சொக்கனின் மீனாள் 6

மீனாட்சியின் அந்த‌ மணம் வீசும் அறையில் அமர்ந்திருந்தான் சுந்தரேஸ்வரன்.

அன்று அந்த கோவிலுக்கு ஏதேச்சையாக அவன் வந்திருக்க, அவனை பார்த்திருந்த மீனாட்சியின் பார்வையை வைத்தே அவளுக்கு அவனை எந்தளவிற்கு பிடித்திருக்கிறது என அறிந்து கொண்டனர் ஆச்சியும் அவளின் அத்தை லட்சுமியும்.

அதன் பிறகு ஆச்சி அங்கேயே அவனிடம் பேசி அவன் மூலமாக அவனின் தாயிடம் பேசி, அடுத்த ஒரு வாரத்தில் இரண்டாவது பெண் பார்க்கும் படலத்திற்காக அவனை குடும்பத்துடன் வரவழைத்திருந்தனர்.

மீனாட்சி ராஜனிடம் பேசி அடுத்த ஒரு வாரத்திற்கும் வீட்டிலிருந்தே வேலை செய்வதாய் உரைத்து அனுமதி பெற்றிருந்தாள்.

நீண்ட நெடிய ஏழு நாட்களாய் இவ்வாரத்தை கடந்திருந்தாள் மீனாட்சி. தினமும் அவனின் நேரலையை காணாது அவளுக்கு உறக்கமில்லை என்றானது அவளின் நாட்கள். அவன் எந்த உணர்வுடன் இருக்கிறான்? தன்னை அவனுக்கு பிடித்திருக்கிறதா? பெண் பார்த்து விட்டு தன்னை பிடிக்கவில்லை என்று கூறிடுவானா என பலவிதமான கேள்விகளும் பயங்களும் அவளை சூழ்ந்திருந்தன. ஏழு நாளும் ஒரு விதமான பதட்ட மனநிலையிலேயே பரீட்சை முடிவுக்காக காத்திருக்கும் மாணவியாய் தான் இந்த நாளுக்காக காத்திருந்தாள்.

இதோ இப்பொழுது அந்த பெண் பார்க்கும் நாளும் வந்துவிட, ஈஸ்வரன் பெண்ணுடன் தனியாக பேச வேண்டுமென கேட்டதினால் இப்படி அறைக்குள் அவளுடன் இருக்கிறான். இவர்களுக்கு காவலாய் பெரியவர்கள் அன்னத்தை அனுப்பி வைக்க, அவளோ இவர்களுக்கு தனிமை அளித்து விட்டு கீழே மாடியின் முதல் படியில் நின்று விட்டாள்.

சுந்தரேஸ்வரன் நாற்காலியில் அமர்ந்திருக்க, அவள் அவன் எதிரில் கட்டிலில் அமர்ந்திருந்தாள். அவனுக்குமே சிறிது படபடப்பாய் தான் நெஞ்சம் துடித்து கொண்டிருந்தது.

அவனின் விழுங்கும் பார்வையை தாங்க இயலாது வெட்கங்கொண்டு தலையை தாழ்த்திவாறு அமர்ந்திருந்தவளை பார்த்த ஈஸ்வரனின் இதழ் சிரிப்பில் விரிந்தது.

“உங்ககிட்ட சில கேள்விகள் கேட்கனுமே” குறும்பில் மின்னியது அவனது கண்கள்‌.

“ஹான்! கேள்வியா? கேளுங்க!” என்றவாறு மீண்டும் குனிந்து கொண்டாள். முந்தானையை திருகியது விரல்கள்.

தன்னை குறித்தான கேள்விகள் ஏதேனும் கேட்க போகிறான் போலும் என நினைத்து கொண்டாள்.

“சமைக்க தெரியுமா?” எனக் கேட்டான்.

‘என்ன இவங்க எடுத்ததும் சமையலை கேட்குறாங்க’ என எண்ணியவளாய், மனதோடு தான் செய்த உப்பு மேகியையும், கோந்து உப்புமாவையும் ஓட்டி பார்த்தவள், “கொஞ்சம் கொஞ்சம் தெரியும்” என்றாள்.

“ஓ அப்ப அடுத்த கேள்வி இது தான்! பொதுவா அஞ்சறைப் பெட்டில என்னென்ன பொருட்கள்லாம் வைப்பாங்க?” எனக் கேட்டான்.

‘அஞ்சறைப் பெட்டியா’ என வாய்க்குள் முணங்கியவள், ‘அதெல்லாம் நான் எங்கே பார்த்தேன்’ என நினைத்தவளாய் உதட்டை பிதுக்கி பாவமாய் அவனை பார்த்து வைத்தாள்.

அவளின் பாவனையில் வரவிருந்த சிரிப்பை அடக்கியவாறு அவளை முறைத்து பார்த்தவன், “சரி நார்மல் ஐயர்ன்க்கும் கேஸ்ட் ஐயர்ன் பாத்திரங்களுக்கும் என்ன வித்தியாசம்? சீசனிங் செஞ்ச பாத்திரங்கள் நல்லதா? சீசனிங் செய்யாத பாத்திரங்கள் நல்லதா?” என அவன் கேட்டு கொண்டே போக,

“போதும்! விட்டுடுங்க! அழுதுடுவேன்” என்று வாய்விட்டே கூறி விட்டாள். அதில் அவன் வாய்விட்டு சிரித்திருந்தான்.

அவன் கேள்வி கேட்டு ஏற்றிய கடுப்பில், “உங்களுக்கு பொண்ணு பார்க்க வந்தீங்களா இல்ல உங்க கடைக்கு ஆள் எடுக்க வந்தீங்களா?” சற்று கோபமாகவே கேட்டிருந்தாள் மீனாட்சி.

அவளின் கோப முகத்தை ரசித்து பார்த்து சிரித்தவனாய், “பச்சக்கிளி” என அழைத்தான்.

வெடுக்கென, “என் பேரு ஒன்னும் பச்சக்கிளி இல்ல! மீனாட்சி” அவனுக்கு ஒழுங்கு காட்டும் பாவம் அவள் முகத்தில்.

“ஹ்ம்ம் தெரியும்! ஆனா எல்லாரும் கூப்டுற மாதிரி நான் எப்படி உன்னை கூப்பிடுறது? எனக்கு நீ ஸ்பெஷல் இல்லையா?” எனக் கண் சிமிட்டி சிரித்தவாறு கேட்டான்.

பேரதிர்ச்சி அவளுக்கு. இத்தனை நேரமாய் அவன் விளையாட்டாக தான் பேசியிருக்கிறான் என்று அப்பொழுது தான் புரிந்தது அவளுக்கு‌.

‘அவருக்கும் என்னை பிடிச்சிருக்கா?எப்போ? எப்படி?’ எண்ணிய அவளுள்ளம் பரவசத்தில் துள்ளி குதித்திருந்தது.

ஆயினும் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாது, “எடுத்ததும் ஒரு பொண்ணுக்கிட்ட இப்படி தான் பேசுவீங்களா?” என முறைப்பாய் கேட்டாள்.

“ஹ்ம்ம் தெரியாத பொண்ணுக்கிட்ட இப்படி பேசுறது தப்பு தான். நான் கட்டிக்க போற பொண்ணுக்கிட்ட இப்படி பேசுறது தப்பில்லையே” சற்றும் தடுமாறாமல் அவளின் பார்வையை தாங்கியவாறு பதில் அளித்தான்.

“நான் இன்னும் ஓகே சொல்லலை. நீங்களா எப்படி முடிவு செய்யலாம்? அப்ப என் சம்மதம் தேவையில்லையா உங்களுக்கு?” எனக் கேட்டாள்.

“என்னை பார்த்த இரண்டு நேரமும் பரவசத்தை வெளிப்படுத்திய உன்னுடைய முகமும், ஆசையாய் என்னை வருடி அப்படியே உனக்குள்ளே இழுத்துக்கிட்ட அந்த மீன் கண்களும் உனக்கு என்னை எந்தளவுக்கு பிடிக்கும்னு ஏற்கனவே சொல்லிடுச்சு பச்சக்கிளி” மின்னும் கண்களுடன் உற்சாகமாய் பேசி கொண்டிருந்தவனை அதே விழுங்கும் பார்வை பார்த்து வைத்தாள் மீனாட்சி.

“இப்ப நான் உன்னை கேட்ட கேள்விகளுக்குலாம் பதில் சொல்ற பெண்ணை தான் கட்டிக்கனும்னு ஒரு முடிவோட இருந்தேன். அதாவது என்னுடைய தொழிலுக்கு உறுதுணையாக உதவியாக இருக்க பொண்ணா பாருங்கனு தான் அம்மாகிட்ட சொல்லிருந்தேன்‌‌. கல்யாணிக்கு கல்யாணம் செய்யாம எனக்கு மேரேஜ் செஞ்சிக்க விருப்பமே இல்லை. ஆனா அவ பிஜி படிச்சிட்டு கொஞ்ச நாள் வேலை செஞ்சிட்டு தான் கல்யாணம் செஞ்சிப்பனு சொல்லவும் அம்மா எனக்கு மேரேஜ் செஞ்சே ஆகனும்னு பிடிவாதமா இருந்துட்டாங்க. எனக்கும் கல்யாணிக்கும் அஞ்சு வயசு வித்தியாசம்‌. அதனால் அவளுக்கு லேட்டா பண்ணலாம்னு எனக்கு பொண்ணு பார்க்கிறதா அம்மா முடிவு செஞ்சதும் நான் அம்மாகிட்ட சொன்ன ஒரே கண்டிஷன் எனக்கு தொழில்ல உதவிகரமா இருக்க பொண்ணா பாருங்கனு தான். அதனால படிச்ச பொண்ணா தான் அம்மா கடந்த இரண்டு வருஷமா பார்த்துட்டு இருந்தாங்க. ஆனா இப்ப என் தொழில் பத்தி உனக்கு தெரியலைனாலும் பரவாயில்லை. நீ தான் வேணும்னு மனசு தவிக்குது” என்று நிறுத்தியவன்,

“உன் போட்டோ பார்க்கும் போது கூட உன்னை தான் கட்டிக்கனும்னு நினைக்கலை மீனு. ஆனா அன்னிக்கு மலை கோவில்ல சாமி முன்னாடி நிக்கும் போது என்னை நீ பார்த்த பார்வை இருக்கே! அப்ப மனசு சொல்லிச்சு! பச்சக்கிளினு சொல்லிச்சு! இந்த பச்சக்கிளி தான் உனக்காக பிறந்தவனு சொல்லிச்சு! அவளை விட்டுறாதனு சொல்லுச்சு! என்னால இந்த ஒரு வாரமா எந்த வேலைலயும் கவனம் செலுத்த முடியலை மீனு. மனசு முழுக்க உன் நினைப்பு தான். கண்டதும் காதலுலலாம் எனக்கு துளிக்கூட நம்பிக்கை இல்ல. ஆனா அன்னிக்கு உன்னை பார்த்த பிறகு எனக்கு என்னமோ ஆகிடுச்சு. மீதமுள்ள என் வாழ்நாள் முழுசுக்கும் நீ வேணும்னு மனசு கிடந்து தவிக்குதுடா பச்சக்கிளி” மீனாட்சிக்கு ஏற்பட்ட அதே உணர்வு நிலையை இந்த ஒரு வாரமாய் அவன் அனுபவித்திருக்க, அதை துளியும் மறைக்காது மீனாட்சியின் முன் கொட்டியிருந்தான் சுந்தரேஸ்வரன்.

அவளின் வசனத்தை அவன் பேசுவது போல் தோன்றியது அவளுக்கு. ஆச்சரிய பார்வை பார்த்து வைத்தாள். இமை சிமிட்டாது விழுங்கும் பார்வை பார்த்தவளை நோக்கி அடியெடுத்து வைத்து அருகில் சென்றவன், “என்னை கட்டிக்கிறியா பச்சக்கிளி? நாளொரு சண்டையும் பொழுதொரு சமாதானமுமா நிறைய காதலோட சந்தோஷமா வாழலாம்” அமர்ந்திருந்தவளை நோக்கி அவன் குனிந்து கூற,

ஆனந்த அதிரிச்சியிலும் மகிழ்வின் உச்சநிலையிலும் மனம் உற்சாக மிகுதியில் துள்ள, கண்களில் நீர் துளிர்க்க, அவனின் கேள்விக்கு ஆமென தலையசைத்து அந்த நீரை கண்களை விட்டு வெளியேற விட்டிருந்தாள்.

தன்னை மீறி அக்கண்ணீரை கை நீட்டி துடைத்தவனின் தொடுகையில் உடல் சிலிர்க்க அவள் அவனை பார்க்க, “ஹேப்பி டியர்ஸ்ஸா? அப்ப உனக்கும் என்னை போலவே தோணுச்சா?” மனம் நிறைந்த பூரிப்புடன் கேட்டான்.

ஹ்ம்ம் என அதே அழுகையுடன் கூடிய சிரிப்புடன் கூறியவளை அள்ளி அணைக்க கைகள் பரபரக்கவும், பாக்கெட்டுக்குள் கைகளை திணித்தவாறு பின்னோக்கி சென்று தள்ளி நின்று கொண்டான்.

அவள் தன்னிலைக்கு வரும் வரை, உணர்வுக்குவியலான அவளின் நிலையையும் அதில் வெளிப்பட்ட ஆத்மார்த்த மகிழ்வையும் தானும் ரசித்தவனாய் நின்று பார்த்து கொண்டிருந்தான்.

அவள் சமன்பட்ட நிலையில், “ஆர் யூ ஓகே நௌ? கீழே போகலாமா?” எனக் கேட்டான்.

ஹ்ம்ம் என அவள் தலையசைக்க,
“வாட் எ பிளசன்ட் ஸ்மெல் (என்ன ஓர் அருமையான மணம்)!” என்று அச்சமயம் காற்றின் மூலம் அறைக்குள் பரவிய பூக்களின் நறுமணத்தை நுகர்ந்தவாறு உரைத்தவன்,

“இந்த ரூம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு மீனு! நம்ம மேரேஜ் முடிஞ்ச பிறகு இந்த வீட்டுக்கு வரும் போதெல்லாம் இந்த அறைலயே தங்கிக்கலாம்” கண் சிமிட்டி அவன் உரைத்த விதத்தில் கைகள் சில்லிட்டது அவளுக்கு.

எப்படி நெடுநாட்கள் பழகியது போல் இத்தனை இயல்பாய் அவன் தன்னிடம் உரையாடுகிறான் என வியப்பாய் இருந்தது அவளுக்கு.

அவளது பார்வையின் பொருளை உணர்ந்தவனாய், “உன்னை பார்த்ததுல இருந்து, நீ தான் வாழ்க்கைனு புரிஞ்சதுல இருந்து, உன்னை வேற்று ஆளா என்னால யோசிக்கவே முடியலை பச்சக்கிளி” ஆத்மார்த்தமான குரலில் உரைத்தான்.

அவளுடன் அந்த மாடி அறையில் இருந்த வரவேற்பறைக்கு வந்தவன், அங்கு தரையில் சதுரமாய் மரக்கதவு போன்று இருந்த இடத்தை பார்வையிட்டவன், அதைப் பற்றி வினவினான்.

“இங்க மர ஏணி மூலமா போகுற‌மாதிரி ஒரு படிக்கட்டு இருக்குங்க. முன்னாடிலாம் இது மூலமா தான் நாங்க கீழே போய்ட்டு வருவோம்” என்று அவள் கூறியதை ஆச்சரிய பாவனையுடன் கேட்டவன்,

“எங்கே ஓபன் பண்ணு! பார்ப்போம்! இது வரைக்கும் இப்படி நான் பார்த்ததில்லை மீனு!” என ஆசையும் ஆவலுமாய் கேட்டான்.

அவனின் ஆர்வத்தையும் ஆசையையும் புறந்தள்ள இயலாதவளாய், தரையோடு இருந்த அந்த மரக்கதவை திறக்க, அந்த ஓட்டையின் வாயிலாக ஒரு மர ஏணி கீழ் நோக்கி போடப்பட்டிருக்க, அது கீழே தரை தளத்திற்கு செல்வது போன்று இருந்தது‌.

மண்டியிட்டு அமர்ந்து கீழே எட்டி பார்த்தவனுக்கு அங்கிருந்த மர ஏணி கண்ணுக்கு தெரிய, “இந்த வழியாவே கீழே போய்டலாமா மீனு! ஆசையா இருக்கு” எனக் கேட்டான்.

இவளுக்கு கைகள் நடுங்கியது. அன்னம் எங்கே என்று அவள் சுற்றி முற்றி பார்க்க, அவள் கீழே யாரிடமோ பேசுவது கேட்டது‌.

அவனின் ஆசை என்ற வார்த்தையிலேயே தனது பயத்தினை மறைத்து கொண்டவளாய், “ஹ்ம்ம் போகலாம்ங்க” என்றாள்.

அவள் அந்த மர ஏணியில் கால் வைத்து கீழே இறங்க ஆரம்பிக்க, அவளை பின் தொடர்ந்து அவனும் இறங்க ஆரம்பித்தான்.

படிக்கட்டில் ஒவ்வொரு அடியாய் எடுத்து வைக்கும் பொழுதே அவளின் நினைவுகள் பின்னோக்கி சென்று, பழைய நிகழ்வுகளை கிளிறி விட, உடல் வியர்க்க ஆரம்பித்து, கண்கள் சுழன்று மயக்க நிலைக்கு தள்ள, படிக்கட்டில் தடுமாறி பின்னோடு வந்த ஈஸ்வரன் மீது மயங்கி விழுந்திருந்தாள் மீனாட்சி.

தன் மீது அவள் விழுந்ததும், கால் இடரி விழுந்து விட்டாளோ என எண்ணி பதறிப்போய் அவன் அவளை பிடிக்க, அவளின் முழு உடலின் எடையை உணர்ந்த பின்னரே அவள் மயங்கியதை உணர்ந்தான்.

அந்த படிக்கட்டில் அமர்ந்து, அவளை மடியில் தாங்கி, “மீனாட்சி” என தன்னை மீறிய சத்தத்துடன் பதற்றமாய் அவளின் கன்னத்தை தட்டி கொண்டிருந்தான். அவளின் நிலைக்கண்டு அவன் உடல் நடுங்க, அவனது சத்தத்தை கேட்டு கீழே வரவேற்பறையில் இருந்த மொத்த குடும்பமும் அந்த அறைக்கு வந்திருந்தது.


மருத்துவமனையில் மீனாட்சி சிகிச்சை பெற்று கொண்டிருக்க, இவனை சுற்றி ருத்ரனும், ஆச்சியும், முருகனும் என்ன நடந்தது என்று கேட்டவாறு நின்று கொண்டிருந்தனர். ஈஸ்வரனின் தாய் அகல்யா, தங்கை கல்யாணி, அன்னம் மற்றும் மீனாட்சியின் அத்தை லட்சுமி என அனைவரும் வீட்டில் இருந்தனர்.

அவன் நடந்ததை விவரித்து கொண்டிருக்க,
“ஆறு‌ வருஷம் முன்னாடி தங்கத்தோட அம்மா என்னோட தங்கச்சி இந்த ஏணிப்படிலருந்து விழுந்து தான் இறந்தாங்க தம்பி” எனக் கூறி அழுதார் முருகன். அதிர்வுடன் அவர் கூறியதை கேட்டு கொண்டிருந்தான் ஈஸ்வரன்.

ருத்ரனின் கண்களும் கண்ணீரை பொழிந்தது. ஆச்சி இலக்கற்று பார்த்தவாறு அமர்ந்திருந்தார். அந்த நாள் நினைவுகள் இன்று அனைவரின் மனதிலும் வந்து போக, பெரும் வலியுடன் மீனாட்சியின் அன்னை பார்வதியை எண்ணி கலங்கினர் அனைவரும்‌.

மீனாட்சி விழித்து விட்டதாய் செவிலியர் வந்து உரைத்து சென்றார். அதிர்ச்சியினால் ஏற்பட்ட மயக்கமென உரைத்த மருத்துவர், காலில் சிறிது எலும்பு கீறல் ஏற்பட்டுள்ளது போல் தோன்றுகிறது என உரைத்து அதற்கு எலும்பு முறிவு மருத்துவரிடம் சிகிச்சை பெற்று கொள்ளுமாறு பரிந்துரைத்தார்.

ருத்ரன், முருகன், ஆச்சி மூவரும் உள்ளே சென்று பார்த்தனர். சுந்தரேஸ்வரன் அமர்ந்திருந்த நாற்காலியில் ஆசுவாசமான மூச்சுடன் தலை சாய்த்து கொண்டான்.

இந்த ஒரு மணி நேரத்தில் அவன் கடந்து வந்த வலி, மீனாட்சி அவனது வாழ்வில் எந்தளவிற்கு இன்றிமையாதவள் என்பதை உணர்த்தி சென்றிருந்தது அவனுக்கு.

மூவரும் உள்ளே சென்று அவளை பார்க்க, அவளின் கண்களோ பரிதவிப்புடன் வாசலை நோக்கியது. மூவரின் கலங்கிய கண்களை கண்டதும் தன்னை சமன்படுத்தி கொண்டவளாய், “ஒன்னுமில்லை மாமா! அப்பா ஆச்சி ஏன் மூனு பேரும் இப்படி இருக்கீங்க? எனக்கு ஒன்னுமில்லை! லேசான மயக்கம் தான். நான் நல்லாயிட்டேன் பாருங்க” என அவர்களை தேற்றினாள்.

ருத்ரனும் முருகனும் இவளை மருத்துவமனையில் இருந்து அழைத்து செல்வதை பற்றி கேட்க வெளியே செல்ல, உள்ளே நுழைந்தான் சுந்தரேஸ்வரன்.

அவனை கண்டதும் மீனாட்சியின் வதனத்தில் வந்து போன பரவசத்தையும் பரிதவிப்பையும் கண்டுக் கொண்ட ஆச்சி, “நீங்க பேசிட்டு இருங்க! நான் வீட்டுல எல்லாருக்கும் ஃபோன் செஞ்சி சொல்லிட்டு வரேன். இவளை நினைச்சி எல்லாரும் கவலைல கிடப்பாங்க. இதோ வந்துடுறேன்” என வெளியே சென்றார்.

ஈஸ்வரனின் பாசமான பார்வையை தாங்கியவளாய், “என்னை விட்டு போய்ட மாட்டீங்களே?” என பரிதவிப்புடன் கேட்டாள்.

“ஹே பச்சக்கிளி! நான் எப்படிடா உன்னை விட்டுட்டு போவேன்” டிரிப்ஸ் ஏறிக் கொண்டிருந்த அவளின் கரத்தினை வருடியவாறு கூறினான்.

“இல்ல ஏற்கனவே ஒரு தடவை பொண்ணு பார்க்க வந்து தடங்கலாகி போச்சு. இப்போ இது இரண்டாவது தடவை. சகுனம் சரியில்ல அது இதுன்னு என்னை விட்டு போய்டுவீங்களோனு பயமாகி போச்சு. கண்ணு முழிச்சதும் உங்களை தான் தேடினேன். எங்கே மயங்கினதும் என்னை விட்டுட்டு போய்ட்டீங்களோனு நினைச்சேன்” மனதிலுள்ளதை மறையாது கரகரத்த குரலில் அவள் கூறியிருக்க,

தன்னை எத்தனையாய் அவள் தேடியிருக்கிறாள் என தவித்துப் போனது அவனது மனது. டிரிப்ஸ் ஏற்றாத மற்றொரு கரத்தினை தனது கரங்களுக்குள் பொதிந்து கொண்டு அவளது தவிக்கும் பார்வையினை காதலாய் பார்த்தவன், “இந்த ஜென்மத்துல என் பொண்டாட்டி நீ தான். இந்த சுந்தரேஸ்வரன் மீனாட்சிக்கு மட்டும் தான்‌. மீனாட்சியோட சுந்தரேஸ்வரனா மட்டும் தான் நான் இருப்பேன்” என அவளின் உள்ளங்கையை அழுத்தியவாறு வாக்களித்தான்.

கண்கள் பணிக்க அழுகையும் மகிழ்வுமாய் அந்த வாக்கை ஏற்றிருந்தாள் மீனாட்சி.