சலனபருவம் – 7

மதுரையின் அந்த பிரம்மாண்டமான திருமண மண்டபம் ஜெகஜ்ஜோதியாக அலங்கார விளக்குகளால் மின்னிக் கொண்டிருந்தது. எங்கு பார்த்தாலும் பட்டும் நகையும் மணமக்களின் செல்வாக்கைப் பறை சாற்றியது.

காலையிலேயே மண்டபத்திற்கு வந்துவிட்ட குருபிரசாத் கயல்விழியை ஒரு முறையாவது நேரில் பார்த்து விடத் துடித்தான். ஆனால் இதற்கு முன்னர் செய்தது போல இப்போது இருந்த ஏகப்பட்ட தடைகளைத் தாண்டி அவனால் நினைத்ததை நடத்திக் கொள்ள முடியவில்லை.

மதிய சாப்பாட்டு நேரம் கூட அவன் கண்ணிலே கயல்விழிக்கான தேடலைக் கண்டு அனைவரும் கேலி செய்தது தான் மிச்சம். அவளை எங்கும் காணவில்லை. பகல் முழுவதும் தூக்கத்தில் கழித்தவன், மாலையில் மணமகனாக மாப்பிள்ளை அழைப்புக்குத் தயாராகி நின்றான்.

கயல்விழிக்கு உடன் பிறந்த சகோதரிகள் இல்லை என்றாலும் உடன்பிறவா சகோதரிகள் பலர் உண்டு என்பதை நன்கு அறிவான். சென்னையிலேயே அதற்கான பரிசுகளை வாங்கி இருந்தான். இப்போது மறக்காமல் அதனை எடுத்துக் கோட்டில் வைத்துக் கொண்டான்.

மாப்பிள்ளை தோரணையில் வாசலில் நின்றவனை செண்டை மேளம் முழங்க வரவேற்றார்கள் கயல்விழி குடும்பத்தார். மூத்த சகோதரி முறையில் இருப்பவர்கள் அனைவரும் திருஷ்டி கழிப்பது போல விதம் விதமான ஆரத்தி எடுத்த பின்னர் ஆரம்பித்தது கலகலப்பான மைத்துனிகளின் ஆர்த்தி.

“ஆராத்தி ஆராத்தி அருமையான ஆராத்தி
ஆராத்தி ஆராத்தி நாங்க சுத்தும் ஆராத்தி
எங்க அத்தை பெத்த பிள்ளை எடுப்பான செல்லப் பிள்ளை
எங்க அத்தை பெத்த பிள்ளை எடுப்பான செல்லப் பிள்ளை

கோட்டு சூட்டு போட்டுகிட்டு
காரேறி வந்த மச்சான்
கோட்டு சூட்டு போட்டுகிட்டு
காரேறி வந்த மச்சான்

வீரத்திலும் சளைச்சதில்ல
சிங்கம் போல நடைக்காரர்
வீரத்திலும் சளைச்சதில்ல
சிங்கம் போல நடைக்காரர்

அவர் தான் எங்க மச்சான்
அவர் தான் எங்க மச்சான்

எங்க அக்கா செல்ல அக்கா
செல்லமாக வளர்ந்த அக்கா
எங்க அக்கா செல்ல அக்கா
செல்லமாக வளர்ந்த அக்கா

அதிகம் பேசாத எங்க குல இளவரசி
அதிகம் பேசாத எங்க குல இளவரசி

எங்க அக்காவைக் கைப்பிடிக்க காரேறி வந்த மச்சான்
எங்க அக்காவைக் கைப்பிடிக்க பக்காவா வந்த மச்சான்

தங்கத் தாரகையைச் சொந்தமாகக் தாரோங்க
வெங்காயம் அரியும் போதும் கண்ணீர் வராம பாத்துக்கோங்க

வாழையடி வாழையாக உங்கள் குலம் தழைக்கணும்
பதினாறு செல்வங்கள் பெற்று பெருவாழ்வு வாழணும்

உங்க தங்கமான மனசப் பார்த்து எங்க அக்காவத் தாரோங்க
உங்க தங்கமான மனசப் பார்த்து எங்க அக்காவத் தாரோங்க

தாராள மனசால தட்டு நிறையோணுங்கோ
தாராள மனசால தட்டு நிறையோணுங்கோ

இந்த வெள்ளித்தட்டு பெருந்தட்டு உங்க வெள்ளி மனசு போல
இந்த வெள்ளித்தட்டு பெருந்தட்டு உங்க வெள்ளி மனசு போல

GPAY பண்றீங்களா
PHONEPay பண்றீங்களா

எதுவாக இருந்தாலும் எங்களுக்கு ஓகே மச்சான்

பொன்னும் பொருளுமாக அள்ளி இறைங்க மச்சான்
அள்ளி இறைங்க மச்சான் தங்கக் காசுகள

Credit card, debit card எதுவானாலும் பரவாயில்லை
மறக்காமல் pin number மட்டும் சொல்லிட்டு போயிடுங்க மச்சான்

இந்த வெள்ளித்தட்டு பெருந்தட்டு உங்க வெள்ளி மனசு போல
அள்ளி இறைங்க மச்சான் தங்கக் காசுகள

குரு பிரசாத் மச்சானுக்கு ஒரு ஓ…… போடுங்க… ஓஓஓஓஓ

அவர் போடப் போற தங்கக் காசுக்கெல்லாம் ஒரு ஓ… போடுங்க… ஓஓஓஓஓஓ”

கோகிலாவின் தங்கை கண்மணி கோயம்புத்தூரில் வாக்கப் பட்டு இருக்கிறார். அவரது பெண்கள் இருவரும் கொங்கு நாட்டு பாரம்பரிய ஆரத்தியை லேட்டஸ்ட் மாடலில் பாடி மாப்பிள்ளை அழைப்பில் கலக்கிக் கொண்டிருந்தனர்.

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அந்த நிகழ்ச்சியினை ரசித்துக் கொண்டிருக்க, கயல்விழியை வாசலுக்கு அழைத்து வந்த தீபாவிற்கு மட்டும் ஏனோ பிடிக்கவில்லை. கயல்விழிக்கு மூத்தவளாக இருந்தாலும் திருமணம் ஆகாமல் இருப்பதால் அவள் ஆர்த்தி எடுக்கக் கூடாது என்று யாரோ ஒரு கிழவி சொல்லி விட, கோகிலாவோ கயல்விழியின் பொறுப்பை இவளிடம் கொடுத்து விட்டார்.

இவளோ, எப்போதடா அதில் இருந்து விலகிக் கொள்ளலாம் என்று சமயம் பார்த்துக் கொண்டே இருந்தாள். இரண்டு நாட்கள் முன்னதாக வந்த காளிதாஸ் கொஞ்சம் பொறுமையாக இருக்கும் படி சொல்லி விட்டதால் வேறு வழியின்றி கயல்விழியின் அருகிலேயே இருக்கிறாள். இப்போது அதில் இருந்து தப்பிக்க சந்தர்ப்பம் கிடைத்து விட்டது அவளுக்கு.

ஆரத்தி எடுத்த மைத்துனிகள் குருபிரசாத் திட்டம் பேரம் பேசிக் கொண்டிருக்க, அவனோ அவர்களைக் கவனிக்காது அங்கே வந்த கயல்விழியைப் பார்த்துப் புன்னகைத்தான். உடன் வந்த தீபாவை அவன் கண்டு கொள்ளவே இல்லை.

“மச்சான்! இதெல்லாம் செல்லாது. செல்லாது.. எங்களுக்கு கொடுக்க வேண்டியதைக் கொடுத்துட்டு தான் அக்காவைப் பார்க்கலாம்” என்று அவர்கள் கயல்விழியை மறைத்து நிற்க வேறு வழியில்லாதவன் போல் ஆளுக்கொரு கிஃப்ட் கார்டைக் கொடுத்தான். அதற்கும் “ஓஓஓஓஓஓ” என்று சத்தம் தான் எங்கும்.

கயல்விழியின் தமக்கைகள் அனைவருக்கும் மீனாட்சி வாங்கி இருந்த பரிசுப் பொருளைக் கொடுக்க மாப்பிள்ளை அழைப்பு கலாட்டா முடிந்து மணமக்கள் இருவரும் ஒன்றாக மேடையை நோக்கி நடந்தனர்.

“ஹாய் கயல்! எப்படி இருக்க?” கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவள் காதோரம் கேட்டவனுக்கு அவள் புன்னகையை பதிலாகக் கொடுத்தாள். அதையும் இரண்டடி தள்ளி நின்று கொடுத்ததை குருபிரசாத் நன்றாகவே கவனித்தான். பதிலுக்கு அவளும் ஏதாவது கேட்பாள் என்று நினைத்தவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

மனதில் ஏற்பட்ட குழப்பங்களை மறைத்து, முகத்தில் புன்னகை பூசி, இருவரும் மேடைக்கு வந்ததும், அவர்களின் வழக்கப்படி தாய்மாமன் இருவரும் தாம்பூலம் மாற்றி, மாலை மாற்றிக் கொண்டு சம்பிரதாயமாக நிச்சயதார்த்தம் நடந்தேறியது. நிச்சயதார்த்த புடவையையும் அதற்கு மேட்சாக மாப்பிள்ளை வீட்டார் அளித்த வளையல், நெக்லஸ், காதணிகள் எல்லாம் கயல்விழி அணிந்து கொண்டு வர, அதன் பிறகு இக்கால வழக்கப் படி வரவேற்பு ஆரம்பம் ஆனது.

கயல்விழி ஆகாய நீல நிறத்தில் பட்டுப் புடவை உடுத்தி இருக்க குருபிரசாத் அடர் நீலத்தில் கோட் சூட் அணிந்திருந்தான்.

வரவேற்பு என்றாலும் வயதில் மூத்தோர் எல்லாம் திருநீறு பூசி மணமக்களை ஆசிர்வாதம் செய்து புகைப்படம் எடுத்துக் கொண்டு சென்றனர். மணிக்கணக்கில் நின்று இருவருக்கும் கால் வலித்தது, இடையே ஆனந்தி வந்து ஜூஸ் பிரேக் கொடுத்தாலும் மக்கள் கூட்டம் அதிகம் என்பதால் மணமக்களால் உட்கார முடியவில்லை.

இத்தனைக்கும் இடையே குருபிரசாத் ஒரு விஷயத்தை அவ்வப்போது கவனித்துக் கொண்டு தான் இருந்தான். எப்போதெல்லாம் கூட்டம் அதிகம் ஆகி அவன் கயல்விழியை உரசினாற் போல நிற்கிறானோ அப்போதெல்லாம் அவளது உடலில் ஏதோ ஒரு விறைப்பு தன்மை ஏற்படுகிறது. அதைச் சாமர்த்தியமாக முகத்தில் காட்டாமல் மறைத்தாலும் அருகே நிற்பவனால் அதை உணர முடிந்தது.

இவனது அருகில் நின்ற ஆனந்தியின் கணவன் ஆகாஷ் இவனது நொடி நேர முக மாற்றத்தையும் கண்டு கொண்டான். மருத்துவரான அவனால் கயல்விழியின் உடல் மொழியை மும் உணர முடிந்தது. குருபிரசாத்தின் கைகளை ஆதரவாகப் பிடித்தவன் எதுவும் பேசாமல் அவனது நண்பர்களை மேடைக்கு அழைத்தான்.

ஒரு புறம் கயல்விழியின் அலுவலக நண்பர்கள் மேடையேற அங்கே ரிசப்ஷன் களை கட்டியது. மணமக்கள் இருவரும் மாட்டிக்கொண்டு விழித்தார்கள். இரவு பதினோரு மணி வரை நின்று களைத்து கடைசிப் பந்தியில் சாப்பிட அமர்ந்தவர்களைக் கலாய்க்க ஒரு கூட்டம் காத்திருக்க, நமது நாயகனின் பார்வை அருகில் இருந்த நாயகியையும் தாண்டி சாப்பாட்டு அறையில் ஓர் ஓரத்தில் வெளிச்சம் குறைவான இடத்தில் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டு இருந்த இருவரை நோட்டமிட்டது.

‘யார் எக்கேடு கெட்டால் என்ன? நீ உன் கல்யாணத்தை என்ஜாய் பண்ணு டா மடையா!’ என்று மூளை ஆணையிட்டதால் பார்வையைத் தன் நாயகியிடம் திருப்பினான்.

ஆனால் அவர்களையும் இவன் அவர்களைப் பார்த்ததையும் இன்னும் இரண்டு கண்கள் கூர்மையாக பார்த்து ஆழ்ந்த சிந்தனைக்குச் சென்றதைப் பாவம் அவன் அறியவில்லை.

சாப்பிட்டு முடித்ததும் கைகழுவும் இடத்தில் இருவரையும் பார்த்த மற்றவர்கள் இவர்களுக்கு தனிமை கொடுத்துவிட்டு செல்ல, கயல்விழியோ எப்படித் தப்பிக்கலாம் என்று யோசித்துக் கொண்டே நடந்தாள்.

கயல்விழியின் அறையை நெருங்கிய நேரம். சமயம் பார்த்து குருபிரசாத் அவனது வேலையை காட்ட, அவளும் இந்த முறை வித்தியாசமாகத் தன் வேலையை காட்டி இருந்தாள்.

“ஸ்ஸ்ஸ்.. ஹா ஹா ஹேய் என்னடி நீ?” என்று தனது கையை வேகமாக உதறிக் கொண்டு அவளைப் பிடிக்க முயற்சி செய்தான் குருபிரசாத். தனது வேலையை வெற்றிகரமாக முடித்தவுடன் நொடியில் தன் அறைக்குள் பாய்ந்திருந்தாள் கயல்விழி.

அறை வாசலில் நின்று மெல்லத் தலையை மட்டும் நீட்டியவளை நோக்கி வேதனையை மறைத்துக் கொண்டு கண்சிமிட்டியவன்,

“ஹூய்…செய்யறதையும் செஞ்சுட்டு சிரிக்கவா செய்யற.. இன்னைக்கு ஈஸியா தப்பிச்சுட்ட… நாளைக்கு ராத்திரி ஐயா கிட்ட மாட்டாமலா போயிடுவ.. அப்போ இதுக்கும் சேர்த்து பதில் கொடுக்கறேன்” என்று முணுமுணுத்து விட்டுச் சுற்றும்முற்றும் பார்த்தவன் அவள் கன்னத்தில் அழுத்தமாக ஒரு முத்தம் பதித்து விட்டே தன் அறை நோக்கி நடந்தான், முகத்தில் வாடாத புன்னகையுடன். பின்னே, மறு நாள் காலை காலை தாலி கட்டப் போகும் மனைவியிடம் பரிசு வாங்கியவன் இப்படித்தானே இருப்பான், வேற வழி.

ஆனால் அவனது இடது கையோ வலது கையைத் தடவிக் கொடுத்தபடி வந்தது.

“என்னடா.. பல்லு சுளிக்கிக்கப் போகுது… இப்படி இளிச்சிக்கிட்டே வர? அதுவும் கையைப் பாத்துக்கிட்டே வேற வர? சிஸ்டர் ரொம்ப பலம்மா கவனிச்சிட்டாங்களோ?” என்று அவனது நண்பர் கூட்டம் கலாய்த்துக் கொண்டே வந்து கையைப் பிடிக்க,

“ஆ…” என்று வலி தாங்காமல் அலறி விட்டான். பின்னே அவ்வளவு பலமான கடியோ??

நண்பர்களிடம் சிரித்துச் சமாளித்தவன் இரவு முழுவதும் தூக்கம் இல்லாமல் தவித்தான். மறுநாள் இரவு அவன் நினைத்தது தான் நடந்தது.

கயல்விழியின் நிலைமையோ படுமோசமாக இருந்தது. திருமண வாழ்க்கையைப் பற்றிய ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளும், பரபரப்பும் இருந்தாலும் ஓர் ஓரத்தில் பயமும் இருந்தது. அந்த பயத்தின் காரணம் அப்போது அவள் முன்னே வந்து நின்று “இன்னும் தூங்கலையா கயலு?” என்று கேட்ட போது தலையுடன் சேர்த்து போர்த்திக்கொண்டு உறக்கத்தை வலுக்கட்டாயமாக வரவழைத்தாள்.

திருமண நாளும் இனிதாக விடிந்தது..