளது கண்ணீரை உற்பத்தி செய்ய, “திரும்ப அழுதீனா உதட்டை கடிச்சி வச்சிருவேன்” என குறும்பாய் உரைக்க,
பட்டென உதட்டை வாய்க்குள் இழுத்துக் கொண்டாள். அவளின் செயலில் வாய்விட்டு சிரித்திருந்தான்.
“இனி என்னிக்கும் நேரம் அபசகுணம் அது இதுன்னுலாம் உளறாத சரியா! எனக்கு அதுலலாம் சுத்தமா நம்பிக்கை இல்ல. நம்ம எண்ணங்கள் சரியா இருந்தா எல்லாமே சரியா நடக்கும். உன்னோட நெகட்டிவ் தாட்ஸ் தான் இதுக்கான காரணம். உன்னை நிறைய மாத்த வேண்டியது இருக்கு. எப்படா நீ என் கைக்குள்ள வருவனு இருக்கு எனக்கு. சீக்கிரம் கல்யாணம் செஞ்சிக்கலாமா பச்சக்கிளி” என அவளின் நெற்றியோடு அவன் முட்ட, மென்னகையுடன் சரியென தலையசைத்தாள்.
வெளியே அமர்ந்திருந்த சுந்தரராஜன் தீரனிடம், “யாரோ அண்ணாவை ஃபாலோ செஞ்சி வேணும்னே இப்படி செய்றா மாதிரி தோணுதுடா தீரா” என்றான்.
— தொடரும்