கோடிடாத இடங்களை நிரப்புக-அத்தியாயம்8

நிரப்புக8:

தான் தவறான நேரத்தில் வந்துவிட்டோமோ எண்ணியவ சுவாதி தன் குழந்தைகளை அழைத்துக்கொண்டு செல்ல இருந்தவளை சுகந்தி தடுத்தாள்.

தன் கையினை பிடித்தவர் யாரென்று சுவாதி நோக்க,அவளை பார்த்தவாறே சுகந்தி நின்றாள்.

சுகந்தியின் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் சுவாதி குற்றஉணர்ச்சியில் தலைதாழ்ந்தவாறே கண்ணீர் சிந்தினாள்.

ஒன்றும் பேசாமல் சுவாதியின் கரத்தினை விடுவித்த சுகந்தி,அவள் கையிலிருந்த குழந்தையை வாங்கினாள்.

குழந்தையின் மேனியை தொட்டதும் உடல்சூடு அதிகமாக இருப்பதை உணர்ந்த சுகந்தி பதட்டமடைந்தாள்.
“குழந்தைக்கு உடம்பு கொதிக்குது,என்ன ஆச்சு?”என சுகந்தி பதற,சுவாதியோ ஒன்றும் பேச இயலாமல் தன் நிலையிலே இருந்தாள்.

தன் தங்கையின் கையினை வலுவாக பற்றிய சுகந்தி அவளை தன்பலம்கொண்டு வீட்டிற்குள் இழுத்து சென்றாள். சுவாதியின் கையினை பிடித்திருந்த அவளின் மைந்தனும் அழுதவாறே அவளுடன் சென்றான்.

கூடத்திற்கு வந்த சுகந்தி,குழந்தையை அங்குள்ள சோபாவில் படுக்க வைத்தாள்.
குழந்தையின் சோர்வான முகத்தினைக்கண்டு பயந்த சுகந்தி,வேகமாக தன்னறைக்கு சென்று அனைத்து அலங்காரத்தையும் களைத்துவிட்டு இயல்பான புடவைக்கு மாறியவள் கையில் கார் சாவினை எடுத்துக்கொண்டு கூடத்திற்கு வந்தாள்.

சுவாதி இன்னும் தலைகுனிந்தவாறே இருக்க அவளைக்கண்டு தலைதூக்கிய கோவத்தினை புறந்தள்ளிவிட்டு கங்காவை துணைக்கு அழைத்துக்கொண்டு குழந்தையோடு மருத்துவமனைக்கு விரைந்தாள்.

ராசியம்மாள் பார்வதிக்கு ஆறுதல் கூறிவிட்டு யமுனாவை அழைத்துக்கொண்டு தங்கள் இல்லத்திற்கு கிளம்பினாள்.

ஒரு மணிநேரம் கடந்தநிலையில்,குழந்தையோடு சென்ற தனது அக்காவை நேரமாகியும் காணாமல் சுவாதிக்கு அச்சமாகியது.

சுவாதி நவீனிடம் கேட்க நினைக்கும்பொழுது,கோவமாக சுகந்தி வீட்டிற்குள் நுளைந்தாள்.

“அக்கா பாப்பாவுக்கு என்ன ஆச்சு?நீ மட்டும் வந்திருக்க?” என்று வினவிய நவீனிடம் ஒன்றும் கூறாமல் சுவாதியின் அருகில் சென்றாள்.

தன் மனதில் எழுந்த கோவத்திற்கு சுவாதியை இழுத்து சுகந்தி அறைய,சுவாதி தன் உடலும் மனமும் சோர்ந்த களைப்பில் நிலையில்லாமல் தடுமாறி கீழே விழுந்தாள்.

சுவாதி விழுந்த சத்தம்கேட்டு பார்வதியும் சுமதியும் கூடத்திற்கு ஓடிவந்தனர்.

சுகந்தியின் கோவத்தினைக்கண்டு சுவாதியின் மகன் பயந்து அழுதவாறே தன் தாயை கட்டிக்கொண்டான்.

பார்வதிக்கு என்ன தோன்றியதோ சுவாதியின் மகனை தூக்கி ஆறுதல் படுத்தத்தொடங்கினாள்.

சுவாதி இவ்வாறு விழுவாள் என்று எண்ணாத சுகந்தி தன் தவறினை உணர்ந்து,அவளை கட்டிக்கொண்டாள்.

“என்னை மன்னிச்சுறு,ஏதோ கோவத்தில் அடிச்சுட்டேன்”என சுகந்தி தன் மன்னிப்பை வேண்ட,அதற்கு சுவாதி அவளை தன்னிடமிருந்து பிரித்தாள்.

“அக்கா நீ மன்னிப்பு கேட்டு என்னை இன்னும் பாவி ஆக்காத.உனக்கு பெரிய துரோகம் பண்ணிட்டேன்.என்னை கொன்னு கூட போடு,தப்பில்லை.என்னை மன்னிச்சுறு அக்கா”என இரு கையினை எடுத்து கும்பிட்டு கதறி அழுதவாறே மன்னிப்பு கேட்டாள்.

“ஏய் ஏண்டி இப்படி பேசுற.விடு எனக்கு நெஜமா உன்மேல கோவமில்லை”என சுகந்தி கூறியதும் சுவாதி கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்க உண்மையா என்றவாறு பார்த்தாள்.

“உண்மை தான் சுவாதி,இப்ப அடிச்சதுக்கூட பாப்பாவுக்கு இவ்வளவு காய்ச்சலா இருந்தும் நீ அதை கவனிக்காம இருக்க அதான் எனக்கு கோவம் வந்துருச்சு”என சுகந்தியின் கூற்றைக்கேட்டதும் சுவாதி தன் அக்காவின் கால்களில் விழுந்து கதறினாள்.

தன் தங்கையின் செயலில் பதறிய சுகந்தி அவளை தூக்கி தன்னோடு கட்டிக்கொண்டாள்.இதுவரை கண்ணீர் துளிகளே திரளாதவளின் கண்களும் கலங்கியது.

“அக்கா பாப்பாக்கு என்ன ஆச்சு?இவள்கிட்ட நேத்தே சொன்னேன் அக்கா.இப்ப எப்டி இருக்கா?”என அக்கறையாக வினவிய நவீனை ஏறிட்டு நோக்கிய சுவாதி தன் தம்பியின் அருகில் சென்று அவனையும் கட்டிக்கொண்டாள்.

“என்னை மன்னிருச்சு டா,நீ மட்டும் நேத்து வராட்டி என் நிலைமை மோசமாகிருக்கும் ரொம்ப நன்றி”என்ற சுவாதியின் பேச்சிற்கு நவீன் ஏதும் கூறாமல்,அவளை தன்னிடமிருந்து பிரித்து தள்ளி நிறுத்தினான்.

“எனக்கும் உன்மேல இன்னும் கோவம் இருக்கு,மறந்துராத.கூட பிறந்தவ இப்படியொரு நிலைமையில் இருக்கும்போது பார்த்துட்டு எப்படியோ போகட்டும்னு போற ஆள் நான் இல்லை”என நவீன் தன் மனதினை தெளிவாக சுவாதியிடம் எடுத்துரைத்தான்.

நவீன் பேச்சு சுவாதிக்கு இன்னும் அவளின் மனவலியை கூட்டுவது போன்று இருந்தது.

சிலநிமிடங்கள் வீட்டில் ஆளுக்கு ஒருபுறம் என அனைவரும் அமைதியாக இருக்க,சுவாதியை தன்னறைக்கு சுகந்தி அழைத்துச்செல்வதை பார்வதி தடுத்தாள்.

“இவளை நீ மன்னிக்கலாம் ஆனால் நான் மன்னிக்க முடியாது. உனக்கு வேணுனா இந்த வீட்டில் வச்சுக்கோ.இவள் இருந்தால் நான் இருக்க மாட்டேன்”என பார்வதியின் தீர்க்கமான பேச்சில் அனைவரும் அதிர்ந்தனர்.

“அம்மா ….!!” என சுகந்தி ஆதங்கத்தில் கத்த,
“என்ன மா அம்மா,இல்ல நீ என்ன தியாகியா? அன்னைக்கு உன்னை மணமேடையில் உக்கார வச்சுட்டு இவளுக்கு எப்டி ஓடிபோக தோணுச்சு?சொல்லு இது சாதாரண விஷயமா?”

“அம்மா நீ அவள்கிட்ட கேட்டு கல்யாணம் முடிவு பண்ணியா?அவள்…”என சுவாதிக்கு ஆதரவாக பேச முனைந்த சுகந்தியை மேலும் பேசுவிடாமல் பார்வதி தடுத்தாள்.

தான் தூக்கி வைத்திருந்த சுவாதியின் மகனை நவீனிடம் கொடுத்த பார்வதி சுவாதியின் அருகில் சென்று அவளை கோவமாக பார்த்தாள்.

தன் அம்மாவை காணமுடியாமல் சுவாதி சுகந்தியின் பின்னால் பயந்தவாறே ஒளிந்தாள்.

“சொல்லு டி,உன்னை உங்க அப்பா எப்டி வளர்த்தாரு?வீட்டு கஷ்டம் தெரியாம உன்னை தாங்கி வளர்த்ததுக்கு அவர் பெயரை கெடுத்துட்டு போயிட்டல.பெத்தவனு நினைச்சு உன்னை கேக்காமல் கல்யாணம் முடிவு பண்ணேன்.

உன்மேல அவ்வளவு நம்பிக்கைடி அதான் உனக்கு ஒரு நல்ல வாழ்க்கையை ஏற்படுத்தி கொடுத்துருவோம்னு நினைச்சேன்.உன் பெத்து வளர்த்ததுக்கு நல்லா கரியை பூசிட்ட மா”என அன்றைய நிகழ்வை நினைத்து தற்போது மனம்விட்டு அழுதாள்.

“அம்மா இதுயெல்லாம் ஏன் பேசிட்டு விடுமா.நீ வா உள்ள”என சுமதி பார்வதியின் கைபிடித்து இழுக்க,அவளின் கையை பார்வதி தட்டிவிட்டாள்.

“இரு நான் பேசனும்.சொல்லுடி சொல்லு”என்ற பார்வதி சத்தமாக கத்த,தன் தாயை சமாதானம் படுத்தும்விதமாக சுகந்தி பேசினாள்.

“அம்மா எனக்கு புரியுதும்மா”என்ற சுகந்திக்கு,

“என்னமா புரியுது,இந்தா நிக்குறாளே இவள் உங்க மூணு பேரைபோல கஷ்டம்நஷ்டம் தெரிஞ்சா வளர்ந்தா.சின்ன வயசுல இருந்து திருச்சியில் உங்க அப்பத்தா வீட்டுல வளர்ந்து அங்கே படிச்சாள். உங்க அப்பா இறந்ததும் இரண்டு நாள்ல அத்தையும் இறந்துட்டாங்க,அப்ப எவ்வளவு கஷ்டப்பட்டோம்”

“பழச எல்லாம் பேசாத மா”என நவீன் கூறியதும்,

“என்னடா பழசு,உங்க அப்பா இறந்தப்ப துக்கம் விசாரிக்க வந்தவங்களைவிட கடன்கேட்டு வந்தவங்க தான் அதிகம்.கல்யாண பொண்ணா இருக்கவேண்டியவ எல்லாத்தையும் தன் தலையில் சுமந்து தன் வாழ்க்கையை பத்திக்கூட நினைக்காம நமக்காக ஓட ஆரம்பிச்சவ இன்னும் ஒடுறா.

இவ்வளவு கஷ்டத்துலையும் இவ திருச்சியில தான் படிப்பேன்னு அங்கே படிச்சு,எவனையோ காதலிச்சு யாரையும் பத்தி யோசிக்காம ஓடிபோனவ இப்பயென் இங்க வரணும்?”

தன் அம்மாவின் பேச்சை கேக்கமுடியாமல் சுவாதி கதறி அழுதாள்.
“சொல்லுடி சுயநலவாதி சுயநலவாதி”என பார்வதி சுவாதியின் கையினை பிடித்து இழுத்தபடி ஆவேசமாக கத்தினாள்.

சுகந்தியால் தனது தாயை கட்டுப்படுத்த முடியாமல் திணறினாள்.

ஒருகட்டத்தில் மேல் பொறுக்காத சுவாதி, “போதும் நிறுத்துமா,என்னை ஒடுகாலினு சொல்லு,ஆனால் சுயநலவாதி மட்டும் சொல்லாத.என்னால தாங்க முடியல,நான் படிக்கும்போது காதலிச்சது உண்மை,ஆனால் அக்கா வாழ்க்கைக்காக என் காதலை தியாகம் பண்ணிட்டு…”என மேலும் கூறமுடியாமல் தன் தலையில் வேகமாக அடித்துக்கொண்டாள்.

சுவாதி அழுவதைக்கண்டு பொறுக்காத அவளின் மகன், “அம்மா நோ அழுகாத, நீ அழுதா நானும் அழுவேன்”என தேம்பி தேம்பி அழுகத்தொடங்கினான்.

சின்ன குழந்தையின் பேச்சைக்கேட்ட பார்வதி, “பாருடி நீ அழுததும் உன் பிள்ளை அழுகுறதை,அந்த பிஞ்சு குழந்தைக்கு இருக்க பாசம் கூட ஏன்டி உனக்கில்லை”என நொந்தவாறு சுவாதி மகனை தூக்கி கன்னத்தில் முத்தம் கொடுத்து கொஞ்சினாள்.

தன் மகள் செய்த தவறுக்கு அவளின்மீது எழுந்த கோவம்,அவள் பெற்ற செல்வத்தின்மீது பார்வதியால் ஒருத்துளி கூட வெறுப்பை காட்டமுடியவில்லை.

“அம்மா இப்பிடியெல்லாம் சொல்லாதமா,நான் உன்பொண்ணுமா.அக்கா கல்யாணம் என்னால நிக்கக்கூடாதுன்னு தான் ஒத்துக்கிட்டேன்.என் காதலை மறக்க முடியாமலும் கல்யாணத்தை ஏத்துக்க முடியாம ரொம்ப தவிச்சு போய்ட்டேன்”என இதுவரை அழுதபடியே கூறிக்கொண்டிருந்தவள் மேலும் தொடர்ந்தாள்.

“அக்காவை முகூர்த்தத்துக்கு அழைச்சுட்டு போனதும்,நான் மட்டும் அறையில் இருந்தேன்.என்னால அதுக்குமேல முடியல,அதான் விஷத்தை குடிச்சுட்டேன்.கொஞ்ச நேரத்துல மயங்கியும் விழுந்துட்டேன்”என சுவாதி அன்று நடந்தவற்றை கூறியதும் சுகந்தியை தவிர மற்ற மூவரின் முகத்தில் அதிர்ச்சி தோன்றி மறைந்தது.

“என்னமா எப்போதும் போல பொய் சொல்லுறேன் நினைக்காத,உண்மை தான்.மயங்கி விழுந்ததுதான் தெரியும் அப்புறம் கண்விழிக்குறப்ப ஹாஸ்பிடல் இருந்தேன்”

“மயங்கி விழுந்தா நீ எப்டி மண்டபத்தில் இருந்து காணாம போன.உன் இஷ்டத்துக்கு பொய் பேசி சமாளிக்காத”என நவீனின் கேள்விக்கு மவுனமான சுவாதி அழுதபடியே தயங்கினாள்.

“என்னடி பொய் கதை சொல்லிட்டு இருக்கியா நீ?”என பார்வதி தன் மகளின் கூற்றை நம்பாமல் வினவ,

“அவள் சொல்லுறதுயெல்லாம் உண்மை தான் மா,ஏன்னா அன்னைக்கு சுவாதி விஷம் குடிச்சது உண்மை”என சுகந்தி சுவற்றை வெறித்தவாறு கூறியதும் சுவாதி முதற்கொண்டு அனைவரும் திடுக்கிட்டனர்.

“அக்கா!அக்கா!”என சுவாதி அதிர்ச்சி கலந்த பயத்தோடு அழைக்க,

“கல்யாணம் நின்ன மறுநாள் உன்னைபத்தி நீ படிச்ச காலேஜ்,ஹாஸ்டல் எல்லாம் போய் விசாரிச்சேன்.அப்ப உன் ஹாஸ்டல் பொண்ணு தான் எல்லாம் உண்மையையும் சொன்னா,ரொம்ப ஷாக்கிட்டேன்.உன்னை கல்யாணம் பண்ணவரு யாருன்னு மட்டும் கண்டுபிடிக்க முடியல ஆனால் அவரு நல்லவருன்னு மட்டும் தெரிஞ்சது அதான் அமைதியாகிட்டேன்”

தன் மகளுக்கு முன்னவே தெரியுமா என்ற அதிர்ச்சியில்,“சுகந்தி உனக்கு..”என்ற சினமாக கேட்ட பார்வதிக்கு,

“எனக்கு எப்பவோ தெரியும்,சுவாதி அன்னைக்கு விஷம் சாப்பிட்டு மயங்கி இருக்கா.அந்த விஷயம் தெரிஞ்சு அவளை காதலிச்சவன் வந்து கூட்டிட்டு போயிருக்கான்”என சுகந்தி தான் அறிந்த அனைத்து உண்மைகளையும் கூறினாள்.

“விடு அம்மா தப்பு பண்ணிட்டா,எல்லாம் வயசு கோளாறு”என சுகந்தி எங்கோ பார்த்தவாறு மெலிந்த குரலில் கூற,சுவாதி தன் தலையில் அடித்துக்கொண்டு அழுதாள்.

“என்ன சொல்லுற சுகந்தி?”என்ற பார்வதிக்கு,
“ம்ம்”என சுகந்தி தலையசைத்ததும்,பார்வதி ஏதும் கூறாமல் கையிலிருந்த குழந்தையை இறக்கிவிட்டு அமைதியாக தனது கணவனின் புகைப்படத்தின் கீழ் அமர்ந்தாள்.
தன் தவறையெண்ணி கதறி அழுத சுவாதி,மனமும் உடலும் சேர்ந்தவாறு சோர்வையடைய அழுதவாறே மயங்கி சரிந்தாள்.