சலனபருவம் -15

குருபிரசாத் மிகவும் குழப்பமான மனநிலையில் இருந்தான். கணவனும் மனைவியும் இப்போது மும்பையில் இருந்த அவர்களது ஃப்ளாட்டிற்கு வந்திருந்தார்கள். நுழைந்த உடனேயே இது என் வீடு என்று ஓர் உரிமை வந்து ஒட்டிக் கொண்டது கயல்விழியிடம்.

“இது தான் ஹால், இது கிச்சன், இது பால்கனி, இது கெஸ்ட் ரூம், இது ஆஃபீஸ் ரூம்” என்று விவரித்துக் கொண்டு வந்த குருபிரசாத் அவர்களது படுக்கை அறைக்குள் வந்தவுடன் எதுவும் பேசாமல் நின்றுவிட்டான். கணவனின் பேச்சு நின்றதை அறிந்த கயல்விழி சுற்றிலும் பார்த்து அது என்ன அறை என்பதைக் கண்டு கொண்டாள்.

மாதக் கணக்கில் யாரும் இல்லை என்றாலும் வீடு அழகாக ஒரு தூசி கூட இல்லாமல் பராமரிக்கப் பட்டு இருந்தது. எப்படி என்று யோசிக்க வழியில்லாமல், “ஹாய் குரு! ஹலோ சிஸ்டர்!” என்று அழைத்தவாறு உள்ளே நுழைந்தான் கணேஷ், குருபிரசாத்தின் நண்பன். இவர்களுக்கான காலை உணவையும், கூடவே சில காய்கறிகளையும் கொண்டு வந்திருந்தான்.

“நானும் இதே அப்பார்ட்மெண்ட்ல தான் இருக்கேன் சிஸ்டர். டென்த் ஃப்ளோர். இவனை மாதிரி இல்லாமல், நான் இங்கேயே செட்டில் ஆனவன். பிரேக் ஃபாஸ்ட் கொண்டு வந்துட்டேன். வீட்டில செஞ்சது தான். லஞ்சுக்கு வீட்டுக்கு வாடான்னா, என் பொண்டாட்டி நல்லா சமைப்பான்னு சொல்லிட்டான். ஏதாவது ஹெல்ப் வேணும்னா சொல்லுங்க, என் வைஃபை அனுப்பி வைக்கிறேன்” என்று கயல்விழியின் மனதில் தோன்றிய சந்தேகங்களுக்கு எல்லாம் விளக்கம் கொடுத்தவன்,

“ஆனால் உங்க இரண்டு பேருக்கும் டின்னர் இன்னைக்கு எங்க வீட்டுல தான். நோ எக்ஸ்யூஸஸ்..” என்று கூடுதல் தகவலையும் தந்தான்.

“டேய்! எதுக்குடா சிரமம்?” என்று குரு மறுக்க நினைக்க,

“”இதுல என்னடா சிரமம்? அம்மா கண்டிப்பா சொல்லிட்டாங்க. விட்டால் அவங்க காலங்காத்தால வந்து உங்களுக்கு எல்லாம் செஞ்சு கொடுத்திருப்பாங்க. நான் தான் புதுசா கல்யாணம் ஆன ஜோடிகளுக்கு நடுவில நந்தி மாதிரி போகாதம்மா, எங்களுக்கு தான் வேற வழியே இல்லை. குருவையாவது விட்டு வைன்னு சொல்லிட்டு வந்திருக்கேன்” என்று இரண்டு பிட் சேர்த்தே போட்டான்.

“ஆன்ட்டி இருக்காங்களா? அப்போ நாங்க வந்து பார்க்கிறது தானே முறை. நீங்க என்ன இப்படி சொல்லிட்டீங்க?” என்று கயல்விழி இடைப்புக நண்பர்கள் இருவரும் சத்தமாகச் சிரித்தனர்.

“இரண்டு நாள் போதும் உங்களுக்கு எங்க அம்மா பத்தி தெரிஞ்சுக்க, என் வைஃப் இங்கேயே பிறந்து வளர்ந்தவ. தமிழ் கொஞ்சம் இல்லை ரொம்பவே ததிகிநதோம் போடும். அம்மாவுக்கு ஹிந்தியோ மராத்தியோ தோடா தோடா மாலும் தான். தமிழ் பேசற ஆளைக் கண்டால் விடாது கருப்பு மாதிரி பிடிச்சுக்குவாங்க. எதுக்கும் நீங்க வரும் போது ஊர் பெருமை எல்லாம் பேசாமல் இருக்க ட்ரைனிங் எடுத்துட்டே வாங்க. நான் வரேன்.. ஈவ்னிங் மீட் பண்ணலாம்” என்று கிளம்பி விட்டான்.

போகும் போது, “குரு இன்னைக்கு ஆஃபீஸ் போகப் போறியா? நானும் வரவா?” என்றவனுக்குக் கயல் அறியாமல் ஆமாம் என்ற பதிலைக் கொடுத்து அனுப்பி வைத்தான் குருபிரசாத்.

காலை உணவுக்குப்பின் குருபிரசாத் மும்பையில் இருந்த அவனது அலுவலகம் கிளம்பினான். மனைவிக்குத் தேவையான காய்களை நறுக்கிக் கொடுத்து, சமையல் பாத்திரங்கள், புளி, பருப்பு வகைகள், சாம்பார் தூள், மஞ்சள் தூள் என்று தேவையானவற்றை அடையாளம் காட்டிவிட்டே வெளியே சென்றான்.

பாதிக் கிணறு தாண்டி விடக் கணவனின் உதவி கிடைத்ததும் கயல்விழி தன் சமையல் திறமையை வெளிக்கொணர முயற்சி தான் செய்து கொண்டிருந்தாள். சாப்பிட மட்டுமே சமையல் அறைக்குள் சென்று வந்தவளுக்கு முதல் நாளே நளபாகம் வாய்த்து விடுமா என்ன? இடையிடையே சென்னைக்கும் மதுரைக்கும் எத்தனை ஃபோன் கால்கள் பறந்தன என்று கணக்கில் வைக்க இயலாது.

அவற்றை எல்லாம் தாண்டி கையைச் சுட்டுக் கொண்டு ஏதேதோ சாகசம் செய்து பொழுதைப் போக்கிக் கொண்டிருந்தாள் கயல்விழி.

அலுவலகம் வந்த குருபிரசாத், வந்த கடமைக்கு ஏதோ வேலையை பார்த்து விட்டு மனைவியைப் பற்றிய யோசனையில் ஆழ்ந்தான். மனம் இரண்டு நாள் முன்னதாக நடந்த நிகழ்ச்சியில் ஆழ்ந்தது.

“சே.. என்னை விடுண்ணே.. எனக்கு எப்படி இதை யூஸ் பண்ணனும்னு தெரியும். அப்படி தெரியலேன்னா, அக்கா, அண்ணி எல்லாம் இருக்காங்க. அவங்க கிட்ட கேட்டுக்கிறேன். நீ முதல்ல வெளியே போ. இல்லேன்னா கத்துவேன்” என்று தூக்கத்தில் பிதற்றிக் கொண்டிருந்தாள் கயல்விழி.

அவளை எழுப்பி விடுவோமா என்று ஒரு நொடி நினைத்தவன், வேண்டாம் என்று முடிவுக்கு வந்தான். அவளது ஆழ்மனதில் தன்னிடம் நேரடியாக சொல்ல முடியாத விஷயங்கள் நிறைய இருக்கிறது என்று புரிந்து கொண்டான். அவை இப்படி வெளியே வரட்டும் என்று காதைத் தீட்டிக் கொண்டு காத்திருந்தான். அதற்கேற்ப கயல்விழி தூக்கத்தில் நீண்ட நேரம் அவள் மனதைத் திறந்து குமுறிக் கொண்டு இருந்தாள்.

“ஏய் தீபா! நீ என்ன அண்ணன் கிட்ட போய் இதைப் பத்தி பேசற.. லூசா நீ”

“அண்ணே! தயவு செய்து போயிடு. உனக்குப் புண்ணியமா போகும்”

அவற்றை எல்லாம் யோசித்தவனுக்கு மனைவியிடம் இதைப் பற்றி எப்படிப் பேசுவது, பேச்சை ஆரம்பிப்பது என்று குழப்பம் ஏற்பட்டது. அன்று யோசித்துக் கொண்டே தூங்கி விட்டவன் மறுநாளே மும்பை வந்து விட்டான். தனது வீடு என்ற உணர்வு கயல்விழியின் ஆழ்மனதைத் திறக்க வழிவகுக்கும் என்று ஒரு நம்பிக்கை தான்.

—-

அன்று மதியம் குருபிரசாத் தனது வீட்டின் அழைப்பு மணியை ஒலிக்கவிட்ட போது உள்ளே இருந்து வந்த வாசனைகளில் மெய்மறந்து போனான். “சாப்பாடு வாசனை எல்லாம் நல்லா தான் இருக்கு. டேஸ்ட் எப்படி இருக்குமோ ஆண்டவனே” என்று வாய் விட்டு புலம்பியவனை முறைத்துக் கொண்டு நின்றிருந்தாள் கயல்விழி.

எப்போது கதவு திறந்தது என்று அறியாமல் வாயைக் கொடுத்து மாட்டிக் கொண்டவன் சமாதான முயற்சியில் இறங்கினான். அது தான் அவனுக்கு கை வந்த கலை ஆயிற்றே.

“உப்பு உரைப்பு எல்லாம் சரியா இருந்தால் தான் வாசனை சரியா இருக்கும்னு எங்க அம்மா சொல்லுவாங்க. அதைத் தான் நான் சொல்ல வந்தேன். அதுக்குள்ள நீ அவசரப் பட்டு மாமன முறைக்கிற” என்று குறைப்பட்டுக்கொண்டு அவளது கையை முகர்ந்தான்.

“ம்ம்.. ஹாஆஆ” சாப்பாடு செஞ்ச உன் கையே இப்படி வாசனையா இருக்கே சீக்கிரம் வந்து எனக்கு சாப்பாடு போடு.. வா..வா..” அவளுக்கு ஐஸ் வைத்து இருவரும் மதிய உணவை சாப்பிட்டு முடித்தனர்.

அவளது கையால் மட்டும் இன்றி வாயில் இருந்தும் உணவைப் பெற்றுக் கொண்டு, “டெலிஷியஸ்!!” என்று பாராட்டி மனைவியிடம் இருந்து மறக்காமல் இரண்டு அடிகளைப் பெற்றுக் கொண்டான்.

உண்ட மயக்கத்தில் இருவருமே இருந்தாலும் குருபிரசாத் சில விஷயங்களை ஒத்தி போட விரும்பவில்லை. அதனால் ஹாலில் இருந்த டிவியில் ஆழ்ந்து விட்டான். ஹாலிவுட் படம் ஒன்றில் விடலைப் பருவத்தில் இருந்த மகனுக்கு சில அறிவுரைகளை வழங்கிக் கொண்டிருந்தார் அந்தப் பிரபல ஹாலிவுட் ஹீரோ. தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால் அது தகப்பன் மகனிடம் பேசும் பேச்சாக இல்லாமல் இரு நண்பர்களின் உணர்வுப் பரிமாற்றம் போல இருந்தது.

அதனைப் பார்த்துக் கொண்டே அமைதியாக அவன் அருகில் வந்து அமர்ந்த கயல்விழி ஏதோ பேச ஆரம்பிப்பதும் நிறுத்துவதுமாக இருந்தாள். மனைவியின் தயக்கத்தை உணர்ந்தாலும், அவளாகவே மனம் திறக்கும் வேளைக்காகக் காத்திருந்தான் கணவன்.

அவனை மிகவும் நெருங்கி அமர்ந்து கொண்டு தோளில் தலை சாய்த்துக் கொண்டாள் கயல்விழி. கண்கள் தொலைக்காட்சியில் நிலைத்திருக்க, தயக்கத்தை விடுத்துப் பேச ஆரம்பித்தாள்.

“நம்ம ஊர்ல இப்படி எல்லாம் ஃப்ரண்ட்லியா அம்மாவோ அப்பாவோ பேச முடியறதில்லை தானே. என்னவெல்லாமோ சொல்லித் தர்ற கல்வியும் கூட இந்த விஷயத்தில் எதையும் கண்டுக்கிறதில்லை. அதனால எத்தனை பேர் தப்புன்னு தெரியாமலே தடம் மாறிப் போறாங்க” அவள் போக்கில் பேசிக் கொண்டே சென்றாள்.

“என்ன டா? திடீர்னு கயல்விழி மேடத்துக்கு என்ன ஆச்சு? ஏன் இப்படி பேசிட்டு இருக்க?” வெகு இயல்பாகவே கேட்டு வைத்தான் குருபிரசாத்.

“ஆமா.. நம்ம ஊருல எத்தனையோ மோசமான சைல்ட் அப்யூஸ் எல்லாம் நடந்தால் கூட அதைப் பத்தி முறையான கல்வி இல்லை தானே.. வீட்டுலயும் பேச மாட்டாங்க.. வெளிலயும் பேசக் கூடாது.. அப்புறம் எப்படித் தான் அந்த ஸ்டேஜ்ல இருந்து வெளியே வர்றது? எத்தனை கல்யாண வாழ்க்கை பிரச்சினையா மாறிடுது.. உங்களை மாதிரியே எல்லாரும் இருந்துடுவாங்களா?” என அவள் பொரிந்து தள்ளினாள்.

“அட.. அட.. அட.. கயல்விழி மேடம் என்னை ரொம்ப நல்லலலலவன்னு சொல்லிட்டாங்க” என்று மயங்கி விழுவது போல அவள் மேல் சாய்ந்தான்.

“ம்ச்.. நான் எவ்வளவு சீரியஸான விஷயம் பேசறேன். நீங்க கேலி பண்ணிட்டு இருக்கீங்க. இப்பவே எனக்கு உங்க கிட்ட எல்லாத்தையும் சொல்லணும்.. வேற யாரு கிட்டயும் இதைப் பத்தி பேச முடியாது. ஆனால் எப்படி ஆரம்பிக்கிறதுன்னு தான் தெரியலை”

“உன்னோட அடலஸன்ட் ஏஜ்ல காளிதாஸ் உன் கிட்ட எப்படி நடத்துகிட்டான். அதனால் நீ எப்படி ஃபீல் ஆன, இப்போ என்ன ஃபீல் பண்றேன்னு சொல்லணும். அதானே.. தாராளமா என் கிட்ட நீ சொல்லலாம்.. சொல்லு.. எதுவானாலும் கேட்க நான் தயாரா இருக்கேன். என் கிட்ட சொன்ன பிறகு உனக்கே கூட அடச்சே இவ்வளவு தானா விஷயம்னு தோணலாம்..
என்னால முடிஞ்ச விளக்கத்தையும் நான் சொல்றேன். ஏன்னா, ஒரு ஆணா என்னால காளிதாஸ் பக்கம் இருந்தும் யோசிக்க முடியும். ஸோ, ப்ளீஸ் கோ அகெட்” என்று அவளை ஊக்குவித்தான்.

“எனக்கு உங்க கண்ணைப் பார்த்து பேசணும்” என்று எதிரே இருந்த இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டாள்.

“கிட்டத்தட்ட இரண்டு வருஷம், நான் ப்ளஸ் டூ படிச்சு முடிக்கிற வரைக்கும் இது நடந்ததுன்னு நினைக்கிறேன். அப்புறம் அண்ணே பிஜி பண்ண வெளியே போயிட்டாங்க. அவன் லைஃபும் வேற மாதிரி மாறிப் போச்சு.

எங்க வீட்டுல பெரியப்பா பெரியம்மா தான் ஹெட். அவங்க சொல்றதைத் தான் எல்லாரும் கண்ணை மூடி கேட்பாங்க. மூத்தவங்கன்ற மரியாதையை தன் தாண்டி அவங்க தப்பா எதையும் சொன்னதே இல்லைங்கிறதும் ஒரு காரணமாக இருக்கலாம்.

பெரியப்பா எங்க படிப்பு விஷயத்தில கூட நிறைய ஐடியாஸ் கொடுத்து இருக்காங்க. குடும்பத் தொழில்னு இருக்கிறதால எல்லாப் பையன்களையும் அது சம்பந்தமான படிப்பைத் தான் படிக்கச் சொல்லுவார். அதுக்காகப் படிச்சிட்டு வந்த உடனே யாரும் முதலாளி சீட்ல உட்கார்ந்தது கிடையாது. அவங்க இஷ்டத்துக்கு எல்லாரையுமே வெளியே வேலை பார்க்க விட்டு இருக்காங்க. அப்புறம் தான் சொந்தத் தொழிலுக்குள்ள அவங்க வருவாங்க. இப்போ காளிதாஸ் அண்ணனும் அதைத் தான் செஞ்சிட்டு இருக்கான்.

பெரிய அண்ணா எல்லாம் என்னை விட ரொம்பவே பெரியவங்க.. அதனால என்னை அவங்க குழந்தை மாதிரி தான் நடத்துவாங்க. ஒரு வேளை அக்காங்க கிட்ட கேட்டால் அவங்களைப் பத்தி வேற மாதிரி சொல்லலாம். ஆனால் என்னைப் பொறுத்தவரை அவங்களும் என்னை பெத்தவங்க மாதிரி தான். வந்த அண்ணிகளுக்கும் அப்படித்தான்.

சித்தப்பா பசங்க இரண்டு பேரும் கூட எனக்கு அண்ணா தான். அவங்களுக்கும் நான் குட்டித் தங்கச்சி தான்.. அப்படித்தான் பழகுவாங்க.

அக்காங்க இரண்டு பேரும் சொந்தத்தில தான் கல்யாணம் பண்ணி இருக்காங்க. அத்தையோட மகன்கள் தான்.. அவங்க கூட என் கிட்ட தள்ளி நின்னு தான் பழகுவாங்க. அத்தை உள்ளூர்ல தானே இருக்காங்க. நான் படிச்ச ஸ்கூல் வாசல்ல எனக்கு பாடிகார்ட் மாதிரி இரண்டு அத்தானும் வேலை பார்த்திருக்காங்க.

வெளியே நான் ரொம்ப ஆண்கள் கிட்ட பழகினதில்லை. வீட்டுக்குள்ள இப்படி லவ் அன்ட் கேர் எடுத்துக்கிற இப்படிப்பட்ட ஆண்களையே பார்த்து வளர்ந்த நான் முதல் முறையா என் கூடப் பிறந்தவனைப் பார்த்து பயப்பட ஆரம்பிச்சேன்..” நீண்ட முகவுரைக்குப் பிறகு விஷயத்திற்கு வந்தவளுக்குத் தொண்டை வறண்டு போனது. அவளது நிலை உணர்ந்து குரு அமைதியாக எழுந்து சென்று ஜூஸைக் கொண்டு வந்து அவளைக் குடிக்கச் செய்தான்.

சற்று நேரம் அங்கே அமைதி நிலவியது. ஜூஸைக் குடித்துத் தெம்பு வரப்பெற்ற கயல்விழி ஒரு பெருமூச்சுடன் அடுத்த கட்ட பேச்சை ஆரம்பித்து வைத்தாள். முதலில் இருந்ததை விட அவளது குரல் சிறிதாகிப் போனது.

“பெரிய பொண்ணு ஆனபோது நடந்ததெல்லாம் சொன்னேன் தானே. நான் எதையோ பார்த்து பயந்திருக்கேன்னு பெரியம்மா கண்டு பிடிச்சிட்டாங்க. என்னோட ஃபங்ஷன சிம்பிளா தான் நடத்தணும்னு வீட்டில எல்லாரும் சேர்ந்து முடிவு பண்ணி அது வீட்டுலயே நடந்தது. எங்க வீட்டுல அந்த மூணு நாளும் லேடீஸ் எல்லாம் தனியா அதுக்காகவே இருக்கிற ரூம்ல உட்கார்ந்து தான் பழக்கம். எனக்காக பெரியம்மா அந்த ரூலையும் மாத்தி விட்டாங்க.

என் ரூம்லயே நான் இருக்கலாம். சாமி ரூமுக்கு மட்டும் வரவேண்டாம்னு சொல்லிட்டாங்க. எங்க அம்மால இருந்து புதுசா வந்த அண்ணி வரைக்கும் எல்லாரும் என்னைப் பார்த்து பொறாமைப் பட்டாங்க. ஆனால் அந்த ரூல் ஒரிஜினலாவே இருந்திருந்தால் நல்லா இருந்திருக்கும்னு நான் நிறைய தடவை நினைச்சிருக்கேன்.” அவளது குரல் பிசிறடித்தது.

அதனைக் கவனித்த குரு இடையிட்டான். “இதென்ன அதிசயம்.. இந்த காலத்துப் பொண்ணு மாதிரி இல்லாமல் ஏன் அப்படி ஒரு ஆசை உனக்கு?”

“அந்த மூணு நாளாவது பயமில்லாமல் தூங்கலாம்னு தான்.”

“பயமா?? மத்த நாளில் என்ன பயம் உனக்கு?”

“சில நேரம் யாரோ வந்து பக்கத்தில நின்னு என்னைப் பார்க்கிற மாதிரியே தோணும்.”

“அது அந்த பீரியட்ல நிறைய பேருக்கு தோணுறது தான். புதுசு ஒன்னும் இல்லை..”

கண்ணைப் பார்த்து பேச வேண்டும் என்றவள் கண்களை இறுக்கி மூடிக் கொண்டு பேசினாள். “இருக்கலாம். ஆனால் எனக்கு அப்படி நிக்கிறது ஒரு ஆண் உருவாகவும் அதுவும் டிரஸ்ஸே இல்லாமல் இருக்குன்னும் தோணும். அது அப்படியே என்னை வந்து அங்கங்கே தொடற மாதிரியே இருக்கும்.” அவள் கண்களில் இருந்து கண்ணீர் பிரவாகம். எதிரே அமர்ந்து கொண்டு அவளைப் பார்த்திருந்த குருவுக்கு என்ன செய்து அவளைச் சமாதானம் செய்வது என்றே தெரியவில்லை.

அவன் அமைதியாக கையைக் கட்டிக் கொண்டு வேடிக்கை பார்க்க அவளே தொடர்ந்தாள். “தூக்கத்தில தான் இப்படி இருக்கு, என்னோட பிரமைன்னு தான் நான் பலநாள் நினைச்சேன். ஆனால் அது அப்படி இல்லைன்னு ஒரு நாள் தெரிஞ்சது.
எங்க வீட்டுல அப்போ பாத்ரூம் எல்லாம் பின்பக்கம் தான் இருக்கும். குளிச்சிட்டு பக்கத்தில் உள்ள தடுப்புல டிரஸ் மாத்திட்டு உள்ள வருவோம். லேடீஸ் குளிக்கும் போது ஜென்ட்ஸ் யாரும் அந்த பக்கமே வரமாட்டாங்க.

நான் ப்ளஸ் டூ படிக்கும் போது ஒரு நாள் அவசரம் அவசரமா குளிச்சிட்டு டிரஸ் மாத்தப்போனேன்.. அங்கே.. அங்கே…” என்று தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தாள். இப்போதும் குருபிரசாத் கைகட்டி வேடிக்கை தான் பார்த்தான். சற்று நேரத்தில் இயல்புக்கு வராவிட்டாலும் தேம்பலுக்கு இடையே சொல்ல வந்ததைச் சொல்லி முடித்தாள்.

“அங்கே.. தாஸ் அண்ணன் டவலோட நின்னுட்டு இருந்தான். எப்போ குளிச்சான், எப்படி வந்தான்னு தெரியலை.. நான் வழக்கம் போல இன்ஸ்கர்டை தூக்கிக் கட்டிட்டு உள்ள போனேன். அவனைப் பார்த்துப் பயந்து போனேன். வெளியே போகச் சொல்லியும் கேட்காமல் அவன் உடுத்தி இருந்த டவலை டக்குன்னு எடுத்துட்டான்.. அதோட நிக்காம என் ஸ்கர்ட்டை வேற எடுக்க வந்தான்.. அப்போ அவன் சொன்ன வார்த்தைகள் எல்லாம் இன்னும் என் காதுல கேட்கிற மாதிரியே இருக்கு.. நான், இந்த ஆண் உடல்ல எப்படி இருக்கேன் பாரு.. அதே மாதிரி நீ எப்படி இருக்கேன்னு நான் பார்க்கணும்னு பக்கத்தில வந்து என் ஸ்கர்ட்டை எடுக்கப் பார்த்தான்.. நான் ரொம்ப நேரம் அவனைப் பார்க்கவும் முடியாமல் அங்கே இருந்து போகவும் முடியாமல் திணறிப் போனேன்.” அன்றைய அவளது நிலையைக் கற்பனையில் நினைத்துப் பார்த்த குருவிற்கு கண்கள் ஈரமாகின. அவளை மேலே சொல்லுமாறு சைகை செய்தான்.

“போதாத வேளைலயும் கொஞ்சம் எனக்கு நல்ல நேரமும் இருந்திருக்கு.. எதேச்சையாக அந்தப் பக்கம் எங்க பெரியம்மா வர அண்ணன் அவங்க சத்தம் போட்டதும் ஓடிப் போயிட்டான். என்ன நடந்திருக்கும்னு நான் சொல்லாமலே அவங்க புரிஞ்சிக்கிட்டாங்க. எல்லாம் வயசுக் கோளாறுன்னு திட்டினாங்க. அதுக்கு பிறகு நான் எங்கே போனாலும் எங்க பெரியம்மா கூட வந்திடுவாங்க. என்னைத் தனியா படுக்க விடலை. இப்போ வேலைக்குப் போக ஆரம்பிச்ச பிறகு தான் நான் தனியா படுக்கிறேன். பெரியப்பா அவங்களுக்கு ஃபுல் சப்போர்ட் பண்ணாங்க.”

“சும்மாவா அவங்க இரண்டு பேரும் ஊருக்கும் பெரிய மனுஷங்களா இருக்காங்க” என்று தனது மனதார உணர்ந்தே சொன்னான் குருபிரசாத்.

“அம்மா கிட்ட சொன்னா அவங்க மகனைத் தப்பா நினைக்க வாய்ப்பு இருக்குன்னு யாரும் அவங்க கிட்ட சொல்லவும் இல்லை. அப்பா எப்படியோ விஷயம் தெரிஞ்சுகிட்டாங்க. அண்ணனை லெஃப்ட் அன்ட் ரைட் வாங்கிட்டாங்க..” அவள் நிறுத்திய நேரம் குருபிரசாத் சில கேள்விகளைக் கேட்டான்.

“இப்போ உன் மைன்ட்கு ரிலாக்ஸா இருக்கா.. எப்படி ஃபீல் பண்ற.. “

“ம்ம்.. கொஞ்சம் ஓகே.. ஆனால் என்னால அந்த பர்டிகுலர் இன்சிடன்ட மறக்க முடியாத போது, என்னை அறியாமல் உங்களைப் பார்க்கும் போதெல்லாம் ஒரு பயம் தானே வருது.. எங்க அண்ணன் ஏன் தான் இப்படி செஞ்சான்.. என்னால என்ன செஞ்சாலும் அதை மறக்க முடியாமல் போகுதே.. எங்க இருந்தோ திடீர்னு ஞாபகம் வந்து உங்க லைஃபையும் சேர்த்து கெடுத்துடுவேனோன்னு தோணுதே..” இப்போது அவளால் அழுகையை அடக்க முடியாமல் போக சற்றும் தயங்காமல் குருபிரசாத் அவளை இழுத்துத் தன் மடியில் தாங்கிக் கொண்டான்.

“அதுக்கு அப்புறம் காளிதாஸ் உன் கிட்ட எப்படி நடத்துகிட்டான்?”

“கொஞ்சம் தள்ளியே தான் இருப்பான்.. அண்ணன்னு எல்லாம் செஞ்சா கூட அதுல பாசம் கொஞ்சம் கம்மியா தான் இருக்கும். அது தான் அவனோட பழக பாசமான தங்கச்சின்னு ஒரு ஆள் கிடைச்சிருக்கே?” என்றாள் அழுகையினூடே.

“ஹா ஹா.. இவன் வேணும்னா அப்படி பழகலாம். ஆனால் எனக்குத் தெரிஞ்சு அந்த மேடம் ரொம்பவே தெளிவு.. வெயிட் அன்டு வாட்ச்..” என்றவன்,

அவளாக அடங்கும் வரை அமைதியாக அவளைத் தட்டிக் கொடுத்துக் கொண்டே இருந்தான். மனதின் சந்தேகங்கள் எல்லாம் கரையும் வரை அழுத கயல்விழி கண்விழித்துப் பார்த்த போது கணவனின் மடியில் இருப்பதைக் கண்டு விழித்தாள்.
ஒற்றைப் புருவத்தை உயர்த்தி அவளைப் பார்த்தவனுக்கு வெட்கத்தையே பதிலாகக் கொடுத்தாள்.

தன் பார்வையில் முகம் சிவந்த மனைவியை அவள் போக்கில் போய் தன்வசப்படுத்த விரும்பியவன் அவளை இறுக்கி அணைத்து இதழோடு இதழ் சேர்த்தான். மனைவியின் மனதைப் புரிந்து கொண்டவனுக்குப் பிரச்சினையின் அடிவரை புரிந்தது.

எப்படிப் பேச வேண்டும் என்று ஒத்திகை பார்த்தவன், தனது ஸ்மார்ட் டிவியில் ஹாலிவுட்டில் இருந்து கோலிவுட்டு மாறினான். சன் மியூசிக் சேனல்…

“சிநேகிதனே சிநேகிதனே ரகசிய சிநேகிதனே…
சின்ன சின்னதாய் கோரிக்கைகள்…
செவி கொடு சிநேகிதனே…” என்று சாதனா சர்கம் குரலுக்கு ஷாலினி வாயசைக்க கயல்விழி தானும் சேர்ந்து பாடலானாள்.. பாடலில் நடந்த பல காட்சிகள் நேரில் நடந்ததை இருவரும் உணர்வே இல்லை.. பாடல் இருவரையும் வசியப் படுத்த எல்லாம் இயல்பாகவே நடந்தது.

“சின்னச் சின்ன அத்துமீறல் புரிவாய்…
என் செல் எல்லாம் பூக்கள் பூக்கச் செய்வாய்…
மலா்களில் மலா்வாய்…

சிநேகிதனே சிநேகிதனே ரகசிய சிநேகிதனே…
சின்ன சின்னதாய் கோரிக்கைகள்…
செவி கொடு சிநேகிதனே”

பாடல் முடிந்ததும் தான் இருக்கும் நிலை கண்ட கயல்விழி கணவனை முறைத்துக் கொண்டு சேனலை மாற்றினாள். அங்கும் அதே ஜோடி தான் வேறு பாடலைப் பாடிக் கொண்டு இருக்க குருபிரசாத் சத்தமாகச் சிரித்தான்.

“நகில நகில நகிலா ஓ ஓ ஓ விலகிடாதே நகிலா ஓ ஓ

பழகும்பொழுது குமரியாகி
என்னை வெல்வாய் பெண்ணே
படுக்கை அறையில் குழந்தையாகி
என்னைக் கொல்வாய் கண்ணே
காதல் சடுகுடுகுடு கண்ணே தொடு தொடு”

அவள் காதோரம் பாடிய கணவனின் குரலில் கயல்விழியின் செல் எல்லாம் பூப்பூத்தது. கணவனைக் காதலுடன் நோக்கினாள். அந்தப் பாடல்கள் அவளது அந்தரங்க உணர்வுகளைத் தட்டி எழுப்பியதில் அவர்கள் இருவரையும் தவிர வேறு யாரும், எதுவும் அவள் நினைவிலேயே இல்லை.

“ம்ச்.. உங்களுக்காகவே பாட்டு போடறாங்க பாருங்க. ” என்று வேறொரு சேனலுக்குத் தாவினாள். அங்கே ஒரு சினிமா ஓடிக்கொண்டிருந்தது.

“வாவ்.. மை ஃபேவரைட் மூவி” என்று சேனலை மாற்றியவளுக்கு அங்கும் ஒரு சிச்சுவேஷன் பாடல் வந்து கிளர்ச்சி ஊட்டுவதாக அமைந்தது.

“ஒன்றா ரெண்டா ஆசைகள்
எல்லாம் சொல்லவே ஓர் நாள் போதுமா

நதிகளிலே நீராடும்
சூரியனை நான் கண்டேன்
வேர்வைகளின் துளிவழிய
நீ வருவாய் என நின்றேன்
உன்னால் என் நெஞ்சில் ஆணின் மணம்
நானுன் சொந்தம் என்ற எண்ணம் தரும்
மகிழ்ச்சி மீறுதே
வானைத் தாண்டுதே
சாகத் தோன்றுதே
அன்பே இரவைக் கேட்கலாம்
விடியல் தாண்டியும் இரவே நீளுமா
என் கனவில்… நான் கண்ட.. நாளிதுதான் கலாபக்காதலா
பார்வைகளால்… பலகதைகள்.. பேசிடலாம் கலாபக்காதலா “

கூடவே பாடிய கயல்விழியின் குரலில் இருந்த உணர்வுகளை பாடலைப் பாடிய பாடகர் கூட வெளிப்படுத்தி இருந்தாரா என்பது சந்தேகம் தான். “கயல்விழி மேடம்.. என்ன ஆச்சு?” என்று கிசுகிசுப்பாகக் கேட்ட கணவனுக்கு அவள் கொடுத்த பதிலையே அவன் அவளது இளமைக் காலத்தில் நடந்த விஷயங்களுக்குப் பதிலாக்கினான்.

“இந்தப் பாட்டெல்லாம் கேட்டா.. ஏதோ பண்ணுதுங்க.. அப்படியே உங்களுக்குள்ள மெல்ட் ஆகிடணும் போலத் தோணுது” என்றாள் மனதை மறையாமல். அவளது குரலில் அத்தனை குழைவு.

“இது கல்யாணம் ஆகி ஹஸ்பண்ட் கூட இருக்கிற கயல்விழியோட ஸ்டேட்மெண்ட். இதுவே டீன் ஏஜ் கயல்விழியா இருந்தால்… கல்யாணத்துக்கு முந்தைய கயல்விழியா இருந்தால்.. உன் ஃபீலிங்ஸ் எப்படி இருந்திருக்கும்?”

கயல்விழிக்கு எதுவோ புரிவது போல இருந்தது. “ஏதோ கொஞ்சம் புரியுது… எதுக்கும் கொஞ்சம் விம் போடுங்களேன். ப்ளீஸ்”

“இது உனக்கு மட்டும் அல்லாமல் எல்லாருக்கும் ஏற்படற உணர்வு தான்.. ஒரு பாட்டு கேட்கும் போது நம்ம வயசுக்கு ஏத்த மாதிரி நம்ம உணர்வுகள் வெளிப்படும்.. நான் உனக்கானவன்னு தெரிஞ்சதால, எனக்குள்ள மெல்ட் ஆகணும்ன்னு தோணுது உனக்கு. அதுவே டீன் ஏஜ்ல ஏதோ சில இனந்தெரியாத நபர்கள் கற்பனைல வந்திருப்பாங்க. உடம்பில் ஏதோ ஒரு மாற்றம்… அது ஹார்மோன்னு சயின்ஸ் சொன்னாலும் சரி.. பருவக் கோளாறுன்னு பொதுவா சொன்னாலும் சரி.. இது தான் உங்க அண்ணனுக்கும் நடந்திருக்கு. வீட்டுல இத்தனை ஆண்கள் இருந்தும் அதைப் பத்தி ப்ராபரா யாரும் டீல் பண்ணலையோன்னு தோணுது. அதனால தான் அவன் இந்த ஏஜ்லயும் வெளியே எத்தனையோ பொண்ணுங்களைப் பார்க்க வேண்டிய வயசுல தங்கச்சியப் போய் பார்த்துட்டு இருக்கான் “

“ம்ம்.. உங்களை.. ” என்று பல்லைக் கடித்தவள், “நீங்க சொல்றது கரெக்ட் தான்..வீட்டுல யாரும் அவனைக் கவனிச்ச மாதிரி தெரியலை. நாளைக்கு அவனுக்கு கல்யாணம் ஆனா என்ன செய்வான்?”

“அது அவன் பாடு.. வரப் போகும் பெண்ணு பாடு.. நமக்கெதுக்கு அது?”

“அப்படி எல்லாம் விட முடியாது.. அவன் எங்க அண்ணன்.. “

“அது சரி.. நீ கேட்ட கேள்வியை விட்டு எங்கேயோ போற.. உனக்குப் பதில் வேணுமா.. வேண்டாமா..”

“சொல்லுங்க.. வேண்டாம்னு சொல்ற நிலைமைல நான் இல்லை..”

“அப்படி வா வழிக்கு.. அந்த டீன் ஏஜ் நேரத்தில் சரியான வழிகாட்டுதல் இல்லேன்னா பிரச்சினை தான். இப்போ எல்லாம் அதைக் கன்ட்ரோல் பண்ண நிறைய யோகா, மெடிடேஷன், தெரபின்னு போறாங்க. வெஸ்டர்ன் கன்ட்ரீஸ்ல பேரண்ட்ஸே நேரடியாக சொல்லிக் கொடுக்க சான்ஸ் இருக்கு. நம்ம ஊர்ல யாரும் நேரடியாக சொல்றது கிடையாது.. ஆனாலும் பழங்காலத்தில சொல்லிக் கொடுக்கத் தான் செஞ்சிருக்காங்க. சில ரிலீஜியஸ் பிராக்டிஸ் நம்ம ஊர்ல காலங்காலமாக இருந்திருக்கு.

இப்போ மாடர்ன் பீரியட்ல எத்தனையோ வழிமுறைகள் இருக்கு. சிட்டி பசங்க ஃப்ரண்ட்ஸ் கிட்ட பேசிடுவோம்.. ஊர் பக்கம் அதுக்கும் ஏதாவது தயக்கம் இருக்கலாம்.. குடும்பப் பேர், நம்மளைப் பத்தி என்ன நினைப்பாங்க.. இந்த மாதிரி ஏகப்பட்ட தடை.. உங்க அண்ணனுக்கும் இது டீன் ஏஜ்ல வந்த இயல்பான சலனம் தான். அவனைச் சரியான டைரக்ஷன்ல திருப்பி விட ஆளில்லாமல் இப்படி ஆகி இருக்கலாம்.. இனிமேல் அவனே தான் முழிச்சிக்கணும்.. கூடிய சீக்கிரமே அதுவும் நடக்கும்.. பார்க்கலாம்..” என்று மனைவி சொல்லே மந்திரம் என்று விம் போட்டு விளக்கியதோடு இல்லாமல் ஒரு ஆரூடமும் சொன்னான்.

அவனது ஆரூடம் பலிக்கும் நேரமும் அடுத்த வாரத்தில் வந்தது. மதுரையில் இருந்து வந்த அழைப்பு அதனை உறுதி செய்தது.