கோடிடாத இடங்களை நிரப்புக-அத்தியாயம்5

நிரப்புக-6
“கங்கா! கங்கா!” என பார்வதி கங்காவின் வீட்டு வாயிலில் நின்றவாறு கங்காவை அழைத்தாள்.

“அம்மா கங்கா வீடு இது,யாரோ போல வாசல் நின்னு கூப்பிட்டு இருக்க உள்ள வா” என பார்வதிக்கு கூறிவிட்டு சுமதி குதித்துக்கொண்டே வீட்டிற்குள் ஓடினாள்.

“கங்கா யாரோ கூப்பிடுற போல இருக்கு நீ பாரு”என்று தங்கள் அறையில் இருந்த யமுனா தனது காலை பிடித்துக்கொண்டிருந்த கங்காவிடம் கூறினாள்.

“பார்வதி பெரியம்மா குரல் போலாலுப்ப இருக்கு, இரு வரேன்”என கங்கா எழும் சமயம் சிரித்தபடியே சுமதி அங்கு வந்தாள்.
சுமதியை கண்டதும் யமுனா, “வா சுமதி” என அழைக்க,
“இதோ வந்துட்டேன், உங்களுக்கு ஒரு முக்கியமான குட் நியூஸ் சொல்ல போறேனே” என கூறும்போதே சுமதி முகத்தில் சந்தோஷம் பொங்கியது.

“என்னடி குட் நியூஸ்” என கங்கா ஆர்வமாக கேட்டதும், அவளின் மடியில் அமர்ந்த சுமதி அவளை கழுத்தோடு கட்டிக்கொண்டாள்.

“அய்ய என்னடி இப்படி கட்டிக்குற, சொல்லேன்டி” என்ற கங்கா நெளிந்தவாறு வினவ,
“சுகந்தி அக்காவை வர வெள்ளிக்கிழமை பொண்ணு பார்க்க வராங்க.கண்டிப்பா இந்த வரன் அமையும்.என் அக்காவுக்கு கல்யாணமே நடக்காதுன்னு சொன்ன எல்லார் மூஞ்சியிலையும் கரியை பூசனும்.என்அக்காவை இப்பவே கல்யாண கோலத்தில் பார்க்க அவ்வளவு ஆசையா இருக்குடி”என சுமதி மிகவும் உணர்ச்சி வசப்பட்டு பேசியவளின் கண்கள் கண்ணீரை சுரந்தது.

யமுனாவிற்கும் கங்காவிற்கு சுமதியின் கண்ணீருக்கான வலி புரிந்தது.

சுமதியின் பின்னே வந்த பார்வதி ராசியம்மாளிடம் விஷயத்தை தெரிவித்துவிட்டு மற்ற இருவரிடமும் கூறுவதற்காக வந்தவளுக்கு சுமதியின் வார்த்தைகளால் பழைய நினைவுகள் படையெடுத்தது.

ஆறு வருடங்களுக்கு முன்பு,
திருச்சி மாநகரில் உள்ள பிரபல ஒரு திருமண மண்டபத்தில்,திருமணத்திற்கு முதல்நாள் இரவு வரவேற்பு என்பதால் மண்டபமே களைக்கட்டியது.

வந்திருந்த சொந்தபந்தங்கள் இவள் அவள் தான என்றளவுக்கு முற்றிலுமாக மணப்பெண் அலங்காரத்தில் ஜொலித்த சுகந்தியைக்கண்டு வியந்தனர்.அவள் மட்டுமா அவளுக்கு ஈடாக அவளின் தங்கை சுவாதியும் மணப்பெண் அலங்காரத்தில் மிளிர்ந்தாள்.இருவரில் யார் அழகு என்று அனைவரும் புகழ்ந்து பேசும் அளவிற்கு இருந்தது.

சுகந்தியை மூத்த மகனிற்கு பெண் கேட்ட மாப்பிள்ளை குடும்பத்தினர் 19வயது நிரம்பியிருந்த சுவாதியை இரண்டாவது பையனுக்கு கேட்டதால் பார்வதியும் மனப்பூர்வமாக சம்மதித்துவிட்டாள்.

நவீனும்,சுமதியும் பள்ளி பருவத்தில் இருந்தனர்.மணமேடையில் தங்கள் வாழ்க்கை துணையாக வர இருப்பவர்களோடு ஜோடியாக நின்ற தன் இரு மகள்களைக்கண்ட பார்வதிக்கு நெஞ்சமெல்லாம் நிறைந்தது போன்ற உணர்வு.

சுகந்தி மணப்பெண்ணின் நாணத்தில் முகமெல்லாம் புன்னகையோடு இருந்தாள், ஆனாலும் மனதில் இந்த திருமணம் நல்லபடியாக நடந்துமுடிய வேண்டும் என்ற தவிப்பு இல்லாமல் இல்லை.
சுகந்திக்கு முதல்முறை திருமண ஏற்பாடு நடக்கும்பொழுது அவளின் தந்தை இறந்ததால் நின்றது.அடுத்தமுறை நிச்சயம் வரை வந்து உறவுகளின் கலாட்டாவால் நின்றது.மூன்றாவது திருமணத்தை சுகந்தியே நிறுத்தினாள் கராணம் மாப்பிள்ளையின் பெயரில் கடையை எழுதி வைக்கவேண்டும் என மாமியார் கேட்டதால் நிறுத்தினாள்.இது நான்காவது முறை,தனக்கு பார்த்திருந்த மாப்பிள்ளை அவளின் எண்ணங்களுக்கு ஒத்துப்போனார்.அதனால் இம்முறை அவள் மிகவும் ஆவலாக தன் கல்யாண வாழ்க்கையை நினைத்து ஒரு பருவ வயதுபெண்ணாக கனவுக்கண்டாள்.

திருமண வரவேற்பு முடிந்து இரவு விடைபெற்று விடியலும் விடிந்தது.ஆனால் சுகந்திக்கான விடியல் இப்பொழுது இல்லைபோலும் காரணம்,சுவாதி மணப்பெண் அலங்காரதோடு முகூர்த்த நேரத்தில் மண்டபத்தை விட்டு எங்கோ சென்றுவிட்டாள்.

மணப்பெண் அலங்காரத்தில் இருந்த சுகந்திக்கு இந்த திருமணத்தைவிட தங்கை தான் முக்கியம் என தேடியவளுக்கு,அவள் அனுப்பிய தொலைபேசி குறுந்செய்தி பேரிடியாக அமைந்தது.

தான் காதலித்தவருடன் செல்வதாக கூறிவிட்டு,யாரையும் பற்றி சிந்திக்காமல் தனது காதலனோடு சென்றுவிட்டாள்.

வந்திருந்த சொந்தபந்தங்களும் மாப்பிள்ளை வீட்டார்களும் பார்வதியையும் சுகந்தியையும் தவறாக பேச,திருமண விசேஷம் உறவுக்காரர்களின் கைகலப்பில் முடிந்தது.

அந்த நிகழ்வோடு சுகந்தியின் கல்யாண ஆசையையும் நொறுங்கிவிட்டது.அதன்பின்பு அவள் தனது கல்யாண ஆசையெல்லாம் துறந்துவிட்டு குடும்பத்திற்காகவே தன்னை மாற்றிக்கொண்டாள்.

அன்றைய நிகழ்வின் அவமான சுவடுகளும் அடைந்த துயரத்தையும் இன்னும் இவர்களால் மறக்கமுடியவில்லை.

பழைய நினைவுகளிருந்து மீண்ட பார்வதி கண்களை துடைத்துக்கொண்டு,தன்னை அமைதிபடுத்தினாள்.

பார்வதி சுவாதியின் துரோகத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றாலும் ஒரு தாயாக அவள் உயிரோடவாது இருக்கிறாளா என்ற கவலையும் மனரோத்தில் உண்டு.

பின்னர்,பார்வதியும் சுமதியும் யமுனா கங்கா இருவருவரையும் விஷேசத்துக்கு அழைத்துவிட்டு தங்கள் இல்லத்திற்கு சென்றனர்.

தங்கள் கடையின் அலுவலக அறையில் இருந்த சுகந்தி தனது வேலையில் மும்முரமாக இருந்தாள்.அப்பொழுது அறைக்குவந்த நவீன், “அக்கா” என்ற அழைப்போடு உள்ளே வந்து சுகந்திக்கு எதிரிலிருந்த நாற்காலியில் அமர்ந்தான்.

வந்தும் நவீன் அமைதியாக இருப்பதை கவனித்த சுகந்தி தனது வேலையை ஒதுக்கி வைத்துவிட்டு என்னவென்று அவனிடம் விசாரித்தாள்.

“நீ ஏன் அக்கா காலையில் இப்படி சொல்லிட்ட,உனக்கு தம்பி நான் இருக்கேன்.உனக்கு நல்ல வாழ்க்கையை நான் அமைச்சு தருவேன் அக்கா,நீ…”என கடைசி வார்த்தையை கூறாமல் முடித்தான்.

நவீன் கூறவருவதை புரிந்துக்கொண்ட சுகந்தி, “நீ சின்ன பையன் நினைச்சேன்,ஆனால் நீயும் சுமதியும் என்னைபத்தி யோசிச்சு ஒவ்வொன்னு பண்ணும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு.எனக்கு கல்யாணம் எல்லாம் வேணாம்டா,ஆனால் உங்களுக்கு பிடிச்சுற்கு அதான் ஒத்துக்கிட்டேன்.இதோட இந்த பேச்சைவிடு”என தன் குடும்பத்தினரின் அன்பைக்கண்டு நெகிழ்ந்து பேசியவள் பேச்சோடு பேச்சாக தனது விருப்பத்தையும் தெளிவுபடுத்தினாள்.

பல திருப்பங்களையும் சிலருக்கு மகிழ்ச்சியையும் சிலருக்கு துயரத்தையும் தரும் பொன் விடியலாக வெள்ளிக்கிழமை மலர்ந்தது.

மாப்பிள்ளை வீட்டினர் காலை நேரத்திலேயே வர இருப்பதால்,வருபவர்களுக்கு இனிப்பு பலகாரங்கள் என அனைத்தையும் அதிகாலையிலே எழுந்த பார்வதி உறவினர் பெண் ஒருத்தி துணையுடன் தயாரித்துக்கொண்டிருந்தாள்.

எப்பொழுதும் தனது அலாரம் அடிக்கும்முன்னே எழும் சுகந்தி இன்று அலாரம் அடித்தும் அரைமணி நேரம் கழித்தே எழுந்தாள்.கடிகாரத்தை பார்த்ததும் முதலில் பதறி எழுந்தவள்,காலைகடன்களை முடித்துவிட்டு அறையிலிருந்து வெளிவந்தவளுக்கு அதிர்ச்சி அளித்தாள் சுமதி.
காரணம்,சுமதி இன்று சீக்கிரமே எழுந்து வீட்டை சுத்தப்படுத்திக்கொண்டிருந்தாள்.
தன் தங்கையின் செயல்களை புன்னகைத்தப்படியே பார்த்துக்கொண்டிருந்த சுகந்திக்கு,தன் தந்தையின் வார்த்தைகள் மனதில் எழுந்தது.
“நம்ம ஒரு விஷயத்தை எவ்வளவு தரமோ அதையே திரும்ப எடுப்போம்.நீ பகையை கொஞ்சம்மா கொடுத்தா அதிகமா பகையா வரும் அதே அன்பை கொஞ்சமா கொடுத்தா அது உனக்கு இரண்டு மடங்கா வரும்.நீ மூத்தவ உன் கூட பிறந்தவங்கக்கிட்ட அன்பா இருந்தா அவங்க உன்மேல உயிரே வைப்பாங்க”
என தன் தந்தை தன்னுடைய சிறுவயதில் கூறிய வார்த்தைகள் எவ்வளவு உண்மை என்பதை இப்பொழுது உணர்ந்துக்கொண்டாள்.

ஏதோ சிந்தனையில் இருந்த தன் அக்காவை அழைத்த சுமதி, “அக்கா அவன் எப்ப வருவான்?” என கேக்க,
அப்பொழுது அங்குவந்த கங்கா, “யாரை டி கேக்குற?” என கேட்டதும், “நவீனை அக்கா ஒரு வேலையா நேத்தே பெங்களூர் அனுப்பி வச்சுட்டாடி.இன்னைக்கு காலையில வரேன் சொன்னான் அதான் அக்காகிட்ட கேக்குறேன்”என இன்றைய விசேஷத்தில் நவீன் இல்லாததை நினைத்து சுமதி வருத்தத்தோடு கூறினாள்.

தன் தங்கையின் வருத்தத்தை போக்க நினைத்த சுகந்தி, “நவீன் கிளம்பிட்டான், சரியான நேரத்துக்கு வந்துருவான்”என கூறியதும் தான் சுமதி ஓரளவு நிம்மதியடைந்தாள்.

“சரி சரி அக்கா நீங்க கிளம்புங்க,நானும் இவளும் கோலம் போடணும்.வாங்க மேடம் அழுகாட்சி”என கங்கா சுமதியை கேலி செய்ததும் சுமதி அவளிடம் வம்பிலுக்க ஆரம்பித்தாள்.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

இங்கு திருச்சியில் ஒருவனின் நிலைமை மிகவும் கவலையிடமாக இருந்தது.
வழக்கம்போல ராம் இழுத்து போர்த்தியவாறு உறங்கிக்கொண்டிருக்க,அவனை எழுப்ப படாதபாடு பட்டுக்கொண்டிருந்தான் மாதவன்(வேற யாரு சிக்குவா).

“டேய் அவனை இன்னுமா எழுப்பிட்டு இருக்க?” என்ற சூர்யாவிற்கு,
தனது நிலையை நொந்தவாறு, “ஆமா மச்சி,முகத்தில் தண்ணி கூட ஊத்திட்டேன்.பக்கி அப்படியும் நல்லா தூங்குறான்”என மாதவன் கூறியதும் ராமின் கட்டிலுக்கு அருகே வந்த சூர்யா இவனை எவ்வாறு கிளம்ப வைப்பது என சிந்தித்தான்.

“மாதவா, நேத்து நீ சொன்ன தான இவன்கிட்ட மார்னிங் பொண்ணு வீட்டுக்கு போகணும்னு”

“அட சொன்னேன் மச்சி,இவனும் மாமா சொல்லிட்டாரு வரேன் சொன்னான்”

“அப்ப நீ எழுப்ப வேணாம்,இந்த நாயே கிளம்பி வரும்.நீ எனக்கு காபி போட்டு எடுத்துட்டு வா”

“மச்சி,நான் என்ன உன் பொண்டாட்டியா காபி போட” என்ற மாதவன் கேள்விற்கு சூர்யா முறைத்தப்படியே,

“நீ என் அடிமை சரியா,என் பொண்டாட்டிக்கு நானே காபி போட்டு கொடுப்பேன்.மூஞ்சை தொங்க போடாம காபியை எடுத்துட்டு வா”

சூர்யா பொண்டாட்டின்னு சொன்னதும் சட்டென்று கண்விழித்த ராம் போர்வையை சிறிது விலக்கியவாறே சூர்யாவை வினோதமாக பார்த்தான்.

“நல்லத்துக்கே காலமில்லை, கலிகாலம்”என சத்தமாக உரைத்த ராம் மீண்டும் தூங்க முயற்சிக்க, அவனை கட்டில் இருந்தவாறே எட்டி உதைத்தான் சூர்யா.

கீழே விழுந்த ராம் சிறிதும் அழட்டிக்கொள்ளமல் எழுந்தவன், “என் பிரென்ட் போல யாரு மச்சான்” என பாடிக்கொண்டே குளியலறை புகுந்தான்.

ராம் சென்றதும் தனது மீசையை முறுக்கிய சூர்யா, “நானும் போனா போகுது பார்த்தா, நம்ம பேசாம இருக்குறது எம்புட்டு வசதியாக இருக்கு எருமைக்கு”என பேசிக்கொண்டே திரும்ப எதிரில் மாதவன் காபி கப்போடு நின்றான்.

“மச்சி இது மணமணக்கும் சுவையில் மயக்கும் மாதவன் காபி தயார்” என நீண்ட வசனம் பேசியவனை ஏறஇறங்க பார்த்தபடியே சூர்யா காபியை வாயில் வைத்த அடுத்தநொடியே துப்பினான்.

“என்ன கருமம் டா இது,உன்கிட்ட போய் சொன்னேன் பாரு என்னை சொல்லணும்” என அவனை தள்ளிவிட்டு சூர்யா செல்ல, மாதவன் கிண்டலாக சிரித்தான்.

சிலமணி நேரங்கள் கடந்தநிலையில், சூர்யாவின் காரிலே நேராக பெண்வீட்டிற்கு கிளம்ப,வெண்பா மற்றவர்களை அழைத்துக்கொண்டு இவர்களுக்கு முன்னவே கிளம்பிவிட்டாள்.

இங்கு மதகுப்பட்டியில்,சுகந்தியை அலங்காரம் என்ற பெயரில் சுமதியும் கங்காவும் ஒருவழி ஆக்கிக்கொண்டிருந்தனர்.

இதனைக்கண்டு தனது மேட்டிட்ட வயிற்றை பிடித்துக்கொண்டு யமுனா சிரித்துக்கொண்டிருக்க,
“யமுனா என்னை காப்பது இரண்டு பேர்கிட்ட இருந்து,அய்யோ போதும்டி உங்க அக்கப்போரு”என சுகந்தி சிணுங்கினாள்.

“அக்கா இப்பவே இப்படி சொல்லுற,யமுனா அக்கா கல்யாணத்துக்கு நாங்க போட்ட மேக்கப் பார்த்துட்டு ரங்கன் மாமா மயங்கிட்டாரு”என்ற சுமதியின் பேச்சிற்கு ஆவென்று பார்த்த யமுனா,

“ஆத்தி சுகந்தி அக்கா இவளுக என்னை எனக்கே தெரியாதபடி மாத்தி,இதுல என் வீட்டுக்காரர் மயங்கிட்டாரா பொய் அக்கா”என இருவரின் சேட்டைகளை யமுனா கூறினாள்.

“மயங்கிட்டாரு தான்,அதான் அவரு மயங்குனது விளைவை நீங்க வயிற்றில் சுமக்குறீங்களே”என சுமதி கூறியதும் யமுனா அன்றைய நாளை நினைத்து இப்பொழுது வெக்கப்பட்டாள்.

“ஏய் என்னடி நீ இப்படியெல்லாம் பேசுவியா?எனக்கு ஷாக் அடிக்குது.அம்மா தாயே கொஞ்ச நேரம் அமைதியா இரு”என்று சுகந்தி தனது தங்கையின் பேச்சில் அவள் வளர்ந்துவிட்டாள் என்பதை உணர்ந்தாள்.

“அய்யோ அக்கா இதுயெல்லாம் சும்மா,சரி கங்கா அக்காவுக்கு மீதியை முடி நான் நவீன்க்கு போன் பேசிட்டு வரேன்” என்றவள் தன் தொலைபேசியை எடுத்துக்கொண்டு அறையைவிட்டு வெளியே வந்தாள்.

மாப்பிள்ளை வீட்டினர் வர தொடங்கியதும் நவீனுக்கு அழைப்பதை மறந்து சுமதி வந்தவர்களை வரவேற்க தொடங்கினாள்.

அப்பொழுதே சுமதி நவீனுக்கு அழைத்து பேசியிருந்தால் அடுத்து நடக்க இருக்கும் துயரத்தை சமாளித்து இருக்கலாம்.