சலனபருவம் – 11

அழுதழுது முகம் எல்லாம் வீங்கிப் போய் அப்படியே உறங்கி இருந்தாள் கயல்விழி. பார்த்துக் கொண்டிருந்த குருபிரசாத்தின் மனம் மிகவும் வேதனை அடைந்தது. அவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் இருந்து அப்போது தான் நடந்து முடிந்திருந்தது. விருந்தினர் அனைவரும் கிளம்பி விட்ட நிலையில் வீட்டு மனிதர்கள் இன்னும் சாப்பிட்டு முடிக்கவில்லை.

ஆனால் கயல்விழியின் பிடிவாதத்தால் மணமக்கள் இருவரும் பெயருக்கு கொரித்துவிட்டு வீடு திரும்பி இருந்தார்கள். வந்தவுடன் உடை கூட மாற்றாமல் படுக்கையில் விழுந்தவள் அழுது கொண்டே உறங்கிப் போனாள். குருபிரசாத் சமாதானம் சொல்ல வருவான், அவனது சமாதானங்கள் எதையும் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்ற முடிவோடு படுத்தவளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

மனைவியின் செய்கையில் கோபமடைந்த குருபிரசாத் தன் போக்கில் குளித்து உடை மாற்றி அவனுடைய அடுத்த வேலைகளைச் செய்து கொண்டிருந்தான். கயல்விழி என்று ஒருத்தி அந்த அறையில் இருப்பதாகவே அவன் கண்டுகொள்ளாத போது அவளது அழுகை எப்படி அவனைப் பாதிக்கும்.

பொறுத்துப் பொறுத்துப் பார்த்த கயல்விழி ஒரு கட்டத்தில் உறங்கிவிட, அதன் பிறகே குருபிரசாத் அவளருகில் வந்தான். மனைவியின் கண்ணீர் முகம் அவனை என்னவோ செய்தாலும் படித்த சமுதாயத்தில் வாழும் அவளே இப்படி நடந்து கொண்டால் எப்படி என்றே அவனால் நினைக்கத் தோன்றியது. இந்த விஷயத்தில் எத்தனை படித்தவளானாலும் மனைவி என்று வரும் போது சுயநலமே தலைதூக்கி நிற்கும் என்பதை அவன் அறியவே இல்லை பாவம்..

அப்படி என்ன தான் நடந்தது வரவேற்பு நிகழ்ச்சியில்.. பார்ப்போம்..
——

சென்னையின் பிரபல நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் அவர்களின் வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. கிட்டத்தட்ட இரண்டாயிரம் பேர் வரை விருந்தினர் வருகையை எதிர்பார்த்ததால் இந்த ஏற்பாடு. மாலை ஆறு மணி அளவில் மணமக்கள் சிம்பிளான மேக்கப்புடன் நாங்கள் தான் மணமக்கள் என்பதைக் காட்டும் ஆடை அணிகலன்களுடன் மேடை ஏறினார்கள்.

தங்க நிற டிஸ்யூ புடவையில் தங்கமாக ஜொலித்த கயல்விழிக்கு மேட்சாக அதே நிறத்தில் ஷெர்வானி அணிந்திருந்தான் குருபிரசாத். இருவரது சுற்றமும் அவர்களது தோற்றப் பொருத்தத்தை வியந்து பாராட்டிக் கொண்டு இருந்தார்கள். ஆறரை மணியளவில் ஆரம்பித்த விருந்தினர் வருகை இரவு பதினோரு மணி வரை நீடித்தது.

குருபிரசாத்தின் மற்றும் அவனது தந்தையின் அலுவலகத் தொடர்புடையவர்கள், மதுரையில் நடைபெற்ற திருமண விழாவிற்கு வர இயலாத சொந்தக்காரர்கள் என்று கூட்டம் அலைமோதியது. மணமக்கள் உட்கார நேரம் இல்லாமல் கால் கடுக்க நின்று செயற்கையாக புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தனர்.

இடையிடையே ஆனந்தி வந்து தம்பிக்கும் அவன் மனைவிக்கும் ஜூஸ் கொண்டு வந்து கொடுத்தாள். இது வரையில் எல்லாம் நல்ல படியாகத் தான் போய்க் கொண்டிருந்தது. கயல்விழி வந்த அனைத்து விருந்தினரையும் வியப்புடன் பார்த்தாலும் அனைவரிடமும் தயக்கமின்றி சில வார்த்தைகள் பேசி குருவின் மனதைக் குளிரச் செய்தாள்.

பத்து மணிக்கு மேல் வந்த குருவின் நண்பர் பட்டாளத்தால் அவளது நிம்மதியும் சந்தோஷமும் பறந்து போய்விடும் போலிருந்தது. கல்லூரி காலத்து நட்பாம், ஆண்கள் அனைவரும் திருமணத்திற்கே வந்திருக்க இப்போது குடும்ப சகிதம் வருகை தந்திருந்தார்கள்.

கிட்டத்தட்ட பத்து பதினைந்து ஜோடிகள், சில தனிமரங்களும் அதில் உண்டு. திருமணம் தேவையில்லை என்று ஜோடியாகச் சுற்றுபவர்களும் உண்டு.

பட்டணத்து நாகரீகம் இது தான் என்பதைத் தொன்னூறு சதவீதம் பெண்கள் பக்காவாகப் பின்பற்றினார்கள்.

அவர்களது நடை உடை பாவனை எல்லாவற்றிலும் அது நன்றாகவே தெரிந்தது. குழந்தைகள் கூட அதே வழியைப் பின்பற்றியது தான் அவளுக்கு ஆச்சரியம் அளித்தது.

என்ன தான் பெண்கள் பள்ளி கல்லூரி என்று குறுகிய வட்டத்துக்குள் வளர்ந்து இருந்தாலும் நாகரீகம் என்பதையே அறியாதவள் அல்ல கயல்விழி. இங்கே அந்த நாகரீகம் எந்த எல்லையையும் தொடும் என்பதை உணர்ந்தவள் முகம் சுழித்தாள்.

அந்தோ பரிதாபம்! அவளைக் கவனிக்கும் நிலையில் அவளது கணவன் இல்லை. நண்பேன்டா! என்று கூட்டத்தில் ஐக்கியம் ஆகி இருந்தான். கூடவே இவளையும் அங்கே இழுத்தான். அதுவரை காதுக்கு இனிமையாக அங்கே ஒலித்த மெல்லிசைப் பாடல்கள் இப்போது மாறி இருக்க, நண்பர்கள் எல்லாம் ஆட ஆரம்பித்தனர்.

ஏற்கனவே திட்டமிட்ட நிகழ்வு போலத் தெரிந்தது கயல்விழிக்கு. ஒருபுறம் அழுகை முட்டிக் கொண்டு வர, ஆனந்தி யாவது கண்களில் தென்பட மாட்டாளா என்று சுற்றிலும் தேடினாள். அவளெங்கே இங்கே இருந்தாள், ஆனந்திக்குத் தம்பியிடம் பிடிக்காத ஒரே விஷயம் இந்த நண்பர்களின் சகவாசம் தான்.

நல்லவர்கள் தான், சமயத்தில் தோள் கொடுக்கும் தோழர்கள் தான். ஆனாலும் பல நேரங்களில் நம் பழக்க வழக்கங்களுக்கு ஒவ்வாத விஷயங்களை செய்யும் போது பிடிக்காமல் போய் விடுகிறது. இப்போதும் அது போன்ற ஒரு தருணம். விருந்தினர் வரிசையில் காத்திருக்கும் போது இந்த ஆட்டம் பாட்டம் தேவை தானா?

ஆனந்தி தனது தந்தையைத் தேடிப் போயிருந்தாள். அவருக்கு மட்டும் தான் இந்தக் கூட்டம் அடங்கும்.

“ரம்பம்பம் ஆரம்பம் பம்பம்பம் பேரின்பம்
ஏழு எட்டு நாட்களாச்சு கண்ணே உன் மீது
ஏக்கம் கொண்டு தூங்கவில்லை கண்ணே
ராகு காலம் ஓடிப் போச்சு ராஜ யோகம் கூடிப் போச்சு”

என்று பாடல் பாடிக் கொண்டு இருக்க அனைவரும் தனது ஜோடிகளோடு ஆடிக்கொண்டு இருந்தனர், குருபிரசாத் உட்பட. வந்திருந்த விருந்தினர் எல்லாம் இந்த நடனத்தை ரசிக்க ஆரம்பித்து விட்டனர்.

புடவையைக் கட்டிக் கொண்டு கணவன் இழுத்த இழுப்புக்கெல்லாம் வளைந்து கொடுக்க முடியாமல் திணறிப் போனாள் கயல்விழி.

சுந்தரேசன் வந்து பாடலை நிறுத்தும் வரை அந்த ஆட்டம் தொடர்ந்தது. எவ அவ என்பது போலக் கூட யாரும் அங்கே பார்க்கவில்லை. யார் செய்திருப்பார் என்று நன்றாகத் தெரியும். குருபிரசாத் அமைதியாக மேடையில் சென்று நின்று கொண்டான்.

நண்பர்கள் எல்லாம் வரிசையில் வந்து கட்டிப்பிடித்து வாழ்த்துக்கள் சொல்லி ஃபோட்டோ செஷன் நடத்தி பின்னர் இறங்கிச் சென்றார்கள். இதிலெல்லாம் கயல்விழி வருந்தவில்லை. அவளை வருந்த வைத்த ஒரு விஷயம் அவளது கணவனுக்கு நண்பர்கள் கூட்டம் வைத்திருந்த பட்டப் பெயர்.

அதுவும் கூட நண்பர்களிடையே சகஜம் தான் என்று எடுத்துக் கொண்டாலும் அதே பெயரைச் சொல்லி நண்பர்களது மனைவிமார்களும் அவர்களது பிள்ளைகளும் கூட குருபிரசாத்தை அழைத்ததைத் தான் அவளால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

ஆனால் அவனோ எதற்கும் ஒரே ரியாக்ஷனோடு தான் காட்சி அளித்தான். இதில் நண்பர்கள் கொடுத்த விளக்கம் வேறு அவளுக்குக் குமட்டியது, குருபிரசாத் பற்றிய எல்லாம் அவர்களின் பிள்ளைகளுக்குத் தெரியுமாம். எதற்காக தெரிய வேண்டும். உள்ளுக்குள் கனன்று கொண்டு இருந்தவள் விருந்தினர் வருகை நின்றவுடன் தலைவலி என்று காரணம் சொல்லி வீட்டுக்கு வந்து விட்டாள். தனியாக அவளை மட்டும் அனுப்ப மாட்டார்கள் என்று அவளுக்கு நன்றாகவே தெரியும்.

வந்தவுடனே கணவனை ஒரு பிடி பிடித்தவளுக்குப் பலன் என்னவோ பெரிய பூஜ்ஜியம் தான். அவர்கள் எல்லோரும் குருவின் வாழ்க்கையில் ஏற்கெனவே வந்துவிட்டவர்களாம், கயல்விழி தான் நேற்று வந்தவளாம். அதனால் யாருக்கு உரிமை அதிகம் என்பதைப் பற்றி யோசிக்க வேண்டியதாக இருக்கிறது என்று சொல்லி விட்டு படுத்து விட்டான்.

அவனைப் பொறுத்தவரை மனைவியின் பொறாமையைத் தூண்ட இதை ஒரு நல்ல சந்தர்ப்பமாகப் பயன்படுத்திக் கொண்டான் என்றே சொல்ல வேண்டும். அதற்காக நண்பர்களை விட்டுக் கொடுத்து விட மாட்டான். இருவரையும் எப்படி பாலன்ஸ் செய்ய வேண்டும் என்பதை அறிந்தவன்.

அழுது கொண்டே உறங்கியவளின் தலையைத் தடவிக் கொடுத்தவன் மெதுவாக அவளது நகைகளைக் கழட்டி வைத்தான். தூக்கத்தில் வாகாகத் திரும்பி படுத்து மறுபக்கம் இருந்த நகைகளைக் கழட்ட உதவினாள் அவன் மனைவி.

“அடிப் பாவி.. இதையெல்லாம் முன்னாடி உங்க அம்மாவ செய்ய வச்சிருப்ப போல.. இப்போ நான் சிக்கிட்டேன்” என்று சிரித்தபடி நகைகளைப் பத்திரப் படுத்தி வைத்தான்.

“அட ஒரு ரியாக்ஷனையும் காணோமே.. அப்படியே புடவையும் மாத்தி விட்டுடலாமோ?” என்று சத்தமாக யோசித்தவனை முறைத்துக் கொண்டே எழுந்து அமர்ந்தாள் அவனருமை மனைவி.

“ஐய.. போங்க.. போய் வேற வேலை இருந்தா பாருங்க..” என்று அவனை அறைக்கு வெளியே தள்ளி விட்டுப் புடவை மாற்றிய பிறகே கதவைத் திறந்தாள். நண்பர்களிடம் குரு வைத்திருக்கும் பிரியத்தை உணர முடிந்தாலும் சில விஷயங்களை அவளது மனம் ஏற்றுக் கொள்ள மறுத்தது. இதற்குக் காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

குருவின் நண்பர்களை எல்லாம் தாண்டி இன்று நடந்த ஆட்டம் பாட்டத்தில் கயல்விழியை டென்ஷன் ஆக்கிய மிக முக்கியமான ஒரு விஷயம் அந்த நண்பர்கள் இடையே ஆடிய காளிதாஸ் தீபா ஜோடி தான். இருவரையும் அந்த நேரத்தில் பார்த்த யாரும் சூடம் ஏற்றி சத்தியம் செய்து சொன்னாலும் அண்ணன் தங்கை என்று ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அப்படி ஒரு நடனம் அது. யாரும் பார்க்கவில்லை என்று அவர்கள் ஆடிய நடனம் முக்கியமான மூவர் கண்களில் பட்டது.

மிஸ்டர் அன்ட் மிஸஸ் கயல்விழி மற்றும் சோமசுந்தரம் தான் அது. கயல்விழியின் அழுகைக்கு அதுவும் ஒரு முக்கியக் காரணம். சோமசுந்தரம் அதைப் பார்த்துவிட்டதை உணர்ந்ததால் வந்த நிம்மதியை அவள் ஆயுளுக்கும் மறக்க மாட்டாள்.

‘ஹப்பாடா! இனிமேல் இவங்களை பெரியப்பா பாத்துப்பாங்க ‘ என்று தன் பார்வையைத் தனது வாழ்க்கையின் புறம் திருப்பத் தயாரானாள்.

அன்றைய இரவு தானே குருபிரசாத்தை நெருங்கிப் படுத்தாள். தயங்கித் தயங்கி அவன் மேல் கை போட்டுக் கொண்டு அவனை அணைத்தபடி உறங்கிப் போனாள். அவளுக்குத் தெரிந்த அந்நியோன்யம் அப்போதைக்கு அவ்வளவு தான்..
——

மறுநாள் மணமக்களை மறுவீடு அழைத்துச் செல்ல பிறந்த வீட்டார் தயாராக இருந்தனர். ஆனந்தியால் இதற்கு மேல் விடுமுறை எடுக்க வழி இல்லாததால் மணமக்களுடன் சென்னையில் இருந்து யாரும் செல்லவில்லை.

இந்த முறை குருபிரசாத்தும் மற்ற அனைவருடனும் பேருந்தில் பயணிக்க பயணம் முழுவதும் கலகலத்தது.

மறுவீட்டு விருந்து, மாமன் மச்சான் வீட்டு விருந்து என்று தினம் தினம் புது மாப்பிள்ளைக்கு விருந்தளித்து உபசரித்தனர்.

நான்கு நாட்கள் பிறந்த வீட்டில் சீராடிய பின்னர் பழைய பெண்ணாக புகுந்த வீடு திரும்ப ஆயத்தமானாள் கயல்விழி. அனைவரும் ஒரு பிரிவைத் தாளாமல் அழ, மறுபடியும் முதல்ல இருந்தா என்று குருபிரசாத் தலையில் கை வைத்து அமர்ந்து கொண்டான்.

“நாளைக்கு உங்களுக்கு ஒரு பொண்ணு பிறந்து அதைக் கட்டிக் கொடுக்கும் போது தெரியும் தம்பி” என்று சோமசுந்தரம் சொல்ல, “எங்க மாமா, அப்படி ஒரு நிகழ்வு நடக்கும் போலத் தெரியலையே!” என்று தானே வாய் விட்டு மாட்டிக் கொண்டான் குருபிரசாத். சொன்ன பிறகே, அதை உணர்ந்து கொண்டான்.

‘ஆனாலும் டூ லேட் தம்பி நீ.. மாமனார் உன்னை கேட்ச் பண்ணிட்டார்’ என்றது மனசாட்சி.

அசடு வழிய பார்த்தவனைத், “தம்பி கொஞ்சம் அப்படி வரீங்களா?” என்று அழைத்துக் கொண்டு போய் சில விஷயங்களைப் போட்டு வாங்கினார். அனுபவசாலி என்று சும்மாவா சொன்னாங்க.. வாழ்க்கை உளவியலை தந்தை மகனுக்கு சொல்ல முடியாததை மாமனார் சொல்லி விட்டார்.

“அவ மனசில சில குழப்பங்கள் இருக்கு தம்பி.. அதை உங்களால சரி செய்ய முடியும்.. நீங்க ரொம்ப எல்லாம் சிரமப் பட வேணாம் அந்நியோன்யத்துக்கு.. ஒரு தகப்பனா நான் இதையெல்லாம் சொல்லக் கூடாது தான்.. ஆனால் இந்த இடத்தில உங்க தோழனாக நினைச்சுக்கோங்க.. எனக்கு வேற வழி தெரியலை.. ” என்று அவன் முகம் பார்த்து நின்றார்.

“பரவாயில்லை மாமா.. சொல்லுங்க.. நானும் வேற யாரு கிட்டயும் கேட்க முடியாது.. டாக்டர் கிட்ட கேட்கிற மாதிரி நினைச்சுக்கிறேன்… சொல்லுங்க.. நீங்க அனுபவசாலி.. சொன்னா சரியா தான் இருக்கும்..”

“அது சரி தம்பி.. வயசானவன எல்லாம் தோழனா ஏத்துக்க முடியாது.. டாக்டரா வேணா இருந்துட்டு போங்கன்னு சொல்றீங்க.. ” என்று சிரித்தவாறே”

“நைட்டு தூங்கறப்ப நெருக்கமா மனைவியை இறுக்கமா அணைச்சு படுங்க.. விலகிப் போக விடாதீங்க.

உங்க கையை அவ தலைக்கு முட்டுகொடுத்து தூங்க வைங்க.

அந்த அர்த்த ராத்திரியில
அப்படியே தலை கோதி விட்டு
நெஞ்சில சாச்சுக்கோங்க

தூங்கினதும் மெதுவா தலையில முத்தம் குடுங்க.. அப்டியே தூங்குங்க..

விடிகாலையில் எழும்போது
நீங்க இருந்தேன்னு ஒரு நிம்மதியையும் இனி எப்போதும் இருப்பேன்னு ஒரு நம்பிக்கையையும் கொடுங்க அந்நியோன்யம் தானா வந்துரும். என்ன தம்பி நான் சொல்றது?”

மாமனார் சொல்லை வேதவாக்காக எடுத்துக் கொண்டு செயல்பட்டவனுக்கு கை மேல் பலன் கிடைத்தது. தேனிலவின் முதல் நாளிலேயே அவர்களின் தாம்பத்யம் ஆரம்பம் ஆனது.. கயல்விழியின் வாழ்க்கையில் இருந்த சில முடிச்சுகள் அவிழும் தருணமும் வந்தது.