கோடிடாத இடங்களை நிரப்புக-11

நிரப்புக11:
அதிகாலை முதலே ராமின் அலைபேசி விடாமல் அடித்துக்கொண்டிருந்தது.அவனோ அதை கண்டுகொள்ளாமல் மதுதந்த மயக்கத்தில் ஆட்கொள்ளப்பட்டு அறையில் குப்புறகிடந்தான்.

மாதவன் தனது ஊருக்கு சென்று இன்றோடு இரு தினங்கள் ஆகிறது.மாதவன் இல்லாததால் சூர்யா ராமை அதிகமா தொந்தரவு செய்யவில்லை,ஒன்றாக அலுவலகத்திற்கு செல்வது சாப்பிடுவது என்றாலும் இருவரும் வழக்கம் போல பேசிக்கொள்ளவில்லை.

ராம் நேற்று மாலையோடு வேலை முடிந்து தங்கள் அபார்ட்மெண்ட்க்கு வந்துவிட்டான்.ஆனால் சூர்யா அலுவலகத்தில் சிறுவேலை என்பதால் அதிகாலைபொழுதே வந்ததால் அசதியில் உறங்கிக்கொண்டிருக்கிறான்.

ராம் எடுக்கவில்லை என்றதும் அந்த அழைப்பு சூர்யாவின் அலைபேசிக்கு விடுக்கப்பட்டது.இரண்டு மூன்று அழைப்பிற்கு பிறகு எடுத்த சூர்யா,அந்தபுறம் கூறிய செய்தியில் அதிர்ந்தான்.

“அய்யோ என்ன அக்கா சொல்லுறீங்க?”என்றவனுக்கு,

உடைந்த குரலில் பேசிய வெண்பா, “ரொம்ப பயமா இருக்கு சூர்யா,அப்பா நிலைமை மோசமா இருக்கு டா.ராமை பார்க்கணும் நினைக்குறாருபோல அவனை கூட்டிட்டு வாயேன்”என கூறினாள்.

அடித்து பிடித்து எழுந்த சூர்யா வேகமாக ராம் அறைக்கு சென்றான்.அங்கு சென்றதும் தான் அவன் குடித்துள்ளான் என்பதை அறிந்துகொண்டவன் போதையில் இருப்பவனை கோவத்தில் அடித்து மிதித்தான்.

“இந்த கருமத்துல என்ன இருக்குன்னு குடிக்குற.இதுனால நீ இழந்தது என்னன்னு உனக்கு தெரியல அதான் குடிக்குற குடிகரா நாயே”என சூர்யா கத்தினான்.ஆனால் தான் கத்துவது வீண் என்று உணர்ந்தவன் அடுத்து என்ன பண்ணலாம் என சிந்தித்தான்.

போதையில் இருப்பவனைக்கண்டு நொந்த சூர்யா அவனை தூக்கியபடியே அங்கிருந்து கார் நிறுத்ததுக்கு சென்றான். பின்பு ராமை பின்னால் இருக்கையில் படுக்கவைத்துவிட்டு,காரை வேகமாக மதுரைக்கு செலுத்தினான்.

மூன்று மணிநேரத்திற்கு பிறகு,சூர்யாவின் கார் வெண்பா கூறிய மருத்துவமனை முன்புவந்து நின்றது.வரும்போது மாதவனுக்கு தகவல் கொடுத்து அவனையும் கையோடு அழைத்து வந்தான் சூர்யா.இப்பொழுது பொழுது நன்கு விடிந்ததால் போதையில் இருந்து தெளிந்த ராம்,நடப்பது புரியமால் முழித்தான்.

மாதவன் மூலம் விஷயத்தை அறிந்தாலும் ராமின் முகத்தில் எந்த பதட்டமும் கவலையும் தென்படவில்லை.

சூர்யாவும் மாதவனும் செல்வத்தை அனுமதிருந்த அறையை வரவேற்பறையில் விசாரித்து,அங்கு ஓட்டமும் நடையுமாக சென்றனர்.யாரோ மூன்றாவது மனிதர் போன்று ராம் மெதுவாக இருவரையும் பின்தொடர்ந்தான்.

அவசர சிகிச்சை பிரிவில் செல்வம் அனுமதிக்கப்பட்டிருப்பத்தால் அறை வாசலில் மொத்த குடும்பமும் கலங்கிபோய் நின்றது.

வெண்பா தன் அம்மாவிற்கு ஆறுதல் சொன்னாலும் அவளும் அழுதுக்கொண்டிருந்தாள்.

“அக்கா என்ன ஆச்சு?”என சூர்யா பதட்டமாக வெண்பாவை கேக்கவும்,அவளோ மேலும் அழுகத்தொடங்கினாள்.

அங்கு ஓரமாக நின்ற ராம்,நடப்பவற்றை கவனித்தான்.

வெண்பா உடைந்து போயிருப்பதால் சூர்யாவின் அருகே வந்த பிரபாகரன், “நேத்து நயிட் நல்ல இருந்தாரு,பேரன்க்கிட்ட பேசிட்டு தான் தூங்க போனாரு.தூங்கிட்டு இருக்கும்போது தான் வலிப்பு வந்துச்சுன்னு அத்தை சொன்னதும் ஹாஸ்பிடல் கூட்டிட்டு வந்தோம்.இங்க டாக்டர் பார்த்ததும் ரொம்ப கிர்ட்டிகள்னு சொல்லி ஐசியுல அட்மிட் பண்ணிட்டாங்க.இன்னவரை என்ன நிலவரம்னு சொல்லவே இல்ல”என கலங்கியபடியே கூறினான்.

“மாமா டாக்டர் சொல்லட்டும் அதுக்குள்ள ஏன் பயப்படணும் ஒன்னுமில்லை அப்பாக்கு”என மாதவன் பிரபாகரனுக்கு ஆறுதலாக பேசினான்.

பிரபாகரன் ராமை பார்ப்பதைக்கண்ட சூர்யா, “மாமா அவன்..”என இழுக்க,

“அவனை நான் என்ன சொல்ல போறேன்.நான் யாரு அவனுக்கு? என் பேச்சைக்கேட்டு தான் பொண்ணு பார்க்க போறேன் போயி எல்லாரையும் அசிங்கப்படுத்தி இருக்கான்.அட்லிஸ்ட் உண்மையை சொல்லாம இருந்திருக்கலாம்,இப்ப இவனுக்கு இன்னொரு வாழ்க்கை எப்படி அமையும் லீவ் இட்”என்று பிரபாகரன் வெறுத்து பேசினான்.

வீரப்பன் தனது பேரனை தூக்கி வைத்துக்கொண்டிருக்க,போதும் பொண்ணு அமைதியாக பாக்கியவதி அருகில் அமர்ந்திருந்தாள்.

எந்த பதட்டமும் கவலையும் இல்லாமல் ராம் யாரோ போன்று நிற்பதைக்கண்ட பாக்கியவதி ஆவேசமாக அவனருகில் சென்றாள்.

விரிந்திருந்த கூந்தலை அள்ளி முடிந்தபடியே, “ஏன் பா உன்னை பெத்துக்காக எங்களை கொல்லாம கொல்லுற.பெத்த மனுஷன உயிருக்கு போராடிட்டு இருக்காரு உனக்கு கொஞ்சமாச்சும் கவலை இருக்கா.என்னமோ பெரிய இவன் போல இருக்க”என மருத்துவமனை என்றுகூட பாராமல் பாக்கியவதி தனது மகனிடம் கத்தினாள்.

தனது அம்மாவை காணபிடிக்காமல் வேறுப்பறம் பார்த்தவாறு நின்ற ராம் முகத்தை உணர்ச்சிஇல்லாதவன் போன்று வைத்துக்கொண்டான்.

அழுதபடியே பாக்கியவதி அருகில் வந்த வெண்பா, “இவன் எல்லாம் ஒரு மனுஷன்னு பேசாத மா.சாடிஸ்ட் மா,கொஞ்சம் கூட அன்பு பாசமில்லாதவன்”என அவளும் கோவமாக கொட்டி தீர்த்தாள்.

“டேய் சொல்லுடா உனக்கு நாங்க என்ன பண்ணோம்.நீ ஏதோ பிள்ளையை காதலிக்குறேன்னு சொன்ன மறுத்தோம்,ஆனால் நீ அவள்தான் வேணுமுன்னு போன.பின்ன என்ன ஆச்சோ தெரியல உன்னைவிட்டு அவள் ஓடிப்போய்ட்டா,நீயும் பிச்சைக்காரன் போல சுத்துற.சரி நம்மளாச்சும் நல்ல வாழ்க்கையை அமைச்சு கொடுப்போம்னு நினைச்சா எங்களை அசிங்கப்படுத்துற”என பாக்கியவதி கோவத்தில் வார்த்தைகளை அள்ளி தெறித்தாள்.

இதுவரை அமைதியாக நின்ற ராம்,தன்னவளை அவதூறாக பேசவும் சினத்தில் தன் தாய் என்றும் பாராமல் அடிப்பதற்கு கையை ஓங்கினான்.

ராமின் சினம் புரிந்து விரைந்துவந்து அவன் செய்ய இருக்கும் செயலை தடுத்த சூர்யா,அவனின் கையை தட்டிவிட்டு ஓங்கி அவனை கன்னத்தில் அறைந்தான்.

தன் மகன் தன்னிடம் கை நீட்டியதுமே பாக்கியவதியும் வெண்பாவும் அதிர்ச்சியில் உறைந்தனர்.காதல் என்ற ஒன்றால் உயிராக எண்ணிய தாயையே அடிக்க வந்துட்டான் என்ற ஆதங்கம் வெண்பாவிடம் எழ,தன் தம்பியின் முகம்கூட காண விரும்பாமல் பாக்கியவதியை அங்கிருந்து தன்னோடு அழைத்துச்சென்றாள்.

சூர்யா அடித்தது மட்டுமில்லாமல் பிரபாகரனும் ஆத்திரத்தில் ராமை அறைந்து கோவத்தை தீர்த்தான்.

பிரபாகரனை தடுத்து நிறுத்திய மாதவன்,அவரிடம் பக்குவமாக பேசினான். பின், ராமை தன்னோடு அழைக்க,அவனோ மறுத்து நின்றான்.

“மச்சி ஒழுங்கா வா போலாம். இங்கிருந்தா பிரச்சனை வரும் வா”என மாதவன் எவ்வளவு அழைத்தும் ராம் தன்னிலையில் அசையாமல் நின்றான்.

“இங்க என்ன சத்தம்,இது ஐசியு நீங்க பாட்டு சந்தகடை போல கத்துறீங்க”என சத்தமிட்ட செவிலியர் அனைவரையும் பார்த்தவள்,

“இங்க செல்வத்தோட சொந்தம் மட்டும் உள்ள வாங்க.டாக்டர் பேசணும் சொன்னாங்க”என கூறினாள்.

டாக்டரிடம் பேசுவதற்காக பிரபாகரனும் சூர்யாவும் செல்ல,இங்கு பாக்கியவதியும் வெண்பாவும் கடவுளை மனமுருகி வேண்டினர்.

அரைமணிநேரத்திற்கு பிறகு,வெளியே வந்த இருவரின் முகமும் சோகத்தில் வாடியிருந்தது.

இதை எப்படி கூறுவதுஎன்று பிரபாகரன் தயங்க,வெண்பாவின் கட்டாயத்தால் கூறினான்.

“மாமா இப்ப நாளை எண்ணிட்டு இருக்காரு.அவரோட இதயம் ரொம்ப பலவீனமா இருக்காம்,அதுமட்டுமில்ல மூளைக்கு போற நரம்புல அடைப்பு இருக்காதால எப்ப வேணா என்னாகும் சொல்லிட்டாங்க”என பிரபாகரன் கூறியதும் பாக்கியவதி அதிர்ச்சியில் உறைய,

“என்னங்க சொல்லுறீங்க,ஏதும் ஆப்பேரஷன் பண்ணி சரிபண்ண முடியாதா?”என்ற வெண்பாவிற்கு,

“இல்ல அக்கா,அப்பா பக்கவாதத்துல வேற இருக்கனால ஆப்பேரஷன் பண்ணுற அளவுக்கு அவர் உடம்பு தாங்காது.அதான் ஒன்னும் பண்ணமுடியாது சொல்லிட்டாங்க”என தயங்கியபடியே சூர்யா கூறினான்.

சூர்யா கூறிய வார்த்தைகளைக்கேட்டதும் “ஓவென்று”என்று வெண்பா கதறி அழுக,
அவளை தோளோடு அணைத்த பிரபாகரன்,

“இங்க பாரு,மாமா இருக்கவரைக்கும் நல்லா பார்த்துக்குவோம்.புரியுதா நீ மனசை விட்டா அத்தைக்கு யாரு ஆறுதல் சொல்லுவா”என ஆறுதல் கூறி தன் மனைவியை தோற்ற முயன்றான்.

வீரப்பனும் போதும்பொண்ணும் பாக்கியவதிக்கு ஆறுதல் கூறிக்கொண்டிருக்க,சூர்யா ராமின் அருகில் சென்றான்.

ராமின் தோளை சூர்யா தொட்டதும் அவனை கலங்கியபடியே பார்த்த ராம், “முற்பகல் செய்யதத்துக்கு இப்ப அறுவடை நடக்குது”என உரைத்தான்.

பின்னர், ஒரு வாரத்திற்கு பிறகு அவசர அறையிலிருந்து வேறொரு அறைக்கு மாறிய செல்வத்தை எல்லாரும் சென்று கண்ணீர் மல்க பார்த்தனர்.

முன்புபோல் இயல்பாக பேசிய அவரின் வாய் இப்பொழுது சத்தம் வராமல் திக்கி திணறி வந்தது.

பாக்கியவதி கணவனும் இல்லாமல் மகனும் இல்லாமல் மிச்ச காலத்தை எவ்வாறு கழிக்க போறேன் என புலம்பியபடியே இருந்தாள்.

அன்று மருத்துவமனைக்கு வந்தது தான் ராம், அதன்பிறகு சூர்யாவும் மாதவனும் மட்டும் வந்து வேண்டியதை எல்லாம் செய்துகொடுத்து இருவருக்கும் ஆறுதல் கூறிசென்றனர்.

செல்வத்தை வீட்டிற்கு அழைத்து செல்லலாம் என அனுமதி அளித்த மருத்துவர், மிகுந்த கவனிப்போடு இருக்க வேண்டும் என கண்டிப்போடு கூறியதால் பாக்கியவதியும் வெண்பாவும் ஒருவர் மாற்றி ஒருவர் செல்வம் கூடவே இருந்தனர்.

தங்கள் இல்லம் மருத்துவமனை போன்று இருப்பதை விரும்பாத போதும்பொண்ணு அவ்வப்போது அதை சுட்டிக்காட்டி பேச,வெண்பாவிற்கு வலித்தது.

தன் மகளுக்கு அளித்த சீதனமாக இந்த இல்லம் இருந்தாலும்,இது வேறொருவர் இல்லம் என்பதை பாக்கியவதி தற்போது உணர்ந்தாள்.

தன் அண்ணன்,அண்ணி,மருமகன்,மகள் என அனைவரையும் அழைத்த பாக்கியவதி, “அண்ணா நாங்க எங்க வீட்டுக்கு கிளம்புறோம்.விருந்துக்கு வந்து ரொம்ப நாள் ஆச்சு”என்பவளின் வார்த்தைகள் உயிரற்று வந்தது.

பாக்கியவதி பேச்சில் அதிர்ந்தது என்னவோ பிரபாகரனும் வெண்பாவும் மட்டுமே. வீரப்பனும் போதும்பொண்ணு இதைத்தான் எதிர்பார்த்தது போன்று மவுனமாக இருந்தனர்.

“அத்தை என்ன பேசுறீங்க,இது உங்க பொண்ணு வீடு ஏதோ விருந்துன்னு பெரிய வார்த்தையெல்லாம் பேசுறீங்க”என பிரபாகரன் கூறியதும்,
தலையசைத்து மறுத்த பாக்கியவதி, “என் பொண்ணு வீடு தான் மாப்பிள்ளை.ஆனால் நாங்க இங்க இருக்குறது தப்பு,அதுமட்டுமில்ல அந்த மனுஷன் இன்னும் எவ்வளவு நாள் இருக்க போறாரு தெரியல.போற உயிர் சொந்த மண்ணுல போகட்டும்”என விரகத்தியாக கூறியதும் வெண்பா ஓடிச்சென்று தன் அன்னையை கட்டிக்கொண்டு கதறினாள்.

பின்பு,பாக்கியவதியும் செல்வமும் மதகுப்பட்டிக்கு கிளம்பும் முடிவுக்கு அனைவரும் ஒத்துவந்தனர். தனக்கு தற்போது வேலை இருப்பதால் வரமுடியாத நிலை என கூறிய பிரபாகரன் தன் மனைவியையும் மகனையும் சேர்த்து கிளம்ப சொன்னான்.அதோடு மட்டுமின்றி சூர்யாவிற்கு தகவலை தெரிவித்து மூவரையும் அவர்களுக்கு துணையாக இருக்கும்படி கேட்டான்.

முதலில் யோசித்த சூர்யா பின்னர் சிலவற்றை கருத்தில்கொண்டு பிரபாகரனுக்கு சம்மதித்தான்.

தான் எடுத்திருக்கும் முடிவிற்கு ராம் சம்மதிக்க மாட்டான் என அச்சத்தோடு அவனிடம் கூறுவதுபோன்று மாதவனிடம் தெரிவித்தான்.
எந்தவித மறுப்பும் கூறாமல் ராம் தான் வருகிறேன் என சம்மதித்தான்.

ராம் சம்மதித்தது நண்பர்கள் இருவருக்கும் அதிர்ச்சி தான்.

மறுநாளே சூர்யாவின் காரில் நண்பர்கள் மூவரோடு வெண்பாவின் மகன் சந்தோஷம் வர,இவர்களுக்கு முன்னே ஆம்புலன்ஷில் செல்வத்தோடு பாக்கியவதியும் வெண்பாவும் சென்றார்கள்.

மதகுப்பட்டியில் கங்கா இல்லத்தில்,நேற்று மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்துவிட்டு வந்த யமுனா அந்த ரிப்போர்ட்டை பார்த்துக்கொண்டிருந்தாள்.

அங்கு வந்த கங்கா, “யமுனா நடந்தது நினைச்சே நீ சோகமா இருக்காதா.வாழ்க்கையில் நம்ம சந்தோஷம் நம்மகிட்ட இருக்கு அதை புரிஞ்சுக்கோ.இப்ப இந்த ஜூஸ குடி”என யமுனாவின் கையில் பழச்சாறு கோப்பையை கொடுத்தாள்

ஒன்றும் பேசாமல் முழுவதையும் குடித்து முடித்த யமுனா, “பத்து நாளாச்சு, உன் மாமா என்கிட்ட பேசி.எட்டு முடிஞ்சு நேத்துலருந்து ஒன்பது மாசம் ஆரம்பமாச்சு,இன்னும் கொஞ்ச நாள பிரசவம்”என தன் முந்தானையால் கண்ணோரம் சிந்திய கண்ணீரை யமுனா துடைத்தாள்.

தன் அக்காவின் கண்ணீரைக்கண்டதும் துடித்த கங்கா, “மாமா சீக்கிரம் உன்னை புரிஞ்சுக்கிட்டு வந்துருவாறு.இந்த நேரத்தில் நீ அழுகக்கூடாது”என கூறியவாறே அவளை தன் தோளில் சாய்த்து கொண்டாள்.

“இதுநாள் வரை அவரோட அம்மா பேச்சை கேட்டதால நான் நல்லவள்.முதல் தடவை பேசுனத்துக்கே என்கூட சண்டைபோட்டு பேசாம இருக்காரு”என தன் கணவனை நினைத்து வருந்திய யமுனா,

“என்னடி வாழ்க்கை வாழுறேன். இவ்வளவு நாள்ல கொஞ்சம் கூட என்னை புரிஞ்சுக்கல அந்த மனுஷன்.எனக்கு மனசு வலிக்குது கங்கா”என உதடு துடிக்க கூறினாள்.

யமுனா சற்று உணர்ச்சிமிகுந்து பேசுவதுபோன்று உணர்ந்த கங்கா அவளை சமாதானம் படுத்தும்விதமாக, “ஏய் யமுனா வேணாம் டி. இவ்வளவு எமோஷனல் ஆகாத, நேத்து டாக்டர் சொன்னதை கேட்டல அமைதியா இரு.என்ன இப்ப உனக்கு மாமா உன்கிட்ட பேசணும் அவ்வளவு தான”என தன் அலைபேசியிலிருந்து ரங்கனுக்கு அழைத்தாள்.

ஆனால் ரங்கன் எடுக்கவே இல்லை, தன் அக்கா ஏக்கமாக தன்னை பார்ப்பதை உணர்ந்த கங்கா, “போன் போகல அக்கா,நாட் ரிச்சபிள்னு வருது, அப்புறம் பண்ணுறேன் நீ கொஞ்ச நேரம் தூங்கு”என தன் மடியில் யமுனாவின் தலைசாய்த்து தட்டிக்கொடுத்தாள்.

அறைவாசலில் இருந்து கவனித்த ராசியம்மாள் பொங்கிய அழுகையை கட்டுப்படுத்தியாவறே தன் மகன் மருமகள் புகைப்படத்திற்கு முன்புவந்து நின்றாள்.

“முத்தா இரண்டு பிள்ளையை பெத்து வாழ கொடுப்பில்லாம போனீங்க.சாமியா இருந்துக்கூட பெத்த பிள்ளையை காப்பாத்த மாட்டீங்களா. ஆத்தா மகராசி உன்பிள்ளைக்கு நீ இருந்து பார்க்கணும் இப்படி விட்டுட்டு போயிட்டியே”என இயலாமையுடன் கூறிவிட்டு பின்கட்டிற்கு சென்றாள்.

ராமின் மொத்த குடும்பமும் மதகுப்பட்டியில் தங்கள் இல்லத்திற்கு வந்து இறங்கியது. வெண்பா திருமணம் முடித்த கையோடு குடும்பமாக சென்றவர்கள் ஊர் திருவிழாவிற்கு மட்டும் அவ்வப்போது வந்து செல்வர்.

மனமுழுக்க ரணத்தோடு இறங்கிய பாக்கியவதி,இதே ஊரே வேண்டாம் என சென்றவள் மறுபடியும் வந்ததற்கு சங்கடம் கொண்டாள்.

தன் தாயின் முகத்தை பார்த்த ராம் சிரித்தவாறு வீட்டிற்குள் நுழைந்தான்.கிராமம் என்பதால் இவர்கள் வந்திருந்த செய்தியும்,செல்வத்தின் நிலையும் ஊர்முழுக்க பரவியது.

நவீனோடு தங்கள் கடைக்கு சென்று இருசக்கர வாகனத்தில் திரும்பிக்கொண்டிருந்த சுமதி, தங்கள் ஊரில் மாதவனைக்கண்டு அதிர்ந்தாள்.

தன்னோடு நவீன் இருப்பதால் ஒன்றும் பேசாமல் அமைதியாக சென்றாள்.

ஆம்புலன்ஸ்லிருந்து இறக்கிய செல்வத்தை பாதுகாப்பாக அறையில் படுக்கவைத்தனர்.வெண்பா முன்னரே தங்கள் வீட்டை பராமரிப்பு செய்ப்பவர்களிடம் கூறி சுத்தம் செய்து சமைப்பதற்கு தேவையான பொருட்களை வாங்கி வைக்க சொன்னாள். அதனால் வந்ததும் குளித்து முடித்து,சமையல் வேலையில் இறங்கினாள்.

மதிய உணவுமுடிந்து,நண்பர்கள் மூவரும் அறைக்கு ஓய்வெடுக்க சென்றனர்.

சூர்யா கட்டிலில் அமர்ந்து தன் அலைபேசியில் பேசிக்கொண்டிருக்க, “மச்சி கொஞ்சம் வெளில போகலாம்”என ராம் கேட்டதும் மாதவன் முழித்தான்.

சற்று தயங்கிய மாதவன், “எங்க மாப்பிள்ளை போறது?”என குழப்பமாக கேட்டான்.

“போகலாம் வர சொல்லு அவனையும்”என ராம் சட்டை அணிந்து கிளம்பினான்.

அலைபேசியில் பேசி முடித்துவிட்டு திரும்பிய சூர்யா ராம் கிளம்புவதைக்கண்டு குழம்பியவன், மாதவனை பார்த்தவாறு கேட்டான்.

“கிளம்புங்க சொல்லிட்டேன்,இல்ல நான் ஏழரை இழுத்துட்டு தான் வருவேன்”என ராம் கிளம்பி அறையிலிருந்து செல்ல,சூர்யா ராமின் செயலில் விக்கித்து நின்றான்.

சுகந்தி இல்லத்தில்,கடையிலிருந்து வந்ததுமுதல் சுமதி நடு கூடத்தில் குறுக்க மறுக்க நடந்துக்கொண்டிருந்தாள். இவளின் செயலைக்கண்டு புரியாத பார்வதி, “என்ன உனக்கு,இப்படி ஹாலை அளந்துட்டு இருக்க.அம்மா ஒரு ஆளா வேலை பார்க்குறா கொஞ்ச உத்தாசை பண்ணக்கூடாதா”என கேட்டது அறையிலிருந்த சுவாதிக்கும் எட்டியது.

வந்தது முதல் அறையில் இருப்பது சுவாதிக்கும் ஒருமாதிரி இருந்தது.அதனால் மகளை தூக்கிக்கொண்டு கூடத்தில் உள்ள சோபாவில் அமர்ந்தாள்.நவீனோடு விளையாடிக்கொண்டிருந்த தமிழ்,தன் அன்னையிடம் ஓடிவந்தான்.

“அம்மா மாமா ரொம்ப சேம்”என கூறிவிட்டு தமிழ் களுக் என சிரித்தான்.

தமிழ் சிரிப்பைக்கண்டதும் சிரித்த பார்வதி, “மாமா என்ன தங்கம் சேம்”என கேட்டும் தமிழ் பதில் கூறாமல் சிரித்துக்கொண்டிருந்தான்.

“தமிழ் பதில் சொல்லு அம்மாச்சி கேக்குறாங்க”என சுவாதி சொன்னதும்,

“இல்ல மாம், அது வந்து..”என தமிழ் கூறும் முன்பு,அங்கு வந்த நவீன் அவனின் வாயில் கைவைத்து தூக்கி சென்றான்.

“அடேய் என்னடா நடக்குது?”என பார்வதி சிரிப்போடு கேக்க,

அதில் எரிச்சலையடைந்த சுமதி, “சா ஏன் எல்லாரும் கத்திட்டு இருக்கீங்க?”என கோவமாக கத்தினாள்.

“நாங்க அபிடித்தான் கத்துவோம் நீ போ”என தமிழ் மூக்கு விடைக்க கூற சுமதி அமைதியானாள்.

“ஏய் தமிழ்”என சுவாதி தன் மகனை அதட்ட,
“விடு சுவாதி,சின்ன பிள்ளை தான்”என்ற நவீன்,ஏதோ குழம்பி தவித்த சுமதியை தனியாக இழுத்து சென்றான்.

“என்ன சொல்லு”என கடுப்போடு சுமதி நவீனிடம் கேக்க,

“ஏண்டி ஒருமாதிரி இருக்க.நீ கொஞ்ச நாளா ஆளே சரியில்ல என்ன விஷயம் காதல் ஏதும் பண்ணுறியா?”என நவீன் சட்டென்று கேட்டதும், சுமதி அவனை முறைத்தாள்.

“நானே மண்ட காஞ்சு இருக்கேன்,நீ வேற ஏதாவது சொல்லி டென்ஷன் பண்ணாத ஒழுங்கா போயிரு”

“ஓகே ஓகே சும்மா கேட்டேன். சுவாதி பண்ண தப்பை நீயும் பண்ணிருவியோனு”என நவீன் கூறியதும்,

“நான் ஒன்னும் சுவாதி இல்ல,இப்படி என்மேல நம்பிக்கை இல்லாட்டி என்கிட்ட பேசாத”என வெடுக்கென்று கூறிவிட்டு சுமதி அங்கிருந்து செல்ல,நவீனுக்கு ஏதோ போன்று ஆகிவிட்டது.

அவன் இரண்டு நாட்களாக சுமதியின் நடவடிக்கையை கவனித்துக்கொண்டிருக்கிறான்.இன்று அவள் மாதவனைக்கண்டு அதிர்ச்சியடைந்ததை இருசக்கர வாகனம் முகப்பு கண்ணாடி வழியாக பார்த்துவிட்டான். அதான் அவளிடம் நேராக கேட்டுவிட்டான், தான் இவ்வாறு கேட்டது தவறோ என தற்போது வருத்தப்பட்டான்.

“கங்கா! கங்கா!”என அழைத்துக்கொண்டே கங்காவை தேடி அவளின் இல்லத்திற்கு வந்த சுமதி யாரையும் காணாமல் குழம்பினாள்.

“என்ன யாரையும் காணம்?”என யோசித்துக்கொண்டே திரும்பிய போது, வாசலில் நின்றவர்களைக்கண்டு அதிர்ந்தாள்..

“வேந்தன்!!”என சுமதி அதிர்ச்சியடைந்ததோடு கூறும் அதேநேரம்,யமுனாவின் அலறல் அனைவரையும் கதிகலங்க வைத்தது.