செந்நீரில் உறையும் மதங்கி-1

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

செந்நீரில் உறையும் மதங்கி-

அத்தியாயம்-1

     பரப்பரப்புக்கு பஞ்சமில்லாத சென்னை மாநகரத்தில் அந்த கட்டிடம் இருந்தது. அத்தெருவிலிருந்த நாய்கள், சோம்பல் முறித்து ஜாகிங் செல்லும் மனிதரில் சிலரை குலைத்து விட்டுப் மீண்டும் படுத்துக்கொண்டது.

   அந்த கட்டிடத்தில் கீழ் தளத்தில் குடோனும், மேற்தளத்தில் நதியா-விஜய் என்ற தம்பதியும் குடியிருந்தனர். அதற்கு மேல் மொட்டை மாடி.

    அந்த குடோன் வாசலில் ஒர் முதியவள் வாசல் தெளித்து விட்டு ஐந்து புள்ளி கோலமிட்டு முடித்து நிமிர்ந்தார் ஈஸ்வரி.

    முதலில் வாசலில் பெருக்கி தெளித்து கோலமிட்டு, பிறகு கீழ் தளம் குடோனை பெருக்கி, குப்பையை ஓரமாய் குவித்து வைத்தார்.

     இன்று ஐந்தாம் தேதி மாடியில் இருக்கும் வீட்டில் முறைவாசல் செய்ததற்கு பணத்தை வாங்க வேண்டும். முதலில் மாடியை பெருக்கி விட்டு கழுவ வேண்டும் என்று ஏறினார்.

      மாடியில் இருந்த குழாயில் தண்ணீர் பைப்பை மாட்டி பெருக்கி விட்டு அலசினார். அவர் வயதுக்கு இது போன்ற வேலை தொடர்ச்சியாய் செய்தால் கடினம் தான். இருந்தும் அடுத்த வாரம் பேரன் பிறந்த நாளுக்கு ஈன்றதை வைத்து புதுதுணிமணி வாங்கவே ஆசைக் கொண்டார்.

   கழுவி சுத்தம் செய்து முடிக்க ஏழரை ஆனது.

    எப்பொழுதும் ஆறுமணிக்கே வேலைக்கு செல்லும் விஜயிற்காக நதியா சமைப்பாள்.

     இன்று எழுந்துக் கொள்ள வில்லையா? என்று யோசித்தவாறு முறைவாசல் அம்மா ஈஸ்வரி நதியா வீட்டருகே வந்து தட்டினார்.
  
   அவர்கள் அலுவலகம் செல்வார்களோ செல்லவில்லையோ அது அவர்களுக்கு தேவையற்றது. இன்று ஐந்தாம் தேதி. அதனால் முறைவாசல் பணத்தை வாங்கி விட்டால் பேரனுக்கு அடுத்த வாரம் பிறந்த நாள் வருவதால் புது ஆடை வாங்கவே, மற்றுமொருமுறை கதவை தட்டினார்.

    இரண்டு முறைக்கும் மேலாக கதவை தட்ட தயங்கினார். ஆனால் பேரனுக்கு புது ஆடை வாங்க பணம் வேண்டுமே என்று இதுவரை அழுத்தாத அழைப்பு மணியை அடித்தார்.

   அப்பொழுதும் கதவு திறக்காமல் போகவே, தன் ஜாக்கெட்டிலில் இருந்த பர்ஸை திறந்து அதில் சாதரண நோக்கியா அலைப்பேசியினை எடுத்து நதியா கணவன் விஜய்-கு அழைத்தார் ஈஸ்வரி.

    “தம்பி ரொம்ப நேரமா கதவு பெல் அடிக்கிறேன். இன்னிக்கு முறைவாசல் பணம் கொடுத்தா வாங்கிட்டு போயிடுவேன். நேரமாகுது” என்று ஈஸ்வரி பேசினார்.

   “அம்மா… நான் ஓர்க் விஷயமா பெங்களூர் வந்துட்டேன். சமைக்கிற வேலையில்லைனு தூங்கிட்டு இருப்பா. கொஞ்சம் காலிங் பெல் தொடர்ச்சியா அடிங்கமா. திறந்திடுவா. அம்மா.. நான் ஆபிஸ் வந்துட்டேன் வைக்கிறேன்.” என்றதும் ஈஸ்வரி அணைத்து விட்டு வீட்டின் அழைப்புமணி தொடர்ச்சியாய் ஒலிக்க விட்டார்.

   ஆனாலும் கதவு திறக்கவில்லை என்றதும் இம்முறை நதியாவுக்கு போன் போட்டார்.

    அறைக்குள் மணி அடிப்பது வெளியே கேட்டது. நதியா அசைவதாகவோ அறைக்கதவு திறந்து வருவதாகவோ ஒரு அறிகுறியும் இல்லை.

     அரைமணி நேரம் போக அலுத்து கொண்டு கீழே குடோன் குப்பையை எடுக்க வந்த பையனை அழைத்து “தம்பி இங்க வா” என்று கூப்பிட்டு “இந்த கதவு வழியா அந்தம்மா எழுப்புப்பா. பேரனுக்கு துணிமணி வாங்கணும். அவங்களும் கீழ உங்க குடோன் ஓனரும் காசு கொடுத்தா வாங்கிட்டு பத்து மணிக்கு துணிக்கடை துறந்ததும் போகணும். தலைச்சறவா இருக்கு” என்று அலுத்துக் கொண்டார்.

     குடோனில் வேலை பார்க்கும் அந்த இளைஞனோ, ஒரு ஒட்டுப் போட்ட பாதி உடைந்த சேரை வைத்து, அறைக்கு மேலே இருந்த ஜன்னல் வழியே எட்டி பார்க்க, உள்ளே உறைந்த நிலையில் இரத்தத்தின் நடுவே, மெத்தையில் இறந்த நிலையில் எங்கோ வெறித்த கண்களில் நதியா செத்து கிடந்தாள்.

    “ஆயா.. ஆயா அவங்க செத்து கிடக்கறாங்க.” என்று நெஞ்சு பதபதப்பில் குடோன் குப்பையை அள்ள வந்த இளைஞன் வேகமாக கூறி முடித்தான்.

    “ஆத்தி.. இதென்ன?” என்று விஜயிற்கு கால் செய்ய அவனோ சைலண்டில் போட்டிருக்க ஈஸ்வரி பதறி முடிக்கவும் “ஆயா.. முதல்ல போலீஸ்கு போனை போடு. இனி நாம இருந்தா அம்புட்டு தான்” என்று வேகமாக கீழே இறங்க, அதற்குள் குடோனின் ஓனர் கணபதி வந்து சேர்ந்தார்.

  அவர் மூலமாக போலீஸிற்கு செய்தி போக, அடுத்தடுத்த நொடிகள் அங்கே மூன்று காவலர்கள் வந்திறங்கினார்கள்.

     கதவு உடைத்து மற்ற யாரையும் உள்ளே விடாமல் காவலர்கள் தடுத்தனர். அந்த வீட்டினையும் குடோன் இருக்கும் வழியையும் தடைச் செய்தனர். அந்த தெருவை முடக்கி, போவோர் வருவோரை வேறு பாதையில் அனுப்பினார்கள்.

     பாரன்சிக் ஆட்கள் வந்து தடயம் கிடைக்கின்றதா என்று ஆராயத் துவங்கினார்கள்.

      “என் ஏட்டு… சாருக்கு சொல்லிட்டியா?” என்றான் ரமேஷ்.

    “சொல்லிட்டேன் யா. சார் வந்துட்டு இருக்கார். இது வேற தர்ஷன் சார் ஏரியா உடனே வராமலா” என்றான் ரஹீம்.

       ரமேஷ் என்பவனோ எதையும் தொடாமல் வீட்டை நோட்டமிட்டான்.

       அதற்குள் வெளியே ரஹீம் சில பல விவரங்களை ஈஸ்வரி அம்மாவிடமும், குடோன் பையன் ரோகித் என்பவனும், குடோனின் ஒனர் கணபதி என்பவரும் வரிசையாய் அமர்ந்து கேட்டதற்கு பதில் கொடுத்திருக்க அதை ஒரு ரப் காபி எடுத்திருந்தான்.

     போலீஸ் ஜீப்பின் சைரன் சத்தம் அந்த தெருவில் அசரீரியாக ஒலித்தது.

     அதிலிருந்து மின்னலுக்கு பிறந்தவனாக வேகமெடுத்து அக்கட்டிடத்தில் நுழைந்தான் தர்ஷன்.

     “இறந்தது யாரு? யாரு முதல்ல பார்த்து போலீஸ்க்கு இன்பார்ம் பண்ணியது? வேற ஏதாவது தகவல் தெரிந்தததா?” என்று அசுர வேகத்தில் கேள்வி துளைத்து வந்தான் அந்த ஏரியாவின் போலீஸ் ஆபீஸராக கம்பீரமே தன்னியல்பாக கொண்ட காவல் அதிகாரி தர்ஷன்.

     “சார் இந்த மூன்று பேரு தான்” என்று ரபீக் சுட்டிக்காட்ட, அவர்களை தன் லேசர் கண்களில் இரண்டு நிமிடம் அளந்தான்.

    பின்னர் சம்பவம் நடந்திருக்கும் வீட்டிற்குள் நுழைந்தான். கையில் கிளவுஸ் அணிந்து நடந்து சென்றான்.

   கதவை காவலர்கள் உடைத்திருப்பது கவனித்தான். ஹாலின் வலது பக்கம் அறையிருக்க, நடந்தான். நடுவில் யூ வடிவ நுழைவு சற்று நடப்பாதையாகவும் வலது பக்கத்தில் பாத்ரூம் இருந்தது.

   அதையும் தாண்டி அறையிருக்க, அங்கே அலங்கோலமாக செந்நீரில் உறைந்த வெள்ளை ரோஜாவாக நதியா இறந்து கிடந்தாள்.

   கழுத்தில் வெட்டு பட்டு குருதி வெளியேறி கண்கள் இரண்டும் மின்விசிறியை பார்த்த வண்ணம் மேலேழும்பியிருந்தது.

   உடைகள் கிழியவில்லை. ஆனால் தொடை வரை ஏற்றம் பெற்றிருந்தது.

   அருகே ஏதேனும் பொருட்கள் சிதறியிருந்ததா என்று நோட்டமிட்டவனுக்கு அப்படியொன்றும் தென்படவில்லை.
  
        ஆங்கரில் இரண்டு சட்டை தொங்கியிருந்தது. மற்றவை எல்லாம் கப்போர்டு போட்டு பூட்டியிருந்தது.
 
    பெட்ரூமில் கட்டிலுக்கு நேராக தம்பதியராக நதியா மற்றும் அவள் கணவன் விஜய் ஆனந்தமாய் புகைப்படத்தில் காட்சி அளித்தனர்.

     பெரும்பாலும் ஒவ்வொரு அறைக்கும் ஒரு ஜன்னல் வசதி கொண்டிருந்தது.

   அனைத்தும் ஸ்லைடிங் டோராக காட்சியளித்தது.

    “வேற அறையில் பீரோ உடைச்சி ஏதாவது நகை பணம் மிஸ்ஸாகியிருக்கா?” என்று கேட்டான் தர்ஷன்.

    “இல்லை சார். அப்படியொன்னும் பெரிசா தெரியலை. எல்லாமே வீட்டாட்கள் தவிர யாரும் கைவரிசை காட்டிய மாதிரி தெரியலை. பொண்ணு தான் கற்பழிக்கப்பட்டிருக்கா” என்றான் ரமேஷ்.

      “ம்ம்..” என்றவன் அடுத்து ஹாலுக்கே வந்து இடது பக்கமிருந்த அறைக்கு வந்தான். ரமேஷ் கூறியது போல அடுக்கி வைத்த பொருட்களாய் கொலுவில் வைத்தது போல அடுக்கி இருந்தது.

     அங்கும் விஜய் நதியா புகைப்படங்கள் காட்சியளித்தது.

      அடுத்து கிச்சன் வந்தான் பாத்திரங்கள் விளக்காமல் சிங்கிலேயே இருந்தது. அநேகமாக வீட்டுக்கு வேலையாட்கள் வந்து கழுவுவார்களோ என்று யூகித்தான்.
  
    ஆரோ அருகே பாதி குடித்த நீர், சிங் அருகே குப்பை தொட்டி, பால் கவர்களை சேகரித்து வைத்த கவர்கள் அப்படியே போட்டிருப்பாளோ என்னவோ சிதறியிருந்தது.

   அநேகமாக வேலைக்கார பெண்மணி வீட்டை பெருக்கி சுத்தம் செய்யும் போது இதையும் அடுக்கி வைப்பார்கள். மற்றபடி வரிசையாய் டபர்வேர் பாட்டில்கள். அதில் மளிகை சாமன்களின் பெயர் பட்டியலை ஓட்டி எடுக்க தோதுவாக இருந்தது.

    துடப்பம் வழியில் கிடந்தது. ஹாலில் ஒரு ஜன்னல் திறந்து மூடும் விதமாக உள்ளுக்குள் இருந்தது. அவ்வழியே வெண்டிலேட்டர் பகுதியும் இருந்தது.

   ஆனால் மேலே இரும்பு கிரில் போட்டு முடியும் இருந்தது.

   கதவு உள்பக்கம் தாழிட்டு இருந்ததால் எப்படியும் உள்ளே வரும் வழி இதுவாக தான் இருந்திருக்கும். கொலை செய்தவன் இந்த வழியில் வந்து சென்றிருக்க வேண்டும் என்று மாடிக்கு விரைந்தான். ஆனால் மாடியில் தண்ணீர் ஊற்றி கழுவியிருக்க யோசனை முடிச்சோடு வந்தான்.

     வெண்டிலேட்டரில் இருந்து க்ரில் கம்பியில் குதிக்கும் அளவிற்கு இருந்தது.

    அதில் இறங்கி கம்பி ஏதேனும் உடைந்திருக்கின்றதா என்று பார்வையிட்டான்.

   அனைத்தும் தரவாக பின்னி இருந்தது.

     தர்ஷன் யோசனை முடிச்சோடு கீழே வந்தான்.

  அதற்குள் பாரன்சிக் ஆட்களும் தடயம் தேடி ஓய்ந்து நின்றார்கள்.

     “சார் ஆம்புலன்ஸ் வந்துடுச்சு. பாடியை எடுத்துட்டு போய் போஸ்ட்மார்ட்டம் பண்ணணும்.” என்றதும் தர்ஷன் நெற்றியை கீறி “இந்த பொண்ணோட கணவர் எங்க?” என்றான்.
  
    “சார் இப்ப அவர் ஊர்ல இல்லையாம். அந்த ஆயாம்மா தான் சொன்னாங்க.” என்றதும் அவர்களை நோக்கி நடந்தான் தர்ஷன்.

-செந்நீர் உறையும்.
-பிரவீணா தங்கராஜ்.

ஹாய்….. பூ பூக்கும் ஓசை மற்றும் ஜீவித்தேன் உந்தன் கவிதையில் காதல் கதை வாசித்திருப்பிங்க. இது க்ரைம் குறுநாவல். உங்கள் ஆதரவை எதிர்நோக்கி.

நன்றி