சலனபருவம் – 13

மஹாராஷ்டிரா மாநிலத்தின் பஞ்ச்கனியில் இருந்த ஒரு புகழ்பெற்ற ஹோட்டலின் ஹனிமூன் சூட் அது. காலை ஒன்பது மணிக்கெல்லாம் சென்னையில் இருந்து கிளம்பி புனே வந்து அங்கிருந்து காரில்
மாலை மூன்று மணியளவில் பஞ்ச்கனி வந்து சேர்ந்திருந்தார்கள். வரும் வழியில் அவளுக்கு விதம் விதமான ஆடைகளை வாங்கி குவித்தான். மதிய உணவு என்ற பெயரில் எதையெதையோ கொறித்துக் கொண்டு வந்ததில் இருவருக்கும் பசி என்ற உணர்வு தோன்றவே இல்லை.

தேனிலவு தம்பதியருக்கான இதமான குளிர் தான் என்றாலும் மதுரை வெயிலில் காய்ந்த கயல்விழி அறைக்குள் வந்ததுமே ஒரு பெரிய கம்பளிக்குள் நுழைந்து கொண்டாள். குருபிரசாத்தின் மனதில் பாம்பே ஜெயஶ்ரீ வந்து “ஒரு போர்வைக்குள் இரு தூக்கம்” என்று பாடி வெறுப்பேற்றினார். ஊருக்குத் திரும்புவதற்குள் அதை நிறைவேற்றியே தீருவது என்று சபதம் செய்து கொண்டு மனைவியின் அருகில் தானும் படுத்துக் கொண்டான்.

மனம் சென்னை விமான நிலையத்தில் கண்ட காட்சியில் நிலைத்திருந்தது. விமானத்தில் மும்பை செல்ல வேண்டும் என்றால் மதுரையில் இருந்தே செல்லலாம். எதற்கு இவள் சென்னை வந்தாள் என்று யோசித்துக் கொண்டே அவள் அருகில் செல்ல நினைக்கும் போதே அங்கே கையில் காஃபி கோப்பைகளுடன் தீபாவின் அருகில் வந்து அமர்ந்தவன் காளிதாஸ்.

என்ன தான் செய்கிறார்கள் பார்ப்போம் என்று மனைவியை அழைத்துக்கொண்டு செக் இன் செய்யப் போனான். திரும்பி வந்த போது காளிதாஸ், தீபா இருவரையும் காணவில்லை. மும்பை செல்லும் விமானத்தின் அழைப்பு வந்திருக்க அவர்கள் இருவரும் அந்த வரிசையில் நின்று கொண்டிருந்தார்கள்.

காளிதாஸின் உடல்மொழியே அவன் குருபிரசாத்தைப் பார்த்து விட்டான் என்று காட்டிக் கொடுத்தது. நேர்மையான முறையில் ஊருக்குச் செல்பவன் செய்யும் வேலையா இது? வீட்டு மாப்பிள்ளை, அதுவும் திருமணம் முடிந்து சில நாட்களே ஆன மாப்பிள்ளை, இன்று தேனிலவுக்குக் கிளம்புகிறார்கள் என்று தெரிந்திருந்தும் அவனைப் பார்த்து வழியனுப்பி வைக்காமல் இப்படிக் கண்ணில் பட்டு விட்டோமே என்று மறைந்து செல்வானா என்ன?

என்றாவது ஒரு நாள் பூனைக்குட்டி வெளியே வந்து தானே ஆக வேண்டும் என்று நினைத்துக் கொண்டான். ‘நல்ல மச்சான் வாய்ச்சான் டா எனக்கு… ஹனிமூன் போற போது கூட நிம்மதியா விடமாட்டீங்களா டா?’ என்று கத்த வேண்டும் போல இருந்தது.

ஆனால் இந்த விஷயத்தைக் கயல்விழியிடம் சொல்லி அவளையும் குழப்பி விட வேண்டாம் என்று தன் மனதுக்குள் வைத்துப் பூட்டிக் கொண்டான். குலதெய்வம் கோவிலில் பொங்கல் வைத்து அன்று சோமசுந்தரம், கயல்விழி ஆகியோர் பேசிய பேச்சை நினைவு கூர்ந்தவனுக்கு, ஒரு வேளை இவர்களின் உறவுமுறை தப்பான பாதையில் செல்கிறதோ என்ற சந்தேகம் வந்தது.

‘அன்னைக்கு கயல் கூட ஏதோ அண்ணா அத்தான்னு கோபப்பட்டு பேசினாளே? ஒரு வேளை அவன் கயல் கிட்டயும்…!’ நினைக்கவே கசந்தது அவனுக்கு. ஆனால் நிச்சயமாக கயல்விழியின் நடவடிக்கைகளுக்கும் காளிதாஸூக்கும் சம்பந்தம் இருக்கிறது என்ற முடிவுக்கு வந்து விட்டான். கயல்விழியின் மனதில் இருப்பதை எப்படித் தோண்டி எடுப்பது என்று தீவிரமாக யோசனையில் ஆழ்ந்தவன் அப்படியே உறங்கிப் போனான்.. நல்லாத் தான் ஆரம்பிச்சிருக்கு இவங்க தேன் நிலவு.

பயணக் களைப்பில் உறங்கி விட்டாலும் முதலில் விழித்தவள் கயல்விழி தான். மணி ஆறை நெருங்கிக் கொண்டிருக்க முற்றிலுமாக இருள் சூழ்ந்திருந்தது.

எழுந்து சென்று குளியலறையில் இருந்த குழாய்களை ஆராய்ந்து வெந்நீரைத் தேடி முகம் கழுவி ஃபிரஷ்ஷாகி வந்தவள் அறையில் விளக்குகளை ஒளிர விட்டாள். அந்த வெளிச்சத்தில் எழுந்து கொண்ட குருபிரசாத் தானும் மனைவியைப் பார்த்து அசந்து விட்டான்.

ஆகாய நீல வண்ணத்தில் வெண்ணிற கற்கள் பதித்த டிசைனர் புடவை அணிந்திருந்தாள். இவன் வாங்கிக் கொடுத்தது தான். இன்று அணிந்து கொள்வாள் என்று எதிர்பார்க்காதவன் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு மயங்கி விழுவது போல நடித்தான்.

முதுகில் விழுந்த அடியில் சிரித்துக் கொண்டே அவளைப் பிடித்தவன் நிதானமாக அவளது இதழில் ஒரு முத்தம் பதித்து குளியலறையில் நுழைந்து கொண்டான்.

வெளியே வந்த போது அவனுக்கும் மனைவிக்கு மேட்சாக உடை காத்திருந்தது. அணிந்து கொண்டு டீயும் சில ஸ்நாக்ஸ் வகைகளையும் ஆர்டர் செய்தவன் பால்கனி கதவைத் திறந்து கொண்டு வெளியே சென்று நின்றான். அவன் பின்னோடு வந்தவள் குளிர் தாள முடியாமல் அவன் முதுகோடு ஒட்டிக் கொண்டாள்.

‘படுத்துறாளே!’ என்று மனதுக்குள் புலம்பிய வண்ணம் அவளை இழுத்து இடையோடு அணைத்தபடி, அந்த ஊரைப் பற்றிய சிறு சிறு குறிப்புகளை மனைவிக்குக் கொடுத்தவாறே
இயற்கையை ரசிக்க ஆரம்பித்தான். கூடவே மனைவியையும் ரசித்தான் என்பதைச் சொல்லவும் வேண்டுமா!

“இந்தியால இருக்கிற பல ஹில் ஸ்டேஷன்ஸ் மாதிரி இதுவும் வெள்ளைக் காரன் ஓய்வெடுக்க கண்டுபிடிச்சது தான். வாழ்க்கையை அனுபவிக்கத் தெரிஞ்ச ஆத்மாக்கள்” என்று ஆரம்பித்து பஞ்ச்கனி பற்றிய ஒரு வரலாற்று ஆய்வுக் கட்டுரையை மனைவியிடம் சமர்ப்பித்தான். எல்லாம் கூகுள் ஆண்டவர் உபயம்.

பஞ்ச்கனி சாயாத்ரி மலைத் தொடர்களில் ஐந்து மலைகளுக்கு இடையே அமைந்திருக்கிறது. இதற்கு அருகில் கிருஷ்ணா நதி பாய்கிறது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 1,334 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த மலை நகரம் உயர்ந்த மலைகள், அமைதியான பள்ளத்தாக்குகள், அருவிகள் மற்றும் அடர்ந்த காடுகளால் நிரம்பியுள்ளது.

சிட்னி பாயிண்ட், டேபிள் லேன்ட், ராஜ்புரி குகைகள் மற்றும் தோம் அணை போன்றவற்றைப் பார்க்க வேண்டும் என்று தனது விருப்பத்தைத் தெரிவித்தான்.

“நீ ஒன்னும் ஃபீல் பண்ணாத. கண்டிப்பா சிவாஜி சர்க்கிள்ல ஷாப்பிங் பண்றோம், அப்புறம் ஒரு முக்கியமான விஷயம் கூட இருக்கு.. அதை அப்போ சொல்றேன்..” என்று சஸ்பென்ஸ் வைத்தான்.

இதற்கிடையில் ரூம் சர்வீஸ் வந்துவிட அவனிடம் சென்று எதையோ பேசிவிட்டு வந்தவன் மனைவியின் அருகில் அமர்ந்து சுடச் சுட டீயை அருந்தினான். பிறகு மனைவியை அழைத்துக்கொண்டு காலாற நடக்கலாம் என்று கிளம்பி விட்டான்.

எட்டு மணி வாக்கில் அவர்கள் அறைக்குத் திரும்பிய போது ஒரு ரொமாண்டிக் கேண்டில் லைட் டின்னருக்கான ஏற்பாடுகள் அவர்களுக்குக் காத்திருந்தது. இன்னும் உணவு மட்டுமே வரவேண்டும். ரூம் சர்வீஸை அனுப்பி வைத்து விட்டு ஒரு ரொமாண்டிக் லுக்குடன் மனைவியை நெருங்கினான் குருபிரசாத்.

கயல்விழியோ கணவனின் ஏற்பாடுகளில் திகைத்துப் போய் நின்றிருந்தாள். மறுவீடு முடிந்து திரும்பிய உடன் “ஹனிமூன் போறோம், அதுவும் பதினஞ்சு நாள்னு” சொன்னானே தவிர எந்த ஊர்னு சொல்லவே இல்லை.

எங்கே என்று ஆயிரம் தடவை கேட்டுப் பார்த்தாள். “ஹில் ஸ்டேஷன் அதுக்கேத்த டிரஸ் இருந்தால் எடுத்துக்கோ. இல்லேன்னா அங்கே போய் வாங்கிக்கலாம்” என்று முடித்து விட்டான். அவளிடம் இருந்த ஸ்வெட்டர், ஷால் என்று பெட்டி நிறைய அள்ளிக் கொண்டு வந்திருந்தாள். அதைக் கண்டு சிரித்தானே தவிர ‘அவையெல்லாம் தேனிலவிற்கு எதற்கு?’ என்று நினைத்ததை வெளியே சொல்லவில்லை.

இப்போது இந்த ஏற்பாடுகளைக் கண்ட கயல்விழிக்குக் கணவனைக் கட்டிக் கொண்டு அழ வேண்டும் போல இருந்தது. ‘அட லூசே, அவளா கட்டிக்க நினைக்கிறாளேன்னு பார்த்தா அழணும் போல இருக்காம்’ என்று அவளது மைன்ட் வாய்ஸ் குமட்டில் குத்தியது.

அமைதியாக தன்னை நோக்கி வந்த கணவனின் கைகளில் புகுந்து கொண்டாள். அப்போது அவளது மனதில் குருபிரசாத் மட்டுமே நீக்கமற நிறைந்திருந்தான். அவனைத் தவிர வேறு எண்ணங்களே இல்லை. அதை அவளது கண்கள் அப்பட்டமாகப் பிரதிபலித்தது.

இருவரும் சில நிமிடங்கள் மெய்மறந்து ஒருவரை ஒருவர் அணைத்தபடி நின்றார்கள். எந்த லொகேஷனில் டூயட் பாட ஆரம்பித்தார்களோ தெரியவில்லை,அறையின் அழைப்பு மணி ஒலித்து அவர்களை நிகழ்வுக்குக் கொண்டு வந்தது.

மனைவியைப் பிரிய மனமில்லாமல் அவளையும் அணைத்துச் சென்று கதவைத் திறந்தான். அவர்களின் உணவு வந்திருக்க, உள்ளே வந்த பணியாளர்கள் இவர்களின் நிலை கண்டு வந்த சிரிப்பை அடக்கிக் கொள்ள முயற்சி செய்தும் முடியாமல் சிரித்து வைத்தார்கள். கூடவே, உணவு சூடாக இருக்கும் போதே சாப்பிட்டு விடுங்கள் என்று சொல்லி விட்டுப் போனார்கள்.

இவர்களுக்கும் பசி என்ற உணர்வு தோன்றவே அமைதியாகவே உணவை முடித்தார்கள். உண்ட விதம் தான் நமது கற்பனைகளுக்கு அப்பாற்பட்டது. சொல்ல வார்த்தைகள் என்னிடம் இல்லை என்பதால் அவரவர் கற்பனைக்கே விட்டு விடுகிறேன் (!!)🤣

விடிய விடிய மனைவியை மடியில் தாங்கி இருக்க அவனுக்கு ஆசை தான். ஆனால் அது உணவு மேசையாக இல்லாமல் வேறு இடமாக இருந்திருந்தால் சந்தோஷப் பட்டிருப்பான்.

உண்ட களைப்பில் இருவருக்கும் தூக்கம் வந்தது, கதையைப் படிக்கும் அப்பாவிகளை மனதில் வைத்து உறக்கத்தை தன் தூரம் தள்ளினார்கள்.

“விடிய விடிய சொல்லித் தருவேன்..” என்று தலைவர் ஸ்டைலில் அவன் சொல்லிக் கொடுக்க, அந்தப் பாடங்களை எல்லாம் முழுமனதோடு அவள் கற்றுக் கொண்டாள்.

ஆனாலும், அவளது உடல்மொழியில் ஆரம்பத்தில் ஏற்பட்ட விரைப்புத் தன்மையையும் போகப் போக அவன் கை காட்டிய வித்தைகளில் நெகிழ்ந்து போனாலும் அவளது உடலில் ஓர் அதிர்வு ஓடியதையும் குருபிரசாத் உணர்ந்தே இருந்தான்.

அவளது மனதில் இருப்பதை எப்படி இந்த ஹனிமூன் முடிவதற்குள் தெரிந்து கொள்வது என்று யோசனை வந்தது. ‘எவ்வளவோ சாதிச்சிட்டோம், இதைச் சாதிக்க மாட்டோமா?’ என்றது அவன் மனது. அதானே!! ஆனானப்பட்ட கயல்விழி கிட்ட அடி வாங்கி, கடி வாங்கி அப்புறம் அவன் நினைச்சதை எல்லாம் வாங்கிட்டானே. அவனால நிச்சயம் முடியும்னு நம்புவோம்.

திகட்டத் திகட்ட மனைவியைக் கூடிய களைப்பில் கை வளைவில் வைத்துக் கொண்டு தூங்கி விட்டான். திருமணம் முடிந்து ஒரு வாரம் கழித்து இன்று தான் அவனுக்கு இப்படி ஓர் ஆழ்ந்த உறக்கம் வாய்த்திருக்கிறது.

திடீரென்று முழிப்பு வந்த போது மீண்டும் மனைவியை நாடியவன் அருகில் அவளைக் காணாமல் திகைத்தான். அறைக்குள் குளிரும் அதிகமாக இருந்தது. பதறிப் போய் எழுந்தவனுக்குத் திறந்திருந்த பால்கனி கதவு பதில் சொன்னது. அருகில் இருந்த மொபைலை எடுத்துப் பார்த்த போது அதிகாலை மூன்று மணி என்றது.

‘இந்த நேரத்தில் அங்கே போய் என்ன செய்யறா? என்ன ஆச்சு இவளுக்கு? ராத்திரி எல்லாம் சந்தோஷமா தானே இருந்தா?’ படுக்கையில் படுத்தபடியே ஆராய்ந்தவனுக்குத் தோன்றியதெல்லாம் ‘சாம தான பேதம்னு எதையாவது யூஸ் பண்ணி அவ‌ மனசுல இருக்கிறதைச் சீக்கிரம் தெரிஞ்சிக்கணும்’ என்பது தான்.

அமைதியாக அவள் அருகில் சென்று நின்றான். தூரத்தில் தெரிந்த நட்சத்திரங்களை வெறித்துக் கொண்டிருந்த கயல்விழியின் கண்கள் நீரில் மிதந்தன. அமைதியாக அவளைப் பின்புறம் இருந்து அணைத்துக் கொண்டான். அவள் எதையோ பேச வாய் திறக்க, “நீ எதுவும் சொல்ல வேண்டாம். வந்து படு. இந்தக் குளிர்ல நின்னா உடம்பு என்ன ஆகும்?” என்று அவளைப் பேச விடாமல் செய்து விட்டான்.

அவள் இந்த அளவுக்கு அவஸ்தைப் படுகிறாள் என்றால், ஏதோ ஒரு விஷயம் அவளை வெகுவாகப் பாதித்துள்ளது என்று அவனுக்கு நன்றாகவே புரிந்தது. அவளைப் பூப்போல கையாண்டு அவள் மனதை வெளிக் கொண்டு வரவேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.

கணவனின் பிடியில் தன் வேதனையை மறைத்தபடி கயல்விழியும் நன்றாக உறங்கி விட்டாள்.

மறுநாள் காலை பத்து மணிக்கு மேல் எழுந்தவர்கள், ஊர்சுற்றிப் பார்க்கக் கிளம்பினார்கள். வாங்க, நாமளும் அவங்களோட கொஞ்சம் சுத்தலாம். அப்போ தான் எங்கெல்லாம் போனாங்க, என்ன செஞ்சாங்க என்று தெரியும்..

முதலில் அவர்கள் பாராகிளைடிங் (பாராசூட்டில் பறத்தல் ).
பாராசூட்டில் பறப்பதற்கு இந்தியாவில் மிகச் சிறந்த இடங்களில் ஒன்று இந்த பஞ்ச்கனி எனலாம். 4500 அடி உயரத்தில் அமைந்துள்ள இது பிரமிக்க வைக்கும் பசுமை பள்ளத்தாக்குகளையும், புத்துணர்ச்சியூட்டும் காற்றையும், மெய்சிலிர்க்க வைக்கும் இயற்கை காட்சிகளையும் கொண்டுள்ளது.

பாராசூட்டில் பறந்து இந்த சூழலை ரசிப்பதற்காகவென்றே பல்வேறு இடங்களில் பாராகிளைடிங் தளங்கள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன.

எல்லாரும் பறப்பதை ஆர்வத்துடன் பார்த்தாலும் தனியே பறப்பதற்கு கயல்விழி தயங்க, கணவனும் மனைவியும் சேர்ந்தே பறந்தார்கள்.

அடுத்து அவர்கள் சென்றது, பார்ஸி பாயிண்ட் மற்றும் சிட்னி பாயிண்ட். அங்கே இருந்து பரந்து விரிந்துள்ள கிருஷ்ணா பள்ளத்தாக்கையும் தோம் அணையின் நீல நிற பிரகாசிக்கும் நீரின் அழகையும் கண்டு ரசித்தார்கள்.

அதன் பின்னர் அவர்கள் சென்ற இடம்
டேபிள் லேண்ட். செம்பாறை பாறையின் தட்டையான நீண்டப் பரந்தவெளியான இது ஆசியாவின் இரண்டாவது பெரிய மலைப் பீடபூமி ஆகும். இப்பக்குதியில் இருந்து “டெவில்’ஸ் கிட்ச்சன்” (Devil’s Kitchen) உள்ளிட்ட சில பரந்த புராதனக்
குகைகளைக் காணலாம்.

“அதென்ன பேர் டெவில்ஸ் கிச்சன்?” என்று நடுங்கினாள் கயல்விழி.

“யாருக்கு தெரியும்.. நான் கூகுள் ஆண்டவர் கிட்ட கேட்டு சொல்றேன்” என்ற குருபிரசாத், ” மகாபாரத காலத்தில பாண்டவர்கள் வனவாசத்தின் போது இங்கே கொஞ்சம் காலம் தங்கியிருந்ததாகவும், இந்த இடம் அவர்களின் உணவு சமைக்க பயன்படுத்தப்பட்டதாகவும் இங்கே உள்ள மக்கள் நம்பறாங்க” என்ற கூடுதல் தகவலையும் தந்தான்.

அங்குள்ள மேலும் சில புராதனக்குகைகள் கூட பாண்டவர்கள் உருவாக்கியவை என்று நம்பப் படுகிறது.

இப்படி ஒரே நாளில் பாதி ஊரைச் சுற்றிக் களைப்புடன் வந்தாலும் அவர்களின் இரவு முந்தைய நாளைப் போல இனிமையாகவே அமைந்தது.
அன்றும் கயல்விழி தனியே சென்று அமர்ந்தாள், ஆனால் அவளது கண்களில் கண்ணீர் இல்லை. ஏதோ ஆழ்ந்த யோசனை மட்டுமே இருந்தது.

மறுநாள் அவர்கள் சென்ற இடம் வாய்(wai) பள்ளத்தாக்கில் இருந்த தூம் அணைக்கு. நீல வண்ணத்தில் ஜொலித்த நீரில் மனைவியுடன் போட்டிங் சென்றான் குருபிரசாத். கணவன் துடுப்பைப் பிடிக்க மனைவி அவன் எதிரே அமர்ந்தாள். பழைய பாட்டாக இருந்தாலும் இந்த இடத்தில அமைதியான நதியினிலே ஓடம்னு சிச்சுவேஷன் சாங் பாடுவது தான் சரி. யாரும் மறந்தும் கூட வசந்த கால நதிகளிலேன்னு பாடிடாதீங்க..

சுற்றிலும் முன்னே பின்னே தெரியாத மனிதர்கள். முதலில் எதிரே அமர்ந்து கொண்ட கயல்விழி தானாகவே எழுந்து கணவனின் அருகில் வந்தாள்.

படகை ஓர் ஓரத்தில் நிறுத்தி விட்டான் குருபிரசாத். இதையெல்லாம் பிளான் பண்ணி தானே குருபிரசாத் இங்கே வந்தது. மனைவியை அருகில் இழுத்தவன் ஆசை தீரக் கொஞ்சி மகிழ்ந்தான்.

இரண்டு முறை போட்டில் சுற்றியவர்கள் கிளம்ப மனமே இல்லாமல் கிளம்பி அடுத்த நாளும் வரலாம் என்று முடிவு செய்து ஷாப்பிங் சென்றார்கள்.

மறுநாள் காலையில் மீண்டும் போட்டிங் வந்தவர்களது நெருக்கம் கூடியிருந்தது என்பதை அவர்கள் தேர்ந்தெடுத்த படகே சொன்னது. இருவர் மட்டுமே செல்லக் கூடிய ஸ்கூட்டர் படகு. அவர்கள் புதுமணத் தம்பதிகள் என்பதை அவர்களே உணர்ந்த நாள் அன்று தான். அதைப் படகுத் துறையில் கூடியிருந்த அனைவருக்கும் படம் பிடித்துக் காட்டி விட்டே வந்தார்கள்.

அன்றைய இரவில் அவர்களது கூடல் மேலும் அழகானது. உடலால் மட்டும் அல்லாமல் மனதாலும் கயல்விழி கணவனை நெருங்கி இருந்தாள்.

அவளது மனதின் ஆழத்தில் புதைந்து கிடக்கும் ரகசியங்களை அவள் சொல்லச் சொல்ல குருபிரசாத்தின் முகத்தில் பல வர்ணஜாலங்கள் நிகழ்ந்தன.

புலி வரப் போகிறது என்று பயந்து கொண்டே இருந்தது போக இப்போது புலி வந்தே விட்டது. இப்போதே அதை எப்படி விரட்டுவது என்ற கேள்வி எழுந்தது. விரட்டி விடலாம் என்ற நம்பிக்கை இருந்தாலும் கூடவே இதை எப்படிக் கையாள்வது என்ற குழப்பமும் வந்தது.

அன்று மனதில் உள்ள பாரத்தை இறக்கி விட்டு கயல்விழி கணவனின் அணைப்பில் நிம்மதியாக உறங்கி விட இத்தனை நாளும் அவள் செய்ததை குருபிரசாத் செய்து கொண்டிருந்தான்.

அதாங்க பால்கனில போய் நின்னு நட்சத்திரத்தை எண்ணுகின்ற வேலை…