சலனபருவம் – 2

கட்டிலில் படுத்துக்கொண்டு விட்டத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் குருபிரசாத். பக்கத்தில் கிடந்த அலைபேசி, தொடர்ந்து ஒலி எழுப்பி கொண்டே இருந்தது. “பார்த்த முதல் நாளே” என்று பாடிய ரிங் டோன் அழைத்தது யார் என்று காட்டிக் கொடுத்தாலும் அவனது கவனம் அதில் இல்லை. மனம் அலை பாய்ந்து கொண்டிருந்தது.

அலைபேசி தொடர்ந்து ஒலி எழுப்ப வேறு வழியின்றி அழைப்பை ஏற்றுக் காதில் வைத்தவன் அமைதியாக இருந்தான்.

“ஹலோ! ஹலோஓஓஓ! ஏங்க! நான் நான்… நான் தான் பேசறேன்!…” திக்கித்திணறிப் பேசினாள் அவள்.

“….” அவன் மௌனமாக இருந்தான்.

“நீ… நீங்க தானே? ஏதாவது பேசுங்களேன்” அவள் அழும் குரலில் கெஞ்சிக் கொண்டிருக்க, அவள் இத்தனை நாள் செய்ததை அவன் இப்போது செய்தான். அதாவது, பிடிவாதமாக வாய் திறக்க மறுத்தான்.

“மிஸ்டர்.குருபிரசாத் தானே லைன்ல? நான் கயல்விழி பேசறேன். இப்போ நீங்க வாயைத் திறந்து ஏதாவது பேசல, இனிமேல் நான் பேசவே மாட்டேன்.”

இப்போது அவளது குரலில் ஒரு கம்பீரம் வந்து சேர்ந்தது. அவனது முகத்தில் புன்னகையை வரவழைத்தது. வாய் விட்டுச் சிரித்தான்.

“எப்பூடி? ஐயாவோட சாமர்த்தியம்? இப்போ மட்டும் எப்படி பேச்சு வந்தது?”

“ம்ம்… அது அப்படித்தான்.. நாங்க எல்லாம் பேச வேண்டிய நேரத்தில கரெக்டா பேசுவோம்.”

“ஓ… அப்போ மத்த நேரம் எல்லாம் ஒன்லி ஆக்ஷன்.. நோ பேச்சுன்னு சொல்ற… சே.. நான் ஒரு மடையன்.. இது கூட தெரியாமல் உன்னை என்னமோன்னு நினைச்சுட்டேன் பாரேன்”

“அச்சோ… நான் அப்படிச் சொல்லலை..” “நீ எப்படிச் சொன்னாலும், எனக்கு அப்படித் தான் அர்த்தம் ஆகுது. ஓகே. அப்புறம், பிற்காலத்தில், எனக்கு மறந்து போச்சுன்னா நீ தான் ஞாபகப் படுத்தணும் சரியா” என்று டீல் வேறு பேசினான்.

“அத்தையும் மாமாவும் குலதெய்வம் கோவிலுக்கு பத்திரிகை வைக்க வந்திருக்காங்க..” என்று அழகாக பேச்சை மாற்றினாள் அவள்.

“அதானே பார்த்தேன், என்னடா கயல்விழி மேடம் ஏதோ ரொமாண்டிக்கா பேசற மாதிரி தெரியுதேன்னு ஒரே ஒரு செகண்ட் யோசிச்சேன். இதோ, நான் அவளில்லைன்னு சொல்லிட்டேல்ல. இன்னைக்கு உங்க அத்தையும் மாமாவும் வருவாங்கன்னு ஒரு வாரம் முன்னாடியே தண்டோரா போடாத குறையா சொல்லியாச்சே… அப்புறம் என்ன?”

“அதில்ல… ஒரு வேளை நீங்களும் வருவீங்களோன்னு…”

“ம்… அப்புறம்..”

“நிஜமா.. ப்ராமிஸா.. எனக்கு சர்ப்ரைஸ் கொடுக்கன்னு சொல்லாமல் கொள்ளாமல் வருவீங்களோன்னு….” என்றவளின் குரல் மிகவும் கம்மி விட அவனுக்கு அப்போதே அவளிடம் பறந்து சென்று விடவேண்டும் போலிருந்தது. அவள், அவனை எதிர்பார்த்திருக்கிறாள் என்பதே இனித்தது. ஆனால்!!

“ஷ்ஷ்… கயல்…” என்றான் கரகரத்த குரலில்.

இரண்டு நிமிடம் இரண்டு முனையும் மௌனம் சாதித்தது.

“இட்ஸ் ஓகே..வர முடியாதுன்னு தெரியும்” என்று அவள் ஆரம்பிக்க,

“அது சரி. நானும் அவங்க கூட வந்து, நிச்சயம் முடிஞ்ச பிறகு மாப்பிள்ளையும் பொண்ணும் பார்க்கக் கூடாது பேசக் கூடாதுன்னு ஊர்ல இரண்டு பெரிய்ய்ய்ய்ய தலைகள் சொல்ல, நான் அதையெல்லாம் தாண்டி உன்னை வந்து பார்க்க, கூடவே நம்ம பொண்டாட்டி ஆகப் போறவ தானேன்னு ஆர்வக் கோளாறுல எதையாவது செஞ்சு வைக்க, நீ உன் கனவுல கராத்தே கிளாஸ்ல கத்துக்கிட்ட வித்தை எல்லாம் என்கிட்ட காட்டி என்னை விழ வைக்க, அதுக்கு நீ அழுது ஊரையே கூட்ட, பலமா அடி வாங்கின நான் வலியைத் தாங்கிட்டு அழக் கூட முடியாமல் அமைதியா நிக்க, ஊரே வந்து என்னை முறைக்க… ஹப்பா சொல்லும் போதே எவ்வளவு மூச்சு வாங்குது… நாம இனிமேல் கல்யாணத்துக்கு முதல் நாள் மீட் பண்ணிக்கலாம், அதுக்கு முன்னாடி நோஓஓஓஓஓ.. மீட்டிங்… ஒன்லி காலிங்” என்றவனுக்கு மூச்சு வாங்கியது.

“லுக் கயல்! நாம நேர்ல மீட் பண்ணி எதுவும் ஆகப் போறதில்லை. ஃபோன்ல பேசும் போது சரியா பேசினாலே போதும். ரொம்ப நேரம் வேண்டாம். ஒரு பத்து நிமிஷம் போதும். எதுவானாலும் கேசுவலா என் கிட்ட பேசலாம் ” என்று அவனே தொடர்ந்தான்.

“ம்ம்…” அந்தப் பக்கம் அவள் வேகமாக மண்டையை ஆட்டுவதை இவனால் உணர முடிந்தது.

“சொல்லும் போது நல்லா மண்டைய ஆட்டு. ஆனா, மொபைல கைல எடுத்த உடனே எல்லாத்தையும் மறந்து போயிடு. நீயெல்லாம் எப்படித்தான் பெரிய பேங்க்ல போய் வேலை பார்க்கிறியோ? கல்யாணம் முடிஞ்சதும் முதல்ல உன் வேலையைத் தான் கவனிக்கணும்.” சற்றே எரிச்சல் எட்டிப் பார்த்தது அவன் குரலில்.

“ஐயோ… என்னால நாள் பூராவும் வீட்டுல உட்கார முடியாது. ப்ளீஸ்.. ப்ளீஸ்.. நான் வேலைக்குப் போறேனே..” விட்டால் அங்கிருந்தே காலில் விழுந்திருப்பாள்.

“அட.. இது கூட நல்லா இருக்கே. காரியம் ஆகணும்னா கயல்விழி கிட்ட இருந்து எத்தனை ப்ளீஸ் வருது.. இதுக்கு ஓகே சொல்லணும்னா எனக்கு என்ன தருவ? ம்… அதைச் சொல்லு முதல்ல..” என்று பேரம் பேசியவனிடம் பதில் பேசாமல் அமைதி காத்தாள் கயல்விழி.

“ஹூம்… சைலண்ட் மோடுக்குப் போயாச்சா.. நான் சொன்னதை நல்லா கேட்டியா இல்லையா? உன் வேலையை கவனிக்கணும்னு தான் சொன்னேன், விடணும்னு சொல்லலை. நீ எப்போதும் போல வேலைக்குப் போகலாம். அதைத் தடுக்க நான் யாரு?” என்றவன் மொபைலை அணைத்துத் தூக்கி எறிந்தான்.

இதில் பல பி.எச்டி. பட்டம் வாங்கியவன் என்பதால் மொபைல் சோஃபா குஷனில் சென்று சேஃப் லேண்டிங் ஆனது. அதன் பிறகு கயல்விழி பலமுறை பலர் மூலம் முயன்றும் அன்று முழுவதும் அவன் சிக்கவே இல்லை. கயல்விழி குருபிரசாத்துடன் பேச முயற்சி செய்து கொண்டிருந்த வேளையில் அவனது நினைவுகள் முழுவதையும் அவளே ஆக்கிரமித்து இருந்தாள்.

கடந்த இரண்டு மாதங்களாக அவளுடன் பேசியதில் வாய் மூடாமல் எதையும் அலசி ஆராய்ந்து பேசுபவளுக்குச் சில விஷயங்களைப் பற்றிப் பேசுவது அவளுக்கு அவ்வளவு எளிதாக இருக்கவில்லை என்பதை குருபிரசாத் போகிற போக்கில் கவனித்து இருந்தான். அதன் விளைவு அவனைப் பெரிய அளவில் சுய அலசலில் ஈடுபட வைத்தது.

அவனது அக்கா ஆனந்திக்கும் அவனுக்கும் நான்கு ஆண்டுகள் வித்தியாசம். அவளது இருபத்து நான்காவது வயதில் திருமணம் நடந்த போது இவன் கல்லூரி வாழ்க்கையில் பாதியைக் கடந்திருந்தான். ஆனந்தி அப்போது ஒரு மருத்துவக் கல்லூரியில் மைக்ரோபயாலஜி துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வந்தாள். அதே துறையில் பேராசிரியராவது என்னும் லட்சியத்துடன் தான் அவளது திருமணம் நடந்தது. அவளது கணவன் மற்றும் புகுந்த வீட்டின் முழு ஆதரவும் கிடைக்கவே தனது லட்சியத்தை வெற்றிகரமாகவே அடைந்து விட்டாள். அவளது கணவன் ஒரு மருத்துவன் என்பதும் ஒரு காரணம். அவர்களது இனிய இல்லறத்தின் சான்றாக ஆணொன்றும் பெண் ஒன்றுமாய் இரண்டு குழந்தைகள்.

ஆனந்திக்குத் தன் தம்பியும் ஒரு டாக்டர் என்று சொல்லிக் கொள்ள ஆசை. ஆனால் அந்தத் தம்பிக்கோ டாக்டர், இன்ஜினியர் போன்ற புரோஃபஷனல் படிப்புகளில் ஆர்வம் என்பது சுத்தமாக இல்லை. மனிதவள மேம்பாட்டு துறையில் இளங்கலை முதுகலைப் பட்டங்களைப் பெற்றவன், இன்றைக்கு அனைவருக்கும் அத்தியாவசிய தேவையாக இருக்கும் ஒரு துறையைத் தேர்ந்தெடுத்து அதில் படிப்படியாக முன்னேறினான்.

அது தான் soft skills and personality development துறை. அங்கிங்கெனாதபடி நீக்கமற அனைத்துத் துறைகளிலும் எல்லா நிலைகளிலும் உள்ள பணியாளர்களுக்குத் தேவையான திறமை அது. உலகின் பல்வேறு பல்கலைக்கழகங்களிலும் சில பல சான்றிதழ்களைப் பெற்றவன், இப்போது தனது முப்பதாவது வயதில் இந்தியாவின் முதன்மையான ட்ரைனர்களில் ஒருவராகத் திகழ்கிறான்.

அவனது நிறுவனத்தில் ஆண்டு தோறும் பலர் சாஃப்ட் ஸ்கில் ட்ரைனராகச் சான்றிதழ் பெறுகிறார்கள். இந்தியா மட்டும் அல்லாமல் உலகின் பல்வேறு நிறுவனங்களின் பணியாளர்களுக்கு இவர்களது ட்ரைனர்கள் பயிற்சி அளிக்கிறார்கள்.

இந்த வகையில் மிகுந்த பொறுமைசாலியான குருபிரசாத் பல வேளைகளில் வீட்டில் தனது முகமூடியைக் கழட்டி விடுவதும் உண்டு. அதாங்க, சட்டுன்னு வர்ற கோபத்தைக் கஷ்டப்பட்டு அடக்காமல் பட்டுன்னு காட்டிடுவான். இதுநாள் வரை தான் உண்டு தன் வேலை உண்டு என்று திருமணத்தை அவன் தள்ளிப் போட, ஒரு நாள் அதிரடியாக வீட்டினர் முடிவு செய்து விட்டனர்.

ஒரு திங்கட்கிழமை காலை அலுவலகம் கிளம்பிக் கொண்டிருந்தவனைப் பிடித்துக் கொண்டார் மீனாட்சி.

“டேய் காலாகாலத்தில ஒரு கல்யாணம் பண்ணிக்கோன்னு சொல்லிச் சொல்லி என் வாய் தான் வலிக்குது. உனக்கு இன்னும் ஆறு மாசம் தான் டைம். அதுக்குள்ள, ஒன்னு நீயா ஒரு பொண்ணைப் பார்த்துக் கூட்டிட்டு வா. ஜாம் ஜாம்னு நாங்க கல்யாணம் பண்ணி வைக்கிறோம். இல்லையா நாங்க ஒரு பார்க்கிற பொண்ணு கழுத்துல தாலியைக் கட்டிக் குடும்பம் நடத்து.”

வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று பேசிய மனைவியை மெச்சுதலாகப் பார்த்தார் சோமசுந்தரம். இருவரையும் கொலைவெறியுடன் பார்த்தான் புதல்வன்.

“ஏம்மா.. ஒன்லி டூ ஆப்ஷன் தானா.. இந்த மூனாவது நாலாவது ஆப்ஷன் எல்லாம் கிடையாதா?” “இருக்கே.. இது இரண்டுக்கும் ஒத்து வரலேன்னா இந்த ஜென்மத்தில உனக்குக் கல்யாணம்னு ஒன்னு நடத்தி வைன்னு நீயா கேட்கிற வரைக்கும் நாங்க யாரும் அதைப் பத்தி வாயைத் திறக்க மாட்டோம்.”

“அச்சோ… என் செல்ல அம்மா இல்ல.. என்னம்மா நீ என் கூட பேசாமல் உன்னால இருக்க முடியுமா?”

“டேய்.. உன் கூட பேச மாட்டேன்னா சொன்னேன்.. கல்யாணத்தைப் பத்தி பேசமாட்டோம்னு தான் சொன்னேன்..”

“ஹப்பாடா… ரொம்ப நிம்மதி… அப்போ நானா கேட்கிற வரைக்கும் நீங்க கல்யாணம் பத்தி பேசமாட்டீங்க..”

“அதுக்கு முன்னாடி இரண்டு ஆப்ஷன் இருக்கே… அதுல ஒன்னு இன்னைக்கு இப்போ இந்த நிமிஷத்துல இருந்து அமலுக்கு வருது.. ”

“ஓ… அப்போ.. இரண்டாவது ஆப்ஷனே எனக்கு ஓகே மா.. முதல் ஆப்ஷனுக்கு நான் எங்கே போக..” உடனே ஜகா வாங்கினான் மைந்தன்.

“ஏன் டா? எத்தனை கம்பெனிக்குப் போற? ஒன்னுல கூடவா உனக்குப் பிடிச்ச மாதிரி ஒரு பொண்ணு கூட இல்ல?” முகவாயில் கை வைத்து மீனாட்சி ஆச்சர்யப்பட,

“மா… நான் என்ன வேலைக்குப் போறேன்.. நீங்க..” என்று பல்லைக் கடித்தவனைக் கண்டுகொள்ளாமல்,

“சரி.. சரி.. உனக்குத் தான் தைரியம் இல்லைன்னு எனக்கு என்னைக்கோ தெரியுமே.. இப்போ நான் எப்படிப்பட்ட பொண்ணு பார்க்கட்டும். அதை மட்டும் சொல்லு.”

மீனாட்சி ஒரு தாயாக மிகுந்த குஷியானார். கர்வத்துடன் கணவரைப் பார்த்தார். அவருக்குத் தெரியும், மகன் இதைத் தான் சொல்வான் என்று.

“எனக்கு எப்படி இருந்தாலும் ஓகே மா.. நல்லா படிச்சிருந்தால் போதும்..” அப்படி என்ன அவனுக்குப் பொருத்தம் இல்லாத பெண்ணையா பார்த்து விடுவார்கள் என்று சொன்ன வார்த்தைகள் தான். கயல்விழியின் புகைப்படத்தைக் கண்டவுடன் மயங்கியவன் தான்.

ஆனால் இப்போது….

இந்தக் கல்யாணம் சரிதானா என்று கூட சில நேரங்களில் தோன்றுகிறது. நினைவுகளில் இருந்து மீண்டவனை கயல்விழியின் முன்னுக்குப் பின் முரணான சில பேச்சுக்கள் கண்டதையும் யோசிக்க வைத்தன. இரண்டு நாட்கள் முன்பு நடந்த அலைபேசி உரையாடலை ஞாபகப் படுத்திப் பார்த்தான்.

எம்எஸ் சுப்புலட்சுமி முதல் நித்யஶ்ரீ வரை, எஸ்பிபி முதல் அனிருத் வரை, மைக்கேல் ஜாக்சன் முதல் ஜஸ்டின் பீபர் வரை, கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை, கபில் தேவ் முதல் விராட் கோலி வரை என்று ஆர்வத்துடன் அலசி ஆராய்ந்தவள், உலகப் பொருளாதாரம் என்பது அவளது துறை ஆதலால் அவனுக்கே பாடம் எடுத்தவள்,

“ஹேய் பேபி! அதெல்லாம் இருக்கட்டும். நாம ஹனிமூன் எங்க போகலாம். அதைப் பத்தி பேசு. என் ஃப்ரெண்ட்க்கு xxxxxல ரிசார்ட் இருக்கு. ரூம் புக் பண்ணி வைக்கிறேன்னு சொல்றான். உனக்கு அங்கே ஓகேவா? எத்தனை நாள் ஸ்டே பண்ணலாம்?” என்று கேட்ட அடுத்த நொடியே அமைதியாகிவிட்டாள்.

‘அவளுக்கு இந்தக் கல்யாணம் பிடிக்கலையா? சே.. சே.. அப்படி எல்லாம் இல்லை.. என்னைப் பார்த்த உடனே அவள் கண்களில் தோன்றிய உணர்வுகள் பொய்யில்லை. அவளுக்கு என்னைப் பிடித்திருக்கிறது’ கேள்வியும் நானே பதிலும் நானே என்று சற்று நேரம் கழித்தான்.

‘ஒரு வேளை அவளுக்கு ஏதாவது பிரச்சனையா? யாரால இருக்கும்? என்னன்னு தெரியாமல் எப்படி சரி செய்யறது? யார் கிட்ட கேட்கிறது?’ அவனுக்கு இப்படிப் பல கேள்விகள் பிறந்தது அன்று.

—–

குருபிரசாத்தை இவ்வாறு குழப்பி விட்ட கயல்விழியும் நிம்மதியாக இருக்கவில்லை. அவனை எப்படியாவது சமாதானப் படுத்த வேண்டும் என்று பகீரதப் பிரயத்தனங்களைச் செய்து பார்த்தாள். வருங்கால மாமியார் நாத்தனார் மூலம் தூது விட்டுப் பார்த்தாள், அவனது வருங்கால மாமனார்கள், மைத்துனர்கள் மூலம் தூதுவிட்டாள். எல்லாம் மறைமுகமாகத் தான்.

ஆனால் அவனோ உச்சாணிக் கொப்பில் அமர்ந்து கொண்டு இறங்கி வர மறுத்து விட்டான். ‘ஷப்பா.. இப்பவே கண்ணைக் கட்டுதே’ என்று நினைத்திருப்பாளோ என்னவோ, தெரியவில்லை.

அவளும் தன் பங்குக்கு ஒரு சுய அலசலில் ஈடுபட்டாள். மதுரைக்கு அருகில் கிராமமும் அல்லாத டவுனும் அல்லாத ஒரு ஊரில் பிறந்து வேலைக்காகக் கூட மதுரையைத் தாண்டாத தான் எப்படி சென்னையின் நாகரீகத்தில் பிறந்து வளர்ந்தவனைத் திருமணம் செய்ய சம்மதித்தோம் என்று ஆச்சரியமாக இருந்தது. என்ன தான் அவர்களது வீடு பழைய பஞ்சாங்கமாக இருந்தாலும் அவரவர் வாழ்க்கை என்று வருகையில் சம்பந்தப்பட்டவர்களின் சம்மதம் இல்லாமல் முடிவெடுத்ததில்லை. அவளுக்கும் அப்படியே.

மற்றவருக்கு எல்லாம் சுற்றுவட்டாரத்தில் பெண் எடுத்து, பெண் கொடுத்து என்று இருக்க, இவளுக்கு மட்டும் கடைக்குட்டி என்று ஒரு எக்ஸ்ட்ரா சலுகை போலும். கல்யாணப் பெண்ணுக்கே உரிய மகிழ்ச்சியும் பூரிப்பும் இருந்தாலும் கூடவே பலவிதமான தயக்கங்கள் மற்றும் குழப்பங்களுடன் ஒவ்வொரு நாளையும் கழித்தாள்.

இப்படியாக அவர்களது உறவு அலைபேசி மூலம் சாண் ஏறுவதும் முழம் சறுக்குவதுமாக இருக்க, நடுவில் ஓர் திருப்பத்தைக் கொண்டு வந்தது குருபிரசாத் தன் நண்பர்களுக்கு கொடுத்த பேச்சிலர்ஸ் பார்ட்டி.