சொக்கனின் மீனாள் 5


அந்த சிவகாமி
மகனிடம் சேதி சொல்லடி
என்னை சேரும் நாள் பார்க்க
சொல்லடி

வேறு எவரோடும்
நான் பேச வார்த்தை ஏதடி
வேலன் இல்லாமல்
தோகை ஏதடி

அன்றிரவு படுக்கையில் மீனாட்சி அமர்ந்திருக்க, இங்கும் அங்குமாய் நடனம் ஆடியப்படி இப்பாடலை பாடி வெறுப்பேற்றி கொண்டிருந்தாள் அன்னம்.

‘என்னை யாருனே தெரியலைனு சொல்லிட்டாங்க. இதுல சேதி அனுப்புறது தான் குறைச்சல்!’ என பல்லை கடித்தவளாய் அன்னத்தை முறைத்து கொண்டிருந்தாள் மீனாட்சி.

“என்ன மீனு! என்னைய ஆசையா பார்க்கிற மாதிரி தெரியுது” என வாய்க்குள்ளேயே சிரித்தவாறு அன்னம் கேட்க,

“அடியேய் நான் ஏற்கனவே கடுப்புல இருக்கேன். கைல சிக்கின சிக்கன் குருமா ஆக்கிடுவேன்! ஒழுங்கா போய் தூங்கு” முறைத்தவாறே உரைத்தாள் மீனாட்சி.

“எனக்கு தூக்கம் வரலை மீனு! நம்ம வேணா சேர்ந்து ஏதாவது வீடியோ பார்ப்போமா!” என்றவாறு அவளருகில் அமர்ந்த அன்னம், தனது மடிகணினியில் ஒரு காணொளியை ஓட விட, அதில் கேட்கப்பட்ட ஈஸ்வரனின் குரலில் அதிர்ந்து மடிகணிணியை எட்டி பார்த்தாள் மீனாட்சி.

“பார்ரா அண்ணவோட குரல் அதுக்குள்ள உனக்கு அத்துபடியாகி போச்சா!” ஆச்சரியமாய் வினவினாள் அன்னம்.

இன்று மாலை அவன் அவளை இடித்தப் போது பார்த்த அதே சட்டையுடன் காணொளியில் சிரித்த முகமாய் பேசி கொண்டிருந்தவனை சுற்றம் மறந்து மனம் லயிக்க பார்த்து கொண்டிருந்தாள் மீனாட்சி.

அவன் பேசியது எதுவும் அவள் காதில் விழவில்லை. அவனின் தலை முடி முதல் அவன் சிரிக்கும் பொழுது வெளிப்படும் சிங்கப்பல் வரை, அவன் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலி முதல் அவன் கையில் இருக்கும் தங்க பிரேஸ்லட் வரை இடை வரை தெரிந்த அந்த காணொளியில் அங்குலம் அங்குலமாய் அவனை, அவனின் செயல்களை உள்வாங்கியவாறு பார்த்து கொண்டிருந்தாள் மீனாட்சி.

கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி

காதருகில் கேட்ட அன்னத்தின் குரலில் தன்னிலை வந்தவளாய், “இப்ப எதுக்குடி இந்த வீடியோவை போட்டு வச்சி என்னை படுத்துற” அவளை அடிக்க ஆரம்பித்தாள்.

“இன்னிக்கு அண்ணாவோட லைவ் வீடியோ இது! காலைல எவ்ளோ பிரச்சனை நடந்துச்சு. ஆனா அதை எதுவுமே முகத்துல காண்பிக்காம எவ்ளோ அழகா பேசுறாங்க பாரு மீனு” என அன்னம் ஆச்சரியமாய் கூற,

“ஆமா உங்க அண்ணனுக்கு நடிக்கவே தெரியாது பாரு” என்றாள் பட்டென்று.

“நடிக்கிறாரா? அவர் எப்ப நடிச்சாரு?” கேள்வியாய் அன்னம் அவளை வினவ,

“அதான் நம்மளை தெரியாதுனு சொன்னாரே! அதுவே நடிப்பு தானே” பொருமி தள்ளினாள் மீனாட்சி.

“ஹே மீனு! நிஜமாவே அவருக்கு நம்மளை தெரியலைடி! அந்தம்மா கூட்டின ஏழரைல அவர் அவங்க அம்மா தங்கச்சியை பார்ப்பாரா இல்ல உன்னை பார்ப்பாரா! அவர் பொண்ணு பார்க்க வந்தோம்ங்கிறதையே மறந்திருப்பாரு” என அவனுக்கு பரிந்து வந்து அன்னம் பேச,

இவளுக்கு கண்களில் நீர் துளிர்த்து விட்டது.

“ஹே மீனு என்னாச்சு?” என அன்னம் அவளின் கைப்பற்ற,

“ஒரு மாதிரி அசிங்கமா ஃபீல் ஆகுது அன்னம். என்னை யாருனே தெரியாதவரை போய்…” என விசும்பி கொண்டு அவள் நிறுத்த,

“தெரியாதவரை போய்… ” என எடுத்து கொடுத்தாள் அன்னம்.

“அப்படி ஆளை போய் இந்த மனசு ரொம்ப தேடுதேனு அசிங்கமா இருக்குடி!” என்று கூறி கட்டிலில் படுத்து கொண்டாள் மீனாட்சி.

அந்த நேரம் சரியாய் அவர்களின் அறை கதவை தட்டி கொண்டு ஆச்சி உள்ளே நுழைய, கண்களை துடைத்தவாறு முகத்தை இயல்பாக்கி, “என்ன ஆச்சி! இந்நேரத்துக்கு இங்க வந்திருக்கீங்க” எனக் கேட்டாள் மீனாட்சி.

தான் கூறியதை ஆச்சி கேட்டிருப்பாரோ என திக் திக் என்று இருந்தது அவளுக்கு.

“ஒன்னுமில்லைடா! நாளைக்கே ஊருக்கு கிளம்பனும்னு சொன்னியாமே! அதான் உன் கூட கொஞ்சம் பேசிட்டு இருக்கலாம்னு வந்தேன்” என்றுரைத்த ஆச்சி, “காலைல இப்படி ஆனதுல மனசு சங்கடமா இருக்கா தங்கம்” என்றார் அவளின் தலைகோதி.

அந்த தலைகோதல் அவள் மனதில் இருந்த அலைகழிப்பை கண்ணீராய் வெளிபடுத்த, ஆச்சியின் மடியில் தலையை புதைத்து கொண்டாள்.

ஆச்சியின் பருத்தி புடவையில் இருந்த அவரின் வாசமும் அந்த புடவையின் மென்மையும் ஆச்சியின் பிரத்யேகமான தலைகோதலும் அன்னை மடியாய் அவளை தாங்க, ஏன் அழுகிறோம் எதற்கு அழுகிறோம் என்று தெரியாமலேயே தேம்பி தேம்பி அழுதாள்.

காலையில் மகிழ்வான மனநிலையில் கோவிலுக்கு சென்றது, அதன்பின் நடந்த கலவரம் ஏற்படுத்திய கவலை, ஈஸ்வரன் மீதான ஈர்ப்பு அது ஏற்படுத்திய பரவசம், அவனை மாலையில் கண்டதும் உண்டான உற்சாகமான மகிழ்வு, அவன் இவளை தெரியவில்லை என்றதும் வந்த கோபம் என இன்றைக்கு ஒரு நாளையிலேயே பலவிதமான உணர்வுகள் அவளை ஆட்கொண்டிருக்க, மனது சமநிலை பெறாமல் தடுமாறியிருந்த நிலையில் ஆச்சியின் இந்த பாசத்துடனான ஸ்பரிசமும் அரவணைப்பும் அவளை உணர்ச்சிவசப்பட வைத்து கண்ணீர் சிந்த வைத்தது.

“என் மனசோட அலைக்கழிப்பை யார்கிட்டேயும் சொல்ல முடியாம…” என தேம்பியவாறு நிறுத்தியவள், “அம்மா இல்லாம போய்ட்டாங்களேனு இன்னிக்கு ரொம்ப வருத்தப்பட்டேன் ஆச்சி” விசும்பிக் கொண்டே உரைத்தவளாய் மேலும் தொடர்ந்தாள்.

“இன்னிக்கு மனசு ஒரு நிலையிலேயே இல்லை. எனக்கு அவரை ரொம்ப பிடிச்சிருக்கு. பார்த்ததுல இருந்தே அவர் நினைப்பாவே இருக்கு! ஆனா அவங்க.‌.. அவங்க” என தேம்பியவள், “என்னை யாருனே தெரியலைனு சொல்லிட்டாங்க ஆச்சி” என அழுதாள்‌.

“சுந்தரேஸ்வரனா? அந்த பையனை எங்க பார்த்தீங்க?” என அவர் அன்னத்தை முறைக்க,

‘பத்த வச்சிட்டியே பரட்டை’ என எண்ணியவாறு எச்சில் கூட்டி விழுங்கியவளாய்,

“ஆச்சி நான் ஒன்னும் பிளான் செஞ்சி கூட்டிட்டு போகலை. போன‌ இடத்துல ஏதேச்சையா தான் அவரை பார்த்தோம்” என்றாள்.

“நீ உடனே அவர் முன்னாடி அண்ணானு போய் நின்னியோ” அவளை பற்றி அறிந்தவளாய் ஆச்சி கேட்க, அவள் திருதிருவென முழித்தாள்.

‘உன்னை அப்புறம் கவனிச்சிக்கிறேன்’ என அன்னத்தை முறைத்து உரைத்தவராய் மீனாட்சியை தூக்கி அமர வைத்தார்.

“என் தங்கம் இப்படி அழலாமா?” என அவளின் கண்ணீரை தனது முந்தானையால் துடைத்து விட்டவர்,

“இப்ப என்ன? உனக்கு அந்த பையனை பிடிச்சிருக்கு! அவ்ளோ தானே! இனி நடக்க வேண்டியதை இந்த ஆச்சி பார்த்துக்கிறேன். நீ அழாம தூங்குடா தங்கம். நாளைக்கு காலைலயே எழுந்திருச்சு கோவிலுக்கு போகனும்ல! அடியேய் அன்னம் அவகிட்ட வாயடிச்சிட்டு இருக்காம தூங்கு” என்றவாறு வெளியேறினார்.

மனதில் இருந்த பாரம் முழுவதும் இறங்கியது போன்று உணர்ந்தாள் மீனாட்சி. இத்தனை நேரமாய் உணராத பச்சிலை வாசமும் மலரின் நறுமணமும் வெளிப்புறமடித்த காற்றில் மீண்டுமாய் இவளின் நாசியை நிரடி செல்ல, ஏகாந்தமான மனநிலையில் உறக்கத்திற்குள் ஆழ்ந்தாள் மீனாள்.


அன்று அதே இரவு காணொளித்தடத்தின் நேரலையை நிறைவு செய்து விட்டு வீட்டை நோக்கி பயணித்து கொண்டிருந்தான் சுந்தரேஸ்வரன்.

வீட்டின் வாயிலில் மணியை அழுத்தி விட்டு இவன் நிற்க, கல்யாணி வந்து கதவை திறந்தாள்.

“என்னடா நீ இன்னும் தூங்கலையா?” என கேட்டவாறே உள்ளே நுழைந்தான்.

காதில் ஒலிவாங்கியை மாட்டியவாறு வந்தவள், அதனை காதலிருந்து விடுவித்து உணவுண்ணும் மேஜை மீது வைத்தவளாய், “அம்மாக்கு மாத்திரை கொடுத்துட்டு இப்ப தான் தூங்க வச்சிட்டு வந்தேன்ணா” என்றாள்.

தன்னை சுத்தப்படுத்தி கொண்டு, தாயின் அறைக்கு சென்று ஒரு பார்வை பார்த்து விட்டு வந்தவன், உணவுண்ணும் மேஜையில் அமர, அவனுக்கு உணவை பரிமாறினாள் கல்யாணி.

“நீ சாப்பிட்டியாடா?” என கேட்டான்.

“சாப்பிட்டேண்ணா” என்றவள் அவனுக்கு எதிரில் இருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டாள்.

“காலைலருந்து எவ்ளோ பிரச்சனை! இதுக்கு தான் நான் கல்யாணமே வேண்டாம்னு சொன்னேன்” என்று விரக்தியாய் ஈஸ்வரன் உரைக்க,

“ஏன் அண்ணே இப்படி பேசுற! உன்னால தான் அம்மாக்கு உடம்பு முடியாம போகுது! நீ ஒரு கல்யாணம் முடிச்சி அவங்களுக்கு பேரன் பேத்தினு பெத்து கொடுத்து கொஞ்ச விட்டிருந்தா இப்படி கவலைப்பட்டு உடம்பை கெடுத்துப்பாங்களா என்ன!” எனக் கூறியவள்,

“ஆமா நீ காலைல அண்ணிய பார்த்தியா இல்லையா?” எனக் கேட்டாள்.

“அண்ணியா?” என‌ புருவத்தை உயர்த்தியவன், “காலைல பொண்ணு பார்க்க தானே போனோம். அதுக்குள்ள அண்ணியாக்கிட்ட!” என சிரித்தவாறு கேட்டான்.

“நீ தானே எதுனாலும் உங்க விருப்பம்னு அம்மாகிட்ட சொன்ன! அம்மா இவங்க தான் நம்ம வீட்டு மருமகள்னு முடிவோட தான் பொண்ணு பார்க்க வந்தாங்க. ஆனா சித்தப்பாவும் சித்தியும் இப்படி கெடுத்து வைப்பாங்கனு எதிர்ப்பார்க்கலை” என்றாள்.

“ஓ நான் ஓகே சொன்னாலும் சொல்லலைனாலும் இந்த பொண்ணை என் தலைல கட்டுறதுல முடிவா இருந்தாருக்கீங்க அம்மாவும் பொண்ணும்” என சிரித்தவாறு கூறியவன், “அந்த பொண்ணு போட்டோ இருக்காடா?” எனக் கேட்டான்.

“ஹ்ம்ம் அம்மா போன்ல தான் இருக்கு! நான் வாட்ஸ்அப் பண்றேன் உனக்கு” என்றவள் மேலும் தயங்கியவாறே,

“உன்கிட்ட ஒன்னு கேட்பேன்! திட்ட கூடாது” என பீடிகையுடன் ஆரம்பித்தாள்.

“அது நீ கேட்குற கேள்வியை பொறுத்து” அழுத்தமாய் விழுந்தன வார்த்தைகள்.

“ராஜன் அண்ணா தான் அந்த கொரியர் பிரச்சனைக்கு காரணம்னு எப்படி சொல்ற?” எனக் கேட்டாள்.

“ஓ மேடத்துக்கு உங்க அண்ணனை குறை சொன்னதும் பொத்துக்கிட்டு வருதோ” என குதர்க்கமாய் கேட்டான் இவன்.

“ம்ப்ச் ஏன் அண்ணே இப்படி பேசுற?” ஆயாசமாய் வந்தது கல்யாணிக்கு.

“பின்னே அவனுக்கும் எனக்கும் ஆகாதுனு தெரிஞ்சும் அவனுக்கு சப்போர்ட் செய்ற கேள்வியே கேட்குறியே! வேற எப்படி பேச?” சத்தமாய் ஒலித்திருந்தது அவனின் குரல்.

“அண்ணா நீ நினைக்கிற மாதிரி இல்லண்ணா!” இவளும் அதட்டலாய் உரைத்திருந்தாள்.

“என்ன இல்ல! உன் நொண்ணேன் உனக்கு போன் செஞ்சி சொன்னானா?” என்றவன்,

“டேமேஜ்டு பிராடக்ட் கம்ப்ளைண்ட்ஸ் வந்தது எல்லாமே சென்னைல இருந்து. இங்க கொரியர்ல எந்த பிரச்சனையும் இல்லனு சொன்னதும் அவங்க சிசிடிவி பார்த்துட்டு சென்னை கொரியரை தான் விசாரிச்சேன். அங்கே நம்ம அனுப்பின பேக்கேஜ் மாதிரியே வேற பேக்கேஜ் ரெடி செஞ்சி அனுப்பிருக்காங்க! சித்தப்பா தவிர இப்ப என்னோட தொழில் எதிரி யாரும் இல்ல‌. அவர் தான் என்னை தலை நிமிர விட மாட்டேன்னு சண்டை போட்டு நின்னாரு. ஒன்னும் ஒன்னும் இரண்டுனு கணக்கு போடுறதுக்கு பெரிசா யோசிக்க வேண்டியது இல்லை கல்யாணி” கோபமாய் முடித்தான்.

“என்ன இருந்தாலும் யூகத்தினாலேயே ஒருத்தர் மேல பழி போட்டு பேசுறது தப்புண்ணே! இதுக்கான ஆதாரம் உன்கிட்ட இருக்கா?” எனக் கேட்டாள்.

“ஆதாரம் தானே! அது தான் தேடிட்டு இருக்கேன்! ஆதாரத்தோடு சித்தப்பா தான்னு மட்டும் தெரிஞ்சிது அவங்க வீட்டுக்கு போய் கச்சேரி வைப்பேன்! இங்க எவ்ளோ நஷ்டம் வந்துச்சோ அதே அளவுக்கு அங்க நஷ்டமாக்காம விட மாட்டேன்” அழுத்தமான பார்வையுடன் சத்தமாய் உரைத்தவாறு கை கழுவ சென்றான் ஈஸ்வரன்.

கண்ணில் பீதியுடன் அவனை பார்த்திருந்தாள் கல்யாணி. வியாபாரம், வேலை என்று வந்துவிட்டால் அவனின் முகம் வேறாக தான் இருக்கும் என்பதை அறிந்திருக்கிறாள் தான். ஆனாலும் அவனை சமாதானம் செய்ய எடுத்த முயற்சி இப்படி அவனை ஏத்தி விட்டது போல் ஆகிவிட்டதே என்று வருத்தமாகி போனது அவளுக்கு.

கை கழுவி வந்தவன், “ரொம்ப மனசு போட்டு குழப்பிக்காம போய் தூங்குடா கல்லு” என தலையை வருடினான்.

“மறக்காம உங்க அண்ணி ஃபோட்டோவை வாட்ஸ்அப் பண்ணு! எப்படியும் அம்மாக்கு உடம்பு சரியானதும் அந்த பொண்ணுக்கிட்ட கொண்டு போய் என்னை நிறுத்தாம விட மாட்டாங்க!” என இதழ் விரிய சிரித்தான்.

சட்டென மாறும் வானிலை போல் வந்து நிற்கும் அண்ணனை கண்டு வியக்காமல் இருக்க முடியவில்லை.

‘இவன் கூட அவனை எப்படியாவது சேர்த்து வச்சிடலாம்னு பார்த்தா, இரண்டும் ஏதாவது பிரச்சனையை இழுத்துட்டு வந்து முட்டிக்கிட்டு நிக்குதுங்க’ எண்ணியவாறே பெருமூச்சுடன் தனது படுக்கையறைக்கு சென்று ஈஸ்வரனுக்கு புகைப்படத்தை அனுப்பி வைத்தாள்.

அவனது அறைக்குள் சென்று படுக்கையில் விழுந்தவனின் கைபேசியில் குறுஞ்செய்திக்கான ஒலி வரவும், ஆர்வமாய் எடுத்து பார்த்தான்.

கல்யாணி அனுப்பியிருந்த புகைப்படத்தை பார்த்த ஈஸ்வரன் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தன.

“ஹே இது அந்த பொண்ணு தானே! ஓ அதான் கோபப்பட்டுச்சா? நான் கூட நம்மளோட யூ டியூப் ஹேட்டர் போல இந்த பொண்ணுன்னு நினைச்சேனே” சத்தமாய் பேசியவாறே புகைப்படத்தில் பார்வையை ஓட விட்டான்.

“ஹ்ம்ம் அழகா தான் இருக்கா!”

கிளி பச்சை நிறத்திலான பட்டுபுடவையில் இருந்தவளை ரசனையாய் பார்த்தவன், “பச்சக்கிளி கணக்கா தான் இருக்கா! காலைல பார்க்காம போய்ட்டேனே” மனதோடு கூறி கொண்டான்.

பின் பெருமூச்செறிந்தவனாய்,
“சித்தப்பா குடும்பத்தை ரிஜக்ட் செஞ்சிட்டு என்னை செலக்ட் செஞ்சி பொண்ணு பார்க்க வர சொன்னதுக்காகவே இந்த சம்பந்தத்தை ஒத்துக்கலாம்!” அவனது சித்தப்பா குடும்பத்தின் மீதான அவனின் வெறுப்பு இவ்வாறு அவனை யோசிக்க வைத்தது.

தங்கையே ராஜனை பற்றி அக்கறையாக பேசியதற்கு இந்த ஆட்டம் அடியவன், ராஜன் அவளின் டீம் லீடர் என்று தெரிய வரும் பொழுது, அதுவும் அவளே ராஜனுக்காக பரிந்து வந்து இவனிடம் பேசும் போது அவனின் எதிர்வினை என்னவாக இருக்குமோ!

இங்கு கல்யாணி தனது அறையில் படுத்தவாறு அலைபேசியில் பேசி கொண்டிருந்தாள்.

“கேட்டியா ராஜாண்ணா! அண்ணன் ஆதாரம் இல்லாம தான் உன் மேல பழியை போட்டிருக்கு” சுந்தரராஜனிடம் பேசி கொண்டிருந்தாள் கல்யாணி.

தனது கைபேசியில் ராஜனுக்கு அழைப்பு விடுத்து வைத்தவாறு தான் ஈஸ்வரனிடம் பேசி கொண்டிருந்தாள் கல்யாணி. ஆகையால் ஈஸ்வரன் பேசிய அனைத்தையுமே ராஜன் கேட்டிருந்தான்.

மறுமுனையில் ராஜன் ஆவேசமாய், “எவன் இந்த கொரியரை மாத்தி வச்சதுனு நான் கண்டுபிடிக்காம விட மாட்டேன்!” என்றவன்,

“இது என் மேல தப்பில்லனு அண்ணன் கிட்ட நிரூபிக்க எனக்கு கிடைச்ச ஒரு வழியா பார்க்கிறேன் ஆணிமா” என்றான்.

“ஏன் இன்னும் கத்தி கடுப்பாறைனு எனக்கு பேர் வைக்க வேண்டியது தானே! செல்லப்பேரு வைக்கிறாங்க பாரு இரண்டு பேரும்! கல்லு ஆணினு” என தலையில் அடித்து கொண்டாள்.

அவளின் பேச்சில் வாய்விட்டு சிரித்தவனாய், “ஆமா அண்ணாக்கு மீனாட்சியை பிடிச்சிருக்கானு கேட்க சொன்னேனே” என்றவன் கேட்க,

“உங்கண்ணன் எங்க பொண்ணை பார்த்தாங்க? இப்ப தான் போட்டோவை அனுப்பி விட்டிருக்கேன்” சலித்தவாறு உரைத்தாள்.

“மீனாட்சி ரொம்ப நல்ல பொண்ணு ஆணிமா. அண்ணாக்கு ஏத்த பொண்ணும் கூட! நாளைக்கு நான் பெரியம்மாகிட்ட பேசி எப்படியாவது திரும்பவும் பொண்ணு பார்க்க போக சொல்றேன். மீனாட்சி வீட்டுலயும் அம்மா அப்பா பேசினதுக்கு மன்னிப்பு கேட்டு நான் பேசுறேன்” என்று சுந்தரராஜன் பேசி கொண்டே இருக்க, இங்கு கல்யாணி வழமைப்போல் உறங்கி போனாள்.

ஆனால் இவனின் பங்களிப்பு இல்லாமலேயே சுந்தேரஸ்வரனை மீனாட்சியுடன் சேர்த்து வைப்பதற்கான ஆயத்தங்கள் இறையருளால் தானாக நடந்து கொண்டிருந்தது.

மறுநாள் காலையில் மீனாட்சியின் வீட்டினர் அனைவரும் குலதெய்வ கோவிலுக்கு கிளம்பி கொண்டிருந்தனர்.

“ஏழு கதை வயசாகிடுச்சு! இன்னும் புடவை கட்ட தெரியுதா பாரு” மீனாட்சிக்கு புடவையை அணிவித்தப்படி திட்டி கொண்டிருந்தாள் அன்னம்.

“ஏன்டி பட்டணத்துல இருந்தா புடவை கட்ட கத்துக்க கூடாதுனு எதுவும் இருக்கோ” எனக் கேட்டாள்.

“ம்ப்ச் பட்டணமோ கிராமமோ ஆர்வம் இருந்தா எப்ப வேணாலும் எப்படினாலும் கத்துலாம். நீ இப்ப ஆர்வத்துல பதினெட்டு வயசுலேயே தெரிஞ்சிக்கலையா?” என மீனாட்சி கூற,

“நான் எங்கடி ஆசைப்பட்டு ஆர்வத்துல கத்துக்கிட்டேன். உன்னோட தாய்கெழவி தான் கோவிலுக்கு புடவை தான் கட்டிட்டு போகனும்னு ரூல்ஸ் போட்டு கத்துக்க வச்சாங்க‌. இந்த தாய்கெழவினால நான் எவ்ளோ கஷ்டம் அனுபவிக்கிறேன்னு உனக்கு இப்பவாவது புரியுதா?” என முகத்தை பாவமாய் வைத்து கொண்டு அன்னம் கூறிய பாவனையில் சிரித்திருந்தாள் மீனாட்சி.

“அப்ப நான் ஆச்சியை எங்க கூட கூட்டிட்டு போறேன்! நீ ஜாலியா இரு” என்று மீனாட்சி கூறவும், கீழே அமர்ந்து அவளது புடவையின் மடிப்பை சரி செய்து கொண்டிருந்த அன்னம், “என்னது” என படக்கென எழுந்தாள்.

“அதெல்லாம் முடியாதுமா மீனு! உனக்கு அவங்க கூட தங்கனும்னா நீ இங்க வா! ஏற்கனவே ஆறு மாசம் உங்க கூட அனுப்பி வச்சிட்டு என் மனசு பட்டப்பாடு எனக்கு தான் தெரியும். பக்கத்துல இருக்கும் போது குடைச்சலா தான் தெரியுது. ஆனா தூரமா போய்ட்டா மனசு ரொம்ப தேடி ஏங்கி போய்டுது மீனு” மனதை மறைக்காது உரைத்தாள்.

அவளின் கூற்றில் அவளை பாசமாய் பார்த்திருந்தாள்‌ மீனாட்சி.

காலை எட்டு மணியளவில் மலையிலிருந்த அய்யனார் கோவிலில் குடும்பத்துடன் ஆளுக்கொரு வேலை செய்தவாறு பொங்கல் வைத்து கொண்டிருந்தனர் மீனாட்சி குடும்பத்தினர்.

பொங்கல் வைத்து முடித்து பானையை மூல ஸ்தானத்தில் சாமியிடம் படைக்க கொடுத்துவிட்டு அனைவரும் கை கூப்பி கண் மூடி வேண்டுதலை வைத்தப்படி நின்றனர்.

மீனாட்சி, “நான் கட்டிக்க போறவருக்கு என்னை ரொம்ப பிடிக்கனும். உண்மையான அன்பும் காதலும் இருந்தா அவங்க பார்வைக்கு நாம எப்பவுமே அழகா தெரிவோமாம். அதனால நான் கட்டிக்க போறவரோட கண்ணுக்கு நான் எப்பவுமே அழகா தான் தெரியனும்” என வேண்டியவாறு கண் திறக்க, எதிரில் கரம் கூப்பி கடவுளை வணங்கியவாறு சிரித்த முகமாய் நின்றிருந்தான் சுந்தரேஸ்வரன்.

அவளின் கண்கள் அவனின் கண்களை கலந்து நின்றதும், “பச்சகிளி” அனிச்சையாய் அவன் இதழ்கள் மொழிய, அதிர்ந்து இமை சிமிட்ட மறந்து அதே ரசனை பார்வையை வீசினாள்‌ மீனாட்சி.

“பார்த்த விழி பார்த்தபடி பூத்து இருக்க
காத்திருந்த காட்சி இங்கு காண கிடைக்க”

அன்னம் மீனாட்சியின் காதில் சிரித்தவாறு கேலியாய் இவ்வரிகளை பாடினாள்‌.

— தொடரும்