சொக்கனின் மீனாள் 4

“யம்மா தாய் கெழவி! யார்கிட்ட போய் என்னைய சிக்க வைக்க பார்த்திருக்கீங்க!” என புசுபுசுவென மூச்சு வாங்கியப்படி கோபத்துடன் தனது ஆச்சி சிவகாமியை முறைத்து கொண்டிருந்தாள் மீனாட்சி.

அவளது தாய்மாமன் வீட்டில், முதல் மாடியின் வரவேற்பறையில் பெண் பார்க்கும் படலத்திற்காக அணிந்திருந்த அதே பட்டுப்புடவை நகையுடன் கோபமாய் இங்குமங்குமாக நடந்து கொண்டிருந்தாள் மீனாட்சி.

ஒற்றை விரல் வைத்து வாயை மூடியிருந்த ஆச்சி, அவளின் கேள்வியில் வாயை திறந்து ஏதோ கூற வர,

“மூச்!” என வாயில் கை வைத்து மிரட்டியவளாய்,

“ஏதாவது வாயை திறந்து பேசுனீங்க அவ்ளோ தான்” என்றவள் மேலும் தொடர்ந்து,

“எந்த மனுஷன்கிட்ட இருந்து தப்பிக்கனும்னு கல்யாணத்துக்கு நான் ஓகே சொன்னேனோ அந்த டி எல்லுக்கே என்னை கல்யாணம் செஞ்சி வச்சி ஆயுளுக்கும் என்னைய கோடிங் எழுத வைக்க பார்த்திருக்கீங்களே! உங்களை நம்பி பையனை பத்தி எந்த விவரமும் கேட்காம வந்ததுக்கு எங்க போய் என்னை சிக்க வைக்க பார்த்திருக்கீங்க!”

“நீங்க தானே சுந்தரம் குடும்பம் பாரம்பரியமானது! நேர்மையானது! எருமையானது! கருமையானதுனு புகழ்ந்து பேசி என்னை அங்க தள்ள பார்த்தது” என ஆச்சியை மீண்டுமாய் முறைத்தாள்.

ஆச்சி சைகையில் ஏதோ கூற, “ஹான் என்னது?” என மீனாட்சி புரியாமல் கேட்க, மீண்டுமாய் அவர் சைகையில் ஏதோ கூற,

“ம்ப்ச் வாயை திறந்து பேசு ஆச்சி! வாய்ல என்ன கொழுக்கட்டையா?” என கத்தினாள் மீனாட்சி.

“நீதான தங்கம் வாயை திறக்க கூடாதுனு சொன்ன” என ஆச்சி அவளை பாவமாய் பார்க்க,

ஆச்சியின் பாவனையில் அங்கு அமர்ந்திருந்த லட்சுமியும் அன்னமும் சிரித்திருக்க, வாசலில் நின்று இவர்களின் சண்டையை வேடிக்கை பார்த்து கொண்டிருந்த ருத்ரனும் முருகனும் வாய்விட்டு சிரித்திருந்தனர்.

எங்கே மீனாட்சி, இந்த பெண் பார்க்கும் படலம் இப்படியானதில் கலங்கி போய் அமர்ந்திருப்பாளோ என வருந்தியவாறு வந்திருந்த முருகனுக்கும் ருத்ரனுக்கும் ஆச்சி மற்றும் பேத்தியின் இந்த சண்டை அவர்களை சற்று ஆசுவாசப்படுத்தியது.

இவர்களின் சிரிப்பு சத்தத்தில் அவர்கள் பக்கமாய் அனைவரும் திரும்ப, “அந்தம்மாக்கு இப்ப எப்படி இருக்குப்பா முருகா?” எனக் கேட்டார் ஆச்சி.

அகல்யா மயங்கியதுமே ஈஸ்வரன் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருக்க, ருத்ரனும் முருகனும் பெண்களை வீட்டிற்கு போகுமாறு உரைத்து விட்டு ஈஸ்வரனை தொடர்ந்து சென்றனர்.

அகல்யாவிற்கு ரத்த அழுத்தத்தினால் வந்த மயக்கம் இதுவென மருத்துவர் உரைத்திருக்க, சிகிச்சையை மேற்கொண்டிருந்த போதே விழித்து விட்டிருந்தார் அவர்.

அதன் பின்பு ஈஸ்வரனிடம் ஓரிரு வார்த்தைகள் பரிவாய் பேசிவிட்டு தான் வந்திருந்தனர் ருத்ரனும் முருகனும்.

இந்த பெண் பார்க்கும் படலம் தடங்கலாகி போனதில் குடும்பத்தினர் கவலையுறாமல் இருக்கவே அவளின் டி எல் வைத்தே அவள் இவ்வாறு பொய் கோபத்துடன் பேச, அது அனைவரும் கேலி செய்து சிரித்து பேசி இலகுவாக வெகுவாகவே உதவியது.

“அந்த இரண்டு குடும்பத்துக்குள்ளயும் ஏதோ பகை இருக்கும் போலம்மா! இனியும் அந்த இடம் நம்ம தங்கத்துக்கு வேண்டாம்னு தான் எனக்கு தோணுது! நீங்க என்ன நினைக்கிறீங்கமா?” என்று முருகன் ஆச்சியிடம் கூறி கொண்டிருக்கும் போதே, திடீரென புரையேறி இருமத் தொடங்கினாள் மீனாட்சி.

“என்னடா தங்கம்! என்னாச்சு?” என லட்சுமி அவளிடம் குடிக்க நீரளிக்க, “ஒன்னுமில்ல அத்தை” என தண்ணீர் குடித்து கொண்டிருந்த மகளை யோசனையுடன் பார்த்தார் ருத்ரன்.

“நான் டிரஸ் மாத்திட்டு கொஞ்சம் நேரம் ரெஸ்ட் எடுக்கிறேன் அத்தை” என்றவாறு தனது அறைக்குள் சென்றாள் மீனாட்சி. அவள் பின்னோடேயே அறைக்குள் நுழைந்தாள் அன்னம்.

“கொஞ்ச நாளைக்கு இந்த கல்யாண பேச்சை தள்ளி போடுவோமா?” என ஆரம்பித்த ருத்ரன்,

“இங்க நடந்த அசம்பாவிதத்துக்கு பிறகு ரொம்ப நாள் கழிச்சி வீட்டுல ஒரு நல்ல காரியம் பேச ஆரம்பிச்சோம். ஆரம்பிக்கும் பொழுதே இப்படி நடக்கிறது மனசுக்கு சரியாபடலை” என்றார்.

“இல்ல மாப்பிள்ளை இப்படி ஏதாவது தடங்கல் வந்தா, எதனால இந்த தடங்கல்னு பார்த்து சரி செய்யனுமே தவிர நல்ல காரியத்தை ஒத்தி போடுறது அதுக்கு தீர்வாகாது” என்றார் ஆச்சி.

“நீங்களும் நம்ம தங்கமும் நம்ம குலதெய்வ கோவிலுக்கு போய் ரொம்ப வருஷம் ஆகுது தானே! அதனால் கூட இப்படி ஆகலாம்”

“அந்த காலத்துலலாம் வீட்டுல ஒரு நல்ல காரியம் பேச ஆரம்பிக்கும் போதே, அது நல்லபடியா நடக்கனும்னு குலதெய்வத்தை மனசுல நினைச்சு மஞ்சள் துணியில காலணா இல்ல அரையணா முடிஞ்சி வைப்பாங்க. அந்த காரியம் நடந்து முடிஞ்சதும் குலதெய்வ கோவிலுக்கு போய் அந்த காசை சாமிக்கு காணிக்கையாக போட்டுடுவாங்க” என்று நீண்ட விளக்கமாய் அவரது பழங்கால வழக்கங்களை ஆச்சி கூறி கொண்டிருக்க,

“அப்ப நாளைக்கே குல தெய்வ கோவிலுக்கு போகலாம் அத்தை” என்றார் ருத்ரன்.

முருகன் மனமகிழ, “ஆமா நாளைக்கு வெள்ளிக்கிழமை கோவிலிலும் விசேஷமா இருக்கும். அப்ப இன்னிக்கே நாளைக்கு போறதுக்கான ஏற்பாட்டை நான் செஞ்சிடுறேன் மச்சான்” என்றார்.

அனைவரும் அவரவர் வேலையை பார்க்க செல்ல, அந்த வடக்கு அறையில், உடையை மாற்றி இடை வரை நீண்ட கூந்தலை விரித்து தலை கோதியவாறு ஏதோ பெருத்த யோசனையுடன் படுத்திருந்தாள் மீனாட்சி.

இன்னொரு மெத்தையில் மடிக்கணினிக்குள் தலையை புகுத்தியவாறு படிப்பு சம்பந்தபட்டமான தகவல் எதையோ பார்த்து கொண்டிருந்த அன்னம், “சுந்தரி கண்ணால் ஒரு சேதி” என சத்தமாய் பாட ஆரம்பித்தாள்.

“சொல்லடி இந்நாள் நல்ல தேதி” என பாடி முடித்தவள் திரும்பி மீனாவை பார்த்தாள்.

அவளின் கவனம் வேறெங்கோ இருக்க, இதெல்லாம் அவள் காதில் விழவே இல்லை. மீண்டுமாய் அன்னம் “சுந்தரிஈஈஈஈஈ கண்ணாஆஆஆல் ஒரு சேதிஈஈஈஈ” என சத்தமாய் ஒவ்வொரு வார்த்தையையும் அழுத்தி கூறி பாட,

“அடியேய் ஏன்டி நல்ல பாட்டை இப்படி கெடுக்குற” என எரிச்சலாய் மொழிந்து அவள்புறம் பார்த்தவாறு திரும்பி படுத்தாள் மீனாட்சி.

“இல்ல யாரோ இன்னிக்கு கண்ணும் கண்ணும் நோக்கியானு வச்ச கண்ணு வாங்காம ஒருத்தரை பார்த்தாங்களாம்! இப்ப அவரை நினைச்சி ‘கண்ணாளனே எனது கண்ணை இன்றோடு காணவில்லைனு’ விட்டத்தை பார்த்து சோக கீதம் வாசிச்சிட்டு இருக்காங்களாம்!
அதான் அவங்க மனசை குளிர்விக்கிற மாதிரி இப்படி பாடிட்டு இருக்கேன்” என அன்னம் கேலி சிரிப்புடன் கூறி முடிக்க,

‘அப்படியா அவரை நாம பார்த்துட்டு இருந்தோம்’ என மனதோடு நினைத்து கொண்டாலும், “உதை வாங்குவ அன்னம்! வயசுக்கு ஏத்த மாதிரி பேசி பழகு” என்றாள் மீனாட்சி.

“ஹலோ மேடம்! பக்கத்துல வயசு பொண்ணு இருக்குனு கூட பார்க்காம கண்ணும் கண்ணும் கலந்துனு கண்ணாலயே அவரை களீபரம் செஞ்சிட்டு இருந்தது நீங்க. அப்ப என் வயசு உங்களுக்கு ஞாபகம் வரலையோ” என கேலி செய்து சிரித்தவளோ,

திடீரென “ஹே மீனு! இங்க பாரு உன்னோட ஈஸ்வரன்” எனக் கத்தியிருந்தாள்.

“என்னடி உளர்ற” என மீனாட்சி கேட்க,

“ம்ப்ச் எழுந்து இங்க வானு சொல்றேன்ல” என அன்னம் மீண்டுமாய் அவளை கூப்பிட்டாள்.

மீனாட்சி அவளருகில் சென்று மடிக்கணினியை பார்த்தவாறு அமர, அங்கு ஒரு யு டியூப் சேனலுக்கு பேட்டி அளித்தவண்ணம் அமர்ந்திருந்தான் சுந்தரேஸ்வரன்.

அவளின் கண்கள் சிமிட்ட மறந்து அவனையே ரசனையாய் நோக்க, “சுந்தரி கண்ணால் ஒரு சேதி” என அன்னம் மீண்டுமாய் ஆரம்பிக்க, இவளின் முகம் வெட்கத்தில் சிவந்தே போனது. அதை மறைக்கும் பொருட்டு கையில் கிடைத்த தலையணையை எடுத்து அன்னத்தை அவள் அடிக்க, அன்னமும் இவளை அடிக்க என இருவருமாய் மெத்தையில் உருண்டு பிரண்டு சண்டையிட்டு மூச்சு வாங்க விலகி எழுந்து அமர்ந்தனர்.

“இந்த வீடியோ எப்படிடி உனக்கு கிடைச்சிது” என கேட்டாள் மீனாட்சி.

“எங்க இங்கிலீஷ் டீச்சர் ஒரு அசைன்மெண்ட் கொடுத்தாங்க. நம்ம மதுரைக்குள்ளேயே ஃபேமஸா இருக்க பிஸ்னஸ் ஓனர்ஸ் பத்தி கட்டுரை எழுத சொல்லிருந்தாங்க. அதுக்கு தான் வீடியோ தேடிட்டு இருந்தேன். இது வந்துச்சு. பாரேன் இவரோட யூ டியூப் சேனலுக்கு இருக்க ஃபேன்ஸ்ஸை! தினமும் லைவ்ல வருவாரு போலயே மீனு! அப்ப நீ அவரை தினமும் ஆன்லைன்லயே சைட் அடிச்சிக்கலாம்” என கண்ணை சிமிட்டி கிண்டலாய் பேச,

“ச்சீ போடி” என அங்கிருந்து எழ முயன்ற மீனாட்சியின் கரம் பற்றிய அன்னம்,

“உனக்கு அவரை பிடிச்சிருக்கு தானே தங்கம்” என விளையாட்டை கைவிட்டு ஆழ்ந்த குரலில் கேட்டாள்‌.

கண்களில் கனிவுடன் மென்மையாய் சிரித்தவாறு அன்னத்தின் தலையை கோதிய மீனாட்சி, “எனக்காக பிறந்தவர் அவர் தான்னா, எத்தனை தடங்கல் தடைகள் வந்தாலும் அவரே என்னை வந்து சேருவார்” என்று உரைத்து விட்டு மெத்தையில் படுத்து கொண்டாள்.

‘அவரே என்னை வந்து சேருவாரா?’ அன்னத்திடம் அழுத்தமாய் முழு நம்பிக்கையுடன் கூறியவளுக்கு இப்பொழுது அதே வார்த்தைகள் கேள்வியாய் நெஞ்சை குடைந்தது.

‘கண்டதையும் நினைச்சி மனசை கெடுத்துக்காத மீனு’ என தன்னை தானே கண்டித்து கொண்டவளாய் உறங்கி போனாள்.

அன்று மாலை வேளையில் ஜிகர்தண்டா அருந்தலாம் என மீனாட்சியை அழைத்து கொண்டு மதுரை பஜாருக்கு சென்றாள் அன்னம்.

“அடியேய் பக்கத்துல இருக்க கடைக்கு போறோம்னு ஆச்சிக்கிட்டயும் அம்மாகிட்டயும் சொல்லி தானே என்னை கூட்டிட்டு வந்த! இப்ப என்னடானா ஒன்றரை மணி நேரமா ஆட்டோல போய்ட்டு இருக்கோம். மாமா அப்பாக்கிட்டலாம் வேற சொல்லலை. அவங்களுக்கு இவளோ தூரம் நாம போறோம்னு தெரிஞ்சா திட்டுவாங்க அன்னம்” கலக்கத்துடன் அன்னத்தின் காதில் உரைத்தாள் மீனாட்சி.

“ஆமா திட்டுவாங்க தான்! அதான் சொல்லாம கூட்டிட்டு போறேன்” என கண் சிமிட்டிய அன்னத்தை முறைத்தாள் மீனாட்சி.

ஒரு ஜூஸ் கடைக்கு சென்று ஜிகர்தண்டா அருந்திவிட்டு அங்கேயே அந்த பஜாரிலுள்ள மற்ற கடைகளை எல்லாம் பார்வையிட்டவாறு, வரிசையாய் கடைகள் இருந்த தெருவில் கடைகளின் ஓரமாய் இவர்கள் நடந்து கொண்டிருக்க, அச்சமயம் ஒரு கடையில் இருந்து வெளியே வந்தவன், அந்த வாசலை கடந்து கொண்டிருந்த மீனாட்சியின் மீது தற்செயலாய் மோதி நின்றான்.

“சாரி சாரி” என அவள் விழாத வண்ணம் தாங்கி பிடித்து நிற்க வைத்தவன் அருகில் இருந்த அன்னத்தையும் பார்த்து மன்னிப்பு வேண்ட, மீனாட்சியின் விழிகள் பெரிதாய் விரிந்து அவனை மட்டுமே பார்த்து கொண்டிருந்தன.

அன்னம் மீனாட்சியின் காதினருகில் சென்று, “ஹே மீனு உன்னோட ஈஸ்வரன்” என அவள் காதோடு உரைக்க, மீனாட்சி தன்னிலை அடைந்தவளாய், அங்கிருந்து நகர பார்க்க, “அம்மா இப்ப எப்படி இருக்காங்க அண்ணா” எனக் கேட்டாள் அன்னம்.

“நல்லாருக்காங்கமா” என கூறியவாறு, ‘யாரு இவங்க? அம்மாக்கு உடம்பு சரியில்லைன்னு இவங்களுக்கு எப்படி தெரியும்’ என யோசனையுடன் நெற்றியை சுருக்கியவனாய், “சாரி நீங்க யாருனு தெரியலை” என்றான்‌‌.

மீனாட்சியின் கண்களில் அப்பட்டமாய் கோபக்கனல். அவளால் இந்த வார்த்தையை தாங்கி கொள்ளவே இயலவில்லை. காலையில் அவனை கண்ட நொடியில் இருந்து அவளின் மனம் முழுவதும் அவனின் நினைவே வியாபித்திருக்க, முதல் பார்வையில் காதல் எல்லாம் பேத்தல் என்று தீர்க்கமாய் நம்பி இருந்தவளுக்கு அவன் மீது தனக்கு ஏற்பட்டிருக்கும் இந்த ஈர்ப்புக்கான காரணம் யாதென அறிய முடியாமல், அவன் மதிமுகத்தையும் நினைவில் இருந்து அகற்ற முடியாமல் அவள் தத்தளித்து கொண்டிருக்க, இங்கு இவனோ அவள் யாரென தெரியவில்லை என்று உரைத்தது அவளுக்கு பெருத்த கோபத்தை விளைவித்தது.

“வாடி போகலாம்” என அவனை முறைத்தவாறே அன்னத்தை இழுத்து கொண்டு மீனாட்சி விரைவாக போக, செல்லும் அவளை, நின்று ஒரு நொடி பார்த்த சுந்தரேஸ்வரன் பெருமூச்சுடன் கடைக்குள் நுழைந்தான்‌.