காதல் சதுரங்க ஆட்டம் 3

அத்தியாயம் : 3


கார்த்திக் தன்னைப் பார்த்தவுடன் வேகமாக வருவதைக் கண்ட கிருத்திகா, அச்சத்தில் சுவரை ஒட்டிக் கொண்டாள். அவளருகில் வந்து டிரேயை தட்டி விட்டவன் புருவத்தை சுருக்கினான்.

“கல்யாணம் முடிஞ்ச மறுநாளே காலையில் எழுந்து தயாராகி, அக்கறையோடு புருஷனுக்கு காஃபி கொண்டு வந்திருக்கிறியா?” என்று கேட்டான்.

அவள் மேல் நோக்கிச் சென்று நிலத்தில் விழுந்து சிதறிய காஃபி கோப்பையை பார்த்ததும், விழிகளில் தழும்பிய நீருடன் நின்றாள்.

“இப்படி ஒண்ணுமே தெரியாதவ மாதிரி முகத்தை வச்சுட்டு இருந்தா நான் உன்னை நல்லவள்னு நம்பிடுவேன்னு பார்க்கறியா? இல்லை, நடந்த தவறுக்கும் உனக்கும் எந்தவொரு சம்மந்தமும் கிடையாதுன்னு நினைச்சிட்டு, உன்னோடு சேர்ந்து சந்தோஷமா இருப்பேன்னு கனவு காண்றியா?” என்று கேட்டான். அவளது விழிகள் அச்சத்துடன் படபடத்தன.

“ஒரு காலமும் நடக்காது… என் சாம்பவியை நேசித்த உள்ளத்தில், உன்னை ஒருபோதும் மனைவியா ஏத்துக்க மாட்டேன். அவளோடு சந்தோஷமா வாழலாம்னு ஆசைப்பட்ட, என் எண்ணத்தை அழிச்சதும் இல்லாம, என்மேல வீண் பழியை சுமத்தி அவமானப்படுத்திய உன்னை சும்மாவும் விடமாட்டேன். நேத்து ராத்திரி நான் அத்தனை தூரம் திட்டியும் ரோஷமில்லாம இப்படி வந்து நிக்கறியே, உனக்கு வெட்கமே இல்லையா? வெளியே போடி!” என்று கர்ஜித்தான்.

அவள் விழிநீரை துடைக்கத் தோன்றாமல் விசும்பிக்கொண்டே நின்றாள். அவளது அழுகை மறுபடியும் அவனுக்கு கோபத்தை கிளறியது. “இப்படி சும்மா சும்மா கண்ணீர் வடிச்சு, கபட நாடகமாட முயலாதே! நீ என்ன செய்தாலும் என் மனம் மாறாது” என்றான். அப்படியே கதவைத் திறந்து அவளை உள்நோக்கி தள்ளி விட்டான்.

திடீரென்ற வேகத்தில் கால்கள் தன்னிச்சையாக செயல்பட்டன. கைப்பிடியை பற்ற முடியாமல் கால்கள் பிரள, படியில் இருந்து கீழே விழப் போனவளை, இரு கரங்கள் வலுவாக தாங்கியது. விழிகளை இறுக மூடிக்கொண்டாள் கிருத்திகா. அச்சம் அகலாமலே மெதுவாக திறந்து பார்த்தாள். தரையில் அமர்ந்திருப்பது தெரிந்தது. கை, கால்கள் நடுங்க அப்படியே சுவரில் சாய்ந்தாள். சில நிமிடங்கள் ஓசையற்று விம்மினாள்.

கார்த்திக் இத்தனை கொடூரமானவனாக மாறக்கூடும் என்று அவள் ஒருபோதும் எண்ணவில்லை. இப்போது அவனை நினைக்கையில் பயமாக இருக்கிறது.

‘எப்படி அவனுடன் ஒரே வீட்டில், அதிலும் கணவன் மனைவியாக வாழ முடியும்? வாழப் போகிறோம்…’ என்று தன்னுடைய எதிர்காலத்தை நினைத்து முதன் முறையாக அஞ்சினாள். முன்பெல்லாம் புன்னகை தாங்கிய முகம், குறும்பு வழியும் விழிகள், சீண்டி பேசி கடுப்படிக்கும் உதடுகள் என்று காணப்படுவான். இப்போது அப்படியே மாறிவிட்டது போலிருந்தது. ‘இத்தனை கடுமைகளை என்னிடம் காண்பிக்க, அவரால் எப்படி முடிந்தது? கார்த்திக் இத்தனை கொடியவரா?’ என்று நினைத்து கலங்கினாள். அதேநேரம் உண்மை நிலவரமும் கண்முன் வந்து நின்றது.

‘தன்னுடைய காதல் திருமணத்தில் முடியாத கோபம்; செய்யாத தவறுக்கு தண்டனை அனுபவித்த விதம்; விருப்பமில்லாமல் திருமணம் முடிந்தது’ இவையெல்லாம் அவனை இந்த அளவுக்கு மாற்றி விட்டது. ‘கார்த்திக் இதையெல்லாம் மறந்துட்டு என்னை மன்னித்து ஏற்றுக் கொள்ள மாட்டாரா?’ என்று எண்ணி தவிப்புடன் அலை மோதினாள் கிருத்திகா.

கைவிரலை அருகில் இருந்த கம்பியில் பற்றி மெதுவாக எழுந்தாள். கைகால் நடுக்கம் குறையவில்லை. விழிநீர் பாய்வதும் நிற்கவில்லை. புடவை முந்தானையில் முகத்தை அழுத்தமாக துடைத்தாள். கால்களில் வலுவை கொண்டு வந்து நடக்க முயன்றாள். ஹரிச்சந்திரனின் அறைக்குச் சென்றால் அவர் கண்டு கொள்வார், காலையிலே தன்னுடைய நெற்றிக் காயம் அவரது விழிகளில் பட்டு, வலியை ஏற்படுத்தியதை உணர்ந்திருந்தாள். மறுபடியும் அவரை கஷ்டப்படுத்த விரும்பவில்லை. கீழே இருந்த தன்னுடைய அலுவலக அறைக்குள் நுழைந்தாள். அங்கிருந்த சோபாவில் சாய்ந்து விழிகளை மூடிக்கொண்டாள்.

சற்று நேரத்தில் அவனது வருகை, தங்கையின் பேச்சு தன்னைத் தேடுவது அனைத்தும் கேட்டது. அசையாமல் இருந்தாள் கிருத்திகா. தங்கை பேசுவதும், அவன் மறுப்பதும், இரண்டு கால்கள் அலுவலக அறையை நோக்கி நடந்து வருவதும் தெரிந்தது. சற்று நேரம் பேசினாள் புவனா. அவளது முகவாட்டம் வருத்தத்தைக் கொடுக்க, மறுபடியும் வெளியேறினாள்.

தங்கை அழைத்தும் வர மறுத்து அவள் அமர்ந்திருந்த தோற்றம், அவனுக்குள் தூங்கிக்கொண்டிருந்த சினத்தை கிளறி விட்டது. அவளை போகச் சொல்லிவிட்டு, கிருத்திகாவின் அறைவாயிலில் வந்து நின்றான்.

திடீரென்று கார்த்திக்கை எதிர்பாராமல் வேகமாக எழுந்தாள். விழிநீரை புறங்கையால் துடைத்தாள்.

அவளைக் கண்டு கொள்ளாதவன் போல, “மேனேஜர் மேடத்துக்கு சாப்பாடு எடுத்து தர முடியலயா? இல்லை, இது அவங்க வேலையே இல்லயா?” என்று கேட்டான். அவனை நிமிர்ந்து பார்த்தாள் கிருத்திகா. ஏற்கனவே கருப்பு நிறத்தில் இருப்பவன், மேலும் கரிய நிறத்தை பூசினார் போலிருந்தது.

“என்னடி, பழி சுமத்தி கல்யாணம் பண்ணிக்க தெரியுது. கட்டுனவனுக்கு சாப்பாடு எடுத்துக் கொடுக்க முடியலயா? ஒருவேளை வீட்டுக்காரங்க தனியா வந்து வெற்றிலை பாக்கு வச்சு அழைப்புத் தரணுமோ?” என்று கிண்டலாக கேட்டான்.

அவள் முகம் வாடுவதைக் கண்டு அவன் முகம் இறுகியது.

“வாடி!” என்றான் கட்டளையாக. அதற்கு மேல் நிற்காமல் சென்று விட்டான்.

அவனுக்குப் பின்னால் மெதுவாக நடந்து வந்தாள் கிருத்திகா. காலை உணவை எடுத்து அளவோடு தட்டில் வைத்தாள். அவன் விருப்பமற்று கையை வைத்தான். ‘என் அப்பாவின் உழைப்பு. அதை உண்பதற்கு நான் ஏன் மறுக்கணும்?’ என்ற வீம்புடன் இட்லியை பிய்த்து சட்னியில் தேய்த்தான். அப்படியே வாயில் வைத்துவிட்டு ‘த்தூ…’ என்று துப்பினான். அவள் காரணமறியாமல் நடுக்கத்துடன் நின்றாள். பின்னரே, ‘அச்சச்சோ!! மாமாவுக்காக வச்சிருந்த உப்பு, எரிப்பு குறைவாக இருந்த சட்னியை, அவருக்கு எடுத்துக் கொடுத்துட்டனே.’ என்று எண்ணி செய்வதறியாமல் திகைத்தாள்.

“என்னடி சாப்பாடு இது? மனுஷன் வாயில வைக்கற மாதிரியா இருக்கு? இதை எவனாவது சாப்பிடுவானாடி?” என்று கத்தினான். அருகில் நின்ற பணியாட்கள் திரும்பி பார்த்துவிட்டு வெளியே சென்றனர். அவளுக்கு அவமானம் பிடிங்கி தின்றது. விழிகளில் நீர் நிரம்பி நின்றது.

“ஒழுங்கா ஒரு சாப்பாடு செய்ய தெரியலை. வேற எல்லாம் பிரமாதமா பண்ணத் தெரியுது” என்று வார்த்தையால் தாக்கினான். அவள் உதட்டைக் கடித்து விம்மலை அடக்கினாள்.

அப்போது அகல்யா வந்தாள். அவர்களைப் பார்த்து விசமத்துடன் புன்னகைத்தாள்.

“என்ன கார்த்திக், கல்யாணம் முடிஞ்ச மறுநாளே கவனிப்பு எல்லாம் பிரமாதமா இருக்கு?” என்று கேட்டாள்.

அவன் முகம் மாறியது. கிருத்திகா விரல்களை பிசைந்துகொண்டு நின்றாள்.

“சாப்பாட்டை வாயில் வைக்க முடியலை. இதில எங்கே விருந்து சாப்பிடுவது?” என்று முணுமுணுத்தான். அவள் சிரிப்பை அடக்கினாள்.

“நேத்து பேசியதைக் கேட்டதும், உன்மேல எந்த தவறும் இருக்காது. இவள் ஏதோ மாயாஜாலம் பண்ணி கல்யாணத்தை நிறுத்தி உன்னைக் கட்டிக்கிட்டா, அந்த கோவத்துல நீயும் சாப்பிடாம இருப்ப… உன்னை வந்து சமாதானப்படுத்தணும்னு நினைச்சேன்…” என்று சொல்லிவிட்டு பேச்சை நிறுத்தினாள். அவன் முகம் சிறுத்து சிவந்தது.

“அங்கே சாம்பவி, உன்னை நினைச்சு ஏங்கிப் போய் சாப்பிடாம பட்டினி விரதமிருக்க, நீ கல்யாணம் பண்ணி குடித்தனமே நடத்த ஆரம்பிச்சுட்ட போலவே… இவ்வளவு தானா அவள் மீதான காதல்? இதை அறிஞ்சா அவள் மனம் தாங்குமா?” என்று கொழுத்திப் போட்டாள்.

அவ்வளவு தான் கையருகில் இருந்த எல்லாவற்றையும், தட்டித் தள்ளிவிட்டு எழுந்து சென்றான் கார்த்திக். அவள் மர்மமாக புன்னகைத்தாள். கிருத்திகா தலைகுனிந்து நின்றாள்.

“என்னம்மா, ரொம்ப எதிர்பார்க்கிற போலவே? அதெல்லாம் தப்பில்ல… போடி, போய் மதியத்திற்கான வேலையை கவனி! நான் சொன்ன நேரத்துக்கு சாப்பாடு வந்திருக்கணும். இல்லை…” என்று விரல் நீட்டி மிரட்டிவள், “உன் கழுத்தைப் பிடிச்சு நானே வெளியே தள்ளிடுவேன்” என்றாள். அவள் அதிர்ச்சியுடன் விழிகளை விரித்தாள்.

கிருத்திகாவின் பார்வையை தளராமல் எதிர்கொண்டாள் அகல்யா. .

“கட்டுன புருஷனே உன்னைக் காலணாவுக்கு மதிக்கல. பிறகு அடுத்தவரிடம் எதிர்பார்க்கலாமா? நான் யாரு தெரியுமா? பிரபல தொழிலதிபவர் மதிவாணனின் மகள். நீ ஒண்ணுமில்லாதவள். இந்த வீட்டு வேலைக்காரி! எனக்கு சரிசமமா இந்த வீட்டு மருமகளா வர நினைச்சா, விட்டுருவனா? எனக்கு உன்னால் எவ்வளவு பெரிய அவமானம் தெரியுமா? என் வீட்டாரின் கேள்விக்குப் பதில் கூறவே திணறலா இருக்கு. ‘நீ கொண்டு வந்த வேலைக்காரியே, உன் வீட்டுக்கு எஜமானி ஆகப்போறா’ன்னு கேவலமா பேசுறாங்க” என்று வெறுப்புடன் கூறினாள். அவளால் பதிலுரைக்க முடியவில்லை. இவளோ மேலும் கடினமான வார்த்தைகளால் அர்சித்துக்கொண்டே அகன்று விட்டாள்.

அகல்யாவின் பேச்சும், கார்த்திக்கின் நடைமுறைகளும் அவளுக்கு அதிர்ச்சியுடன், அச்சத்தையும் அளித்தது. இந்த வீட்டில் தனக்கு இருக்கும் ஒரே துணை ஹரிச்சந்திரன் மட்டுமே! அவரது உடல்நிலை பூரண நலம் பெற்று விட்டால், தான் வந்த காரியத்தை நிறைவேற்ற ஏதுவாக இருக்கும் என்று எண்ணினாள். அதனால், யாருக்கும் தெரியாமல் அவள் எடுத்து வைக்கும் சில காரியங்கள், அவளே எதிர்பாராத விசயங்கள் நடக்க காரணமாக அமைய போகின்றன என்பதை அப்போது அறிந்திருக்கவில்லை…!!

சாப்பாட்டு மேஜையின் மீது சிதறி கிடந்த சாதனங்களை எடுத்து மாற்றிவிட்டு சுத்தப்படுத்தினாள். உடல் வலியுடன், மனவேதனையும் ஒருசேர, காலை உணவு உள்ளே போக மறுத்தது. மதிய உணவை தயாரிக்க எண்ணம் பூண்டாள் கிருத்திகா. நேரம் தாண்டியது. அனைத்தையும் அடுக்கு பாத்திரத்தில் எடுத்து வைத்து தயார் செய்தாள். பணியாளை அழைத்து விவரம் தெரிவித்தாள்.

முதல் நாள் அலுவலகத்திற்கு வந்திருந்தான் கார்த்திக். கிருத்திகாவின் கையால் தயாரித்த உணவை உண்ண மனமற்று, எழுந்து சென்று விட்டான். அதைப் பார்த்து உள்ளுக்குள் சிரித்தாலும், “கார்த்திக், காலையிலேயே சாப்பிடலை. வா, வந்து சாப்பிடு. உன்னோட கோபத்தை சாப்பாட்டிலா காட்டுவது?” என்றாள் அகல்யா.

அவன் “பசியில்லை” என்றான். அத்துடன் வெளியேறிவிட்டான். அவர்கள் உண்ட தட்டுகள் அனைத்தையும் எடுத்துக்கொண்டு மறுபடியும் வீட்டிற்கு வந்தான் பணியாள். கார்த்திக் உண்ணவில்லை என்ற விவரத்தை தெரிவித்து அகன்றான். அவள் மனம் புண்பட்டது. தன் கையால் தயாரித்ததால் உண்ணவில்லை என்று நினைத்து மனம் வருந்தினாள்.

அன்றைய இரவு அவனிடம் மாட்டாமல் தப்பிக்க நினைத்தாள். மாமா மற்றும் புவனா இருவரும் உறங்கியதும், தன்னுடைய ஹெஸ்ட் ஹவுஸிற்கு சென்று விட்டாள். இரண்டு நாட்களாக சரியாக உறங்காதது கண்ணைச் சொக்கியது. அப்படியே அடித்துப் போட்டார் போல் உறங்கி விட்டாள்.

கார்த்திக் பால்கனியில் நின்றிருந்தான். விழிகள் இருளில் பதுங்கி பதுங்கி சென்று அறைக்கதவை தாளிட்டவள் மீதே நிலைத்தன. உதடுகள் அலட்சியமாக நெளிந்தன. மனம் ஒரு நிலையில் இல்லாமல் தவித்தது. சாம்பவியை மனதார விரும்பி அவளையே மணந்து கொள்ளும் தருணத்திற்காக காத்திருந்து, அது நிறைவேறாமல் போனது மட்டுமின்றி, அபாண்டமான பழியையும் பெற்று, அவளே வேண்டாம் என்று சொல்லும் இழி நிலைக்கு ஆளாகி விட்டோமோ என்று நினைத்து வருத்தத்துடன் நின்றான்.

கார்த்திக் எம்.பி.ஏ படிப்பை முடித்த பின்னர், தொழிற்கல்வியை முறையாக பயில்வதற்காக, அவனது அண்ணனின் நண்பன் நடத்தி வரும் லண்டன் அலுவலகத்திற்குச் சென்றிருந்தான். அத்தனை நாட்கள் விளையாட்டுத்தனம், குறும்பு, சேட்டை என்று இருந்து வந்தவன், பணியிலும் தன்னுடைய கவனத்தை முழுமனதுடன் செலுத்த துவங்கினான். அங்கு ஒருநாள் சாலையில் சென்று கொண்டிருக்கையில் சாம்பவியை சந்தித்தான். அவள் நம் தமிழ்நாட்டு பெண் என்பது தெரிய வந்தது. அவளது அடக்கம், அமைதி, அழகில் கவரப்பெற்று பின் தொடர்ந்தான். ஒரு கட்டத்தில் அவளிடம் தன்னுடைய காதலை வெளிப்படுத்தினான். அவள் முதலில் மறுத்தாள், பின்னர் ஏற்றுக் கொண்டாள். உணர்ச்சிகளுக்கு இடம் கொடாமல் நடந்து, இருவரும் ஒருவரையொருவர் புரிந்து கொள்ள முயன்றனர். அவர்களுக்கு விருப்பமானதை பகிர்ந்து கொண்டனர். கார்த்திக் தினமும் அவளைப் பார்த்தான். மனம் விட்டுப் பேசினான். தொழிற்கல்வி பயிற்சி முடிவுற்றதும், சொந்தவூரான ஆரல்வாய்மொழிக்கு கிளம்ப ஆயத்தமானான்.

தான் வந்து சேர்ந்த போது, உடன்பிறந்தவள் காயத்ரி விபத்தான விவரம் தெரிய வந்தது. சுவரில் பிரேமிடப்பட்ட சட்டத்திற்குள்ளே புன்னகை தாங்கிய முகத்துடன், புகைப்படமாக மலர் மாலைக்குள் இருந்தாள் அவனது தங்கை!

மாதங்கள் பல கடந்தன. சாம்பவியும் சொந்தவூரான திருநெல்வேலிக்கு வந்திருந்தாள். அவளுக்கு திருமணத்திற்கு மாப்பிள்ளை பார்க்கும் படலம் நடைபெற்றது. உடனே கார்த்திக்கை தொடர்பு கொண்டு விசயத்தை தெரியப்படுத்தினாள். அவன் எவ்வளவு சொல்லியும் கேட்காமல், ஹரிச்சந்திரன் பிடிவாதமாக மறுத்து விட்டார். தகப்பனின் பிடிவாதத்தால் அவதியுற்றவன் அண்ணன், அண்ணியின் உதவியுடன் பெண் கேட்டுச் சென்றான்.

அவர்களைப் பற்றி ஏற்கனவே அறிந்திருந்த பரசுராமன், அடுத்த மறுப்பை முன் வைத்தார். பலரும் சேர்ந்து அவரை சமாதானப்படுத்தி திருமணத்திற்கு நாள் குறித்தனர். இன்னும் சற்று நேரத்தில் தாலி கட்டலாம் எனும் பட்சத்தில், திடீரென்று தன் வீட்டிற்கு மேனேஜராக வந்து நின்று, தன்னிடமே எதிர்த்து வாயடித்தவள், தன்னையே கை நீட்டி அறைந்தவளால் திருமணம் நின்று விடும் என்றோ, அவளே தன்னுடைய மனைவி ஆகிவிடுவாள் என்றோ அவன் எதிர்பார்க்கவில்லை…

நேற்றிரவும், இன்றும் அவளிடம் கடுமையை காட்டியும் மனம் சமாதானம் ஆக மறுக்கிறது. அவளைப் பார்க்கையில் கோபம் கொழுந்து விட்டு எரிகிறது. சாம்பவியின் நினைவு பாடாக படுத்துகிறது. ‘என் பேச்சை ஏற்காமல், என்மீது நம்பிக்கை இல்லாமல் போயிட்டாளே! இப்படி என்னை நிம்மதி இல்லாமல் ஆக்கிட்டாளே?’ என்று நினைத்து, நடந்த எதையும் மறக்க முடியாமல் பரிதவிப்புடன் நின்றான் கார்த்திகேயன்!

தொடர்கதைக்கான கருத்துக்களை கீழே உள்ள லிங்கில்👇👇👇 பதிவு செய்யுங்கள் ...

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3.3370/