காதல் சதுரங்க ஆட்டம் 7

அத்தியாயம் : 7

ண்மையாக விரும்பி காதலித்தவள் தன்னை தவறாக எண்ணுவதால் நிம்மதியற்று தவித்தான் கார்த்திக். அவளிடம் அதை மெய்ப்பிக்க பல வழிகளில் முயன்றான். இரண்டு முறை நேரில் பார்த்தான். அன்றைய காதலை மறக்காதவனாக, ஓடிச்சென்று நலம் விசாரித்தான். உண்மை நிலையை எடுத்துக் கூறினான். அவள் பிடிவாதமாக கேட்க மறுத்தது மட்டும் அல்லாமல் “ஆஸ்திக்கு என்னையும் ஆசைக்கு அவளையும் வச்சுக்க பார்க்கறியா?” என்று கேட்டதும், நரம்புகள் புடைக்க சினத்துடன் இருந்தான்.

அதேநேரம் கிருத்திகா, சாலையில் அசோக்குடன் புன்னகையுடன் பேசிக்கொண்டு செல்வதைப் பார்த்தான். ‘எல்லாவற்றிற்கும் இவள் தானே காரணம். இவள் மட்டும் அன்னைக்கு என்மேல் மயக்கமா வந்தது போல் விழாம இருந்திருந்தா, இன்னைக்கு இப்படியொரு அவப்பெயர் ஏற்படுமா?’ என்ற கோபத்தில் ஆத்திரம் கண்ணை மறைத்தது. காரை எடுத்துக்கொண்டு வீட்டை நோக்கி புறப்பட்டான்.

ஆட்டோவில் இருந்து இறங்கினாள் கிருத்திகா. நேராக சென்று தன்னுடைய அறைக்கதவை திறந்தாள். உள்ளே நுழைந்து தாளிட்டாள். அப்போது வேகமாக கதவு தட்டப்பட்டது. இதுவரையில் அப்படி யாரும் நடந்திராததால், யோசனையுடன் கதவைத் திறந்தாள். அங்கு விழிகள் இரண்டும் சிவக்க, ரெளத்திரம் தாண்டவமாட நின்றான் கார்த்திக்.

அவளால் நம்ப முடியவில்லை. கிருத்திகா இந்த வீட்டிற்கு வந்து இரண்டு மாதங்கள் கடந்து விட்டன. இதுவரையில் அவன் இப்படியொரு தோற்றத்தில் வந்தது இல்லை. இன்று இப்படி உக்கிரமாக நிற்பதைப் பார்த்ததும், தன்னையறியாமல் பின் வாங்கினாள்.

உள்ளே நுழைந்து கதவைத் தாளிட்டான் கார்த்திக். அவளை நோக்கி அழுத்தமான காலடிகளை எடுத்து வைத்தான். அச்சத்தில் எச்சிலை விழுங்கினாள் கிருத்திகா. மனதிற்கு ஏனோ தவறாகப்பட்டது. ‘எதனால் இப்படி பார்க்கிறார்? ஏன் இத்தனை கோபம்? யாராவது ஏதாவது சொல்லிட்டாங்களா இல்லை… ஒருவேளை நான் அவரைப் பார்த்தது போல், அவரும் அசோக்கிடம் பேசிக்கொண்டிருந்ததை பார்த்து விட்டாரோ?’ என்று நினைத்து செய்வதறியாமல் திகைத்தாள்.

அவன் முகம் பார்ப்பதற்கு அத்தனை உக்கிரமாக காட்சியளித்தது. பின்னோக்கி நடந்து படுக்கை அறைக்குள் நுழைந்து கதவடைக்க முயன்றாள். அவன் தள்ளிக்கொண்டு உள்ளே வந்து தாளிட்டான். மேனியெங்கும் விதிர்விதிர்த்து நடுங்கியது. கைகால்கள் உதறலெடுக்கத் துவங்கியது; தொண்டைக்குழி வறண்டு போனது; நாவால் உதட்டை ஈரமாக்கி கொண்டு நின்றாள் கிருத்திகா.

அவளையே பார்த்தான். அவளது அச்சம் கலந்த முகம், மேலும் சினத்தை அதிகரித்தது. ‘அப்படியென்ன நான் கொடூரமானவன் மாதிரியா இருக்கேன்? செய்வதை எல்லாம் செஞ்சுட்டு, ஒண்ணுமே தெரியாதவ மாதிரி நிற்கிறா…’ என்று கடுகடுத்தான்.

“நீ யார்? எதுக்காக இங்கே வந்த? உனக்கும் எனக்கும் என்ன சம்மந்தம்? எதனால் இந்த வீட்டுக்கு வேலைக்காரியா வந்து, என் வீட்டுக்காரியா மாறின? உன்கிட்ட என்மேல் வீண்பழியை போட்டு கல்யாணத்தை நிறுத்தச் சொன்னது யார்? ஏன், என் அப்பா மேல இவ்வளவு பாசத்தைக் காட்டுற? நாளைக்கொரு நாள் நீ இந்த வீட்டை விட்டுப் போகும் போது, அவரோட மனநிலை என்ன ஆகும்னு கொஞ்சமாவது யோசிச்சுப் பார்த்தியா? யார் மேலுள்ள கோபத்தில் இப்படியெல்லாம் நடந்துக்கற? சொல்லுடி… எதுக்கு இப்படி ஊமை கோட்டான் மாதிரி, வாய் திறக்காமலேயே இருக்கே??” என்று ஆவேசம் தாளாமல் கேட்டான்.

அவள் விழிகள் கலங்கியது. அவனது கேள்விகள் அனைத்தும் நெருப்பாக தகித்தது. வாய் திறக்க முடியாமல் உதட்டை கடித்து, கண்ணீரை அடக்கினாள் கிருத்திகா.

“சொல்ல மாட்டே, அப்படித்தானே?”

அவள் கண் கலங்க அவனைப் பார்த்தாள்.

“நீயொரு அநாதை! யாருமில்லாதவள் என்பதால் என் அப்பா, அத்தனை பாசத்தைக் கொட்டி பார்த்துக்கலாம். ஆனால், நான் உன்னை ஒருபோதும் ஏத்துக்க மாட்டேன். ஏன்னா, என் மனசில் நீயில்லை. அது தெரிஞ்சும் என்னைக் கல்யாணம் பண்ணிக்க உன்னாலே எப்படிடி முடிஞ்சுது? ஆத்மார்த்தமான வாழ்க்கையை விட, உன் பணத்தாசை பெருசாக போயிடுச்சா?” என்று வெறுப்பாக கேட்டான்.

அவள் ‘இல்லை’ என்று தலையசைத்தாள்.

“இல்லையா … பின்னே?”

அவளது அமைதியும், கலங்கிய விழிகளும், தவிப்புடன் துடித்துக் கொண்டிருந்த செவ்விதழும், அவனது கோபத்தை மேலும் அதிகப்படுத்தியது.

“உன்னாலே என்னோட நிம்மதி போச்சு! சந்தோசம் போச்சு! வெளியே தலைநிமிர்ந்து நடக்க முடியலை. ‘இவன் மோசமானவன்’ என்கிற பார்வைகளும், ‘காதலித்தவளை கட்டிக்கப் போகும் நேரத்திலும் கள்ளக் காதலியுடன் இருந்தவன்’ என்கிற பழிசொல்லும், ‘காதலித்தவளே நம்பாம விட்டுட்டுப் போயிட்டா. பிறகு இவனை யார் நம்புவா. வெளிநாட்டுக்கு பயிற்சி எடுக்கப் போனது இதுக்குத்தான் போல… நல்லவேளை அந்த பொண்ணு தப்பிட்டா. இல்லை, ஆயுசுக்கும் இவனோடு கிடந்து அல்லல்பட நேரிடும்னு’ என் முதுகிற்கு பின்னால் பேசுறாங்கடி. நான் நிம்மதியா சாப்பிட்டு எத்தனை நாளாகுது தெரியுமா? தூக்கத்திலும் மனமெல்லாம் ரணமா வலிக்குது! ஏண்டி அப்படி பண்ணினே? எதனால் அப்படியொரு பழியை தூக்கிப் போட்டு என்னைத் தலைகுனிய வச்ச? இன்னும் என்ன இருக்கு என்கிட்ட இருந்து பெறுவதற்கு? பேசாம என்னைக் கொன்னுப் போட்டுடு. நான் ஒரேடியா போயிடுறேன். நித்தம் நித்தம் இந்த நரக வேதனையை, என்னாலே அனுபவிக்க முடியலை!” என்று கோபமாக ஆரம்பித்து ஆதங்கத்துடன் சொல்லி முடித்தான்.

கார்த்திக் பேச்சைக்கேட்டு மறுப்பாக தலையசைத்தாள். ஓடி வந்து அவன் உதட்டை விரல் கொண்டு மூடினாள். “வேண்டாம், கார்த்திக்! அப்படியெல்லாம் பேசாதீங்க. நீங்க யாருன்னு உங்களுக்குத் தெரியலயா? எவ்வளவு பெரிய வீட்டுல பிறந்தவர்! மாமா உருவாக்கிய சாம்ராஜ்யத்தையே கட்டியாள வேண்டியவர். வெறும் உணர்ச்சிகளுக்கு அடிமையாகாதீங்க” என்று விழிகளில் வழிந்த நீருடன் கூறினாள்.

அவன் “நான் உயிரோடு இருந்தா தானே ஆளுவதற்கு? அதற்கு முன் உன்னையும் கொன்னுட்டு, நானும் போயிடுவேன்” என்றான். அப்படியே அவளது கழுத்தைப் பற்றி விட்டான்.

“நானும் அமைதியா இருக்கணும்னு நினைக்கிறேன். முடிய மாட்டேங்குது… நான் உயிரா விரும்பியவளே என்னைப் பார்த்து “ஆஸ்திக்கு நானும், ஆசைக்கு அவளுமா?”ன்னு கேட்கற இழிநிலைக்கு ஆளாக்கிட்டியே! இதுக்கு மேலயும் எனக்கு என்னடி இருக்கு? நான் என்ன தவறு செஞ்சேன்னு ரெண்டு பேரும் சேர்ந்து, இப்படி என்னை நிம்மதியில்லாம ஆக்குறீங்க?” என்று கேட்டான். அவனது குரல் கரகரத்தது. விழிகளில் நீர் படலமிட்டது.

அவளது விழிகள் சிவந்து கண்ணீராக வடிந்தது. கைகள் அவனது கைகளைப் பற்றியது. விழிகள் யாசிப்புடன் அவனையே பார்த்தன. அப்போது ‘டமால்’ என்று பெரிய வெடி சப்தம் கேட்டது. ஏதோவொரு மாயையின் பிடியில் இருந்து மீண்டான் கார்த்திக். வேகமாக கைகளை விலக்கினான். அடுத்த நிமிடம் அவன் மீதே சாய்ந்தாள் கிருத்திகா. விழிகள் உடைத்துக்கொண்டு பாய்ந்தன. பழைய நினைவுகளின் தாக்கம் அவளைப் பித்துக் கொள்ள செய்தன.

“என்னால முடியலை கார்த்திக்!” என்றாள். அவனை கட்டிக்கொண்டு சில நிமிடங்கள் கண்ணீர் வடித்தாள். அவனால் தள்ளி விட முடியவில்லை. அசையாமல் நின்றான்.

சில நிமிடங்களுக்குப் பிறகு அவனை விட்டு விலகினாள். மேஜையின் மீதிருந்த புகைப்படத்தையே பார்த்தாள். ஒரு முடிவிற்கு வந்தவள் போல் திரும்பினாள். அவனுடைய வாழ்க்கை தன்னால் அழிந்து விடக்கூடாது என்று திடமாக எண்ணினாள். தான் நினைத்து வந்த காரியத்தை விரைவாக நிறைவேற்ற வேண்டும். அதன் பிறகு … என்று நினைக்கையில் மனம் தவியாக தவித்தது.

தான் கடைசி வரையில் அநாதை மட்டுமே! தனக்கென்று யாருமில்லை என்ற எண்ணத்தில், புடவை முந்தானையில் முகத்தை துடைத்தாள்.

“சாரி சார், என்னை மன்னிச்சிடுங்க. இன்னும் கொஞ்ச நாள் மட்டும், இதே வீட்டுல வேலை பார்க்க அனுமதியுங்க. அதுக்கு அப்புறம் உங்களை விட்டு நிரந்தரமா போயிடறேன். எந்த சூழ்நிலையிலும் உங்க வாழ்க்கையில் மறுபடியும் குறுக்கிட மாட்டேன். அதுபோலவே, உங்களைத் தவறா பேசிய அத்தனை பேர் முன்னிலையில், நடந்த விவரத்தை நானே சொல்லிடறேன்” என்று வாக்கு கொடுத்தாள்.

உயிர் இருக்கும் வரையில் நினைவுகள் அழிவதில்லை! அந்த நினைவுகளில் நல்லவை நிம்மதி, சந்தோஷம், மகிழ்ச்சியை நிறைவாக அளிக்கிறது. கெட்டவை நிம்மதியற்று அல்லல் பட நேரிடுகிறது.

தான் நினைத்து வந்த காரியத்தை, நிறைவேற்ற மட்டுமே எண்ணம் பூண்டாள் கிருத்திகா. அதனால் ஆரம்பத்தில், கார்த்திக் முகத்தை நிமிர்ந்து பார்ப்பதையும் தவிர்த்தாள். தன்னிடம் மட்டும் பேசாமல் மற்ற எல்லாரிடமும் புன்னகையுடன் நடந்து கொள்ளும் அவளது நடவடிக்கை, அவனுக்கு விசித்திரமாக இருந்தது. வேண்டும் என்றே சீண்டிப் பேசினான். அவள் பதில்கூறாமல் சென்றாள். எதையாவது எடுத்து வரச்சொல்லி கடுப்படித்தான். அவள் முறைத்துக்கொண்டே சென்று விடுவாள். ஹரிச்சந்திரனுக்கு உடல்நிலை சரியாகி, ஒருசில விசயங்களை முடித்த உடனே, சென்று விட வேண்டும் என்பதில் அவள் உறுதியாக இருந்தாள். இதில் விதி எதிர்பாராத விதமாக இருவரையும் இணைத்து விட்டது.

ஒரு ஆண்மகன் தன்னுடைய மனதில் உள்ளவற்றை வெளிப்படுத்த முடியாமல் தயங்குகிறான். அதே தாள முடியாத வேதனையின் போது கண் கலங்குகிறான். விம்மி அழுகிறான். வாய் விட்டு அரற்றுகிறான். கார்த்திக் எவ்வளவு பெரிய ஆண்மகன்! காதலித்தவளின் பிரிவு தாளாமல் ஏங்குகிறான். கண் கலங்குகிறான்… இதைப் பார்க்கவா நான் இங்கு வந்தேன்? என்று எண்ணி விடிய விடிய உறக்கத்தை தொலைத்தாள்.

அதற்குப் பிறகான நாட்கள் தனக்கென்று சில கோட்பாடுகளை வரையறுத்துக் கொண்டாள் கிருத்திகா. அலுவலக வேலையில் கவனத்தைப் பதித்தாள். ஹரிச்சந்திரனிடம் அன்புடன் நடந்து கொண்டாள். கார்த்திக் வீட்டில் இருக்கும் நேரம், அந்த பக்கம் போவதை அடியோடு தவிர்த்தாள். அவன் வாகனம் மதில் சுவரை தாண்டி வெளியேறிய பிறகே, வீட்டு கதவைத் திறந்தாள். அவன் இருக்கும் நாட்களில் வீட்டுக்குப் போக மறுத்தாள். அலுவலக வேலையை வேகமாக முடித்தாள். அசோக்கின் பதிலுடன், நல்ல திறமையான மருத்துவரிடம் ஹரிச்சந்திரனை காண்பிக்க முடிவு செய்தாள். வீட்டார் எதிர்த்தால் என்ன செய்வது? என்ற யோசனையில் மூழ்கினாள்.

மகன் மற்றும் மருமகளின் விலகல் பெற்றவரை வருத்தியது. அவர்களை எப்படி ஒன்று சேர்ப்பது என்று தெரியவில்லை. பழைய நினைவுகள் ஓயாமல் அலைக்களித்தன. உண்ண மனமற்று விரக்தியுடன் இருந்தார் ஹரிச்சந்திரன்.

இந்நிலையில் ஊரிலிருந்து தகவல் வந்தது. பாட்டி சீரியஸாக இருப்பதாக… அலறி அடித்துக்கொண்டு எழுந்தாள் கிருத்திகா.

காலையிலே கார்த்திக் மற்றும் கோகுல் அலுவலகத்துக்குச் சென்று விட்டனர். அகல்யா தயாராகிக் கொண்டிருந்தாள். கிருத்திகா அவளிடம் விடுமுறை கேட்கும் எண்ணத்தில் காத்து நின்றாள். சமையல் அறையில் இருந்து சூடான நீரை எடுத்துக்கொண்டு சமையல்காரி வந்தாள். அதேநேரம் அகல்யாவும் மாடியில் இருந்து வேகமாக வந்து கொண்டிருந்தாள். இருவரும் மோதியதில் மொத்த நீரும் கிருத்திகா மீது சிதறியது. அப்போது அவளைப் பற்றியிழுத்தன இரண்டு கரங்கள் …

அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக இருந்தது. தன்னைப் பற்றிய கரங்களைப் பார்த்த உடனே அடையாளம் கண்டு கொண்டாள். வீட்டு பணியாள் வேலாயுதம்! ‘அப்படி என்றால் ஒவ்வொரு முறையும் என்னைக் காத்தது இவர் தானா? அன்று மயக்கத்தில் இருந்த போது நெற்றியில் மருந்திட்டது. மாடிப்படிகளில் விழ போகையில் தாங்கி காப்பாற்றியது. இரவு பொழுது சமையல் அறையில் ஓசையை எழுப்பி, விளக்கை எரிய செய்தது. கைப்பேசியை கொண்டு வந்து உதவியது…. கார்த்திக்கிடம் இருந்து தன்னைக் காத்தது! ‘யார் இவர் எதனால் இப்படியெல்லாம் நடந்துக்கறார்? இவரை எனக்கு உதவிக்கு அனுப்பியது யார்? அகல்யாவா? மாமாவா? கோகுலா?’ என்று தெரியாமல் தடுமாறினாள்.

அவன் முகத்தைப் பார்த்ததும் புரிந்து விட்டது. தான் எதற்காக இங்கு வந்திருக்கிறோம் எனும் விசயம், அவனுக்கும் தெரிந்திருக்கிறது. அவன் மூலம் மேலும் சில காரியங்களை நிறைவேற்ற வேண்டும் என்று எண்ணினாள் கிருத்திகா.

அகல்யா நேரமாகி விட்ட கோபத்தில் இருந்தாள். திடீரென்ற அதிர்ச்சியில் வேலைக்காரியை சபித்தாள். கிருத்திகாவை முறைத்தாள். அவள் விசயத்தை தெரிவித்து விடுமுறை கேட்டாள். தலையசைத்தாள் அகல்யா… காரில் ஏற வேகமாக சென்றாள். அப்படியே நின்று திரும்பி பார்த்தாள். “பணம்?” ஒற்றை வார்தையை கேள்வியாக்கினாள்.

அவள் மறுப்பாக தலையசைத்தாள். மாமனாரிடம் விசயத்தை தெரியப்படுத்தினாள். உடனே கிளம்பி விட்டாள். தனக்கென்று இருக்கும் ஒரே ஆதரவு பாட்டி மட்டுமே! இத்தனை நாள் நன்றாக இருந்தவருக்கு திடீரென்று என்ன ஆயிற்று? அவருக்கு ஏதாவது ஆகிவிட்டால், அதன் பிறகு தனக்கென்று யார் இருக்கிறார்கள் என்ற எண்ணத்தில் கண்ணீர் வடித்தாள்.

பிறந்த சில நாட்களில் பெற்றோரை இழந்தாள். பாட்டியின் ஆதரவில், அண்ணனின் அக்கறையான கவனிப்பில் வளர்ந்து வந்தாள். தோழியை காப்பாற்ற முயன்று, தன்னுயிரையும் பலி கொடுத்து விட்டான் அண்ணன்! கட்டிய கணவன் ‘உன்னால் எனக்கு நிம்மதி, சந்தோசம் எல்லாமே போயிற்று’ என்று சொல்லி விட்டான். பாட்டி… அவரும் இப்போது என்று நினைக்கையில் அவளால் தாள முடியவில்லை.

விரைவாக மைலாடிக்கு வந்து சேர்ந்தாள். பாட்டியின் முகத்தைப் பார்த்தாள். அதிர்ச்சியில் அப்படியே நின்று விட்டாள். அவரும் அவளை விட்டுப் போயிருந்தார்… “பாட்டியம்மா!!” என்று கதறிக்கொண்டே மேலே சென்று விழுந்தாள். அவளது அழுகையும், கதறலும் சுற்றி நின்றவர்களையும் கலங்கச் செய்தது. அப்போது அசோக் வேகமாக வந்தான். அண்ணன் பிரசாத்தின் உயிர் நண்பன்.

அவளைத் தட்டி எழுப்பினான். அவளது விழிகளும் மனதும் எதையும் உணரும் நிலையில் இல்லை. அவனது காலை கட்டிக்கொண்டு கதறினாள். “எல்லாரும் என்னை விட்டுப் போயிட்டாங்க அசோக்! அப்படி நான் என்ன பாவம் செஞ்சுட்டேன்னு, இவ்வளவு பெரிய தண்டனையை கொடுத்தாங்க? எதுக்காக என்னை மட்டும் இப்படி அநாதையா தவிக்க விட்டுப் போனாங்க? என்னையும் அவங்களோடு அழைச்சிட்டுப் போயிருக்கலாமே? நான் ஒரு பாவி அசோக்! அதான் எதுவுமே எனக்கு நிலைக்கல… பெற்றோர், உயிராக பார்த்துக்கிட்ட அண்ணன், உயிரைக் கொடுத்து வளர்த்த என் பாட்டி, உயிருக்குயிரான என் கணவர்…” என்று சொல்லிக்கொண்டே வாய்விட்டு அழுதாள்.

அவனாலும் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை. அவளைத் தூக்கி தோள் சாய்த்தான். ஆதரவாக தட்டிக் கொடுத்தான். “கீர்த்தி, நீ அநாதை இல்லை. உனக்கு நான் இருக்கேன். உன்னை விட்டு அவங்க எல்லாரும் போனாலும், நான் போக மாட்டேன். அழாதே!” என்றான். அவளால் அடக்க முடியாமல் குமுறினாள்.

தொடர்கதைக்கான கருத்துக்களை கீழே👇👇👇 உள்ள லிங்கில் பதிவு செய்யுங்கள்…

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-7.3435/