காதல் சதுரங்க ஆட்டம் 1

அத்தியாயம் : 1

ரவாரம் சிறிதுமற்ற நெடுஞ்சாலையில் தன்னுடைய மொத்த வேகத்திலும் பறந்து சென்று கொண்டிருந்தது டாட்டா சுமோ. அதன் பின் பகுதியில் அதற்கு சற்றும் குறைவில்லாத வேகத்தில் வந்து கொண்டிருந்தது பென்ஸ். இரு கார்களும் ஒன்றுக்கொன்று வேகத்தை அதிகப்படுத்த, அப்போது எதிர்பாராத விதமாக அந்த கோரச்சம்பவம் நேர்ந்தது.

ஆம், பின்னே பார்த்துக்கொண்டே உயிர் பயத்தில் ஓடிக்கொண்டிருந்த சுமோ, தன்னுடைய கட்டுப்பாட்டையும் இழந்து, சாலையிலிருந்து பள்ளத்தாக்கை நோக்கி பாய்ந்தது. பின்புறம் வந்து கொண்டிருந்த பென்ஸ் சடாரென்று பிரேக் அடித்து நின்றது. இரண்டு கால்கள் கீழே இறங்கி வந்து பார்த்தது. வாகனம் வெடித்துச் சிதறும் ஓசையிலும், நெறுப்பு ஜூவாலைகளையும் பார்த்துவிட்டு புன்னகையுடன் திரும்பியது…

அலுவலகத்தில் அமர்ந்து பணிபுரிந்து கொண்டிருந்த ஹரிச்சந்திரன், ஃபோனில் வந்த தகவலை நம்ப முடியாமல் நின்றார். மறுபடியும் அங்கிருந்து கேட்ட குரலில் தவிப்புடன் “என்ன?” என்றவர், அடுத்த நிமிடம் அதிர்ச்சியில் மார்பை பற்றிக்கொண்டு கீழே சரிந்தார். உடனடியாக ஓடி வந்த உதவியாளர் அவரது மகனுக்கு தகவல் தெரிவித்தார். அடுத்த நிமிடம் மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதிக்கப்பட்டார்.

உடன் பிறந்தவள் இறந்து போன செய்தியை ஜீரணிக்க முடியாத ஹரிச்சந்திரனின் பெரிய மகன் கோகுல கிருஷ்ணன், அடுத்தவன் கார்த்திகேயன் இளைய மகள் புவனேஸ்வரி மூவரும் உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்தனர். ஆபரேஷன் தியேட்டரில் மயக்க நிலையில் ஆழ்ந்திருந்தவர், சிறிது நேரத்தில் சர்ஜரி செய்யப்பட்டு அவசர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டார்.

ஒரேநாளில் இத்தனையும் நடந்து விட்ட சோகத்தில், செய்வதறியாமல் அனைவரும் நின்று கொண்டிருந்தனர். வேக நடையுடன் அவர்களை நோக்கி வந்தாள் அகல்யா. அவளைப் பார்த்ததும் விரைந்து சென்று நடந்த விசயங்களை தெரியப்படுத்தினார்கள். அனைத்தையும் கேட்டுக்கொண்டே மருத்துவரை காண விரைந்தாள் அவள்.

மருத்துவரிடம் பேசிவிட்டு வெளியில் வந்தாள். “மாமாவுக்கு சீக்கிரமே உடல்நிலை சரியாகிடும். அவருக்காக யாரும் பயப்பட வேண்டாம்னு டாக்டர் சொல்லியிருக்கார். கொஞ்ச நாளைக்கு கம்பிளீட் ரெஸ்ட் எடுத்தால் பூரணமா குணமாகிடும்” என்றாள். அனைவரும் நிம்மதியாக மூச்சு வாங்கினர்.

கணவன் கோகுல கிருஷ்ணன் அருகில் வந்தாள். “என்னங்க, மாமாவுக்கு இப்போ வயசு ஐம்பது தாண்டிருச்சு. பீபீ, சுகர் எல்லாம் ஏற்கனவே இருக்கு. இப்போ, இதுவும் சேர்ந்துடுச்சு. பாவம் அவங்க, இனிமேலாவது நிம்மதியா ஓய்வெடுக்கட்டும். நீங்க அலுவலக நிர்வாகத்தை பார்த்துக்கோங்க. நான் மாமாவையும் உங்களையும் பார்த்துக்கறேன். மாமாவுக்கு சீக்கிரம் சரியாகிடும். நீங்க யாரும் கவலைப்படாதீங்க” என்று ஆறுதலாக கூறினாள். வீட்டுக்கு மூத்த மருமகளான அவளது பேச்சை அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.

சில நாட்கள் மருத்துவமனை, வீடு என்று நேரம் பாராமல் அலைந்து கொண்டிருந்தாள். அவர் வீட்டிற்கு வரும் நாள் நெருங்கியது. அவரைப் பார்த்துக்கொள்ள செவிலியை ஏற்பாடு செய்தாள். அவ்வப்போது தேவைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்ய, ஒரு பணியாளையும் அமர்த்தினாள். வீட்டு நிர்வாகத்தை அப்படியே தன் வசப்படுத்திக் கொண்டாள். அலுவலகம் அவளது கணவன் கோகுல கிருஷ்ணன் மேற்பார்வைக்கு சென்றது. தம்பி கார்த்திகேயன் இன்னும் சிலநாள் ஓய்வெடுத்த பின்னரே, அலுவலகத்திற்கு வருவதற்கு அனுமதியளிக்கப்பட்டது. தங்கை புவனா கல்லூரி படிப்பு முடியும் வரையில் ஹாஸ்டலில் நின்று வர தீர்மானிக்கப்பட்டது. அகல்யாவின் பேச்சுக்கு மட்டுமே எல்லா இடத்திலும் முன்னுரிமை அளிக்கப்பட்டது. அண்ணி, அண்ணனின் பேச்சைக்கேட்ட மற்ற இருவரும் தலையசைத்து ஏற்றுக்கொண்டனர். அதற்குப் பிறகு அவள் சொல்வது போல் கேட்டு நடந்தனர்.

பல பொறுப்புகள் தன்மேல் விழ, தனியொருத்தியாக சமாளிக்க முடியாமல் திணறினாள். அதனால், தனக்கு நம்பகமான பெண்ணொருத்தியை பணியில் அமர்த்திக் கொள்ள முடிவு செய்தாள். இன்று அவள் எடுக்கும் முடிவு, நாளைக்கு அவளுக்கே பாதகமாய் அமைய போகிறதென்று அப்போது அவள் அறிந்திருக்கவில்லை!

ஆறு மாதங்களுக்குப் பிறகு

ரிச்சந்திரன் அவர்களுடைய இரண்டாவது மகன் கார்த்திகேயனுக்கு திருமணம் நடைபெறுவதற்காக அனைவரும் திருமண மண்டபத்தில் குவிந்திருந்தனர். மகன் திருமணத்தை நாற்காலியில் அமர்ந்து மகளின் துணையோடு பார்த்துக் கொண்டிருந்தார் அவர்.

மண்டபத்தில் நின்று அனைவரையும் வரவேற்று, எல்லாம் சரியாக நடக்கிறதா என்று பார்த்துக் கொண்டிருந்தான் அவனது அண்ணன் கோகுல கிருஷ்ணன். அவனது மனையாள் அகல்யா புன்முறுவல் தாங்கி அனைவரிடமும் தலையசைத்து, உதட்டசைவில் வரவேற்று நகர்ந்தாள்.

முகூர்த்தத்திற்கு இன்னும் பத்து நிமிடங்களே இருக்க, மணமகனை மேடைக்கு வரச்சொன்னார்கள். அவனை அறையில் காணவில்லை. மாப்பிள்ளையை காணாமல் தேடினர் அங்கும் இங்கும். அனைவருக்கும் விசயம் பரவியது. பெண் வீட்டார் திகைப்புடன் நின்றிருக்க, அவனது கைப்பேசியில் தொடர்பு கொள்ள முயன்றான் கோகுல கிருஷ்ணன். அது மாடி அறையில் இருந்து ஒலித்தது. நிம்மதியும் பிறந்தது. உடனே அங்கு சென்று கதவை தட்டினான் பணியாள் வேலாயுதம். கதவு திறக்கப்படாததால் ஜன்னல் கதவை திறந்து பார்த்தான். அங்கு அவன் கண்ட காட்சி அதிர்ச்சியடைய செய்தது. உரத்த குரலில் அனைவருக்கும் கேட்கும் விதமாக விசயத்தை தெரியப்படுத்தினான்.

“கார்த்திக் தம்பி இங்கே இருக்கிறார். அவரோடு நம்ம வீட்டு வேலைக்கார பொண்ணு கிருத்திகாவும் இருக்குது…” என்றான்.

அனைவரின் பார்வையும் அங்கு நோக்கி நகர்ந்தது. வேகமாக தட்டப்படும் கதவின் ஓசையில் அவளை விட்டு விலகினான் கார்த்திக். அவன் அருகில் கசங்கிய ஆடையுடன், தலை கலைந்த தோற்றத்தில் கிடந்தாள் கிருத்திகா. அவன் வீட்டில் தங்கியிருந்து பணிபுரியும் மேனேஜர்…

இருவரையும் ஒரே அறையில் பார்த்த பலரும் கிசுகிசுத்தனர். “ஒரே வீட்டில் தங்கியிருப்பதால் ஏற்கனவே அவர்களுக்குள் பழக்கம் இருக்கும்” என்றனர்.

“காதலித்தவளை மணக்கும் நேரத்திலும் வேலைக்காரியுடன் திருட்டுத்தனமாக பழகுகிறான்” என்றனர்.

“ஒருவேளை, அவளை மணந்துக்கோ. என்னையும் கடைசி வரைக்கும் வச்சு பார்த்துக்கோன்னு பேசிட்டு இருக்கிறாங்க.” என்றார்கள்.

மற்றவரின் பேச்சுக்களை பொருட்படுத்தாமல் அறைக்குள் நுழைந்தாள் அகல்யா. கட்டிலில் கண்மூடி படுத்திருந்த கிருத்திகாவை தட்டி எழ செய்தாள். தண்ணீரை எடுத்து வந்து முகத்தில் தெளித்தாள். அவள் மெதுவாக விழிகளைத் திறந்தாள். சுற்றும் முற்றும் மலங்க மலங்க பார்த்துக்கொண்டே எழுந்தாள். கார்த்திக்கை பார்த்ததும் மிரண்டாள். அவனது விழிகளில் தெரித்த நெருப்பு, அவளை உயிரோடு எரிப்பது போலிருந்தது.

அனைத்தையும் பார்த்து வேகமாக அங்கு வந்தாள் சாம்பவி. அந்த நேரத்தில் இருவரையும் அப்படி பார்க்கவும் ஆத்திரமாக வந்தது.

“என்ன கார்த்திக் இதெல்லாம்? உங்களால் எப்படி இப்படியெல்லாம் நடந்துக்க முடிஞ்சது? உங்க மேல எத்தனை நம்பிக்கை வச்சுருந்தேன். கடைசியில் இப்படி ஏமாத்திட்டிங்களே?” என்றாள். கோபமாக ஆரம்பித்து ஆதங்கத்துடன் வந்து விழுந்தன, அவள் நாவிலிருந்து உதிர்த்த வார்த்தைகள்.

“சாம்பவி! நீ… நீயும் என்னை சந்தேகப்படுறியா?” தடுமாற்றத்துடன் வினவினான் கார்த்திக்.

“அதான் கண்ணு முன்னாடியே தெரிஞ்சிட்டதே, நீ எப்படிப்பட்டவன்னு… இதுக்கு மேலயும் என்ன தெரியணும்? என்று கேட்டார் அவளது அப்பா பரசுராம்.

“சத்தியமா, நான் எதுவுமே பண்ணலை மாமா. என்னை நம்புங்க.” என சொல்லிவிட்டு மேற்கொண்டு பேச முயன்றான். அவர் அவனது பேச்சைக் கேட்க மறுத்தார். மகளைத் தன்னுடன் அழைத்துச் செல்ல முயன்றார்.

அவன் விடாமல் அடம்பித்தான். வார்த்தையாடலும், கைகலப்பும் ஏற்பட்டது.

கோகுல கிருஷ்ணன் அனைவரையும் விலக்கி விட்டான். கிருத்திகாவை அழைத்து, அறைக்குள் நடந்தவற்றை கேட்டான். அவள் பதில் கூற முடியாமல் திணறலுடன் நின்றாள்.

அத்தனை பேர் முன்னிலையில் நடந்ததை எப்படி சொல்வதென்று தயங்குகிறாள் போலும் என்று எண்ணினான். கார்த்திக் கோபம் தாளாமல் அவளைப் பற்றி உலுக்கினான். பொலபொலவென்று விழிகளில் வழிந்த நீருடன் நின்றாள் கிருத்திகா.

“உண்மையை சொல். உன்கிட்டே நான் தவறா நடந்துக்கிட்டேனா? அறைக்குள் என்ன நடந்ததுன்னு மறைக்காம சொல்லு?” என்றான்.

அவள் வாய் திறக்க முடியாமல் மெளனமாக விம்மினாள்.

சாம்பவியின் அப்பா, “அம்மா சாம்பவி, அப்பா சொல்றதைக் கேளு. உனக்கொரு நல்ல மாப்பிள்ளையா பார்த்து நான் முடிக்கிறேன். இவன், உன் மூலம் வரும் சொத்துக்களுக்காக மட்டுமே காதலித்தது போல் நடிக்கிறான். இவனை நம்பாதே! ஆஸ்திக்கு உன்னையும் ஆசைக்கு அவளையும் வச்சுக்க பார்க்கிறான்” என்றார்.

அவள் என்ன பதிலுரைப்பது என்று தெரியாமல் நின்றாள். அவரது கைவிரல்கள் தன்னைப் பற்றியிழுத்துச் செல்வதை அவளால் தடுக்க முடியவில்லை. அவர் பின்னரே சென்று கொண்டிருந்தாள் சாம்பவி.

அப்போது கார்த்திக்கின் கை அவள் மீது பட்டு நிறுத்தியது.

“உண்மையிலேயே நான் தவறு செய்தவன். வெறும் சொத்துக்காக உன்னைக் காதலிப்பது போல் நடிச்சேன்னு நீயும் நினைக்கறியா?” என்று கேட்டான்.

அவள் விழிகளில் இருந்து வழிந்த நீரை துடைக்காமல் ஏக்கத்துடன் அவனையே பார்த்து நின்றாள்.

“பதில் சொல் சாம்பவி? எதுக்கு இத்தனை அமைதி? ‘கண்ணால் காண்பதும் பொய்; காதால் கேட்பதும் பொய்; தீர விசாரிப்பதே மெய்’னு தெரியாது. இவ்வளவு தானா என்மீதான காதல்?” என்று வருத்தமாக கேட்டான்.

அவள் ஒரு முடிவுக்கு வந்தவள் போல கையை இருவரிடமிருந்தும் விலக்கினாள். நேராக கிருத்திகாவின் அருகில் சென்றாள். அழுது கொண்டிருந்தவள் முகத்தை நிமிர்த்தி பார்த்தாள். குற்றமற்ற நயனங்கள் இரண்டும் பொய் சொல்வது போல் தெரியவில்லை. தடுமாறினாள் சாம்பவி…

“அறைக்குள்ளே என்ன நடந்தது கிருத்திகா? அந்த நேரத்தில் எதுக்காக நீ அங்கே போன, எதனால் கார்த்திக்கும் அங்கு வந்தார்? கார்த்திக்கும் உனக்கும் என்ன சம்மந்தம்? உங்கள் இருவருக்கும் இடையில்… ஏதாவது இருக்கிறதா?” என்று திக்கி திணறலுடன் கேட்டு முடித்தாள். அவளது பேச்சைக்கேட்டு ஸ்தம்பித்து போனான் கார்த்திக். தன்னை நம்பாமல் கேட்டது போலிருந்தது அவளது கேள்விகள்…

அவள் அப்படியே நின்றாள். சாம்பவியின் அப்பா அருகில் வந்தார். “அம்மா சாம்பவி, தவறு செஞ்சவங்க என்னைக்கு தான் உண்மையை ஒத்துக்கிட்டாங்க? நீ வாடா நாம போகலாம். இவனை விட நல்ல மாப்பிள்ளையா பார்த்து, நான் உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறேன்” என்றார்.

அவள் “அப்பா!!” என்றாள். குரல் தழுதழுத்து ஒலித்தது. காதலித்தவனை மணந்து கொண்டு அவனுடன் சந்தோஷமாக இனிய இல்லறத்தை துவங்கலாம் என்று நினைத்திருக்க, இங்கே நடப்பதோ அவளுக்கு பேரிடியாக இருந்தது. இதில் வேறொருவனை மணந்து வாழ்வதா? என்று எண்ணினாள். அதேநேரம் கிருத்திகாவை பார்க்கும் போதும் பாவமாக இருக்கிறது. ‘யாருமற்ற அநாதை’ என்று சொல்லி இருந்தான் கார்த்திக். தனக்காவது உதவி செய்ய, ஆறுதலாக பேசி தேற்ற பெற்றோர், உடன் பிறந்தவன் இருக்கிறான். அவளுக்கென்று யார் இருக்கிறார்கள்? நாளைக்கு ஏதாவது தவறாக நடந்து விட்டால், அதற்குத் தானும் ஒரு காரணமாகி விடுவோமோ என்று எண்ணி அஞ்சினாள்.

மனதை அடக்கிக்கொண்டு, “கார்த்திக், நீங்க அவளையே கல்யாணம் பண்ணிட்டு சந்தோஷமா இருங்க. நான் விலகிப் போயிடுறேன்” என்றாள்.

அவனால் நம்ப முடியவில்லை. சாம்பவியா இப்படி சொல்கிறாள் என்று… அவளையே வெறித்துப் பார்த்துக்கொண்டு நின்றான்.

அவன் பார்வையின் அர்த்தம் விளங்கியது. அவள் தலை குனிந்து நின்றாள். அப்போது அவனது அப்பா ஹரிச்சந்திரனுக்கு மூச்சு வாங்கியது. மகனை நோக்கி கை காட்டினார். புரிந்து கொண்ட புவனா, அண்ணனை அழைத்தாள். அவரது முகத்தைப் பார்த்தே அவரது உடல்நிலையை கணித்துக் கொண்டாள் கிருத்திகா. ஓடிச்சென்று அவர் அருகில் அமர்ந்து மறுப்பாக தலையசைத்தாள். தண்ணீரை எடுத்து வந்து அருந்த செய்தாள். அனைத்தையும் பார்த்து நின்ற பரசுராமன், மகளைப் பற்றியிழுத்துச் சென்று விட்டார்.

கார்த்திக் கோபத்தை அடக்க வழியறியாமல் நின்றான். அவனது அப்பாவின் விழிகள் அவனிடம் ஏதோ கேட்டது. அவன் மறுப்பாக தலையசைத்தான். அண்ணன் கோகுல், பரசுராமிடம் எவ்வளவோ பேசிப் பார்த்தும் முடியவில்லை. அகல்யா “விட்டுத்தள்ளுங்கள், நம்ம தம்பியோட அருமை தெரியாதவள். காதலின் முதல் படியே நம்பிக்கை. அதுவே இல்லாமல் விட்டுச் சென்றவளை எதுக்காக கட்டாயப்படுத்துறீங்க? இவளைக் கட்டிக்கிட்டா நம்ம கார்த்திக் காலம் பூரா நிம்மதியில்லாமலேயே வாழ வேண்டியது வரும்” என்றாள்.

மனைவி கூறுவது அவனுக்கும் சரியென்று பட்டது. தம்பியின் அருகில் வந்தான். அவனது அப்பா கிருத்திகாவை பார்த்துக் கை காட்டினார். அவன் பலமாக மறுத்தான். விழிகள் யாசிப்புடன் கேட்டன. கரங்கள் அவனை நோக்கி நீண்டன. மகனின் பிடிவாதம் மனதை வருத்தியது. பெற்றவரின் பார்வையும், அவள் மீதான அன்பும், நம்பிக்கையும் அவனுக்கு வெறுப்பை ஏற்படுத்தியது.

‘என்மேல் நம்பிக்கை இல்லாமல் அவளுக்காக பார்க்கிறாரே!’ என்று சினந்து போய் நின்றான்.

புவனா தாலிச்சங்கிலியை எடுத்து வந்து அப்பாவின் கைகளில் வைத்தாள். அவர் மகனைப் பார்த்தார். எல்லை தாண்டிய கோபத்தில் , அவருக்காக அதை எடுத்தான். அவளை மூன்றாவது கண் இல்லாமலேயே சுட்டெரித்தான். பார்வை தளராமல் அப்படியே கட்டி முடித்தான்.

‘என்மேல் வீண் பழியை சுமத்தி அவமதித்த உன்னை, சும்மாவே விடமாட்டேன்!’ என்று முணுமுணுத்தான்.

தொடர்கதைக்கான கருத்துகளை கீழே 👇👇👇உள்ள லிங்கில் பதிவு செய்யுங்கள் நட்புக்களே…

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-1.3311/