சலனமருவம் – 14

கயல்விழி அப்போது ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த நேரம். பெரியப்பா பெண்கள் இருவரும் திருமணம் முடிந்து சொன்றிருக்க, வீட்டில் இருந்த ஐந்து அண்ணன்மாருக்கு இடையே ஒரே தங்கையாக இவள் தான் இருந்தாள்.
தாய் தந்தையை விட பெரியப்பா மற்றும் சித்தப்பாவின் செல்ல மகள் அவள். அதே போல உடன் பிறந்த அண்ணனான காளிதாஸைத் தவிர உடன்பிறவா சகோதரர் எல்லாம் குட்டித் தங்கையிடம் மிகுந்த பிரியமாகவே இருந்தார்கள்.

“தாஸ் அண்ணனும் நல்லாத்தான் இருந்தான். சின்ன வயசுல எல்லாம், நான் தான் அப்பா செல்லம், நீ கிடையாதுன்னு நான் சொல்லுவேன்.. நீ அப்பா செல்லம்னா நான் அம்மா செல்லம்ன்னு எல்லா வீட்டுலயும் வர்ற மாதிரி சாதாரண போட்டி தான் எங்களுக்கு இடையில இருந்தது. அப்படித் தான் நான் நினைச்சிட்டு இருந்தேன்.

ஆனால் அவன் என்னை அவனுக்குப் போட்டியா நினைச்சு இருக்கான். அதே சமயம் தீபா மேல ரொம்ப பிரியமா இருந்திருக்கான். அடிக்கடி அவங்க வீட்டுக்கு போயிட்டு வருவான். வரும் போதெல்லாம், அவ சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டாலும் எப்படி படிக்கிறா தெரியுமான்னு எங்க அம்மா கிட்ட சொல்லுவான். குறிப்பா நான் இருக்கும் போது தான் அவளைப் பற்றி பேசுவான். அவளும் தங்கச்சி தானே, பேசிட்டு போறான்னு நினைப்பேன்.

ஆனால் நான் ஏஜ் அட்டென்ட் பண்ண பிறகு அது ரொம்பவே மாறிப் போச்சு. படிப்பைத் தாண்டி கொஞ்சம் கொஞ்சமா அவ அழகு, திறமைன்னு பேச ஆரம்பிச்சான். எனக்கு எதுவும் புரியலை. அம்மா எதுவும் சொல்ல மாட்டாங்க. ஆனால் பெரியம்மா சத்தம் போடுவாங்க. வயசுப் பிள்ளைய, தங்கச்சி முறைல இருக்கிறவளை இப்படி எல்லாம் பேசக் கூடாதுன்னு ஒரு நாள் நல்லா திட்டிட்டாங்க. நான் நைன்ந்த் முடிச்ச சம்மர் ஹாலிடேஸ் அது. அவன் அப்போ காலேஜ் ஃபர்ஸ்ட் இயர் படிச்சிட்டு இருந்தான். தீபா டென்த் படிச்சிட்டு அடுத்து எந்த க்ரூப் எடுக்கலாம்னு யோசனைல இருந்தா.

நான் எப்போதும் ஃபர்ஸ்ட் ரேங்க் தான் வாங்குவேன். ரொம்ப சில நேரம் செகண்ட் ரேங்க் போயிடும்.அண்ணா கொஞ்சம் சுமார் தான். அதை வச்சு வீட்டில நிறைய திட்டு வாங்கி இருக்கான். ஃப்ரண்ட்ஸ்னு கூட ஊர் சுத்திப் படிக்காமல் போறன்னு அப்பா திட்டுவாங்க.

தீபா என்னை விடவும் நல்லா படிப்பா. டென்த்ல நானூத்தி தொன்னூறு மார்க் வாங்கி இருந்தா. ஆனா, ப்ளஸ் ஒன்ல காமர்ஸ் க்ரூப் எடுத்துக்கிறேன்னு சொன்னா. குடும்ப சூழ்நிலையால அவளால டாக்டர் என்ஜினியர்னு நினைக்க முடியலை போல. அன்னைக்கு நான் அப்படித் தான் நினைச்சேன்…” பேசிக்கொண்டே இருந்த கயல்விழி நிறுத்தி விட்டாள். முகத்தில் பல யோசனை ரேகைகள் ஓடின.

“அப்போ நினைச்சேன்னா.. இப்போ அதைப் பத்தி உன் அபிப்பிராயம் மாறி இருக்கா?” போட்டு வாங்கினான் குரு.

“ஹூம்.. நினைக்கவே நல்லா இல்லை.. ஆனாலும் நினைக்காமல் இருக்க முடியலை. ஒரு வேளை அவளுக்கு அது மாதிரி ஆசை இருந்து, அந்த ஆசையைச் சொல்லாமல் இருந்தால் அவங்களே நிறைவேத்தி வைப்பாங்கன்னு சொல்லாமல் இருந்துட்டா போல..” இன்னும் எதையோ அவள் சொல்லாமல் விடுவது தெரிந்தது.

“முழுசா சொல்லிடு.. பரவாயில்லை..” என்று மனைவியை ஊக்கப் படுத்தினான் குருபிரசாத்.

“அவளுக்கு அப்படி ஒரு ஐடியாவ கொடுத்ததே எங்க அண்ணன் தானோன்னு எனக்கு மட்டும் இல்லாமல் எங்க பெரியம்மாக்கும் பெரியப்பாக்கும் கூட சந்தேகம் இருக்கு” என்றாள் கசப்பான குரலில்.

“அது ஒன்னும் தப்பில்லையே கயல். நல்லா படிக்கிற பொண்ணு, பிரமாதமா மார்க் வாங்கி இருக்கா. உங்க வீட்டுல படிக்க வைக்கிறேன்னு உறுதி கொடுத்து இருக்காங்க. நீங்களும் அவ ஒருத்திய படிக்க வைக்கிறதால எந்த விதத்திலும் குறைஞ்சு போகப் போறதில்லை. அப்படி இருக்கிறப்போ உங்க பெரியப்பாவே இந்த யோசனையைச் சொல்லி இருக்கலாமே. நீ ஏன் காளிதாஸ் மேல சந்தேகப் படற?” சிறு பெண், அப்போது என்ன நடந்தது என்று தெளிவாகத் தெரியாமல் ஏதோ தவறாகப் புரிந்து கொண்டு இருக்கலாம் என்பது அவனது அபிப்பிராயம்.

“ம்ச்.. அப்படித் தான் நானும் நினைச்சேன். என்ன இருந்தாலும் அவ எனக்கு அக்கா தானே. அவ டாக்டர் ஆகணும்ன்னு கூட ஆசைப்பட்டேன். அவ என்னடான்னா ப்ளஸ் டூ முடிச்சிட்டு அண்ணன் படிச்ச அதே காலேஜ்ல தான் இன்ஜினியரிங் படிப்பேன்னு சொன்னா. அப்போ தான் அவளுக்கு சேஃப்டி இருக்கும்னு மல்லிகா பெரியம்மா ஜால்ரா போட்டாங்க.

பிஜி பண்ணும் போதும் அதே கதை தான். யுஜில வந்த ப்ளேஸ்மென்ட் எல்லாம் விட்டு பிஜி பண்ணியே ஆகணும்ன்னு அடம். அண்ணன் அப்போ புனேல எம்பிஏ பண்ணிட்டு இருந்தாங்க. இந்தம்மா மும்பைல பிஜிக்கு போனாங்க” அவளது குரலில் ஏகத்துக்கும் எரிச்சல்.

“ஹேய் நீ என்ன ரொம்ப பொறாமைல பொங்கற மாதிரி இருக்கு. அவளுக்கு அண்ணன் இல்லையேன்னு உங்க அண்ணன் கூட ஒட்டுதலா இருந்திருக்கா.. இது ஒரு தப்பா? நீ அவங்களைப் பார்க்கிற‌ விதத்தை மாத்து. எல்லாம் சரியா போயிடும்” அவன் சொன்னது அவனுக்கே அபத்தமாகத் தோன்றினாலும் மனைவியைத் தெளிவாக்கும் கடமைக்காகப் பேசினான். ஆனால் கயல்விழி அவனைச் சரியாகப் பிடித்தாள்.

“ஏங்க, இது உங்களுக்கே அபத்தமா தெரியல.. யார் இருக்காங்க இல்லைன்னு பார்க்காமல்,அவங்க இரண்டு பேரும் நடந்துக்கிற விதம் அப்படியே சகோதர பாசம் மாதிரியா இருக்கு. இதுல அவங்க மெயில் கான்வோ, எஸ்எம்எஸ், வாட்ஸ்அப் மெசேஜ் எல்லாம் பார்த்தா.. உவ்வே.. வாந்தி தான் வரும். அண்ணன் தங்கச்சியாம்.. இவங்க இரண்டு பேரும் பாசமலர் சிவாஜியும் சாவித்திரியும்.. போவீங்களா?

இவங்க விஷயம் வேற மாதிரின்னு அரசல் புரசலா வீட்டில பல பேருக்குத் தெரிஞ்சு போச்சு. அம்மா அப்பா தான் பாக்கி.. இதுல அவளைக் கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி எங்க வீட்டுலயே நிறைய மாப்பிள்ளை பார்த்தாங்க. அதையெல்லாம் இது நொட்டை அது நொள்ளைனு சொல்லி எங்க அண்ணனே தட்டிக் கழிச்சிட்டான்.

அவ என்னடான்னா வேலைல எதையோ சாதிக்கணும்னு கலர் கலராக ரீல் விட்டா. ஒரு வேளை என் கல்யாணத்துக்கு வெயிட் பண்ணாங்களோன்னு எனக்கு ஒரு சந்தேகம்.. இப்போ என்ன செய்யக் காத்திருக்காங்களோ.. ஆண்டவனுக்கே வெளிச்சம்”

அவளது குரலில் என்ன இருந்தது என்று குருபிரசாத்தால் இனம் காண முடியவில்லை. குரு என்ன பேச என்று யோசித்த வேளையில் கயல்விழியே தொடர்ந்தாள்.

“நீங்க ஏதோ புத்திசாலின்னு எல்லாரும் சொல்றாங்களே.. விஷயத்தை சொன்னால் நீங்க ஏதாவது பண்ணுவீங்கன்னு பார்த்தால், நீங்க என்னடான்னா தத்தியா இருக்கீங்க” என்று அவனையே வாரிவிட்டாள் அவனது தர்மபத்தினி.

“அடிப்பாவி! நான் ஏதோ நம்ம பொண்டாட்டி ஹனிமூன்ல வந்தும் கூட அவங்களை நினைச்சு பயந்து, கவலைப் பட்டு என்னை மறந்து போறாளேன்னு பேசினால் நீ என்னையே கலாய்க்கிறியா?” என்றவன்,

“இது மட்டும் தான் உன் மனசுக்குள்ள இருக்கிற மாதிரி எனக்குத் தெரியலையே.. இன்னும் முக்கியமான விஷயத்துக்கே நீ வரலை. ஏதோ ஒரு பெரிய விஷயத்தை நீ மறைக்கிறாப்பில தெரியுதே.. அதை மட்டும் விடுவானேன்.. அதையும் சொல்லிடு.. மொத்தமா ரூம் போட்டு யோசிச்சு சொலுஷன் கண்டு பிடிச்சிடலாம்” என்று அவளை மேலே பேசத் தூண்டினான்.

மொத்தமாகப் தெரிந்து கொள்வது நல்லது என்பது அவனது அபிப்பிராயம். ஆனால் அவன் மனைவியோ அடுத்து பேச முடியாமல் அழ ஆரம்பித்தாள். அவளது முந்தைய அழுகைகளுக்கும் இன்றைய அழுகைக்கும் இடையே ஒரு பெரிய மாற்றம் இருந்தது. முன்பெல்லாம் அவனைத் தள்ளி நிறுத்தி வைக்க வேண்டும் என்றே கங்கணம் கட்டிக் கொண்டு அழுபவள், இப்போது அவனைக் கட்டிக் கொண்டு அவனது சட்டையை ஈரமாக்கிக் கொண்டு இருந்தாள்.

அவளது அணைப்பில் கட்டுண்டு மனைவியைச் சிறிது நேரம் அழ விட்ட‌ குருபிரசாத் ரூம் சர்வீஸை அழைத்து காஃபி கொண்டு வரச் சொன்னான்.
காஃபி குடித்து முடிக்கும் வரை அங்கே ஒரு பேரமைதி நிலவியது. கயல்விழி அவனை விட்டுத் தள்ளி அமர்ந்து தலையைக் குனிந்தபடி காஃபி கப்புக்குள் தலையை விட்டிருந்தாள்.

“இதானே ஆகாதுன்னு சொல்றது.. இத்தனை நேரம் என் ஷர்ட் ஃபுல்லா நனையிற மாதிரி மழையா பொழிஞ்சிட்டு இப்போ எங்க போற? இப்படியே இருந்தே மேல் பேச வேண்டியதை எல்லாம் சொல்லு” என்று அவளைத் தனியே விடாமல் இழுத்து மடிமேல் அமர்த்திக் கொண்டான். அவன் கைகள் பரபரவென்று ஏதேதோ செய்யத் தூண்டினாலும் சூழ்நிலை கருதி அமைதியாக அவளை அணைத்துக் கொண்டான்.

நீண்ட பெருமூச்சு ஒன்றை வெளியேற்றிய கயல்விழி, “நான் சொல்றதைக் கேட்டு என்னைத் தப்பா நினைக்க மாட்டீங்களே? என்னை வெறுத்து ஒதுக்கிய மாட்டீங்கள்ள? இதுல என் பங்கு என்னவாக இருக்கும்னு நினைக்க மாட்டீங்க தானே” என்று ஏகப்பட்ட சந்தேகங்கள் கேட்டு எல்லாவற்றுக்கும் சத்தியம் செய்யாத குறையாக அவளுக்குத் திருப்தியான பதிலை அவனிடம் இருந்து வாங்கிக் கொண்ட பிறகே ஆரம்பித்தாள்.

அவள் சொல்லச் சொல்ல குருபிரசாத்தின் மனதில் பாரம் ஏறிக் கொண்டே போனது.

“நான் நைன்ந்த் சம்மர் ஹாலிடேஸ்ல ஏஜ் அட்டென்ட் பண்ணிட்டேன். எங்க மாமா எல்லாம் பழைய சம்பிரதாயங்களை எல்லாம் ஃபாலோ பண்ணி குடிசை கட்டணும்னு வந்தாங்க. ஆனால் பெரியப்பா எதுக்கும் சம்மதிக்கலை. அவ சின்னப் பொண்ணு, தனியா தூங்கி பழக்கம் இல்லை, ரொம்ப படத்துக்கு வா இப்படி ஏதேதோ சொல்லி என்னை வீட்டுக்கு உள்ளயே ஒரு ரூம்ல உட்கார வச்சாங்க. எப்பவும் பெரியவங்க யாராவது என் கூட இருப்பாங்க.

பெரிய அண்ணன்கள் எல்லாம் வெளியே நின்னு விசாரிச்சிட்டு போயிடுவாங்க. தாஸ் அண்ணன் மட்டும் உள்ள வருவான்… சில நேரம் யாரும் இல்லாத சமயத்தில் வருவான்.. நான் தூங்கும் போது கூட வந்தான்னு நினைக்கிறேன்… ஒரு நாள் நாப்கின் கூட வாங்கித் தந்தான்.. அதோடு நிக்காம அதை எப்படி யூஸ் பண்றதுன்னு…” அதற்கு மேல் அவளால் பேச முடியாமல் போனது. குரல்வளையை யாரோ அழுத்திப் பிடித்தது போல் வார்த்தைகள் வெளிவர மறுத்தன. குருபிரசாத்திற்கு கயல்விழி, காளிதாஸ் இருவரையும் புரிந்து கொள்ள முடிந்தது.

மனைவியை ஆதரவாகத் தழுவிக் கொண்டு அமைதிப்படுத்தினான். “இன்னோரு நாள் சொல்றேனே.. என்னால முடியல” என்று அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள் கயல்விழி.

“இட்ஸ் ஓகே. நீ இதுக்கு மேல எதுவும் சொல்லலேன்னாலும் பிரச்சினை இல்லை. ஐ கேன் அன்டர்ஸ்டான்ட் தி சிச்சுவேஷன் ஸ்லைட்லி. இப்போ ஐயாவைக் கொஞ்சம் கவனி பார்ப்போம்” என்று பேச்சை மாற்றினான். அவளும் கொஞ்சம் கொஞ்சமாக அவர்களது உலகத்தில் புகுந்து கொண்டாள்.

மனைவியின் மனதில் இருப்பதை கொஞ்சமேனும் அறிந்து கொண்ட அடுத்த நாளே பஞ்ச்கனியில் இருந்து சுமார் இருபது கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் மஹாபலேஷ்வருக்கு மனைவியை அழைத்துக்கொண்டு வந்திருந்தான் குருபிரசாத். அவனது பதினைந்து நாட்கள் தேனிலவு திட்டத்தில் இன்னும் ஆறேழு நாட்கள் பாக்கி இருந்தன.

எதைப் பற்றியும் கவலைப்படாமல் இரண்டு நாட்கள் நன்றாக ஊரைச் சுற்றிப் பார்த்தார்கள். வழக்கம் போல கூகுள் ஆண்டவர் உதவியுடன் தானே டூரிஸ்ட் கைடாக மாறிப் போனான் குருபிரசாத். கயல்விழியின் மனதை அமைதிப் படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் அந்த இயற்கையின் துணை கொண்டு செய்தான்.

“இங்கே சிவனைத் தான் மஹாபலேஷ்வர்னு சொல்றாங்க. அப்படின்னா மஹா வலிமை கொண்ட கடவுள்னு அர்த்தம் ஆகுது. வெண்ணா, காயத்ரி, சாவித்ரி, கோன்யா மற்றும் கிருஷ்ணா போன்ற ஐந்து ஆறுகள் இந்த பகுதியில் பாய்வதால் மஹாபலேஷ்வரை ஐந்து ஆறுகளின் ஸ்தலம் என்றும் சொல்றாங்க”

அவன் பேசியதைக் கேட்டபடி கீழே பார்த்தவளுக்குத் தலை சுற்றியது. சட்டென்று அவனைப் பிடித்துக் கொண்டாள்.

“ஹலோ மேடம்! நீங்க பாட்டுக்கு ஈஸியா கீழ் பாத்துடாதீங்க. நாம் மலை மேல 4718 அடி உயரத்தில இருக்கோம். கண்டிப்பா தலை சுத்தும். கயல்விழிக்குத் தலை சுத்திச்சுன்னு நம்ம வீட்டுல சொன்னா.. ஆளாளுக்கு வேற ஏதேதோ கற்பனை பண்ணிடுவாங்க.. ” என்று அவன் கேலி செய்ய, “ஆமா! பதினைந்து நாள்ல தலைசுத்துதுன்னு சொன்னா ஏதேதோ கற்பனை பண்ற அளவுக்கு இரண்டு வீட்டுலயும் உங்களை மாதிரி அறிவு ஜீவிகள் எல்லாம் இல்லை” என்று கவுன்ட்டர் கொடுத்தாள்.

“மத்தவங்களை விடு.. நீ தான் கிஸ் பண்ணாலே பாப்பா வரும்னு நினைச்ச ஆளாச்சே.. இப்போ அதையும் தாண்டி போயாச்சே.. அதனால தான் சொல்றேன்… இந்த தலைசுத்தலைப் பத்தி நீ என்ன நினைக்கிற?” என்று அவள் காதோரம் கேட்டு வைத்தவனை முறைக்க மட்டுமே முடிந்தது கயல்விழியால்.

அவள் பற்களை நறநறத்ததில், “நல்ல வேளை பப்ளிக் ப்ளேஸ்ல இருக்கோம். இல்லேன்னா, என் மூஞ்சில கால் கிலோ சதையை எடுத்திருப்ப போல இருக்கே. நான் எதுக்கும் இரண்டடி தள்ளியே வரேன்” என்று நகர்ந்து கொண்டான்.

கூடவே, “வாயை வச்சிட்டு ஒழுங்கா டூரிஸ்ட் கைட் வேலையை மட்டும் பாரு டா குரு.. புதுப் பொண்டாட்டி பக்கத்தில இருக்கான்னு நீ பாட்டுக்கு எக்ஸ்ட்ரா வேலையைப் பார்த்து பப்ளிக்ல அடி, கடி எல்லாம் வாங்கி அசிங்கப் படாத” என்று தனக்குத் தானே சத்தமாகச் சொல்லிக் கொண்டு அதற்கு இரண்டு அடியையும் வாங்கிக் கொண்ட பிறகே திருப்தியானான்.

பிறகு கைட் வேலையை சின்சியராகப் பார்த்தான். அங்கங்கே மானே தேனே பொன்மானே போட்டு நிரப்பி தங்களது நேரத்தைச் சுவாரசியமாக மாற்றினான். அப்போது அவர்கள் பிரதாப்கட் கோட்டையில் இருந்தார்கள்.

“இந்த ஊர் சிங்கன்ற அரசன் கண்டு பிடிச்சு மஹாபலேஷ்வர் கோயிலையும் அந்த அரசன் தான் கட்டினான்னு வரலாறு சொல்லுது. ஆனால் பின்னாடி சத்ரபதி சிவாஜியோட ஆட்சி வந்த பிறகு, இந்த கோட்டையைக் கட்டி இருக்காங்க.

அப்புறம் பிரிட்டிஷ் பீரியட்ல இந்தப் பேர் அவங்க வாய்ல நுழையல.. ஸோ, அவங்க வழக்கம் போல அவங்களுக்கு ஏத்த மாதிரி மால்கம் பேட்னு பேரை மாத்திட்டாங்க” இப்படியே பல இடங்களிலும் அவன் திறமையைக் காட்ட,

“ஐய.. போதும்.. உங்களுக்கு உதவி செய்யிற கூகுள் ஆண்டவர் எனக்கும் கூட ஹெல்ப் பண்ணுவார். நீங்க கொஞ்சம் அடங்குங்க” என்று அவன் வாயை மூட வைத்து விட்டாள் கயல்விழி.

அப்பகுதியில் உள்ள வெண்ணா ஏரியில் படகுச் சவாரி செய்தார்கள். “இனிமேல் நான் ஆயுசுக்கும் படகுச்சவாரின்னு வாயைத் திறந்து கேட்கவே மாட்டேன்” என்று கயல்விழி சத்தியம் செய்யாத குறையாகக் கெஞ்சிய பின்னரே அவளை விட்டான் குருபிரசாத்.

பிரமிக்க வைக்கும் மலைக்காட்சிகள்,
சொக்க வைக்கும் மலைச்சரிவுகளின் இயற்கை எழிலை பார்க்க வசதியாக 30 மலைக்காட்சித் தளங்கள் (உச்சியிலிருந்து மலைக்காட்சிகளை கண்டு ரசிக்க வசதியாக அமைக்கப்பட்ட இடங்கள்) மஹாபலேஷ்வரில் இருந்தன.

இவற்றிலிருந்து பார்க்கும் போது சுற்றிலும் உள்ள காடுகள், அருவிகள், நீர்வீழ்ச்சிகள், ஆறுகள் மற்றும் காட்டு உயிரினங்கள் போன்றவற்றை மிக அருகில் கண்ணுக்கு விருந்தாக அமைந்திருந்தது.

மஹாபலேஷ்வர் மலைப்பகுதி முழுக்க முழுக்க மிக அரிதான ஆயுர்வேத மூலிகைத் தாவரங்களால் நிரம்பி காணப்படுகிறது. காட்டுயிர்களான மான்கள், நரிகள், காட்டெருமைகள் மற்றும் புல்புல் போன்றவை இங்கு வசிக்கின்றன.

“வில்சன் பாயிண்ட் அல்லது சன்ரைஸ் பாயிண்ட் எனும் மலைக்காட்சி தளம் மிகவும் உயரமான இட்த்தில் அமைந்துள்ளது குறிப்பிட்த் தக்கது. அதற்கடுத்ததாக கன்னாட் சிகரம் மலைப்பள்ளத்தாக்குகளை ரசிக்க ஏதுவான காட்சி மையமாகும். எக்கோ பாயிண்ட், எல்பின்ஸ்டோன் பாயிண்ட், மார்ஜரி பாயிண்ட், கேஸ்டில் ராக் பாபிங்க்டன் பாயிண்ட், ஃபாக்லேண்ட் பாயிண்ட், கார்னாக் பாயிண்ட் மற்றும் பாம்பே பாயிண்ட் …” எஸ்பிபி மூச்சு விடாமல் பாடிய மாதிரி குருபிரசாத் மூச்சு விடாமல் பார்க்க வேண்டிய இடங்களை விளக்க, கையைக் காட்டி போதும் என்று நிறுத்தினாள் கயல்விழி.

“இருங்க இருங்க.. ஒன்னே ஒன்னு மட்டும் சொல்லிக்கிறேன்.. இல்லை கேட்டுக்கிறேன்.. இந்த ஆர்தர் சீட்ல ஆர்தர்ல ஒரு இங்கிலீஷ் காரர் தான் முதல் முதலாக வீடு கட்டுனதா கூகுள் சொல்லுது.. அப்போ, அதுக்கு முன்னாடியே கட்டின இந்த கோவில் கோட்டை எல்லாம் என்ன கணக்கு.. இதை யார் கிட்ட கேட்கிறது?” என்று தன் கையிலும் மொபைல் இருக்கிறது, அதில் டேட்டா பாக்கும் இருக்கிறது என்று நிரூபித்த கயல்விழியை வைத்த கண் வாங்காமல் பார்த்தவன் அதன் பிறகு அமைதியாக இயற்கையை ரசித்த படியே வந்தான்.

மலையின் உச்சியில் மஹாபலேஷ்வர் அமைந்துள்ளதால் கோடையின் வெப்பம் இப்பகுதியை ஒருபோதும் பாதிப்பதில்லை. ஆண்டின் எல்லா பருவ காலங்களிலும் இப்பகுதி அனைவரையும் வரவேற்கும் வகையில் மிதமான பருவநிலையை பெற்றதாக இப்பகுதி அமைந்துள்ளது.

இவர்கள் வந்த காலம் மழைக்காலம் என்பதால் அப்பகுதி ஒரு சொர்க்கலோகம் போன்றே உருமாறி எங்கெங்கு திரும்பினாலும் பச்சை பசேல் என்று ஆங்காங்கு அருவிகள், நீர்விழ்ச்சிகள் என்று பரவசப்படுத்தும் இயற்கை எழில் காட்சிகள் நிறைந்து காட்சி அளித்தது.

“இங்கே இன்னும் ஒரு முக்கியமான ஹிஸ்டாரிகல் விஷயம் இருக்கு. 1800 ஆம் ஆண்டு சீன மற்றும் மலேய கைதிகள் சுமார் 30 வருஷங்களுக்கு ஜெயில்ல இருந்திருக்காங்க.

அவங்களை வச்சு இந்த ஏரியாவ விவசாயம் செய்யறதுக்கு ஏத்த மாதிரி மாத்தி ஸ்ட்ராபெர்ரி, சிவப்பு முள்ளங்கி இதெல்லாம் விளைவிக்க ஆரம்பிச்சிருக்காங்க. அப்புறம் அதுவே இப்பகுதியின் அடையாளமாகவும் மாறிப் போச்சு. அதோட இல்லாமல் அந்தக் கைதிகளால் அறிமுகப்படுத்தப்பட்ட மூங்கில் கைவினைப்பொருட்கள் தயாரிப்பும் இங்கே ஃபேமஸா இருக்கு” என்று விளக்கம் கொடுத்ததோடு சிலவற்றை வாங்கவும் செய்தான்.

ஸ்ட்ராபெர்ரி மற்றும் மல்பெர்ரி போன்ற பழங்களை சுவைத்தார்கள். அப்பகுதியில் ஃபேமசான ஸ்ட்ராபெர்ரி வித் கிரீம் எனும் உணவு வகை கயல்விழியை ஈர்த்தது.

குளுமையான காற்றும் பரவசமூட்டும் இயற்கை எழில் காட்சிகளும் கயல்விழியை மயக்கி ஒரு லேசான மனோ நிலைக்கு இழுத்துச் சென்றது. மொத்தத்தில், மஹாபலேஷ்வரின் அழகு கயல்விழியை அசர வைத்தது.

“பாத்தியா.. இப்படி ஒரு ஊரைப் பார்க்காமல் போனால் அது மன்னிக்க முடியாத குத்தம் ஆயிடும். சாமி கண்ணைக் குத்தும். அதான் உன் கிட்ட கூட சொல்லாமல் இங்கே கூட்டிட்டு வந்திருக்கேன்” என்று தம்பட்டம் அடித்தவனை “செல்ஃப் டப்பா…” என்று கேலி செய்து சிரித்தாள் கயல்விழி.

ஒரு வழியாக ஏதேதோ குரளி வித்தை எல்லாம் காட்டி மனைவியை இயல்பாகப் பழக வைத்திருந்தான் குரு. கயல்விழியும் கணவனிடம் சிலவற்றை பகிர்ந்து கொண்டதில் மனம் லேசானது போல உணர்ந்தாள். இன்னும் முக்கியமான விஷயத்துக்கே அவள் வரவில்லை என்பது அவளுக்கு மட்டும் தான் தெரியும்.

மூன்றாம் நாள் இருவரும் உண்மையான தேனிலவுத் தம்பதிகளாக அறையை விட்டு வெளியேறாமல் தேனிலவைக் கொண்டாடினார்கள். கூடிக் களைத்து ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த கயல்விழி எதையோ சத்தமாகப் சொல்வதைக் கண்டு குருபிரசாத் பதறி எழுந்தான். அவளை எழுப்பி விட நினைத்தவன், தூக்கத்தில் அவள் பேசிய வார்த்தைகளில் ஸ்தம்பித்துப் போனான்.