காதல் சதுரங்க ஆட்டம் 8

அத்தியாயம் : 8


காலையில் உறக்கம் கலைந்தான் கார்த்திக். வாழ்க்கை இத்தனை சோதனையாக அமையும் என்று அவன் எதிர்பார்க்கவே இல்லை. சோம்பலாக உணர்ந்தான். மெதுவாக புரண்டு எழுந்தான். கால்கள் தன்னிச்சையாக பால்கனி பகுதிக்கு சென்றன. தினமும் பார்ப்பதை போல சில நிமிடங்கள் அலைந்தன. சலிப்புடன் அறைக்குள் நுழைந்து குளியல் அறையை நாடின. சில நிமிடங்களில் காலைக்கடன்களை முடித்தான். டீசர்ட், பேன்ட் அணிந்து கொண்டு கீழே வந்தான். பணியாள் வேலாயுதம் காஃபி தாங்கிய டிரேயுடன் வந்து நின்றான். வாங்கி உதட்டில் பொருத்தினான். சுவை மட்டமாக தெரிந்தது. கிருத்திகாவின் கையால் தயாரிக்கப்படுவது, இதை விட சுவை மிக்கதாக இருப்பதை உணர செய்தது. கிருத்திகா என்றதும் அவள் நியாபகம் விழிகளுக்குள் வந்து மோதியது. எந்த பக்கமாவது தெரிகிறாளா என்று தேடி அலைந்தது. தேடலுக்கு சொந்தக்காரியை காணாமல் பணியாளிடமே மறுபடியும் வந்து நின்றது.

வேலாயுதம் பேச்சை துவங்கினான். “இந்த மாச சம்பள பணம் எல்லோருக்கும் கொடுத்தாச்சு. மேனேஜர் அம்மாவுக்கு மட்டும் கொடுக்கணும்” என்றான்.

அவன் கேள்வியாக பார்த்தான். “ஏன்? வழக்கமா கொடுப்பது தானே?” என்றான்.

அவன் “அவங்க இங்கே இல்லை. ஊருக்குப் போயிருக்காங்க” என்றான்.

“ஓ! அதனால் என்ன? வந்த பிறகு கொடுக்கலாம்…” என்று அசட்டையாக கூறினான்.

கார்த்திக் அன்று அவளிடம் தன்னுடைய கோபம், ஆதங்கம், வேதனை, வலி அனைத்தையும் ஒட்டு மொத்தமாக கொட்டினான். அதன் பிறகு கிட்டத்தட்ட இருபது நாட்களுக்கு மேலாக அவளைப் பார்க்கவில்லை. அலுவலக பணியின் மீது முழு கவனத்தையும் செலுத்த துவங்கி விட்டான். அவன் முதுகிற்கு பின்புறம் பேசியவர்கள் அவனது கூர்மையான பார்வைகளிலும், அழுத்தமான நடையிலும், கணீரென்ற பேச்சிலும், கம்பீரத்திலும் வாயடைத்துப் போயினர்.

நிர்வாகத்தில் உள்ள நெழிவு சுளிவுகளை தெரிந்து கொண்டான். உடனே அதில் மூழ்க ஆரம்பித்து விட்டான். நிறுவனம் முன்பை விட தற்சமயம் சுறுசுறுப்பாக இயங்கியது. ஹரிச்சந்திரன் வந்த போது எப்படி இருந்ததோ, அப்படியே கார்த்திக் நடந்து கொண்டான். பலரும் ஆச்சர்யப்பட்டனர். அகல்யா, அவ்வப்போது முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு நடந்தாள்.

இத்தனை நாட்கள் ராஜாங்கத்தின் பொறுப்பு அவளிடம் இருந்தது. தற்சமயம், கார்த்திக் வந்த பின்னர், கொஞ்சம் கொஞ்சமாக தன்னை விட்டுப் போவதாக கருதினாள். ரியல் எஸ்டேட் பிஸ்னஸை அவன் வசம் ஒப்படைத்து, நிறுவனத்தை தானும் கணவனும் பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்தாள். கார்த்திக், “என் அப்பா இந்த நிறுவனத்தை கட்டிக் காப்பதற்காகவே, என்னை வெளிநாட்டு பயிற்சிக்கு அனுப்பி விட்டார். அதை திறம்பட கையாள்வது என் கடமை! இத்தனை நாளைய வரவு செலவு, கடன், சேமிப்பு, மற்ற விவரங்களை எல்லாம் சொல்லுங்க. அக்கவுண்ட்ஸ் என்னோட அறைக்கு வரணும். எனக்கொரு திறமையும், நம்பிக்கையும் உடைய பீ.ஏ வேணும்” என்றான்.

அவள் அதிர்ந்து போய் நின்றாள். கார்த்திக்கிடம் இப்படியொரு மாற்றத்தை அவள் எதிர்பார்க்கவே இல்லை. சிறு பிள்ளைத்தனம் முழுவதும் விடைபெற்று முழு ஆண் மகனாக தெரிந்தான். கோகுலை விட திறமைசாலியாக இருந்தான். எதிர்த்துப் பேசி தன்னைத் தானே தரம் தாழ்த்திக் கொள்ள அவள் விரும்பவில்லை. அமைதியாக இருந்தாள்… இருப்பது போல் காட்டிக் கொண்டாள்!

காலையில் 9:00 மணியளவில் வீட்டில் இருந்து கிளம்பினான். மாலை 6:30 க்கு பிறகே அலுவலகத்தை விட்டு வெளியேறினான். சில சமயங்களில் ஃபார்ட்டி, மீட்டிங் என்று போய் விட்டு தாமதமாக வருவான் அல்லது நேராக ஹோட்டலில் உணவை முடித்து வருவான். காரிலிருந்து இறங்கி அப்பாவின் அறைக்குப் போவான். அன்றைய அலுவலக விசயமாக பேசுவான். அவரது அபிப்ராயத்தை முழுவதுமாக தெரிந்து கொள்வான். முன்பு நடந்து கொண்ட முறை, எதிரி, நட்புகளை பற்றிய விவரங்களைக் கேட்டு அறிவான். பின்னர், தன்னுடைய அறைக்குள் நுழைவான். மறுநாள் காலை வரையில் வெளியே வரமாட்டான். அப்படியே நாட்கள் கடந்தன. அன்றாட வாழ்க்கையில் எந்தவொரு மாற்றமும் நிகழவில்லை. அதற்கான சந்தர்ப்பத்தை இருவரும் ஏற்படுத்திக் கொள்ளவும் இல்லை. அடிக்கடி அவளது அச்சம் கலந்த முகம், அணைத்துக்கொண்டு அழுதது, இறுதியில் அவளது பேச்சும்… நினைவடுக்கில் நீங்காமல் வந்து நின்று, நிம்மதியை பறிக்கும். தன்மீதே கோபம் கிளர்ந்து எழும். அதன் பிறகு வேலையே பார்க்க முடியாமல் ஆகிவிடும்.

இன்று வீட்டில் இருப்பதால் அவளைப் பற்றிய தகவல் தெரிந்தது. ‘அப்போ ஊருக்குப் போயிருக்கிறாளா? அதனாலேயே கண்ணில் படவில்லை போலும்…’ என்று எண்ணினான். அதேசமயம் அன்று அத்தனை கடுமையாக பேசியதால், மறுபடியும் வர வேண்டாம் என்ற எண்ணத்தில் போய் விட்டாளே என நினைக்காமலும் இருக்க முடியவில்லை. அமைதியாக காஃபியை அருந்தி முடித்தான்.

வேலாயுதம் தன்னையே பார்த்துக்கொண்டு நிற்பது தெரிந்தது.

“என்ன?” என்று ஏறிட்டான் கார்த்திக்.

“மேனேஜர் அம்மாவோட பாட்டிக்கு உடம்புக்கு முடியலைன்னு தகவல் வந்ததால் போயிருக்காங்க. பிறகு எந்த தகவலும் இல்லை… ஐயா, பேச ஆசைப்பட்டாங்க. அம்மாவோட ஃபோன் அணைச்சு வச்சுருப்பதா சொல்லுது. ஐயா! சரியா சாப்பிட்டாம, மருந்து எடுத்துக்காம சதா மேனேஜர் அம்மா ஞாபகத்துல இருக்காங்க. நீங்க கொஞ்சம் பேசிப் பார்த்தா, அவர் மனம் ஓரளவு சமாதானம் ஆகலாம்” என்று விசயத்தை கோடிட்டு காட்டினான். அவனது புருவம் சுருங்கியது.

உடனே எழுந்து அப்பாவை காண சென்றான். அவரது முகம் வாடிப் போய் காணப்பட்டது. சோகமாக தெரிந்தார். அவர் அருகில் அமர்ந்து வலது கரத்தைப் பற்றினான்.

அவரது விழிகள் கலங்கியது. ஏதோ சொல்ல நா துடிதுடித்தது. முடியாமல் விழிகள் தானாக மூடிக்கொண்டது. விழியோரம் நீர் கசிந்தது. அவனுக்குப் புரிந்து விட்டது. எதோ சொல்ல நினைத்து முடியாமல் கலங்குகிறார்.

“அப்பா”

அவரது கண்கள் திறந்தன. ‘சொல்’ என்பது போல் பார்த்தன. அவன் புன்னகைத்தான்.

“என்கிட்டே ஏதாவது பேசணும்னு எதிர்பார்க்கறீங்களா?”

அவரது தலை அசைந்தது.

“சொல்லுங்க. அலுவலக விசயமா அல்லது வீடா…” என்று நிறுத்தினான்.

மகனுடைய முகத்தைப் பார்த்தவர், எப்படி ஆரம்பிப்பதென்று தெரியாமல் திணறினார். முன்பிருந்த இளக்கம் அவனை விட்டு வெகுதூரம் போய் விட்டது என்பதை, அவர் நன்கு அறிவார். இப்போது பேசி மறுபடியும் அவனை முரடனாக்க விரும்பாமல் அமைதியாக இருந்தார்.

அவரது தயக்கம் புரிந்தது. அவனே ஆரம்பித்தான்.

“கிருத்திகாவை இதுக்கு முன்னாடியே உங்களுக்குத் தெரியுமா? அவளை ஏற்கனவே பார்த்திருக்கறீங்களா?” என்று கேட்டான்.

அவரது நா அசைந்து எதையோ சொல்ல முற்பட்டது. அதேநேரம் அவளது பேச்சு நியாபகத்தில் அமைதியாக இருந்தது.

“அவள் ஊர் எதுப்பா? இங்கே எப்படி வேலைக்கு வந்தா?”

அவர் பதில் கூறாமல் சுவரில் இருந்த மகள் காயத்ரியை பார்த்தார். விழிகள் உடைந்தன. எதையோ சொல்ல நினைத்து முடியாமல் தடுமாறினார். ‘அம்மா, உனக்கு கொடுத்த வாக்கை என்னால காப்பாத்த முடியுமா தெரியலயே? உங்க அண்ணனும், அண்ணியும் ரெண்டு துருவங்களா பிரிஞ்சு நிக்கிறாங்கடா… நீயிருந்தா இப்படியெல்லாம் நடக்க விடுவியா? இந்த அப்பாவை விட்டுப் போக உன்னாலே எப்படிடா முடிஞ்சது? அந்த ஆண்டவன் என் உயிரை எடுத்துட்டு, உன் உயிரை கொடுத்திருக்க கூடாதா?’ என்று நினைத்து கண்ணீர் வடித்தார்.

அவரது நினைவில் மகளது அன்றைய பேச்சும் … அதற்குப் பிறகான நிகழ்வுகளும், மறக்க முடியாத அளவிற்கு ஆகி விட்டன. மகனிடம் சொல்லி விடலாம் என்றால், முன்பு காயத்ரி தடை போட்டாள். தற்சமயம் கிருத்திகா தடையாக நிற்கிறாள். அவளது வாக்கை மீறவும் முடியவில்லை. நடப்பது நடக்கட்டும் என்று வேடிக்கை பார்க்கவும் முடியவில்லை. மகன் தானாகவே மனம் மாறி அவளைப் புரிந்து கொண்டு, வாழ்க்கையை தொடங்குகிறானா பார்க்கலாம் என்று நினைத்தார். தன்னைத் தானே சமாதானப்படுத்திக் கொள்ள முயன்றார்.

அவரது முகத்தில் வந்து போன உணர்வுகளை கவனித்தான் கார்த்திக். தனக்குத் தெரியாமல் ஏதோ நடந்திருக்கிறது என்பதை ஊகித்துக் கொண்டான். யோசனையுடன் எழுந்து வெளியே வந்தான்.

மூடியிருந்த அவளது அலுவலக அறைக்கதவை பார்த்தான். அவள் யார் என்பதை தெரிந்து கொள்ள முடிவு செய்தான். அதை நோக்கிச் சென்று திறந்தான். விழிகள் நாலா புறமும் அலைந்தன. மேஜையின் மீதிருந்த கணிப்பொறி அருகில் சென்றான். அவள் அமர்ந்து பணிபுரியும் நாற்காலியில் அமர்ந்தான். விரல்கள் தானாக கணிப்பொறியை இயக்கியது. வீட்டில் பணிபுரிபவர்கள் பற்றிய விவரங்கள், வரிசையாக தொகுத்து வைக்கப்பட்டிருந்தது.

ஒவ்வொருவரின் புகைப்படத்துடன் முகவரி, கைப்பேசி எண், அவர்களைப் பற்றிய பயோடேட்டா, வழங்கப்படும் ஊதியம் முதலியவை இணைக்கப்பட்டிருந்தது. அடுத்து வீட்டு செலவு, வாகனம், விடுமுறை… போன்ற பல விவரங்களை பார்த்தவுடன் புரிந்து கொள்ளும் வகையில் அழகுற சேகரித்து வைத்து இருந்தாள்.

கிருத்திகாவை பற்றிய தகவலை பார்த்தான். விழிகள் விரிந்தன. ஆச்சர்யமா? அதிர்ச்சியா? தெரியவில்லை. அவ்வளவு தூரம் மாறிப்போயிருந்தது அவனது மனநிலை! அவள் தங்கியிருக்கும் வீட்டுக்கான வாடகை, மின்சாரம், உணவு, அனைத்திற்கும் பணம் செலுத்தியிருக்கிறாள். அவளது படிப்பிற்கும் வேலைக்கும் சம்மந்தம் இருப்பதாக தெரியவில்லை. பிறகு எதற்காக இங்கு வர வேண்டும் என்ற சிந்தனையில் மூழ்கினான்.

அப்பாவிற்கும் அவளைப் பிடித்திருக்கிறது. தங்கையும் பாசமாக நடந்து கொள்கிறாள். தான் அத்தனை தூரம் கடுமையை காட்டியும், எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்து கொண்டாள். வீடு, அலுவலக வேலைகளையும் திறம்பட கையாள்கிறாள். அப்படி இருக்க, எதனால் அன்று அப்படி நடந்து கொண்டாள் என்ற உண்மை நிலவரம் தெரியாமல் தடுமாறினான்.

கிருத்திகாவின் புகைப்படத்தை பார்த்ததும் நிறுத்தினான். சிறிய அளவில் இருப்பதை, பெரியதாக மாற்றினான். அவள் கணினி முழுவதும் நிரம்பி நின்றாள். அவளது புன்னகை கலந்த முகபாவம் மனதை பிசைந்தது. குற்றமற்ற வெண்தாமரை மலர் போல் பொலிவுடன் தெரிந்தாள். இவளைப் போய் தவறு செய்தவள் என்று சொன்னால், யாருமே ஏற்க மாட்டார்கள். திருமணத்திற்கு முன்பு வரையிலாவது புன்னகை முகம் காட்டி இருப்பான். அதன் பிறகோ, கடுமையான வார்த்தைகளையும், கோபத்தையும் மட்டுமே பரிசளித்து விட்டான். இன்று ஏனோ அவளைப் பார்க்கையில் அப்படியொரு தவறை செய்திருப்பாளா? அல்லது வேறு யாராவது செய்ய வைத்திருப்பார்களா? அதனால் பதில் கூற முடியாமல் திணறுகிறாளோ என்றெல்லாம் நினைக்கத் தோன்றுகிறது.

தேடலும் தேடிக் களைதலும் அதற்குப் பிறகு ஓய்தலும் வாழ்க்கை. அப்படி தேடப்படுகின்ற வாழ்க்கையின் அடுத்த கட்டம் என்று நினைக்கையில் மனம் வெறுமையாக உணர்கிறது. அன்றைய கணவன் மனைவி பிரச்சனைக்கு பிறகு, அவன் சாம்பவியை பற்றி நினைப்பது கிடையாது. சும்மா இருக்கும் மனம் சாத்தானின் வசம் என்பதை உணர்ந்தான். முழு மனதுடன் வேலையில் கவனத்தை பதிக்க துவங்கி விட்டான். காலை முதல் இரவு வரையில் அயராத உழைப்பு. அத்துடன் சேர்ந்து போய் கட்டிலில் சரிந்தால் மறுநாள் விடியலில் தான் எழுகிறான். மறுபடியும் ஓட்டம் ஆரம்பமாகி விடுகிறது. இப்படியே எத்தனை நாட்கள் ஓடிக்கொண்டிருக்க முடியும் என்று அவனுக்கும் தெரியவில்லை. ஐந்து நிமிடம் சும்மா இருந்தாலும் புத்தி பேதலித்து விடுகிறது.

இன்று அவளது புகைப்படத்தை பார்க்கையில் மனம் தவிப்படைகிறது. அவளது முந்தைய பழக்கவழக்கமும், தற்சமயத்து நடவடிக்கையும் முரண்பாடாக தெரிகிறது. விழிகளை மூடி நாற்காலியில் சாய்ந்தான் கார்த்திக். நினைவுகள், அவளை முதன் முதலாக சந்திந்த நாளை நோக்கி ஓடியது …

காயத்ரியின் கார் விபத்தில் சிக்கி வெடித்து சிதறியது. விசயத்தைக் கேள்விப்பட்ட ஹரிச்சந்திரன் மாரடைப்பில் விழுந்து விட்டார். அதன் பிறகு மருத்துவமனை, வீடு என்று நாட்கள் பறந்தன. ஐந்து மாதங்களுக்குப் பிறகு, ஞாயிறன்று காலையில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான் கார்த்திக். அப்போது அவனது உறக்கத்தை கெடுப்பது போல் கைப்பேசி ஒலித்தது. சலிப்புடன் எடுத்துப் பார்த்தான். சாம்பவி! சில நிமிடங்கள் பேசிவிட்டு குளியலறைக்குள் புகுந்தான். சற்று நேரத்தில் தயாராகி கீழே வந்தான். காலை உணவை முடித்துக்கொண்டு காரை நோக்கி நடந்தான்.

அப்போது ஹெஸ்ட் ஹவுஸ் திறந்திருப்பது தெரிந்தது. அதனூடு அகர்பத்தி வாசனையும், மெல்லிய இசையும் காற்றில் கலந்து வந்தது. தனக்குத் தெரியாமல் யார் வந்திருக்கிறார்கள்? என்கிற எண்ணத்தில், அதை நோக்கி நடந்தான்.

அங்கு, கோல்டன் நிறப் புடவையில், கையில்லா ரவிக்கை அணிந்து, நாற்காலியின் மீதிலேறி சுவரில் புகைப்படத்தை மாட்டிக்கொண்டு நின்றாள் கிருத்திகா. உச்சி முதல் பாதம் வரையில் ஊடுருவியவன் விழிகள் வியப்புடன் நோக்கியது. ‘யாரிவள்? அதுவும் நம் வீட்டில்…’ என்று நினைத்தான்.

கையிரண்டையும் மேலே தூக்கி கொண்டு, கால் விரல்களால் எம்பி நின்று புகைப்படத்தை மாட்டிக் கொண்டிருந்தாள். அவளது பளீரென்று தெரிந்த முதுகு, கைப்பகுதிகள் விழிகளை கூச செய்தன. அவளது கைகள் மேலும் கீழுமாக அசைகையில், இடையில் கட்டிய முந்தானை கழன்று விழுந்தது. திரை மறைவில் தெரிந்த சிற்றிடை, இப்போது பளபளப்புடன் பூரணமாக ஜொலித்தது. அதில் இருந்து அவனால் விழிகளை மீட்க முடியவில்லை. ஏற்கனவே எங்கேயோ பார்த்த நியாபகம் அலை மோதியது. அவள் முகத்தை பார்த்து விடும் ஆவலில் நெருங்கினான்.

மின்சார விசிறியின் உபயத்தால் முந்தானை காற்றில் பறந்து நடனமாடியது. பொன்னிற மெல்லிடையுடன் கூடிய வயிற்றுப் பாகமும் அவனது விழிகளில் தரிசனமாக விழுந்தது. அத்தனை நேரத்து ரசனை பார்வை மாறியது. உணர்ச்சிகளும் ஜில்லிட்டது! விரல்கள் யாரென்று அறியா பெண்ணவளின் சிற்றிடையை நோக்கி நகர்ந்தது. கையில் பட்ட மென்மையில் சித்தம் தடுமாறியது. மெல்லிய மயக்கத்தின் பிடியில் ஆழ்ந்தவனைப் போல் அழுத்தத்தை அதிகரித்தான் கார்த்திக்.

மேலே புகைப்படத்தை போட்டு முடித்தாள் கிருத்திகா. இடை தொட்ட கோபத்தில் யாரென்று அறியாமல் பளாரென்று ஒன்று விட்டாள். அதே வேகத்தில் நாற்காலி தள்ளாடியது. கால்கள் தடுமாற கீழே விழுந்தவளை, தன்னிரு கைகளில் தாங்கினான் கார்த்திக்.

அதிர்ச்சியில் ஆழ்ந்திருந்த இருவரது விழிகளும் ஒன்றையொன்று ஆழ்ந்து கவ்வியது. விலக முடியாமல் அப்படியே நின்றார்கள். மறுபடியும் அவனது வன்கரம் பெண்ணவளின் மெல்லிடையில் ஊர்ந்தது. தட்டி விட்டாள் கிருத்திகா. கடுமையாக முறைத்தாள். அவனும் சுய உணர்வுக்கு வந்தான்.

தன்னுடைய தவறை நினைத்து நெற்றியில் அறைந்து கொண்டான். ‘எவ்வளவு பெரிய தவறை செய்து விட்டேன். மனதில் ஒருத்தியை நினைத்துக்கொண்டு, மற்றொரு பெண்ணிடம் இப்படி நடந்து கொள்ள என்னால் எப்படி முடிந்தது? அந்த அளவிற்கா புத்தி பேதலித்து போயிற்று? கடவுளே என்னை மன்னிச்சிடு!’ என்று மானசீகமாக மன்னிப்பு கேட்டான்.

அவளிடமும் மன்னிப்பு கோரும் விதமாக திரும்பினான். அவள் வாசலை நோக்கி கை காட்டினாள். அவன் முகம் மாறியது.

“வெளியே போகச் சொன்னா தெரியாது? கெட் அவுட்” என்றாள் கிருத்திகா. அவனது விழிகள் இடுங்கியது.

தொடர்கதைக்கான கருத்துகளை கீழே உள்ள லிங்கில் பதிவு செய்யுங்கள்👇👇👇👇https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-8.3462/