சொக்கனின் மீனாள் 2

“என்ன ரம்யாக்கா ஒரே பதட்டமா இருக்கீங்க?” என காலை வேளையில் கடையை பெருக்கி சுத்தப்படுத்த வந்த பணியாள் திவ்யா கேட்க,

“முரளி தம்பி காலைலயே போன் செஞ்சி சீக்கிரமா வர சொன்னிச்சு. என்ன‌ ஏதுனு சொல்லலை! சுந்தர் தம்பியும் இன்னிக்கு சீக்கிரமே ஆபிஸ்க்கு வந்திருக்கு. பார்க்க கோபமா இருக்க மாதிரி வேற இருக்கு. அந்த கஸ்டமர் கேர்ல ஃபோன் பேசும் பொண்ணுங்களை வேற கூப்டு விட்டிருக்கு. என்ன ஏதுன்னு தெரியாம ஒரே பதட்டமா இருக்கும்மா” என்றார் நெஞ்சம் நிறைந்த உதறலுடன்.

“என்னக்கா நீங்க! சுந்தர் சாருக்கா இப்படி பயப்படுறீங்க! அவர் சிரிச்ச மாதிரி தானே எப்பவும் பேசுவாரு. அவர் முகத்தை பார்த்தா யாரையும் கடிஞ்சி பேசுற ஆளா தெரியலையேக்கா” என தனது முதலாளிக்காக பரிந்து வந்து அவள் பேச,

“நீ வேலைக்கு சேர்ந்து ஒரு வாரம் தானே ஆகுது. அதான் உனக்கு சுந்தர் தம்பி பத்தி தெரியலை. எந்தளவுக்கு வேலையாளுங்களுக்கு சுதந்திரம் கொடுத்து சிரிச்சு சிரிச்சு பேசி வேலை வாங்குவாரோ, அதே மாதிரி வேலைல எதுவும் தப்பா நடந்துச்சுனா அதே அளவுக்கு கோபமும் வரும்” என அவர் பேசி முடிக்கும் போதே சுந்தரின் அறைக்குள் நுழைந்தனர் கஸ்டமர் கேரில் பணிபுரியும் இரண்டு பெண்கள்‌.

அவர்கள் உள்ளே நுழைந்ததும், தனது அறையினில் இருந்த கணிணியில் பார்வை வைத்திருந்தவனாய், “ரெண்டு நாளா கஸ்டமர்க்கிட்ட இருந்து ஏதாவது கம்ப்ளைண்ட்ஸ் (புகார்) வந்துச்சா?” எனக் கேட்டான்.

அவனின் இறுகிய முகமும், கோபமான அழுத்தமான பார்வையும் இவர்களுக்குள் பயத்தை விளைவிக்க, “இல்ல சார்! அப்படி எதுவும் யாரும் ஃபோன் செஞ்சி கம்ப்ளைண்ட் செய்யலையே சார்” என உள்ளே இருந்த நடுக்கத்தை மறைத்து திடமாய் கூறியிருந்தனர்.

“அப்ப இதுலாம் என்ன கம்ப்ளைண்ட்ஸ்?” என தனது கணினியை அவர்கள் புறமாய் திருப்பி அதிலிருந்த மெயில்களை அவன் காண்பிக்க, மிரண்டு விழித்தனர் இரு பெண்களும்.

“கஸ்டமர் கேர்னா ஃபோன் கால் மட்டும் தான்‌ அட்டெண்ட் செய்வீங்களா? இ மெயில் அண்ட் நம்ம வெப்சைட்ல கமெண்ட் மூலமா, யூ டியூப் கமெண்ட் மூலமானு எல்லா இடத்துலயும் போடுற கஸ்டமர்ஸ்ஸோட கம்ப்ளைண்ட்ஸ்ஸை பார்த்து தீர்த்து வைக்கிறதுக்கு தானே உங்களை வேலைக்கு வச்சிருக்கேன்‌. இந்த வேலை கூட ஒழுங்கா செய்ய முடியலைனா வீட்டுலேயே உட்கார்ந்துட்டு இருக்க வேண்டியது தானே. எதுக்கு வேலைக்குனு வந்து இப்படி என் உசுரை வாங்குறீங்க. உங்க கேர்லெஸ்னஸ்னால எனக்கு எவ்ளோ நஷ்டம் தெரியுமா? ஒரு வருஷம் முழுக்க உங்க சம்பளத்தை பிடிச்சாலும் இந்த நஷ்டத்துக்கு ஈடாகுது” கர்ஜனையாய் விழுந்தன சுந்தரின் வார்த்தைகள்.

பெண்கள் இருவரும் தவறு செய்த மழலையாய் முகம் வெளிற கண்களில் நீர் கசிய, உள்ளங்கை வியர்வையில் குளிக்க அவனை பார்த்திருந்தனர்.

அவர்களது கண்ணீரை கண்டவன் முகத்தில் சிறிதும் இளக்கம் காண்பிக்காது, அவர்களை அழுத்தமாய் முறைத்தவன், “இது தான் ஃபர்ஸ்ட் அண்ட் லாஸ்ட் வார்னிங்! திரும்ப ஒரு நேரம் உங்களால எதுவும் தப்பு நடந்துச்சுனா…” என நிறுத்தியவன்,

“நடக்காம பார்த்துக்கோங்க” என்றவாறு அறையை விட்டு வெளியேறுமாறு தலையசைத்தான்.

அவர்கள் அழுதவாறே வெளியே செல்லவும், அங்கிருந்து இவற்றை பார்த்திருந்த முரளி, “சார் நஷ்டத்துக்கும் இவங்களுக்கும் சம்பந்தமில்லை தானே! கஸ்டமரோட புகாரை பார்க்காம போனது தானே இவங்க தப்பு! பிராடக்ட் டேமேஜ் ஆனது தானே நஷ்டத்துக்கு காரணம்” என கூறி கொண்டே வந்தவன்,

சுந்தரின் எனக்கு தெரியும் என்ற அழுத்தமான பார்வையில் அமைதியாகி போனான்.

அந்த பெண்கள் அழுதவாறே வெளியே வந்ததை கவனித்த ரம்யாக்காவும் திவ்யாவும் அவர்களிடம் சென்று பேச, சுந்தர் திட்டியதை அப்பெண்கள் உரைக்க, “நான் சொன்னேன்ல! பாரு இப்ப” என்று திவ்யாவிடம் கூறியிருந்தார் ரம்யா.

அடுத்து ரம்யாக்காவிற்கும் அதே மாதிரியான மண்டகப்படி அவனிடம் இருந்து கிடைக்க, “இன்னிக்கு நாளே சரியில்லை” என்றபடி தன்னுடைய வேலையை பார்க்க சென்றார் அவர்.

முதலில் வாடிக்கையாளரை திருப்திபடுத்த வேண்டிய செயலில் இறங்கினான்.

அந்த இரு பெண்களை வைத்தே புகாரளித்த அனைவருக்கும் பதிலனுப்ப வைத்து, வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்த பொருளுடன் பரிசு பொருளும் அனுப்புவதாய் அலைபேசியில் அழைத்து அவர்கள் மனம் குளிர பேச வைத்தான்.

அதன்பின் இதனால் தனக்கு ஏற்பட்டிருக்கும் நஷ்டத்தை கணக்கிட்டான். இதை எதன் மூலம் ஈடு செய்யலாமென கணக்கிட்டவாறு முரளியுடன் இணைந்து திட்டமிட்டிருந்த நேரம் தான் அவனின் அன்னை அகல்யா அவனுக்கு அழைத்திருந்தாள்.

காதில் கைபேசியை வைத்திருந்தாலும் அவனின் பார்வை கணிணியில் நஷ்டத்தை கணக்கிட்டு கொண்டிருந்தது.

“சாப்பிட்டியா ஈஸ்வரா! வீட்டுக்கும் சாப்பிட வரலை” என அவர் கேட்கவும் தான் நேரத்தை பார்த்தான்.

நேரம் மதியம் இரண்டு மணியை காண்பிக்க, பெருமூச்செறிந்தவனாய் தனது நாற்காலியில் சாய்ந்து அமர்ந்து முரளியை பார்த்தான்.

“நீங்களும் இன்னும் சாப்பிடலைல முரளி. போய் சாப்பிட்டு வாங்க” என அவனை அனுப்பி வைத்தவன் தாயிடம் பேச்சை தொடர்ந்தான்.

“நீங்க சாப்பாடு கொடுத்து அனுப்புங்கமா! நம்ம செக்யூரிட்டி அண்ணாவை அனுப்புறேன்‌‌. அவங்ககிட்ட கொடுத்து அனுப்பிடுங்க. இன்னிக்கு இதெல்லாம் சரி செஞ்சிட்டு தான்மா வீட்டுக்கு வருவேன்” என்றான்.

“ஆமா யாரு இதை செஞ்சதுனு தெரிஞ்சிதா ஈஸ்வரா” எனக் கேட்டார் அகல்யா.

“ம்ப்ச் தெரியலைமா! முதல் வேலையா கஸ்டமர்ஸ்க்குலாம் ரிப்ளை செஞ்சி அவங்களை சமாளிச்சாச்சு. இன்னிக்கு நைட் யூ டியூப் லைவ்ல கூட இதை பத்தி சொல்லி மன்னிப்பு கேட்டு கூடுதலா பரிசு பொருட்கள் கொடுக்கிறதை பத்திலாம் சொல்லலாம். அது நான் பேசி சமாளிச்சிடுவேன்‌. இப்ப இந்த நஷ்டத்தை எப்படி சரி செய்யலாம்னு பார்த்துட்டு இருக்கேன். புதுசா பிராடக்ட் லான்ச் (launch) செய்யலாமா இல்ல ஏற்கனவே அதிகமா சேல்லான (sale – விற்பனை) பிராடக்ட்டை ரீ சேல்க்கு (மறு விற்பனைக்கு) கொண்டு வரலாமா! இப்ப நஷ்டமான அமௌண்ட்டை எப்படியாவது திரும்ப சம்பாதிச்சிடனும்மா! அதை தான் பார்த்துட்டு இருக்கேன்.

இங்க பேக்கேஜ்ஜிங் டீம் எல்லாமே சரியா தான் செஞ்சோம்னு சொல்றாங்க. நம்ம எப்பவும் கொரியர் அனுப்புற இடத்துலயும் பிராப்ளம் இல்ல. அங்கேயும் ஆட்கள் வச்சி விசாரிச்சாச்சு. மீதி விசாரணையை இந்த வேலையை முடிச்சிட்டு தான் நான் பார்க்கனும்” என்று நீண்ட விளக்கமாய் சொல்லி முடித்தான்.

கடை மற்றும் வியாபாரம் சம்பந்தமான விஷயங்கள் அனைத்தையுமே எப்பொழுதும் தாயிடம் முழுமையாய் பகிர்ந்து கொள்வான் சுந்தர். அவருக்கும் வெளியுலகம் தெரிய வேண்டும். அவரும் வியாபாரத்தில் தனக்கு தெரிந்த ஆலோசனைகளை வழங்கி பங்களிக்க வேண்டுமென எண்ணுவான்.

மகனின் சிந்தனை முழுவதும் இந்த விஷயத்திலேயே உழலுவதை அவரால் புரிந்து கொள்ள முடிந்தது. ஆயினும் அவனின் ‘மீதி விசாரணை’ என்ற பதத்தில், ‘அய்யோ நாளைக்கு வரைக்கும் விசாரிக்கிறேன்னு பொண்ணு பார்க்க வராம இருந்திட போறான்’ என எண்ணியவராய்,

“ஈஸ்வரா நாளைக்கு உனக்கு பொண்ணு பார்க்க போறோம்டா. காலைல பன்னிரெண்டு மணி வரைக்கும் எந்த வேலையும் வச்சிக்காத சரியா” என்றார்.

“என்னம்மா நீ திடீர்னு சொல்ற!” என கேட்டான்.

“திடீர்னு தான்டா தரகர் ஃபோன் செஞ்சி பொண்ணு வீட்டுல ஓகே சொல்லிட்டாங்க. நேர்ல பார்க்க வர சொன்னாங்கனு சொன்னார். உங்க அப்பா இருந்திருந்தா உனக்கு எப்பவோ கல்யாணம் செஞ்சி வச்சிருந்திருப்பாரு. கடையை பார்க்கிறேன், வியாபாரத்தை பெருக்கிறேன், வாழ்க்கைல முன்னேறனும்னு நீ என்கிட்ட டைம் கேட்ட மாதிரிலாம் அவர்கிட்ட கேட்டிருந்திருக்க முடியாது” என இவர் சொல்லி முடிக்கும் போதே,

“அப்பா இருந்திருந்தா எனக்கு இப்படி நிலைமையே வந்திருக்காது. அவர் கடையை அப்படியே நான் மேனேஜ் செய்ற மாதிரி இருந்திருக்கும்‌. இது நான் அடிமட்டத்துல இருந்து ஆரம்பிக்கிற மாதிரி ஆகிடுச்சுலமா”

தோள் கொடுக்கும் தோழனாய் அப்பா உடன் இருந்திருந்தால் அவனுக்கு ஏன் இந்த பணிச்சுமையும் கவலையும் எல்லாம் என தோன்ற அப்பாவின் நினைவில் மனம் கசிய உரைத்திருந்தான்‌.

கேட்டிருந்த அகல்யாவின் கண்களில் நீர் பெருகியது.

பெருமூச்செறிந்து தன்னை மீட்டு கொண்டவனாய், “சரிம்மா நாளைக்கு போவோம்” என்றான்.

“என்னடா பொண்ணு பத்தி எதுவும் கேட்கலை?” என அகல்யா கேட்க,

“அதான் உன் விருப்பம்னு சொல்லிட்டேனேமா!” என வைத்து விட்டான் அவன்.

இதை பற்றி மேலும் சிந்திக்க விடாது அடுத்தடுத்து பணிகள் அவனை உள்ளே இழுத்துக் கொண்டது.

அன்றிரவு ராஜன்(சுந்தரராஜன்) பேருந்திலும், ருத்ரனும் மீனாட்சியும் அவர்களது மகிழுந்திலும் மதுரையை நோக்கி பயணித்திருந்தனர்.

காலையில் தாயின் இல்லத்தில் காலடி வைத்த மீனாட்சிக்கு தாயின் கடைசி நொடிகள் நினைவுக்கு வந்து நெஞ்சில் படபடப்பை உண்டாக்க, அப்படியே வாசல் திண்ணையில் அமர்ந்து விட்டாள்.

அவளுடன் நடந்து வந்த அவளின் தந்தை ருத்ரன், “என்னடா மீனு!” என அவளின் கைப்பற்ற,

“அம்மா ஞாபகம் வந்துடுச்சுப்பா” என கண்ணீரை துடைத்தவளாய் அந்த பெரிய மரக்கதவினை தாண்டி வீட்டினுள் நுழைந்தாள்.

“வாடி என் தங்கம்! ஆச்சி வீட்டுக்கு வரதுக்கு இப்ப தான் வழி தெரிஞ்சிதா?” என ஆதுரமாய் அவளின் ஆச்சி சிவகாமி வரவேற்க,

“தங்கம் சுகமா இருக்கியா?” என கேட்டவாறு வந்து நின்றார் அவளின் அத்தை லட்சுமி.

அவளின் முழுப்பெயர் தங்க மீனாட்சி‌. அவளது தாயின் குடும்பத்தினர் அனைவரும் அவளை தங்கம் என்று தான் விளிப்பர்.

அவர்களின் தங்கம் என்ற விளிப்பிலேயே விழுக்கென இவளின் விழியினில் இருந்து விழிநீர் உருண்டோடி இருந்தது.

“தங்கம்” அவளின் தாய் காதருகே உரைப்பதை போன்றே உணர்வு எழும்ப, உடல் சிலிர்க்க அங்கிருந்தவர்களிடம் இருந்து தனது முகத்தை மறைக்க,

“நல்லா இருக்கேன்! நீங்கலாம் எப்படி இருக்கீங்க? மாமா எங்கே? காலைலயே தோட்டத்துக்கு போய்ட்டாங்களா? அன்னம் எங்கே?” எனக் கேட்டவாறே வீட்டினுள் நுழைந்தாள் மீனாட்சி‌.

வரிசையாய் வாசல் வைத்து மூன்று அறைகள் இருக்க, மூன்றாவது அறையின் ஓரத்தில் இருந்த மரஏணி படிக்கட்டின்‌ அருகே வந்து நின்றாள்‌.

தாயின் முன் நிகழ்வுகள் யாவும் மனக்கண்ணில் விரிய படபடப்பில் நிற்கவும் இயலாது கால்கள் தள்ளாட, அப்படியே அந்த ஏணியின் படிக்கட்டில் அமர்ந்து விட்டாள் மீனாட்சி.

“என்ன தங்கம்? என்னாச்சு?” என அனைவரும் பதட்டத்துடன் அவளருகில் வர,

“லட்சுமி நீ போய் குடிக்க தண்ணீர் எடுத்து வா!” என அனுப்பிய ஆச்சி,

“என்னம்மா என்ன செய்யுது உடம்புக்கு?” என அவளின் கைப்பற்றி ஆச்சி அவளருகில் அமர,

“அம்மா ஞாபகம் வந்துடுச்சு ஆச்சி” என அவர் மடியில் முகம் புதைத்து கொண்டாள் மீனாட்சி.

கண்ணில் நீருடன் அவளை பார்த்து கொண்டிருந்தார் ருத்ரன். சற்றும் எதிர்பாராத மனைவியின் பிரிவும் அது நிகழ்ந்த நினைவும் ருத்ரனையும் அலைக்கழித்து கண்ணீர் சிந்த செய்தது.

இதற்காக தானே, அந்த நாளின் நினைவுகளை மீண்டும் எண்ணி பார்க்க துணிவில்லாமல் தானே இருவரும் இந்த ஊர் பக்கமே வராமல் இருந்தனர்.

அந்நேரம் அங்கு வந்த மீனாட்சியின் தாய் மாமன் முருகன், “என்ன எல்லாரும் இங்க உட்கார்ந்திருக்கீங்க? நம்ம தங்கத்துக்கு பிடிக்கும்னு நான் காலைலயே பதநீர் இறக்க சொல்லி எடுத்துட்டு வந்திருக்கேன். நீ வா தங்கம்” என அவளை கையுடன் அழைத்து சென்றவர் அந்த சூழலை இலகுவாக்கி அவளை குடிக்க வைத்தார்.

“ஹே மீனு வந்துட்டியாடி!” என தூக்க கலக்கத்துடன் வந்து நின்ற அன்னத்தை பார்த்த மீனாட்சி,

“அடியேய் தூங்குமூஞ்சி! இப்ப தான் எழுந்திரிச்சியா?” எனக் சிரித்தவாறு கேட்டாள்.

“என்னமோ உன்னை ரொம்ப வருஷம் கழிச்சி பார்க்கிற மாதிரி எல்லாரும் அழுது சென்ட்டிமென்ட் சீன் ஓட்டிருப்பாங்களே! அதெல்லாம் பார்க்க கூடாதுனு தான் இப்படி லேட் என்ட்ரி” என அன்னம் கிண்டலாய் உரைக்க,

“பேச்சை பாரு!” என அன்னத்தின் முதுகில் அவளின் தாய் ஓர் அடி போட்டு, “அவளை விட சின்ன பொண்ணு நீ! டி போட்டு மரியாதை இல்லாம பேசுற” என காதை திருகினார்.

“ஆஆஆஆ அம்மா” என அன்னம் அலற,

“அய்யோ விடுங்கத்தை! அவ அப்படி கூப்டுறது தான் எனக்கு பிடிச்சிருக்கு” என அன்னத்தை இழுத்து தனக்கும் ருத்ரனுக்கும் இடையில் அமர்த்தி கொண்டாள் மீனாட்சி.

தாயின் அடியில் முகத்தை சுருக்கியவளாய், “தினமும் வீடியோ கால்ல இந்த மீனு மூஞ்சியை பார்த்துட்டு தானே இருக்கீங்க. என்னமோ ஆளையே பார்க்காத மாதிரி என்னாஆஆ சீனு” அன்னம் உரைக்க மீனாட்சி வாய்விட்டு சிரித்திருந்தாள்.

“ஏன் ஆச்சி நானும் உனக்கு பேத்தி தானே! என்னை இப்படி என்னிக்காவது கவனிச்சிருப்பியா? நானும் படிப்பை முடிச்சுதும் வேலைக்குனு ஒரு வருஷம் வெளியூர்ல இருந்துட்டு வரேன். அப்ப தெரியும் என் அருமை” என உதட்டை சுழித்து அன்னம் கூற,

“நீ வாடா சென்னைக்கு! மாமா இருக்கேன் உன்னை பார்த்துக்க” என்றார் ருத்ரன்‌ அவளின் தலைக்கோதி.

“அட நீங்க வேற ஏன் அண்ணா! அதுக்கு அவ முதல்ல பாஸ் ஆகனும். பிளஸ் டூ படிக்கிறாளே ஸ்கூல்க்கு போடினு சொன்னா, மீனாட்சியை பொண்ணு பார்க்க வரதுக்கு இவ லீவ் போட்டுட்டு சுத்திட்டு இருக்கா” என புலம்பினார்.

“ஆமா மீனுவை கட்டிக்க போறவரை நான் பார்க்க வேண்டாமா! மீனு நான் ஓகே சொன்னா தான்‌ சரின்னு சொல்லனும் சரியா” என்று வேறு அவள் வம்பிழுக்க,

“பேசினது போதும்! எழுந்து போய் முதல்ல தங்கத்தோட திங்க்ஸ்லாம் உன்னோட ரூம்ல வை” என அவளை அனுப்பி வைத்தார் முருகன்.

“தங்கம் என் கூட வா” என அவளை வீட்டிற்கு வெளியே அழைத்து சென்றார் முருகன்.

“எங்க மாமா கூப்டுறீங்க?” என கேட்டவாறே அவருடன் அவள் நடக்க, ருத்ரனும் உடன் வந்தார்.

வீட்டை ஒட்டியவாறு அருகிலேயே இருந்த படிக்கட்டில் அவளை அழைத்து செல்ல, அது அவர்கள் வீட்டினுள் இருந்த மர ஏணி மூலம் அடையும் முதல் தளத்திற்கு இட்டு சென்றது.

மேலே விசாலமான மூன்று பெரிய அறைகள் இருக்க, வரவேற்பறையை ஒட்டி நீண்ட பால்கனியும் இருந்தது.

அதனை பார்த்து ருத்ரன் மீனாட்சி விழிகளை விரித்து பார்க்க, “மாமா எனக்காக இந்த படிக்கட்டை கட்டினீங்களா?” எனக் கேட்டாள்.

“ஆமாம்டா எப்படியும் அந்த மர ஏணில ஏறுற தைரியம் உனக்கு இருக்காதுன்னு தெரியும். ஆனாலும் உனக்கு ரொம்ப பிடிச்ச இந்த வடக்கு அறைல தான் நீ எப்ப வந்தாலும் தங்கனும்னு பிளான் செஞ்சி கட்டினது தங்கம்” என்றார்.

“தேங்க்யூ சோ மச் மாமா” என நெகிழ்ந்தவளாய் அவரை அணைத்து கொண்டவள், “நிஜமாவே இந்த ரூம்க்கு ஏணிப்படி இல்லாம வேற வழியா வர முடியாதானுலாம் இன்னிக்கு வரும் போது யோசிச்சேன். ஏணி வழியா தான் வரனும்னா கீழேயே தங்கிக்க வேண்டியது தான்னு என்னை நானே தேத்தி வச்சிருந்தேன் மாமா” என்றாள்.

“உனக்கு இந்த அறை எவ்ளோ பிடிக்கும்னு எனக்கு தெரியுமேடா! நீயும் அன்னமும் சின்ன வயசுல இந்த அறைக்காக எவ்ளோ சண்டை போட்டிருக்கீங்க” என சிரித்தார்.

ருத்ரன் ஆதுரமாய் அவர்களின் இந்த பாச பிணைப்பை பார்த்து கொண்டிருந்தார்.

“மாப்பிள்ளை வீட்டுக்காரங்க கோவில்ல வச்சி தான் பொண்ணு பார்க்கலாம்னு சொன்னாங்களாம்! அதான் நம்ம வீட்டு பக்கத்துல இருக்க சிவன் கோவிலுக்கு மாப்பிள்ளைய வர சொல்லிருக்கோம்! சீக்கிரம் ரெடியாகி நல்ல நேரத்துலயே கிளம்புமா தங்கம்” என்றார் முருகன்.

முருகனும் ருத்ரனும் பேசியவாறு கீழே செல்ல, அவளுக்கு பிடித்தமான வடக்கு நோக்கிய அந்த அறைக்குள் செல்ல, மல்லி பூவின் வாசம் அவள் நாசியை தீண்டியது.

தானாய் அவளின் கால்கள் அந்த அறையின் ஜன்னல் அருகே செல்ல, பச்சிலை வாசம், பூக்களின் மணம் என ஏகாந்தமாய் உணர்ந்தாள் அவள்‌.

இந்த அறையினருகில் இருக்கும் பூந்தோட்டத்தின் மகிமையால், காற்றடிக்கும் பொழுதெல்லாம் ஏதேனும் ஒரு வாசம் அவ்வறையை நிரப்பி கொண்டே இருக்கும்‌. இதற்காக தான் இவளும் அன்னமும் இந்த அறைக்காக அடித்து கொள்வார்கள்.

பூக்களின் வாசம் நெஞ்சை குளிர்விக்க, மகிழ்வுடன் பெண் பார்க்கும் வைபவத்திற்கு தயாராக தொடங்கினாள் தங்க மீனாட்சி.


முன் காலை வேளையிலேயே இல்லத்தை அடைந்திருந்த சுந்தரராஜன்‌ நன்றாக உறங்கி எழுந்து, “நான் இப்ப உங்களை பொண்ணு பார்க்க சொன்னேனா?” சமையல் அறையில் இருந்த தனது தாய் செல்வாம்பிகையுடன் சண்டையிட்டு கொண்டிருந்தான்.

“பொண்ணு பார்க்க விருப்பமில்லாதவன் எதுக்கு இப்ப இப்படி ஓடோடி வந்தியாம்?” என அவனை கலாய்த்தான் அவனின் பால்ய சிநேகிதன் தீரன்.

“டேய்” என அவனை முறைத்த சுந்தர்,

“வரலைனா பாமாயில் குடிச்சிருவேன், பால்டாயில் குடிச்சிருவேன்னு பயமுறுத்தி வர வச்சாங்கடா” என அழாத குறையாக நண்பனிடம் சுந்தர் கூற,

“ஆமா நான் செத்தா இவனுக்கு என்ன? அப்ப கூட ஆபிஸ்ல லீவ் தரலைமானு காரணம் சொல்லிட்டு திரிவான்” என நொடித்து கொண்டார் செல்வாம்பிகை.

“அம்மா.. என்ன பேச்சும்மா இது” என அதட்டினான்.

“பின்ன பொண்ணு பார்க்க போறதுக்கு ஏன் இவ்வளோ அக்கப்போர் செஞ்சிட்டு இருக்க” என அவர் குரலெழுப்ப,

“அம்மா, தங்கச்சிக்கு கல்யாணம் செய்யாம எனக்கு செய்றதுல துளியும் விருப்பமில்லை” என்றான்.

“யாருக்கு யாருடா தங்கச்சி” என செல்வாம்பிகை கத்தி விட,

அந்நேரம் உள்ளே வந்த அவனின் தந்தை, “என்ன துரைக்கு வெத்தலை பாக்கு வச்சி கூப்பிட்டா தான் பொண்ணு பார்க்க வருவாராமா?” எனக் கேட்க,

“இல்லப்பா! அப்படிலாம் ஒன்னுமில்லைப்பா! இதோ கிளம்புறேன்ப்பா” என்றவாறு அறைக்குள் புகுந்து கொண்டான். தீரனோ அவரின் குரல் கேட்ட பொழுதே அருகில் இருக்கும் தனது வீட்டிற்கு ஓடி விட்டிருந்தான்.

‘இதுக்கு எதுக்கு அப்படி ஜம்பமா பேசனும்’ மகனுக்கு தந்தையிடம் இருக்கும் இந்த பயத்தினை கண்டு சிரித்து கொண்டார் செல்வாம்பிகை.


மீனாட்சியின் குடும்பத்தினர் அனைவரும் கோவிலில் இருக்க, சுந்தரராஜன் தீரனுடன் தான் பைக்கில் முன்னே செல்வதாய் உரைத்து கோவிலுக்கு வந்திருந்தான்.

கோவிலின் சுற்று பிரகாரத்தில் அமைக்கப்பெற்ற சிமெண்ட் மேடையில் தீரனும் சுந்தரராஜனும் அமர்ந்திருக்க, மீனாட்சியின் வீட்டினர் கோவிலின் உள்ளே மூலஸ்தானத்தில் சுவாமியை தரிசித்து கொண்டிருந்தனர்.

“மச்சான் பொண்ணு வீட்டாளுங்ககிட்ட முன்னாடியே பேசிடலாம்னு வந்தா யாரையுமே காணுமேடா” சுற்றிலும் பார்வையிட்டவாறு கூறினான் ராஜன்.

அங்கு உள்ளே சன்னிதியில் நின்றிருந்த மீனாட்சிக்கு அணிந்திருந்த புடவையும் நகையும் காற்றில்லாது வியர்த்த வண்ணம் நசநசக்க செய்ய, காற்றோத்திற்காக வெளியே வந்தவள், கொடி மரத்தினருகில் வந்து நின்று கொண்டாள்.

அவள் பின்னேயே வந்த அவளின் ஆச்சி சிவகாமி, “தங்கம் கூப்ட கூப்ட கேட்காம நீ பாட்டுக்கு இங்க வந்து நின்னுட்டு என்ன செய்ய! சாமியை பார்க்காம இப்படி பாதிலேயே வர கூடாது! உள்ளார வா” என அவளை அழைத்தார்.

“அய்யோ ஆச்சி! இந்த புடவைல காத்தோட்டம் இல்லாம அங்க எவ்ளோ நேரம் நிக்கிறது! இங்கிருந்தே சாமியை கும்பிட்டுக்கலாம். சாமி ஒன்னும் கோவிச்சிக்க மாட்டாரு” என அலுப்பாய் உரைக்க,

அந்நேரம் சரியாய் இவர்களை பார்த்திருந்தான் ராஜன்.

“ஆச்சிக்கு உடம்பு சரியில்லைன்னு சொல்லிட்டு இங்க என்ன செய்றா இந்த பொண்ணு” என யோசித்தவாறே மீனாட்சியை இவனது கண்கள் ஆராய,

ராஜனை கண்ட மீனாட்சியோ, “அய்யய்யோ! இவர் எங்க இங்கே!” என பதறியவளாய், “வா ஆச்சி உள்ளே போவோம்” என அவரை உள்ளே இழுத்து கொண்டு ஓடினாள்‌.

“என்னடி இது! இவ்வளோ நேரம் கூப்டேன் வரமாட்டேன்னு அடம் பிடிச்சிட்டு இப்ப என்னைய இழுத்துட்டு போற” என புலம்பிக் கொண்டே அவளுடன் சென்றார் அவர்.

“அடிப்பாவி பொய் சொல்லிட்டு ஊர் சுத்த வந்திருக்கா இந்த பொண்ணு! அங்க பிராஜக்ட் ரிலீஸ் சரியான நேரத்துல முடிக்கனுமேனு அவனவன் ராத்திரி பகலா தூங்காம வேலை பார்த்துட்டு இருந்தா” என பல்லை கடித்தவன்,

‘ஆபிஸ்க்கு வரட்டும்! வச்சி செய்றேன்’ என டி எல்லாய் மாறி மனதோடு புலம்பியிருந்தவனின் மூளையில் மின்னல் வெட்ட,

‘ஒரு வேளை நாம பார்க்க வந்த பொண்ணே மீனாட்சியா தான் இருக்குமோ’ என்று தோன்றிய நேரம்,

அக்கோவிலின் வாசலை வந்தடைந்திருந்தனர் சுந்தரேஸ்வரனும் சுந்தரராஜனின் குடும்பத்தினரும்.