சொக்கனின் மீனாள் 13


“எப்படி இருக்க ஈஸ்வரா?” என காவல்துறை அதிகாரி தினேஷ், காவலர் அறையில் இருந்த நாற்காலியில் அமர்ந்திருந்த ஈஸ்வரன் முன்பு மேஜையில் சாய்ந்தவாறு நின்று கொண்டு இலகுவாய் உரையாடினான்.

ஈஸ்வரனின் வக்கீல் திரவியம் மூலம் ஈஸ்வரனுக்கு பல வருடங்களுக்கு முன்பு அறிமுகமாகி இருந்தான் தினேஷ். சரக்கு வாங்குவது மற்றும் கடை சம்பந்தமான நில புலன் பிரச்சனைகளை சமாளிக்கவென ஏற்கனவே தினேஷை சந்தித்து பேசியிருந்ததின் மூலம் நட்பாகி இருந்தனர் இருவரும்.

“நல்லா இருக்கேன்” என்றதும்,

“என்ன புது மாப்பிள்ளை இந்த பக்கம்” எனக் கேட்டு சிரித்திருந்தான் தினேஷ்.

அச்சமயம் இவர்களின் எதிரி நிறுவனமான பிரியா ஹோம் அப்ளையன்ஸஸ் கடையின் உரிமையாளரான இருபத்தைந்து வயது செல்வம் தனது வழக்கறிஞருடன் உள்ளே நுழைந்தான்.

இவர்களை கண்டதும் தினேஷ் தனது இருக்கையில் அமர்ந்து காவலராய் பேச தயாராக, ஈஸ்வரனின் பார்வையோ செல்வத்தை முறைத்து கொண்டிருந்தது.

“ஏன் சார்! நாங்க கஷ்டப்பட்டு போராடி ஒரு இடத்தை பிடிச்சி உட்கார்ந்தா, நீங்க அசால்ட்டா வேவு பார்த்து எங்களை கீழே தள்ளிட்டு மேல வந்துடுவீங்களோ! அது வரைக்கும் எங்க கை என்ன பூ பறிச்சிட்டு இருக்கும்னு நினைச்சீங்களா?” என தனது கையில் இருந்த வெள்ளிக் காப்பினை முறுக்கியவாறு கண்களில் கோபம் மின்ன அமைதியான குரலில் அழுத்தமாய் கேட்டிருந்தான் ஈஸ்வரன்.

இவனை ஏதும் செய்ய முடியா நிலையில் தாங்கள் இருப்பதை நினைத்து மனதினுள் குமைந்து போன செல்வம் ஏதோ கூற வர, “சார் நாம சமாதானம் பேச வந்திருக்கோம்‌. கொஞ்சம் அமைதியா போவோம். அவர் வச்சிருக்க ஆதாரங்கள் எல்லாமே நமக்கு எதிரா இருக்கு! இந்த முரளி வேற நமக்கு எதிரா வாக்குமூலம் கொடுத்திருக்கான்” அவனை அமைதிப்படுத்தினார் அவனின் வழக்கறிஞர் மணிகண்டன்.

முரளியிடம் கடையில் வைத்து பேசி வாக்குமூலம் வாங்கிய ஈஸ்வரன், அவனை வேலையை விட்டு நீக்கியிருந்தான்.

அன்றே தினேஷையும் திரவியத்தையும் அழைத்து, இந்த பிரச்சனைக்கு எடுக்க வேண்டிய சட்டபூர்வ நடவடிக்கைகளை பற்றி ஆலோசித்தான்.

தனது தொழில் ரகசியங்களை வேறொரு நிறுவனத்திற்கு வழங்கியது மற்றும் தரமான பொருட்களை மாற்றி அதற்கு பதிலாக தரமற்ற பொருட்களை வைத்து தங்களது வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை போக்க முயற்சி செய்தது ஆகிய இரண்டிற்கும் சட்டப்படி நடவடிக்கை எடுத்து தீர்வு தர வேண்டும் என்று அவர்களின் ஆலோசனை பேரில் காவல் நிலையத்தில் புகார் அளித்தான்.

முரளியை விசாரித்ததன் மூலம் இதற்கெல்லாம் மூல காரணம் இவர்களின் சமீபத்திய போட்டி நிறுவனமான பிரியா ஹோம் அப்ளையன்ஸஸ் நிறுவனர் செல்வம் என்பதை அறிந்து அவனை காவல் நிலையம் வரவழைத்திருந்தார்கள்.

தொடர்ந்து மீனாட்சி சுந்தரேஸ்வரரின் தயாரிப்புகளான பாத்திரங்களும் சமையல் உபகரணங்களும் மக்களிடம் பேச்சுப்பொருளாக இருந்து தரத்திலும் நற்பெயர் பெற்றிருக்க, நிறுவனத்தை தொடங்கி ஆறே மாதங்களான நிலையில், ஈஸ்வரன் மீது பொறாமை கொண்டு இவர்களின் நற்பெயரை குலைக்கவும், மக்களை தங்களின் புறம் திசை திருப்பவும் இச்செயலை மேற்கொண்டிருந்தான் செல்வம்.

தனது எதிராளியை குறைவாய் மதிப்பிட்டு விட்டதே செல்வம் செய்த முதல் தவறு. இப்பிரச்சனையின் காரணகர்த்தா தான் என ஈஸ்வரன் அறிய நேர்ந்தால் தன்னிடம் வந்து பேசுவான், அவனிடம் பேரம் பேசலாம் என்றே அவன் எண்ணியிருக்க, ஈஸ்வரன் காவல் துறையை நாடுவான் என அவன் எண்ணியிருக்கவில்லை‌.

முதலில் தங்களின் மீது தவறே இல்லை என வாதாடிய செல்வம், ஈஸ்வரன் காண்பித்த சிசிடிவி காணொளி, முரளியின் மொபைல் டிரேசிங் மற்றும் இன்னபிற ஆதாரங்களால் வாயடைத்து போனான்.

ஈஸ்வரனை அணுகி சமரசம் செய்யவில்லை என்றால் செல்வம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்கு நீதிமன்றம் சென்று விடும். அப்படி சென்றால் விசாரணையின் முடிவில் ஆதாரத்தின் அடிப்படையில் இவனுக்கு தண்டனை வழங்கி அவர்களே ஈஸ்வரனுக்கு நஷ்ட ஈடு வழங்க சொல்லுவார்கள். அதோடு இந்த விஷயம் செய்தி தாள்களிலும் வரும் என அவனின் வழக்கறிஞர் உரைக்க, ஈஸ்வரனிடம் தான் சமரசம் பேசியே ஆக வேண்டிய கட்டாயத்துக்கு தன்னை ஈஸ்வரன் தள்ளியிருப்பதை உணர்ந்தான் செல்வம்.

புகார் அளித்த மறுநாளே செல்வம் நஷ்ட ஈடு அளிப்பதாகவும் இவனிடம் சமரசம் பேச ஒத்து கொண்டதாகவும் கூறி ஈஸ்வரனை வரவழைத்திருந்தான் தினேஷ்.

ஈஸ்வரனின் வழக்கறிஞரான திரவியத்திடம் ஆதாரத்தை பெற்ற செல்வத்தின் வழக்கறிஞரான மணிக்கண்டன், அதனை மீண்டுமாய் ஆராய்ந்து, அனைத்தும் தங்களுக்கு பாதகமாய் இருப்பதை உறுதி செய்த பின்னர் சமரச உடன்படிக்கை பற்றி பேசலானார்.

உடன்படிக்கையை இருவரும் ஏற்றப்பின்னர், பேசிய நஷ்டஈட்டை வழங்குவதாகவும், எதிர்காலத்தில் ஈஸ்வரனுக்கு தன்னால் எந்தவித பாதிப்பும் பிரச்சனையும் ஏற்படாது எனவும் உறுதியளித்து கையெழுத்திட்டான் செல்வம்.

அதன் நகலை ஈஸ்வரனிடம் வழங்கிய தினேஷ், “ஞாபகம் இருக்கட்டும் செல்வம்! பின்னாடி ஈஸ்வரனுக்கு ஏற்படுற எந்த பாதிப்புனாலும் பிரச்சனையானாலும் முதல்ல உங்களைத்தான் விசாரிப்போம். அதனால இதுக்கு மேலேயும் ஈஸ்வரனை பழி வாங்கனும்னு கோக்கு மாக்கா எதையும் யோசிக்காம உங்க கம்பெனி வளர்ச்சியை பத்தி யோசிங்க” என மிரட்டலாய் கூறியே அனுப்பி வைத்திருந்தான்.

சென்ற வேலை மனநிறைவாய் முடிந்ததில் மகிழ்வுடன் கடைக்கு சென்ற ஈஸ்வரன், அங்கு தனதறையில் மீனாட்சி அமர்ந்திருப்பதை பார்த்து ஆச்சரியமானவனாய், “என்ன பச்சக்கிளி, அதுக்குள்ள அத்தானை பார்க்கனும்னு ஆசை வந்திருச்சா? ஹாஃப் டேல ஆபிஸ்ல இருந்து வந்திருக்க!” எனச் சிரித்தப்படி கேட்டவாறு அவளருகில் அமர்ந்தான்.

“போலீஸ் ஸ்டேஷன் போனீங்களே, என்னாச்சோ ஏதாச்சோனு பயந்து போய் வேலைல கவனம் வைக்க முடியாம கிளம்பி வந்தா கிண்டல் செய்றீங்க நீங்க” என அவன் தோளில் அடித்தாள்.

“இதெல்லாம் ஜூஜூபி மேட்டர் மீனு! பிசினஸ் செய்றதுனு இறங்கிட்டா இதெல்லாம் வரும். ஹேண்டில் செய்ய பழகிக்கனும்” என்றான்.

“நான் கூட சுந்தர் சொன்னது போல கணேசன் மேல தான் சந்தேகப்பட்டேன். முரளியை நினைச்சு கூட பார்க்கலை. கூடவே கல்பிரிட்டை வச்சிட்டு இருந்திருக்கோம் பாருங்க! இந்த முரளி நம்ம கம்பெனியில சேர்ந்து எத்தனை வருஷம் இருக்கும்?” எனக் கேட்டாள்.

“வருஷமா! ஆறு மாசம் தான் ஆகுது. கணேசன் தண்ணீர் போட்டுட்டு வேலைக்கு வந்ததால வேலையை விட்டு தூக்கினேன். நம்ம நிச்சயத்தன்னைக்கு அந்த வெங்காய கட்டர் மெஷினை லான்ஞ்ச் செய்யலாம்னு முடிவு செஞ்சிருந்தேன். அதை தடுக்க மைல்ட் ஆக்சிடெண்ட் போல பிளான் செஞ்சிருக்காங்க. அதுக்கு பிறகு முரளி நாம தயாரிச்சி வச்சிருக்க அந்த வெங்காயம் கட்டர் மெஷின்ல என்னமோ செய்ற மாதிரி சிசிடிவி வீடியோல பார்த்தேன்‌. டெஸ்டட் ஓகேனு இருக்க மெஷினை ரிப்பேர் ஆக்கிட்டா, நாம லான்ச் அன்னிக்கு யூ டியூப் ஆன்லைன்ல அதை ஓட விடும் போது ஓடாம போகும். அது மக்கள் மத்தியில் நம்ம பேரை கெடுக்கும்னு பிளான் பண்ணி செஞ்சிருக்காங்க. கடவுள் புண்ணியத்துல நம்ம கல்யாண வேலையினால அந்த மெஷின் லான்ஞ்சை தள்ளி போட்டுட்டே போய்ட்டேன். அந்த சிசிடிவி வச்சி பழசெல்லாம் பார்த்து எந்த நேரத்துல என்ன செஞ்சான்னு சந்தேகம் வந்த நாட்களில்லாம் அவனோட மொபைல் நம்பர் டிரேஸ் செஞ்சி யார்கிட்ட என்ன பேசினான்னு தேடி எடுத்து தான் கண்டுபிடிச்சேன்”

“இந்த முரளி பயந்த சுபாவம் உள்ள பையன். என்கிட்ட எப்பவுமே மரியாதையோட தயங்கி தயங்கி தான் பேசுவான்‌. அவனோட சுபாவத்தை பார்த்து தான் இந்த வேலைக்கு செலக்ட் செஞ்சேன். பணம் எல்லாரையும் எப்படி மாத்திடுதுல!” என பெருமூச்செறிந்தவன், வெளியே உணவகத்தில் உணவு உண்ண செல்லலாம் எனக் கூறி அவளை அழைத்து சென்றான்.

அங்கு உணவகத்தில் உணவினை ஆர்டர் செய்து விட்டு அவர்கள் அமர்ந்திருக்க, மீனாட்சி ஓய்வறைக்கு சென்றாள்.

இங்கு மேஜையில் இருந்த அவளின் கைபேசி அலற, ட்ரு காலர் மூலம் அவளது கம்பெனி லேண்ட்லைன் நம்பர் அது என அறிந்து கொண்டவன் அழைப்பை ஏற்றான்.

“ஹலோ” என ஈஸ்வரன் கூறவும்,

“அண்ணி” என மறுபக்கம் ராஜன் அழைக்கவும் சரியாக இருந்தது.

நொடி நேரம் இரண்டு பக்கமும் பலத்த அமைதி!

அழைப்பை துண்டித்து விடு என ராஜனின் மூளை உரைக்க, மனமோ பேசிவிடு என அவனை தத்தளிக்க செய்தது.

சித்தப்பா சித்தியின் மீதான கோபம், தானே சென்று பார்த்தும் ராஜா தன்னிடம் பேசாது திருப்பி அனுப்பியது, தொடர்ந்த பிரச்சனைகள் அனைத்திற்கும் ராஜாவின் குடும்பமே காரணமென எண்ணி மனிதிலுதித்த கோபத்தை ராஜா மீது காண்பித்தது என இவை அனைத்தும் ஒருவித ஈகோவை உருவாக்கி ராஜாவிடம் நேரடியாக பேச விடாமல் இத்தனை நாட்களாய் ஈஸ்வரனை தடுத்திருந்தது. ஆனால் மீனாட்சியிடம் கடந்த காலத்தை மனம் விட்டு பேசியதில் மீண்டுமாய் அதே போல் இணக்கமாய் ராஜாவுடன் இருக்க முடியாதா என்று இவன் மனம் ஏங்கி கொண்டிருந்த நேரத்தில் அவனது குரலையே காதில் கேட்கவும், நெஞ்சுருகி போனான் ஈஸ்வரன்.

அடுத்த நொடியில் தன்னை மீட்டு கொண்டவனாய், “டேய் ராஜா” அவன் மீதான தனது அன்பை எல்லாம் திரட்டி ஈஸ்வரன் உயிர் உருக அழைக்க,

‘அவருக்கு துரோகம் செஞ்சிருப்பேன்னு என்னை சந்தேகப்பட்டவரு தானே அவரு. இப்ப மட்டும் என்ன ராஜாவாம் ராஜா’ உள்ளம் கொந்தளிக்க, இணைப்பை துண்டித்திருந்தான் ராஜன். ஈஸ்வரனின் முகத்தில் வருத்த ரேகைகள்!

ஓய்வறையில் இருந்து வந்தவள் ஈஸ்வரனின் நிலையை கண்டு என்னவென விசாரிக்க, ராஜன் அழைத்திருந்ததை கூறினான் அவன்.

ஈஸ்வரனின் வேதனை முகத்தை காண சகிக்காதவளாய், ராஜனின் வாட்ஸ்சப் எண்ணிற்கு வீடியோ கால் செய்தாள்‌.

எடுக்கலாமா வேண்டாமா என்று பட்டி மன்றம் நடத்தியவன் ஒரு வழியாக இணைப்பில் வர, மீனாட்சியும் சுந்தரேஸ்வரனும் அருகருகே அமர்ந்தவாறு தம்பதி சமேதராய் அவனுக்கு காட்சி அளித்தனர்.

ஒரு நிமிடம் இருவரையும் மாறி மாறி பார்த்து கண்களில் நிறைத்து கொண்டவன், மீனாட்சியின் மீது கண்களை பதித்தவனாய், “சொல்லுங்க அண்ணி” என்றான்.

ராஜாவை மட்டுமே வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்த ஈஸ்வரன், ‘கொஞ்சம் வெயிட் போட்டுருக்கான்! அதென்ன குறுந்தாடி! ஓ ஆன்சைட்ல இருக்கான்ல அதான் இந்த கெட்அப் போல’ என அவனை அளவெடுத்து கொண்டிருந்தான்.

“போலீஸ் ஸ்டேஷன்ல என்னாச்சுனு கேட்க தானே கால் செஞ்சீங்க சுந்தர்! உங்கண்ணனே அதை சொல்லுவார்” எனக் கூறி அருகில் அமர்ந்திருந்த தன்னவனை இடித்து பேசுமாறு கண்களால் சைகை செய்தாள்.

மீனாட்சியின் முன் வெடுக்கென இணைப்பை துண்டிக்க மனம் வராது ராஜன் இருக்க, ஈஸ்வரன் காவல் நிலையத்தில் நடந்தவற்றை விரிவாக கூறினான்.

ஈஸ்வரன் கூறியதில் நிம்மதி அடைந்த ராஜனின் முகம் பொலிவுற அவனையும் மீறி “குட்” என மொழிந்திருந்தான்.

“அண்ணி! இனி பிரச்சனைனு வந்தா நாலா பக்கமும் அலசி ஆராய சொல்லுங்க. ஒருத்தரையே டார்கெட் செஞ்சிட்டு மத்தவங்களை கோட்டை விட்டுட வேண்டாம்னு சொல்லுங்க. சரி அண்ணி யூ கேரி ஆன்” என அவன் வைக்க போக,

“சுந்தர்! சுந்தர்! ஒரு நிமிஷம்” என அவசரமாய் அழைத்த மீனாட்சி,

“எங்க ரிசப்ஷனுக்கு முன்னாடியே நீங்க தான் ஆன்சைட்ல இருந்து வந்துடுவீங்களே! ரிசப்ஷனுக்கு கண்டிப்பாக வரனும்” எனக் கூறியவள், ஈஸ்வரனின் இடையில் இடித்தவாறு கூப்டுங்க என அவன் காதை கடித்தாள்.

“ஆமாடா ராஜா! கண்டிப்பா வரனும்” என்று ஈஸ்வரன் அழைக்க,

“அண்ணி அவர் கூப்பிட்டு ஒன்னும் நான் உங்க நிச்சயத்துக்குலாம் வரலை. ஆணிமாக்காக தான் வந்தேன். அப்ப கூட ஹாஸ்பிட்டல்ல வச்சி திட்ட தானே செஞ்சாரு. இப்ப என்னவாம் புதுசா பாசம்! நீங்க கூப்பிடலைனாலும் ரிசப்ஷனுக்கு வருவேன்! ஆணிமாக்காக வருவேன்! இவருக்காக இல்லனு சொல்லிடுங்க” எனக் கூறி இணைப்பை துண்டித்தான்.

“சும்மா இருக்கிறவரை நேர்ல பார்க்கும் போதெல்லாம் அவரோட அப்பாவை சொல்லி சண்டை இழுத்து திட்டிட்டு இப்ப பேசலைனு பொங்க வேண்டியது” என ராஜனுக்கு பரிந்து வந்து ஈஸ்வரனை மீனாட்சி திட்ட,

“அவன் மட்டும் செஞ்சது சரியோ! நேர்ல பார்க்க வந்தவனை யாருனே தெரியாதுன்னு சொல்லி அனுப்பினான்ல! அந்த கோபமும் சேர்ந்து தான் பார்க்கிறப்பலாம் அவனை திட்டி விட்டேன்” என்றான் ஈஸ்வரன்.

“ஹப்பா அண்ணனும் தம்பியும் ஒருத்தருக்கொருத்தர் சளைச்சவங்க இல்லைனு நல்லா நிரூபிக்கிறீங்க! உங்ககிட்ட மாட்டிக்கிட்டு நான் தான் திண்டாடுறேன்” என சலிப்புடன் கூறி கொண்டாள்.

உணவு பரிமாறப்படவும் மீனாட்சி உணவில் கை வைக்க போக, “இரு! இரு மீனு! என் தம்பி ரொம்ப நாள் கழிச்சி என்கிட்ட அக்கறையா பேசிருக்கான்! ஸ்வீட் சாப்பிடுவோம் முதல்ல” என சாப்பாட்டுடன் வந்த இனிப்பை எடுத்து அவளுக்கு ஊட்டி விட்டவனின் மன நிறைவான மகிழ்வை கண்டு பூரித்தவளுக்கு அவனின் இத்தனை நாள் ஏக்கத்தை தான் தீர்த்ததில் நெகிழ்ச்சியாய் உணர்ந்தாள்.

அன்றைய நாள் இரவில் தங்களது அறையில், “நான் இன்னிக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கேன் பச்சக்கிளி” என்றவாறு மீனாட்சியை கைகளில் தூக்கி தட்டாமாலை சுற்றியவன் மெத்தையில் போட்டான்.

அவனின் மகிழ்வை புன்சிரிப்புடன் இவள் பார்த்திருக்க, “என் வாழ்க்கைல வந்த வசந்தம்டி நீ” என முத்தமிட்டவன், அவளை கொண்டாடி தீர்த்தான்.

பெரிய மண்டபத்தில் சகலவிதமான அலங்காரத்துடன் பெரியளவில் நடந்தது இவர்களின் வரவேற்பு நிகழ்ச்சி.

எவரையும் அழையாது செய்த திருமணத்தினால் மீனாட்சியின் குடும்பத்தினருக்கு ஏற்பட்டிருந்த அதிருப்தியை, திருமண வரவேற்பை நிறைவாய் செய்து நிவர்த்தி செய்திருந்தான் ஈஸ்வரன்.

வரவேற்பு முடிந்ததும் ருத்ரன் சென்னை செல்வதாக திட்டமிட்டிருக்க, அவர் மட்டும் அங்கே தனியாக இனி இருக்க வேண்டுமே என கவலைக் கொண்டாள் மீனாட்சி.

மீனாட்சி மூலம் ருத்ரனின் புது வியாபார முயற்சியான கட்டுமான பொருட்களின் விற்பனைக் கடையை சென்னையில் அமைப்பது பற்றி அறிந்து கொண்ட ஈஸ்வரன், தன்னாலான உதவியை செய்தான்.

ருத்ரன் சென்னை செல்கையில் அவருடன் மீனாட்சியையும் அனுப்பி வைத்தவன், இரு நாட்கள் கழித்து தானும் சென்று ஒரு வாரம் தங்கியிருந்து விட்டே மீனாட்சியை அழைத்து வந்தான்.

ஈஸ்வரன் மீதான மனக்கிலேசம் ருத்ரனுக்கு சற்றாய் குறைந்திருந்த வேளையில், மீனாட்சியை தனது யூ டியூப் காணொளியில் இடம்பெற வைத்து அவரின் பிபியை எகிற வைத்திருந்தான் ஈஸ்வரன்.