குழலி- 02

Copyright ©️ 2019 - 2025 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

குழலி- 02

தாலி  கட்டியதும்   சடங்குகள் எல்லாம் முடிய   பந்தி தொடங்கியது.மண்டபத்தில்  கல்யாணம் வேலைகள் எல்லாம் முடிந்து வீட்டுக்கு கிளம்பலாம் என்ற போது  மண்டப வாசலுக்குள்    போலீஸ் ஜீப்  நுழைந்தது. எதற்கு போலீஸ் வருகிறது என்ற கேள்வி தான் எல்லோருக்கும்.

மண்டபத்திலிருந்து ஓடி போன  மாலதி தனக்கு ஒரு வருடத்துக்கு முன் பால்ராஜ் என்பவருடன்  பதிவு திருமணம் முடிந்து விட்டது.ஆனால்    பழனியப்பன் குடும்பத்தினர் அவளை கட்டாயப்படுத்தி கல்யாணம் செய்ய பார்க்கின்றனர் என்று  பால்ராஜுடன் சேர்ந்துகொண்டு போலீசில்  புகார் கொடுத்திருந்தாள்.

மாலதி சொன்னது உண்மைதான். அவளுக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை என்று சொல்ல சொல்ல கேட்காமல் செல்வராணி தான் அவளை கட்டாயப்படுத்தி நிச்சயம் வரை கொண்டு வந்தார் என்பதுதான் உண்மை. இது எதுவும் துபாயில் இருந்த  பழனியப்பனுக்கு தெரியாது.பழனியப்பன் குடும்பத்தை விசாரிக்க போலீஸ் ஸ்டேஷனில் இருந்து வந்திருந்தனர்.

“பொண்ணு வேணாம்னு சொல்லச் சொல்ல  கேளாமல் இந்த செல்வராணி பார்த்து வச்ச  வேலைக்கு இப்ப  புருஷனும் பையனும் போலீசுக்கு போனது தான் கண்ட மிச்சம்…”

“மாப்பிள்ளை அம்மாவோட தலை கனத்திற்கு கடைசியில  இப்படி தான் நடக்கும் . 

“செல்வராணியோட வாய்கொழுப்புக்கு   கிடைச்ச சரியான தண்டனை தான் இது….” என்று அந்த இடத்தில் வம்பு பேசும் வாய்களும் இருக்கத்தான் செய்தன.

பழனியப்பன் குடும்பத்தினரை அப்போதே விசாரணைக்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு வரச் சொன்னார்கள். மனைவியை விடுத்து தானும் மகனும் ஸ்டேஷன் வருவதாக போலீசிடம் கேட்டுக்கொண்டார் காசிலிங்கம்.

ஆசையோடு திருமணத்திற்கு மண்டபத்துக்கு கிளம்பி வந்த பழனியப்பன் தன் வாழ்வில் அடுத்தடுத்து  நடந்த   அதிர்ச்சி சம்பவங்களை   கண்டு   கோபமும் அவமானமும் மேலிட காரில் ஏறி தந்தையுடன் போலீஸ் ஸ்டேஷனுக்கு கிளம்பினான்.

கணவன் தன்னை ஒரு முறையாவது பார்ப்பான் என்று அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்த குழலிக்கு ஏமாற்றம் தான் கிட்டியது. அவன் மனநிலை எதுவும்  அவளுக்கு தெரியாது அல்லவா?

நடப்பவற்றை பார்த்து அதிர்ந்து போனாள் நின்றிருந்தாள் குழலி.செல்வராணி குழலியை கூட்டிக்கொண்டு அவள் குடும்பத்தினருடன் தங்கள் வீட்டுக்கு வந்துவிட்டார்.

கல்யாணமாகி மாமியார் வீட்டுக்கு வந்த மருமகளுக்கு ஆரத்தி எடுக்க தான் யாருமில்லை  .மகனும் கணவரும் போலீஸ் ஸ்டேஷன் போய் இருக்க தனியாக வந்த  குழலிக்கு  மட்டும் ஆரத்தி எடுக்க தோணுமா என்ன செல்வராணிக்கு. 

சுந்தரவல்லிக்கு  ஏதோ பதட்டமாக இருந்தது.மகளை இந்த திருமணத்திற்கு கூட்டிவந்து அவள் வாழ்க்கையை வீணடித்து விட்டேன் என்று கலங்கி போனார்.மணப்பெண் ஓடிப்போய் போலீஸ் கேஸ் என்று  திருமணமான அடுத்த நிமிடமே இப்படியாக ஆகும் ஒன்று அவர் நினைத்திருக்கவில்லை. அண்ணன் மகனுக்கு தானே தன் மகளை கட்டிக் கொடுத்திருக்கிறேன் என்று நினைத்தவருக்கு இங்கே நடப்பதை பார்க்கும் போது  எதுவும் சரியாகப்படவில்லை. 

“ஏன் செல்வராணி எதுக்கு அவசரம் அவசரமா பழனிக்கு இன்னொரு பெண்ணை கட்டி வச்ச.அவ ஓடிப்போனா போறா. நீ கொஞ்சம் பொறுமையா இருந்திருக்கலாம் தானே…ஆமா  இந்த பொண்ணுக்கும் உன் பையனுக்கும் ஜாதக பொருத்தம் பார்த்தீங்களா…” என்று அங்கே வந்த செல்வராணியின் உறவுக்கார பெண் ஒருவர் சொன்னதும் குழலிக்கு திக்கென்று ஆனது.

Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!

“ஏன் அக்கா  ஜாதகம் பார்த்து பொருத்தம் இல்லைன்னா உன்னை நம்ம வீட்டுக்கு போகச் சொல்லிடுவாங்களோ?என்று தமக்கையிடம்  இடம் மெதுவாகச் சொன்னான் கோவர்த்தனன்.

“இப்பவும்  ஒன்னும் கெட்டுப் போகல….சுந்தரவல்லி வீட்டுக்கு உன் பையனை அனுப்பி  பொண்ணு ஜாதகத்தை எடுத்துட்டு வர சொல்லு.ரெண்டு பேரு ஜாதகத்தையும் பார்த்துடலாம்…” என்று விடாமல் சொன்னார் இன்னொருவர்.

 கோபத்துடன் எழுந்து நின்றான் கோவர்த்தனன்.

“தம்பி கொஞ்சம் பொறுமையா இருப்பா.இது அக்காவோட வாழ்க்கை.பேசாமல் வீட்டுக்கு  போய்  அக்கா  ஜாதகத்தை எடுத்துட்டு வாப்பா…எனக்காக” என்று மெதுவாக மகனிடம் சொன்னார் சுந்தரவல்லி.

“ஜாதகம் பார்த்து பொருந்தலைன்னா  என்ன பண்ணுவாங்க இவங்க.கட்டுன தாலிய  கழட்டி எடுத்துட்டு போக சொன்னா என்ன பண்ணுவீங்க…” என்று தாயிடம் திருப்பவும் சண்டைக்குப் போனான் அவன்.

“அப்படி எல்லாம் பண்ண  எங்கண்ணன் விட மாட்டாங்க கண்ணா. நீ போயிட்டு வாடா..” என்றதும்  கோவர்த்தனன் கிளம்பிப் போய் தமக்கையின் ஜாதகத்தை எடுத்து வந்தான்.

“என் பொண்ணு அப்பவும் இந்த கல்யாணத்துக்கு வரலைன்னு சொன்னா.கிறுக்கு பிடிச்சு போய் நான் தான் அவளை இழுத்துட்டு வந்து இப்ப இவங்க கிட்ட அல்லாடிக்கிட்டு இருக்கேன்…”  மகனிடம் புலம்பினார் சுந்தரவல்லி. 

ஜாதகத்தைப் பார்ப்பதற்கு தன்  உறவுக்காரர் நீலகண்டனை  அனுப்பி வைத்தார் செல்வராணி.

“இருங்க நானும் கூட வர்றேன்…” என்று அவருடன் கிளம்பி போனான் கோவர்த்தனன்.

எங்கே  எல்லோரும் சேர்ந்து ஏதும் தமக்கையின் வாழ்க்கையில் விளையாடி விடுவார்களோ என்று நினைத்தான் அவன்.தந்தையும் இல்லாமல் தமக்கையின் வாழ்க்கை இப்படியாகிவிட்டதே என்ற கலக்கம் வந்துவிட்டது அவனுக்கு.

தமயனும் தந்தையும் போலீஸ் ஸ்டேஷன் போய் இருக்க தன் பக்க உறவுக்காரர்களோடு  சேர்ந்து தாய் செய்யும் அலப்பறைகளை தாங்க முடியாமல் நடப்பதை  அவர்களிடம் சொல்லுவோம் என்று அண்ணனுக்கு  போன்  போட்டாள்  மோகனா. ஆனால் அந்தப் பக்கம் பழனியப்பன்  போனை எடுக்கவில்லை. போலீஸ் ஸ்டேஷனில் ஏதோ பிசியாக இருக்கிறான் என்று புரிந்து கொண்டாள் அவள்.

எல்லோருக்கும் குடிப்பதற்கு காபி கொண்டு வந்து    கொடுத்தாள் மோகனா. காபியை குடித்து விட்டு சுவரோடு  தலையை சாய்த்து கண்ணை மூடிக்கொண்டாள் குழலி. 

அப்போது ஜாதகம் பார்க்க போன கோவர்த்தனனும் நீலகண்டனும் உள்ளே  வந்தார்கள்.

“என்ன அண்ணா  ஜாதகம் பொருந்தியிருக்கா ? பதட்டமாக கேட்டார் செல்வராணி. 

“ஆமா ஜாதகம் பொருந்தி இருக்கு .ஆனா….. இவங்க ரெண்டு பேருக்கும்   குழந்தை பிறக்கிறதில் கொஞ்சம் சிக்கல் ஆகுமுன்னு……” என்று தயங்கியபடி சொன்னார்…அந்த மனிதர்.

‘ஆமா இந்த கல்யாணம் நடந்த சீத்துவத்துல இப்ப   பிள்ளை ஒன்னு தான் கேடு…’ என்று நினைத்துக் கொண்டாள்  குழலி. 

 சிறிது  நேரம் அமைதியாக இருந்த செல்வராணி என்ன யோசித்தாரோ தெரியாது.

“சுந்தரவல்லி  உன் பொண்ணை கூட்டிட்டு உங்க வீட்டுக்கு போயிடு..” என்று குண்டை தூக்கி போட்டார் .

“என்ன அண்ணி இப்படி சொல்றீங்க.எதுக்கும் அண்ணன் வரட்டும்…”

“ஏன் உங்க அண்ணனை  கையில போட்டுக்கிட்டு உன் பொண்ணை  என் பையன் கூட வாழ வைக்கலாம்னு பிளான்  போடுறியோ….ஒரு காலமும்  அது நடக்காது….” என்று  ஆவேசம் வந்தவர் போல சொன்னார் செல்வராணி.

“அப்ப எதுக்கு மண்டபத்தில் சும்மாயிருந்த என் பொண்ண கொண்டு போய் உங்க பையன் பக்கத்துல உட்கார வச்சிங்க நீங்க…”என்று சத்தம் போட்டார் சுந்தரவல்லி.

ஒரு சுடுசொல் பொறுக்க மாட்டாள் குழலி.அவளுக்கு சுயமரியாதை ரொம்ப முக்கியம் என்று எல்லோருக்கும் தெரியும்.  கோபத்துடன் எழுந்து தாயின் கைகளை பிடித்து இழுத்தபடி வந்து காருக்குள் ஏறிக் கொண்டாள்  குழலி. 

கோவர்த்தன் உறைந்து போய் முற்றத்தில் நின்றிருந்தான்.

“டேய்  இப்ப நீ வந்து கார்ல்  ஏர்றியா இல்லையா?என்று  தமக்கை கோபமாகச் சொன்னதும்  தான்  சுரணை வந்தவன் போல காருக்குள் ஏறிக்கொண்டான் அவன்.கோபத்தோடு தங்கள் வீட்டுக்கு காரை கிளப்பினாள்  குழலி. 

Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!

வருவாள்………………