காதல் சதுரங்க ஆட்டம் 9

அத்தியாயம் : 9


ன்றொரு நாள் தங்கை காயத்ரியிடம் இருந்து, வீடியோ காலில் அழைப்பு வந்தது. தங்கையை பார்க்கும் ஆவலில் அவனும் அழைப்பை ஏற்றான். அங்கு தங்கையை காணவில்லை. மாறாக, மாடலிங் பெண் போல் ஒருத்தி தெரிந்தாள். விழிகள் ஆச்சர்யமாக விரிந்தன.

லேஸால் (lace) வடிவமைக்கப் பெற்ற கோல்டன் நிற ரவிக்கை அணிந்து, உயரே தூக்கி கட்டிய கொண்டையுடன், அதே நிற புடவையில் நின்றிருந்தாள். அவள் யாரென்று அறிந்து கொள்ளும் ஆவல், அவனை உந்தி தள்ளியது. பெண்ணின் பின்பகுதி முழுவதும் கண்களுக்குள் விழுந்தது. முகத்தை திருப்பாமலே நின்று கொண்டாள் அவள். சில நிமிடங்களில் தங்கை காயத்ரி வந்தாள். முகம் கொள்ளா புன்னகையுடன் பேசினாள். அவனது உதடுகளும் முறுவலுடன் நலம் விசாரித்தன. விழிகள் அவளுக்கு பின்புறம் நின்ற பெண்ணின் மீது படிந்து விலகியது.

“காயத்ரி அந்த பொண்ணு யாருடா? மாடலிங்கா அல்லது வெளியூர்வாசியா?” என்று விசாரித்தான்.

அவளது உதடுகள் குறும்பாக நெளிந்தன. “அண்ணா, அவங்க … ம்கூம் இப்போதைக்கு சொல்ல மாட்டேன்” என்று மறுப்பாக தலையசைத்தாள்.

“ஏம்மா, கொலு பொம்மை மாதிரி இருக்கு. அப்படியே தூக்கி மடியில வச்சு கொஞ்சலாம் போல… கேட்டா சொல்ல மாட்டேங்கிறியே! சொல்லுடா?” என்று குறைபட்டான்.

அவள், “நீங்க ஊருக்கு வரும் போது, அந்த கொலு பொம்மையை உங்களுக்கே கிப்டா தரப் போறேன்” என்று கிண்டலாக கூறினாள்.

அவனது உதடுகள் நகைத்தன. “ஏது, கிப்டா தரப்போறியா? அப்புறம், என்கிட்ட மாட்டிக்கிட்டு கடைசி வரைக்கும் திண்டாடப் போகுது பாரு” என்று கேலியாக கூறினான்.

அவள் வாய் விட்டு சிரித்தாள். “திண்டாட போவது நீங்களா? என்னோட கொலு பொம்மையா பார்த்துடலாம். வருவதுக்கு முன்னே நல்லா சாப்பிட்டு தெம்பா வாங்க” என்றாள் காயத்ரி.

தங்கையின் பேச்சு சிரிப்பை வரச் செய்தது. “வேறென்னடா வேலை? கட்டாயம் புஷ்டியா வந்து இறங்குறேன். ‘என்னை விட்டுட சொல்லு காயத்ரி’ன்னு உன்கிட்டே வந்து புகார் வாசிக்க வைக்கிறேனா இல்லையா பாரு?” என்றான்.

இருவரும் சில நிமிடங்கள் மனம் விட்டு சிரித்தார்கள்.

“அண்ணா, அந்த கொலு பொம்மை உங்களுக்காகவே கடவுளால் உருவாக்கப் பெற்றது. உங்கள் மடி மீது ஆயுசுக்கும் தவள போகுது. உங்க மேல உயிரையே வச்சு கடைசி வரைக்கும் பார்த்துக்க போகுது. நீங்க என்ன சொன்னாலும் தவறாமல் கேட்கும். நீங்க என்ன செய்தாலும் மறுக்காது” என்று விசமமாக கூறினாள்.

அவனோ சிரித்தான். “என்னடா, அண்ணாவை ஏதோ வம்பில மாட்டி விட போறது மாதிரி தெரியுது? நாம் பாவம்டா!” என்று சொன்னான். அவள் பதில் கூறாமல் பின்னே பார்த்துக்கொண்டு கண் சிமிட்டினாள்.

தங்கையின் பேச்சில் ஏதோ சூட்சுமம் இருப்பது போல் தெரிந்தது. அதைப் பற்றி கேட்டாலும் மேலும் தகவல் கிடைக்காது. ஏனோ குறும்புத்தனமாக வாயடிக்கிறாள் என்று நினைத்தான். உண்மையை ஆராயாமல் விட்டு விட்டான். அதுவே அவன் வாழ்க்கையை புரட்டிப் போடப் போகிறது என்பதை, அப்போது அவன் அறிந்திருக்கவில்லை.

“சரிடா, உன் விருப்பம் போல பண்ணிடலாம்” என்றான். சில நிமிடங்கள் பேசினான். அவளுக்குத் தேவையானதை வாங்கி வருவதாக வாக்கு கொடுத்தான்.

“அண்ணா, என்னை ஏமாத்தினாலும், கொலு பொம்மையை ஏமாத்த முடியாது. நீங்க போகாட்டியும், கட்டாயம் அது உங்களைத் தேடி வரும். ஏன்னா, அவ்வளவு பாசம் நம்ம மேல…” என்றாள். அவன் புரியாமல் தலையசைத்தான்.

தங்கை எதற்காக அப்படி பேசுகிறாள் என்று எவ்வளவு முறை யோசித்தும், அவனுக்கு சரியாக புரியவில்லை. ‘அது யாராக இருக்கும்? காயத்ரி எதுக்காக அப்படி பேசினா? ஒருவேளை யாரையாவது எனக்காக பார்த்து வச்சுருக்கிறாளோ? நான், ஏற்கனவே சாம்பவியை விரும்புகிறேன் என்பதை அறிந்தால்…” என்று நினைத்து குழப்பத்தில் மூழ்கினான்.

ஊருக்கு போன பிறகு அவள் கேட்டால் இது விசயமாக தெளிவாக பேசிக் கொள்ளலாம் என்று எண்ணினான். அதற்கு வாய்ப்பே இல்லாமல் அவள் விபத்தில் சிக்கி கருகி விட்டாள்.

கிட்டதட்ட ஆறு மாதங்களுக்குப் பிறகு, அன்று பார்த்த அதே பெண்ணை மறுபடியும் பார்ப்பது போலிருந்தது. அவளை அறிந்து விடும் ஆவலில் நெருங்கினான். அவள் தன்னைப் பார்க்காமல் நிற்கவும் அழைக்க முயன்றான். தொண்டையை ஏதோ இறுகப் பற்றியது. வலது கையை உயர்த்தினான். வீசியடித்த காற்றில் அவளது மறைக்க வேண்டிய பிரதேசங்கள் அப்பட்டமாக கண்ணில் விழுந்து, அவனது சித்தத்தை தடுமாற செய்து விட்டன. தான் செய்தது தவறு என்ற எண்ணத்தில் மன்னிப்பைக் கேட்க முயன்றான். அவளோ ‘வெளியே போ!’ என்று சொல்லி விட்டாள்.

புருவங்கள் இடுங்க அவளைப் பார்த்தாலும், முன்பு போல் அவன் நிதானம் தவற விரும்பவில்லை. “சாரி மிஸ். இதுக்கு முன்னே உங்களை எங்கயோ பார்த்த மாதிரி இருந்தது. அதான் யார்னு தெரிஞ்சிக்கலாம்னு ஆர்வத்தில் வந்துட்டேன். அப்புறம்… சாரி, நிஜமாகவே நான் நடந்துக்கிட்டது தவறு! என்னை மன்னிச்சிருங்க” என்று தாழ்ந்த குரலில் மன்னிப்பை வேண்டினான்.

இமைகள் படபடத்தன. ‘இதற்கு முன்பு பார்த்திருக்கிறேன். அதனாலேயே தெரிந்து கொள்ள வந்து விட்டேன்’ என்ற வரிகள் அவளை மூச்சடைக்க செய்தது. அவனை நிமிர்ந்து பாராமல் திரும்பி நின்றாள்.

“தவறா எடுத்துக்காதீங்க மிஸ். இது என்னோட வீடுதான். நான் இந்த வீட்டு ரெண்டாவது வாரிசு கார்த்திகேயன்! என்னாலே உங்களுக்கு எந்த தொந்தரவும் வராது. நீங்க தாராளமா இங்கேயே தங்கலாம்” என்றான். அவளது விழிகள் ஒரு கணம் அவனைத் தொட்டுப் பின்னர் திரும்பி கொண்டது.

தான் இத்தனை முறை மன்னிப்பை யாசித்தும், அவள் கொடுக்க மறுத்துவிட்டாளே என்கிற தவிப்பில், அவன் வெளியேறி சென்று விட்டான். கார்த்திக் சென்று சில நிமிடங்கள் கடந்த பிறகும் வெளி வாசலை பார்த்துக்கொண்டே நின்றாள் கிருத்திகா. அதன் பிறகே தலையை உலுக்கி கொண்டவள் விழிகளில், கழற்றி வைத்திருந்த லேஸ் ரவிக்கை கண்ணில் விழுந்தது. உடனே தன்னைப் பார்த்தாள். ‘இப்படியா திறந்த புத்தகமாய் அவர் முன்பு நின்றிருந்தேன்? அச்சச்சோ! என்னைப் பற்றி அவர் என்ன நினைத்திருப்பார்?’ என்று பயந்தாள். அவர் மீது தவறில்லை. தன்மீதே மிகப்பெரும் பிழை இருப்பதாக கருதினாள்.

ஆம், பிரீப்ஃகேஷ், பேக் சகிதம் வீட்டிற்குள் நுழைந்தாள் கிருத்திகா. கதவை சாற்றி வைத்துக்கொண்டு, ஒவ்வொரு அறைகளும் எப்படி இருக்கிறதென்று பார்த்துக் கொண்டிருந்தாள். பின்னர், விளக்கேற்றி அகர்பத்தியை காண்பித்து வழிபட்டாள். படுக்கை அறையில் நுழைந்து உடை மாற்றிக் கொண்டிருந்தாள். அப்போது, அசோக் கைப்பேசியில் அழைத்தான். வேகமாக லேஸ் ரவிக்கையை விலக்கிய கையுடன் அழைப்பை ஏற்று சில நிமிடங்கள் பேசினாள்.

வேறு யாரும் வர மாட்டார்கள் என்கிற எண்ணத்தில், புகைப்படத்தை எடுத்து மாட்டிக் கொண்டிருந்தாள். ஆனால், பூஜை செய்வதற்காக லேசாக திறந்திருந்த கதவின் வழியாக கார்த்திக் வருவான் என்பது அவள் எதிர்பாராதது. வேகமாக சென்று உடை மாற்றினாள். ஆரம்பமே இப்படியா இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில், அவன் முகத்தில் மறுபடியும் எப்படி முழிப்பது? என்ற தயக்கத்துடன் நின்றாள்.

அடுத்த நாள் காலையில் அகல்யாவை பார்த்து பேசினாள் கிருத்திகா. அவள் கோகுல், கார்த்திக் இருவரிடமும் அறிமுகப்படுத்திக் கொடுத்தாள். கார்த்திக்கின் விழிகள் அவளைத் தொண்டு மீண்டன. அடுத்து வீட்டு பணியாட்களை அழைத்தாள். பின்னர், ஹரிச்சந்திரன் அறைக்குச் சென்று விவரம் தெரிவித்து விலகினாள். அவரைப் பார்த்ததும் கை குவித்து வணங்கினாள்.

கிருத்திகாவின் எழிமையான அழகும், அடக்கமும் அவருக்குப் பார்த்தவுடன் பிடித்து விட்டது. அருகில் அமர வைத்து சில நிமிடங்கள் பேசினார். விழிகள் ஏதோ நியாபகத்தில் கலங்கியது. அவரிடம் விடைபெற்று, தன்னுடைய வேலையை பார்க்க சென்றாள். அவர் அறையில் செவிலி, பணியாள் இருப்பதால் அத்தனை இலகுவாக எதுவும் பேச முடியாது என்பது புரிந்தது.

காலை உணவை அவர் உண்ண முடியாமல் திணறினார். உடனே இடியாப்பம், தேங்காய் பால் செய்து கொடுத்தாள். அவர் வயிறார பசியாறினார். மதிய நேரம் அவருக்கு விருப்பமான உணவை செய்து கொடுத்தாள். அவர் அருகில் அமர்ந்து பேசிக்கொண்டே உண்டாள்.

ஒரு சமயம் அகல்யா அவள் சமைத்த உணவை உண்டு விட்டாள். அதில் இருந்து தனக்கும் செய்து கொடுக்க முடியுமா? வேலைக்காரியாக நினைத்து செய்ய வேண்டாம். இதை உன் வீடு போல் நினைத்துக் கொள்ளலாம் என்றாள். அவள் உடனே சம்மதித்தாள்.

அதன் பிறகு அலுவலக வேலையுடன் சமையல் செய்வதற்கும் உதவினாள். அனைவரிடமும் அன்புடன் நடந்து கொண்டாள். கார்த்திக்கின் காலடி ஓசை கேட்டால் மட்டும் அட்டையை போல் சுருண்டு கொள்வாள். முதலில் அவனுக்கும் அது புரியாமல் இல்லை. நாளடைவில் அவளது விலகல், தன்னை ஒரு குற்றவாளியை போல காண்பித்தது. அன்று அப்படி நடந்த பின்னர், முப்பந்தலுக்கு சற்றுத் தொலைவில் உள்ள சாலைப் பகுதியில் காணப்பட்ட வெற்று நிலம், மொத்தமாக வாங்கும் விசயமாக வெளியே சென்றான். எந்தவித இழுப்பறியும் இல்லாமல் உடனே முடிந்து விட்டது. கிருத்திகாவின் முகத்தில் முழித்து வந்ததால் முடிந்து விட்டது. அவளொரு ‘ராசிக்காரி’ என்று நினைத்தான். மாலையில் சாம்பவியின் பிறந்தநாளுக்கு ஹோட்டலுக்கு விரைந்தான். அவளது முகத்தைப் பார்த்ததும் மனம் வலித்தது. இப்படி ஒருத்தியை விரும்பிக்கொண்டு அப்படி நடந்து கொள்ள எப்படி முடிந்தது? விதி ஏன் அவளிடம் தன்னை சிக்க வைத்தது? என்று நினைத்து மறுகினான்.

சாம்பவி எத்தனை முறை கேட்டும் கூறாமல் மறைத்து விட்டான். ஏற்கனவே குற்றவுணர்ச்சியால் வேதனையில் இருந்தான். இதில், அவளும் விசயத்தை தெரிந்து கொண்டு ஏதாவது சொல்லி விட்டால் தன்னால் தாங்க முடியாது என்றே மறைத்தான். அவள் விரல் நுனியை கூட தீண்டாமல் விலகி நின்றான். அவனைப் புரியாமல் பார்த்தாள் சாம்பவி. அவன் மறுப்பாக தலையசைத்தான். இரவு வீட்டிற்கு வந்ததும் விழிகள் தன்னையறியாமல் ஹெஸ்ட் ஹவுஸை நோக்கி ஓடியது. அங்கு விளக்கு அணைக்கப்பட்டு, அவள் உறங்கி விட்டாள் என்பதை ஊர்ஜிதப்படுத்தியது.

இரவு உறக்கம் வர மறுத்தது. ‘அவள் யார்? அவளுக்கும் அன்று பார்த்த கொலு பொம்மைக்கும் ஏதாவது சம்மந்தம் இருக்குமா?’ என்றே உழன்றது. அதை கேள்வியாக்கி அண்ணியின் முன்பு வைத்தான். அவளது பார்வை அவனை சங்கடப்படுத்தியது. ‘சும்மா தெரிஞ்சிக்கலாம்னு கேட்டேன்’ என்றான். அத்துடன் அவள் யார் என்று ஆராய்வதை விட்டு விட்டான். தான் நேசிக்கும் பெண்ணை விட்டு, அடுத்த பெண்ணைப் பற்றி எண்ணுவது தவறு எனும் எண்ணத்தில் விலகி நடந்தான்.

விடுமுறையில் தங்கை புவனா வந்தாள். கிருத்திகாவின் அன்பான பேச்சும், அப்பாவின் மீதான அக்கறை கலந்த கவனிப்பும் அவளுக்கும் பிடித்திருந்தது. அவர்கள் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும் போது கார்த்திக் வந்தான். அவள் முகத்தை திருப்பிக் கொண்டாள். தன்னை மட்டும் ஏன் அவள் விலக்கி வைக்கிறாள் என்ற வருத்தமும், தான் அப்படி நடந்து கொண்டதால் மட்டுமே இப்படி செய்கிறாள் “என்னை மன்னிக்கவே மாட்டாளா?” என்கிற ஏக்கமும், அவனை விடாமல் தொடர்ந்தது.

முதலில் சில நாட்கள் பொறுத்துப் போனான். பின்னர் வலிய சென்று பேசினான். அப்படியும் அவள் மறுத்து விட்டாள். அவனோ வீம்பை கையில் எடுத்தான்.

“மேனேஜர், மேடத்தின் பெயர் என்ன?” என்றான்.

அவள் கேளாதது போல் நின்றாள்.

“என்ன படிச்சிருக்கறீங்க? எந்த ஊர்ல இருந்து வர்றீங்க?”

அவள் அசையாமல் நின்று கொண்டாள். அவனுக்கு ஆச்சர்யமாகவும், வியப்பாகவும் இருந்தது.

“டேட், அண்ணி ஊமைப் பெண்ணையா வேலைக்கு வச்சுருக்காங்க. ரொம்ப வசதியா போச்சு” என்றான். அவள் முறைத்தாள். அவனது வலது புருவம் உயர்ந்தது. ‘பதில் சொல்லாமல் விடமாட்டேன்’ என்பதாக …

அவள் வெளியேற முயன்றாள். அவன் வேண்டுமென்றே வழிமறித்து நின்றான். அவளது முறைப்பை கவனியாதவன் போல் அப்பாவை பார்த்தான்.

“டேட், இவ்வளவு அழகான, அமைதியான பெண்ணை எனக்கு பீ.ஏ வாக கொடுக்காமல், வீட்டுல மேனேஜரா வச்சிருப்பது ரொம்ப தவறு. நான் என்னோடு அழைச்சிட்டு போகட்டுமா?” என்றான். அவள் கடுப்பாக உணர்ந்தாள். விழிகளால் அதட்டினாள். அவளது முறைப்பு அவனுக்கு ரசிப்பை கொடுத்ததோ.. அசையாமல் நின்று கொண்டான்.

அவள் முதல் நாளைய சந்திப்பில் அறைபட்ட கன்னத்தை பார்த்தாள். உதட்டுக்குள் முறுவலை மறைத்தாள். அவன் புரியாமல் இமைகளை ஏற்றி இறக்கினான். அவளது வலது கை விரல்கள் கன்னத்தில் படிந்து காண்பித்தது.

அவனுக்கும் புரிந்து விட்டது. சரியான ஆளாக பார்த்து தான் அண்ணியார் வர வைத்திருப்பதாக எண்ணினான். ‘உன்னை பிறகு கவனிச்சிக்கிறேன்’ என்று முணுமுணுத்து அகன்றான்.

அத்தனை நேரமாக இருவரையும் பார்த்திருந்த ஹரிச்சந்திரன், மகளின் புகைப்படத்தை புன்னகையுடன் ஏறிட்டார்.

சாப்பாட்டு அறையில் அவனது அண்ணன், அண்ணி, தங்கை அனைவருக்கும் பரிமாறினாள். அவர்களது கேள்விக்கு பதிலளித்தாள். அவனைப் பார்த்ததும் பாராதது போல் நின்றாள். அவனுக்கு பரிமாற மறுத்து வெளியேறினாள். அவனுக்கு கோபமாக வந்தது. முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு அவளை அழைத்தான். அவள் வர மறுத்தாள். தேடி வந்தாலும் கண்டு கொள்ளாமல் இருந்தாள்.

“பசிக்கிது. டிபன் எடுத்துக் கொடு” என்றான். அவள் அசையாமல் நின்றாள்.

“இப்போ கொடுக்கலை. நான் அப்பாகிட்டே சொல்லிக் கொடுப்பேன்” என்றான்.

அப்பா என்றதும் வேகமாக உள்ளே நுழைந்தாள். இட்லி, சட்னி, சாம்பார், உளுந்து வடையை தட்டில் வைத்தாள். அவன் புன்னகையை மறைத்தான். இட்லியை சட்னியில் தேய்த்து வாயில் வைத்தான். “த்தூ… இதை மனுசன் சாப்பிடுவானா? உப்பும் இல்லை, எரிப்பும் இல்லை. என்மேல உள்ள கோபத்தில், அப்பாவுக்கு கொடுக்க வேண்டியதை எடுத்துட்டு வந்திட்டியா? ஒழுங்கா அவங்க எல்லாரும் சாப்பிட்டதை கொடு!” என்றான்.

அவள் முணு முணுத்துக்கொண்டு சென்றாள்.

“ஏய்! என்ன திட்டுற? ஒழுங்கா போயி எடுத்திட்டு வா!” என்று அதட்டினான்.

அவள் அதிகமாக வைத்தாள். “ஏய் குறைச்சு வை. உப்பு இருக்கா பாரு!” என்றான்.

அவள் ‘வவ் வவ் வவ்’ என்றாள். அப்படியே இட்லியின் மீது கொட்டினாள். அவன் வாய் விட்டு சிரித்தான். இட்லியை வாயில் வைத்து விட்டு வாஸ்பேஷனை நோக்கி ஓடினான்.

“சட்னியில் உப்பை போடச் சொன்னால், உப்புல சட்னியை போட்டுட்டாளே கார்த்தி” என்று சோகமாக கூறினான். அவள் உதட்டை கடித்து சிரிப்பை மென்றாள். “சூடா ஒரு கப் காஃபியாவது எடுத்துட்டு வா. அதிலும் சீனிக்கு பதில் உப்பை போட்டுடாத…” என்றான்.

அவள் தலையசைத்து அகன்றாள். அவன் கேட்டது போலவே கொண்டு வந்து கொடுத்தாள். உதடுகள் விரிய வாங்கி ருசித்தான். அதன் சுவை நாவில் அப்படியே ஒட்டிக் கொண்டது. ‘உன்னைக் கட்டிக்கப் போகிறவன் கொடுத்து வச்சவன்’ என்று முனங்கினான். அவளது விழிகள் அவனையே பார்த்தன. கார்த்திக்கால் அதில் இருந்து மீள முடியவில்லை. அத்தனை பெரியதாக விரிந்து அவனை கவர்ந்து இழுப்பது போலிருந்தது.

தொடர்கதைக்கான கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் பகிர்ந்து கொள்ளுங்கள்…

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-9.3487/