சொக்கனின் மீனாள் 3


‘நான் பொய் சொல்லிருந்ததை கண்டுப்பிடிச்சிருப்பாரே’ என உள்ளே சென்ற மீனாட்சிக்கு அய்யோ என்றிருக்க,

ராஜனோ, ‘இந்த மீனாட்சி தான் நாம பார்க்க வந்த பொண்ணா? அப்படினா மீனாட்சிக்கிட்டயே நேரடியா இந்த கல்யாணம் வேண்டாம்னு சொல்லிடலாமே’ என சிந்தித்து கொண்டிருந்தான்.

ஆச்சி வெளிப்பிரகாரத்தில் நின்றிருந்த தனது மகன் முருகனை நோக்கி வர, தீரனின் காதில் ஏதோ கூறினான் ராஜன்.

அதை காதில் வாங்கி கொண்டு ஆச்சியை நோக்கி வந்த தீரன், “ஆச்சி உங்களுக்கு ஏதோ பறவை காய்ச்சல்னு ஊருக்குள்ள பேசிக்கிறாங்களே?” எனக் கேட்டான்.

“எவன்டா அவன் எனக்கு காய்ச்சல்னு சொன்னது? அதுவும் பறவை காய்ச்சலாம்ல! அந்த பறவையை பிடிச்சி கழுத்தை நெறிச்சி சூப்பு வச்சி குடிச்சிடுவேனாக்கும். இது வைரம் பாய்ஞ்ச கட்டைடா! எவனோ பொறாமை பிடிச்சி தான் இப்படி பரப்பி விட்டிருக்கானுங்க! எனக்கு காய்ச்சல்னு சொன்னவன் கண்ணு‌ அவிஞ்சி போக” என்று ஆச்சி கூறவும்,

உள்ளிருந்த மீனாட்சிக்கு ஆச்சியின் குரல் புரை ஏற வைத்து இருமலை தோற்றிவித்திருக்க, மீனாட்சியின் இருமல் சத்தத்தை கேட்டு வாய்க்குள்ளேயே சிரித்திருந்தனர் ராஜனும் தீரனும்.

அந்நேரம் வாசலில் வந்து நின்றன ஒரு ஃபார்ச்சூனர் மகிழுந்தும் ஒரு ஹோண்டா சிட்டியும்.

ஃபார்ச்சூனரில் இருந்து ராஜனின் தாய் தந்தை இறங்க, அந்த வண்டியை தரிப்பிடத்திற்கு நகர்த்தி சென்றார் அந்த வண்டியின் ஓட்டுனர்.

ஹோண்டா சிட்டியில் இருந்து அகல்யாவும் கல்யாணியும் இறங்க, வண்டியை ஓட்டி கொண்டு வந்திருந்த ஈஸ்வரன் (சுந்தரேஸ்வரன்) தரிப்பிடத்தை நோக்கி சென்றான்.

அகல்யாவை கண்டதுமே, ‘இவங்க எதுக்கு இப்ப இங்க வந்திருக்காங்க’ என்பது போல் கேள்வியாய் பார்த்திருந்தனர் ராஜன் குடும்பத்தினர்.

வாசலில் நின்றிருந்த தரகர்கள் இருவரும் ஒருவரை மாற்றி ஒருவர் குழப்பமாய் பார்த்தவாறு இரு குடும்பத்தினரையும் வரவேற்றனர்.

இரு வீட்டினரும் கோவிலின் நிலைப்படியை தாண்டி உள்ளே வர,

“என்னடா இது அதிசயம்! எதிரும் புதிரும் ஒரே இடத்துல வந்து நிக்குது” என தீரனின் காதை கடித்த ராஜனின் பார்வை கல்யாணியை பாசமாய் ஸ்பரிசித்தது‌.

“வாங்க! பொண்ணு வீட்டுக்காரங்க உள்ள தான் இருக்காங்க. நீங்க போய் சாமியை பார்த்துட்டு வாங்க பேசலாம்” என இரு குடும்பத்தினரையும் தரகர்கள் இருவரும் உள்ளே அனுப்ப முனைந்தனர்.

“என் பையனுக்கு பொண்ணு பார்க்க நீங்க வருவீங்கனு நினைக்கவே இல்லை தம்பி! நமக்குள்ள எவ்ளோ பிரச்சனை இருந்தாலும் குடும்பத்தை விட்டு கொடுக்காம நீங்க வந்ததுல ரொம்ப சந்தோஷம்” என்று வெள்ளந்தியாய் மகிழ்வுடன் சுந்தரேஸ்வரனின் தாய் அகல்யா சுந்தரராஜனின் தந்தையிடம் கூற,

“யாரு பையனுக்கு யாரு பொண்ணு பார்க்க வந்தாங்களாம்? நினைப்பு தான் பொழப்பை கெடுக்குமாம்” என்று அலட்சியமாய் உரைத்த செல்வாம்பிகை,

“செல்லப்பா, என் பையனுக்கு தானே உங்களை பொண்ணு பார்க்க சொன்னேன்! கண்டவங்களுக்கு பொண்ணு பார்க்க எங்களை ஏன் வர வச்சிருக்கீங்க” என தரகரை நோக்கி கோபமாய் மொழிந்தார்.

செல்வாம்பிகையின் உரத்த குரலிலேயே ஏதோ சண்டையென எண்ணி பெண் வீட்டினர் அனைவரும் அந்த இடத்தில் குழுமிவிட்டனர்.

“அம்மாஆஆ.. என்னம்மா பேசுற நீ” என தனது தாயை ராஜன்‌ அதட்ட,

“பொண்ணு பார்க்க போறோம்! வந்து விழாவை சிறப்பிங்கனு நாங்களும் உங்களை வெத்தலை பாக்கு வச்சி ஒன்னும் அழைக்கலை! நீங்களா அழையா விருந்தாளியா வந்துட்டு எங்களை குறைச்சி பேசுவீங்களோ” அதே அலட்சிய பாவனையில் கோபமாய் உரைத்திருந்தான் ஈஸ்வரன்‌.

இரண்டு சுந்தரையும் முறைத்தவண்ணம் இருந்தார் ராஜனின் தந்தை வேங்கடசுந்தரம்.

ஆம் சுந்தரம் என்பது அவர்களின் குடும்பப் பெயர். அவர்கள் குடும்பத்தில் பிறக்கும் ஆண் பிள்ளைகள் அனைவருக்கும் சுந்தர் என்ற பெயர் வருமாறு தான் பெயரிடுவார்கள்.

அங்கு நிகழும் உரையாடலை பெண் வீட்டினர் அனைவருக்குமே, ‘என்னடா நடக்குது இங்க’ என்ற குழப்பத்துடனேயே தலையும் புரியாமல் வாலும் புரியாமல் பார்த்து கொண்டிருக்க,

செல்லப்பா என்கின்ற தரகர் தன்னுடன் இருந்த சின்ராசு என்கின்ற தரகரை முறைத்து கொண்டிருந்தார்.

“உன்னை நான் சுந்தரம் குடும்பத்துல உள்ள பையன்கிட்ட தானே பேச சொன்னேன்” என செல்லப்பா சின்ராசுவின் காதை கடிக்க,

“ஆமா இந்தா நிக்கிறாரே இவர் தானே சுந்தரம்‌. இவரோட பையனுக்கு தானே பேச சொன்னீங்க” என்றார் அவர்.

“அய்யோ இவர் சின்ன சுந்தரம்யா! பெரிய சுந்தரத்தோட பையனுக்கு தான் நான் உன்னை பேச சொன்னேன்” என எரிந்து விழுந்தார்‌.

மேலும் சின்ராசுவிடம் பேசிய செல்லப்பாவிற்கு நடந்த குளறுபடி தெளிவாய் புரிபட,

“அய்யா எல்லாரும் மன்னிக்கனும்‌. குழப்பம் நடந்துப் போச்சு” என்று தானே முன்னே வந்து ஆஜரானார் செல்லப்பா‌.

“என்ன தரகரே என்னாச்சு?” என கேட்டவாறு பெண் வீட்டு சார்பில் மீனாட்சியின் தாய்மாமன் முருகன் முன்னே வந்து நிற்க, ருத்ரனும் பதட்டமாய் முருகனின் அருகில் வந்து நின்றார்.

மீனாட்சியும் அன்னமும் உள்பிரகாரத்தின் வாசலில் இருந்தே இந்நிகழ்வுகளை பார்த்து கொண்டும் தங்களுக்குள் பேசி கொண்டும் இருந்தனர்.

“சுந்தரம் குடும்பத்துல உள்ள பையனுக்கு தானே உங்க பொண்ணை நாங்க பேசினோம்” என செல்லப்பா சொல்ல,

“ஆமா தரகரே! இரண்டு ஜாதகம் கொடுத்தீங்க! அதுல பெரிய பையனுக்கு தான் ஜாதகம் பொருந்துதுனு சொல்லி அவங்களை தானே பொண்ணு பார்க்க வர சொன்னோம்! அதுல என்ன குழப்பம் தரகரே” என கேட்டார் முருகன்.

“அது வந்து தம்பி, நான் சின்ராசுக்கிட்ட சுந்தரேஸ்வரன் வீட்டுல பேச சொன்னேன். அவர் சுந்தரராஜன் வீட்டுல பேசிட்டாரு போல! நான் நேத்து சுந்தரேஸ்வரன் வீட்டுக்கு போன் செஞ்சி, நாளைக்கு பொண்ணு பார்க்க தயாரா இருங்க! ஏற்கனவே சின்ராசு பேசியிருப்பானேனு சொன்னேன்”

இதை கேட்டதும் உள்ளே புகுந்த அகல்யா, “ஆமாங்க தரகரே! நான் கூட சின்ராசுனு யாரும் பேசலையேனு நினைச்சேன்‌. ஆனாலும் பொண்ணு வீட்டுல சரின்னு சொல்லி பார்க்க வர சொல்லிருக்காங்கனு நீங்க சொன்னதால பொண்ணோட ஜாதகம் ஃபோட்டோலாம் திரும்ப எனக்கு அனுப்புங்கனு நேத்து சொன்னேனே” என்றார்.

“ஆமாமா நான்‌ கூட ஏற்கனவே சின்ராசு உங்களுக்கு போட்டோ ஜாதகம்லாம் அனுப்பிருப்பானே! திரும்ப ஏன் என்கிட்ட கேட்கிறீங்கனு நினைச்சேன்” என்று நிறுத்திய செல்லப்பா,

“இந்த பக்கம் பெரிய சுந்தரந்தோட பையன் சுந்தரேஸ்வரன் வீட்டுல நடந்த இந்த பேச்சு வார்த்தை தெரியாத சின்ராசு, சின்ன சுந்தரந்தோட பையனான சுந்தரராஜனையும் பொண்ணு பார்க்க வர சொல்லிட்டார்” என நிறுத்தினார்.

இவர்கள் கூறியதை நம்பாது, தன்னை அவமதிக்கவே சுந்தரேஸ்வரன் திட்டமிட்டு இவ்வாறு செய்ததாய் எண்ணிய சுந்தரராஜனின் தந்தையான வெங்கடசுந்தரம் சுந்தரேஸ்வரனின் அருகில் வந்து, “என்னை பழி வாங்கனும் அவமானப்படுத்தனும்னு திட்டம் போட்டு தானே இப்படிலாம் செய்ற நீ!” என அவன் முன் கத்தி கொண்டு நின்றார்.

“என் புருஷனோட பரம்பரை கடையையும் எங்ககிட்ட இருந்து தட்டி பறிச்சது இல்லாம என் பையனுக்கு பார்த்த பொண்ணையும் தட்டி பறிக்க பார்க்கிறியோ! உனக்குனு எவனும் பொண்ணு கொடுக்க மாட்டான்னு தானே இப்படி அல்பத்தனமா நடந்துக்குற” என செல்வாம்பிகை நாவை வாலாய் வீசி நஞ்சை உமிழ,

“ம்மா ப்பா” எனக் கத்திய ராஜன், “டிரைவர் அண்ணா வண்டியை எடுங்க! கிளம்புங்க நீங்க முதல்ல” இருவரையும் தானே கையை பிடித்து காரை நோக்கி இழுத்து சென்றான்.

தந்தைக்கு பயந்த மகனாய் இருந்தாலும், தனது தாய் தந்தையரை மற்றவர் கடிந்து பேசும் முன் தானே இங்கிருந்து அழைத்து செல்வது தான் உசிதமென எண்ணி அவர்களை அவ்விடத்தை விட்டு நகர்த்தி சென்றான்.

“என் மகனுக்கு பார்த்த பொண்ணை கட்டிக்கிட்டு நீ மட்டும் சந்தோஷமா இருப்பியோ! நீ எப்படி சந்தோஷமா இருக்கனு நானும் பார்க்கிறேன்டா” என விடாமல் கத்தி கொண்டே தான் ராஜனுடன் சென்றார் செல்வாம்பிகை.

ஈஸ்வரன் முகம் இறுகி போய் இருக்க, அகல்யாவின் கண்களில் நீர் தேங்கியது. இவர்களின் பேச்சில் பயந்த கல்யாணி முகம் வெளிற ஈஸ்வரனின் கையை இறுக பற்றி கொண்டிருந்தாள்.

இத்தனை களேபரத்திலும் தங்கையின் பயத்தை உணர்ந்தவனாய், அவளின் கையை தட்டி கொடுத்து அவளது தோளை சுற்றி கையை போட்டு பயத்தை போக்க முனைந்த தமையனின் செயலை உள்வாங்கியவாறு ஈஸ்வரனையே இமை சிமிட்டாது பார்த்து கொண்டிருந்தாள் மீனாட்சி.

முருகன் மற்றும் ருத்ரனின் அருகில் வந்து அவர்களின் காதோடு பேசிய ஆச்சி, “நல்லவேளை அந்தம்மா பையனுக்கு நம்ம தங்கத்தை பேசலை. என்னாஆஆ பேச்சு பேசுது!” என்றவராய்,

“நம்ம பார்க்க வர சொன்னது இந்த வீட்டு பையனை தானே! இன்னும் என்ன பார்த்துட்டு இருக்கீங்க இரண்டு பேரும். அந்த அம்மாகிட்ட பேசி உள்ளே கூட்டிட்டு வாங்க” என இருவரையும் நிகழ்வுக்குள் இழுத்து அடுத்து நடக்க வேண்டியவற்றை செய்ய வைத்தார்.

“லட்சுமி, தங்கத்தை உள்ளே கூட்டிட்டு போ! முருகா, போ போய் அவங்ககிட்ட பேசு! தரகரே உங்களை அப்புறம் கவனிச்சிக்கிறேன்” என்று ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு உத்தரவை பிறப்பித்தவராய் அடுத்த வேலையை பார்க்க சென்றார் ஆச்சி சிவகாமி.

அதே நேரம், “ஈஸ்வரா” என அழைத்த அகல்யாவிற்கு மனம் படபடவென அடித்து கொள்ள, முகமெல்லாம் வியர்க்க மகனின் கையை பற்ற வந்தவர் அங்கேயே மயங்கி சரிந்தார்.

தனது தாய் தந்தையை அனுப்பி வைத்துவிட்டு வந்த ராஜன், “பெரியம்மா” என அவர் கீழே விழும் முன்னே கைகளில் தாங்கி இருந்தான்.

“உங்கப்பன் பேச்சை கேட்டு கொரியரை மாத்தி எனக்கு நஷ்டத்தையும் ஏற்படுத்திட்டு இங்க நல்லவன் மாதிரி வந்து நடிக்கிறியோ” என ஆவேசமாய் ராஜனை தள்ளி விட்ட ஈஸ்வரன், தனது தாயை கைகளில் ஏந்தி கொண்டு மகிழுந்தை நோக்கி சென்றான்.

ஈஸ்வரனின் இந்த குற்றச்சாட்டில் அதிர்ந்து விழித்த ராஜனை, தீரன் தன்னுடன் அழைத்து சென்றான்.