சலனபருவம் – 6

“லூசாடி நீ!” குருபிரசாத் எட்டுக் கட்டையில் கத்திய குரல் அந்த அதிகாலையில் சுப்ரபாதமாகி அந்த வண்டியில் இருந்த அனைவரையும் தெள்ளத் தெளிவாக எழுப்பி விட்டது.

உடனே அவன் நினைத்தது தான் நடந்தது. கயல்விழி வழக்கம் போல அழ ஆரம்பிக்க, சோமசுந்தரம் பஞ்சாயத்து தலைவராக மாறி “இவரு என்ன தான் நினைச்சிட்டு இருக்காரு நம்ம பொண்ணைப் பத்தி? டேய் ஆறுமுகம்! திருப்புடா வண்டிய சென்னைக்கு.. இன்னைக்கு அந்த சுந்தரேசனை இரண்டுல ஒன்னு கேட்காம விடப்போறதில்லை. கல்யாணத்துக்கு முன்னாடியே இப்படின்னா, கல்யாணம் ஆன பிறகு இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ?” என்று சாமியாட, இதையெல்லாம் தனது கற்பனையில் நினைத்துப் பார்த்த குருபிரசாத்தின் நிலை தான் வடிவேலு மாதிரி ஆகிப்போனது.

“ஷப்பா!! இப்பவே கண்ணைக் கட்டுதே’!” என்று தலையை வேகமாக உலுக்கிக் கொண்டு கயல்விழியின் கேள்விக்கு பதில் சொல்லாமல் அமைதி காத்தான்.

——

அதிகாலை ஐந்து மணி. மதுரையை நெருங்கிக் கொண்டிருந்த அந்தக் காரில் இருவரைக் தவிர அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். ஒருவர் வேறு வழியின்றி விழித்துக் கொண்டிருந்த டிரைவர் ஆறுமுகம், மற்றொருவர் மற்ற அனைவரையும் எழுப்பக் காத்திருக்கும் நம் நாயகி கயல்விழி.

“கல்யாணத்தை நிறுத்திடுத்திடுவீங்களா?” என்று தனது அரும்பெரும் சந்தேகத்தை அதிகாலையில் கேட்டு வைத்து குருபிரசாத்தின் பிபியை எக்குத் தப்பாக எகிற வைத்திருந்தவள், அவனது பதிலுக்காகக் காத்திருந்தாள். மறுமுனையில் நிலவிய பேரமைதி அவளைக் குழப்பியது.

“ஒரு வேளை மொபைல ஆஃப் பண்ணாமலே தூங்கிட்டாங்களோ? நாம என்ன அப்படியா கேள்வி கேட்டுட்டோம்?” என்று சத்தமாக யோசித்தாள்.

“இல்ல மேடம்.. இல்லவே இல்லை. நீங்க இப்படி ஒரு சுப்ரபாதம் பாடி எழுப்பி விட்டதுக்கு அப்புறமும் நான் தூங்கிட முடியுமா? நீங்க யாரு? உங்க லெவல் என்ன? உங்க அறிவார்ந்த கேள்விக்கு நானே பதில் சொல்ல முடியுமா இல்லை? உங்க பெரியப்பா கிட்ட ஹெல்ப் கேட்கலாமான்னு தான் மீ ரொம்ப நேரமா திங்க்கிங்.. நீங்க இதைப் பத்தி என்ன நினைக்கிறீங்க?”

“பெரியப்பா கிட்டயா?? அச்சச்சோ!! ஏன்” என்று ஜெர்க் ஆனவளைக் கண்டு சிரிப்பு வந்தது அவனுக்கு.

“பின்னே, ஒரே ஒரு கல்யாணம் பண்ணி வைக்கிறதுக்குள்ள எத்தனை பஞ்சாயத்து தான் கூட்டுறதுன்னு கணக்கே இல்லையா? கல்யாண வேலையை பார்ப்பாங்களா.. இல்ல பஞ்சாயத்து பண்ணிட்டு இருப்பாங்களா.. இப்பவே இப்படின்னா கல்யாணத்துக்கு அப்புறம் என்ன பண்ணுவ? இப்போ எதுக்கு இந்த கேள்வியை கேட்டேன்னு நான் கேட்க மாட்டேன். யாரோ எதையோ பேசி நீ அதைக் கேட்டு குழம்பிப் போய் இருக்க. கரெக்டா?” அந்தப் பக்கம் அவளது அமைதியே அவன் கேட்டதன் பதில் ஆமாம் என்றது. அவனே தொடர்ந்து பேசினான்.

“லுக் கயல்விழி! நம்ம கல்யாணத்துக்கு இன்னும் ஒரு வாரம் தான் இருக்கு. ஜஸ்ட் ஏழே நாள்.. திரும்பிப் பார்க்கிறதுக்குள்ளே வேகமா ஓடிப் போயிடும்.. பிற்காலத்தில நினைச்சுப் பார்த்து என்ஜாய் பண்ண வேண்டிய நாட்கள். நீயே நினைச்சாலும் இந்த பீரியட் திரும்ப வராது. ஸோ, நீயும் நல்லா என்ஜாய் பண்ணு, வீட்டில உள்ளவங்களையும் என்ஜாய் பண்ண விடு.”

“ம்ம்..”

“அஃப்கோர்ஸ்.. வீட்டுல கடைசிப் பொண்ணு கல்யாணம்னு சந்தோஷம் இருந்தாலும் உன்னைப் பிரியப் போற வருத்தம் அவங்களுக்கு இருக்கும். அவங்களுக்கு எதுக்கு எக்ஸ்ட்ரா டென்ஷன் கொடுக்க நினைக்கிற?”

“ம்ம்.. ” அதைப் பற்றி நினைக்கும் போதே தொண்டையை அடைத்தது அவளுக்கு. அவளது குரலில் பேதத்தை உணர்ந்தவன் அவளைக் கலாய்க்கும் முயற்சியில் இறங்கினான்.

“ஹப்பாடா.. கயல்விழி தொல்லை இனிமேல் இல்லைன்னு உங்க அம்மா சந்தோஷப் படுவாங்க தான்.. ஆனாலும் அதை வெளியே சொல்ல முடியாது பாரு… அதனால வேற வழியே இல்லாமல் நீ பார்க்கும் போது ஃபீல் பண்ணத் தான் செய்வாங்க”

“போங்க நீங்க.. எங்க வீட்டு மனுஷங்க அப்படி எல்லாம் இல்லை.”

“ஏதோ நீ சொல்ற.. நம்பித்தானே ஆகணும்..”

“ஆமா.. ஆமா.. நம்புங்க.. நம்பிக்கை.. அதானே எல்லாம்..”

“ஓகே… ஓகே.. நம்பிடுவோம்… ட்ரான்ஸ்ஃபர் அப்ளை பண்ணிட்டியா?”

“ம்ம்.. பண்ணியாச்சு இன்னைக்கு தான் லாஸ்ட் டே இந்த ப்ரான்ச்ல..”

“ஓ.. இங்கே எம்ப்ளாயீஸ் எல்லாம் எப்படி?”

“எப்படீன்னா.. ?”

“லேடீஸ் எத்தனை பேர்.. ஜென்ட்ஸ் எத்தனை பேர்.. அதுல கல்யாணம் ஆனவங்க.. ஆகாதவங்க.. இப்படி.. எத்தனையோ இருக்கு “

“ஹப்பா.. எங்க ப்ராஞ்ச்ல லேடீஸ் ஜென்ட்ஸ் எல்லாரும் தான் இருக்காங்க. எல்லாரும் நல்லாவே பழகுவாங்க. நான் தான் பசங்க கிட்ட கொஞ்சம் லிமிட்டோட பேசுவேன்.”

“நீ பசங்கன்னு சொல்றேன்னா.. அது பாச்சிலர்ஸ் தான்.. ரைட்..” அவன் போட்டு வாங்க..

“ஆமா…” என்று பதில் வந்தது சுரத்தே இல்லாமல்.

“அப்படிப் போடு.. அப்போ நிறைய பேர்.. இன்னைக்கு எங்கிருந்தாலும் வாழ்கன்னு பாடுவாங்கன்னு சொல்லு… “

“அய்ய… இதென்ன.. தாத்தா காலத்துப் பாட்டு.. வேற எதுவும் புதுசா பாட்டு தெரியலையா?”

“அடிப்பாவி.. அப்படி எல்லாம் இல்லைன்னு சொல்லுவேன்னு பார்த்தால்… ஹூம்.. நல்லதுக்கே காலம் இல்லை.. எதுக்கும் உஷாரா இருடா குரு..” என்று அலுத்துக் கொண்டவன் சீரியஸாக பேச ஆரம்பித்தான்.

“அப்படியே ஐயாவப் பத்தியும் இடையில அப்பப்போ நினைச்சுக்கோங்க கயல்விழி மேடம்.
அப்படி நினைக்கும் போது, நம்ம இரண்டு பேருக்கும் இடையே வேறு யாரையும் கொண்டு வந்து குழப்பாதே. மத்த யாரோட வாழ்க்கையும் நம்ம வாழ்க்கையை எதுவும் செய்யாது. இதை என்னால உறுதியா சொல்ல முடியும். நீயும் இந்த விஷயத்தில தெளிவான பிறகு வந்து மேடையில உட்காரு. அது வரைக்கும் நாம மொபைல்ல கூட பேசிக்க வேண்டாம். ஐ திங்க், உனக்கு பேசறதுக்கு டைமும் கிடைக்காது. ஸீ யூ கயல். பீ ஹேப்பி ஆல்வேய்ஸ்” என்று அவன் அழைப்பைத் துண்டித்த போது கயல்விழி சற்றுத் தெளிவாகி இருந்தாள் போலத் தான் தெரிந்தது.

கண்களை மூடி அமர்ந்தவளின் காதுகளில் ஒலித்த பேச்சு வார்த்தை அவளது மனதைக் குழப்பி விடத் தயாராக இருந்தாலும் அவளது மனமோ குருபிரசாத்தின் அறிவுரைகளை வேதவாக்காக எடுத்துக் கொண்டு செயல்பட்டது.

“என்ன அண்ணே? அதுக்குள்ள ஊரு வந்தாச்சா? இவ்வளவு சீக்கிரம் எழுந்துட்டீங்களா? ஒரு வேளை.. ராத்திரி பூராவும் நீங்க தூங்கவே இல்லையா?” கயல்விழியின் தந்தையின் குரல் கவலையுடன் ஒலித்தது.

“நான் நல்லாவே தூங்கிட்டேன் தம்பி. இப்போ தான் எந்திரிச்சேன். நீ தூங்கினியா இல்லையா?”

“நானும் தூங்கிட்டேன் அண்ணே.. ஆனா மனசுக்குள்ள ஏதோ ஒரு மாதிரி அழுத்தமா இருக்கே.. என்ன செய்ய?”

“பொண்ணு கல்யாணம்னா சும்மாவா. அவ கல்யாணம் ஆகி புகுந்த வீடு போகிற வரைக்கும் அப்படித் தான் இருக்கும். சமாளிக்க கத்துக்கணும்.”

“அந்தப் பொண்ணு தான் எதுவும் தெரியாமல் இருக்குன்னு பார்த்தா, நான் பெத்த பையன் என்ன செய்யக் காத்திருக்கான்னு தெரியலையே அண்ணே. சின்ன வயசுல தடுமாற்றம் வர்ற வயசுன்னு சொல்லித் திருத்தலாம். இப்போ என்னத்தை செஞ்சு வச்சிருக்கான்னு தெரியலையே. மாப்பிள்ளை தம்பிக்கு நிச்சயமா ஏதோ தெரிஞ்சிருக்கு. நம்ம கிட்ட சொல்லாம மறைக்கிறாரு. அது அவரோட பெருந்தன்மைய காட்டுது. ஆனா…” இவர்கள் பேசிய பேச்சு போதும் என்று காரில் இருந்தவர்கள் அனைவரும் அடுத்தடுத்து விழித்து விட அண்ணன் தம்பி இருவரும் ஒரு முடிவிற்கு வராமல் தங்கள் பேச்சை நிறுத்திவிட்டனர்.

கயல்விழி விழித்திருப்பது தெரியாமல் இரவில் தாங்கள் நடத்திய பேச்சுவார்த்தையைக் காலை எழுந்தவுடன் தொடர்ந்த சோமசுந்தரம் மற்றும் அவரது சகோதரர்களின் கவலையிலும் நியாயம் இருக்கவே செய்கிறது. ஆனாலும் இப்போது மகளது கல்யாண வேலைகள் முன்னே நிற்பதில் மகனைப் பற்றிய கவலை பின்னே சென்று விட்டது. இதுவும் இயற்கை தானே.

ஆறு மணியளவில் இவர்கள் ஊர் வந்து சேர்ந்த போது நன்றாக விடிந்து விட்டது. அன்று மாலையில் கயல்விழி கைகொள்ளா பூங்கொத்துக்களுடன் வீடு வந்து சேர்ந்த போது சொந்த பந்தங்கள் வர ஆரம்பித்து இருந்தார்கள்.

புதன் கிழமை காலையில் நல்ல நேரம் பார்த்து சுமங்கலிப் பெண்களை அழைத்து பூஜை செய்து பச்சை மூங்கிலை வெட்டி முகூர்த்தக் கால் நட்ட போது வீட்டில் கல்யாண களை வந்து விட்டது. அதன் பிறகு பந்தல் கட்டி வாழைமரங்கள் கட்டி பாரம்பரிய வழக்கங்கள் ஒரு புறம் நடந்து கொண்டிருக்க, மறுபுறம் கயல்விழியை இளைஞர் பட்டாளம் சங்கீத் மெஹந்தி என்று படுத்திக் கொண்டு இருந்தார்கள்.

மெஹந்தி வேண்டாம், மருதாணி இலையை அரைத்து வைக்கப் போகிறேன் என்றவளை ஒரு வழி செய்து பல ஆயிரங்களைச் செலவு செய்து சுற்றமும் நட்பும் அவளது கை மற்றும் கால்களை மெஹந்தி டிசைன்களால் நிரப்பி விட்டனர். இடையிடையே குருபிரசாத்தை அவர்களாகவே அழைத்துக் கலாய்க்கவும் செய்தார்கள்.

ப்யூட்டி பார்லர், ஃபேஷியல் அலங்காரம் என்ற வார்த்தைகளே அவளுக்கு அலர்ஜியாகும் வண்ணம் எங்கெங்கு காணினும் மேக்கப் முகங்களே காட்சி அளித்தன. இரண்டு பியூட்டிசியன் பெண்கள் இவர்களுக்காகவே ராப்பகலாகத் தீயாக வேலை செய்தார்கள்.

“பெரியம்மா! உங்க சிக்னேச்சர் மீன் குழம்பு செஞ்சு தாங்க. இனிமேல் என்னைக்கு சாப்பிடப் போறேனோ?”

“ம்மா! நீ ஒன்னும் பெருசா அலட்டிக்காத. அப்படி எல்லாம் உன்ன விட்டுட மாட்டேன். நீ கவலையே படாதே. சீக்கிரமே டெலிவரிக்குன்னு வந்திட்றேன். நீ விதம் விதமா செஞ்சு போடு. நான் சாப்பிடறேன். யாரு வேண்டாம்னு சொல்லப் போறாங்க?”

இப்படியாக இடையிடையே சென்டிமென்ட் சீன் ஓட்டி எல்லாரையும் அழவைத்து தானும் அழுது மதுரையில் வெள்ளம் வரவைத்துக் கொண்டு இருந்தாள் கயல்விழி.

இது போக அவளது கல்யாணம் என்ற சந்தொஷத்தை அனுபவிக்க விடாமல், வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்ட ஜீவன்களும் அங்கே இருந்தன. அவற்றுள் மிக முக்கியமான ஒரு ஜீவன் நான்கு நாட்கள் முன்னதாகவே தங்கையின் கல்யாணம் என்று பத்து நாட்கள் லீவு போட்டு வந்துவிட்ட தீபா தான் என்று சொல்லவும் வேண்டுமா?

“என்னருமை தங்கச்சி கல்யாணம். நான் இல்லாமல் எப்படி நடக்கும்? அதான் சீக்கிரமே வந்தால் உங்களுக்கு ஒத்தாசையா இருக்குமேன்னு வந்தேன் சித்தி” வந்தவுடன் ஐஸ் கட்டிகளை தூக்கி கோகிலாவின் தலையில் வைக்க மதுரை வெயிலில் அது உருகியது போலவே அவளது சித்தியும் உருகிப் போனார்.

கூடவே கோகிலாவின் தமக்கை, அதாங்க நம்ம தீபாவை பத்து மாதம் சுமந்து பெற்ற அன்னை வேற, “என் பொண்ணுக்கு எவ்வளவு அக்கறை பாத்தியா கோகிலா? ஆனா உங்க வீட்டுல என் மகனைத் தவிர யாரும் அவளை மதிக்கக் கூட மாட்டீங்க” என்று அங்கலாய்த்தார்.

கேட்டுக்கொண்டிருந்த அங்கையற்கண்ணியோ ‘என் மகனாமில்ல’ என்று பல்லைக் கடித்தார்.

அதோடு நில்லாமல் கோகிலாவின் அக்கா மேலும் தொடர்ந்தார்,”ஹூம்.. இப்படி தங்கச்சிக்குச் செய்யற வேளை என் பொண்ணுக்கு நல்ல காலம் வரட்டும். அந்த மீனாட்சி கண்ணைத் திறக்கிறாளா.. பார்ப்போம்..”

அதில் ஹைலைட்டான விஷயம் என்னவென்றால் இந்த பிட்டு களை எல்லாம் அப்படியே நம்பி விட்ட கோகிலா, “தீபா கண்ணு கல்யாணம் முடியற வரைக்கும் தங்கச்சி கூடவே இருந்து பார்த்துக்கோ. நீ இருக்கேன்னு தைரியத்தில தான் நான் மத்த வேலையெல்லாம் பார்ப்பேன்” என்றது தான்.

“மீனாட்சி தாயே! என் பொண்ணு கல்யாணத்தை நல்லபடியா நடத்தி வை. கொள்ளிக்கண்ணு எதுவும் அண்டாம பார்த்துக்கோ.. உனக்கு தங்கத்துல தாலி செஞ்சு மாட்டுறேன்” சத்தமாக வேண்டிக் கொண்டு அவர் எழுந்து செல்ல தீபாவின் முகம் எதையோ தின்ற எதுவோ போல ஆனது.

“சுத்தம் பூனைய மடில கட்டிட்டே சகுனம் பார்க்கிறது மாதிரி இருக்கு, உங்க அம்மா சொல்றது” நமட்டுச் சிரிப்புடன் கண்களில் எச்சரிக்கை என்று செய்கை செய்தபடி எழுந்து போனார் அங்கையற்கண்ணி.

கயல்விழியின் வீடு இப்படி இருக்க அங்கே குருபிரசாத்தின் பாங்க் பாலன்ஸைக் குறி வைத்துத் தீயாய் வேலை செய்தார்கள் அவனது உடன் பிறந்த ஆனந்தியும், உடன்பிறவாத இன்னும் பல சகோதரிகளும்.

“அம்மா! பாத்தீங்களா மா உங்க பையன? பொண்டாட்டிக்கு புடவை செலக்ஷன் பண்ணும் போது எவ்வளவு சுறுசுறுப்பு. நமக்கு என்னைக்காவது ஒரு கர்சீப்பாவது வாங்கி கொடுத்திருக்கானா? மும்பை போகும் போதெல்லாம் ஷாப்பிங்கான்னு வாயைப் பிளக்கறவன், யாரும் சொல்லாமலே அவளுக்கு எவ்வளவு வாங்கிட்டு வந்திருக்கான்? இதையெல்லாம் நீங்க என்னென்னு கேட்க மாட்டீங்களா?”

குருபிரசாத் நடுவில் அமர்ந்திருக்க, அவனைச் சுற்றிலும் அமர்ந்து கேள்விக்கணைகளால் சரமாரியாகத் தாக்க அவனோ புன்னகை மன்னனாகக் காட்சி அளித்தான்.

இங்கேயும் பந்தக்கால் நடுவது, வாழைமரம் கட்டுவது, நலங்கு என்று பாரம்பரிய சம்பிரதாயங்கள் எல்லாம் ஒரு புறம் நடக்க மறுபுறம் இளையவர் பட்டாளம் நகரத்து நாகரீகத்திற்கு ஏற்றவாறு திருமணத்திற்குத் தயாராகிக் கொண்டிருந்தது.

இதனிடையே குருபிரசாத் தனது பள்ளி கல்லூரி நண்பர்களுக்காக ஒரு பாச்சிலர் பார்ட்டியை சென்னையில் ஏற்பாடு செய்திருந்தான். தனக்குத் தானே பல்வேறு வகையான சுயபரிசோதனை களைச் செய்திருந்ததால் தெளிந்த நீரோடை போன்ற மனத்துடன் திருமணத்தை வரவேற்க அவன் தயாராக இருந்தான். கயல்விழியின் மனநிலை என்னவோ தெரியவில்லை..

கடிகாரம் யாருக்கும் காத்திராமல் ஓடியதில், நகரத்தின் நாகரீகத்தில் பிறந்து வளர்ந்த குருபிரசாத்தையும் நகரத்தின் சாயல் படாமல் வளர்ந்த கயல்விழியையும் திருமணம் எனும் பந்தத்தில் இணைக்கும் அந்த நாள் வந்தே விட்டது.