காதல் சதுரங்க ஆட்டம் 6

அத்தியாயம் : 6

சாம்பவியின் விலகல் தாளாமல் மனவேதனையுடன் வீட்டிற்கு வந்தான் கார்த்திக். வீட்டு வாயிலின் முன்புறம் காரை நிறுத்தினான். அப்போது, கைப்பேசியில் வந்த அழைப்பை ஏற்று சோபாவில் அமர்ந்து பதிலளிக்க துவங்கினான்…

அங்கு ஒருவன் இருக்கிறான் என்பதை கவனிக்காமல் பூனை பாதங்களை எடுத்து வைத்து முன்னேறினாள் கிருத்திகா… தான் வந்த காரியம் நிறைவேறியதும் வேகமாக வெளியேற முயன்றாள். அப்போது, திடீரென்று எதிரில் வந்த கார்த்திக் மீதே மோதிக்கொண்டாள்.

ஏற்கனவே அவள் மீதான கோபம் மற்றும் விரக்தியில் இருந்தான் கார்த்திக். மெல்லிய வெளிச்சத்தில், யாருமற்ற நேரத்தில் எதிர்பாராத விதமாக அவள் கையில் கிடைக்கவும், விடாமல் இறுக்கமாக கட்டிக்கொண்டான். தன்னைத் தழுவியது யாரென்று அறியா விட்டாலும் உறுதியான உடற்கட்டும், உரிமையான தொடுகையில் அவனை யாரென்று அடையாளம் காண்பித்தது.

கிருத்திகா, ‘அச்சச்சோ!! இவர் இவ்வளவு நேரம் வராம இப்போதா வந்தார்? வெளியே கார் நிற்பதை பார்த்து, ஏற்கனவே வந்து சாப்பிட்டு உறங்கியிருப்பார்னு நினைச்சனே! இப்போ, நான் என்ன பண்றது?’ என்று பதறினாள்.

‘இந்த நேரத்தில் இங்கே எதுக்காக வந்த? இருட்டுல என்ன செய்ற? ஏன் விளக்கை போடல?’ன்னு கேட்டால் என்ன பதிலுரைப்பது? ஒருவேளை… நான் புகைப்படம் எடுத்ததை பார்த்திருந்தால் … அல்லது பெரிய விளக்கைப் போட்டு கைப்பேசியை எடுத்து விசயத்தை கண்டறிந்து விட்டால்… ஈஸ்வரா என்னைக் காப்பாத்து!’ என்று இறைவனிடம் கோரிக்கை விடுத்தாள்.

அவள் பயந்தது போலவே நிகழ்ந்தது. “மேனேஜர் மேடத்துக்கு ராத்திரியில் இங்கே என்ன வேலை? இந்த நேரத்தில் என் அப்பாவோட அறைக்குப் போக வேண்டிய அவசியம் என்ன? அதுவும் இருளில்…” என்று கேட்டான் கார்த்திக்.

அச்சத்தில் மிடறு விழுங்கினாள் கிருத்திகா.

“மேனேஜர் வேலை பார்த்திட்டு ஹெஸ்ட் ஹவுஸில் தங்கியிருக்கும் உனக்கு, என் வீட்டில் என்ன வேலை? நானே உன்னை வேலைக்காரின்னு சொன்ன பிறகும் அதிகப்படியான உரிமை எடுத்துக்க பார்க்கறியே! இது உனக்கே தவறுன்னு தெரியலயா? சொல்லுடி… எதுக்கு இந்த நேரம் வந்துட்டு யாருக்கும் தெரியாம போகப் பார்க்கிற?” என்றான்.

தான் என்ன கூறினாலும் நம்ப மாட்டானே என்ற எண்ணத்தில், என்ன காரணத்தை உரைத்தால் அவன் ஏற்றுக் கொள்வான் என்று சிந்தித்தாள். புவனாவின் நியாபகம் வந்தது. அதையே காரணமாக வைத்து தப்பி விட முயன்றாள். “உங்க தங்கை புவனா ஃபோன் பண்ணியிருந்தாங்க. ‘இன்னும் பதினைஞ்சு நாளுக்குள் பரிட்சை முடிஞ்சுடும். உடனே கிளம்பிடுவேன்னு அப்பா கிட்டேயும், அண்ணா கிட்டேயும் சொல்லிடுங்க’ன்னு சொன்னாங்க. அதான் மாமாவை பார்த்திட்டு போகலாம்னு வந்தேன். அவர் மருந்தின் தாக்கத்தால் உறக்கத்தில் இருக்கிறார். அதான், உடனே திரும்பிட்டேன்” என்று ஒரு வழியாக பூசி மெழுகினாள்.

தங்கை என்றதும் அவன் வாய் மூடிக்கொண்டது. வேறு விதமாக ஆரம்பித்தான். “ஆமாம். ஃபோன்னு சொன்ன, உன்னோட கைப்பேசியை காணுமே?” என்று அடுத்த குண்டைத் தூக்கிப் போட்டான். அவளது இதயம் தொண்டைக்குள் வந்து நின்றது. ‘அம்மாடி! இன்னைக்கு அம்புட்டு தானா?’ என்று நினைத்து உதட்டை பிதுக்கினாள்.

கண்ணை உறுத்தாத வகையில் கசிந்து வரும் வெளிச்சத்தில், எழிமையான அழகிலும் தேவதையாக கண்ணுக்கு தெரிந்தாள் கிருத்திகா. விழிகள் அவளது சிவந்த உதடுகளையே ஆழ்ந்து பார்த்தன. கைகள் உரிமையுடன் அவள் மீது ஒருவித தேடலுடன் அலைந்தன. அவள் மறுப்பாக தலையசைத்தாள். விலகிச் செல்ல முயன்றாள். அவளை ஒற்றைப் பிடியில் அடக்கினான் கார்த்திக்.

அப்போது சாம்பவியுடன் அவன் நின்ற தோற்றம் கண்ணுக்குள் வந்தது. ‘இவன் என்ன நினைச்சுட்டு இருக்கான்? மதியம் அவளை அணைச்சுட்டு, இப்போ என்னோடு… இது தவறு!’ என்ற எண்ணத்தில் தள்ளி விட்டாள். அவனை அசைக்கவும் முடியவில்லை. அத்தனை உறுதியாக இருந்தது தேக்கு மர தேகத்தின் இறுகிய அணைப்பு! தன்மீதான கோபத்தில் ஏதாவது செய்து விடுவானோ என்று அவள் நடுங்கிப் போனாள். “சார், நான் உங்க வீட்டு வேலைக்காரப் பொண்ணு. இப்படி நடந்துக்கறது சரியில்லை” என்று நிதர்சனத்தை புரிய வைக்க முயன்றாள். அவ்வளவு தான் அவளது எலும்புகள் உடைந்து விடும் அளவுக்கு இறுக்கினான் கார்த்திக். மூச்சு முட்டியது அவளுக்கு.

‘ஆத்தாடி! மொத்த எலும்பும் உடைஞ்சு போச்சு கணேசா! என்னை சீக்கிரமே காப்பாத்து…’ என்று மனதிற்குள் கூக்குரலிட்டாள். அடுத்த நிமிடம் சமையல் அறையில் ஏதோ கீழே விழும் ஓசை கேட்டது. அடுத்தாற் போல் விளக்கு எரிவதும் தெரிந்தது. அவனைத் தள்ளி விட்டு அங்கிருந்து ஓடினாள் கிருத்திகா.

அவனிடம் இருந்து விடுபட்டு ஒரு வழியாக அறைக்குள் நுழைந்து நிம்மதியாக மூச்சு வாங்கினாள். ஒரு கண்டத்தில் இருந்து தப்பித்து மற்றொன்றில் மாட்டியது போல், கைப்பேசி வசமாக மாட்டிக் கொண்டது. யாராவது எடுத்து விட்டால் என்ன செய்வது? அந்த ஃபோனில் அல்லவா அசோக்கின் எண், புகைப்படம் எல்லாம் இருக்கிறது. ‘தெய்வமே! எப்படியாவது கைப்பேசியை மீட்டுக் கொடுத்திரு’ என்று வேண்டிக்கொண்டே, படுக்கையில் அமர்ந்தாள்.

‘நீ என் மனைவி இல்லை. வீட்டு வேலைக்காரி’ என்றான் கார்த்திக். இப்போது என்ன உரிமையில் இப்படி நடந்துக்கறான். நல்ல வேளை யாரோ வந்து உதவினாங்க, இல்லை, என் நிலைமை சொல்றதுக்கு இல்லை… ஆமாம், அது யாரா இருக்கும்?’ என்று தெரியாமல் யோசனையில் மூழ்கினாள். ஒன்றும் சரியாக பிடிபடவில்லை. எதற்கும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று நினைத்தாள்.

றுநாள் காலையில் துயில் கலைந்தாள் கிருத்திகா. அன்றாட காலைக் கடன்களை முடித்தாள். புடவையை மாற்றிக் கொண்டிருக்கையில், அவளது கைப்பேசி டீபாவின் மீது இருப்பது தெரிந்தது. நம்ப இயலா அதிர்ச்சியுடன் விழிகளை விரித்தாள். நடுக்கத்துடன் அதன் அருகில் சென்றாள். ‘இது எப்படி இங்கு வந்தது? யார் கொண்டு வச்சாங்க? தாளிடப்பட்ட அறைக்குள் எப்படி மற்றொரு நபரால் வர முடிஞ்சது?’ என்று சந்தேகத்துடன் அதை கையில் எடுத்துப் பார்த்தாள். சாட்சாத் அவளுடைய கைப்பேசியே தான்! ஜன்னல் பகுதி லேசாக திறந்திருப்பது தெரிந்தது. ‘ஓ! யாரோ இதன் வழியாக வச்சுட்டு போயிருக்காங்க’ என்று எண்ணினாள்.

இன்னும் கூட அவளால் நம்ப முடியவில்லை. ‘நேற்று இருளில் விழுந்தது. இப்போது எப்படி இங்கே? அப்படியானால் யாராவது தன்னை வேவு பார்க்கிறாங்களா? எனக்கு நல்லது செய்ய ஆசைப்படுறாங்களா? நான் இங்கே எதுக்கு வந்திருக்கேன்னு தெரிஞ்சுக்கிட்டாங்களா?’ என்று உண்மை நிலவரம் தெரியாமல் தடுமாறினாள்.

யாரோ தனக்குத் தெரியாமலே மறைந்திருந்து கவனிக்கிறார்கள். தான் செய்யும் ஒவ்வொரு செயல்களையும் ஆராய்ச்சி கண்ணோட்டத்துடன் அணுகுகிறார்கள். இனிமேல், சற்று நிதானத்தைக் கையாள வேண்டும் என்று முடிவெடுத்தாள்.

கைப்பேசியை தட்டினாள். அது கீழே விழுந்த வேகத்தில் அணைந்ததா அல்லது சார்ஜ் இல்லாமல் செயலிழந்து விட்டதா தெரியவில்லை. சுவிட்ச் போர்டை நோக்கி நடந்தாள். வீட்டுத் தொலைபேசியில் அசோக் எண்ணிற்குத் தொடர்பு கொண்டாள். ஜன்னல்புறம், வீட்டுக்குள், வெளிப்பகுதியில் யாராவது சந்தேக கண்ணுடன் தென்படுகிறார்களா என்று பார்த்துக்கொண்டே, மெதுவாக வார்த்தைகளை உச்சரித்தாள்.

“ம்… சொல்லு கீர்த்தி”

“நான் உங்களைப் பார்க்கணும்”

“நீதானே நாம பொதுவெளியில் சந்திக்க கூடாதுன்னு சொன்ன? இப்போ என்ன திடீர்னு…” என்று கேட்டான்.

“ப்ளீஸ் அசோக்… என்னால இங்கே பேச முடியாது. புரிஞ்சுக்கோங்க” என்று கெஞ்சுதலாக கேட்டாள்.

“சரி, சரி! எனக்கு கொஞ்சம் வேலையிருக்கு முடிச்சிட்டு ரெண்டு நாள்ல வந்திடறேன். நீ போட்டா எடுத்திருந்தா அனுப்பி வை” என்றான். அவள் கைப்பேசி கீழே விழுந்ததில் நின்று விட்டதாக கூறினாள்.

“இப்போ, எப்படி பேசுற?”

“வீட்டுத் தொலைபேசியில்”

“ம்… சரிடா. நான் நாளைக்கே வந்திடறேன். நீ கவனமா இரு” என்று எச்சரித்து அழைப்பை துண்டித்தான்.

கார்த்திக் வெளியேறும் வரையில் ஹெஸ்ட் ஹவுஸை விட்டு அகலாமல் இருந்து கொண்டாள் கிருத்திகா. அவனது கார் மதில் சுவரைத் தாண்டிய பிறகே வீட்டிற்குச் சென்றாள். இத்தனை நாட்கள் இல்லாமல், இன்று அனைத்தையும் சந்தேக கண்ணுடன் ஆராய்ந்தாள். நிதானத்துடன் நடந்து கொண்டாள். தான் எதற்காக இங்கு வந்தோம் என்று யாருக்கோ தெரிந்திருக்கிறது. அது யார்? அகல்யாவா அல்லது கார்த்திக்கா? என்று தெரியாமல் தடுமாறினாள்.

இரண்டு நாட்களுக்குப் பிறகு,

ஹோட்டல் சத்யாவில் எதிர் எதிர் இருக்கையில் யாரோ போல் அமர்ந்திருந்தார்கள் இருவரும். சில நிமிடங்கள் காரசாரமாக விவாதம் நடந்தது. தன்னுடைய பேச்சைக் கேட்க மறுக்கிறாளே என்று சாம்பவியின் மீது கோபமாக வந்தது. ‘இவள் மீதான காதலில் அல்லவா, அவள் கிட்ட என்னோட கோபத்தை எல்லாம் கொட்டுறேன். புரிஞ்சுக்காம நடந்துக்கறாளே! இவ்வளவு தானா என்மீதான காதல்? இப்படி கெஞ்சி நிற்கும் நிலையில் வச்சுட்டாளே!’ என்று நினைத்து சினந்து போய் இருந்தான். மனம் ஒரு நிலையில் இல்லாமல் தவித்தது.

பிஸ்னஸ் மீட்டிங் விசயமாக வெளியே வந்தான் கார்த்திக். அப்போது சாலையில் நின்ற சாம்பவியை கண்டான். உடனடியாக காரை நிறுத்தி விரைந்து சென்றான். சாலையில் நின்று பேச மனமின்றி, அருகில் இருக்கும் ஹோட்டலுக்கு அழைத்து வந்தான். அவளிடம் பேச முயன்றான். அவளோ கேட்க மறுத்தாள்.

“எங்க அப்பா அன்னைக்கு சொன்ன மாதிரி நடந்துக்க ஆசைப்படுறீங்களா?” என்று கேட்டாள்.

அவன் புரியாமல் பார்த்தான்.

“ஆஸ்திக்கு என்னையும் ; ஆசைக்கு அவளையும்…” என்று கூறினாள். திரும்பி பாராமல் காரை எடுத்து சென்றுவிட்டாள்.

சாம்பவியின் வார்த்தை அவனது உயிர் வரையில் சென்று ஊடுருவி துளைத்தது. தாங்க முடியாத அளவிற்கு ரணமாக வலித்தது. தன்னுடைய ஆத்திரம், கோபம், ஆவேசம், அனைத்தையும் ஒன்று திரட்டி, காரில் ஓங்கி குத்தினான் கார்த்திக். சற்றுத் தொலைவில் நின்று அனைத்தையும் பார்த்து, மனவேதனை தாளாமல் நின்றாள் கிருத்திகா.

அப்போது அசோக் கைகாட்டினான். விழிகளைத் துடைத்துக்கொண்டே அவனை நோக்கி நடந்தாள். அசோக்கிடம் கைப்பேசியை ஒப்படைத்தாள். வீட்டு நிலவரத்தை ஓரளவிற்கு தெரியப்படுத்தினாள். யாரோ தனக்கு மறைமுகமாக உதவி புரிவதாக கூறினாள். மாமாவிற்கு மிக விரைவில் மாற்று சிகிச்சையின் மூலம் உடல் நலம் பெற செய்ய வேண்டும் என்று சொன்னாள். கார்த்திக்கை பற்றி கூற தயங்கினாள். அவன் புரிந்து கொண்டான்.

“கணவர் மேல அவ்வளவு பாசமா? ஆனால், அவர் உன்னைப் புரிஞ்சுக்க மறுக்கிறாரே!” என்று அவளுக்காக வருத்தப்பட்டான்.

“அசோக், அவர் எப்படி நடந்துக்கிட்டாலும் என்னோட கணவர். இந்த நிலை மாறப்போவது இல்லை. அவருக்கு கெட்ட பெயரையும், காதல் தோல்வியையும் ஏற்படுத்தி, விருப்பமில்லா மனைவியாக தானே நானிருக்கேன். இதுல அவரை மட்டும் குற்றம் சொல்ல என்ன இருக்கு?” என்று கண் கலங்க கேட்டாள். அவளது கையைப் பற்றி தட்டினான் அசோக்.

“கவலைப்படாதே! எல்லாம் சரியாகப் போகும்” என்று ஆறுதலாக கூறினான்.

அவள் கசப்பாக புன்னகைத்தாள். “அசோக், நான் போன வேலை முடிஞ்சதும் திரும்பிடலாம்னு இருக்கேன். அவர் சாம்பவியை கட்டிக்கிட்டு சந்தோஷமா இருக்கட்டும். அவர் படும் மனவேதனையை பார்த்துட்டுருக்க என்னால முடியாது” என்றாள். விழிகளில் வழிந்த நீரை துடைத்தாள்.

அவனுக்கு கஷ்டமாக இருந்தது. “அப்புறம் உன்னோட வாழ்க்கை என்னாவது? எதுக்கு இந்த அவசரம்? அவருக்கு சரியான துணை நீதான். சாம்பவி யாருன்னு உனக்குத் தெரியாதா? தெரிஞ்சும் எப்படி அவளோடு சேர்த்து வைக்க நினைக்கலாம்? அவளுக்கு அவர் காதலன் மட்டுமே, உனக்கு கணவன்! உன்னோட உயிர்!! எதிர்கால வாழ்க்கை எல்லாமே… உன் அண்ணாவுக்கு கொடுத்த வாக்குறுதி என்னாவது?” அவள் புரிந்து கொள்ளும் விதமாக எடுத்துக் கூறினான் அசோக்.

அவளுக்கும் புரியாமல் இல்லை. அதேநேரம் இப்படி இரு துருவங்களாக எத்தனை நாட்கள் இருக்க முடியும்? ஹரிச்சந்திரனுக்கு உடல் நலம் சரியாகி விட்டால், நடந்த விசயங்களை தெரிவித்து, எதிரியை ஒரு கை பார்க்கலாம் என்று நினைத்தாள். அவருக்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை… மருத்துவமனையில் விசாரிக்க முயன்றால், அதற்குக் கணவனே தடையாக இருக்கிறான். இதில் மறைந்திருந்து வேவு பார்ப்பது யார்? காயத்ரி மற்றும் அண்ணன் பிரசாத் விபத்திற்கு காரணமானவர்கள் தற்சமயம் எங்கு மறைந்திருக்கிறார்கள்? அவர்களை எப்படி கண்டுபிடிப்பது? அகல்யாவின் பங்கீடு? கார்த்திக் வாழ்க்கை; சாம்பவியின் நிலை… என்று பலவற்றையும் எண்ணிப் பார்த்து அமைதியானாள்.

சற்று நேரம் அவனிடம் பேசினாள். விடைபெற்று வெளியே வந்து ஆட்டோவில் ஏறினாள். சாம்பவியின் மீதான கோபத்தில் நின்ற கார்த்திக்கின் கண்களில், அசோக்குடன் அவள் நடந்து சென்ற காட்சி விழுந்தது. புருவங்கள் நெறிய சீற்றமாக பார்த்தான்.

தான் இன்று இப்படி இருப்பதற்கு காரணம் அவள் மட்டுமே என்று நம்பினான். ஏதோ ஒரு நோக்கத்திற்காக தன்மீது பழி சுமத்தி திருமணம் செய்திருக்கிறாள் என்று அவன் உறுதியாக எண்ணினான். தற்சமயம் அது நிஜமாகவே தெரிந்தது. ‘அவளோடு நடந்து போறது யார்? என்னோட வாழ்க்கையை அழிச்சுட்டு, எப்படி சிரிச்சுப் பேசிட்டு போறா… அப்படியென்ன திட்டத்துடன் என் வீட்டுக்கு வந்திருக்கா? இன்னைக்கே ரெண்டில் ஒண்ணு பார்த்துடுறேன்’ என்று நினைத்து கடுங்கோபத்துடன் காரில் ஏறினான்.

தொடர்கதைக்கான கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் பதிவிடுங்கள்…

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-6.3418/