சலனபருவம் – 9

திருமண சடங்குகளின் போது தெரிந்தும் தெரியாமலும் நேர்ந்த மெய் தீண்டல்களில் சற்றே பதட்டம் அடைந்திருந்தாலும், கணவன் மனைவியாக அன்னை மீனாட்சியின் முன்பு நின்ற போது கயல்விழியின் மனம் தெளிவாகவே இருந்தது.

‘என் கல்யாண வாழ்க்கையை எந்த குழப்பமும் இல்லாமல் சந்தோஷமா ஆரம்பிக்க நீ தான் அருள் புரியணும் தாயே. புது வாழ்க்கைல பொருந்திப் போக எனக்கு ஹெல்ப் பண்ணு’ என்று அம்மையை உளமார வேண்டிக் கொண்டாள்.

சிரித்த முகத்துடனே சுற்றிலும் நடந்த கல்யாண கலாட்டாக்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டாள். ஆனாலும், இரவு நெருங்க நெருங்க மனதுக்குள் ஏதோ ஒரு இனந்தெரியாத சஞ்சலம் வந்து அமர்ந்து கொண்டது.

‘கல்யாணத் தேதி எல்லாம் என் கிட்ட கேட்டு தான் குறிச்சாங்க.. தேதியைக் காரணம் சொல்ல முடியாது.. எப்படியும் இன்னைக்கு தான் எங்களுக்கு ஃபர்ஸ்ட் நைட்டு.. அவங்களோட தனியா.. ராத்திரி முழுக்க ஒரே ரூம்ல.. நினைக்கவே எப்படியோ இருக்கே’ மனதுக்குள் பயம், குழப்பம், கவலை என்று வரையறுக்க இயலாமல்
ஏதோ ஒரு இனந்தெரியாத உணர்வு..

கயல்விழியின் நிலை இவ்வாறு இருக்க, குருபிரசாத்தின் நிலை வேறு விதமாக இருந்தது. ‘கயல்விழியின் பிரச்சினை என்னவாக இருக்கும்? எல்லா நேரத்திலும் சகஜமா இருக்கிறவ, தொட்டாலே வேற மாதிரி ரியாக்ட் பண்றாளே. ஒரு வேளை.. அவளுக்கு ஏதாவது.. சே.. சே.. அப்படி எல்லாம் இருக்காது, இருந்தாலும், அதுக்கும் நம்ம வாழ்க்கைக்கும் என்ன சம்பந்தம். ஒரு வேளை அதை என் கிட்ட சொல்லலையேன்னு ஃபீல் பண்றாளோ? இல்லை அவளுக்கே தெரியாமல் நடந்த ஏதாவது ஒரு விஷயம் அவளைப் பாதிச்சிடுச்சோ? அதனால தான் அவளை அறியாமல் தொடும் போது மட்டும் ரியாக்ட் பண்றாளோ?’

இப்படிக் கேள்வி மேல் கேள்வியாகத் தோன்றி அவனைத் திணறடித்தது. விட்டால் முழு எபிசோடையும் எழுதி முடிக்கும் அளவுக்குக் கேள்விகள் அவனுக்குள் படையெடுத்தன. அதன் சாராம்சம் இதுதான் என்பதால் நாம் இத்தோடு நிறுத்திக் கொள்ளலாம்.

எல்லாவற்றுக்கும் மேலாக இன்று முதலிரவு என்பது புத்தம் புதிய மணமகனாக அவனுக்குக் கிளர்ச்சி ஊட்டுவதாகத் தான் இருந்தது. அதற்குரிய எதிர்பார்ப்புகளும் ஓர் ஓரத்தில் இருக்கத் தான் செய்தன. குருபிரசாத்தின் நண்பர்கள் எல்லாம் கிளம்பி விட்டதால் அவனைக் கேலி செய்து கலாய்க்க ஆளில்லாமல் தனக்குத் தானே திட்டத்தை வகுத்துக் கொண்டு செயல்பட வேண்டிய கட்டாயத்தில் இருந்தான் அவன்.

இப்படியாக மணமக்கள் இருவரும் அன்றைய இரவைப் பற்றி வெவ்வேறு எண்ணங்களில் இருக்க, இரவு உணவு முடிந்ததும் பெரியவர்கள் தங்கள் வேலையைத் தொடங்கி இருந்தார்கள். முதல் படியாக அன்று மாலை கயல்விழியின் அறையில் புத்தம் புதிய கட்டில் குடியேறியது. அன்று மதுரையில் கடைவீதிக்கு வந்த மல்லி எல்லாம் அங்கே தான் வாசம் கொண்டது.

குருபிரசாத் தயாராகி அறைக்குச் சென்று விட, கயல்விழியோ பலரிடம் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தாள்.
குளித்து விட்டுப் புதுப் புடவை கட்டிக் கொண்டு வந்தவளுக்கு அலங்காரம் செய்கிறோம் என்று கண்ணாடி முன்னால் உட்கார வைத்தார்கள். இங்கேயும் ஆனந்தி கேப்டன் பதவியைத் தக்க வைத்துக் கொண்டாள்.

நாலு தலைமுறை கண்ட பாட்டி முதல் போன வாரம் கல்யாணம் ஆன கயல்விழியின் அத்தை பெண் வரை அங்கே கூடி இருந்தனர். புதுப் பெண்ணைக் கேலி செய்யும் சாக்கில் அனைவரும் அவரவர் முதலிரவு ஞாபகங்களை அசை போட ஆரம்பித்து விட்டனர்.

“நாங்க எல்லாம் அந்தக் காலத்தில புருஷன் முகத்தை நிமிந்து பாக்கவே ஒரு வருஷம் ஆச்சு. இப்போ உள்ள புள்ளைங்க எல்லாம் கல்யாணத்துக்கு முன்னாடியே பேசுறாங்க.” அதில் ஒரு பாட்டி அங்கலாய்க்க, ஆனந்தி அவரது உதவிக்கு வந்தாள்.

“அச்சச்சோ முகம் பார்க்கவே ஒரு வருஷமா?? அப்போ…” என்று இழுத்தவள், “உங்களுக்கு எத்தனை பிள்ளைங்க பாட்டி? என்றாள் விஷமமாக. கூடவே கயல்விழியை பார்த்துக் கண்ணடிக்கவும் செய்தாள்.

“அதுக்கெல்லாம் அந்த ஆத்தா எந்தக் குறையும் வைக்கல. நாலு ஆம்பிளைபிள்ளைங்க நாலு பொம்பளை பிள்ளைங்கன்னு எட்டு பிள்ளை பெத்துருக்கேனாக்கும். இதுல ஒரேயொரு பையன் மட்டும் சீக்குல போய் சேந்துட்டான்.”

“அந்த எட்டுத் முதல் குழந்தை எப்போ பிறந்தது?” ஆனந்தி தனது கேள்விகளைத் தொடர கயல்விழி அவளை முறைத்தாள்.

“என்னை முறைச்சு பிரயோசனமில்லை.. இப்போ வரப்போற பதிலைக் கவனி. அது தான் ரொம்பவே முக்கியம்.” என்று கயல்விழியின் காதுகளில் முணுமுணுத்துவிட்டுப் பாட்டியின் பதிலைக் கேட்கக் காதுகளைப் தீட்டிக் கொண்டாள். பதிலும் அவள் எதிர்பார்த்தபடியே வந்தது.

“அதெல்லாம் எண்ணி பத்தாவது மாசம் தலைச்சன் ஆம்பிளை பிள்ளைய பெத்து அவங்க கையில கொடுத்தாச்சு” என்றவரைக் கயல்விழி ஆச்சர்யத்துடன் பார்க்க” அப்படிப் போடு” என்று மற்றவர்கள் சிரித்தனர்.

கயல்விழியின் முகம் அவர்கள் பேசப் பேச ஏகப்பட்ட வர்ணஜாலங்களைக் காட்டியது. அதில் கருப்பும் அவ்வப்போது வந்து போனதை அவள் சாமர்த்தியமாக புன்னகையின் பின்னால் மறைத்துக் கொண்டாள்.

“இல்லேன்னா நம்மளை எல்லாம் விட்டுடுவாங்களா.. நம்ம காலமே வேறயாகிப் போச்சு. இந்தக் காலத்துப் பிள்ளைங்களுக்கு எல்லாமே அவசரம் தான். அவங்க நினைச்சது நடந்திடும்.
அப்படி என்ன தான் அந்த பொட்டில இருக்கோ, காதோரமா வச்சுகிட்டு தூக்கத்தைக் கெடுத்துகிட்டு..
அப்படியே முன்னாடியே பேசிப் பேசி கல்யாணத்துக்கு அப்புறம் எதுவும் பேசறதுக்கு இல்லாம வாய்ச் சண்டையோட கைச்சண்டையும் சேர்த்து போட்டு அப்படியே போற போக்கில டைவோர்ஸூம் பண்ணிப் போடறாங்க.” இன்னும் ஒரு பாட்டி ஆரம்பிக்க, யதேச்சையாக அந்தப் பக்கம் வந்த சோமசுந்தரம் சபையைக் கலைத்தார்.

“மாப்பிள்ளைத் தம்பி ரூமுக்குப் போய் நேரமாச்சு அங்கை. இன்னும் என்ன இங்க அரட்டை அடிச்சிட்டு இருக்கீங்க? புள்ளைய சீக்கிரம் அனுப்பி வைங்க..” என்று போகிற போக்கில் சத்தம் போட்டுவிட்டுப் போனார். அத்தோடு மகளிர் சபை சத்தத்தை நிறுத்திக் கொண்டு வேலையில் கவனமானது.

அடுத்த பத்து நிமிடங்களில் கயல்விழி அட்டகாசமான அழகுடன் அவளது அறை வாசலில் நின்றாள்.

“உள்ள ஃப்ளாஸ்க்ல பால் இருக்கு. எடுத்துத் தம்பிக்குக் கொடுத்திட்டு நீ குடி” என்று அவளது அண்ணி ஒருத்தி அறிவுரை சொல்ல, “அதெல்லாம் நீங்க சொல்லணுமா அக்கா.. அவங்க பாத்துப்பாங்க. இவகொடுக்கலேன்னா அவன் கொடுப்பான். நீ போ கயல்விழி” என்று ஆனந்தி தம்பியின் மனைவியை அணைத்து”ஆல் தி பெஸ்ட்” என்று சொல்லி உள்ளே அனுப்பி வைத்தாள்.

சுற்றி இருந்த அனைவரும் கயல்விழியை விட்டு அவளை ஆவென்று பார்க்க, அவளோ தனது கருமமே கண்ணாக இருந்தாள்.

அவளை நிமிர்ந்து பார்த்த கயல்விழி அதை ஏற்பது போலத் தலையசைத்து அறைக்குள் காலடி எடுத்து வைத்தாள்.

உள்ளே நுழைந்தவளையே கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்த குருபிரசாத்தின் மனம் எங்கெங்கோ பறந்து சென்றது. வெங்காயச் சருகின் நிறத்தில் அவள் அணிந்திருந்த டிஸ்யூ புடவை அவளது நிறத்துடன் போட்டி போட்டதில் அவள் பேரழகியாக ஜொலித்தாள். புடவைக்கு மேட்சாக அவள் அணிந்திருந்த அணிகலன்கள் சினிமாவில் பார்த்த முதலிரவுக் காட்சிகளை அவனுக்கு ஞாபகப் படுத்தியது.

நிமிடங்கள் நகர்ந்த போதும் அவள் நகர்வதாகத் தெரியாததால் கட்டிலில் அமர்ந்திருந்தவன் எழுந்து அவளருகில் சென்றான். அவளைப் பார்த்துக் கொண்டே கதவருகே சென்றவன் சத்தமாகப் தாழிட்டான். அறையின் வெளியே கேட்டுக் கொண்டிருந்த பேச்சுக் குரல்கள் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்தன. அவர்கள் எதிர்பார்த்த விஷயம் நடந்துவிட்டது போலும்.

மெல்லக் கயல்விழியின் அருகில் வந்தவன், “ஹலோ மேடம் பிங்க் பியூட்டி. இன்னும் எவ்வளவு நேரம் தான் இப்படியே நிப்பீங்க. வந்து உட்காருங்க. வாங்க” என்று அவளைத் தோளோடு அணைத்தபடி கட்டிலுக்கு அழைத்துச் சென்றான்.

சற்றே தயங்கினாலும் அவனது அணைப்பில் அமைதியாகவே நடந்தாள் அவள். அவளைக் கட்டிலில் அமரவைத்து, அவளெதிரே நின்றவன் அவளது அக்கா சொன்ன சொல்லைக் காப்பாற்றுவது போல ஃப்ளாஸ்கில் இருந்த பாலை ஊற்றி அவளுக்குக் கொடுத்து தானும் அருந்தினான்.

“அப்புறம்.. ” என்று கயல்விழியே ஆரம்பித்து வைத்தாள்.

“அப்புறமா.. என்னன்னு நீ தான் சொல்லணும்”

“இல்ல.. பால் எல்லாம் ஊத்திக் கொடுத்தீங்களே.. அடுத்து கால்ல விழுவீங்களோன்னு பார்த்தேன்..”

“அடிப்பாவி.. ஏதோ பொண்ணு கொஞ்சம் பயந்த மாதிரி தெரியுதே.. பாலைக் கொடுத்து தெம்பாக்கிடுவோம்னு செஞ்சா.. எனக்கு இது தேவை தான்..” என்று புலம்ப அவள் சத்தமாகச் சிரித்தாள். அவனோ அவளை விழுங்கி விடுவது போல பார்த்தான்.

“நீங்க என்ன சிங்கமா? புலியா? பயப்படுறதுக்கு.. ம்ம்” என்று புருவங்களை உயர்த்தி அவள் கேட்ட போது அவன் முற்றிலும் அவன் வசம் இழந்தான்.

“ஓ.. நீங்க சிங்கம் புலிக்குத் தான் பயப்படுவீங்க.. மத்தபடி ராணி மங்கம்மாள் பரம்பரை அப்படித்தானே..”

“பின்னே இல்லையா..” என்று அவள் உதட்டைச் சுழித்த போது அவன் தன் கட்டுப்பாட்டில் இல்லை. சட்டென்று அவளை எழுப்பி நிறுத்தியவன் வேகமாக அணைத்து நீண்ட முத்தத்தைப் பரிசளித்தான்.

முதலில் அவனைத் தள்ளிவிட நினைத்தாலும் அந்த முத்தத்தை முந்தைய நிகழ்வுகள் போல் எதிர்வினை ஆற்றாமல் அமைதியாக ஏற்றாள். ஆனால் அவளது உடலில் ஒரு விறைப்புத்தன்மை தோன்றி அவளது பிடித்தமின்மையை அவனுக்கு உணர்த்தியது. தனது அணைப்பைத் தளர்த்தியவன் அவளை உற்று நோக்கி அதில் தெரியும் உணர்வுகளைப் படிக்க முயன்றான். அவளோ தனது உணர்வுகளை லாவகமாக மறைத்தவாறு நின்றாள்.

சற்றே சகஜமாக்க விரும்பினான். “இதென்ன ஏசி போட்டு கூட இப்படி வேகுது இங்க. உடம்பெல்லாம் எரியுது. என்ன ஊரோ?” என்று அலுத்துக் கொண்டே அணிந்திருந்த சட்டையின் மேல் பட்டன்களை அவிழ்த்துக் காற்று வாங்கினான். அவனது யுத்தி சரியாக வேலை செய்தது.

“ம்… என்ன ஊருன்னா கேட்டீங்க. இது மதுரை. சென்னையை விட அப்படி ஒன்னும் மோசமான க்ளைமேட் இல்ல.. சும்மா எதையாவது பேசணும்னு பேசக்கூடாது” என்று பொங்கி விட்டாள். நமட்டுச் சிரிப்புடன் அவளது தலையில் செல்லமாகக் கொட்டியவன், “இதையெல்லாம் நல்லா வாய் கிழிய பேசு.. மத்ததுக்கு எல்லாம் பயந்து நடுங்கு” அவளது நிலையை அவளுக்குப் புரிய வைக்க வேண்டும் என்று பேசினான்.

அது அவளுக்கே தெரியும் என்பதால் அவள் அமைதியாகக் கேட்டுக் கொள்ள, அவள் யோசிக்க நேரம் கொடுக்க நினைத்து “நான் டிரஸ் மாத்திட்டு வரேன்” என்று குளியறைக்குள் புகுந்து கொண்டான்.

பதினைந்து நிமிடங்கள் கழித்து அவன் வந்த போது அதே நிலையில் அமர்ந்திருந்த கயல்விழியைக் கண்டு அவனுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.

அருகில் சென்று தலையைச் சிலுப்பினான். சில்லென்ற நீர்த்துளிகள் பட்டுச் சட்டென்று நிமிர்ந்த கயல் அவசரமாக முகத்தைத் திருப்பிக் கொண்டாள். குருபிரசாத் அணிந்து வந்த உடை அப்படி. முழங்கால் அளவிலான ஒரு ஷார்ட்ஸும் கையில்லாத டீ ஷர்டும் அணிந்து வந்திருந்தவனை அவளால் எதிர்கொள்ள முடியாமல் தவித்தாள்.

அவனோ, “ஹப்பாடா! இப்போ தான் ஃப்ரீயா இருக்கு. நீயும் டிரஸ் மாத்திக்கணும்னா மாத்திக்கோ. இங்கேயே மாத்தினாலும் எனக்கு நோ அப்ஜெக்ஷன்” என்றான் தாராள மனதுடன்.

கண்களில் தோன்றிய எச்சரிக்கை உணர்வுடன் சட்டென்று எழுந்து நின்றவளின் அருகில் வந்தான். “இன்னைக்கு நாம இரண்டு பேரும் மனசார ஒருத்தரை ஒருத்தர் லைஃப் பார்ட்னரா ஏத்துட்டு இருக்கோம் கயல். மனசுக்குள்ள எது இருந்தாலும் என் கிட்ட ஷேர் பண்ணிக்கலாம். நீ அன்ஈஸியா ஃபீல் பண்ண வேண்டிய அவசியம் இல்லை. வாழ்க்கை ஆரம்பிக்கும் போது பயம், பதட்டம் இதெல்லாம் கொயட் நேச்சுரல்.
ஆனால் அதுலயே இருந்துட்டா வாழ்க்கைய மிஸ் பண்ணுவோம். உனக்குப் புரியும்னு நினைக்கிறேன். போ.. போய் பதட்டம் இல்லாமல் டிரஸ் மாத்திட்டு வா” என்று வாழ்க்கையின் நிஊர்சனத்தை வார்த்தைகளால் அவளுக்கு உணர்த்தினான்.

கண்களில் நீருடன் நின்றவள் அவனைப் புன்னகையுடன் பார்த்து விட்டு உடை மாற்றச் சென்றாள்.

சிம்பிளான புடவையுடன் வெளியே வந்தவளைப் பார்த்து அவன் வியக்க அவளோ, “இதெல்லாம் இங்கே பழக்கம் தான். சுடிதார் எல்லாம் வெளியே போட்டு போகத்தான். வீட்டில மோஸ்ட்லி சாரி தான்” என்றாள் சாதாரணமாக.

அடுத்தது என்ன என்று தெரியாமல் அவள் விழிக்க, “கொஞ்ச நேரம் பேசிட்டு இருக்கலாமா.. இல்லை உனக்கு தூக்கம் வந்தால் நீ தூங்கு” என்றான் குருபிரசாத்

“ஓ பேசலாமே. படுத்துட்டு பேசலாம் ” என்று சொல்லி விட்டுக் கட்டிலில் ஓர் ஓரத்தில் படுத்துக் கொண்டாள்.

ஒருவரை ஒருவர் பார்த்தபடி பேசிக் கொண்டிருந்தவர்கள் எப்போது உறங்கினார்களோ தெரியவில்லை. கயல்விழி இடையே கண்விழித்த போது கணவனின் கை அணைப்பில் இருந்தாள்.

தூக்கத்தில் தோன்றாத எதுவோ விழித்த போது தோன்ற அவளால் அந்த அணைப்பில் உறங்க இயலவில்லை. மெதுவாக கணவனின் கைகளில் இருந்து விடுபட்டவள் அங்கே இருந்த வந்து சோஃபாவில் படுத்துக் கொண்டாள். நெடு நேரம் ஏதேதோ எண்ணங்களில் உழன்றவள் அதிகாலையில் உறங்கிப் போனாள். இல்லையென்றால் வார நாட்களில் ஐந்து மணிக்கு அவளது மூளையின் அலாரம் அவளை எழுப்பி விடும்.

“கயல்! எழுந்துக்கோ கயல்!”

‘அஞ்சலி! ஏந்திரு அஞ்சலி’ ஸ்டைலில் யாரோ எங்கிருந்தோ எழுப்பும் குரல் கேட்டு திரும்பிப் படுத்தாள் கயல்விழி.

“குட் ஆஃப்டர்நூன் கயல் மேடம்” என்ற குரல் கேட்டு எழுந்தவள் கதவைத் தட்டும் ஓசையை அப்போது தான் கேட்டாள். மணி ஆறரை ஆகியிருந்தது.

சட்டென்று எழுந்து அவனை ஒரு கெஞ்சுதல் பார்வையோடு அவன் கன்னத்தை தடவிக் கொஞ்சினாள். ஏதேதோ செய்ய வேண்டும் என்று தோன்றினாலும் தட்டப்படும் கதவை எண்ணி அவன் சரி போ என்று விட்டு விட வேகமாகக் குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்.

வேறு வழியின்றி குருபிரசாத் சென்று கதவைத் திறக்க, அங்கே நின்றிருந்த கோகிலாவும் அங்கையற்கண்ணியும் வேறு புறம் திரும்பிக் கொண்டு கையில் இருந்த காஃபியை அவசரமாக அவன் கையில் கொடுத்து விட்டு “எட்டு மணிக்கெல்லாம் கோவிலுக்கு போகணும் தம்பி. சீக்கிரம் குளிச்சிட்டு வந்திருக்க” என்று அவனைப் பார்க்காமலே சொல்லி விட்டு வேகமாகச் சென்று விட்டனர்.

என்னவாக இருக்கும் என்று யோசித்துக் கொண்டே கண்ணாடி முன் நின்றவன், “கயல்விழி..” என்று பல்லைக் கடித்தான்.