காதல் சதுரங்க ஆட்டம் 2

அத்தியாயம் : 2


த்திரம், ஆக்ரோஷம், உச்சகட்ட கோபத்தில் யாரிடமும் பேசாமல் அவளையே முறைத்துக்கொண்டு நின்றான் கார்த்திக். அவனது கையால் திருமாங்கல்யத்தை பெற்று, மனைவி என்னும் பதவியை அடைந்தாள் கிருத்திகா. பெற்றவரின் உள்ளம் எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்தது. ‘இறைவா இக்கணமே என் உயிரை எடுத்தாலும் நிறைவாக மரணமடைவேன்’ என்று எண்ணிக்கொண்டே மனதார நன்றி தெரிவித்தார்.

கார்த்திக், கிருத்திகா இருவரும் அவரிடம் ஆசி பெற்றனர். அடுத்த நிமிடம் அங்கிருந்து அகல முயன்றவனை அண்ணன் கோகுல் அமைதிபடுத்தினான். பிறரின் கேலிப் பார்வையில் முகம் சிவந்து ஆவேசம் தாளாமல் நின்றான் அவன். அதற்கு மேலும் சோதிக்காமல் வீட்டிற்கு அழைத்து வந்து விட்டான் கோகுல்.

வீட்டு வாயிலின் முன்பகுதியில் காரிலிருந்து இறங்கியவன், ஆரத்தி கரைப்பதற்கே பொறுமை அற்றவன் போல நின்றான். முடிந்ததும் யாரையும் நிமிர்ந்து பாராமல் தன்னுடைய அறைக்குள் நுழைந்து கதவைத் தாளிட்டுக் கொண்டான்.

கிருத்திகா, நேராக தன்னுடைய ஹெஸ்ட் ஹவுஸிற்கு போக முயன்றாள். அங்கு விடாமல் அவளைத் தன்னுடன் அழைத்துச் சென்றாள் புவனா. பூஜை அறையில் விளக்கேற்ற சொல்லிவிட்டு, தன்னுடைய அறைக்கு அழைத்து வந்தாள்.

எதிர்பாராமல் ஏதேதோ நிகழ்ந்து விட, அச்சம் கலந்த பதட்டத்துடன் காணப்பட்டாள் கிருத்திகா. கார்த்திக்கின் அக்னி பார்வையும், காதல் நிறைவேறாமல் போய்விட்ட கோபமும், ‘உன்னை விடமாட்டேன்’ என்ற வார்த்தை உச்சரிப்புகளும் அவளது பீதியை மேலும் அதிகப்படுத்தியது. ‘கார்த்திக் நடந்ததை எல்லாம் மறந்துட்டு, என்னை அவர் மனைவியாக ஏற்றுக் கொள்வாரா? இல்லை, அடக்கப்பட்ட கோவம் அனைத்தையும் கட்டவிழ்த்து விடுவாரா?’ என்று தெரியாமல் கலக்கத்துடனே இருந்தாள்.

மாடியில் தன்னுடைய அறையில் சினத்தை அடக்க முடியாமல் அங்கும் இங்குமாக நடந்து கொண்டிருந்தான் கார்த்திக். ‘எவ்வளவு நம்பிக்கை அவள் மீது வச்சுருந்தேன். அவள் சொல்வதெல்லாம் கேட்டு உண்மைன்னு நம்பி அவளோடு சுத்திக்கிட்டே இருந்தேன். அப்பாவின் பேச்சைக் கூட கேட்காமல் கல்யாணத்திற்கு ஏற்பாடு செஞ்சிருந்தேன். எப்படி அவளால் முடிஞ்சது? நான் சொல்வதைக் கேட்காமல் போயிட்டாளே…’ என்று எண்ணிக்கொண்டே, கோபம் சற்றும் குறையாமல் காணப்பட்டான்.

அப்போது, கிருத்திகாவின் நியாபகம் வந்தது. “பாவி! எல்லாவற்றிற்கும் இவள் தான் காரணம். எவ்வளவு நம்பிக்கையுடன் சிரித்துப் பேசி பழகினேன். எல்லா விசயத்தையும் மறைக்காம பகிர்ந்துகிட்டேன். கடைசியில், அனைத்து உறவினர், நண்பர்கள் முன்னிலையில் என்னைக் கேவலப்படுத்தி விட்டாளே!” என்று கொதித்துப் போய் நின்றான்.

“நான் செய்யாத குற்றத்துக்கு தண்டனையா, என்னோட வாழ்க்கையை அழிச்சிட்டியே! இதுக்கு பதிலடி தராம நான் விட மாட்டேன்டி. உன்னைக் கதற கதற அழ வச்சு, கண்ணீர் வடிக்க விடல… நான் கார்த்திக் இல்லடி!” என்று சபதமிட்டான். அவனால் தன்னை அடக்க முடியவில்லை. கண்முன் இருப்பதை எல்லாம் அடித்து நொறுக்க வேண்டும். தன்னை இந்த நிலைமைக்கு ஆளாக்கியவளை உயிரோடு சமாதி கட்ட வேண்டும் போலிருந்தது.

மாலை முடிந்து இருள் சூழ துவங்கியது. சோபாவில் சாய்ந்திருந்த கிருத்திகா அப்படியே உறங்கி விட்டாள். அவளது தோளில் கை வைத்து எழச்செய்தாள் புவனா. விழிகளை கசக்கிக்கொண்டே திறந்து பார்த்தாள். காலையில் நடந்த சம்பவம் நினைவிற்கு வந்தது. அச்சமும் விடாமல் தொடர்ந்தது …

மெதுவாக எழுந்து தான் தங்கியிருக்கும் ஹெஸ்ட் ஹவுஸை நோக்கி நடந்தாள். புவனா மறித்தாள். அவள் அறையிலேயே குளிக்க சொன்னாள். மாலை நேரம் அணிவதற்காக வாங்கி வைத்திருந்த பிங் நிற கற்கள் பதித்த பட்டுப்புடவையை அணிய உதவினாள். அவள் மறுத்தும் கேட்காமல் தன்னுடைய வேலையிலேயே கவனமாக இருந்தாள். புடவை, நகை, பூவில் அப்படியே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப் போயிருந்தாள் கிருத்திகா. ‘அண்ணனுக்கு சாம்பவியை விட இவங்க தான் பொருத்தமானவங்க’ என்று எண்ணினாள்.

இரவு உணவு தொண்டைக்குள் போக மறுத்தது. அடுத்து என்ன என்று தெரியாமல் கைகால்கள் உதறலெடுக்க துவங்கியது. தன்னுடைய அறைக்குள் புகுந்து ஒடுங்கி கொள்ளலாம் என்று நினைத்தால் புவனா விட மறுக்கிறாள். மாமனாரைப் பார்த்ததும் விழிகள் நனைந்தன. அவரது காலடியில் அமர்ந்து மடியில் தலை சாய்த்தாள். அவரது வலது கரம் ஆசிர்வதிப்பதை போல தலையின் மீது படிந்து, மென்மையாக வருடிவிட்டது. சற்றே நிம்மதியும் பிறந்தது…

கார்த்திக் கீழே வரவில்லை. மேலே சென்று உணவை கொடுத்துவிட்டு வந்தாள் தங்கை புவனா. அவன் சீறினான். அவள் சிரிப்புடன் அகன்றாள்.

இரவு நேரம் ஒன்பது மணியளவில் பட்டுப்புடவை சரசரக்க, கையில் ஏந்திய பால் செம்புடன் மாடியறைக்கு நடந்து வந்தாள் கிருத்திகா. கணவனின் அறைக்கதவில் கை வைத்ததும் தயங்கினாள். மனதை ஒருமுகப்படுத்திக் கொண்டு மெதுவாக உள்ளே நுழைந்தாள்.

அங்கே, எரிமலையாய் குமுறும் மனதை அடக்க வழியறியாமல் நின்று கொண்டிருந்தான் கார்த்திக். கதவு திறக்கும் ஓசை, கொலுசு சப்தத்தில் திரும்பினான். அவளை அந்த நேரத்தில் அதுவும் தன்னுடைய அறையிலேயே காணவும், அப்படியே வெறி பிடித்தது போலிருந்தது.

வேகமாக வந்தான். அவனது வேகம் அச்சத்தைக் கொடுக்க, பின்னோக்கி நடந்தாள் கிருத்திகா. பாதங்கள் புடவையில் தட்டி தடுக்கியது. தடுமாற்றத்துடன் நின்றவள் கையில் இருந்த பால் செம்பு அவள் மீதிலேயே கவிழ்ந்து கொட்டியது. சூடான பால் வயிற்றுப் பகுதியில் பட்டதும் உதடுகள் “அம்மா!!” என்று உச்சரித்தன. விழிகள் இரண்டும் நீரால் நிரம்பி வழிந்தன. கை கொண்டு வேகமாக தட்டி விட்டாள் கிருத்திகா.

அவளையே பார்த்துக்கொண்டு நின்றான் கார்த்திக்.

“என்ன எரியுதா? இப்படித்தானே என் மனசும் எரிஞ்சுட்டு இருக்கும். நல்லா அனுபவி! இது மட்டுமல்ல இன்னும் நிறைய இருக்கு” என்றான். அவள் நிமிர்ந்து பாராமல் நின்றாள். அவளது கையைப் பற்றியிழுத்தான் கார்த்திக்.

“உனக்கு நான் என்னடி பாவம் செஞ்சேன்? ஏன் அப்படியொரு பழியை என்மேல தூக்கிப் போட்ட? சாம்பவியும், நானும் ஒருத்தருக்கொருத்தர் விரும்பியது தெரிஞ்சும், என்னைக் கல்யாணம் செய்துக்க உனக்கு எப்படிடி மனசு வந்தது? இதுதான் நான் காட்டிய பாசத்துக்கு நீ செலுத்துற நன்றி விஸ்வாசமா? என்னைப் பொருத்தவரைக்கும் நீ இந்த வீட்டு வேலைக்காரி மட்டுமே. அதுக்கும் மேல வர ஆசைப்பட்டா, அப்புறம் சேதாரம் உனக்குத்தான் பலமா விழும்!” என்று கடுமையாக எச்சரித்தான்.

அவள் சூடான பால் கொட்டியதில் வயிறு, கால் பகுதியில் எரிச்சல் தாளாமல் நின்றாள்.

“போதும், ரொம்ப நடிக்காதே! நீ செய்றதையெல்லாம் உண்மைன்னு நம்பிட்டுருக்க, நான் ஒண்ணும் முட்டாள் கிடையாது. எங்க அப்பாகிட்ட நல்லவ மாதிரி நாடகமாடி ஏமாத்தியது போல, என்கிட்டேயும் நடக்கலாம்னு நினைச்சா, அது இந்த ஜென்மத்தில் நடக்காது. எப்படி மனசாட்சியே இல்லாம எங்களைப் பிரிச்சியோ! அதே, உன் கண்ணு முன்னாடி, அவள் கழுத்தில் தாலியை கட்டி வாழ்ந்து காட்டலை, நான் கார்த்திக் இல்லடி!” என்று சவாலிட்டான்.

பதில் கூறா பெண்ணவளின் மெளனம், மேலும் அவனது சினத்தை அதிகப்படுத்தியது.

“என்ன அப்படி பார்க்கிற? எப்போ பொதுவெளியில் அத்தனை பேர் முன்னிலையில், அப்படியொரு பழியை என்மேல தூக்கிப் போட்டுட்டியோ! அப்பவே நான் முடிவு பண்ணிட்டேன். உனக்கும் எனக்கும் எந்தவொரு சம்மந்தமும் இல்லை. நீ யாரே நான் யாரோன்னு… உன் கழுத்துல நான் கட்டியிருப்பது தாலி இல்லை தூக்கு கயிறு! ஒவ்வொருத்தரும் அவங்க புருசனோடு சந்தோஷமா இருக்கிறதை பார்த்து நீ துடிதுடிச்சு ஏங்கணும். நான் அன்னைக்கு செய்தது தப்பு, என்னை மன்னிச்சிருங்கன்னு வாய் விட்டுக் கதறணும். எந்த எண்ணத்தில் இப்படியெல்லாம் நடந்துக்கிட்டயோ, அதில் நீ தோத்து, தன்னாலேயே இந்த வீட்டை விட்டு வெளியே போகணும். போக வைப்பேன்…” என்றான்.

உடல் எரிச்சலுடன் மனமும் தகித்தது. வாய் திறக்க முடியா அவல நிலை வேறு அவளை வதைத்தது. இனிமேல் எப்படி இதே வீட்டில் வசிக்கப் போகிறோம் என்ற கேள்வியே மேலோங்கி நின்றது. தவிப்புடன் அவனையே பார்த்தாள் கிருத்திகா.

“என்ன? அடுத்து என்ன நாடகமாடி என்னை மயக்கலாம்னு திட்டம் போடுறியா? நீ எவ்வளவு பெரிய ரதியா இருந்தாலும் இந்த கார்த்திக்கை அசைக்க முடியாது. இந்த வீட்டில் நீயொரு வேலைக்காரி. நான் சம்பளம் கொடுக்கும் எஜமான்! அதைத்தாண்டி அடுத்த எல்லைக்குள் வர நினைச்சா, அந்த இடத்திலேயே குழி தோண்டி புதைச்சிடுவேன்” என்று சீறினான்.

பொட்டு பொட்டாக தெரித்த நீர்த்துளிகள் கன்னம் வழி பாய்ந்து கழுத்தை நனைத்தது. அதைப் பார்த்தவன் மேலும் சினந்தான்.

“உன்னோட நடிப்பு, நாடகம் எல்லாத்தையும் என் அப்பா கிட்டேயும், அண்ணி கிட்டேயும் வச்சுக்க. என்கிட்டே வேணாம். வெளியே போ! என்னோட அறையில் உனக்கு இடமில்லை. எப்போதாவது இங்கே பார்த்தேன். அத்தோடு உன்னை இல்லாம ஆக்கிடுவேன்” என்று கர்ஜித்துக்கொண்டே, அவளைப் பற்றி வாசற்கதவை நோக்கி தள்ளி விட்டான். அதில் கதவு கைப்பிடி அவளது நெற்றியை பதம் பார்த்தது. சூடான குருதி நெற்றியில் இருந்து வழிய துவங்கியது.

தலையை அழுத்தமாக பற்றிக்கொண்டே தள்ளாட்டத்துடன் சுவரில் சாய்ந்தாள் கிருத்திகா. தலை விண் விண்ணென்று வலியால் தெரித்தது. அப்படியே வெளியேறி அங்கு கிடந்த சோபாவில் அமர்ந்தாள். தலைவலியுடன், மனவலியும் ஒருசேர தலை கிறுகிறுத்தது. அதிலேயே மயங்கி சரிந்தாள்.

காலை நேரம் யாரோ தோளைத் தட்டி, தன்னுடைய பெயரைச் சொல்லி அழைப்பது போலிருந்தது. மெதுவாக விழிகளை அசைத்து திறந்தாள். விடிந்து நெடுநேரமாகி விட்டது தெரிந்தது. வேகமாக எழுந்தாள். நெற்றியில் பட்ட காயம் வலித்தது. தொட்டுப் பார்த்தாள். யாரோ துடைத்து மருந்திட்டு சென்றிருக்கிறார்கள் என்பது தெரிந்தது. மெதுவாக எழுந்து கீழே வந்தாள். தான் தங்கியிருக்கும் ஹெஸ்ட் ஹவுஸிற்குள் நுழைந்தாள். தன்னுடைய அன்றாட பணிகளை முடித்தாள்.

நேரம் ஒன்பது கடந்தது. மாமனாருக்கு உணவு கொடுக்கும் நேரமானதால், வீட்டிற்குள் நுழைந்தாள் கிருத்திகா. சமையல் அறைக்குச் சென்று சுகர் நோயாளிக்கு ஏற்ற உணவை தயாரித்தாள். அப்போது அகல்யா அங்கு வந்தாள். அவளது நெற்றியை பார்த்துவிட்டு புருவத்தை சுருக்கினாள். நேற்றைய இரவு நடந்ததை ஓரளவு ஊகித்துக் கொண்டாள். மெதுவாக பேச்சைத் துவங்கினாள்.

“என்ன கிருத்திகா, ராத்திரி கவனிப்பெல்லாம் பலமா இருக்கும் போலவே? அதுக்கு, இப்படியா வெளியே தெரியும் அளவுக்கு நடந்துக்குவாங்க?” என்று கேட்டாள்.

அவள் கேலியாக கேட்கிறாளா அல்லது நிஜமான வருத்தத்துடன் கேட்கிறாளா என்று தெரியவில்லை. பதில் கூறாமல் நின்றாள் கிருத்திகா.

“கிருத்திகா, நீ யார்? எதுக்காக இங்க வந்திருக்கேன்னு உன் புருஷன் மற்றும் வீட்டாரிடம் சொன்னால் அப்புறம் என்னாகும்னு கொஞ்சமாவது நினைச்சுப் பார்த்தியா? அதனால என்ன பண்ற… இத்தனை நாள் எப்படி நடந்துக்கிட்டயோ அதேபோல எனக்கொரு நல்ல… நடந்துக்கோ! இல்லை, உன் கணவன் கையாலேயே கழுத்தை பிடிச்சு வெளியே தள்ள வச்சுருவேன்” என்று மிரட்டினாள். அவள் மீது அச்சம் கலந்த பார்வையை பதித்தாள் கிருத்திகா.

“வேலைக்கு வந்த கொஞ்ச நாளிலேயே, வீட்டு முதலாளியோட மகன் மேல பழியை போட்டு, கல்யாணமே பண்ணிக்கிட்ட உனக்கு நான் சர்வசாதாரணமானவள். அதேநேரம், உன்னாலே என்னை எதுவும் பண்ண முடியாது. முடிஞ்சா பண்ணிக்கோ! அப்புறம் இனிமேல் நீயொரு ஊதியமில்லா வேலைக்காரி. இன்னையில் இருந்து வீட்டு சமையல் முழுவதும் உன் பொறுப்பு. மதியம் 12:45 மணிக்கு சரியா சாப்பாடு அலுவலகத்துக்கு வந்திருக்கணும். என்னை ஏமாத்தலாம்னு நினைச்சா நடக்காது. ஏன்னா, இங்கு என்ன நடந்தாலும் எனக்குத் தெரியாம போகாது. புரிஞ்சுதா?” என்று அதிகாரமான குரலில் கூறினாள்.

அவள் குனிந்த நிலையில் தலையசைத்தாள். இவள் சிரித்துக்கொண்டே அகன்று விட்டாள்.

அகல்யாவின் பேச்சைக் கேட்டவளின் முகம் வாடியது. நேற்றிரவு கணவன் பேசிய பேச்சுக்கும், இன்று இவள் நடந்து கொள்ளும் முறைக்கும் எந்தவொரு வித்தியாசமும் இல்லை என்று நினைக்க தோன்றியது. அதேநேரம் எப்படி மறுபடியும் அதுபோலவே நடந்து கொள்வது என்ற கேள்வியும் எழுந்தது? தான் வந்த காரியம் நிறைவேறாமல் எடுத்த காலை பின் வாங்க கூடாதென்று முடிவு செய்தாள் கிருத்திகா.

காலை உணவை தயார் செய்து மாமனாரின் அறைக்கு எடுத்துச் சென்றாள். அவளது முகத்தை நிமிர்ந்து பார்த்து யோசனையுடன் புருவங்களை சுருக்கினார் ஹரிச்சந்திரன். புவனா மற்றும் அவருக்குத் தெரிந்து விட்டது. மகனுடைய கோபம் மருமகளை எங்கனம் பதம் பார்த்திருக்கிறதென்று! அவளுக்காக பரிதாபப்பட்டாலும் அப்படியே விட்டு விட மனம் வரவில்லை. சூடான காஃபி கோப்பையை பார்த்தவுடன் மேலே பார்த்து கை உயர்த்தினார். அவள் அவசரமாக தலையசைத்தாள். அவர் ‘கொஞ்சம் பொறுத்துக்கோ! எல்லாம் சரியாகிடும்’ என்று மெதுவாக கூறினார்.

அவரை வருத்த மனம் வரவில்லை. வேறுவழியில்லாமல் அவனது அறைக்கு வந்தாள். கதவில் கை வைக்கும் போது நேற்றைய சம்பவம் நினைவுக்கு வந்தது. உள்ளே போக மனம் வரவில்லை. அச்சத்துடன் மெதுவாக திறந்தாள். அவன் அங்கு இல்லை, காலை நேர உடற்பயிற்சிக்காக ஜிம்மில் இருந்தான். பணியாளிடம் விவரத்தைக் கேட்டு இறைவனை மனதில் நினைத்துக்கொண்டே, ஒவ்வொரு எட்டுகளையும் பிரத்யனப்பட்டு எடுத்து வைத்தாள்.

ட்ரெட் மில்லில் வியர்வை வழிய கையில்லா பனியன், டிராக் சூட்டுடன் ஓடுபவனை பார்த்ததும் தன்னையறியாமல் நின்றுவிட்டாள். வேகமாக ஓடிக்கொண்டிருந்த கார்த்திக், எதேச்சையாக திரும்பினான். அவன் முகம் கடுகடுத்தது. ஓட்டத்தை நிறுத்தினான். டவலை எடுத்து முகத்தை துடைத்துக்கொண்டே வந்தான். நடந்தானா, ஓடினானா தெரியவில்லை. அத்தனை வேகம் இருந்தது கால்களில்! அவனது ஆளுமை அச்சப்பட வைத்தது. சுவரோடு ஒட்டி நின்றாள் கிருத்திகா…

தொடர்கதைக்கான கருத்துகளை கீழே உள்ள லிங்கில் பதிவு செய்யுங்கள் நட்புக்களே…

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2.3339/