சொக்கனின் மீனாள் 10


கண்ணாடி முன் நின்று சட்டையின் பொத்தான்களை போட்டு கொண்டிருந்தான் ஈஸ்வரன். அப்பொழுது தான் குளித்து வந்ததன் சுவடாக ஷாம்பூ வாசமுடன் ஈரமாய் இருந்தன தலை முடிகள்.

“ஈசுப்பா! கிளம்பிட்டீங்களா?” என்றவாறு அறைக்குள் நுழைந்தாள் மீனாட்சி‌.

அவனுக்கு பிடித்த கிளிப்பச்சை மென் பட்டு புடவையில் இருந்தவளை கிறக்கமாய் பார்த்தவன், இடையோடு கையிட்டு தன்னோடு இறுக்கினான்.

“அய்யோ விடுங்க! கீழே மாமா வந்திருக்காங்க மறுவீடு கூட்டிட்டு போக” என அவனின் கைகளை விலக்க பார்க்க, அவளின் இதழை முற்றுகையிட்ட பின்பே விலகி நின்றான்.

அவன் தலைமுடியின் ஈரம் அவளின் முகத்தை நனைத்திருக்க, இதழ் கொண்டு அவன் அதை துடைக்க முயல அவனை தள்ளி விட்டவள், துண்டை எடுத்து அவனது தலையை துடைக்க தொடங்கினாள்.

அவள் புடவையை இழுத்தவாறு கட்டிலில் அவன் அமர்ந்திருக்க, “அய்யோ புடவையை கலைச்சிடாதீங்கப்பா! நானே கட்ட தெரியாம கல்யாணியை கட்டி விட சொன்னேன்” என்றவாறு அவனது தலையை துவட்டி கொண்டிருந்தாள் இவள்.

“உனக்கு கம்ஃபர்டபிளா இல்லைனா சுடிதாரே போட்டிருக்கலாம்ல பச்சக்கிளி” என அவன் கேட்க,

“இல்ல ஆச்சி முக்கியமான நாட்கள்ல புடவை தான் கட்டனும்னு சொல்லுவாங்க! சுடிதாரோட போனா என்னை ஒரு வழி ஆக்கிடுவாங்க” என பயந்தவாறு உரைத்தாள்.

“ஆமா அப்படியே ஆச்சிக்கு பயந்தவ தான் நீ!” என அவன் அவளை கேலி செய்ய,

அதில் புன்னகை புரிந்தவளாய், “ஆச்சி எனக்கு அம்மா மாதிரி! நம்ம கல்யாணம் நடக்கிறதுக்கு ஆச்சி தான் முக்கியமான காரணமே” என அவளின் பிறந்த வீட்டினரை பற்றி பேசியவாறே அவனுக்கு தலையை துவட்டும் போது அவளின் நகம் அவன் கழுத்தில் கோடு போட, ஆஆ என லேசாய் முணங்கியவன், “ஒரு நிமிஷம் இரு” என்றவாறு எழுந்து சென்று நக வெட்டியை எடுத்து வந்தான்.

அவளின் கை பிடித்து டிரெஸ்ஸிங் மேஜையில் அமர வைத்தவன், அவளின் நகத்தினை வெட்ட ஆரம்பித்தான்.

“ம்ப்ச் இது இப்ப ரொம்ப முக்கியமாப்பா! கீழ எல்லாரும் நமக்காக வெய்ட்டிங்” என அவள் அவனை தடுத்தாள்.

தனது சட்டை பொத்தான்களை அவன் கழட்ட தொடங்க, “அய்யோ இப்ப எதுக்கு சட்டையை கழட்டுறீங்க? இதுவே நல்லாயிருக்கே! வேற சட்டை போட போறீங்களா?” எனக் கேட்டாள்.

சட்டையை கழட்டியவன் வெற்று முதுகை அவளிடம் காண்பிக்க, வரி வரியாய் ஆங்காங்கே சிவந்திருந்த தடங்களை பார்த்தவள், “அய்யோ என்னப்பா இப்படி சிவந்திருக்கு! எதுவும் அலர்ஜி ஆகிடுச்சா?” என கேட்டாள்.

‘நேத்து இப்படி இல்லையே’ என தனக்குள்ளாகவே சொல்லி கொண்டவளாய் யோசித்தவளுக்கு இந்த காயங்களின் காரணம் புரிபட, “அச்சச்சோ” என வெட்கத்தில் அவன் முதுகோடு முகத்தை புதைத்து கொள்ள, வாய்விட்டு சிரிந்திருந்தான் அவன்.

“இப்ப நகத்தை வெட்டலாமா பச்சைக்கிளி?” என கேலியாய் வினவியவாறே அவளை முன்னே இழுக்க, குனிந்த தலையை நிமிர்த்தாது கையை நீட்டினாள்‌.

இருவரும் கிளம்பி கீழே செல்ல, மீனாட்சியின் தாய் மாமன் முருகன் அவர்களை மறுவீடு அழைத்து சென்றார்‌.

இருவரையும் மனமகிழ்வுடனேயே வரவேற்றனர் மீனாட்சியின் குடும்பத்தினர்.

ருத்ரன் தன் மகளின் முகப்பொலிவை கனிவாய் நோக்க, ஆச்சியோ தம்பதி சமேதராய் அவர்களின் நெருக்கம் கண்டு அகமகிழ்ந்து போனார்‌.

காலை உணவை முடித்து விட்டு மதிய உணவு நேரம் வரை ருத்ரன் மற்றும் முருகனுடன் அளவளாவி கொண்டிருந்தான் ஈஸ்வரன்.

மதிய உணவை முடித்ததும் தங்களின் திருமணத்தை பற்றி கடையில் பணிபுரிபவர்களிடம் தெரிவிக்க போவதாய் உரைத்து மீனாட்சியை உடன் அழைத்து சென்றான்.

கடையில் பணியாளர்கள் அனைவருக்கும் இனிப்பு கொடுத்து தங்களது திருமணத்தை பிரகடனப்படுத்தினர்.

அடுத்த ஒரு மணி நேரத்தில் இவர்களின் திருமண செய்தி தான் மதுரையின் பரபரப்பு செய்தியாக இருந்தது.

சுந்தரராஜனை வாட்ஸ்சப்பில் அழைத்த தீரன், “டேய் உங்க அண்ணனுக்கு கல்யாணம் ஆகிடுச்சுடா” என அதிர்ச்சியுடன் தெரிவித்தான்.

“தெரியுமே” என்று ராஜன் அமைதியாய் கூற,

“என்னது தெரியுமா! ஏன்டா என்கிட்ட சொல்லலை” உரிமையுடன் அவனிடம் சண்டையிட்டு கொண்டிருந்தான் தீரன்.

ஈஸ்வரன் அடுத்த மூன்று நாட்களுக்கு தேனிலவுக்காக வயநாடு செல்வதற்காக திட்டம் போட்டிருந்ததால், மூன்று நாட்களுக்கு தேவையான காணொளியை தயார் செய்து விட்டு வருவதாய் உரைத்து மீனாட்சியை அவளது பிறந்த வீட்டிற்கு அனுப்பி வைத்தான்.

இவனும் கடையின் பணிகளை முடித்து விட்டு அன்றிரவு பத்து மணிக்கு மேலே தான் வீட்டை வந்தடைந்தான்.

அந்த மணம் வீசும் அறையில் மீனாட்சி ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க, அவளருகில் படுத்தவன் உடல் அலுப்பில் உடனே உறங்கி போனான்.

நள்ளிரவில் தன்னை யாரோ தூக்குவது போல் உணர்ந்த மீனாட்சி, பதறிக் கொண்டு அலற போக, “ஹே மீனு! நான் தான்” என அவள் காதினில் கூறியவாறு அந்த அறையை விட்டு அவளை வெளியே தூக்கி வந்தான்.

“எங்கே தூக்கிட்டு போறீங்க என்னை?” தூக்கம் தொலைத்த பார்வையை செலுத்தி ஆர்வமுடன் அவள் கேட்க,

“வெயிட் அண்ட் சீ பொண்டாட்டி” என்றவன்,

அந்த ஏணி படிக்கட்டுக்கு செல்லும் பாதாளத்தின் தொடக்கத்தில் அவளை அமர்த்தினான்.

வீட்டில் உள்ளோர் அனைவரும் அவரவர் அறையில் உறங்கி கொண்டிருக்க, “அய்யோ இங்க ஏன் என்னை உட்கார வச்சிருக்கீங்க?” என ரகசியக் குரலில் பதட்டத்துடன் வினவினாள்.

இவன் ஏணியின் கைப்பிடித்து பின்னோக்கி ஐந்து படிக்கட்டுகளுக்கு கீழே இறங்கி நிற்க, இவளை அந்த அறையை பார்த்தவாறு தொடக்கத்திலிருந்து மூன்றாம் படிக்கட்டில் அமர வைத்தான். அவள் அமர்ந்திருக்க அவளின் முகத்தருகே தன் முகம் இருப்பது போல் சில படிகள் ஏறி அவளோடு ஒண்டியவாறு நின்றவன், அவள் இடையை வளைத்து கொண்டவனாய், “இப்ப பயமா இருக்கா பச்சக்கிளி?” எனக் கேட்டான்.

அவள் கண்கள் அச்சத்தில் கலங்க ஆமென தலையசைத்தாள்.

“கண்ணை மூடுடா” அவள் காதோரமாய் உரைத்தான்.

அவள் கண்களை மூடியதும், தாயின் அசம்பாவித நினைவுகளே வந்து போக, மூடியிருந்த இமைகளில் உருண்டோடிய கருமணிகள் மூலம் அவளின் அலைப்புறுதலை உணர்ந்தவன், இமைகளில் முத்தமிட்டான்.

மூடிய இமைகளில் அவன் இதழ் பதிந்ததும் கண்ணீர் வெளியேற, அதையும் தன் முத்தத்தாலே அவன் துடைத்தெடுக்க, தொடர்ந்த அவன் முத்தங்களின் பயணத்தில், மெல்ல மெல்ல தாயின் நினைவுகள் பின்னோக்கி செல்ல, அவளின் உணர்வுகள் அவனின் செயல்களை கிரகிக்க தொடங்கியது‌.

இதழில் நெடுநேரம் இளைப்பாறியவன், கழுத்தில் புதைந்து கொள்ள, கண் மூடிய நிலையிலேயே அவனது கழுத்தை கட்டி கொண்டு முகத்தை தோளில் வைத்தவள், தன்னோடு அவனை இறுக்கி கொண்டாள்.

மோன நிலையில் இருவரும் இருக்க, மூடிய அவளின் விழிகளுக்குள் அவளின் அன்னை மகிழ்வுடன் சிரித்தவாறு இருவருக்கும் ஆசி வழங்குவது போன்ற காட்சி வந்து போக, சட்டென கண் திறந்து சுற்றி முற்றி பார்த்தாள்.

“என்னாச்சு மீனு” என அவன் வினவ, அந்த கனவுக்காட்சியை விவரித்தவள், அவனை இழுத்து அருகில் அமர வைத்து புஜங்களை பற்றியவாறு தோளில் சாய்ந்து கொண்டாள்.

முற்றிலுமாய் அச்சம் துறந்து இயல்பாய் அமர்ந்திருந்தவள், “நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்ப்பா!” நெகிழ்ச்சியுடன் உரைத்தாள்.

“என்னோட பயத்தை போக்குறதுக்காக தானே என்னை இங்க கூட்டிட்டு வந்தீங்க! இனி இங்க இந்த படிக்கட்டை பார்க்கும் போது நாம சந்தோஷமா இருந்த இந்த தருணங்களும், அம்மாவோட மகிழ்வான முகமும், அவங்களோட ஆசிர்வாதமும் தான் நினைவுக்கு வரும் ஈஸூப்பா” நெகிழ்வாய் உரைத்து அவன் கன்னத்தில் இதழ் பதித்திருந்தாள்.

சிறிது நேரம் அந்த படிக்கட்டில் அமர்ந்து பேசி சிரித்து, வெட்கப்பட்டு, சீண்டி விளையாடி என வெகு மகிழ்வான மனநிலையுடனேயே அங்கிருந்து சென்றனர் இருவரும்.

மறுநாள் தேன்நிலவுக்காக வயநாடுக்கு சென்றவர்கள் மூன்று நாட்களை இன்பமாய் கழித்து விட்டு வீடு வந்து சேர்ந்தனர்.

அடுத்த வந்த நாட்களில் இவள் ரிசப்ஷனுக்கான வேலையில் ஈடுபட, அவன் அலுவலக பணியில் பிசியாகி இருந்தான்.

அனைவருக்கும் பத்திரிக்கை வைத்து அழைப்பு விடுத்து பெரிய அளவில் பெரிய மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.

ரிசப்ஷன் நெருங்கும் சமயம் பத்திரிகை வைப்பதற்காக மீனாட்சியுடன் சேர்ந்து சுந்தரராஜனின் வீட்டிற்கு சென்றான் சுந்தரேஸ்வரன்.

அங்கு அவ்வீட்டினில் அவனின் சித்தப்பாவும் சித்தியும் அவனை மதியாமல் முகத்தை திருப்பி கொண்டு அமர்ந்திருக்க, அங்கிருந்த மேஜையில் பழத்தட்டுடன் இருந்த பத்திரிகையை வைத்தவன், “நீங்க என்ன தான் என்னை அழிக்கனும்னு நினைச்சாலும், உங்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாம தான் என்னுடைய எதிர்ப்பையும் பலத்தையும் காண்பிச்சிருக்கேன் இதுவரைக்கும். அதனால் தான் என் கல்யாணத்தை நீங்க தான் தடுக்கிறீங்கனு தெரிஞ்சும் உங்களை எதிர்த்து சண்டை போட்டு நிற்காம, யாருக்கும் சொல்லாம கல்யாணம் செஞ்சிக்கிட்டேன். நீங்க எனக்கு எவ்ளோ பெரிய நம்பிக்கை துரோகம் செஞ்சிருந்தாலும் உங்களை என்னிக்கும் என்னால பழி வாங்க முடியாது சித்தப்பா! அதுக்காக தொடர்ந்து ஒரண்டையை இழுத்தீங்கனா கோர்ட்டுக்கு போகவும் தயங்க மாட்டேன்ங்கிறதையும் மனசுல வச்சிக்கோங்க. கண்டிப்பா ரிசப்ஷனுக்கு வந்துடுங்க” என்று உரைத்தவன் மீனாட்சியின் கையை பிடித்தவாறு வெளியேறி இருந்தான்.

“நம்ம மகனுக்கு அமைய வேண்டிய வாழ்க்கையை தட்டிப் பறிச்சதும் இல்லாம என்ன பேச்சு பேசுறான் பார்த்தீங்களா? இவனைலாம் வீட்டுக்குள்ளேயே விட்டிருக்க கூடாது! இவன் நல்லாவா இருப்பான்” என செல்வாம்பிகை சாபமிடுவது போல் பேசவும்,

“ஏய் வாயை மூடிட்டு கிடக்க மாட்டியா நீ! மத்தவங்களுக்கு நீ விடுற சாபம் உன் மகனுக்கு தான் வந்து விடியும். ஏற்கனவே உன் பேச்சை கேட்டு நான் செஞ்சி வச்ச பாவமே நம்ம மகனை பாதிச்சிட கூடாதுனு கோவில் கோவில்லா சுத்திட்டு இருக்கேன்! இதுல கூட கொஞ்சம் பாவத்தை சேர்க்க வழி செய்றியோ ” என்று அதட்டி விட்டு வெளியேறினார்.

மகிழுந்தில் ஈஸ்வரனுடன் பயணித்து கொண்டிருந்த மீனாட்சி, “ஏங்க அவங்க சுந்தரோட அப்பா அம்மா தானே! எங்கே போறோம்னே சொல்லாம நீங்க பாட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டீங்க! உள்ளே போனதும் அந்தம்மா எதுவும் திட்டிடுவாங்களோனு பயமாகி போச்சு எனக்கு” என்றாள்‌.

“நான் இருக்கும் போது என்ன பயம் மீனு?” என்றவன்,

“ஆமா ராஜாக்கிட்ட நீ முன்னாடியே பேசிருக்கியா?” அவளின் இயல்பான சுந்தர் என்ற விளிப்பில் இதை கேட்டிருந்தான்.

“யாரு ராஜா?” கேள்வியாய் அவனை அவள் நோக்க,

“சுந்தர்! சுந்தரராஜன்” என்றான்.

“ஓ அவரை நீங்க ராஜானு தான் கூப்பிடுவீங்களா?” என்று இவள் கேட்க,

“ஆமா இரண்டு பேர்லயுமே சுந்தர் இருக்கிறதால வீட்டுல என்னை ஈஸ்வரன்னும் அவனை ராஜானும் கூப்பிடுவாங்க” என்றான்.

“நாங்க ஆபிஸ்ல சுந்தர்னு தான் கூப்பிடுவோம். ஆமா சுந்தர் உங்க குடும்ப பேரா? உங்க அப்பா சித்தப்பா பேருல கூட சுந்தர்னு வரும்ல?” என்று அவள் தன் போக்கில் பேசி கொண்டே போக,

“ஹே நீ ராஜா ஆபிஸ்லயா வேலை பார்த்த?” என ஆச்சரியமாய் கேட்டான்.

“ஆமாங்க அவர் தான் என்னோட டீம் லீடர். உங்களுக்கு தெரியாதா?” அதே ஆச்சரிய பாவனையுடன் கேட்டாள் அவள்.

“நீ எப்ப என்கிட்ட சொன்ன?” என முறைப்பாய் வினவினான்.

அவனின் முறைப்பில் குரல் உள்ளே போக, “உங்களுக்கு தெரியும்னு நினைச்சேன்” என்றாள்.

அதன் பிறகு அவளிடம் ஏதும் கேட்காமல் அவன் வண்டியை செலுத்த, “இவங்க தான் உங்க எதிரிங்கனு சொல்வீங்களே, அப்புறம் ஏன் இவங்களுக்கு பத்திரிக்கை வச்சீங்க?” எனக் கேட்டாள்.

“ஹ்ம்ம் அது அவருக்கு நான் தரும் மரியாதை. அந்தம்மாவை நான் என்னிக்கும் உறவா நினைச்சது இல்லைனாலும் சித்தப்பாவை அப்பாவா நினைச்சிருக்கேன். ராஜாவை சொந்த தம்பியா நினைச்சி தான் பழகிருக்கேன். அதுவும் இல்லாம சித்தப்பா தான் எனக்கு இந்த வியாபாரத்தை கத்துக் கொடுத்தாரு. ஒரு வகையில் அவர் எனக்கு குரு மாதிரி. குருவா ஒருத்தரை ஏத்துக்கிட்டோம்னா அவங்க மேல தப்பே இருந்தாலும் அவங்களை அவமரியாதை செய்ய கூடாது. அவங்களுக்கான மரியாதையை எப்பவும் கொடுக்கனும்” என்றான்.

“சோ ஸ்வீட் ஈஸூப்பா நீங்க” என அவனின் கன்னம் கிள்ளினாள்.

அவன் அவளின் கையை தட்டி விட, “இப்ப என்ன என் மேல கோபம்?” என அவன் முகத்தை அவள் தன்னை நோக்கி திருப்ப,

“ம்ப்ச் கார் ஓட்டனும்! விடு மீனு” என அவள் கையை எடுத்து விட்டவன் சாலையின் மீது கண்ணை பதிக்கலானான்.

“சரி சரி கோபத்தோட கோபமா இதையும் கேட்டுக்கோங்க! சுந்தர் ஒரு விஷயம் உங்ககிட்ட சொல்ல சொன்னாரு. உங்க சித்தப்பா உங்களுக்கு எந்த தொந்தரவும் செய்ய கூடாதுனு சத்தியம் வாங்கிட்டாராம் சுந்தர்! அதனால் உங்களுக்கு வந்த பிரச்சனைகள் எதுக்குமே அவங்க அப்பா காரணமில்லையாம். வேறு யாரு செஞ்சாங்கனு நீங்க யோசிச்சாலே உங்களுக்கு தெரிஞ்சிடும்னு சொன்னாரு. யாரோ உங்களுக்கு தெரிஞ்சவங்க தான் இதை செய்றதா சுந்தருக்கு சந்தேகம் இருக்கும் போல” என்றவள் கூறி முடிக்க,

ஹ்ம்ம் என கேட்டு கொண்டிருந்தவனின் புருவங்கள் யோசனையில் சுருங்கின.

மேலும் தொடர்ந்தவளாய், “நான் கிட்டதட்ட ஒரு வருஷமா சுந்தர்க்கிட்ட வேலை செஞ்சிருக்கேன்ங்க. அதுல அவரை பார்த்த வரைக்கும் சொல்றேன்‌. அவர் ரொம்ப நல்லவர்! நீங்க சொல்ற மாதிரி மத்தவங்களை அழிக்கிற அளவுக்கு கெட்டவராலாம் அவர் இருக்க வாய்ப்பில்லை” என்று தன் எண்ணங்களை உரைக்க,

“ஓ என் தம்பியை பத்தி என்னை விட உனக்கு நல்லா தெரிஞ்சிடுச்சோ! உனக்கு அவன் லீட் மட்டும் தான்! ஆனா எனக்கு அவன் தம்பி! எனக்கு நம்பிக்கை துரோகம் செஞ்ச தம்பி! இனி ஒருதரம் அந்த குடும்பத்துக்கு சப்போர்ட் செஞ்சிட்டு என்கிட்ட பேசாத! அந்த குடும்பத்தினால நாங்க அனுபவிச்ச வலியும் வேதனையும் எங்களுக்கு தான் தெரியும்” கோபமாய் பொரிந்திருந்தான்.

அவனின் கோப வார்த்தைகளில் கண்களில் நீர் தேங்க, அமைதியாய் மறுபுறம் திரும்பி கொண்டாள் மீனாட்சி.

அவளை வீட்டினில் இறக்கி விட்டவன், கடைக்கு சென்று விட்டான். ராஜன் கூறியதாய் மீனாட்சி கூறியவற்றை பற்றி சிந்தித்தவன், இவன் கடையில் இல்லாத நேரம் கணேசன் என்றைக்காவது வந்தானா என பணியாளர்களை அழைத்து விசாரித்தான்.

கொரியர் பிரச்சனை வந்த நாளில் இருந்து இன்று வரைக்குமான சிசிடிவி புட்டேஜ்ஜை பார்வையிட்டான். அதில் ஒரு துப்பு கிடைக்க, அந்த வீடியோவை மட்டும் தனியே எடுத்து சேமித்து வைத்தான்.

அன்றைக்கான பணிகளை முடித்து அவன் வீட்டிற்கு வரும் போது இரவு பதினொரு மணி ஆகியிருந்தது.

அவனுக்கு உணவு பரிமாறுவதற்காக அவள் தான் விழித்து கொண்டு அமர்ந்திருந்தாள்.

அவன் கேட்ட எந்த கேள்விக்கும் பதில் அளிக்காது கோபமாய் அவனுக்கு உணவினை பரிமாறினாள்.

இரவு படுக்கையில் படுத்ததும் அவளை அணைக்க முயல, அவன் முகத்தை பார்க்காது மறுபக்கம் திரும்பி படுத்து கொண்டாள்.

“ஏன் என் பச்சக்கிளி சிகப்புக்கிளி மாதிரி முறுக்கிக்கிட்டு திரியுது” என ஒருக்களித்து படுத்திருந்தவளை பின்னோடு அணைத்து அவன் கேட்க,

“நான் தான் உங்க குடும்பத்துல ஒருத்தி கிடையாதே! நான் பச்சையா இருந்தா உங்களுக்கு என்ன? சிகப்பாக இருந்தா உங்களுக்கு என்ன?” எனக் கோபமாய் கேட்டாள்.

“நான் எப்படா அப்படி சொன்னேன்” என அவளை தன்னை நோக்கி அவன் திருப்ப,

“அந்த குடும்பத்தினால நாங்க அனுபவிச்ச வலியும் வேதனையும் எங்களுக்கு தான் தெரியும்னு சொன்னீங்களே! குடும்பத்துல ஒருத்தியாக நினைச்சிருந்தா அந்த வலியையும் வேதனையையும் என்கிட்ட ஷேர் செஞ்சிருப்பீங்க தானே” கோபமாய் கேட்க நினைத்து அழுகையில் முடித்திருந்தாள்.

“ஹே உன்கிட்ட சொல்ல கூடாதுனுலாம் நினைக்கலைமா! நமக்கான நேரத்துல சந்தோஷமா பேசிட்டு இருக்கும் போது இது எதுக்குனு தான் சொல்லலை! கல்யாணத்துக்கு முன்னாடியே எங்க குடும்பத்தை பத்தி நானே குறையா பேசுற மாதிரி வேற இருக்கும்னு‌ தோணுச்சு” என்றவன் அவளின் கண்ணீரை துடைத்து தனது மார்பில் சாய்த்து கொண்டு தலையை வருடியவன், இரு குடும்பத்தினருக்குள் இருக்கும் பகையை பற்றி கூறலானான்.