காதல் சதுரங்க ஆட்டம் 5

அத்தியாயம் :5

கிருத்திகாவின் கேள்விக்கான பதிலை உடனே கூறாமல் தயங்கினார் மருத்துவர். பின்னர், “மிஸஸ் கார்த்திக்! அவருக்கு வந்திருப்பது சாதரணமான மாரடைப்பு அல்ல, மூச்சே நின்று விடும் அளவுக்கு வந்த கடுமையான மாரடைப்பு. ரொம்ப கஷ்டமான நிலையிலேயே அவரை இங்கே கொண்டு வந்து அனுமதிச்சாங்க” என்றார்.

“சரி டாக்டர், அப்படியே வச்சுக்கிட்டாலும் நிறைய மாசம் ஆகுதே! இத்தனை நாளாகியும் அவரால் எழுந்து நிற்க முடியாமல் போவதற்கான சாத்தியக்கூறு இல்லயே? நான் வேணும்னா அவரை வேறு மருத்துவமனையில் காட்டலாமா?” என்று கேட்டாள். அவர் சற்று நிதானித்தார்.

“மிஸஸ் கார்த்திக், அவரோட பேமிலி டாக்டர் நான். அவர் உடல் நிலையை பற்றி, என்னைத் தவிர வேறு யாருக்கும் அதிகம் தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை. சும்மா சும்மா சந்தேகப்படும் விதமான கேள்விகளை எழுப்பாமல், அவரை நல்லா பார்த்துக்கோங்க. அப்புறம், இத்தனை மாசம் கொடுக்கப்பட்ட மருந்தை மாத்திட்டு வேற கொடுத்தால், அது அவரது உயிருக்கே பாதகமா அமையலாம்!” என்று எச்சரித்தார்.

அவரது விழிகளில் தெரிந்த பயமும், நாவில் உதிர்த்த பொய்யான வார்த்தைகளும் அவளது சந்தேகத்தை அதிகப்படுத்தியது. “டாக்டர்! ஒரு நிஜ சம்பவம் சொல்றேன் கேட்கறீங்களா?” என்றாள் கிருத்திகா. அவர் ஆமோதிப்பாக தலையசைத்தார்.

“ஒரு வசதியான தம்பதியின் மகன், காதல் திருமணம் செய்துக்கிட்டான். அவனது அம்மா ஏழைப் பெண்ணாகிய மருமகள் மீதான பிடித்தமின்மையால் வயிற்றில் வளரும் சிசு, மகனுக்கு உதிர்த்தது இல்லையென குடும்ப மருத்துவரிடமே கூறச்சொன்னார். அவரும் நன்றி விஸ்வாசத்திற்கு உடன்பட்டார். அவளது கணவன் குடும்ப மருத்துவரின் கூற்றை செவிசாய்த்தான். ஒரு பாவமும் அறியாத மனையாள் சந்தேகத்தின் பேரில் அடித்து துரத்தப்பட்டாள். நல்லா இருந்த கணவன் மனைவிக்கு இடையில் விரிசல் உண்டாகிடுச்சு. அந்தப் பெண்ணுக்கு பத்தாவது மாசம் ஆனதும், அப்படியே கணவனை உரித்து வைத்தார் போல் மகன் பிறந்தான். இப்போது சொல்லுங்க, இதுல தவறு செய்த குற்றவாளி யார்? டாக்டரா? கணவரா? சம்மந்தப்பட்ட பெண்ணா?” என்று கேட்டாள்.

அவருக்கு வாயடைத்து போயிற்று. இதற்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.

“குடும்ப மருத்துவர் என்கிற ஒரே காரணத்திற்காக அவரை நம்பி குடும்பத்தை தொலைச்சுட்டான் அவன். அதுபோல் உங்களை நம்பிய குற்றத்திற்கான தண்டனையை, நீங்களும் கொடுக்க முயல வேண்டாம்” என்று அழுத்தமாக கூறினாள். அவர் வெட்கி தலைகுனிந்தார்.

“உண்மை எப்போதுமே ஊமையா இருக்காது டாக்டர். ஒருநாள் பதில் சொல்ல வேண்டிய அவசியம் நேரிடலாம். நீங்களும் தயாரா இருங்க…” என்றாள். அவரிடம் அசைவில்லை. நாற்காலியில் அமர்ந்து ஏதோ யோசனையில் மூழ்கினார்.

அவரது முகத்தை உன்னிப்பாக கவனித்தாள் கிருத்திகா. அவர் கிறுக்கிய மருத்துவ சான்றிதழை எடுத்துக்கொண்டு வெளியேறினாள். அத்தனை நாட்கள் ஹரிச்சந்திரனை பார்த்துக்கொண்ட செவிலி, அவருக்கான மருந்துகளுடன் வந்து நின்றாள். அவரை நாற்காலியில் அமர வைத்து காரை நோக்கி தள்ளிச் சென்றாள். காரிலேற்றும் நேரம் கார்த்திக் வந்தான். அப்பாவின் உடல் நிலையை பற்றி விசாரித்தான். கிருத்திகாவை நிமிர்ந்து பாராமல் மருத்துவரை சந்திக்க சென்று விட்டான். அவனது பாராமுகம் வலித்தது. அளவுக்கு மீறி ஆசைப்படுவது தவறென்ற எண்ணத்தில், அமைதியாக காரிலேறி ஹரிச்சந்திரன் அருகில் அமர்ந்து கொண்டாள்.

மாலையில் நேரமாக வீட்டுக்கு வந்தான் கார்த்திக். கிருத்திகாவை தன்னைப் பார்க்க வரச் சொன்னான். அவள் வந்து நின்றதும் யார் யார் நிற்கிறார்கள், என்ன நடந்ததென்று விசாரிக்காமல் கடினமான வார்த்தைகளால் அர்சித்தான். அவளது பதிலை செவி சாய்க்க மறுத்தான். அவன் அண்ணி, அண்ணாவிற்கும் விசயம் பரவியது. அங்கு வந்து நின்று நடப்பதை கவனித்தார்கள்.

“மேனேஜரா வீட்டுக்கு வந்து மருமகளா ஆகிட்டமேனு திமிரில் உன் விருப்பத்திற்கு நடந்தா, அதையெல்லாம் பார்த்துட்டு நான் சும்மா இருப்பேன்னு நினைக்கறியா? அது ஒருபோதும் நடக்காது!” என்றான். அவள் புரியாமல் அவன் முகம் பார்த்து நின்றாள்.

“உனக்கு எவ்வளவு கொழுப்பிருந்தா, டாக்டரிடமே அப்படியெல்லாம் பேசி எங்க அத்தனை பேரையும் அவமதிச்சிருப்ப? நாங்க என்ன உன்னைப் போல ஒண்ணும் இல்லாதவங்க. எங்க அப்பாவுக்கு செலவு செய்யும் அளவுக்கு வக்கில்லாதவங்கன்னு நினைச்சியா? போதும் உன் அக்கறையும், கவனிப்பும்… இனிமேல் அப்பா இருக்கும் அறை பக்கமே நீ போகக்கூடாது” என்றான்.

கார்த்திக் முகத்தை நிமிர்ந்து பார்த்து மறுப்பாக தலையசைத்தாள் கிருத்திகா. அவனுக்கு தான் பேசிய விவரங்கள் சரிவர தெரியவில்லை. மருத்துவர் அரையும் குறையுமாக சொல்லி அனுப்பி இருக்கிறார் என்று எண்ணினாள். அவன் அழுத்தமாக பார்த்தான். உதடுகள், “எனக்குத் தெரியாம ஏதாவது செய்தால் நடப்பதே வேறு!” என்று உச்சரித்தன.

உண்மை நிலவரம் தெரியாமல் இப்படி நடந்து கொள்கிறானே என்று அவள் விழிகள் கலங்கியது. அண்ணன் அண்ணி என்ன நடந்தது என்று விசாரித்தனர். அவன் மருத்துவரிடம் இவள் பேசிய விசயங்களை அப்படியே ஒப்புவித்தான். அவர்கள் பார்வை மாறியது. அவள் எதற்காக அப்படி பேசினேன் என்பதற்கான காரணத்தை விளக்கியும் ஏற்க மறுத்தனர். அகல்யா அவளைப் பார்த்த பார்வையில் ஏதோ இருந்தது. ‘உன்னை விடமாட்டேன்டி, என்னையே மாட்டி விடுறியா? இனிமேல் தாண்டி உனக்கு இருக்கு’ என்று முணுமுணுத்தாள்.

கார்த்திக், ஹரிச்சந்திரனை பார்த்துக் கொள்வதற்காக அமர்த்தப்பட்ட பணியாள் மற்றும் மருத்துவ செவிலி இருவரையும் அழைத்தான். “இத்தனை மாசம் நீங்க ரெண்டு பேரும் தானே அப்பாவை பார்த்துக்கிட்டீங்க. அதுபோல் இனிமேலும் பார்த்துக்கோங்க. இவள் பேச்சை கேட்கும் அவசியம் உங்களுக்கு இல்லை. ஏன்னா… இவளும் இந்த வீட்டில் உங்களைப் போலொரு வேலைக்காரி மட்டுமே!” என்றான்.

அவனது வார்த்தையில் துடித்துப் போனாள் கிருத்திகா. அலட்சியமாக தோளைக் குலுக்கி கொண்டு அகன்றான் கார்த்திக். அகல்யாவின் பார்வை அவளை கூனி குறுக செய்தது.

“பெரிய வீட்டுக்கு மருமகள் ஆகணும். எனக்கு சரிசமமா வரணும்னு ஆசைப்பட்ட இல்ல! அப்போ, இதெல்லாம் நீ அனுபவிச்சு தான் ஆகணும். இது மட்டுமல்ல இன்னும் நிறைய இருக்கு…” என்று சொல்லிக்கொண்டே ஏளனமாக நகைத்தாள்.

“ஏண்டி! இத்தனை நாள் இந்த வீட்டு நிர்வாகம், அலுவலகம் எல்லாத்தையும் நான்தான் பார்த்துக்கிட்டேன். நேத்து வந்தவ நீ, அவனை மனம் மாற்றி அலுவலகத்துக்கு வர வச்சதுமில்லாம, மாமனார் விசயத்திலும் தலையிடலாம்னு பார்க்கறியா? இனிமேல் எப்படி அவரைப் பார்த்து பேசுறன்னு நானும் பார்க்கறேன்” என்றாள்.

சவால்கள் இல்லாத வாழ்க்கை உப்பில்லாத உணவை ருசிப்பதற்கு சமம். அவர்கள் இருவரது சவாலையும் எதிர்கொள்ள தயாரானாள் கிருத்திகா. அதேநேரம் உண்மைகள் வெளிவரும் போது, வெற்றி பெறுவது யார், தோல்வியை தழுவ போவது யார் என்று பார்க்கலாம்!

கார்த்திக் அன்று அப்படி பேசிய பிறகில் இருந்து, பணியாட்கள் ஒருசிலரின் பார்வை மாறியது. வீட்டு மருமகள் என்று எண்ணாமல் அவளை உதாசீனப்படுத்தி நடக்க துவங்கினர். எதிர்த்துக் கேள்வி கேட்க முடியாத நிலை வேறு அவளைக் கட்டிப் போட்டது. புவனா தினமும் அவரைப் பற்றி விசாரித்தாள். அவளுக்கு என்ன பதிலுரைப்பது என்று தயக்கமாக இருந்தது.

மாமனாரை பார்க்க உள்ளே சென்றால் அனுமதி மறுக்கப்பட்டது. அதையும் மீறி போனாள். அவர்கள் இவளை நோட்டமிட்டனர். அவளது வருகை, பேச்சு அனைத்தும் அகல்யாவின் செவிக்கு சென்றது.

ஹரிச்சந்திரனால் பணியாள் கொண்டு வந்து கொடுத்த, உணவை உண்ண முடியவில்லை. சுவையான உணவிற்காக நா ஏங்கியது. மனம் கிருத்திகாவிடம் பேசி மகிழ ஆசை கொண்டது. அவளை எத்தனையோ முறை வரச்சொல்லியும் அவர்கள் அழைத்து வர மறுத்து விட்டனர்.

மாமனாரைப் பற்றிய எண்ணத்திலேயே உழன்றாள் கிருத்திகா. பெற்றோரை சிறு வயதிலேயே இழந்து, பாட்டி வீட்டிலேயே தங்கி வளர்ந்து வந்தாள். ஹரிச்சந்திரனை பார்த்த நாளில் இருந்து ஏதோ ஒரு பாசம் முளைவிட்டது. இப்போது சில நாட்களாக அவரைப் பார்த்து முன்பு போல பேச முடியாதது, மனபாரத்தை அதிகப்படுத்தும் விதமாகவே அமைந்தது.

திடீரென்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால், அவரது பன்னாட்டு வர்த்தகரீதியிலான நிறுவனத்தை பார்த்துக் கொள்ளும் பொறுப்பு, கோகுல் தலை மீது சுமத்தப்பட்டது. கணவனுக்கு உதவியாக அகல்யாவும் வந்து விட்டாள். அவர்களது மற்றுமொரு தொழிலான ரியல் எஸ்டேட் பிஸ்னஸ் கார்த்திக் வசம் ஒப்படைக்கப்பட்டது. புவனா மேற்படிப்பிற்காக சென்று ஹாஸ்டலில் தங்கியிருந்தாள். வீட்டில் உள்ள அனைவரும் தத்தம் பணிகளையும், பிஸ்னஸ், ஃபார்ட்டி என்று அலைந்து கொண்டிருந்தனர். ஹரிச்சந்திரன் மட்டும் தனிமை படுத்தப்பட்டார்.

ஐம்பதுகளை தாண்டிய வயதில் இருந்த அவருக்கு, கிருத்திகாவின் வரவும், அன்பான பேச்சும், அக்கறை கலந்த கவனிப்பும் ஆறுதலாக இருந்தது. அவள் வரும் நாளிகைக்காகவே ஒவ்வொரு நாளும் காத்திருந்தார். அவளது புன்னகை தவழ்ந்த முகத்தைப் பார்த்துக்கொண்டே உண்பார். ஏதாவது கேட்டால் பதிலளிப்பார். அவளுக்கும் அவர் மீது ஒரு உண்மையான பாசம் உருவாகியது. அப்பா மகள் எனும் உறவைத் தாண்டி அன்புடன் பழகினார்கள்.

சில நாட்களாக அவரது உடல்நிலையில் என்ன பிரச்சனை என்கிற சந்தேகம் தொடர்ந்து எழுகிறது. வீட்டில் யாரிடம் பேசினாலும் காது கொடுத்து கேட்க மாட்டார்கள் என்பதால், தானே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாள். ‘மருத்துவரின் பேச்சும், வீட்டாரின் அஜாக்கிரதையான நடவடிக்கையும், கவனிப்பும் அவரை படுக்கையில் வீழ்த்தி விட்டதா? அல்லது யாராவது திட்டமிட்டு அவரை அப்படி விழச்செய்து விட்டார்களா?’ என்று தெரியாமல், அதைக் கண்டறியும் முயற்சியில் இறங்கினாள். கணவன் மட்டும் அவளுடன் நன்முறையில் நடந்திருந்தால், அவனிடமே தனக்கு உதிர்த்த சந்தேகத்தை முன் வைத்திருப்பாள். அவனோ, எதிரியாக அல்லவா பாவித்து அலைந்து கொண்டிருக்கிறான். அதனால், தன்னுடைய நண்பன் அசோக்கிடம் விசயத்தை தெரியப்படுத்தினாள் கிருத்திகா.

அவன் டாக்டர் ராஜனால் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட சான்றிதழ்கள், மருந்து வாங்கிய விவரங்களை, எப்படியாவது தனக்கு அனுப்பி விடுமாறு சொன்னான். அவளும் சம்மதம் தெரிவித்தாள். எப்படி மாமாவின் அறைக்குள் போவது? எவர் கண்களிலும் படாமல் எங்கனம் அதை கையப்படுத்துவது என்ற யோசனையில் மூழ்கினாள்.

பகல் பொழுதுகளில் சுதந்திரமாக போக முடியவில்லை. அப்படியே போனாலும் ஒற்றர்களின் முன்னிலையில் வேறெதுவும் பேச முடியவில்லை. இரவு நேரத்தில் முயற்சிக்க வேண்டும் என்று நினைத்தாள். அதற்கான தக்க தருணம் வரும் வரையில் காத்திருந்தாள்.

லுவலக ஃபார்டி விசயமாக ஹோட்டலுக்கு சென்றான் கார்த்திகேயன். அங்கு ரியல் எஸ்டேட் பிஸ்னஸ் விசயமாக பேசிக்கொண்டிருந்தான். டின்னர் உண்ண அமரும் போது சாம்பவியை பார்த்தான். விதவிதமான கண்ணாடி அலங்காரம் செய்யப்பட்ட சாம்பல் நிற நீளமான சல்வாரில், அப்படியே மினுங்கி கொண்டு நின்றாள். அவளைப் பார்த்ததும் எழுந்து வேகமாக நடந்தான்.

“சாமு” என்று ஆசையுடன் அழைத்தான்.

அவள் திரும்பி பார்த்தாள். கார்த்திக்கின் விழிகளில் தெரிந்த காதலில், கட்டுண்டு போய் நின்றாள்.

“எப்படி இருக்கே சாமு? ஏன் என்கிட்ட பேச மறுக்குற? எத்தனையோ முறை முயற்சித்தும் முடியலயே…” என்று வருத்தத்துடன் கேட்டான்.

அவள் பதில் கூறாமல் தவிப்புடன் நின்றாள்.

“உன்மேல எவ்வளவு அன்பு வச்சிருந்தேன்னு உனக்குத் தெரியாதா? நான் சொல்வதை விடவும், வேறு யாரோ ஒருத்தர் சொல்லக்கூடிய வார்த்தைகளா பெரியதாக போயிற்று?” என்று கேட்டான்.

அவள் திணறலுடன் நின்றாள்.

“சாமு உன்னைப் பார்க்காம, உன்கிட்ட பேசாம என்னாலே இருக்க முடியலைடி. ப்ளீஸ்… என்கிட்ட பேசு!” என்று ஏக்கம் ததும்பிய குரலில் வினவினான்.

அவள் பதில் கூற முடியாமல் விலக முயன்றாள். அவனது வலுவான கரம் அவளைப் பற்றி நிறுத்தியது. விழிகளை ஆழ்ந்து பார்த்தான்.

“சொல்லிட்டு போ! நீ என்ன சொன்னாலும் கேட்கறேன்…” என்றான். விழிகளில் ஏக்கமும், காதலும் குழைந்து வழிந்தது. முன்பை விட இப்போது சற்று மெலிந்தார் போல் காணப்பட்டான். ஏற்கனவே வருத்தத்தில் இருப்பவனை, தானும் காயப்படுத்த மனமின்றி அமைதியாக நின்றாள்.

அப்போது ஒருவன் சாம்பவியை இடித்து தள்ளி விடுவது போல் வேகமாக வந்தான். அவசரமாக அவளைப் பற்றி தன்னை நோக்கி இழுத்தான் கார்த்திக். அவளை விட்டு விலக மனமின்றி அப்படியே நின்றான்…

ன்னுடைய அறையில் இருந்த கிருத்திகாவின் கைப்பேசி மிளிர்ந்தது. எடுத்துப் பார்த்தாள். கார்த்திக் சாம்பவியை அணைத்துக்கொண்டு நிற்பது தெரிந்தது. அவனது முகத்தில் தெரிந்த நிம்மதி, சந்தோஷம் அவளைக் கட்டிப்போட்டது. நம்ப முடியாமல் விழிகளை விரித்தாள்.

உயிருக்கு உயிராக விரும்பிய இருவரை பிரித்து விட்டமே என்கிற குற்றவுணர்ச்சி அவளை வாட்டி வதைத்தது. பேசாமல் வீட்டை விட்டு எங்கேயாவது போய் விடலாம். அவர்கள் இருவரும் மணந்து கொண்டு மகிழ்ச்சியாக வாழட்டும் என்று எண்ண செய்தது. அடுத்த கணமே “இல்லை!” என்று அலறிக்கொண்டு எழுந்தாள். “முடியாது! முடியவே… முடியாது!! சாம்பவி அவருக்கு ஏற்றவள் இல்லை. அப்புறம்…” என்று எண்ணிக்கொண்டு ஏதோ நினைவில் கண் கலங்கினாள்.

கார்த்திக் தன்னை வெறுத்தாலும் பரவாயில்லை. இணைந்து வாழாமல் இருந்தாலும் பரவாயில்லை. தான் வந்த காரியத்தை முடித்து விட வேண்டும் என்று உறுதி பூண்டாள் கிருத்திகா!

முதலில் மாமாவின் உடல் நிலையை விரைவில் குணப்படுத்த வேண்டும். அடுத்து… என்று நினைத்தவள் முகம் அப்படியே மாறிவிட்டது.

இரவு நேரம் கைப்பேசியை சைலன்ட்டில் போட்டாள். முகத்தை கழுவி வேறு உடைக்கு மாறினாள். மெதுவாக வெளியேறி வீட்டை நோக்கி நடந்தாள். முன் வாயில் கதவு பூட்டாமல் சாற்றி வைக்கப்பட்டு இருந்தது. மெதுவாக திறந்து கொண்டு உள்ளே நுழைந்தாள். வெளியில் கிடந்த சோபாவில் இருந்த கார்த்திக்கை கவனிக்க தவறிவிட்டாள்.

பணியாட்கள் அவர்களுக்கான அறையில் ஓய்வெடுக்க துவங்கினர். காலடி ஓசை கேட்டு விடாமல் இருக்க, மெதுவாக ஒவ்வொரு எட்டுக்களையும் எடுத்து வைத்தாள். மூச்சு சப்தம் சீராக வருமாறு பார்த்துக் கொண்டாள். செவிலி ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதை உறுதி செய்தாள். மெதுவாக கப்போர்டை திறந்து, மருத்துவ ஃபைலை எடுத்தாள். தனக்கு வேண்டியவற்றை எல்லாம் புகைப்படமாக கைப்பேசியில் அடக்கினாள். மறுபடியும் எடுத்த இடத்திலேயே வைத்துவிட்டு, மெதுவாக கதவை சாற்றினாள். வீட்டை விட்டு விரைவாக வெளியேறி விடும் எண்ணத்தில், வேகமாக வந்து யார் மீதிலோ மோதிக்கொண்டாள். கையில் இருந்த கைப்பேசி நழுவி இருளில் எங்கோ சென்று விழுந்தது…

தொடர்கதைக்கான கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் 👇👇👇பதிவிடுங்கள்

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-5.3394/