குழலி- 10(எல்லோருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்)

Copyright ©️ 2019 - 2025 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

குழலி- 10(எல்லோருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்)

அன்னை மேல்  பெருங்கோபத்துடன் வண்டியில் உட்கார்ந்திருந்தான்   பழனி. நேரில்  சென்று அவரை நாலு கேள்வி கேட்டால்   என்ன என்று தான் எண்ணம்.தனக்கு இருக்கும் கோபத்துக்கு அவரை அடித்தே கொன்று விடுவேனோ என்று தான்  யோசனையாக இருந்தது.

இவ்வளவு குணம் கெட்ட மனது கொண்டவரா தன்  அன்னை  என்று வெறுத்துப் போனது அவனுக்கு. தாயின் குணம் தெரிந்து தான் தந்தை  கல்யாணம் ஆனதும்  மனைவியின் வீட்டுக்கு தன்னை கிளப்பிவிட்டிருக்கிறார் என்று இப்போது புரிந்தது அவனுக்கு.

தாய் சொன்ன  வார்த்தைகளைக் கேட்டு குழலின் மனம் என்ன பாடுபடும் என்று நினைக்க நினைக்க தாள முடியவில்லை அவனால் . இத்தனை விரைவாக தங்களுக்கு குழந்தை  வந்துவிட்டது  என்று மகிழ்ச்சியோடு ஊருக்கு கிளம்பினான்.இதில் மனைவி  விவாகரத்து பத்திரத்தை அனுப்பி விட்டு கமுக்கமாக இருக்கிறாளே என்ற எரிச்சல் வேறு அவனைப் படுத்தி எடுத்தது. 

இப்படியான ஒரு நெருக்கடியில் அவளும் தான் என்ன முடிவெடுப்பாள் பாவம். எதோ குழப்பமும் கோபமும்  தான் அவளை இப்படி செய்ய வைத்திருக்கிறது  என்று தெளிவாக புரிந்தது அவனுக்கு.தன்னுடன் கட்டாயப்படுத்தி மனைவியை துபாய்க்கு அழைத்து சென்றிருக்க வேண்டும்.இப்படி  விட்டுப் போய் தப்பு பண்ணிவிட்டேன் என்று இப்போது தான் தோன்றியது.

குற்றாலத்தில் உள்ள தங்கள் ரிசார்ட்க்கு வந்து சேர்ந்தான்.சொந்த ஊரிலிருந்து கொண்டு ஹோட்டலில் ரூம் போட ஒரு மாதிரி இருந்தது அவனுக்கு.தங்கள்  ரிசார்ட் என்றால்   யாரும் எதுவும் நினைக்க மாட்டார்கள் என்று சற்று ஆறுதலாக இருந்தது.கட்டாயம்  மேனேஜர் போன் பண்ணி தான் இங்கே வந்த விஷயத்தை தந்தைக்கு சொல்லுவார் என்று தெரியும் அவனுக்கு.

மதியம் சாப்பிட்டு விட்டு தாயை தேடி வந்து விட்டான்.

“வாய்யா பழனி எப்ப ஊர்ல இருந்து வந்த?உங்க அப்பாவும் உன் தங்கச்சியும் என் கிட்ட சண்ட போட்டுக்கிட்டு சுந்தரவல்லி  வீட்ல போய்  உக்காந்திருக்காங்க.இதெல்லாம் தெரியுமா உனக்கு?

“எனக்கு அதை  பத்தி எதுவும் தெரியாது. என் பொண்டாட்டி மாசமா இருக்கா  அதுக்கு தான் ஊருக்கு  வந்திருக்கேன் நான்…” என்றான் கோபத்துடன்.

“என்னய்யா சொல்ற? என்று அதிர்ச்சியுடன் கேட்டார் செல்வராணி.

‘என்னமா ஆக்ட் பண்ணுது எங்கம்மா…’ எரிச்சலாக இருந்தது பழனிக்கு. 

திருமணத்தன்று குழலியை வீட்டை விட்டு போக  சொன்னதும் தன்  வார்த்தைக்கு கட்டுப்பட்டு மகன் அவளுடன் வாழமாட்டான் என்று பெரும் நம்பிக்கையோடு இருந்தார் செல்வராணி.அவரின்  தன்னம்பிக்கை பொய்த்துப் போக தடுமாறியபடி   பக்கத்தில் இருந்த கதிரையில் பொத்தென்று அமர்ந்து கொண்டார்.மகன் மேல் இருந்த நம்பிக்கையில் தான் சுந்தரவல்லியுடன்  யார் பிள்ளையோ என்று வேண்டும் என்று சண்டைக்கு போயிருந்தார் என்பது தான் உண்மை.

“கல்யாணமானதும் என்  பொண்டாட்டி வீட்ல நானும் அவளும் சந்தோஷமா  தான் வாழ்ந்தோம்.அப்படி நாங்க சந்தோஷமாக   வாழ்ந்த படியால்  தான் எங்களுக்கு   பிள்ளை வந்திருக்கு.என் கூட கல்யாணமான என் பொண்டாட்டிக்கு குழந்தை  வந்தா  அது யார்  பிள்ளை என்று உங்களுக்கு தெரியாதா?

Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!

“எதுக்கு அத்தை  கிட்ட யாரு வீட்டு பிள்ளைன்னு கேட்டீங்க  நீங்க?யார் பிள்ளைக்கோ என்னை அப்பனாக்க பாக்குறன்னு  ஏன் கேட்டிடீங்க? அவ்வளவு ஆணவமும் திமிரும்  தானே உங்களுக்கு.எப்படி எங்க  அத்தையை பார்த்து அப்படி கேட்க முடிஞ்சுது உங்களால.அவங்களும் இந்த வீட்டு பொண்ணு தானே.இப்படி தான் பேசி வைப்பீங்களா    நீங்க” என்று கோபமாக கேட்டபடி தாய்க்கு  பக்கத்தில் இருந்த தண்ணீர் போத்தலை தூக்கி எறிந்தான்.      

“என்ன ராசா….இப்படி பண்ற….“ என்று மெதுவாக முணுமுணுத்தார் செல்வராணி. 

சத்தம் கேட்டு அங்கங்கே வேலை செய்துகொண்டிருந்தார்கள் பார்வை எல்லாம் இங்கே தான் இருந்தது  .இந்த அம்மாக்கு இதுவும் வேண்டும் இன்னமும்  வேண்டும் என்ற எண்ணம் தான் அவர்களுக்கு எல்லாம்.

“என் பொண்டாட்டி  வயித்துல என்  பிள்ளை தான் இருக்குன்னு உங்களுக்கு காமிக்க என்ன  பண்ணனும் ……நாங்க எப்படி  குடும்பம்   நடத்தினோம் என்று வீடியோ பிடிச்சு காமிச்சா தான் நீங்க நம்புவீங்களா என்ன ? கோபத்துடன் கத்தினான் பழனி.

“அது இல்ல ராசா……”என்று மகன் சொன்ன வார்த்தைகளை கேட்டு வெட்கி தலை குனிந்து போனார் செல்வராணி. 

“போதும்மா உங்க கிட்ட சண்டை போட  எனக்கும் என் பொண்டாட்டிக்கும் தெம்பில்லை.எனக்கு பிள்ளை பிறக்க போகுதுன்னு என் பொண்டாட்டியை பார்க்கத்தான் ஆசையா ஊருக்கு கிளம்பி வந்தேன். உங்களை  பாக்க வரல நான்…”

“என்னய்யா இத்தனை மாசம் கழிச்சு வந்திருக்க. ஆத்தா கிட்ட இப்படியா பேசுவ?

“நீங்க பண்ணி வச்ச வேலைக்கு வேற எப்படி பேச? உங்கள பத்தி தெரிஞ்சு தான்  அப்பா மோகனாவ  கூட்டிக்கிட்டு அத்தை வீட்டுக்கு  போயிட்டாங்க .நானும் இனிமே இங்க வரமாட்டேன். தனியா இருந்து உங்க சொத்து சுகத்தை அனுபவிச்சிட்டு வாழுங்க..”

“அப்படி சொல்லாத ஐயா….” கலக்கமாக சொன்னார் செல்வராணி. 

“இப்படித்தான் நான் பிஹெச்டி படிக்க ஜெர்மன் போறேன்னு சொன்னப்போ உங்கிட்ட இருந்த பணத்த குடுத்துட்டு பத்து பவுன்  தாலி செயினை   அடைவு  வச்சு தான் உனக்கு பணம்  தந்தேன்  என்று என்கிட்ட பொய் சொல்லி என் முன்னாடி வெறும் கழுத்தோட நின்னீங்க….”

“அன்னைக்கே   உண்மை எல்லாம் என்கிட்ட சொல்லிட்டார் அப்பா.உங்கம்மா நச்சு கிருமி. பெத்த புள்ளைகிட்ட கூட உண்மையா இருக்க மாட்டா.  நீயும் உன் தங்கச்சியும் பார்த்து சூதானமா இருந்துக்குங்க என்று  சொன்னார் .நான் தான் அதையெல்லாம் நம்பல.உண்மையாவே நீங்க நச்சு பாம்பு தான்… ச்சீ….” என்று அருவருப்புடன் தாயை பார்த்து சொன்னான்.ஆத்திரத்துடன்  தனக்கு முன்னால்   இருந்த கதிரையை எட்டி உதைத்து விட்டு அங்கிருந்து கிளம்பி விட்டான்.

மகன் சொன்னதைக் கேட்டதும் இடிந்து போய் உட்கார்ந்திருந்தார் செல்வராணி.கணவனும் பெற்ற பிள்ளைகளும் தன்னை விட்டு போனதும் பெரும் அவமானமாக இருந்தது அவருக்கு.பிறப்பிலேயே பெரும் செல்வந்தர் வீட்டு பெண் தான்  அவர். அதனால்  தானோ என்னவோ அடுத்தவர் துன்பம் கண்டு உடனடியாக இளக மாட்டார். 

வீட்டைச் சுற்றி எப்போதும் வேலைக்கு ஆட்கள் இருப்பதால் தன் வேலையை செய்வதற்கு கூட அவருக்கு இரண்டு பேரின் துணை வேண்டும்.  திருமணம் முடித்து காசிலிங்கம் வீட்டுக்கு   வாழ வந்ததும்  தன் வீட்டு பழக்கம் போல எல்லோரையும் வேலை வாங்கி பழகி விட்டார்.

பெற்றோர் இல்லாமல் தங்கை  சுந்தரவல்லியை  தனியாக வளர்த்து ஆளாக்கியவர்  காசிலிங்கம்.அண்ணனும் தங்கையும் ஒருவரில் ஒருவர்  உயிராக இருப்பதை பார்த்து  செல்வராணியால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.  

திருமணம் முடித்து வந்த ஆறாவது மாதமே சுந்தரவல்லிக்கு  திருமணம் செய்து வைக்க சொல்லி கணவனை நச்சரிக்க தொடங்கிவிட்டார்.

மனைவியின் சொல் கேட்டு தென்காசியில் பள்ளிக்கூடம் வைத்து நடத்தும் குலசேகரனை மாப்பிள்ளை பார்த்து முடித்தார் காசிலிங்கம்.  பெரும் தொகை பணம் நகையோடு  வீடும் வாங்கி கொடுத்து தங்கையை கட்டிக் கொடுத்தார் . அத்தோடு சுந்தரவல்லியின்  தொல்லை முடிந்தது என்று நிம்மதியாக இருந்தார் செல்வராணி.

ஆனால் தங்கையையின்  பிள்ளைகளோடு கணவன் ஒட்டிக் கொண்டதை  கண்டு திரும்பவும்  நாத்தனார்  மேல் பொறாமையும் கோபமும்  கொண்டார் செல்வராணி. அதிலும் குலசேகரன் இறந்த போது எங்கே மீண்டும் தங்கள் வீட்டில் வந்து சேர்ந்து விடுவார்களோ என்ற பயம் வந்து விட்டது அவருக்கு . தன் மகனை குழலிக்கு மாப்பிள்ளை ஆக்கிக் கொள்வார்களோ என்ற தடுமாற்றம் வேறு அவரை அலைக்கழித்தது.

அவசரமாக   தன் அண்ணன் மகள் மாலினியை  அவள் வேண்டாம் வேண்டாம் என்று மறக்க  மகனுக்கு சம்பந்தம் பேசி முடித்தார்  செல்வராணி.இன்று வரை தான் நினைத்தது தான் நடக்க வேண்டும் என்ற  அவரின் பிடிவாத  குணம் மாறவில்லை என்பது தான் உண்மை.

மறுபுறம்  ரிசாட்டுக்கு  வந்த பழனியப்பன் தந்தைக்கு போன்  போட்டு வீட்டுக்கு போய் தாயிடம் சண்டை போட்டதை ஒன்றும் விடாமல்  சொல்லி கொண்டிருந்திருந்தான். அப்போது  அங்கே வந்தான்    கோவர்த்தனன்.

போனை வாங்கி  அக்கா கணவனிடம் பேச தொடங்கினான்.  கிளப்பி தங்கள் வீட்டுக்கு வர சொன்னான் மைத்துனன் .

“மாமா கிளம்பி வாங்க…..”

“டேய்  உங்கக்கா என்ன சொன்னான்னு  பார்த்த  தானே.அப்புறம் எதுக்குடா என்னை அங்க கூப்பிடுற? கோபமாக பதில் சொன்னான் பழனி. 

“மாமா நீங்க  மேல என் ரூமில  வந்து தங்கிக்குங்க.என்  ரூமுக்கு   பக்கத்து ஒரு ரூம் சும்மாதான் கிடக்கு.அங்க வேணா   தங்கிக்கலாம். அந்த பக்கம் மொட்டை மாடிக்கு போற கதவு இருக்கு.பின் பக்கமா  வந்து போகலாம்.அக்கா அந்த  பக்கம் வரவே மாட்டா. அக்காவுக்கு  தெரியாமல் பாத்துக்கலாம்.  ப்ளீஸ் வாங்க. சாப்பாடெல்லாம் நான் கொண்டு வந்து கொடுக்கிறேன்.”

‘உங்கக்கா எனக்கு டைவர்ஸ் நோட்டீஸ் அனுப்பிருக்கா. என்   மச்சான் தன் கூட தங்க  வீட்டுக்கு கூப்பிடுறான் .  என்னன்னு சொல்ல..’ என்று நினைத்ததும் சிரிப்பு வந்தது பழனிக்கு.

Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!

“என்ன மாமா பேசாம இருக்கீங்க? கிளம்பி வாங்க  .அக்காவுக்கு அத்தை மேல கோபம்.அது தான் உங்க கிட்ட கத்துறா.கத்தினாலும் உங்களை தான் தேடுவா.அவளை பற்றி தெரியாதா  உங்களுக்கு?  பின்பக்க கேட்டை  திறந்து வைக்கிறேன் .சீக்கிரம் வாங்க சரியா…”

“கத்தினாலும் என்னை தேடுறவ எதுக்குடா…..” விவாகரத்து நோட்டீஸ் அனுப்பினா என்று கேட்க வந்தவன் சட்டென்று “அப்பா கிட்ட குடு” என்று பேச்சை மாற்றினான். 

கோவர்த்தனுக்கும் அத்தைக்கும் குழலி நோட்டீஸ் அனுப்பிய விஷயம் தெரியாது.அவர்களுக்கு தெரிய வேண்டாம் என்று மருமகள் தன்னிடம் கோரிக்கை வைத்ததை மகனிடம் சொல்லிவிட்டார்  காசிலிங்கம்.

பழனியப்பன் அங்கே வரவில்லை என்று மறுத்த போது தந்தை தான் அவனுக்கு   ஆறுதல் சொன்னார். குழலி குழப்பமாக இருக்கிறாள்.இந்த சமயத்தில்  அவள் பக்கத்தில் நீ இருக்க வேண்டும் வா  என்று சொன்னதும் ஒருவாறு சமாதானமாகி  மனைவி வீட்டுக்கு வர ஒத்துக்கொண்டான் பழனி.   

மொத்தத்தில் பழனி அந்த  வீட்டின்  மேல் மாடியில் கோவர்த்தனுக்கு பக்கத்து    ரூமுக்கு குடி வந்தான். இந்த விஷயம்  குழலியை தவிர மீதி  எல்லோருக்கும் தெரிந்தும்   அமைதியாக நடமாடிக் கொண்டிருந்தனர்.

வருவாள்……….