காதல் சதுரங்க ஆட்டம் 18

அத்தியாயம் : 18

திடீரென்ற கேட்ட குரலில் இருவரும் திடுக்கிட்டு போயினர். கைகளை விலக்கிவிட்டு வேகமாக எழுந்து நின்றனர். அங்கு கர்ண கொடூரமாக முகத்தை வைத்துக்கொண்டு பரசுராம் நின்றார். அவர் அருகில் சாம்பவி வெறித்துக்கொண்டு நின்றாள்.

“என்ன அப்படி முழிச்சுட்டு இருக்க? திருட்டுத்தனம் வெளிபட்டுடுச்சின்னா? அன்னைக்கு அத்தனை பேர் முன்னாடியே நீ கேவலமா நடக்க பார்த்தவள், இந்த இடமெல்லாம் உனக்கு சர்வ சாதாரணம்” வார்த்தைகளால் அவளைக் கூனிக்குறுக செய்தார் பரசுராம்.

காரில் வந்து கொண்டிருந்த கார்த்திக், செவியில் விழுந்த நாரசமான வார்த்தைகளைக் கேட்டு, கோபத்தில் வேகத்தை அதிகப்படுத்தினான்.

“அதான் உனக்கு இவன் இருக்கானே. பிறகும் எதுக்கு என் மகளோட வாழ்க்கையை அழிக்கப் பார்த்த? அன்னைக்கு உன்னைப் பார்த்ததும் மொத்த பல்லையும் காட்டுறான். ஒட்டுறான், தோளை தொடுறான். குழைஞ்சு குழைஞ்சு பேசறான். கைய பிடிச்சுட்டு ரோடுன்னு பார்க்காம ஜோடியா நடந்து வரான். நீ போனதும் உயிரே போயிட்ட மாதிரி அப்படியே நிற்கிறான். அவனைப் போய் இவள் கல்யாணம் பண்ணிக்கப் பார்த்தா நான் சம்மதம் சொல்லுவனா? அதான் உடனே, என் மகனோட நண்பனுக்கு கல்யாணம் செய்து வைக்க ஏற்பாடு பண்ணினேன். அதுக்குள்ள வந்து திடீர்னு கல்யாணத்துக்கு பேசி முடிச்சிட்டான். அத்தோடு போகல, உன்னை நினைச்சு ஏங்கிட்டு திரிகிறான். கல்யாணத்தன்னைக்கு உன்னோடு சரசம் பண்ணிட்டு இருந்தான்” என்று முகம் இறுக கூறினார்.

அவர் பேச பேச கேட்க முடியவில்லை. அதைவிட கார்த்திக்குடன் அன்று பேசிய நிகழ்வே கண்ணுக்குள் வந்து நின்றது. உதட்டைக் கடித்து தன்னை அடக்க முயன்றாள் கிருத்திகா. பரசுராமின் பேச்சுக்களை கேட்டு கொதித்துப் போனான் அசோக். இன்றோடு அவரை கொன்று போட்டு விடும் வெறியில் வந்து கொண்டிருந்தான் கார்த்திக்.

“வயசுல பெரியவர் மாதிரி நடந்துக்காம இப்படித்தான் அநாகரீகமா பேசுவதா? மேனர்ஸ்னா என்னான்னு தெரியாது?” சினத்தை அடக்க முடியாமல் கேட்டான் அசோக்.

“அது உனக்கும், அவளுக்கும் தெரியலயே! பிறகு மற்றவரிடம் எதிர்பார்க்கலாமா? என் பொண்ணு சரியா சாப்பிடாமா, யார் கிட்டேயும் பேசாம, நிம்மதி என்பதையே தொலைச்சுட்டு நடைபிணம் போல் திரிகிறா. நீங்க என்னன்னா வெட்கமில்லாம பொது இடத்திலேயே கும்மாளம் அடிக்கிறீங்க!” என்று கத்தினார் பரசுராம்.

அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் என்ன நடக்கிறது என்று வேடிக்கைப் பார்க்க துவங்கினர். அவளுக்கு அவமானமாகவும், குற்றவுணர்ச்சியாகவும் இருந்தது. தன்னால் சாம்பவியின் காதல் வாழ்க்கை அழிந்து விட்டதே என்று நினைத்து இயலாமையால் கண்ணீர் வடித்தாள் கிருத்திகா.

அசோக் பொறுக்க முடியாமல் சாம்பாவியை பார்த்தான். “என்ன மிஸ் இது? உங்க அப்பா இப்படி நாகரீகம் இல்லாம பேசுகிறார். நீங்களும் எதுவும் கேட்காம அமைதியா நின்னுட்டு இருக்கறீங்க?” என்று கேட்டான்.

அவள், “எங்க அப்பா கேட்பதில் என்ன தவறு? நானும் அவரும் ஒருவருக்கொருவர் விரும்பி கல்யாணம் வரைக்கும் வந்து, இவளால் தானே பிரிஞ்சோம்? இவளோட வாழ்க்கை அழிஞ்சிட கூடாதேன்னு நானும் பாவம் பார்த்து விலகிப் போனேன். அது எவ்வளவு பெரிய தவறுன்னு இப்போ புரியுது. பாவம் கார்த்திக், நிம்மதியில்லாம, சரியா சாப்பிடாம உடல் மெலிஞ்சி போயிட்டார். என்னைப் பார்த்ததும் ஓடி வந்து பேசினார். நலம் விசாரித்தார். ‘நீ என்ன சொன்னாலும் கேட்கறேன். என்னை விட்டு விலகிப் போகாதே’ன்னு சொன்னார். அவர் மனசு மாறி உன்னோடு வாழணும்னு கடுமையா பேசிட்டு போனேன். ஆனால், நீ இப்படிப்பட்டவளா இருக்ககூடும்னு நான் எதிர்பார்க்கல. இப்பவும் நான் பேசினால், அடுத்த நிமிடம் உன்னைத் துரத்தி விட்டுட்டு என்னைக் கல்யாணம் செய்துப்பார் கார்த்திக். ஏன்னா அவருக்கு உன்னை விட என்னைத்தான் ரொம்ப பிடிக்கும்!” என்று கர்வமாகவும், திமிராகவும், கோபமாகவும் கூறினாள்.

சாம்பவியின் பேச்சு அவளது உயிர் மூச்சையே நிறுத்தி விட்டது எனலாம். ஏற்கனவே அவர்களைப் பிரித்து விட்டமே எனும் வருத்தத்தில் அவள் நிம்மதியற்று தவிக்கிறாள். இந்நிலையில் அவளே அப்படி பேசவும், ‘இக்கணமே மரணித்து விட மாட்டோமோ’ என்று கலங்கினாள் கிருத்திகா.

அசோக் சாம்பவியை அறைந்து விடும் நோக்கில் சாடினான். பரசுராம் மறித்தார். கிருத்திகா நண்பனின் கைப்பற்றி இழுத்தாள்.

“அசோக், நாம போயிடலாம். கேன்டீன்ல வச்சு கலாட்டா வேண்டாம். அப்புறம் அவங்களுக்குத் தெரிஞ்சா பெரிய பிரச்சனை ஆகிடும்” அழுகையினூடு அவனைக் கட்டாயப்படுத்தி அழைத்தாள்.

மனம் தாங்காமல் அவளைத் தட்டிக் கொடுத்தான் அசோக்.

“சூரியனை பார்த்து தெருவில் போகும் நாய்கள் குலைப்பதால் சூரியனுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை கீர்த்தி. அதுபோல நம் வாழ்க்கையிலும் சில நாய்களின் குறுக்கீடு இருக்கத்தான் செய்யும். அதுக்காக தரம் கெட்டுப் போயிட்டதா அர்த்தமில்லை! உன் கணவர் உன்மேல உண்மையான நேசத்தை மனசு பூரா வச்சுருக்கார், நீ வேறு எதையும் நினைச்சுக் கவலைப்படாதே!” என்றான்.

“யாரைப் பார்த்துடா நாய்னு சொல்ற? எங்களையா… உன்னையும் என் பொண்ணு இந்த நிலைமையில் இருப்பதுக்கு காரணமான அவளையும் சும்மா விடமாட்டேன்” என்று கொக்கரித்துக்கொண்டே மருத்துவரைக் காண சென்றார் பரசுராம்.

அசோக்குடன் அறைக்குச் சென்றாள் கிருத்திகா. மனதில் மருந்திற்கும் நிம்மதி என்பதே இல்லாமல் தவித்தது. ‘தவறு செய்துட்டமோ, அவங்க ரெண்டு பேரும் விரும்புறாங்கன்னு தெரிஞ்சும் கல்யாணம் செய்து தப்பு பண்ணிட்டமோ! அவர் மேல உண்மையான பாசம் இல்லாமலா அவள் அப்படி பேசிட்டு போறா?’ என்று நினைத்து கட்டிலில் சரிந்து விழிகளை மூடிக்கொண்டாள். மூடிய இமையோரம் நீராக வடிந்தது. அவள் விம்மி அழுவதை பார்க்க முடியாமல் மனம் கலங்க வெளியேறினான் அசோக்! காரணமறியாமல் திகைப்புடன் நின்றாள் புவனா.

அரைமணி நேரத்திற்குப் பிறகு மருத்துவரை பார்த்து விட்டு, மருந்து மாத்திரையுடன் தன்னுடைய காரில் அமர்ந்தார் பரசுராம். சாம்பவி காரை இயக்கினாள். மருத்துவவளாகத்தை விட்டு சாலைக்கு வந்து வேகமாக சென்று கொண்டிருந்த கார், ஆள் ஆரவற்ற இடத்தில் சற்று வேகத்தைக் குறைத்தது.

அச்சத்தில் கை நடுங்க அருகில் அமர்ந்திருந்த அப்பாவை பார்த்தாள் சாம்பவி. அவரது பார்வை கூர்மையுடன் எதிரில் மறித்து நின்ற ஃபாரின் காரை நோக்கி பாய்ந்தது. கார்த்திகேயன் அமர்ந்திருந்தான். கோபமாக, ஆத்திரமாக ஆவேசமாக, அனைத்தையும் அடித்து நொறுக்கி விடும் சூறாவளியாக… காரின் வேகத்தை அதிகப்படுத்தினான். அவள் பின்னாக்கி செலுத்தினாள். சற்று நேரத்தில் நகர முடியாமல் பயப்பயந்து சுழல, வேகத்தை குறைத்தாள். இரண்டு கார்களும் ஒன்றை ஒன்று மோதிவிடுவது போல் நெருங்கியது.

எதிரில் நின்ற காரில் இருந்து இறங்கி நின்றவன் தோரணையும், முகத்தில் தெரிந்த இறுக்கமும், விழிகளில் தெரித்த சீற்றமும், நடையில் காணப்பட்ட அழுத்தமும் பார்த்துக்கொண்டிருந்த அவளைப் பதற செய்தது. அச்சத்தில் காரை செலுத்த எண்ணினாள் சாம்பவி. அதற்கு முன் கார்த்திகேயனின் வலது கரம் சாவியை கழற்றி எடுத்திருந்தது. அவள் பரசுராமை ஏறிட்டாள். அவர் கோவமாக வெளியே வந்தார்.

“உனக்கு எவ்வளவு தைரியமிருந்தா, இப்படி பண்ணிட்டுருப்ப? சாவியை கொடுத்துட்டு விலகிப் போடா!” என்று மரியாதையில்லாமல் பேசினார்.

அவன் விழிகள் அலட்சியமாக அகன்றது. சாம்பவியை பார்த்து கை காட்டினான். அவள் வெளியேறி அப்பாவின் புறம் சென்று மறைந்து கொண்டாள்.

“ராணி மங்கம்மா மாதிரி டயலாக் எல்லாம் விட்டுட்டு, இப்போ முயல்குட்டி மாதிரி பம்மி ஓடுற. அப்படியே உன்னோட வீரத்தை கொஞ்சம் என்கிட்டேயும் காட்டு பார்க்கறேன்” என்று சொல்லிக்கொண்டே, அவனது காரின் முகப்பு பகுதியில் ஏறி அமர்ந்தான்.

சாம்பவி அச்சத்துடன் உடல் நடுங்க நின்றாள். “என்ன? வீராப்பு, சத்தம், கோபம் எல்லாம் வேற ஆளுகிட்ட மட்டும் தானா? எங்கிட்டே எதுவும் இல்லையா?” என்று கேட்டுக்கொண்டே உதட்டைப் பிதுக்கினான்.

அவள் மிடறி விழுங்கினாள். நடுங்கி கொண்டிருந்த கைவிரல்களை அழுத்தமாக பற்றிக்கொண்டாள்.

“என்ன சொன்ன? நீ வான்னு கூப்பிட்டா நாய்க்குட்டி மாதிரி உன் பின்னாடியே வந்து நிற்பேனா?” என்றான்.

அவள் அவசரமாக தலையசைத்தாள். “பின்னே என்ன சொன்ன?”

வாய் திறக்க முடியாமல் தடுமாறினாள் சாம்பவி.

“அழகு, அடக்கம் நிறைஞ்ச பக்கத்து ஊர் பொண்ணு, வெளிநாட்டுக்கு வந்தும் பழக்கவழக்கம் மாறாம அப்படியே நடக்குதேனு, உன்மீதான நல்ல அபிப்ராயத்தில் வலிய வந்து பேசினேன். நீ பெரிய இவள் மாதிரி சிலுப்பிட்டு போனால்… நான் உன்னை சும்மா விட்டுருவனா? அதான் பின்னாடி அலைஞ்சேன். உன் மனசை மாத்தினேன். உன்கிட்ட சிரிச்சு பேசினேன். ஜாலியா ஊர் சுத்தி டைம் பாஸ் பண்ணிட்டு ஊருக்கு வந்தேன். அப்புறம் நீயாக வலிய வந்த… ‘அப்பா, வீட்ல கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்றாங்க. வாங்க கார்த்திக்’னு கூப்பிட்ட! நானும் உடனே வந்தேன். கல்யாணத்தன்னைக்கு என்மேல நம்பிக்கையில்லாம விட்டுட்டு போன. நீ உண்ணாம உறங்காம என்னோட ஞாபகத்தில் அழுதுட்டு இருப்பதா கேள்விப்பட்டு, உன்னைத் தேடி வந்து பேசினேன். அதுக்கு என்ன சொல்லிட்டு போன?? அப்புறம் எதுக்கு தேவையில்லாத விசயத்துல நீயும் உன் அப்பனும் தலையிடணும்?” என்று விழிகளில் கடுமையுடன் கேட்டான்.

பரசுராம் செவியில் ஈயத்தை காய்ச்சி ஊற்றியது போலிருந்தது. மகளை முறைத்தார்.

“என்ன மிஸ்டர். பரசுராம்! முறைப்பெல்லாம் பலமா இருக்கு. பெயருக்கு ஏற்றார்போல் கண்ணியமா இருக்காம மாமா வேலையா பார்க்கிற? அதான் இப்போ மகளோடு சேர்ந்து உச்சி வெயில்ல தியானம் பண்ணிட்டு இருக்க…” என்று கேலியாக கூறினான்.

“நான் என்னடா பண்ணினேன்? உன்கிட்ட பேசுவதே அவமானம்! பெரிய ஒழுக்க சீலன் மாதிரி பேசுற. உனக்குப் பொண்ணு தரமாட்டேன்னு சொன்ன பிறகும் கேட்காம சம்மதிக்க வச்சு, முகூர்த்த நேரத்தில் வீட்டு வேலைக்காரியோடு இருந்த உன் லட்சணம் தெரிஞ்சதும், அவளை என்னோடு அழைச்சுட்டு போனவன் நான்! இப்போ, நீ கட்டுனவ வேறொருத்தன் கைய பிடிச்சி வசனம் பேசிட்டு இருக்கா. இது எதுவும் தெரியாம என்கிட்டேயே வந்து நின்னு திமிரா பேசிட்டுருக்க?” என்று மட்டம் தட்டினார்.

அவன் முகம் அப்படியே மாறிவிட்டது. “உன் மகள் அவள் அண்ணனோடு பேசினா, நீ இப்படித்தான் சொல்லுவியா? என் மனைவியை பற்றி உனக்கென்ன தெரியும்? அவள் மாசுமறுவற்ற சுத்த தங்கம்! இன்னொருமுறை அவளைப் பற்றி தவறா பேசினால்… சாப்பிட வாய் இல்லாம பண்ணிடுவேன்” என்று எச்சரித்தான்..

பரசுராம் ஏதோ சொல்ல வந்தார். அவன் கை நீட்டி மறித்தான்.

“இந்த ஊர்ல உள்ள உன் மகள் எப்படி சரியா நான் இருக்கும் இடத்துக்கு வந்தா? என் கண்ணு முன்னாடியே என்னைப் பார்க்காத மாதிரி ஷோ காமிச்சிட்டு போனாள்? நீ அனுப்பி விட்டயா, இல்லை உன் மகன் அனுப்பி விட்டானா? நம்ம எதிரியோட பையன் நேரா மோதி தோற்கடிக்க முடியாது. நீ போய் காதலிக்கிற மாதிரி நடிச்சு அவனை வலையில் விழ வை. அப்புறம், அவனை வச்சே நிறுவனத்தை மொத்தமா கைப்பற்றலாம்னு திட்டம் போட்டியா? அது நடக்காததால் கல்யாணத்தன்னைக்கு என்னைப் பற்றி மோசமா பேசிட்டு போனது மட்டுமில்லாம, என் அப்பாவின் நண்பர்கள், நிறுவனத்தில் பணிபுரிபவர், பொதுவெளி அத்தனை இடத்திலும் தவறான வதந்திகளை பரப்பி, எங்க அப்பா உருவாக்கிய சாம்ராஜ்யத்தை தரைமட்டமாக்கலாம்னு திட்டம் போடுறியா?” என்று கேட்டான்.

பரசுராம் மற்றும் சாம்பவி இருவரும் நடுக்கத்தை மறைத்துக்கொண்டு நின்றனர்.

“உன் பொண்ணு மேல உண்மையான அன்பு வச்சுருந்ததா நினைச்சேன். கல்யாண ஏற்பாட்டையும் பண்ணினேன். அப்புறமா தான், அவளை விரும்பவே இல்லைன்னு தெரிஞ்சது… இவளோடு பழகிய நாளில் தொடணும், அணைக்கணும்னு ஒரு சராசரி ஆண்மகனுக்கு வரக்கூடிய எந்த உணர்வுமே எனக்கு வந்ததில்லை. ஆனால், என் மனைவியை பார்த்த முதல் நிமிடத்திலே தொடணும், அவளோடு பழகணும், என் நெஞ்சுக்குள்ளே வச்சுக்கணும் போலிருந்தது. இப்போ நான் என் குடும்பத்தோடு சந்தோசமா இருக்கேன். இந்த நேரத்துல வந்து எதுக்காக பழையதெல்லாம் பேசி வம்பு பண்ணுற? அதான், உன் மவனோட நண்பனுக்கு இவளைக் கல்யாணம் பண்ணிக்கொடுக்க நிச்சயம் பண்ணிட்டயே… பிறகும் எதுக்கு சும்மா கிடக்குற சிங்கத்தை சீண்டிப் பார்க்கிற?” என்று கேட்டான். பரசுராம் வசமாக மாட்டிக்கொண்டவரை போல முழித்துக்கொண்டு நின்றார்.

“நீ அவமானப்படுத்திட்டு வந்திருக்கிறியே அவள் யாருன்னு தெரியுமா? என் உசுரு! அவள் கண்ணுல தூசு விழுந்தாலே நான் துடிச்சு போயிடுவேன். அவளை வாய் விட்டே அழ வச்சுட்டு வந்திருக்க. இதுக்கு மேலயும் உன்னையும், உன் அப்பனையும், உடன் பிறப்பையும் சும்மா விடுவேன்னா நினைச்ச? ம்…” சாம்பவியை பார்த்துக் கேட்டான் கார்த்திக். அவள் பீதியுடன் நின்றாள்.

“ஹாஸ்பெட்டல்னு பார்க்காம, கேன்டீன்ல வச்சு அத்தனை பேர் முன்னாடி என் மனைவியை அவமதிச்சிட்டு வந்ததற்கு, நான் கொடுக்கப் போகிற தண்டனை… வீட்டுக்குப் போ! தமிழ்நாடு முழுசா திடீர்னு பாப்புலர் ஆகப்போற. அதைக் கேள்விப்பட்டு பதறியடிச்சுட்டு உன் கொடுக்கு வரப்போறான். அத்தோடு அவனுக்கும் இருக்கு…” என்றான். அனல் வீசும் பார்வையை இருவர் மீதும் கக்கிக்கொண்டு சாவியை வீசி எறிந்தான். காரை எடுத்துக்கொண்டு சீறிப்பாய்ந்தான் மருத்துவமனையை நோக்கி…

முகமெல்லாம் வியர்வை துளிகளால் நனைய, காரில் அமர்ந்தார் பரசுராம்! சட்டை எல்லாம் தொப்பலாக நனைந்து இருந்தது. தண்ணீரை அருந்திக்கொண்டே நிம்மதியற்ற மனதுடன் வீட்டிற்குச் சென்றார். அங்கு வாசலில் குழுமியிருந்த நபர்களை பார்த்ததும் மேலும் கிறுகிறுத்தது. வருமான வரி சோதனையாளர்கள் வீட்டையே இரண்டாக்கி கொண்டிருந்தனர்.

“யார்கிட்ட அனுமதி வாங்கிட்டு இப்படியெல்லாம் நடந்துக்கறீங்க?”

“மிஸ்டர். பரசுராம்! உங்க வீட்டில் கணக்கில் வராத கருப்பு பணம் லட்சக்கணக்கா பதுக்கி வச்சுருக்கிறதா தகவல் வந்திருக்கு. அதான், உங்க வீடு, அலுவலகம் ரெண்டு இடத்திலும் ஒரே நேரத்தில் சோதனை நடக்குது. பேசாம, அப்படி போய் உட்காருங்க. இல்லை, கடமையை செய்யும் போது குறிக்கிட்டதா உங்க மேல புகார் கொடுக்க வேண்டியது வரும்” அங்கிருந்த பெரிய அதிகாரிகளில் ஒருவர் எச்சரித்தார்.

அவர் மிரண்டார். சற்று நேரத்தில் இத்தனை வருடமாக யாருக்கும் தெரியாமல், சரியான முறையில் கணக்கு காட்டாமல் மறைத்து வைத்திருந்த கருப்பு பணம், டாக்குமென்ட்ஸ் அனைத்தும் அதிகாரிகள் வசமானது. “இதற்கு சரியான காரணத்தை சொல்லிட்டு தாராளமா வாங்கிட்டு போங்க” என்று அனைவரும் வெளியேறினர். அதிர்ச்சி மேல் அதிர்ச்சி தாக்க, மார்பை பற்றிக்கொண்டு கீழே சரிந்தார் பரசுராம்!

தொடர்கதைக்கான கருத்துகளை கீழே உள்ள லிங்கில் பதிவிடுங்கள்…

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-18.3632/