சலனபருவம் – 8

“இந்த ரூம்ல உனக்கென்ன வேலை தாஸூ? போயி தாம்பூலப் பையெல்லாம் ரெடி ஆகிடுச்சான்னு பாரு. அப்படியே ஸ்டோர் ரூம்ல பெரியவன் இருப்பான், அவன நான் கூப்பிட்டேன்னு வரச்சொல்லு” பின்னால் கேட்ட சோமசுந்தரத்தின் குரலில் சட்டென்று அறையை விட்டு வெளியே வந்து “இதோ பார்க்கிறேன் பெரியப்பா” என்று பவ்யமாக நகர்ந்தான் காளிதாஸ்.

‘எந்தக் காலத்தில இருக்காரு இவரு. ஒரு ஃபோன்ல இவரு பையனைக் கூப்பிட முடியாதா? என்னை இங்கே இருந்து துரத்துரதுல அவ்வளவு சந்தோஷம் ‘ என்று பொருமிக் கொண்டே சென்றான்

“என்னங்க விஷயம்? இன்னும் தூங்கலையா நீங்க?”
கணவனை அந்த நேரத்தில் கண்ட அங்கையற்கண்ணி சட்டென்று எழுந்து அமர்ந்தார்.

“நீ இங்கே இருந்தும் இப்படி நடக்கலாமா? பொண்ண நல்ல படியா மாப்பிள்ளை கையில பிடிச்சு கொடுக்கிற வரைக்கும் நாம கவனமா இருக்க வேண்டாமா? அவ மனசு கஷ்டப்பட்டு இந்த வீட்டை விட்டு போனா நமக்கு நல்லதா சொல்லு?”

“ஏங்க, இப்போ என்ன ஆச்சுன்னு இப்படி சொல்றீங்க??

“அது சரி.. வயசுப் பிள்ளைங்க தூங்கற ரூம்ல தாஸூக்கு என்ன வேலைங்கிறேன்?”

தீபா அவளது தாயுடன் சென்றிருக்க, அங்கே கயல்விழியின் தோழியர் இருவரும் அங்கையற்கண்ணியும் இருந்தனர்.

“தாஸூ வந்தானா? நான் கவனிக்கலையே? ஆமாங்க ..நானும் அவனைக் கவனிச்சு தான் இருக்கேன். இந்தப் பையன் புத்தி ஏன் இப்படி போகுதுன்னு தெரியலையே. நம்ம கோகிலா வெளுத்ததெல்லாம் பாலுன்னு நினைச்சிட்டு இருக்கா. அவ உடன்பிறந்தவளைப் போய் நான் குறை சொன்னால் நல்லா இருக்காதே” என்று அங்கை அங்கலாய்த்தார்.

“நாம ஏன் அவங்களைப் பார்க்கணும், நம்ம பையனைத் தட்டிக் கேட்கிற உரிமை நமக்கு நிச்சயமா இருக்கு. இப்படி கடைசிப் பொண்ணு கல்யாணத்தை அனுபவிக்க விடாமல் புலம்ப விட்டுருக்கானே அதுக்கே அவனை எதுவும் செய்யலாம். நான் அவனைப் பார்த்துக்கிறேன். நீ நாளைக்கு முழுசும் கயலைக் கூட இருந்து கவனிச்சு நல்ல முறையில் புகுந்த வீட்டுக்கு அனுப்பி வை. அந்தப் பொண்ணு கயல் கிட்ட வராமல் பார்த்துக்கோ, நம்ம பொண்ணு டென்ஷன் ஆகுது”

கயல்விழி தூங்கிவிட்டதாக நினைத்துக் கொண்டு கணவனும் மனைவியும் பேசிக் கொண்டிருக்க அவள் போர்வைக்குள் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தாள், ஆனந்தக் கண்ணீர் தான் பா. கூடவே, ‘இந்தப் பெரியப்பாவுக்கு உடம்பெல்லாம் கண்ணு’ என்று சிலாகித்துக் கொண்டாள்.

“சரி சரி நீங்க போய் தூங்குங்க. மணி பன்னிரண்டு ஆச்சு. நாலு மணிக்கு எழுந்தால் தான் வேலை சரியா இருக்கும்.”

“ஒன்பது மணி முகூர்த்தம் தானே. புள்ளைய ஆறு மணி மேல எழுப்பி விடு போதும். தூங்கட்டும் பாவம். இப்போ விட்டா அடுத்து எப்போ தூங்க முடியுமோ?” என்றவாறு எழுந்தவர் கயல்விழி படுத்திருப்பதைக் கண்டு சிரித்தார்.

“அது சரி. கல்யாண வீட்டில பொண்ணு ஆறு மணி வரைக்கும் தூங்கிட்டு இருந்தால் எப்போ அலங்காரம் பண்றது, எப்போ தாலியைக் கட்டுறது? பொம்பளைங்க எல்லாத்தையும் சமாளிக்கப் பழகிக்குவோம். நீங்க போய் தூங்குங்க* மிகவும் எளிதாக பெண்களின் வாழ்க்கையைச் சொல்லி விட்டார்.

“இங்க பாரு இந்தப் புள்ளைய, தலை வரைக்கும் போர்த்தி வச்சிருக்கு. எத்தனை தடவை சொன்னாலும் கேட்கிறதில்லை” என்றவர் கயல்விழியின் அருகில் வந்து தலையில் இருந்த போர்வையை விலக்கித் தலையைத் தடவிக் கொடுத்துவிட்டு எழுந்து சென்றார்.

அதன் பிறகு அங்கையற்கண்ணி மகளிடம் வந்து படுத்துக் கொள்ள, அவரது ஸ்பரிசம் உணர்ந்து பெரியம்மாவை அணைத்துக் கொண்டு நிம்மதியாக உறங்கிப் போனாள் கயல்விழி.

——-

குருவும் அவனது நெருங்கிய நண்பர்கள் ஐந்து பேருமாக ஒரே அறையில் தங்கி இருந்தனர். வரவேற்பு மேடையில் இருந்து புன்னகை மன்னனாக வந்து நண்பர்களின் கேலிக்கு ஆளான குரு அறைக்குள் வந்தவுடன் அமைதியாகப் படுத்துக் கொண்டான். கைகள் இரண்டையும் தலைக்கு அடியில் வைத்து விட்டத்தைப் பார்த்துக் கொண்டு படுத்திருந்தான். முகம் தீவிர யோசனையைக் காட்டியது. அதைக் கண்ட அவனது நண்பர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

“என்ன டா விஷயம் மச்சான்? சம்சார சாகரத்தில குதிக்கப் போறோமே, எவ்வளவு ஆழம் இருக்குமோ, எப்படி நீச்சல் அடிக்கிறதுன்னு யோசனையா இருக்கியா?” என்றான் ஒருவன்.

“அதெல்லாம் இல்ல டா. இன்னைக்கு லைட்டான தாக்குதலையே சமாளிக்க முடியாமல் போச்சே, நாளைக்கு எப்படியோன்னு யோசிக்கிறான். அதானே டா குரு?” என்று அவன் காலை வாரினான் மற்றொருவன்.

“டேய்! நாம தான் டா எனர்ஜி வேஸ்ட் பண்ணி கிண்டல் பண்ணிட்டு இருக்கோம். அவன் நல்லா கண்ணைத் திறந்து வச்சிட்டு கனா கண்டுட்டு இருக்கான். இதெல்லாம் வேலைக்கு ஆகாது. நாம பேசாமல் தூங்குவோம். வாங்க ‘

ஒரு கட்டத்தில், எதற்கும் அசையாமல் படுத்திருந்தவனைக் கண்டு வெறுத்துப் போய் அவர்கள் அனைவரும் தூங்கி விட கல்யாண மாப்பிள்ளையோ தூக்கம் வராமல் தவித்தான். எல்லாம் மறுநாள் இரவைப் பற்றிய சிந்தனை தான். நினைத்தாலே இனித்ததா என்றால் அவனுக்கே தெரியாது.

‘முதல்ல காலைல கையைப் பிடிக்கும் போது என்ன பண்ணப் போறான்னு பாரு. அப்புறம் கட்டிப் பிடிக்கிறதைப் பத்தி யோசிக்கலாம் ‘ என்று மூளை “நங்”கென்றுகொட்டியது.

இப்படியாக கயல்விழி- குருபிரசாத் ஆகியோரின் கல்யாண நாள் வெவ்வேறு வகையான நினைவுகளுடன் இனிதே விடிந்தது.

ஆறரை மணியளவில் கயல்விழி குளித்து விட்டுத் தயாராக இருக்க, அவளுக்கான பூ மற்றும் அலங்காரப் பொருட்களுடன் ஆனந்தி வந்தாள். அவர்களின் வழக்கப்படி அன்றைய நாளில் மணப் பெண்ணுக்குத் தேவையான அனைத்தையும் மாப்பிள்ளை வீட்டார் தான் வழங்குவார்கள்.

பியூட்டிஷியன் தனது வேலையைச் செவ்வனே செய்து முடிக்க, மேடையில் மங்கல வாத்தியங்கள் முழங்க அங்கே திருமண வேலைகள் ஆரம்பமாயின.

மாப்பிள்ளைக்கு மாலை அணிவித்து மோதிரம் செயின் எல்லாம் அணிவித்து மைத்துனன்மார் உள்ளே அழைத்து வர, கயல்விழியை ஆனந்தி அழைத்து வந்தாள். சோமசுந்தரத்தின் மகன் தான் அந்தக் குடும்பத்தின் மூத்தவன் என்பதால் அவனே குருவுக்கு மைத்துனன் முறை செய்தான்.

இது காளிதாஸூக்கு வசதியாகப் போய்விட அவன் கல்யாண நிகழ்வுகளில் இருந்து ஒதுங்கியே இருந்தான். பெரும்பாலும் தனது வேலைகளை சாப்பாட்டுப் பந்தியோடு முடித்துக் கொண்டான். ஆனால், அவனது செய்கைகள் கவனிக்கப்படுகின்றன என்பதை அவன் அறியவே இல்லை.

உறவு முறையில் மூத்தோர் ஆசிர்வதித்துக் கொடுத்த முகூர்த்த புடவையைக் கயல்விழி கட்டிக் கொண்டு மேடை நோக்கி வந்த வேளையில் மேடையில் ஒரே சலசலப்பு.

குருபிரசாத்தை மறைத்த படி கிட்டத்தட்ட ஏழெட்டு பெண்கள்.
நாலிலிருந்து நாற்பது வரை வயது உடையவர்கள், திருமணம் ஆனவர்கள் ஆகாதவர்கள் என்று அனைவரும் குருபிரசாத்தின் முறைப்பெண்களாம். அவனைத் திருமணம் செய்து கொள்ள முடியாமல் போனவர்கள் பாவம். இப்போது அவர்கள் விட்டுக் கொடுத்தால் தான் கயல்விழிக்கு அவன் கிடைப்பானாம்.

“அட! இது கூட நல்லா தான்ப்பா இருக்கு”‘ என்று திருமணத்திற்கு வந்தவர்கள் எல்லாம் அந்த கலாட்டாவை என்ஜாய் பண்ண ஆரம்பிக்க, அதில் குருபிரசாத்தும் கலந்து கொண்டான்.

அந்தப் பெண்கள் அனைவரும் அவனை மறைத்தாற் போல நின்று கொண்டு பேரம் பேசினார்கள்.

“மச்சான்! உங்க மச்சினிச்சிகளுக்கு எல்லாம் தாராளமா செலவழிச்சீங்களே. எங்களைப் பத்தி கொஞ்சமாச்சும் யோசிச்சீங்களா? நாங்க எல்லாம் விட்டுக் கொடுத்தா தான் நீங்க உங்க கயல்விழி கழுத்தில தாலி கட்ட முடியும். அந்த பர்ஸ எடுங்க. எடுங்க.. சீக்கிரம்.. “

“ஆமா மச்சான்.. பர்ஸ எடுங்க.. எனக்கு பொம்மை வாங்க போகணும்” அவனது கடைக்குட்டி மாமனது நான்கு வயது மகள் அவசரப் படுத்த, அவன் சிரித்தான்.

“நண்டு சிண்டெல்லாம் வந்து பயமுறுத்துது. இதுக்கெல்லாம் அசர மாட்டான் இந்த குரு” என்று வீர சபதம் செய்தவன் ஏதோ தோன்ற சட்டென்று திரும்பிப் பார்த்தான். விட்டால் ஓடிவிடுவாள் போல நின்று கொண்டிருந்த கயல்விழியைக் கண்டு ‘இவ ஒருத்தி.. முணுக்குன்னா கண்ணுல தண்ணி வைப்பா’ என்று மானசீகமாகத் திட்டியபடி தன் பர்ஸை எடுத்து முறைப் பெண்களுக்கெல்லாம் வாரி இறைத்தான்.

மீனாட்சி இந்த நிகழ்வுக்கென்றே வாங்கி வைத்திருந்த பரிசுப் பொருட்களை அவர்களிடம் கொடுக்க, எல்லாரும் கயல்விழிக்கு வழி விட்டு இறங்கிச் சென்றனர்.

“இதெல்லாம் ஒரு சின்ன என்ஜாய்மென்ட் கயல். ஃபீல் ஃப்ரீ. கொஞ்சம் சிரியேன். இப்படியே உம்முன்னு இருந்தா கேமரா அப்படியே கேப்சர் பண்ணும்” என்று அருகில் வந்து அமர்ந்தவளுக்கு அவசரமாக ஒரு சமாதானம் சொன்னான்.

“ம்ம்” என்றவள் ரெடிமேட் புன்னகையுடன் மணமகளாகப் போஸ் கொடுக்க ஆரம்பித்தாள்.

பிறகு கயல்விழியின் கைகளைப் பிடித்து குருபிரசாத்தின் கைகளில் கொடுக்கும் கன்னிகாதானம் நடைபெற்றது. கயலின் கைகளில் லேசாக வந்து போன நடுக்கத்தைக் கண்ட குரு அவளது கைகளை இறுக்கி விடவே மாட்டேன் என்பது போல இறுக்கி பற்றிக் கொண்டான். இதை விட வேறு என்ன செய்து அவளுக்குப் புரிய வைக்க முடியும்.. அவனுக்குத் தெரியவில்லை.

அம்மையும் அப்பனுமாகக் காட்சி தந்த திருமாங்கல்யம் அனைவரது ஆசிகளுடன் கயல்விழியின் கழுத்தில் சூட்டப்பட்டது. பின்னர் மாலை மாற்றிக் கொண்டார்கள்.

இன்றைய சூழ்நிலைகளுக்கு ஏற்ப அவர்களது வழக்கத்தில் இல்லாத சிலபல சலுகைகளைப் பெரியவர்கள் சிறியவர்களுக்கு விட்டுக் கொடுக்க, உறவுகள் நட்புகள் அனைவரும் திருமணத்தை அவர்கள் இஷ்டப்படி கொண்டாடி மகிழ்ந்தார்கள்.

குருவும் கயலும் அம்மி மிதித்தார்கள், அருந்ததியைப் பார்த்தார்கள், கலாட்டாவாக மாலை மாற்றிக் கொண்டார்கள், குடத்தில் மோதிரத்தைப் போட்டார்களா என்று தெரியாமலே தேடினார்கள்.

சாப்பிடும் நேரத்திலும் நண்பர்கள் குழு அவர்களை விடவில்லை.ஒரு முழு குலாப் ஜாமூனை அடுத்தவர் வாயில் அடைத்து பாதியை எடுத்துக் கொள்ளச் சொன்னார்கள். அவர்கள் சொன்ன விதத்தில் தான் குலாப் ஜாமூனே வேண்டாம் என்று சொல்லும் நிலைக்கு வந்து விட்டாள் கயல்விழி. குருபிரசாத்தோ கயல்விழியின் ரியாக்ஷன் எப்படி இருக்குமோ என்று அரண்டு போயிருந்தான்.

பின்னே, யாரும் பார்க்காத போது கொடுத்த முத்தத்திற்கே பலம்மாக வாங்கியவன் ஆகிற்றே… நண்பர்களை மனதார சபித்துக்கொண்டே பாவமாகப் பார்த்தான்.

“விளையாட்டு போதும் பசங்களா.. நேரம் ஆகுது பாருங்க. நல்ல நேரம் முடியறதுக்குள்ள வீட்டுக்கு போகணும்” ஆபத்பாந்தவனாக வந்த சோமசுந்தரம் பெண்ணையும் மாப்பிள்ளையையும் காப்பாற்றினார்.

உள்ளூரில் இருந்த சுந்தரேசனின் பூர்வீக வீட்டிற்கு அன்று கயல்விழி குருபிரசாத் தம்பதியர் அழைத்துச் செல்ல பட்டார்கள். பாலும் பழமும் கொடுத்து சிறிது ஓய்வு எடுத்துக் கொண்டார்கள்.

சாயங்கால வேளையில் குடும்பத்துடன் மீனாட்சி சுந்தரேஸ்வரரை வணங்கி விட்டு மீண்டும் கயல்விழியின் வீட்டுக்கு மணமக்கள் அனுப்பி வைக்கப் பட்டனர்.

அவர்களது வழக்கத்தில் அன்றைய இரவுக்கான சடங்குகள் பெண் வீட்டில் தான் ஏற்பாடு செய்யப்படும். இன்றும் அதே போல ஏற்பாடு செய்யப்பட்டிருக்க, எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் குருபிரசாத் கயல்விழியின் அறையில் அவளது வருகையை எதிர்பார்த்துக் காத்திருக்க
அவளும் வந்தாள்.

மறுநாள் காலை ஆறு மணியளவில் கதவு தட்டப்பட விட்டத்தை வெறித்துக் கொண்டிருந்த குருபிரசாத் சட்டென்று எழுந்து அமர்ந்தான். அங்கே இருந்த சோஃபாவில் கயல்விழி நன்றாக உறங்கிக் கொண்டிருந்தாள்.