காதல் சதுரங்க ஆட்டம் 4

அத்தியாயம் : 4


காலையில் துயில் கலைந்தாள் கிருத்திகா. நேற்றைய இரவு கார்த்திக் அறைக்குப் போகாமல், தனியாக வந்து உறங்கியது நியாபகத்திற்கு வந்தது. ஏற்கனவே காலையில் உணவெடுத்து கொடுப்பதற்காக போகவில்லை என்பதால், அவனே வலிய வந்து சீண்டி பேசினான். அவன் பின்னே சென்று கவனித்தால், வார்த்தைகளால் வசைபாடி சென்று விட்டான். இந்நிலையில் இரவு போகாமல் இருந்ததற்கும், ஏதாவது கூறி விடுவானோ என்று, பதைபதைப்பாக இருந்தது. நேற்றிரவு அவனுடைய அறைக்குள் நுழைய கூடாதென்று சொல்லி விட்டதால், தப்பித்தோம் என்று நினைத்து ஆசுவாசமடைந்தாள்.

அதேநேரம் ஹரிச்சந்திரன் அறிந்தால் என்ன பதிலுரைப்பது என்று தெரியாமல் தடுமாறினாள். புவனா எழுந்து வெளியே வருவதற்கு முன்னர், தயாராகி உள்ளே சென்று விட வேண்டும் என்ற எண்ணத்தில், வேகமாக எழுந்து குளியல் அறைக்குள் புகுந்தாள். சரியாக பதினைந்து நிமிடத்தில் புறப்பட்டு வீட்டு வாயிலை அடைந்தாள்.

அப்போது, “குட்மார்னிங் அண்ணி!” என்ற குரலில் வேகமாக நிமிர்ந்து பார்த்தாள். அவளது விழிகள் அதிர்ந்தாலும், உதடுகள் பதில் வணக்கம் தெரிவிக்க தயங்கவில்லை.

“என்ன அண்ணி இத்தனை நேரமா தேடியும் உங்களைக் காணுமே? எங்கே போனீங்க? ஒரு முக்கியமான விசயம் பேசணும்” என்றாள் புவனா.

நேற்று ஹெஸ்ட் ஹவுஸிற்கு சென்று தூங்கியது தெரிந்து விட்டது போலும், அதைப் பற்றித்தான் கேட்கப் போகிறாள் என்று நினைத்தாள் கிருத்திகா.

புவனா “அண்ணி, எனக்கு நாளைக்கு கிளம்பணும். அப்புறம் பீ.ஈ பரிட்சை முடிஞ்சதும் வந்துடுவேன். அதுவரைக்கும் அப்பாவை கவனமா பார்த்துக்குவீங்களா?” என்று கேட்டாள். உடனடியாக தலையை ஆட்டினாள் கிருத்திகா. மனதில் ஏதோவொரு நிம்மதி பரவசம் உருவானது.

இங்கு வந்த சில நாட்களாக ஹரிச்சந்திரனிடம் பேசி மகிழ்ந்திருந்தாள் கிருத்திகா. பின்னர், கார்த்திக் திருமண விசயம் மற்றும் புவனாவின் வருகையால், அவரிடம் முன்பு போல உரையாட வாய்ப்பில்லாமல் போய் விட்டது. அவள் கிளம்பி விட்டால் நல்லது! என்று எண்ணினாள். தன்னுடைய முகத்தை இயல்பாக வைத்துக் கொள்ள கடினப்பட்டாள்.

அத்துடன் வீட்டிற்குள் வந்து காலை டிபனை தயாரித்தாள். மாமனாருக்கு கொடுத்துவிட்டு புன்னகையுடன் பேசிக்கொண்டிருந்தாள். கிருத்திகாவின் புன்னகை அவரையும் தொற்றிக் கொண்டது. மகன் விரைவில் மனமாற்றம் அடைந்து விடுவான் என்று நம்பினார்.

புவனா காஃபி கோப்பையை நீட்டினாள். அவள் மறுக்காமல் வாங்கினாள். நேற்றைய நிகழ்வு கண்ணில் படமாக விரிந்தது. அச்சத்தில் பணியாளை அழைத்து, அவனுக்கு கொடுத்துவிட்டு வரச்சொன்னாள். அவனும் தலையசைத்து அகன்றான்.

‘அப்படா! காலையிலே தப்பிச்சோம்’ என்று நினைத்து நிம்மதியாக மூச்சு விட்டாள். அடுத்த நிமிடம் மேலே காஃபி கோப்பை நொறுங்கி விழும் ஓசை கேட்டது. செவிகளை இறுக மூடிக்கொண்டாள் கிருத்திகா. “அச்சச்சோ!! தப்பிச்சிட்டோம்னு நினைச்சா, மறுபடியுமா…” என்று எண்ணிக்கொண்டே உதட்டை பிதுக்கினாள்.

சற்று நேரத்தில் பணியாள் கீழே வந்தான். அவளிடம் “சின்னய்யா, உங்களை வரச்சொன்னாங்க” என்றான். இமைகள் படபடக்க தலையசைத்தாள். வேறு வழியில்லாமல் மேல் நோக்கி நடந்தாள்.

இரண்டாவது மாடியில் அவன் நிற்பது தெரிந்தது. தயங்கினாள்; தடுமாறினாள். தவிப்புடன் உள்ளே நுழைந்தாள். கால்கள் எட்டுக்களை எடுத்து வைக்க சிரமப்பட்டன. முயன்று தன்னை அடக்கிக்கொண்டு அவனை நோக்கி நகர்ந்தாள். சடாரென்று திரும்பி விட்டான் அவள் கணவன். முகம் அத்தனை கடுமையாக காட்சியளித்தது.

அப்படியே நின்று விட்டாள் கிருத்திகா. அச்சம் தொண்டை வரையில் பற்றியது. பின்னோக்கி ஓடி விடலாமா என்று நினைத்து திரும்பினாள். அவளது எண்ணத்தை மிகச் சரியாக ஊகித்துக் கொண்டான் கார்த்திக். விரைவாக வந்து அவளை மறித்து நின்றான். அவளிரு பாதங்கள் பின்னோங்கி நகர்ந்தன. அவனது வலிய கரம் அவளது மெல்லிடையில் பட்டு அழுத்தியது. அவள் தள்ளி விட்டாள். சினம் கொப்பளிக்க அழுத்தத்தை அதிகப்படுத்தினான்.

“வலிக்குதுங்க ப்ளீஸ்…” என்றாள் கிருத்திகா.

திருமணம் முடிந்த பின்னர் முதன் முறையாக அவனிடம் வாய் திறந்து பேசுகிறாள். அவன் முகம் கடுகடுத்தது.

“ஏன் வலிச்சா என்ன?” புரியாதவனைப் போல அவன் கேட்டான். புரிந்து கொள்ளாமல் இருக்கிறானே என்று அவள் பார்த்தாள்.

கிருத்திகாவின் கைவிரல்கள் கார்த்திக்கின் உறுதியாக பதிந்திருந்த கைவிரல்கள் மீது படிந்தன. இருவரின் உடலிலும் மின்சார தாக்குதல் நிகழ்வதை போலிருந்தது. அவனது விரல்களில் தடுமாற்றம் நிலவியது. அவள் மென்மையாக பற்றினாள். மறுப்பாக தலையசைத்தாள். அவன் முகம் மாறியது… வார்த்தைகளும்!!

“தொட்டுத் தாலிக்கட்டிய மனைவியை தொடவும் அவள் சம்மதம் கேட்கணுமா? இதெல்லாம் தெரியாமலா அப்படியெல்லாம் நடந்து கல்யாணம் பண்ணிக்கிட்ட?” என்று கேட்டான். கிண்டலா, கோபமா பிரித்தறிய முடியவில்லை. அவனது விழிகளில் அத்தனை கடுமை நிலவியது.

“அன்னைக்கு உன்னோடு தவறா நடந்துக்கிட்டப்போ, இதை விட அதிகமா தொட்டுருப்பேன் இல்லையா? பிறகும் எதுக்கு மறுக்கணும்?” என்றான்.

கார்த்திக் நாவிலிருந்து உதிர்த்த கொடிய வார்த்தைகள், அவள் உள்ளத்தைப் பதம் பார்த்தன.

“உன்னைப் பார்த்த முதல்நாள் இப்படி தொட்டேன் என்பதுக்காக, என் கன்னத்தில் அறைஞ்சது மட்டுமல்லாம வாழ்க்கையிலும் அடிச்சிட்டியே! இப்போ என்ன செய்ய போவதா உத்தேசம்?” என்றான்.

அவனது குரலில் தெரிந்த அழுத்தம், அடுத்து என்ன சொல்வானே என்று தெரியாத அளவிற்கு இருந்தது.

“கேட்டா பதில் சொல்ல தெரியலயா? இல்லை, மறுபடியும் அடிக்க முடியலையா?”

விழிகள் ‘என்னை விட்டு விடேன்’ என்பது போல் கெஞ்சியது. விரல்கள் பத்தும் அவனிடமிருந்து விடுபட போராடியது. அவனது பிடி இறுகியது. இருவரின் மேனி உரசலில் நெருப்பு பந்து உருவாகியது.

“நான் கீழே போகணும்” என்று முணுமுணுத்தாள் கிருத்திகா.

“ம்… போகலாம். காலையிலே ஒரு கப் காஃபி கொண்டு வந்து கொடுப்பதற்கும், மேனேஜர் மேடத்துக்கு நேரமில்லையா? இல்லை, இந்த கொடியவன் முகத்தில் முழிக்கவும் பிடிக்கலையா?” என்று கேட்டான்.

கார்த்திக் வாயிலிருந்து அப்படியொரு வார்த்தை விழவும், வேகமாக தன்னுடைய விரல்களால் மறித்தாள். கண் கலங்கியது. உதடுகள் துடித்தன.

அவளது நீர் நிரம்பிய விழிகள், துடித்துக் கொண்டிருந்த உதடுகளைக் காணுகையில், திருமணத்தன்று சாம்பவி நின்ற தோற்றம் கண்ணுக்குள் வந்தது. அடுத்த நிமிடம் தள்ளி விட்டான். நீண்ட காலடிகளை எடுத்து வைத்து வெளியேறினான்.

தரையில் விழுந்து கிடந்த கிருத்திகா, பின் முகுது வலி தாளாமல் முனகிக் கொண்டே இருந்தாள். அவனிடம் சென்றால் ஏதாவது பிரச்சினை ஆகும் என்று எண்ணித்தான் அருகில் வரத் தயங்கினாள். அவனோ, சும்மா இருப்பவளை அழைத்து வார்த்தைகளால் தாளித்து போய்விட்டான்.

மெதுவாக எழுந்தாள். தன்னுடைய நிலைமையை நினைத்து நொந்து கொண்டே கீழே வந்தாள். அதன் பிறகு வேலையில் கவனத்தைப் பதிக்க முயன்றாள்.

கிருத்திகா கார்த்திகேயனின் வீட்டிற்கு மேனேஜராக பணிபுரிய வந்திருப்பவள். திடீரென்ற திருமணம், அவனது கோபம், வீட்டு வேலைகளால் நேரமின்மை, உடலுடன் மனமும் சோர்ந்து போக கணக்கு வழக்குகளை கவனிக்க தவறினாள்… திடீரென்று அகல்யா கேட்டால் என்ன பதிலுரைப்பது எனும் எண்ணத்தில், தன்னுடைய பணிகளை பார்க்க முற்பட்டாள். கார்த்திக்கின் திருமண செலவு, அலங்காரம், நகை, உடை, விருந்தோம்பல், வீட்டு உபயோகம், அக்கவுண்டில் இருந்து எடுத்து செலவாகிய பணம், மறுபடியும் அவளிடம் கொடுத்தது. ஃபார்டிகளுக்கு செலவு செய்தது, வாகனங்களை சரிபார்த்தல் மற்றும் பெட்ரோலுக்கான செலவு… என்று பலவற்றையும் சரி பார்த்து, மடிக்கணினியில் சேமித்து வைத்தாள். மலைப்பாக இருந்தது.

‘அடேங்கப்பா! இவ்வளவு பணமா?! சாதாரண நடுத்தர மக்கள் ஒரு வருடம் உழைத்தாலும் இவ்வளவு சேமிக்க முடியாது. அவ்வளவு பணம் செலவழிக்கப் பட்டிருக்கு. எல்லாம் அவரவர் கையிருப்பை பொறுத்தது’ என்று எண்ணினாள்.

இந்த மாதச் செலவு, இது எல்லாவற்றையும் சேர்த்து கணக்கு பார்த்து விட்டு எழும் போது, பதினொரு மணி கடந்திருந்தது. நேற்று கார்த்திக் உண்ணவில்லை என்றதால், இன்று பணியாளிடம் அந்த பொறுப்பை ஒப்படைத்தாள். வேலையினூடு மாமா, புவனாவிடம் அரட்டை அடித்துக்கொண்டு நேரத்தை செலவிட்டாள்.

கார்த்திகேயன் அலுவலகத்தில் தனக்காக ஒதுக்கப்பட்ட புது கேபினில் இருந்தான். அகல்யா அவனுக்கென்று சில வேலைகளை பிரித்துக் கொடுத்திருக்க, அதிலே கவனத்தைப் பதிக்க முயன்றான். முடியாமல் தடுமாறினான்.

காலையில் கிருத்திகாவிடம் பேசிய நேரத்தில் இருந்து, சாம்பவியின் நியாபகமாக வருகிறது. அவளைப் பார்த்து பேச வேண்டும் போல் ஆசையாக இருக்கிறது. அருகில் இருந்த தொலைப்பேசி அவனது கவனத்தை ஈர்த்தது. உடனே எடுத்து சாம்பவியை தொடர்பு கொண்டான். அவளது கைப்பேசி அணைத்து வைத்திருப்பதாக சொன்னது. வீட்டு எண்ணிற்கு அழைப்பு விடுத்தான். அவள் பெயரை சொல்லி பேச சொன்னான். அவள் மறுத்து விட்டாள். வெளியே வந்தாலாவது பார்த்து பேசலாம் என்று நினைத்தான். அவள் மதில்சுவரை தாண்டவே இல்லை…

வேலையிலும் கவனம் பதியவில்லை. மதிய உணவை உண்ணவும் மனம் வரவில்லை. வெறுப்புடன் எழுந்து வெளியேறினான் கார்த்திக். “சின்னய்யா, இன்னைக்கு நம்ம வீட்டுல வழக்கமா சமையல் பண்றவங்க தான் செய்தாங்க. மேனேஜர் அம்மா பண்ணலை” என்றான் பணியாள்.

சினம் கொப்பளித்தது. பதிலளிக்காமல் சென்று விட்டான். அவனது கோபம் ‘மேனேஜர் அம்மா என்றதாலா? சமையல் செய்து அனுப்பவில்லை என்றதாலா?’ தெரியவில்லை.

மாலை நேரம் வீட்டிற்கு வந்த அகல்யா, காட்டுக் கத்தல் கத்திக் கொண்டிருந்தாள். “தெண்டத்துக்கு தின்னுட்டு வீட்ல இருக்கிற உனக்கு, நேரத்துக்கு சாப்பாடு செய்து அனுப்ப முடியாதா? வேலைக்காரியா வந்து வீட்டுக்காரியா மாறியதும் உன் குணமும் மாறிட்டதா? வாங்கும் சம்பளத்துக்கு ஏற்றார் போல் நடந்துக்க தெரியாதா? வீட்டுல இருந்து நல்லா கொட்டிக்க தெரியுது. வேலை பார்க்க முடியலயா? நாளையில் இருந்து ஒழுங்கா சொல் பேச்சுக்கேட்டு நடக்கல…” எனும் போது கார்த்திக் நடந்து வந்து கொண்டிருந்தான். அவளது பேச்சு அப்படியே நின்று விட்டது. இருவரையும் பார்த்தான்.

முதலாளிக்கும், தொழிலாளிக்கும் இடையில் நடக்கும் வாதத்தில், தனக்கு இடமில்லை என்று நினைத்தான் போலும், பேசாமல் மேலேறி சென்று விட்டான். அகல்யாவும் முறைப்புடன் அகன்று விட்டாள்.

வீட்டுப் பணியாட்கள் அத்தனை பேர் முன்னிலையில் இப்படி பேசவும், அவளுக்கு கஷ்டமாக இருந்தது. கணவனும் எதிர்த்து கேளாமல் சென்றது, மேலும் மனபாரத்தை அதிகப்படுத்தியது. விழிகளைத் துடைத்துக்கொண்டு இரவு உணவை தயாரித்தாள். மேஜையின் மீது வைத்து வெளியேறி சென்று விட்டாள். அதை கவனத்தில் கொள்ளாமல் வேண்டியதை எடுத்து வைத்து, கணவனுடன் உண்ண துவங்கினாள் அகல்யா!

இரவு உணவு உண்ணாதது பசி வயிற்றைக் கிள்ளியது. வெறும் தண்ணீரை மட்டுமே அருந்தினாள். கட்டிலில் படுத்தும் உறக்கம் வர மறுத்தது. நினைவுகள் முன்பு நடந்ததை எண்ணி பார்த்தது. விழிகள் தன்னையுமறியாமல் மூடியது. ஆழ்ந்த உறக்கத்திலும் நிம்மதியில்லாமல் புரண்டாள் கிருத்திகா.

மறுநாள் புவனா கிளம்பி விட்டாள். மாமனாரை பார்த்துக் கொள்ளும் பொறுப்பு அவள் வசமானது. அவருக்குத் தேவையான ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து செய்தாள். முன்பு எப்படி தெளிவாக பேசி ஆளுமையுடன் நடந்து கொள்வாரோ, அதேபோல் மறுபடியும் மாற்றி விட எண்ணம் பூண்டாள்.

அவரை எழ செய்து நடக்க வைக்க முயன்றாள். கால்கள் தள்ளாடியது. அவளைப் பற்றிக்கொண்டு “முடியலம்மா, விட்டுடு. இனிமேல் எழுந்து நடமாடி நான் என்ன பண்ணப் போறேன். வாழ வேண்டிய வயசுல என் பொண்ணோட வாழ்க்கையே முடிஞ்சி போயிடுச்சு. இதில நான் வாழ்ந்து என்ன செய்யப் போறேன்?” என்று விரக்தியாக கூறினார்.

அவரது மனபாரங்களை அவளால் புரிந்து கொள்ள முடிந்தது. அமைதியாக நின்றாள். சில நிமிடங்கள் பேசிவிட்டு நாளை மருத்துவமனைக்கு சென்று அவரை பரிசோதனை செய்ய வேண்டும். அவருக்கு என்ன ஆயிற்று என்பதை கண்டறிய வேண்டும் என்றும் முடிவு செய்தாள்.

இங்கு வந்த போது வெறும் பணியாள். இப்போது இந்த வீட்டு மருமகள்! மகனின் மனைவி!! எனும் உரிமையில், அவரது உடல் நிலையில் அக்கறை எடுக்கலாம். சரி செய்ய உதவலாம் என்று எண்ணினாள். அவருக்கு உறக்கம் வரும் வரையில் அருகில் இருந்து கவனித்தாள். அவர் ஆழ்ந்து துயில் கொள்ளுகையில் ஹெஸ்ட் ஹவுஸிற்கு கிளம்பி விட்டாள்.

காலையில் மாமனாருடன் மருத்துவமனைக்கு கிளம்பினாள் கிருத்திகா. மருத்துவர் ராஜன் முன்பு சென்று அமர்ந்தாள். வழக்கமான பரிசோதனை, அவரது உடல்நிலை பற்றிய நிலவரத்தைப் பார்த்தார். அவரிடம் பேச்சு கொடுத்து மேலும் சில தகவல்களை தெரிந்து கொண்டார்.

தன் முன்னே இருந்த மருத்துவ கோப்பை எடுத்தாள் கிருத்திகா. அவரை பார்த்து சில கேள்விகளை முன் வைத்தாள். அவரால் பதிலளிக்க முடியவில்லை. திணறலுடன் நின்றார். முகம் வேர்த்துக் கொட்டியது. கைக்குட்டையில் ஒற்றி எடுத்தார்.

“எதுக்கு டாக்டர் இவ்வளவு டென்சன் ஆகணும்? நான் ஒண்ணும் தவறா கேட்கலயே? மாரடைப்பு வந்த எத்தனையோ பேர் சில நாட்களிலே ஏன் ஒன்றிரண்டு மாதம் கழிந்ததும் எழுந்து நடமாட ஆரம்பிச்சுட்டாங்க. அப்படியிருக்க, மாமா மட்டும் ஏன் இத்தனை மாசமாகியும் நடக்க முடியாம சிரமப்படுறாங்க? அவங்களுக்கு நீங்க கொடுத்த சிகிச்சை முறைகளைப் பற்றி தெரிஞ்சுக்கலாமா?” என்று கேட்டாள்.

அவர் பதில் கூறாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தார்.

தொடர்கதைக்கான கருத்துகளை கீழே உள்ள லிங்கில் பதிவு செய்யுங்கள்….

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-4.3379/