கோடிடாத இடங்களை நிரப்புக-அத்தியாயம்2

நிரப்புக-2
இரண்டாவது குடும்பம்:
“யம்மு யம்மு என் தங்கம்ல பேசுங்கமா யம்மு என் அம்மு” என்ற தொலைபேசியின் அழைப்பில் நெளிந்தவள்,

மெத்தையில் படுத்தப்படியே கண்களை திறக்காமலே தலையணைக்கு அடியில் இருந்த தொலைபேசியை தேடி எடுத்தாள்.

முதல் அழைப்பு துண்டிக்கப்பட்டு, அடுத்த அழைப்பு வந்த நொடியே எடுத்தாள் கங்கா.

“ஹலோ! ஹலோ!!” என்றவள் தூக்க கலக்கத்தில் பேச,

“என்னமா தூங்கிட்டு இருந்தியா, நான் வீட்டுக்கு வந்துட்டேன். அதை சொல்ல கால் பண்ணேன் மா, தூக்கம் வராட்டி கொஞ்சநேரம் பேசுறியா” என்றவன் கேட்டுக்கொண்டிருக்கும்போதே,

“அய்யோ மாமா, நான் கங்கா. உங்க யமுனா தூங்கிட்டு இருக்கா” என சிரித்தவளே மேலும் தொடர்ந்தாள்.

“கல்யாணமாகி இன்னுமா உங்க பொண்டாட்டி குரலுக்கும் என்னோட குரலுக்கும் வித்தியாசம் தெரியல”
கங்கா பேச்சு சத்தத்தில் தூக்கம் கலைந்த யமுனா,

“என்னடி இருட்டில யார்க்கிட்ட பேசிட்டு இருக்க” என்றவள் எழ முயற்சிக்க, அவளை தடுத்த கங்கா எழுந்து அறையின் விளக்கை ஒளிரவிட்டாள்.

தனது மேட்டிட்ட வயிற்றை பிடித்தபடியே எழுந்து சுவற்றில் சாய்ந்து அமர்ந்தாள் யமுனா.

தனது அக்கா கையில் அவளின் தொலைபேசியை திணித்த கங்கா, “உங்கள் காதலுக்கு கண்ணு இல்ல சரி மணிக்கூடவா தெரியாது. மணி ஒண்ணு ஆக போகுது சீக்கிரம் பேசிட்டு படு டி” என கூறிய கங்கா, தனது அக்காவிற்கு தனிமைகொடுப்பதற்காக அறையைவிட்டு சென்றாள்.
தனது கொழுந்தியா கூற்றைக்கேட்டு அசடு வழிந்த ரங்கன், “யம்மு!!” என்று கொஞ்சிய குரலில் கூப்பிட,

தனது எட்டு மாத மணி வயிற்றை தடவியபடியே சிரித்த யமுனா, “ அம்மு செல்லம் னு கொஞ்சுனா மட்டும் போதுமா இன்னுமா உங்களுக்கு என் குரலை கண்டுபிடிக்க தெறியல. ரொம்ப கஷ்டம் ரகு” என அவனை சீண்டினாள்.

“இல்லமா அது வந்து..இப்ப விடு அடுத்த தடவை சரியா சொல்லுறேன் எழுதி வச்சுக்கோ”

“என்ன வச்சுக்க, ஆமாம் இப்ப தான் வீட்டுக்கு வந்திங்களா? சாப்பிடிங்களா?”

“வேலை இன்னைக்கு கொஞ்சம் அதிகம் மா, அதுயெல்லாம் சாப்பிட்டேன். பாப்பா என்ன பண்ணுறா?”

“உங்க பொண்ணு தான நல்லா உருண்டுக்கிட்டு இருக்கா, அப்பாவை பார்க்கணும் வேற சாயந்திரம்ல இருந்து ஒரே சேட்டை”

“அதுசரி வயிற்றில் இருக்க என் பிள்ளை சேட்டை பண்ணுச்சா, அத்தானை பார்க்கணும் சொன்னா வர போறேன் அதுக்கு ஏன் இப்படியொரு உருட்டல்”

“அதான் தெரியுதுல, நாளைக்கு வாங்க. சரி சரி கங்கா வந்துட்டா நான் போனை வைக்குறேன்” என்று யமுனா தொலைபேசியை வைக்கும்நேரம் அறைக்குள் நுழைந்த கங்கா கையில் ஒரு கிண்ணத்தோடு வந்தாள்.

“என்னடி பேசிட்டியா உன் அத்தான்க்கிட்ட” என கிண்டலாக கேட்டவாறு கிண்ணத்தை அவள் கையில் கொடுத்தாள்.

யமுனா கிண்ணத்தில் என்னவென்று பார்க்க பால் மிதமான சூட்டிலிருந்தது.

ஒன்றும் கூறாமல் பாலை குடித்த யமுனா கங்காவிடம் கிண்ணத்தை கொடுக்க,அவளோ அதனை சமையலறையில் வைத்துவிட்டு விளக்கை அணைத்தவள் யமுனாவின் அருகில் படுத்தாள்.

“ஏன் யமுனா மாமா உன்கிட்ட நல்ல பாசமா தான இருக்காரு, நீ சந்தோஷமா இருக்கியா?” என்ற தன் தங்கையின் கேள்விக்கு சிரித்த யமுனா,

“எத்தனை தடவை தான்டி கேப்ப, நானும் உன் கேள்விக்கு பதில் சொல்லியே சலிச்சு போய்ட்டேன்”

“ஏய் கேட்டா சொல்லு, இல்லாட்டி போடி”

“ஏன்டி இந்த கேள்வியை நாளைக்கு என் பிள்ளைக்கிட்ட கூட கேப்பப்போல, சரி சரி முறைக்காத என்மேல உயிரே வச்சு இருக்காரு. அவரோட அன்புக்கு என் உயரே கொடுக்கலாம்” என யமுனா தழுதழுக்கும் குரலில் கூற,

“உன் புருஷனை பத்தி கேட்டா பொங்கிருவியே, நீ நல்லா இருக்கணும்டி அதான் என்னோட ஆசை”

“அது..”என கூற வந்த யமுனாவை கங்கா மேலும் பேச விடாமல் உறங்க வைத்தாள்.

அதிகாலை நான்கு மணிக்கு சரியாக கண்விழித்த கங்கா, மெல்ல எழுந்து மாற்று உடையெடுத்துக்கொண்டு குளியலறை புகுந்தாள்.

சில நிமிடத்தில் குளித்து தயாராகியவள் நேராக தனது அப்பத்தா அறைக்குள் நுழைந்தாள்.

கயிற்று கட்டிலில் போர்வையை இழுத்து போர்த்திக்கொண்டு உறங்கிய தனது அப்பத்தா காலைத்தொட்டு வணங்கினாள்.

தனது பேத்தி தொடுதலை உணர்ந்த ராசியம்மாள், கண்ணை திறவாமலே, “மகராசியா இருப்ப தாயி, போ விளக்கு ஏத்து சத்த நிமிஷம் படுத்துக்குறேன்” என கூறிவிட்டு உறங்க ஆரம்பித்தாள்.

கையில் துடைப்பதையும் ஒரு வாளி தண்ணீரையும் எடுத்துக்கொண்டு முகப்பு வாசலை திறந்த கங்கா, “என்னங்க எல்லாரும் என்கூடவே வரிங்க, எங்களை பத்தி அறிமுகம் சொல்லணுமோ சொல்லிட்டா போச்சு பாலோவ் மீ” என கூறிக்கொண்டே தனது வேலையில் கண்ணாக இருந்தாள்.

வாசலை பெருக்கி தண்ணீர் தெளித்து பச்சரிசி மாவை கையிலெடுத்தவள், “இது எங்க வீடுங்க, மொத்தம் மூணு பேரு இருந்தோம். இப்ப என் அக்கா வயிற்றில் இருக்க பிள்ளையை சேர்த்து அஞ்சு பேரு” என 13க்கு நேர் 13 புள்ளி வைக்கத்தொடங்கினாள்.

“எங்க அம்மா அப்பா பத்தி தான நினைக்குறீங்க, வேற என்ன சாமியாகிட்டாங்க. ஆம்பளை பிள்ளைக்கு ஆசைப்பட்டு பிரசவத்தில் எங்க அம்மாவும் என் உடன்பிறப்பும் தவற, அந்த சோகத்திலே எங்களை பெத்த மனுஷன் கால்நடையா போயிட்டாரு. என் அப்பத்தா எங்கோ ஜாதகம் பார்த்ததுல அவரும் இறந்துட்டாருனு தெரிஞ்சது. எங்களை வளர்த்து படிக்க வச்சது எல்லாம் எங்க அப்பத்தா தான்” என முழுமையாக புள்ளி வைத்தவள், ஆறு ரோஜா பூக்களை வரைய தொடங்கினாள்.
“யமுனா ரொம்ப படிக்கல காரணம் எனக்காக. பின்ன அப்பனும் இல்ல ஆத்தாவுமில்ல, பொழப்புக்கு என்ன வழி. அஞ்சு மாடு வச்சு இருக்கோம், பால் கறந்து விக்குறோம். நிலத்தை குத்தகைக்கு விட்டு காசும், புளி மிளகாய்னு வருஷத்துக்கு வரும். ரொம்ப வருமானம் எல்லாம் இல்லை, பசிக்கு சோறு இருக்கு அவ்வளவு தான்” என்று சுற்றிலும் ரோஜா பூக்களை வரைந்தவள் நடுவிலுள்ள புள்ளிகளை இணைத்து பூவாக வரைந்தாள்.

“எனக்கு வயது 20, என்னை விட யமுனா நாலு வருஷம் மூப்பு. ஒரு வருஷம் முன்ன தான் கல்யாணம் பண்ணி வச்சோம். மாப்பிள்ளை பக்கத்து ஊர்தான், முதல் வரன் பார்த்ததும் பிடிச்சது முடிச்சுட்டோம். என் மாமா பெயர் ரங்கன், சிவகங்கையில் பூக்கடை வச்சு இருக்காரு, ரொம்ப நல்ல மனுஷன். என்ன அம்மா சொல்லை தட்டாத பிள்ளை, அவரோட அம்மாக்கு ஒரே மகன்” என சிலவற்றை நினைத்தவள், கையில் சிவப்பு வண்ணத்தை எடுத்து ரோஜாவிற்கு கொடுக்க ஆரம்பித்தாள்.

“மாமியார் னா அப்படித்தான், இப்போ யமுனா எட்டு மாசமா இருக்கா. இப்போ என்னோட வேண்டுதல் எல்லாம் அவளுக்கு நல்லமுறையில் சுக பிரசவம் ஆகணும். நான் பி.காம் முடிச்சுட்டு அடுத்து படிக்க தயாரா இருக்கேன்” என முழுமையாக கோலத்திற்கு வண்ணம் தீட்டி நிமிரும்பொழுது, மணி ஐந்தை கடந்து இருந்தது.

முகத்தில் பூத்திருந்த வேர்வையை துடைத்த கங்கா தனது கோலத்தின் அழகை ரசித்தபடியே, “இது என்னோட குடும்பம், அழகான சின்ன கூடு” என கூறிவிட்டு தனது வழக்கமான அடுத்த வேலையில் மூழ்கி போனாள்.