கோடிடாத இடங்களை நிரப்புக-அத்தியாயம்3

நிரப்புக-3
“துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம் நெஞ்சில்
பதிப்போர்க்கு செல்வம் பலித்துக் கதித்தோங்கும்
நிஷ்டையும் கைகூடும் நிமலனருள்
கந்தர் சஷ்டி கவசம் தனை.
அமரரிடர் தீர அமரம் புரிந்த
குமரனடி நெஞ்சே குறி”
என்ற கந்த சஷ்டி பாடலின் ஒலிவரிகள் சுகந்தி வீட்டையே நிறைத்துக்கொண்டிருந்தது.
வீட்டு கூடத்தில் உறங்கிக்கொண்டிருந்த நவீன், சஷ்டி பாடல் ஒலியில் போர்வையை இழுத்து போர்த்திக்கொண்டு பார்த்தான். ஒருகட்டத்தில் தூக்கமே களைந்துவிட, எழுந்து கொட்டாவி விட்டவாறே வாசல் படிக்கட்டுகளில் அமர்ந்தான்.
வாசலில் கோலம் போட்டு முடித்த

பார்வதி தன் மகனைக்கண்டதும், “என்ன தங்க பிள்ளை இன்னும் கொஞ்ச நேரம் தூங்க வேண்டியது தானே” என்றவளின் பேச்சிற்கு முறைத்த நவீன்,
“எங்க தூங்க ராத்திரி அம்மா மகளும் சேர்ந்து பேய் சொல்லி தூங்க விடல, காலையில சாமி பாட்டு போட்டு டார்சல் பண்ணுற மா நீ” என சிணுகினான்.
மகன் கோவத்திற்கு சிரித்தபடியே அவனருகில் வந்த பார்வதி தன் மகனின் தலையை கோதியவாறே, “அம்மா மேல கோவமா அவள் தான் கேக்கல டா, நீ பயப்பட மாட்டேன் நினைச்சேன். சாரி தங்கம்” என நேற்று அவன் முகத்தில் தோன்றிய வருத்தற்காக மன்னிப்பு கேட்டாள்.
பார்வதி எந்த அளவுக்கு தன் பிள்ளைகளோடு சேர்ந்து சேட்டைகள் செய்து கலகலப்பாக இருந்தாலும் தாயாக அரவணைக்கவும் சரி கண்டிக்கவும் தவற மாட்டாள். தவறு தானே செய்தாலும் எந்த வீம்பு பார்க்காமல் மன்னிப்பு கேக்கும் பழக்கம் அவளுடையுது, அதேபோல் தன் பிள்ளைகளையும் வளர்த்துள்ளாள்.
“பாரு(பார்வதியின் சுருக்கம் பாரு என செல்லமாக நவீன் அழைப்பது) உன் திட்டம் புரியுது, நீ மன்னிப்புக்கேட்டு அவளை காப்பாத்த பார்க்குற நெவர்” என நவீன் தன் அம்மாவின் எண்ணத்தை திசைதிருப்பவதற்காக கூற, தன் மகனின் மனமறிந்த பார்வதி லேசாக அவன் கன்னத்தை கிள்ளினாள்.
“டேய் தங்கம், உன்னை பத்தி தெரியாதா எனக்கு. அவளுக்கு இந்த வீட்டிலே அதிகமா செல்லம் கொடுக்கிறது நீ தான். அவளை உன்னை தவிர யாரையும் ஒண்ணு சொல்ல விட மாட்ட. நீ அவளை திட்ட போற”
“சுமதினு இல்லமா எனக்கு என்னோட சுகந்தி அக்காவும் ஒண்ணு தான் மா. அக்கா பிறந்தநாளை மறந்துட்டேன் தான் வருத்தம், மத்தபடி சுமதி மேல கோவமில்லை. சுமதினால தான் மா நம்ம வீட்டுல ஒவ்வொரு புயல் அடிச்சாலும் சந்தோஷம் குறையாம இருக்கு” என்றவன் பேசும்போதே தன்னோடு உடன்பிறந்தவளில் மூன்றாவது தமக்கையை நினைத்தவனுக்கு நெஞ்செமெல்லாம் எரிமலையாக கொதித்தது.
“அம்மா பால் பால்” என அழைத்துக்கொண்டே, கங்கா தனது டிவிஎஸ் வண்டியின் பின்னால் பால் கான்யை வைத்தபடியே அங்கு வந்தாள்.
கங்காவை கண்டதும் இதுவரை தோன்றிய எண்ணத்தை புறம்தள்ளிய நவீன் அவளிடம் வம்பிலுக்க தொடங்கினான்.
“வாங்க மேடம், உங்களை தான் பார்க்கணும் நினைச்சேன்” என்று நவீன், கண்களை விறைப்பாக வைத்தபடியே கூறினான்.
நவீன் பேச்சைக்கேட்ட கங்கா அருகில் நின்ற பார்வதியை பார்க்க, “நான் பாத்திரம் எடுத்துட்டு வரேன் இருமா” என்று நழுவி சென்றுவிட்டாள்.
தன் பற்கள் தெரிய இளித்த கங்கா, “அண்ணா அதுவந்து நான் ஐடியா தரல, ஏதாவது சத்தம்கேட்ட அக்கா தானா எழுந்திருப்பாங்கனு தான் சொன்னேன்” என மென்று முழுங்க,
கங்கா சமாளிப்பிற்கு நவீன் சிரிக்க தொடங்கினான்.
நவீன் சிரிப்பைக்கண்டதும் ஆசுவாசமான கங்கா, “அப்பாடா நீ திட்டுவியோனு நினைச்சேன்” என்று கூறிவிட்டு தானும் சிரித்தாள்.
பார்வதி வந்ததும் பாத்திரம் வாங்கி அவர்களுக்கு தேவையான பாலை அளந்து ஊற்றிக்கொடுத்தாள்.
“கங்கா, வேலையை முடிச்சுட்டு அப்புறம் வா” என்று அழைத்த பார்வதிக்கு தலையசைத்த கங்கா,
“சரி ண்ணா வரேன்” என்று கிளம்பியவளை தடுத்த நவீன், அவள் கையில் ப்ளூடூத் ஸ்பீக்கரை திணித்தான்.
“அண்ணா..”
“உன் பிறந்தநாளுக்கு கொடுத்த பரிசை வச்சு எனக்கு குட் தண்டனை கொடுத்துட்ட” என நவீன் பொய்யாக வருத்தப்பட, அதில் கங்கா கலங்கி விட்டாள்.
“அண்ணா சாரி அண்ணா, சுமதி தான் கேட்டா அதான் கொடுத்தேன், எனக்கு தெரியாது..து” என கங்கா அழுதே விட்டாள்.
“ஏய் கங்கா, நான் சும்மா சொன்னேன். முதல கண்ணை தொட” என நவீன் தனது கைகளால் கங்காவின் கண்ணீரை துடைப்பதை இருகண்கள் பார்த்தும் பார்க்காமல் அந்த வழியை கடந்தது.
“இல்ல நீ கோச்சுக்கிட்ட”
“அட கங்கா, இவன் சொன்னான்னு நீ அழுகுறியா. கண்ணை தொட, பொண்ணா பிறந்த யாரும் அழவே கூடாது. அதுவும் நீ தைரியமான பொண்ணு தொட” என இதுவரை இங்கு நடந்தவற்றை பார்த்துக்கொண்டிருந்த சுகந்தி, கங்காவை அதட்டபடியே வந்தாள்.
சுகந்தியை கண்டதும் வேகமாக கண்களை துடைத்த கங்கா, “இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அக்கா” என இயல்பாக வாழ்த்து தெரிவிக்க, அவளை ஏற இறங்க சுகந்தி முறைத்தாள்.
“பார்த்தியா அக்கா இவளை” என நவீன் சிரிக்க,
“உன்னை உதைக்கணும், இல்ல இல்ல எல்லாத்துக்கும் ஊனா போட்டாளே ஒருத்தி அவளுக்கு இருக்கு” என சுகந்தி கூற்றிற்கு சிரித்த கங்கா,
“அக்கா அவள் பாவம்” என தன் ஆருயிர் தோழிக்காக இறக்கப்பட,
“பார்த்தியா நவீன், தோழமை” என சுகந்தியின் இழுப்பில் கங்கா சத்தமாக சிரித்தாள்.
“தட்ஸ் அ கர்ள்” என கங்கா தோள்தட்டிய சுகந்தி, அவள் வாழ்த்துக்கு நன்றி கூறிவிட்டு அனுப்பி வைத்தாள்.
பின்பு, வீட்டிற்குள் நுழைந்த சுகந்தி நவீனிடம் தொழில் விஷயமாகவும் சரி வீடு விஷயமாகவும் சிலவற்றை அவனுடன் கலந்து பேசிக்கொண்டிருந்தாள்.
இந்த உலகத்தில் யாருக்கும் கட்டுக்கும் அடங்காத கடிகாரம் தனது செயலை செவ்வனே செய்யும் நோக்கில் இப்பொழுது ஏழு மணியை அடைந்தான்.
சமையலறையில் இருந்து மணியை பார்த்த பார்வதி, வேகமாக நவீனை தேடிச்சென்றாள்.
இங்கு கங்கா இல்லத்தில், தன்னவன் உதிரத்தை பொக்கிஷமாக சுமந்துக்கொண்டிருந்த யமுனா இரு நாட்கள் கழித்து கணவனை காணும் ஆவலில் கண்களை வலுக்கொண்டு பிரித்து படுக்கையிலிருந்து எழுந்தாள்.
மெதுவாக எழுந்து வெளி வாசலுக்கு வந்த யமுனா தங்கள் வீட்டை சுற்றி போடப்பட்டிருந்த வேலி திறப்பையே பார்த்துக்கொண்டிருந்தாள்.
வாயிலில் தனது பேத்தியைக்கண்ட ராசியம்மாள், “என்னதாயி எழுந்திருச்சு ஒரு வாய் தண்ணிக்கூட குடிக்காம இப்படி நிக்குறவ” என்ற கேள்விக்கு தலை திருப்பாமல்,
“இல்ல அப்பத்தா அவுக வரேன் சொன்னாங்க, அதே இங்கேன் நிக்குறேன்” என்று யமுனா வருத்தமாக கூறினாள்.
“சொன்னவுக வருவாக தா, உன் புருஷனை பார்க்கணும் ஆர்வம் இருக்குறது சரிதான் அதுக்கு வயித்துல உள்ள பிள்ளையை பார்க்க வேணாமா. போ தா முகத்தை கழுவிட்டு வா, அப்பத்தா குடிக்க ஏதும் எடுத்தாந்து தரேன்” என ராசியம்மாள் சமயலறைக்கு சென்றாள் முகம் முழுக்க இன்பத்தில்..
“ம்ம்” என பெருமூச்சுவிட்ட யமுனா, தனது மணிவயிற்றை தடவினாள்.
“என்ன தங்கம், அம்மா உங்களை பட்னியா போட்டேனா. உன் அப்பா இருக்காரே கொஞ்சம் கூட நம்ம மேல பாசமே இல்லை, எவ்வளவு நேரம் நம்மள காக்க வைக்குராறு”
“என்ன என்னை பத்தி என் பொண்ணுக்கிட்ட புகார் வாசிக்குற போல” என்று கேலியாக கேட்டப்படியே வந்தான் யமுனாவின் கணவன் ரங்கன்.
ரங்கனின் பேச்சுக்கூட யமுனாவின் செவியை தீண்டவில்லை போலும், அவனைக்கண்டதும் அவளின் வாடியிருந்த முகம் பிரகாசமானது.
தன் மனைவியின் முகத்தை அருகில் நோக்கிய ரங்கன், “என்னமா நல்லா இருக்கியா?” என்றவனின் கேள்விக்கு சந்தோஷமாக தலையாட்டினாள்.
“வாங்கப்பு வாங்க”என கையில் பால் டம்ரளோடு வந்த ராசியம்மாள் ரங்கனை கண்டதும் வரவேற்க, அப்பொழுது தான் யமுனாவும் வாங்க என்றாள்.
தன் மனைவியின் அழைப்பிற்கு ரங்கன் கள்ளத்தனமாக சிரிக்க, அந்த சிரிப்பு யமுனாவிற்கும் தொற்றி கொண்டது.
ரங்கன் முதுகில் லேசாக அடித்தவள், “போங்க உக்காறுங்க இதோ வரேன்” என கூறிவிட்டு மெதுவாக பின்கட்டிற்கு சென்றாள்.
சிறிது நேரத்தில் காலை கடன்களை முடித்துவிட்டு முகத்தை துடைத்தப்படியே வரும் தன் மனைவியின் தற்போதைய அழகை கண்ணார ரங்கன் ரசிக்க, தன்னவனின் பார்வையைக்கண்டு யமுனாவிற்கும் வெக்கம் தலை தூக்கியது.
“ம்க்கும்” என இருமிக்கொண்டே கங்கா வீட்டிற்குள் நுழைய, ரங்கன் சட்டென்று பார்வையை மாற்றிக்கொண்டான்.
“வாங்க மாமா, வீட்டுல எல்லாரும் நல்லா இருக்காங்களா?” என்ற கங்காவிற்கு,
“நல்லா இருக்கோம் மா” என இதுவரை கையில் வைத்திருந்த பழங்கள் பூக்களை கங்காவிடம் கொடுத்தான்.
“இந்தாங்க ப்பு காப்பி” என ராசியம்மாள் ஒருபுறம் தேநீரை கொடுத்ததும் அதனை வாங்கிய ரங்கன் அமைதியாக பருகினான்.
“ஆ அப்புறம் கங்கா, காலேஜ்ல சேர்ந்திடியா?”
“இல்ல மாமா, இன்னைக்கு தான் அப்ப்ளிகேஷன் பார்ம் கொடுக்குறாங்க. வாங்க போகணும்”
“கூட நான் வரேன் கங்கா, எவ்வளவு செலவுனு சொல்லு மாமா தரேன்”
“எனக்கு நீங்க கேட்டதே போதும் மாமா, வேணும்னா நான் வாங்கிக்குறேன். நானும் சுமதியும் போறோம் மாமா, நீங்க ஓய்வு எடுங்க”
“ஏன் கங்கா மாமா உனக்கு ஏதும் செய்யக்கூடாதா?” என்றவன் இதுவரை தன் மனதில் வருத்தப்பட்டுக்கொண்டிருந்த கேள்வியை தொடுத்துவிட, அதற்கு கங்கா யமுனாவை நோக்கினாள்.
“அப்படியெல்லாம் இல்லங்க, நீங்க அவளுக்கு செய்யாம யார் செய்ய போறா. நாங்க இதுவரை யார்க்கிட்டையும் எதுவும் கேட்டதில்லை, ஏன்னா எங்க அப்பத்தா அப்டி வளர்க்கல அதான்” என்றவள் உள்ளதை மறைத்து பொய்யான காரணத்தை எடுத்துரைக்க,ரங்கனுக்கும் யமுனாவின் சமாளிப்பு புரிந்தது.
ரங்கனின் தாய் எதையும் பட்டென்று கேட்டுவிடும் குணமுடையவள். கந்தனுக்கு தன் தாயிடம் இதுவரை பொய்யுரைத்து பழக்கமில்லை. திருமண ஆன புதிதில் வந்த ரங்கனின் அன்னை ஒரு விஷயத்தில் கங்காவை அவமான செய்துவிட அதுவே அவள் நெஞ்சில் வடுவாக மாறியது. இது அனைவருக்கும் தெரியும், இருந்தாலும் இதனை கூறி தன் கணவனை சங்கடபடுத்த விரும்பாமல் யமுனா சமாளித்தாள்.
“சரி மாமா நீங்க பேசிட்டு இருங்க, நான் காலேஜ்க்கு கிளம்பனும்” என கூறிய கங்கா கண்களால் தனது அப்பத்தாவை அழைத்தாள்.
சமையலறையில் ரங்கன் கொடுத்தவற்றை ஓரிடத்தில் வைத்துவிட்டு அமைதியாக நின்றாள்.
ராசியம்மாளும் கங்கா பின்னாலே வந்துவிட, “என்னத்தா முகம் சுணக்கமா இருக்கு, ஏதும் சச்சரவா?” என சரியாக தன் பேத்தியின் முகமறிந்தவளாக கேட்டாள்.
“ஆமா அப்பத்தா, வழக்கம்போல அந்த பியூட்டி பார்லர் வச்சு இருக்காளே அவள்கூட தான் சண்டை. போன மாசம் போல இந்த மாசமும் பால் கணக்கை தப்பா சொல்லி காசை குறைச்சு கொடுத்தா. அதான் இனிமே உனக்கு பால் இல்லைன்னு கொடுத்த காசை மட்டும் வாங்கி வந்துட்டேன்” என்றவள் தன்னை ஏமாற்றி விட்டாளே என ஆதங்கப்பட,
“இதுக்கு தா இந்த கிழவி சொல்லுறேன் நீ கேக்க மாட்டுற. பாலை பேசாம சண்முகத்திக்கிட்ட கொடுப்போம், அவனே கறந்து காசு கொடுக்கட்டும். அவன் கூட வச்சு விக்கட்டும் நமக்கு என்ன சொன்னால் நீ கேக்குறியா?”
“அப்படியில்லை அப்பத்தா, சின்ன வயசுல இருந்து இதேன் என் வேலை. ஆரம்பத்தில் நமக்கு சோறு போட்டது இதுதான். அதுமட்டுமில்ல, சண்முகம் மாமாக்கிட்ட விட்டோம் வச்சுக்கோ நமக்கு நஷ்டம் தான்” என்றவள் மேலும் தொடர்ந்தாள்.
“அக்காக்கு பிரசவ செலவு வருது, அவள் மாமியார் கண்டிப்பா தனியார் ஆஸ்பத்திரியில தான் பார்க்கணும் சொல்லிட்டாங்க. அதுமட்டுமா பிள்ளை பிறந்தா நிறைய செலவு இருக்கு அப்பத்தா, தாய்மாமன் சீர் முதற்கொண்டு நம்ம தான் பண்ணணும்” என பொறுப்பாக பேசியவளைக்கண்ட ராசியம்மாள்,
“நீ என் ஆத்தா, உன் வயசுக்கு யோசிக்காம பெத்தவுக வயசுக்கு யோசிக்குற. உங்க அப்பன் ஆத்தா இருந்தா நீங்க இப்படி கஷ்டப்பட்டு இருக்க மாட்டீங்க. எல்லாம் இந்த வயித்துல பிறந்த நாயா ல வந்துச்சு” என தன் வயிற்றில் அடித்துக்கொண்டு புலம்பினாள்.
வீட்டிற்கு வரும் வருமானத்தை வைத்து எப்படியோ இருவரையும் வளர்த்து, பாதி நிலத்தை விற்று யமுனாவை கரை சேர்த்துவிட்டலும், யமுனா மாமியார் அவ்வப்போது இழுக்கும் செலவை தான் இவர்களால் சமாளிக்க முடியவில்லை.
“ஒத்த ஆளா கடந்து வீட்டையும் பார்த்து, வியாபாரத்தையும் பார்த்து இந்த கிழவியை பார்த்துட்டு உன்னால எப்டி தான் படிக்க முடியுது”
“படிக்குறது என்னோட லட்சியம் அப்பத்தா, எதுவும் எனக்கு சிரமமில்லை. இப்படி சிரமம் நீ பார்த்திருந்தா நாங்க இந்நேரம் இருந்து இருப்போமா சொல்லு”
“இல்ல தா, நீ கல்யாணம் பண்ணிக்கோ. நான் நிம்மதியா கண்ணை மூடிருவேன். ஏன்னா ஒவ்வொரு நாள் ராத்திரியும் பயந்துகிட்டு தான் தூங்குறேன், நான் பாட்டுக்கு போயிட்டா உனக்கு யார் தா இருக்கா” என இதுவரை உடைந்த குரலில் பேசிக்கொண்டிருந்த ராசியம்மாள் அழுதே விட்டாள்.
அழும் சத்தம்கேட்டு கூடத்தில் பேசிக்கொண்டிருந்த ரங்கனும் யமுனாவும் பதறி வந்தனர்.
“அப்பத்தா ஏன் அழுகுற?” என கேட்கும்போதே யமுனா அழுதுவிட்டாள்.
கங்கா போன்று தைரியமானவள் இல்லை யமுனா மிக மென்மையானவள், யாராவது அதிர்ந்து பேசினால் கூட அழுதுவிடுவாள். அப்டி குணமுடையவள் தன் அப்பத்தாவின் அழுகையைக் கண்டதும் தானும் அழ தொடங்கினாள்.
“யமுனா அழுகாத, என்ன கங்கா அப்பத்தா ஏன் அழுகுறாங்க?” என்று ரங்கன் கங்காவிடம் வினவ,
ராசியம்மாள் கண்ணீரை துடைத்த கங்கா, “அப்பத்தாவுக்கு அவுக மகன் ஞாபகம் வந்துருச்சு வேற ஒன்னுமில்ல” என ஒருவாறு சமாளித்தாள்.