கோடிடாத இடங்களை நிரப்புக- அத்தியாயம்4

நிரப்புக-4
நவீனும் சுகந்தியும் பேசிக்கொண்டிருந்த பொழுது இடையில் வந்த பார்வதி, “தங்கம் டீக்கடைக்கு போய்ட்டு வரியா?” என்று தன் மகனிடம் கெஞ்சலாக கேட்டாள்.
“பொங்கல் சாம்பார் வச்சிருக்க, நான் போய் வடை வாங்கிட்டு வரணும் அதானே” என நவீன் தன் தாய் நினைத்ததை சரியாக கூற, அதற்கு ஆமாம் என பார்வதி தலையசைத்தாள்.
“அம்மா” என சுகந்தி அழைக்க,
“இன்னைக்கு ஒரு நாள் மட்டும் கடையில் வாங்க சொல்லு மா” என பார்வதி சுகந்தியின் பதிலை அறிந்து சம்மதம் கேட்டாள்.
“என்னமோ அம்மா, வெளில சாப்பாடு வேணாம்னு சொன்னா கேக்க மாட்டுறீங்க. நவீன் எனக்கு வேணாம் உங்களுக்கு மட்டும் வாங்கிட்டு வா” என கூறிய சுகந்தி கடைக்கு தயாராகுவதற்காக சென்றாள்.
சுகந்தி எப்பொழுதும் தனது விருப்பத்தை யாருக்காகவும் மாற்றி கொள்ளமாட்டாள். அவளுக்கு வேண்டாம் என்றால் வேண்டாம் தான்.
சுகந்தி பதிலில் பார்வதியின் முகம் சுருங்குவதை கவனித்த நவீன், “அம்மா அக்காவை பத்தி தெரியாதா உனக்கு” என கூறினான்.
“சரி அவளுக்கு வேணானா விடு தங்கம், நீ சுமதிக்கு மட்டும் போண்டா வாங்கிட்டு வா”
தன் அம்மாவின் பேச்சிற்கு முழித்த நவீன், “ஏன் மா அக்காக்கு வேணாமுன்னு வடையே வேணாம் சொன்ன,அதுயென அந்த சுண்டஎலிக்கு மட்டும் போண்டா” என்றவனுக்கு,
“அது எனக்கு டா பாண்டா” என சோம்பலை முறித்தப்படியே வந்த சுமதி தன் அம்மாவின் தோளில் சாய்ந்தபடி நின்றாள்.
“ஏண்டி பொண்ணா, பன்னா. உன் வயசு தான கங்காவுக்கு, அவள் சீக்கிரம் எழுந்து எவ்வளவு வேலை பார்க்குறா. பொழுது விடிஞ்சும் தெரியாம தூங்குற” என நவீன் சுமதியை அதட்ட, அவளோ வழக்கமாக கேக்கும் வார்தையென கண்டுக்காமல் அங்கிருந்த செய்தித்தாளை எடுத்துக்கொண்டு நாற்காலியில் அமர்ந்தாள்.
“பாரு, எல்லாம் நீ கொடுத்த இடம் தான். இவளுக்கு போண்டாவுமில்லை அண்டாவுமில்லை” என நவீன் சுமதியின் தலையில் கொட்டி விட்டு செல்ல,
“ஆஆ அம்மா ஆ எருமை மாடு, போடா பக்கி” என சுமதி கத்த, அவளின் சத்தத்தை அடக்கும் விதமாக உள்ளிருந்து சுகந்தி அதட்டினாள்.
அக்காவின் அதட்டிலில் வாயை மூடிய சுமதி, அப்பாவியாக தன் அம்மாவை நோக்க அவளும் இவளின் தலையில் கொட்டிவிட்டு சென்றாள்.
“அம்மா இரு மா, என்ன பண்ணேன் அவனும் கொட்டுறான் நீயும் கொட்டுற”என சிணுங்கியவளுக்கு,
“நேத்து உன்கிட்ட ஒரு வேலை சொன்னேன்ல செஞ்சியா நீ?”
“அம்மா சுமதிக்கிட்ட ஒரு வேலையை கொடுத்துட்டு என்ன கவலை உனக்கு, நேத்தே பண்ணிட்டு தான் தூங்குனேன்”
சுகந்தி அறையை ஒருமுறை எட்டி பார்த்த பார்வதி சுமதியை இழுத்துக்கொண்டு சமயலறைக்கு சென்றாள்.
“ஏன்மா இப்படி இழுகுற கை வலிக்குது”
“அதை விடுமா, மேட்ரிமோனியில் வரன் பார்த்தா சரி வருமா சொல்லு. எனக்கு பயமா இருக்கே சுமதி” என பார்வதி ஒரு தாயாக பயம்கொள்ள,
“அம்மா நீ கவலைப்பட வேணாம், மாப்பிள்ளையை பத்தின விவரம் எல்லாம் பார்த்துட்டேன். எனக்கு ஒரு சந்தேகம் இருக்கு,அது என்னன்னு பார்த்துட்டு சொல்லுறேன்”
“என்னது?” என பார்வதி அமைதியாக வினவ, அவளின் காதருகில், “நம்ம என்ன வெடிக்குண்டா போட போறோம் ரகசியமா பேசிட்டிருக்க, அக்கா கிளம்பட்டும் சொல்லுறேன்” என கூறியவளை அடிக்க பார்வதி சப்பாத்தி கட்டையை எடுத்ததும் சுமதி ஓடியே விட்டாள்.
“தங்கம் சொல்லுறது சரிதான், சின்னத்துக்கு வாய் கொஞ்சம் நீளம் தான்” என சுமதியை புகழ்ந்தவள், அடுத்த நிமிடமே விரைவில் சுகந்திக்கு நல்ல வரன் அமைய வேண்டும் என மனதார கடவுளிடம் வேண்டிக்கொண்டாள்.

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

மூன்றாவது குடும்பம்:


நான்கு மணியளவிலேயே விழித்துக்கொள்ளும் திருச்சி மாநகரமது.. பத்து மணியினை மணிக்கம்பியானது தொட்டும் எழுந்து கொள்ளாது தலைவரை போர்வையினை போர்த்திக்கொண்டு படுத்திருந்தவனை எழுப்ப படாதபாடு பட்டுக்கொண்டிருந்தான் ஒருத்தன்.
“டேய்! அடேய் இந்தா டா பரதேசி” என கத்தியவனை, பின்னாலிருந்து எட்டி உதைத்தான் சூர்யா.
“எதுக்குடா இப்படி ரேடியோ போல கத்திட்டு இருக்க, அந்த துரையை தாங்குனுமா அப்ப தான் எழுந்திருப்பானோ?” என திட்டியவாறே தன் தோளில் கிடந்த துண்டை தூங்கிக்கொண்டிருந்தவன் மீது தூக்கியெறிந்தான்.
சூர்யாவின் சத்தத்தில் தூக்கம் களைந்தவனோ, முகத்தை மூடியிருந்த போர்வையை லேசாக விலக்கியவாறே கட்டிலுக்கு கீழே குப்புற கிடந்தவனையும் அய்யனார் போன்று கோவமாக நின்றவனையும் ஏற இறங்க பார்த்தவன் மீண்டும் போர்வையை இழுத்து போர்த்தினான் ராம் என்ற ராமகிருஷ்ணன்.
மீண்டும் தூங்குபவனைக்கண்டதும் சூர்யாவிற்கு கோவம் தலைக்கேறியது.
“டேய் மாதவா! அவனை இன்னும் பத்து நிமிஷத்துல கிளம்பி இருக்கணும் சொல்லு. அப்படியில்லை வச்சுக்கோ”.
“மாப்பிள்ளை, என்னை இன்னும் அடிக்க கூட செய். ஆனால் என்னால இந்த எருமையை மட்டும் எழுப்ப முடியல” என குப்புற விழுந்ததில் குறுக்க பிடித்துக்கொண்டே எழுந்த மாதவன் சூர்யாவின் கையை பிடித்து கெஞ்சினான்.
“அவனோட சேர்ந்து நேத்து சரக்கை அடிக்க தெரிஞ்ச உனக்கு, எழுப்ப தெறியல?” என சூர்யா பல்லை கடித்தபடி பேசினான்.
“அது இல்ல மாப்பிள்ளை” என மாதவன் தயங்க,
“ஒழுங்கா அவனை எழுப்பு, இல்ல நேத்து நயிட் கொடுத்ததைவிட சேர்த்து கொடுப்பேன். அப்புறம் பார்த்துக்கோ” என சூர்யா மாதவனிடம் பேசிக்கொண்டிருந்தபோதே இவர்கள் வீட்டின் அழைப்பு மணி ஒலி எழுப்பியது.
சூர்யா வந்திருப்பது யாரென்று அறிவதற்கு அங்கிருந்து நகர, மாதவன் தூங்கிக்கொண்டிருந்த ராமை தூக்க முடியாமல் தூக்கி குளியலறைக்குள் தள்ளினான்.
“மச்சி சீக்கிரம் குளிச்சுட்டு வா டா, இல்ல அவன் என்னை கொன்னே போட்டுருவான்” என மாதவன், ராம் முகத்தில் தண்ணீரை ஊற்றினான்.
தன் முகத்தில் தண்ணீர் பட்டதும் சட்டென்று விழித்த ராம், “வா மச்சி சேர்ந்து குளிப்போம்” என மாதவனின் கைபிடித்து இழுத்தான்.
“அய்ய கருமம் நம்ம சேர்ந்து குளிக்கக்கூடாது டா” என மாதவன் எவ்வளவு முயன்றும் ராமிடமிருந்து தனது கையை உருவ முடியாமல் தவறி அவனது காலடியில் விழுந்தான்.
“மச்சி உன் காலை கையா இல்லை காலை பிடிச்சு கேக்குறேன் விட்டுரு டா, நான் என் டார்லிங் கூட தான் சேர்ந்து குளிப்பேன்னு உறுதியா இருக்கேன்” என தன் காலை பிடித்து கெஞ்சியவனை சற்றும் அசராமல் பார்த்த ராம்,
“தண்ணி அடிக்க கூப்பிட்டப்ப நீ வந்தில, அதுபோல தான் இது” என கூறிவிட்டு சத்தமாக சிரித்தவனை மாதவன் வினோதமாக பார்த்தான்.
அப்போது அறைக்கு வந்த சூர்யாவால் மாதவன் கெஞ்சலைக்கேட்டு வந்த சிரிப்பை அடக்கியவாறே, “என்ன கருமம் இதுயெல்லாம், மாதவா நீ அதுவா?” என சூர்யா இடுப்பில் கைவைத்தப்படி முகத்தை சந்தேகம் படும்படியாக கேட்டதும் தான் தாமதம்,
எப்படியோ ராமிடமிருந்து தப்பித்து குளியலறை விட்டு வெளிவந்த மாதவன், “மாப்பிள்ளை நான் அது இல்ல மாப்பிள்ளை அது இல்ல” என பதறியபடி கூறினான்.

“பாவம் நிஷா, அவள் நம்பர் என்ன டா 9 7 4 அப்புறம் மச்சி” என சூர்யா மாதவனை வம்பிலுக்கும் நோக்கில் பேச்சை இழுக்க,
“அய்யோ தெய்வமே தப்பு தான் இனிமே சரக்கை தொட்டா செருப்பாள அடி. ஆனால் என் வாழ்க்கையில் கும்மியடிக்காத?” என மாதவன் நேற்றிரவு தானும் ராமும் சரக்கு அடித்ததுக்கு மன்னிப்பு கேட்டான்.
“இந்த அறிவு எப்பவும் இருக்கட்டும், சரி சீக்கிரம் கிளம்பி வாங்க நான் ஹால இருக்கேன்” என சூர்யா உறுதியாக கூறிவிட்டு திரும்ப, அவனை மாதவன் அழைத்தான்.
“யாரு டா காலிங் பெல் அடிச்சது?”
“அவசியம் தெரியனுமோ,நம்ம அப்பார்ட்மெண்ட் பக்கத்து வீட்டு பாட்டி தான் நேத்து நீங்க குடிச்சுட்டு ஆட்டம் போட்டதை பார்த்து இருக்காங்க. அதான் என்கிட்ட கத்திட்டு போறாங்க”
‘ஆத்தி அந்த பல்லு கிழவி எப்ப பார்த்துச்சு, வீட்டுக்குள்ள வந்து தான ஆடுனோம். எப்டி’ என சிந்தனையில் இருந்தவனை யாரோ பின்னால் தொட்டதும் அதிர்ந்தான்.
“வா மச்சி முழுசா குளிப்போம்” என ராம் குளியலறையிலிருந்து இவனை கைநீட்டி மறுபடியும் அழைக்கவும் தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஹாலிற்கு ஓடும் மாதவனை கேவலமாக பார்த்தபடி சூர்யா அவன்பின்னே சென்றான்.
“இருக்கட்டும் பார்த்துக்குறேன்” என்ற ராமிற்கு,
“மச்சி அது தப்பு, என்னை நீ பார்க்க கூடாது” என ஹாலில் இருந்து பதிலளித்த மாதவனிற்கு,
“அந்த பார்த்தல் இல்ல வேற பார்த்தல்” என ராம் வேறுவிதமாக கூறியதும் மாதவன் திருதிருவென்று முழித்தான்.
ஒரு மணி நேரம் கடந்த நிலையில், சூர்யாவின் பொறுமையை மிகவும் சோதிக்கும் வகையில் மெதுவாக ராம் தயாராகினான்.
காரில் ஓட்டுநர் சீட்டில் சூர்யா அமர, அவனருகில் ராம் மற்றும் பின்சீட்டில் மாதவன் அமர்ந்தான்.
“எங்க போறோம் மாதவா?” என்ற ராமின் கேள்விற்கு,
“மதுரைக்கு போறோம்” என சூர்யா பதிலளிக்க,
சூர்யாவின் பதிலுக்கு அவனின் முகத்தை நோக்கிய ராம், “எதுக்கு?” என நேரிடையாக கேட்டான்.
“ராம், எதுக்குன்னு கேக்குற?” என மாதவன் முன்வந்து பேச, அவனை திரும்பி முறைத்த ராம்.
“சொல்லு மச்சி, என்னன்னு தெரியாம தான் கேக்குறேன்”
“எல்லாம் தெரியாம தான், குடும்பம் ஒன்னு இருக்குன்னு தெரியுமானு கேளு மாதவா?” என சூர்யா மாதவனிடம் கேள்வி கேட்டு ராமின் பதிலுக்காக காத்திருந்தான்.
“பச் இந்த குடும்பம் எல்லாம் எனக்கும் தெரியும். எல்லாரும் சுயநலவாதி” என்றவனுக்கு தனது கோவத்தை காரின் வேகத்தில் அதிகப்படுத்தி காட்டினான் சூர்யா.
‘ஆத்தி இதுங்க இரண்டும் இடையில போஸ்ட்மேன் வேலை பார்க்குறதே கொடுமை. இவங்க சண்டையில நம்ம மாட்டிக்கிட்டு முழிக்குறோம். முடியல ஷப்பா’
“என்ன பார்க்குறிங்க, நாங்க யாருன்னு தெரியாம தான் முழிக்குறிங்களா? நீங்க முழிக்குறது ரைட். இந்த ரைட்டர் என்னை இவங்கக்கிட்ட மாட்டி முழிக்க வைக்குறது போல எங்கக்கிட்ட நீங்க மாட்டி முழிக்குறிங்க.
சொல்லுறேன், நானே சொல்லுறேன்.
நான் மாதவன் என்னை பத்தி சொல்ல ஒன்னுமில்லங்க. கதை போக்குல என்னையும் சூர்யாவையும் தெரிஞ்சுக்குவிங்க அவ்வளவு தான்.
ராம் குடும்பம் தான் மூணாவது குடும்பம்.
ராம் சொந்த ஊர் மதகுப்பட்டி தான். ஊரிலே ரொம்ப செல்வாக்கான குடும்பம், ஆனால் எல்லாம் ராம் அப்பா சேர்த்ததில்லை.
ராமோட அப்பா செல்வம், அம்மா பாக்கியவதி. ராமுக்கு ஒரே அக்கா வெண்பாரதி. வெண்பா அக்கா சொந்த தாய்மாமன் மகன் பிரபாகரன் தான் கல்யாணம் பண்ணிருக்காங்க. இவங்களுக்கு இரண்டு வயசுல அழகான பையன் இருக்கான்.
வெண்பா அக்காவோட புகுந்த குடும்பம் மதுரையில் இருக்காங்க. அவங்கக்கூடவே இப்ப செல்வம் அப்பாவும் அம்மாவும் இருக்காங்க. ராம் திருச்சியிலுள்ள ஒரு ஐடி கம்பெனியில் ஒர்க் பண்ணுறான். நாங்களும் தான் கூட ஒர்க் பண்ணுறோம்.
வாங்க இரண்டு பேரும் என்ன பண்ணுறாங்கன்னு பார்ப்போம். இவங்களை அக்கினி நட்சத்திரம் கார்த்தி பிரபு னு நினைக்க வேணாம், இரண்டும் காமெடி பீஸ்.
“என்ன டா சொன்ன?” என்ற சூர்யாவிற்கு,
“ஒன்னுமில்ல மாப்பிள்ளை, அக்கினி நட்சத்திரம்ல இருந்து ராஜா ராஜாதி சாங் கேட்டா நல்லா இருக்கும் சொன்னேன்” என ஒருவழியாக சமாளித்தான்.
‘எப்படி கேட்டுச்சு இவனுக்கு, பாம்பு காது டா’ என்ன லுக் கமான் , அட வாசகர்கள் உங்களை தான்.