சலனபருவம் -3

ஞாயிற்றுக்கிழமை காலை, எட்டு மணி. வீடே பரபரப்பாக இருக்க,

” பெரியம்மா! சூடா உங்க கையால ஒரு காஃபி” என்றபடி வந்தாள் கயல்விழி. விழிகளில் இன்னும் தூக்கம் மிச்சம் இருந்தது.

“என்னடா கண்ணு? இவ்வளவு சீக்கிரமா எழுந்துட்ட? ஞாயித்துக் கிழமை தானே. இன்னும் செத்த நேரம் தூங்கி இருக்கலாமில்ல” என்றபடி அவள் கைகளில் காஃபியை திணித்தார் அங்கையற்கண்ணி.

“ஹூக்கும். இப்படியே இவளை மடியில தூக்கி வச்சிட்டு கொஞ்சிக்கிட்டு இருக்கா. அப்புறம் மீனாட்சி அண்ணி நம்மள எல்லாம் நல்லா வாழ்த்துவாங்க” என்றார் கயல்விழியைப் பெற்ற கோகிலா.

“ம்ச்.. நீங்க கவலைப் படாமல் இருங்கம்மா.. அதெல்லாம் அத்தை உங்களை எதுவும் சொல்ல மாட்டாங்க மா.” அன்னைக்குத் தைரியம் சொன்னாள் கோகிலா பெற்ற மகள்.

“அதெப்படி அவ்வளவு உறுதியா சொல்ற?”

“அதெல்லாம் ராணுவ ரகசியம்.. உங்க கிட்ட சொல்ல முடியாது” என்று மகள் சிணுங்க,

“அடிக்கழுதை! என்ன பெரிய ராணுவ ரகசியம்.. உங்க மாமியாரும் எங்க வீட்டுப் பொண்ணு தானே.. அவளும் வீட்டுக்கு எல்லாருக்கும் செல்லம் தான்.. அவளும் பட்டணத்து வாழ்க்கைல ஏழு மணிக்கு எழுந்து பழகிட்டா போல.. வீடெல்லாம் வேலைக்கு ஆட்கள்.. அப்புறம் அவ எப்படி உன்னைக் கேள்வி கேட்க.. அதான் நீ இவ்வளவு தெனாவெட்டா பேசற..” என்று அங்கையற்கண்ணி சிரித்தார்.

இவர்கள் பேசிக்கொண்டு இருக்கையிலேயே இவளது அண்ணிகள் இருவரும் சித்தியும் சமையல் அறைக்குள் வந்தனர். ஆக மொத்தம் வீட்டில் இருந்த பெண்கள் அனைவரும் சமையல் அறைக்குள்.

“அதே தான் பெரியம்மா…” என்று கண்சிமிட்டியவளை அடிக்க கை ஓங்கிய கோகிலாவிடம் இருந்து தப்பி ஓடி அங்கையின் தோளில் தொங்கினாள்.

“அதெல்லாம் சரி கண்ணு. இதை யாரு உனக்குச் சொன்னது?”

“அவங்க தான் பெரியம்மா.”

“அப்படிப் போடு. ஃபோன்ல உங்க அத்தையைப் பத்தித் தான் இரண்டு பேரும் பேசுறீங்களா?” இப்போது கேள்வி அவளது ஒரு அண்ணியிடம் இருந்து வந்தது.

“ஃபோன்ல இல்ல அண்ணி பூ வைக்கிற அன்னைக்கு நேர்ல வந்திருந்தாங்களே அப்போ அவங்க..” இவள் தயங்கித் தயங்கி ஆரம்பிக்க,

“அட! பார்த்தியா கா! பார்த்த முதல் நாளேன்னு ஏதேதோ சமாச்சாரம் நடந்திருக்குமோன்னு எனக்கு அன்னைக்கே சந்தேகம் வந்தது. நீ தான் இவ அவங்களைப் பயந்துட்டான்னு சொல்லிட்ட. இப்போ பாரு.. அவ வாயால ஓத்துக்கிட்டா.. இப்போ ஒவ்வொன்னா எடுத்து விடு கயல். கேட்போம். இன்னைக்குள்ள முடிச்சிடுவியா?” விட்டால் “ஒரு நாள் போதுமா?” என்று இருவரும் கச்சேரி செய்திருப்பார்கள்.

அண்ணிகள் இருவரும் நாத்தனாரின் கன்னச் சிவப்பைக் கொஞ்சமே கொஞ்சம் பொறாமையுடன் பார்க்க, அன்னையர் மூவரும் அதைப் பெருமையுடன் பார்க்க நேரம் போனதே தெரியவில்லை.

“காலங்காத்தால சமையல் செய்யாம என்ன அங்கே சத்தம்?” என்று சோமசுந்தரம் வந்து கர்ஜிக்கும் வரை இந்த கேலியும் கிண்டலும் தொடர்ந்தது.

“ஒரு நாள் பொம்பளைங்க எல்லாம் ஒன்னு கூடி சிரிச்சிட்டா இந்த ஆம்பளைங்களுக்கு ஆகவே ஆகாது” என்று முணுமுணுத்துக் கொண்டே இரண்டாவது டோஸ் காஃபியை கணவரிடம் திணித்தார் அங்கையற்கண்ணி.

“கண்ணு படற அளவுக்கு எல்லாரும் கூடிக் கும்மாளம் அடிக்க வேண்டிய அவசியம் என்ன வந்துச்சு. தேவையே இல்லை. எல்லாம் அளவோட இருந்தாலே நல்லது” என்று கண்டிப்பாகச் சொல்லி விட்டு நகர்ந்தார் சோமசுந்தரம்.

—–

கயல்விழி வேலை பார்க்கும் வங்கி அது.

பொருளாதார துறையின் உயர் அதிகாரி அவள். வங்கியின் தெற்கு மண்டல அலுவலகம் மதுரையில் இருந்ததால் அவளது பதவிக்கான தேவையும் அங்கேயே இருந்தது.

நிச்சயதார்த்தம் முடிந்து வந்தவளை விஷயம் அறிந்த சக ஊழியர்கள் வாழ்த்து கூறி வரவேற்றனர்.

அதில் mixed response என்று சொல்வார்களே அது போல “ஹப்பாடா! அவ இங்கே இருந்து கிளம்பிடுவா!” என்று ஆசுவாசப் பட்டவர்களும் உண்டு. “உங்களை மாதிரி ஒரு நல்ல டெடிகேடட் வொர்க்கரை மிஸ் பண்ணுவோம்” என்று வருத்தப் பட்டவர்களும் உண்டு.

அவளுக்குத் தெரிந்தும் தெரியாமலும் அவளைத் திருமணம் செய்து கொள்ள விரும்பிய சிலரும் அங்கே உண்டு.

“ஹாய் கயல்விழி! கல்யாணம் ஃபிக்ஸ் ஆகி இருக்காமே. வாழ்த்துக்கள்.” வார்த்தைகளில் வாழ்த்து இருந்தாலும் வாழ்த்திய தொனியில் தெறித்து விழுந்த உணர்வுகளை எடைபோட விரும்பாத கயல்விழி,

“தாங்க் யூ.. கண்டிப்பா எல்லாருக்கும் இன்விடேஷன் உண்டு.” சொல்லி விட்டு நகர்ந்து போனாள். ஆண்களிடம் நின்று பேசிப் பழகும் தன்மை இல்லை அவளுக்கு.

“எங்களை எல்லாம் கூப்பிடவே இல்லை, ரொம்ப சீக்ரெட்டா நிச்சயம் செஞ்சுட்டீங்க போல. கல்யாணத்துக்காவது எங்களைக் கூப்பிடுவீங்களா இல்லை அதுவுமே சீக்ரெட்டா நடக்குமா?” வழிமறித்துக் கேட்டவர்களுக்குப் பதில் சொல்ல முடியாமல் தவிக்கும் போது அவளது தோழி சவிதா வந்து காப்பாற்றினாள்.

“முதல் நாள் நிச்சயம், மறு நாள் கல்யாணம். நான் பத்திரிகை வாங்கிட்டு வந்து தரேன். கண்டிப்பா ராஜா முத்தையா ஹாலா தான் இருக்கும்.. குக் யாருன்னு அங்கிள் கிட்ட கேட்டு சொல்றேன். மறக்காமல் வந்திருங்க.” படபடத்தவளை கயல்விழி தான் இழுத்துக் கொண்டு போனாள்.

“ஏண்டி இப்படி இருக்க? என்ன பயம் உனக்கு? அவங்க எல்லாம் சக மனுஷங்க தான். நல்லா பார்த்து பழகினவங்க கிட்ட கூட நின்னு பேச மாட்டேங்கிற. இப்படியே இருந்தால் நாளைக்கு அண்ணா கூட எப்படி குடும்பம் நடத்தப் போற?” முகத்தில் அறைந்தது போல் கேள்வி கேட்ட தோழியைப் பார்த்து பேந்தப் பேந்த விழித்தாள் கயல்விழி.

“சவீ!”

“பின்ன என்ன டி.. எதுக்கெடுத்தாலும் பயந்தா எப்படி? உங்க வீட்டுல உனக்கு மூணு அப்பாக்கள் இருக்காங்க, நாலு அண்ணா இருக்காங்க, அக்கா வழில இரண்டு மாமா இருக்காங்க. இவங்க யாரையாவது நீ அவாய்ட் பண்ண முடியுமா. குறைஞ்சது நாலு பேரையாவது தினசரி பார்க்கிற, பேசற தானே. கல்யாணம் ஆகி போற இடத்தில மாமனார் இருக்காங்க, அங்கே ஒரு அண்ணன் இருக்காங்க. ஆண்கள் வாடையே படாமல் வாழ நீ என்ன அல்லி ராணியா?”

“ஹா ஹா ஹா! நல்லா இருக்கே. அல்லி ராணி. எனக்கு இத்தனை நாளும் அவங்க கிட்ட பழக அவசியம் வரல. அதுக்காக கல்யாண வாழ்க்கையில் என்ன நடக்கும்னு தெரியாமலா இருப்பேன். இப்படி எல்லாம் ப்ளான் பண்ணி என் ஆள நீ சைட் அடிக்கலாம்னு பார்க்கிறியா? நோ சான்ஸ். அவர் உனக்கு அண்ணா தான்.. உன் மூளைக்குள்ள நல்லா பதிய வச்சிக்கோ.. இல்லேன்னா என் கல்யாணத்துக்கு ப்ளாக் லிஸ்ட்ல முதல் ஆளு நீ தான்” என்றாள் கயல்விழி கண்ணடித்தபடி.

“அடிப்பாவி” என்ற சவிதாவால் தோழியின் மாற்றத்தை நம்பவும் முடியவில்லை அவளுக்கு என்ன பிரச்சினையாக இருக்கலாம் என்று யூகிக்கவும் முடியவில்லை. காலம் பதில் சொல்லும் என்று காத்திருக்கலானாள்.

———

அவசரம் அவசரமாக தனது துணிகளைப் பெட்டியில் அடுக்கிக் கொண்டிருந்த குருபிரசாத்தின் கைகள் அறை வாசலில் கேட்ட சத்தத்தால் ஒரேயொரு நொடி நின்றது.

பின் சத்தத்துக்கு உரியவள் உள்ளே நுழைந்தவுடன் “ம்ச்!” என்று அலட்சியமாகத் தலையசைத்து விட்டுத் தன் வேலையைத் தொடர்ந்தான்.

“டேய்! என்ன டா! ரொம்ப தான் பண்ற!” இப்போ என்ன ஆச்சுன்னு இப்படி அலுத்துக்கற? நீ செஞ்சு வச்ச காரியத்துக்கு ஒவ்வொரு தடவையும் நாங்க தான் ஏகத்துக்கும் சமாளிக்க வேண்டியதா போகுது. ஏன் தான் இப்படி இருக்கியோ? முடியல டா. கொஞ்சமாச்சும் கேப் விடு. உனக்கு ஒரு கல்யாணத்தைச் செஞ்சு வைக்கிறதுக்குள்ள எனக்கு வயசாகிடும் போல இருக்கே” என்று அலுத்துக் கொண்டே அங்கே இருந்த நாற்காலியில் அமர்ந்தாள் அவனது அருமை அக்கா ஆனந்தி.

“ஷ்ஷ்.. அக்காஆஆஆ!! இப்போ எதுக்கு இத்தனை அலுப்பு. என்ன ஆச்சுன்னு இப்படி அலுத்துக்கிற?”

“இன்னும் என்ன டா ஆகணும்? முதல் முறையா பார்த்த பொண்ணு கிட்ட என்ன செஞ்சு வச்சியோ அந்த பஞ்சாயத்து முடிஞ்சு பத்திரிகைய அடிச்சாச்சுன்னு நிம்மதியா இருக்க விடறியா? அவ வேலையைப் பத்தி எதையோ சொல்லி வச்சிருக்க. ஊர்ல வளர்ந்தாலும் இந்தக் காலத்துப் பொண்ணு டா அவ. வீட்டுல என்ன சொல்லி வச்சாளோ, நல்ல வேளையா நம்ம அம்மா அங்கேயே இருந்ததால லேடீஸே பேசி சமாளிச்சிட்டாங்க. அவங்க பெரியப்பா வரைக்கும் விஷயம் போகலை. இல்லேன்னா … ஷப்பா.. நினைச்சாலே கண்ணைக் கட்டுதே… ” என்று நீட்டி முழக்கியவள்,

“ஆமா… தம்பி… அன்னைக்கு அடி ரொம்ப பலமோ?? என்ன தைரியத்தில அவளுக்கு முத்தம் கொடுத்த?” என்றாள் ரகசியக் குரலில்.

“அக்கா! உனக்கு எப்படி தெரியும்!” என் பதிலுக்குத் ஷாக் ரியாக்ஷன் கொடுத்த தம்பியைப் பார்த்துக் கண் சிமிட்டியவள்,

“அப்போ கன்ஃபர்ம்டா அது தானா… இதுக்குப் பேரு தான் போட்டு வாங்கறது தம்பி..” என்று கலகலவென்று சிரித்தாள். “நீ எதுக்கும் கொஞ்சம் உஷாராவே இரு. சட்டுன்னு எதையாவது செஞ்சு வைக்காத. நீ சிட்டி பிராட் அப். அவங்க இதையெல்லாம் ஈஸியா எடுத்துக்க மாட்டாங்க. நாட்டாமை பெரியப்பா எப்போ வேணும்னாலும் தீர்ப்பை மாத்திடுவாரு. பி கேர்ஃபுல்.”

“என் சைடுல நான் கிளியரா இருக்கேன் கா. அவ தான் என் லைஃப்னு. எனக்கு ஏதாவது ஆனால் தான் அதில் மாற்றம் வரும்.”

“குரு…” என்று இடையே புகுந்த ஆனந்தியைக் கண்டு கொள்ளாமல் அவன் பேசினான்.

“அவளைப் பொறுத்தவரை அவளும் இது வரை அப்படித்தான் இருக்கா. அவளால மனம் விட்டு என் கிட்ட நிறைய பேச முடியுது. ஒரு வேளை சில காரணங்களால் நான் வேண்டாம்னு அவ முடிவெடுத்தால் அதை நான் தடுக்க மாட்டேன். பரஸ்பரம் நம்பிக்கை இல்லாமல் லைஃப ஸ்டார்ட் பண்ணக் கூடாது. எங்க இரண்டு பேருக்கும் நிறைய லைஃப் ஸ்டைல்ல வித்தியாசம் இருக்கு. அதையெல்லாம் தாண்டி, நல்லா மேட்ச் ஆவோம்னு இரண்டு பேருக்கும் நம்பிக்கை இருக்கு. இதை எல்லாம் யோசிச்சு பார்த்துட்டுத் தான் பொண்ணு பார்க்கிற அன்னைக்கே நிச்சயம் பண்ண ஓகே சொன்னேன். இதுக்கு மேல என்ன சொல்ல…” பெருமூச்சுடன் அமைதியாக புன்னகைத்து விட்டுத் தன் வேலையைத் தொடர்ந்தான்.

தான் சாதாரணமாக ஆரம்பித்த பேச்சு சீரியஸாக போய்விட்டதை உணர்ந்த ஆனந்தி அதை மாற்றும் முயற்சியில் இறங்கினாள்.

“இந்த அளவு கிளாரிட்டி உன் கிட்ட இருக்கும் போது பிரச்சினையே இல்லை. இப்போ மும்பைல எத்தனை நாள் ஸ்டே?”

“ஃப்ரைடே வரைக்கும் xxxx ஹோட்டல்ல ட்ரைனிங். அப்புறம் நம்ம ஃப்ளாட்ல சாட்டர்டே ஃநைட் மும்பை ஃப்ரண்ட்ஸ்காக பேச்சிலர்ஸ் பார்ட்டி. மன்டே மார்னிங் சென்னை வந்துடுவேன்.”

“ஓஓஓஓஓ…”

“ரொம்ப பெரிய ஓ வா இருக்கே… என்ன விஷயம்? நீங்க ஏதாவது ப்ளான் போடறீங்களா? யார் ஐடியா அம்மாவா?”

“அம்மாவா?? சே சே!” என்று அவள் வேகமாகச் சொல்லியதிலேயே அம்மா தான் என்று அவன் தெரிந்து கொண்டான்.

“அக்கா! இது பிஸினஸ் ட்ரிப். ப்ளீஸ். ஏதாவது ஷாப்பிங் பண்ணிட்டு வான்னு லிஸ்ட் கொடுத்து விடாதீங்க. நான் கல்யாணத்துக்கு எல்லாம் சென்னைலயே வாங்கிக்கறேன். முக்கியமா நானும் என் பொண்டாட்டியும் போய் தான் எங்களுக்குத் தேவையானதை வாங்குவோம். அவளை சென்னைக்கு வரவழைப்பது, என் கூட அனுப்பி வைக்க வேண்டியது எல்லாம் உன் பொறுப்பு” அமெரிக்கா ஜப்பான் மேல் போட்டதை விட பலம் வாய்ந்த குண்டு ஒன்றை ஆனந்தியின் மேல் வீசிவிட்டு ஆனந்தமாகத் தனது மும்பை பயணத்திற்குத் தயாரானான் குருபிரசாத்.

‘பேசாமல் இவன் கல்யாணம் வரைக்கும் காலேஜ் டூர்னு எங்கேயாவது போய்டலாமா?’ என்று தீவிர யோசனையில் ஆழ்ந்தாள் ஆனந்தி.

———

மும்பையின் அந்தப் பிரபலமான நட்சத்திர ஹோட்டலின் கார்ப்பரேட் ஹாலில் இருந்த நூற்றைம்பது பேரும் குருபிரசாத்தின் வாயில் இருந்து வரும் ஒவ்வொரு வார்த்தைகளையும் ரசித்துக் கொண்டு இருந்தனர். அவர்கள் அனைவரும் இந்தியாவின் மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனம் ஒன்றின் வெவ்வேறு கிளைகளின் பொறுப்பாளர்களாக இருப்பவர்கள். எல்லா கம்பெனிகளிலும் வருடாந்திர ட்ரைனிங் என்ற பெயரில் கோடிக் கணக்கான ரூபாய்கள் பட்ஜெட் போடப்படுவது வழக்கம் தான்.

ஆனால் அது எல்லா நிலை ஊழியர்களையும் சென்று சேருகிறதா என்பது பெரிய கேள்விக்குறியே. ஆனால், இது போன்ற பெரிய பதவியில் இருப்பவர்களின் ட்ரைனிங் கிடைத்து விட்டால் குருபிரசாத் போன்றவர்களின் ஆண்டு வருமானம் எங்கோ சென்று விடும். நம் ஹீரோ எப்போதுமே மிகுந்த கவனத்துடன் இருப்பான்.

திமிங்கிலம் வரும் என்பதற்காக சிறிய மீன்களை அவன் விட்டு விடுவதில்லை, எது வந்தாலும் அவனுடன் சேர்ந்து பிடிக்கத் தயாராகவே அவனும் அவனது ஆட்களும் தயாராக இருந்தார்கள்.

வந்திருந்த நூற்றைம்பது பேருக்கும் அறிமுகப் படலம் என்ற ஒன்று நடந்த போது குருபிரசாத் எதிர்பாராத ஒரு ஆளைச் சந்தித்தான்.

“ஐயாம் காளிதாஸ் சிகாமணி ஃபிரம் மதுரை பிராஞ்ச்” என்று அறிமுகப்படுத்திக் கொண்டவன் கயல்விழியின் உடன்பிறந்த சகோதரன். இன்னும் திருமணம் ஆகாதவன்.

“ஓ.. ஹாய்! நைஸ் டூ மீட் யூ ஹியர்” என்றதோடு குருபிரசாத் நிறுத்திக் கொள்ள அவன் மேலும் பேச விரும்பினான் போலும். நம் ஹீரோ அதற்கு இடம் கொடுக்கவே இல்லை.

இடைவேளையின் போது வருங்கால மைத்துனனைச் சந்தித்தவன், “ஹலோ மச்சான்! எங்க தங்கி இருக்கீங்க? ஈவ்னிங் என்ன புரோகிராம்?” என்று குரு கேட்ட கேள்விகளுக்கு அவனிடம் சரியான பதில் இல்லை. அவனுக்கு கோபம் என்பது புரிந்தது போல அவனே சமாதான முயற்சியில் இறங்கினான்.

“உங்களுக்கே தெரியும். டிரைனிங்ல பல பாஷை பேசறவங்க மத்தில நாம சொந்தம்னு சொல்லிட்டு பேசினா, டைம் வேஸ்ட் ஆகுதுன்னு பிரச்சினை ஆயிடும் மச்சான். அதான் பேசலை. இங்கே நமக்கு ஒரு ஃப்ளாட் இருக்கு. நான் மும்பை வந்தா அங்கே தான் தங்குவேன்.” இப்போது குரு பேச்சை வளர்க்க, காளிதாஸோ “இட்ஸ் ஓகே நோ ப்ராப்ளம். எனக்கு ஆஃபீஸ் அரேஞ்ச் பண்ணி கொடுத்து இருக்காங்க” என்று நிறுத்திக் கொண்டான்.

“என்னைக்கு ரிட்டர்ன் புக் பண்ணி இருக்கீங்க. நான் சனிக்கிழமை இங்கே இருக்கும் ஃப்ரண்ட்ஸ்காக ஒரு பார்ட்டி அரேஞ்ச் பண்ணி இருக்கேன். நீங்க கண்டிப்பா வரணும்.” பவ்யமாகவே மைத்துனனை அழைத்தான் குரு.

“ஓ.. ட்ரை பண்றேன்.. நான் சன்டே மார்னிங் கிளம்பறேன். சீ யூ.” பட்டும் படாமலும் பேசிவிட்டு சென்றான் காளிதாஸ்.

மாலை வேளைகளில் தனியாக மொபைலும் கையுமாகக் கடற்கரையில் உலாவிய குருபிரசாத் அங்கே காளிதாஸையும் கண்டதும் குஷியானான். ஆனால் அவன் அருகில் செல்லச்செல்ல காளிதாஸின் உடனிருந்தவரும், இருவரும் இருந்த நிலையும் குருவை அப்படியே யூ டர்ன் அடிக்கச் செய்தது.

சனிக்கிழமை இரவு நடந்த பார்ட்டிக்கு மைத்துனனை மீண்டும் அழைத்த குருபிரசாத், மறக்காமல் தனியே வரும் படி திரும்பத் திரும்ப வலியுறுத்தினான்.

காளிதாஸின் குற்றமுள்ள நெஞ்சம் குறுகுறுத்ததில் மதுரையில் இருந்த அவனது வீடு கொந்தளித்தது. விளைவு, குருபிரசாத் திங்கட்கிழமை காலை சென்னையில் உள்ள அவனது சொந்த வீட்டில் கால் வைத்த போது, சோமசுந்தரம் முதல் கயல்விழியின் வீட்டு ஆண்கள் அனைவரும் சில பல சாட்சிகளுடன் அவன் சட்டையைப் பிடித்துக் கேள்வி கேட்கத் தயாராக இருந்தனர்.