சலனபருவம் -10

ஏழரை மணிக்கெல்லாம் கோவிலுக்குச் செல்ல வேண்டிய உடையில் பளிச்சென்று ஹாலுக்கு வந்த குருபிரசாத் கயல்விழி இருவரையும் வீடே நமட்டுச் சிரிப்புடன் பார்த்தது. கயல்விழி அவர்களைக் கண்டு அசடு வழிய குருவோ மனைவியை முறைத்தான்.

அவள் செய்து வைத்த வேலை அப்படி. கதவைத் தட்டும் ஓசையை கவனிக்காது உறங்கியவளைக் குருபிரசாத் தான் வேறு வழியின்றி எழுப்பி விட்டான். கொஞ்சுவது போல அவன் கன்னம் தடவியவள் போகிற போக்கில் அவள் நெற்றியில் இருந்த பொட்டை அவனது கன்னத்திற்கு இடம் மாற்றி இருந்தாள். அவளுக்கோ அதன் பின்விளைவுகள் பற்றிய யோசனைகளே இல்லை. அவ்வளவு தத்தியா இந்தப் பொண்ணு.. நம்ப முடியலையே கடவுளே..

அவனும் மனைவியின் செயலைப் பற்றித் தவறாக எண்ணாமல், அதாவது அவள் என்ன செய்தாள் என்று தெரியாமலே வேகமாகச் சென்று கதவைத் திறந்து விட்டான்.

கையில் காப்பியோடு மகளை எதிர்பார்த்து நின்ற கோகிலாவும் அங்கையற்கண்ணியும் மாப்பிள்ளையை அதுவும் கன்னத்தில் மகளின் பொட்டுடன் கண்டு, நாணிக் கோணி, சட்டென்று புடவைக் தலைப்பால் போர்த்திக்கொண்டு வேறு புறம் திரும்பி நின்று, குருபிரசாத்தை என்னவோ ஏதோ என்று நினைக்க வைத்து விட்டனர்.

சொல்ல வந்ததை அவசரம் அவசரமாகச் சொல்லிவிட்டு அவர்கள் சென்று விட காப்பியுடன் உள்ளே வந்தான் குருபிரசாத். மாமியார்கள் தன்னை நிமிர்ந்து கூடப் பார்க்க முடியாத அளவுக்கு தன் முகத்தில் என்ன பிரச்சினை என்று கண்ணாடி முன்னால் நின்றவனுக்குப் பளிச்சென்று காட்சி அளித்தது இடது கன்னத்தில் அழுத்தமாக இருந்த மெரூன் கலர் ஸ்டிக்கர் பொட்டு.
——

சிரித்துக்கொண்டே பாத்ரூம் கதவை மெதுவாகத் திறந்த கயல்விழி வாசலில் முறைத்தபடி நின்று கொண்டிருந்த குருபிரசாத்தைக் கண்டு பதறிப் போனாள்.

‘அச்சச்சோ! கோபமா இருக்காங்க போல இருக்கே ‘ என்று மனதுக்குள் புலம்பியவள்.. , மெதுவாக அவனைத் தாண்டிக் கொண்டு வெளியே வந்தாள்.

“ஏய் ஒழுங்கா உண்மைய சொல்லு. யாரை நம்ப‌ வைக்கிறதுக்கு இந்த டிராமா?” அவளைப் பிடித்து நிறுத்தியவன் கிட்டத்தட்ட கர்ஜித்தான்.

“என்ன சொல்றீங்க? டிராமா வா? என்ன டிராமா? எதுக்கு? எனக்கு ஒன்னும் புரியல?” என்றாள் அவள் அப்பாவியாக.

“ஹா.. நீ ரொம்ப அப்பாவி தான்.. ஒன்னும் தெரியாது.. அப்புறம் எதுக்கு டீ உன் பொட்டை எடுத்து இப்படி என் கன்னத்தில ஒட்டி வச்சிட்டு போன.?”

“ஹா ஹா ஹா…” என்று சிரித்தாள் அவன் முறைத்ததைப் பார்த்து, “அது வந்துங்க.. நான் எப்போதும் கண்ணாடில தான் பொட்டை ஒட்டி வச்சிட்டு போவேன். இன்னைக்கு நீங்க கண்ணாடிய மறைச்சிட்டு நின்னீங்களா.. அதான் அவசரத்தில உங்க மேல ஒட்டி வச்சிட்டு போயிட்டேன்” என்று அசடு வழிய நின்றாள்.

“அறிவுக் கொழுந்து, உன்னால என் மானமே போச்சு” என்று தலையில் அடித்துக் கொண்டவன் அவள் கைகளை விடுவித்தான். பிறகு தனது காலைக் கடனை முடித்துக் கொண்டு வந்தான். இருவருமாகச் சேர்ந்து ஆறிய காப்பியைக் குடித்து முடித்தனர்.

“ஏன் டி எத்தனை சினிமா பாத்திருப்ப, பொட்ட ஒட்டி வைக்க உனக்கு வேற இடமே கிடைக்கலையா.. இன்னைக்கு முழுசா இதை வச்சு தான் நம்மள ஓட்டப் போறாங்க போ..” என்று அலுத்துக் கொண்டவனைப் பார்த்தவளுக்கு ஏதோ புரிவது போல இருந்தது.

அவளது முகத்தில் வந்து போன உணர்வுகளைக் கண்டு கொண்டவன், “ஹப்பாடா! இப்பயாச்சும் பல்ப் எரிஞ்சுதே.. ட்யூப் லைட் ட்யூப் லைட்..” என்று கொஞ்சிக் கொண்டான்.

மணி ஏழை நெருங்கிக் கொண்டிருந்தது. “எட்டு மணிக்கெல்லாம் கோவிலுக்கு போகணும்னு சொல்லிட்டு போயிருக்காங்க. நாம இரண்டு பேரும் தனித்தனியா குளிச்சா டயமாகிடும்.. வா சேர்ந்தே குளிப்போம்” என்று அவளையும் சேர்த்தே குளியலறைக்குள் இழுத்தான்.

விட்டால் அழுது ஊரையே கூட்டி விடுபவள் போல இருந்தவளைக் கண்டு நொந்து போய், “கூடிய சீக்கிரமே ஒரு நாள் இதை நடத்திக் காட்டல என் பேரு குருபிரசாத் இல்ல டி” என்று சபதம் போட்டு அவன் மட்டும் குளிக்கப் போனான். ஐந்தே நிமிடங்களில் வெளியே வந்தவன் அவளைக் கண்டு கொள்ளாமல் உடை மாற்றிக் கொள்வதில் கவனமாக இருக்க, அவள் வேறு வழியின்றி தேவையானவற்றை எடுத்துக் கொண்டு குளிக்கச் சென்றாள். அதில் புடவையும் அடக்கம்.

புடவை கட்டிக் கொள்ள எப்படியும் வெளியே தான் வந்தாக வேண்டும் என்று அவனுக்குத் தெரியும். ஆனால் அவளோ சாமர்த்தியமாக குருபிரசாத்திற்கு பெரிய பல்பை பரிசாக அளித்து, பட்டுப் புடவையை குளியலறையிலேயே உடுத்திக் கொண்டு வந்து விட்டாள்.

வியந்து பார்த்தவனுக்கு ஒரு மந்தகாசப் புன்னகையைப் பரிசாக அளித்தாள். தலைவாரி, முகத்தில் சிறிய அளவு மேக்கப்புடன் இருவரும் ஏழரை மணிக்கெல்லாம் டைனிங் ஹாலில் ஆஜரான போது வீடே இருவரையும் நமட்டுச் சிரிப்புடன் பார்த்தது. உறவு முறையில் பெரியவர்கள் கயல்விழியை மகிழ்ச்சியுடன் வரவேற்று கையால் திருஷ்டி கழித்தனர்.

சிறியவர்கள் எல்லாம் கேலிச் சிரிப்பில் ஈடுபட்டு காலை உணவு நேரத்தைக் கலகலப்பாக வைத்திருந்தனர். அந்தச் சிரிப்புகளை எல்லாம் புறந்தள்ளி உணவிலேயே கவனமாக இருந்தான் குருபிரசாத். காரணம், உடன் பிறவாத சகோதரர்கள் அனைவரிடமும் நெருக்கம் காட்டிய கயல்விழி தன்னுடன் பிறந்த ஒரே ஒரு சகோதரனிடம் காட்டிய ஒதுக்கம். அந்த சகோதரனின் நடவடிக்கைகளும் வயதிற்கேற்ற முதிர்ச்சியுடன் இல்லாதது போலத் தோன்றியது.

இந்த ஒதுக்கத்திற்கும் தங்கள் மணவாழ்க்கைக்கும் சம்பந்தம் இருக்கப் போகிறது என்று மனம் சொல்லியது. அவனது மனம் சொல்வதை எப்போதும் காது கொடுத்துக் கேட்பவன் அவன், இந்த விஷயத்தில் என்ன செய்ய போகிறான் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

காலை உணவை இட்லி, தோசை, ஆப்பம் என் மிக எளிமையாகவே செய்திருந்தார்கள். அதனை முடித்துக் கொண்டு இருவரது வீட்டுக்கும் குலதெய்வமான பதினெட்டாம் படி கருப்பசாமியின் கோவிலுக்குச் சென்று வழிபட்டார்கள். பொங்கல் வைத்து கும்பிடும் நிகழ்வுகளை எல்லாம் மறுவீடு வரும் போது செய்து கொள்ள இருந்தனர். அதற்கு ஏகப்பட்ட காரணங்கள்.

இரண்டு நாட்களில் சென்னையில் குருபிரசாத் வீட்டின் சார்பில் ஒரு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற இருக்க, அதன் காரணமாக குருபிரசாத்தின் பெற்றோர் முன்னரே சென்னை சென்று விட்டார்கள். மணமக்களை அழைத்து வர ஆனந்தியும் அவள் கணவருமே தங்கி இருந்தனர்.

குலதெய்வ வழிபாடு முடிந்ததும் அப்படியே அருகில் இருந்த அழகரையும் மலைமேல் பழமுதிர் சோலையில் அவரது மருமகனையும் வணங்கி விட்டு பதினொரு மணி வாக்கில் வீடு வந்து சேர்ந்தனர்.

மதிய விருந்து தடபுடலாகத் தயாராக இருக்க, குருபிரசாத் அவற்றை ஒரு கை பார்க்க கயல்விழி கொறித்து வைத்தாள். பிறந்த வீட்டை விட்டுப் பிரியும் தருணம் நெருங்கி வந்துவிட்டதே அதன் காரணம். சாப்பிட்டு முடித்ததும் பிரியாவிடை பெரும் தருணம். புடவை முந்தானைகள் எல்லாம் பிழியப் பிழிய பெண்கள் எல்லாரும் அழ, ஆண்களோ அழத் தெரியாமல் அழுதார்கள்.

சோமசுந்தரம் குருபிரசாத்தின் கைகளைப் பிடித்துக் கொண்டு கயல்விழி பிறந்தது முதலான கதைகளைச் சொல்லி அவள் தங்களுக்கு எப்படி அருமையானவள் என்பதை விளக்க முற்பட்டார். அவரது தம்பியோ, மகளின் தலையைக் கோதிக் கொடுத்து தனது பாசத்தைக் காட்டிக் கொண்டு இருந்தார். அக்காமார்களும் அண்ணிகளும் பிள்ளைகளும் கூட வாய் விட்டு அழுது விட அண்ணன்மார் எல்லாம் புதிதாக கூலிங் கிளாஸ் போட்டுக் கொண்டு கண்ணீரை மறைத்தனர்.

குருபிரசாத்திற்கு இவையெல்லாம் மிகவும் புதியதாக இருந்தது. ஆனந்தியின் திருமணம் கிட்டத்தட்ட காதல் திருமணம். அதிலும் அவள் உள்ளூரிலேயே இருந்ததால் திருமணம் முடிந்து டாடா சொல்லி விட்டு போய் விட்டாள். இவனுக்கு ஆரம்ப காலத்தில் வீட்டில் ஒரு வெறுமை இருந்தது நிஜம். அதற்காக எல்லாம் இப்படி பிழியப்பிழிய அழவில்லை. அவனது தாய் தந்தை கூட அழுத ஞாபகம் இல்லை.

இங்கே கயல்விழியின் நிலையோ மிகவும் மோசமாக இருந்தது. கண்களால் ஆறுதல் சொல்லும் கணவன் ஒரு புறம், அணைத்து ஆறுதல் சொல்லும் நாத்தி ஒரு புறம்.. இத்தனை இருந்தும் பிரியப் போகும் பிரியமான சொந்தங்கள் ஒரு புறம் என துக்கம் தொண்டையை அடைக்க அழவும் முடியாமல் அடக்கவும் முடியாமல் நின்று கொண்டு இருந்தாள்.

இப்படியாக, பிரியாவிடை பெற்று மணமக்கள் கிளம்ப, அவர்களுடன் மணமக்களுடன் ஆனந்தி தம்பதியரும் சோமசுந்தரத்தின் மூத்த மகனும் மருமகளும் உடன் சென்றனர். இவர்கள் எல்லாம் இன்று விமானத்தில் சென்னை செல்ல, நாளை இரவு சொந்த பந்தங்கள் அனைவரையும் அணி திரட்டி இரண்டு பஸ்ஸில் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சோமசுந்தரம் தலைமையில் ஊரில் பாதி செல்கிறது. அவர்கள் திரும்பி வரும் போது மறுவீட்டிற்கு மணமணக்களை அழைத்து வருவார்கள்.

—–

மதுரை விமான நிலையம் வரை ஆனந்தியை வால் பிடித்துக் கொண்டு அழுது கொண்டே வந்தவள் கணவனைக் கண்டுகொள்ளவே இல்லை. ஆனந்தி சொன்ன சமாதானங்கள் எல்லாம் அவளிடம் செல்லுபடி ஆனதாகவும் தெரியவில்லை. ஏகப்பட்ட கைக்குட்டைகள் நனைந்தன. “டேய்! குரு! முடியல டா! உன் பொண்டாட்டிய கொஞ்சம் பாரேன்! வைகைல வரலாறு காணாத வெள்ளம் வரும் போல இருக்கு டா” என்று ஆனந்தி கூட அலுத்துக் கொண்டு விட்டாள். எதற்கும் பலனில்லை.

விமானத்தில் குருவின் அருகில் அமர்ந்து அவன் தோளில் சாய்ந்தவள் தான். சென்னையில் வீடு வந்து சேரும் வரை அமைதியாகக் குருபிரசாத்தின் சட்டையைத் தன் கண்ணீரில் குளிப்பாட்டிய கயல்விழி அறியாததை அவளது கணவன் அறிந்து கொண்டான். அவள் மனதால் பலமடங்கு அவனை நெருங்கி விட்டாள் என்பதே அது.

மீனாட்சியும் சுந்தரேசனும் மருமகளை வரவேற்க வாசலிலேயே காத்திருந்தனர். தன் கைகளாலேயே ஆரத்தி எடுத்து மருமகளை உள்ளே அழைத்துக் கொண்டார் மீனாட்சி.

“இரண்டு பேரும் வலது காலை எடுத்து வச்சு உள்ளே வாங்க. ஆனந்தி நீ இந்த ஆரத்திய கொண்டு போய் வாசல்ல கொட்டிட்டு வா” என்று மருமகளைத் தோளோடு அணைத்தபடி உள்ளே சென்ற மீனாட்சியைக் கலாய்க்க நினைத்த குரு தொண்டையைச் செருமினான்.

“மா! நான் தான் உன் மகன். நீ மறந்து போய் மருமகளைக் கட்டிப் பிடிக்கிற. இதெல்லாம் ரொம்ப தப்பு சொல்லிட்டேன். நீங்க இப்படி இருந்தால் என் பாடில்ல திண்டாட்டமா போயிடும்” என்றவனைப் பார்த்து உதட்டைச் சுழித்தாள் கயல்விழி.

“அப்படிச் சொல்லுடா தம்பி. அம்மா.. உங்களுக்கு பொண்ணுன்னு நான் ஒருத்தி இருக்கேன். ஞாபகம் வச்சுக்கோங்க ” என்று அங்கே வந்தாள் ஆனந்தி.

“விளையாட்டு போதும்.. ஆனந்தி.. இரண்டு பேரையும் உட்கார வை. பால் பழம் கொடுக்கலாம். அப்புறம் கொஞ்சம் நேரம் ரெஸ்ட் எடுக்கட்டும் ” என்று மகளை விரட்டினார் மீனாட்சி.

அடுத்த ஐந்து நிமிடங்கள் பெரியவர் சிறியவர் என்று அனைவரிடமும் மாட்டி ஒரு வழியாகி பாலையும் பழத்தையும் அருந்தி முடித்தனர்.

“குரு! மாடில இருக்கிற கெஸ்ட் ரூம்ல கொஞ்சம் நேரம் ரெஸ்ட் எடுங்க. உங்க ரூமுக்கு நைட் போனால் போதும் ” என்று கட்டளை போல் சொல்லி விட்டு அவன் பதிலுக்கு காத்திராமல் அடுத்த வேலையைப் பார்க்கப் போய் விட்டார் மீனாட்சி.

“இந்த அம்மாவ…” என்று பல்லைக் கடித்துக் கொண்டே கயல்விழியை அழைத்துக் கொண்டு விருந்தினர் அறைக்குச் சென்றான் குருபிரசாத்.

ஏற்கனவே நொந்து போய் இருந்தவனிடம் ஒரு அரிய சந்தேகம் கேட்டு வைத்தாள் அவனது சகதர்மிணி.

“ஏங்க! எதுக்கு உங்க ரூமுக்கு இப்போ போகக் கூடாதுன்னு சொல்றாங்க?”

அவளைக் காட்டமாக முறைத்தவன் அமைதியாக விருந்தினர் அறையில் சென்று படுத்துக் கொண்டான். “இப்போ என்ன கேட்டேன்னு இவ்வளவு கோபப்படறாங்க?” என்று முணுமுணுத்துக் கொண்டே அவளும் பின்னோடு வந்து படுத்துக் கொண்டாள்.

இருந்த அலுப்பில் அவன் படுத்த உடன் உறங்கி விட இவளோ ஒரு புறமாகத் திரும்பி கைகளைத் தலைக்கு முட்டுக் கொடுத்து கணவனைக் கண்களால் நோட்டம் விட்டுக் கொண்டு இருந்தாள். எவ்வளவு நேரம் நோட்டம் விட்டாளோ அதே நிலையில் ரங்கநாதரைப் போல உறங்கிப் போனாள்.

ஐந்தரை மணி அளவில் உறக்கம் கலைந்து எழுந்த குருபிரசாத் மனைவியின் நிலை கண்டு சிரித்தான். என்ன நடந்திருக்கும் என்று கற்பனையில் கண்டவனுக்கு இனித்தது. எழுந்து சென்று குளித்து விட்டு உடை மாற்றி வந்தான். அந்த சத்தத்தால் விழித்த கயல்விழியும் அவளும் கணவனைப் பின்பற்றினாள்.

மாலைக் காபி, பலகாரம் என்று பால்கனியில் அமர்ந்து கொண்டு இருவரும் பேசிக்கொண்டே காலி செய்தனர். எதிரே இருந்த குருவின் அறையில் ஏதேதோ சத்தங்கள் கேட்க, கேள்வியாக அவனை நோக்கியவளுக்குப் பல விஷயங்கள் புரிந்து போனது. இவர்கள் வீட்டில் இன்று முதல் நாள் என்பதால் அறை அலங்கரிப்பு எல்லாம் நடைபெறுகிறது.

“அவங்களுக்கு எங்க தெரியும்.. இதெல்லாம் செஞ்சாலும்.. ஒரு பிரயோஜனமும் இல்லேன்னு.. சொன்னாலும் கேட்க மாட்டாங்க” என்று அவள் காதோரம் சொல்லி விட்டுப் போன குருவின் குரலில் என்ன இருந்தது. அவளால் கொஞ்சம் உணர முடிந்தது. விளைவு அன்றைய இரவு எது வந்தாலும் பரவாயில்லை என்று அவளை மனத்தளவு தயார் செய்து கொண்டே அறைக்குள் நுழைந்தாள்.

ஆனால் அந்தோ பரிதாபம், குரு இவளது சமாதானங்கள் எதையும் கேட்கத் தயாராக இல்லை. எதையெதையோ பேசி அவளுக்கும் தூக்கத்தை வரவைத்தவன் கயலை அணைத்துக் கொண்டு தானும் உறங்கிப் போனான். அவளால் இயன்ற அளவு அந்த அணைப்பில் அடங்க முயன்று அதை ரசிக்க முயன்று அவளும் உறங்கிப் போனாள். இப்படியாக அவர்களது மண வாழ்க்கையில் இரண்டாவது இரவு கழிந்தது.

அவர்களது வரவேற்பு நாளும் நல்லபடியாக விடிந்தது. ஊரில் இருந்து கயல்விழியின் சொந்த பந்தம் அனைவரும் வந்து சேர்ந்தனர்.

கயல்விழியின் மனதில் திருமண வாழ்க்கை பற்றி சற்றே நம்பிக்கை ஏற்பட்டு இருக்க அதை ஆட்டம் காண வைக்க என்றே சில நிகழ்வுகள் அவர்களது வரவேற்பு நிகழ்ச்சியில் நடைபெற்றது.