குழலி- 09

Copyright ©️ 2019 - 2025 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

குழலி- 09

தங்கள் வீட்டுக்கு பெட்டியுடன் வந்திறங்கிய மாமனையும் மோகனாவையும் கண்டு  அதிர்ந்து போனாள்  குழலி.

“வாங்கண்ணே….. வா மோகனா” என்று சுந்தரவல்லி தான் அவர்களை உள்ளே அழைத்து வந்தார்.

“ மன்னிச்சிடு  தங்கச்சி என் பொண்டாட்டி பத்தி தான் உனக்கு தெரியுமே. உன்கிட்ட  நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன்..” என்றார் தங்கையிடம்.

“அண்ணே என்ன இதெல்லாம் விடுண்ணே…” 

“என்னை  மன்னிச்சிடும்மா..” என்று குரல் கலங்க  குழலியின் அருகே வந்து கையெடுத்து கும்பிட்டார் மாமன். 

“ஐயோ மாமா என்ன பண்றீங்க….. கைய கீழ  போடுங்க…” பதறி போய் மாமன் கையை  பிடித்து கீழே இறக்கிவிட்டாள்   குழலி.

“எங்கம்மா அத்தை கிட்ட  பேசினது ரொம்ப தப்பு அண்ணி.சாரி….” என்றாள்  மோகனா. 

“விடு மோகனா.இனி இங்க தானே தங்க போறீங்க. நீயும் மாமாவும் எங்களுக்காக கூட  வந்தது  ஹாப்பி தான்”

அவள் தலையில் கை வைத்து ஆசீர்வாதம் செய்தார் காசிலிங்கம்.

“என்ன பண்ண உன்னை  போல ஒரு பொண்ணு வந்து வாழ எங்க வீடு கொடுத்து வைக்கலையே …” 

“விடுங்க மாமா…. அதான் நீங்க இங்க வந்துட்டீங்களே. எல்லாரும் ஒன்னா   இருந்துப்போம் சரியா..”  என்று சமாளித்தாள் குழலி. 

குழலியை பள்ளிக்கு போகாமல் சிறிது நாட்கள் வீட்டில் இருந்து ஓய்வெடுக்கச் சொல்லி விட்டார் அன்னை.அவளோ  தன்  வாழ்வில் அவசரமாக செய்ய வேண்டிய வேலைகளை வீட்டில் இருந்தே போன் மூலம் செய்து முடித்தாள்.கோவிலுக்கு போவதாக சொல்லி  நைசாக வக்கீலிடம் வந்தாள். வேண்டிய இடத்தில்  கையெழுத்து போட்டு கணவனுக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி விட்டு    வந்து  கமுக்கமாக  உலாவிக் கொண்டிருந்தாள்.

கல்லூரிக்கு   லீவு போட்டு தந்தையுடன் தென்காசியில் இருக்கும் அவர்களின்  வாழைப்பழ சிப்ஸ் ஃபேக்டரிக்கு வந்திருந்தாள் மோகனா .

Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!

அப்போது தமையனின்  பெயரில் தபால் வந்திருப்பதாக சொல்ல மோகனா சென்று கையெழுத்திட்டு வாங்கி வந்தாள்.

“அப்பா…..லாயர் கிட்ட இருந்து அண்ணன் பெயருக்கு ஒரு லெட்டர் வந்திருக்கு… என்னன்னு பாருங்க..” என்று  பதட்டமாக சொன்னாள்  மோகனா.

“ஓபன் பண்ணி  பாரு…”

 உள்ளே  திறந்து பார்த்ததும் அதிர்ந்து போனாள் மோகன்.

“அப்பா   அண்ணி அண்ணனுக்கு விவாகரத்து  நோட்டீஸ் அனுப்பி இருக்காங்க. எதுக்கு வீட்டுக்கு அனுப்பாம இங்கே அனுப்பி இருக்காங்க.”

“மெல்ல பேசு….வீட்டுக்கு அனுப்பினா  உங்க அம்மா என்ன பண்ணுவாளோன்னு தான் இங்க   ஃபேக்டரிக்கு அனுப்பி இருக்கா  போல உங்கண்ணி ”

“என்னப்பா இப்படி சொல்றீங்க?

“பின்ன என்ன  சொல்லணும்….. உங்க அண்ணன் பொண்டாட்டிய  விட்டுட்டு துபாய்க்கு போயிட்டான் . உங்கம்மா வயித்துல புள்ளையோட இருக்கிற பொண்ணுகிட்ட பேசக்கூடாத வார்த்தை எல்லாம் பேசி வச்சா. அப்புறம் உங்கண்ணி   என்னதான் பண்ணுவா?இப்படி ஏதாவது ஆகும் என்று நான் நினைச்சது சரியா நடந்திருக்கு பார்த்தியா?

“என்னப்பா பண்ண இத்தனைக்குப் பிறகும் நாங்க அங்க தங்கி இருக்கிறது சரியா இருக்குமா?

“நீ ஒன்னும் யோசிக்காதே மோகனா.இது  உங்க அண்ணனுக்கும்  அண்ணிக்கும் உள்ள பிரச்சனை. அதுக்குள்ள நம்மை  சம்பந்தப்படுத்திக்க வேணாம்.இப்ப  அண்ணனுக்கு போன் போடு…”

எங்கே அவன் தான் கோவர்த்தன் இங்கே நடந்ததை சொன்னதும் அவசரம் என்று  டிக்கெட் போட்டு ஊருக்கு வரும் விமானத்தில் ஏறி உட்கார்ந்திருக்கிறானே.

அவனுக்கு எங்கே தெரியப்போகிறது தனக்கு மனைவி விவாகரத்து பத்திரம் அனுப்பியிருக்கிறாள் என்று. அத்துடன்  ஒரு நகலை கணவனுக்கும்  ஈமெயில் பண்ணியிருக்கிறாள். இனி எல்லாம் ஊருக்கு வந்து தான் தெரிந்து கொள்வானோ யாருக்கு தெரியும். 

இத்தனைக்கும் நடுவில் குழலி மாமனாருக்கு போனை போட்டு தான் கணவனுக்கு விவாகரத்து பத்திரம் அனுப்பியிருக்கிறேன் என்று சொன்னாள்.அத்துடன் இது எதுவும்  தன் தாய்க்கும் தம்பிக்கும்   தெரிய வேண்டாம் என்று கெஞ்சி  கேட்டுக் கொண்டாள்  அவரிடம். 

மறுநாள் காலையில்  தங்கள் வீட்டில் வந்து இறங்கிய கணவனை கண்டதும் கலங்கிப் போனாள் குழலி.வேகமாக வெளியே வந்து அவனை இறுக கட்டிக்கொண்டாள்.இத்தனை நடந்த பிறகும் தன்னைத் தேடி வந்து  நின்ற கணவனை நினைத்து உள்ளம்  உவகை கொண்டது.

தன்னை மறந்து ஓடி வந்து  அவனை  கட்டிக் கொண்டு நின்றவள் சட்டென்று உண்மை புரியவும் கோபத்தோடு அவனைப் பிடித்துத் தள்ளிவிட்டாள்.

கணவன் இன்னும் ஈமெயிலை பார்க்கவில்லை என்று தான் நினைத்தாள்  அவள்.அவன் எயார்போட்டிலேயே எல்லாம் பார்த்து விட்டான் என்று அவளுக்கு சொல்வது யார்? 

மருகளின் செயல்களை புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தார் காசிலிங்கம்.

“எதுக்கு இங்க வந்திங்க… இந்த கேடுகெட்ட வீட்டுக்கு  இனி நீங்க வரக்கூடாது. உங்களுக்கும் எனக்கும் இனி எதுவும் கிடையாது போயிடுங்க…”

“என்னடி பேசிட்டு இருக்க ?

“ஓ…உங்களுக்கு ஒன்னும் தெரியாது.என் வயித்துல இருக்கிற பிள்ளைக்கு அப்பா யாருன்னு உங்கம்மாவுக்கு சந்தேகமா  இருக்காம்.  யார் வீட்டு பிள்ளைக்கு உங்களை அப்பாவாக்க பாத்தேன்னு சொல்றாங்க.உங்களால நான் பட்டதெல்லாம் போதும்.இனிமே உங்க சங்காத்தமே வேண்டாம் சாமி எங்களை விட்டுடுங்க…”

என்று கையெடுத்து கும்பிட்ட படி கண்கள் கலங்க கெஞ்சும் மனைவியை கண்டு உயிரோடு மரித்து போனான் பழனி.

“ஏய்….என்னடி பேச்சு இது? உன்னை பற்றி  எனக்கு தெரியாதா.பிள்ளை வந்தா என்கிட்ட சொல்லாம எதுக்குடி  எங்கம்மாக்கு  சொல்ல போனீங்க நீங்கெல்லாம்? என்றான்  பழனி கோபத்துடன்.

“பார்த்தியா நீ பண்ணி வச்ச வேலைய….அத்தை  வீட்டுக்கு போய் உன் பொண்ணை  நீயே அசிங்கப்படுத்திட்டம்மா… என்று அன்னையிடம் சண்டை போட்டான் கோவர்த்தனன்.

தன் அவசர புத்தியால் எல்லாவற்றையும் கொட்டிக் குழப்பி விட்டேன்.  பெற்ற  பெண்ணின் நடத்தை கேள்விக்குறி   ஆக்கி   விட்டது  என்று மருமகன் முன் தலை குனிய நின்றிருந்தார் சுந்தரவல்லி. 

Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!

ஆனால் அப்போதும் அமைதியாக இருக்காது கணவன் அருகில்  வந்தாள் குழலி.

“ப்ளீஸ் இனிமேல் எங்க வீட்டுக்கு வராதீங்க….. போயிடுங்க அத்தான். நமக்குள்ள இனி எதுவும் சரியா வராது.நீங்க உங்க வழிய பாருங்க. நான் என்  வழியை பாத்துக்கிறேன்..” என்று கணவனிடம் மன்றாட்டமாக சொன்னாள். 

பழனி பேச இடம் கொடுக்கவில்லை குழலி.

“என்னை  தப்பா நினைக்காதீங்க மாமா..” என்று காசிலிங்கத்தை பார்த்து சொன்ன படி உள்ளே போக முனைந்தாள்.

“அக்கா என்ன பேசுற…மாமாவ  உள்ள கூப்பிடு….”என்றான்  தம்பி கோவர்த்தனன்.

“வேணாண்டா….உங்கக்கா நான் வெளிய போறதை   தானே ஆசைப்படுறா.  நான்  உள்ள வரலை….” என்று குரல் இறுக சொன்னான் பழனியப்பன் . வந்திறங்கிய வண்டி இன்னும் கிளம்பாமல் வாசலில் நிற்க அதில் ஏறி கிளம்பி விட்டான் .

‘அதென்ன உங்கக்கா? ஏன்…. பொண்டாட்டின்னு சொன்னா என்னவாம் இந்த அத்தான். பட்டுக்குழலி, சிட்டு குழலின்னு கொஞ்சிட்டு வரட்டும்…. அப்ப பாத்துக்கிறேன் ’ என்று கோபத்துடன்  நினைத்தாள்  குழலி.

‘அடியே நீ தான்  எதுவும் வேணான்னு நோட்டீஸ் அனுப்பிட்டியே.இன்னும் என்னடி வேணும் உனக்கு’ என்றது அவள் மனசாட்சி. 

‘அதுக்கு நான் அவர் பொண்டாட்டி இல்லைன்னு ஆயிடுமா என்ன?அதென்ன உங்கக்கா என்கிற பேச்சு….’ என்று குழலி தனக்கு தானே புலம்பிக் கொள்கிறாள் என்று அங்கிருந்த யாருக்கும் தெரியவில்லை.    

மகனை வெளியே போகச் சொன்ன மருமகள் வீட்டில் தானும் மகளும் தங்கி இருப்பது சரியா என்று யோசனையோடு உட்கார்ந்திருந்தார் காசிலிங்கம்.

வருவாள்….