காதல் சதுரங்க ஆட்டம் 17

அத்தியாயம் : 17

சோக் சொன்னதைக் கேட்ட கார்த்திக், நம்ப இயலா அதிர்ச்சியில் கண் கலங்க நின்றான். “என்ன சொல்றீங்க அசோக்? நீங்க சொல்றது நிஜம்தானா? என் தங்கை உயிரோடு இருக்கிறாளா? ‘பள்ளத்தில் விழுந்த கார் வெடித்து சிதறியதில் அவளது உடல் கருகிப் போயிருக்கும். வெடித்து சிதறிய பாகங்கள் அருகில் உள்ள பெரிய நீீீர்நிலையில் விழுந்திருந்தால் கிடைப்பது கடினம். எதற்கும் தேடி பார்க்கிறோம்’னு சொல்லிட்டு முடியாமல் வந்து சொன்னதால் தானே நாங்க நம்பியது. உயிரோடு இருக்கிறவளையா இத்தனை நாட்கள் இறந்து விட்டதாக நினைத்துக் கவலைப்பட்டோம்? கடவுளே! இதென்ன கொடுமை? இன்னும் நல்லா தேடிப் பார்த்திருக்க வேண்டியதோ…” என்று சொல்லிவிட்டு மனம் கலங்க நின்றான்.

” சொல்லுங்க அசோக், இப்போ என் தங்கை எங்கே இருக்கா? உங்களுக்கு எப்படித் தெரியும்? நான் உடனே அவளைப் பார்க்கணும். ப்ளீஸ்… என்னை அழைச்சுட்டு போங்க” என்று கைகளை பற்றிக்கொண்டு கெஞ்சுதலாக கேட்டான்.

அவன் மறுப்பாக தலையசைத்தான். “ஏன் அசோக் முடியாதுன்னு சொல்றீங்க? என் தங்கை மேல நான் எவ்வளவு பாசம் வச்சுருக்கேன்னு உங்களுக்குத் தெரியுமா? ‘அண்ணா அண்ணா’ன்னு என்மேல உயிர் பாசத்தையே கொட்டுவா. அவள் இறந்திட்ட அதிர்ச்சியில் அப்பாவுக்கும் உடம்பு சரியில்லாம போயிடுச்சு. இப்போ, அவளைப் பார்த்தா அப்பா ரொம்ப சந்தோசப்படுவாங்க. சொல்லுங்க, என் தங்கை எங்கே இருங்கா? உடனே போய் நான் அவளை அழைச்சுட்டு வந்துடறேன்” என்று அவசரப்பட்டான்.

அவனை அமைதிபடுத்தினான் அசோக். “கொஞ்சம் பொறுமையா இருங்க. உங்க அவசரம் அவங்க உயிருக்கே ஆபத்தா முடிஞ்சிடும்” என்றான்.

“என்ன சொல்றீங்க அசோக்? ஆபத்தா?? அப்படின்னா, என் தங்கையை யாராவது கொல்ல முயற்சி செய்தார்களா?” சந்தேகத்துடன் கேட்டான் கார்த்திக்.

அவன் தலை அசைப்பதைக் கண்டு மேலும் அதிர்ந்தான். “என்ன சொல்றீங்க அசோக்? அப்படி, கொலை செய்யும் அளவுக்கு என் தங்கை மீதென்ன கோபம்? யார் அவளை அப்படி செய்தது? சொல்லுங்க அசோக்! என் தங்கைக்கு நடந்ததென்ன? இத்தனை நாள் விபத்தில் இறந்து போயிட்டதா நினைச்சனே! அப்போ, அவளைக் கொல்ல முயற்சித்ததில் உயிர் பிழைத்து மறைந்து வாழ்கிறாளா? அந்த அளவுக்கு அவள் மேல கோபத்துடன் இருப்பது யார்னு மட்டும் சொல்லுங்க. இப்பவே போய் அடிச்சு நொறுக்கிட்டு, என் தங்கையை வீட்டுக்கு அழைச்சுட்டு வரேன்” என்று ஆவேசமாக கூறினான்.

“அவசரப்படாதீங்க. ‘பதறாத காரியம் சிதறாது’. காயத்ரி கொஞ்ச நாளைக்கு அங்கே இருப்பது நல்லது” என்றான்.

“இல்லை அசோக், இதுக்கு மேலயும் என் தங்கையை தனியா விட முடியாது. முதல்ல அது யார்னு சொல்லுங்க? அவளுக்கும் கிருத்திகாவுக்கும் என்ன சம்மந்தம்? என் மனைவி எப்படி அவளுக்கு அறிமுகம் ஆனாள்?” என்று விடாமல் கேட்டான்.

“மிஸ்டர் கார்த்திக், கொஞ்சம் அவசரப்படாம பொறுமையா இருங்க. கிருத்திகா என் நண்பன் பிரசாத்தின் தங்கை. அவனும் நானும் கன்னியாகுமரி விவேகானந்தா கல்லூரியில் எம்.எஸ்.ஸி (MSC) முதல் வருடம் படிக்கும் போது உங்க தங்கை காயத்ரி அங்கு பீ.எஸ்.ஸி (BSC) படிக்க வந்திருந்தாங்க. அப்போது துறை சார்பாக ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் நட்பா மாறியது. பெரிய வசதியான வீட்டுப் பெண் என்கிற இறுமாப்பு ஏதுமின்றி நல்ல குணமா பேசுவாங்க காயத்ரி. நாங்க படிப்பு முடிஞ்சு வேலைக்கு முயற்சி பண்ணிட்டு இருந்தோம். அவங்க, “எங்க அப்பா நிறுவனம் ரொம்ப பெரியது. அதில் உங்க ரெண்டு பேருக்கும் வேலை வாங்கித் தரேன். அதுவரைக்கும் கொஞ்ச நாள் ஜாலியா லைஃப்பை என்ஜாய் பண்ணுங்க”ன்னு சொன்னாங்க.

நாங்களும் சந்தோசமா சம்மதிச்சோம். அப்போது பீ.சி.ஏ (BCA) படிப்பு முடிச்சுட்டு யூ.பி.எஸ்.சி (UPSC) பரிட்சை எழுத தயாராகிட்டு இருந்தா கிருத்திகா. விடுமுறையில் மைலாடிக்கு வந்திருந்தா. தங்கையை பற்றி எப்போதும் பெருமையா பேசிட்டு இருப்பான் பிரசாத். அவளைப் பார்க்கும் ஆர்வத்தில் காயத்ரி வந்திருந்தாங்க. அப்படியே அசந்து போயிட்டாங்க. அவங்க கேட்ட முதல் கேள்வியே “என் அண்ணனுக்கு உங்க தங்கையை கல்யாணம் செய்து கொடுக்க முடியுமா?” என்பது தான்.

பிரசாத் அதிர்ந்து போயிட்டான். “வேண்டாங்க. என் தங்கை சாதாரணமான வீட்டில் பிறந்தவள். உங்க அண்ணா படிச்சு முடிச்சுட்டு வெளிநாட்டில் இருக்கிறார். அவருக்கும் என் தங்கைக்கும் ஏணி வச்சாலும் எட்டாது. எதுக்காக நடக்காததை பற்றி பேசணும்? வீணாக ஆசையை மனதிற்குள் வளர்க்கணும். என் தங்கை வேலைக்கு போகும் ஆசையில் இருக்கா” என்று உடனடியாக மறுப்பு தெரிவித்தான்.

அவள் முகம் சுண்டிப் போனது. அதேநேரம் கிருத்திகாவை அண்ணனுக்கு திருமணம் செய்து வைக்கும் எண்ணத்தில் இருந்து அவள் பின் வாங்கவில்லை. “என் அண்ணனுக்கும், அப்பாவுக்கும் நான்னா உயிர். நான் என்ன சொன்னாலும் கேட்பாங்க. கிருத்திகா என் அண்ணியா வரணும்னு நான் ஆசைப்படுறேன். கண்டிப்பா நடத்தி காட்டுறேன்” என்றாள். பிரசாத் எவ்வளவு சொல்லியும் கேட்க மறுத்தாள். அத்தோடு, ஹரிச்சந்திரனுக்கு அழைப்பு விடுத்து விசயத்தை தெரியப்படுத்தினாள்.

புகைப்படத்தை வாட்சப்பில் பார்த்ததும் ஆச்சர்யப்பட்டார். மகனுக்கு பொருத்தமான இணை என்று நினைத்து, உடனடியாக தன்னுடைய சம்மதத்தையும் தெரிவித்து விட்டார். “அண்ணன் வெளிநாட்டில் இருந்து வந்ததும், இந்த பெண்ணையே முடிச்சுடலாம்” என்று கூறினார்.

பிரசாத் அதற்குப் பிறகு மறுப்பு தெரிவிக்கவில்லை.

கிருத்திகாவிடம் திருமண விசயமாக பேசினான். அவள் “பரிட்சை இருக்கு. அது முடிஞ்சதும் பயிற்சிக்கு போகணும் அண்ணா. இப்போ வேண்டாம்…” என்றாள்.

அவன் காயத்ரியை பற்றி கூறினான். அவர்கள் குடும்பத்தை பற்றியும் தெரிவித்தான். “பெரிய வசதி படைத்தவர்களா தெரியுதே? வேண்டாமே அண்ணா, நம்ம தகுதிக்கு ஏற்றார் போல, நீங்க யாரைப் பார்த்தாலும் எனக்கு சம்மதம்” என்று சொல்லிவிட்டாள். தான் நினைத்ததையே தங்கையும் கூறுவதைக் கேட்டு அவன் உள்ளம் மகிழ்ந்தது.

விசயத்தைக் கேள்விப்பட்ட காயத்ரி நேரில் வந்தாள். “என் அண்ணன் ரொம்ப நல்லவர். பிறர் மனம் நோகும் விதமா ஒரு நாளும் நடந்துக்க மாட்டார். ஏழ்மைன்னா என்ன? வசதியா இருந்தா என்ன? எல்லாருக்கும் உழைச்சா தானே சாப்பாடு. நீங்க சாப்பிடும் உணவையும், உடுக்கும் ஆடையை தானே நாங்களும் அணிகிறோம். வசதியானவர் என்பதற்காக பணத்திலா ஆடை தைத்து போடுகிறோம்? பணத்தையா உணவா உண்கிறோம்? எங்க அப்பாவும் தங்கமான மனுஷன்! பணத்தை பெருசா எடுத்துக்க மாட்டார். குணம் மட்டுமே நிரந்தரம்னு சொல்லுபவர். என் தங்கை புவனா ரொம்ப நல்லவ. பெரிய அண்ணன், அண்ணியும் அப்படித்தான். அண்ணி கொஞ்சம் சிடுசிடுப்பு பேர் வழியா இருந்தாலும், இது வரைக்கும் எந்த பிரச்சனையும் வந்தது இல்லை. என்னோட கார்த்திக் அண்ணா மணந்துக்க போகிறவங்க ரொம்ப நல்லவங்களா, குணமுள்ளவங்களா, வீட்டில் உள்ள எல்லாரையும் அனுசரிச்சு போகிறவங்களா என் அப்பாவையும், அண்ணாவையும் கடைசி வரைக்கும் கண் கலங்காமல் பார்த்துக்கிறவங்களா இருக்கணும்னு நான் ஆசைப்படுறேன்” என்றாள்.

இத்தனை வசதியிருந்தும் எளிமையாக பேசி பழகிய காயத்ரியை அவளுக்கு மிகவும் பிடித்து விட்டது. “உங்களுக்காக சம்மதிக்கிறேன்” என்றாள் கிருத்திகா.

அவள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அப்படியே கட்டிக் கொண்டாள். ஒரு புகைப்படத்தை எடுத்துக் கொடுத்தாள் காயத்ரி.

“என் அண்ணாவின் புறத்தோற்றம் கருப்பா இருந்தாலும், குணம் வைரத்தைப் போல் ஜொலிக்கும். யாருக்கும் தீங்கு நினைக்க மாட்டாங்க. உண்மையான பாசத்தைக் கொட்டுவாங்க. இப்போ வெளிநாட்டுக்கு போயிருக்காங்க. அடுத்த மாசம் வருவாங்க. வந்ததும் உங்களை அறிமுகப்படுத்திட்டு, உடனே கல்யாண ஏற்பாட்டை ஆரம்பிச்சுட போறேன். இதுக்கு மேலும் தாமதிக்க முடியாது” என்றாள்.

காயத்ரியின் பேச்சுக்கு மறு பேச்சின்றி தலையசைத்தாள் கிருத்திகா. பிரசாத், அசோக்கிடம் தன்னுடைய சம்மதத்தையும் தெரிவித்தாள். கார்த்திகேயனின் புகைப்படத்தை எடுத்துப் பார்த்தாள். அடர்ந்த மீசைக்கு அடியில் அவன் தன்னைப் பார்த்து புன்னகைப்பது போலிருந்தது. தன்னையும் மீறி முறுவலித்தாள். முதல் பார்வையிலே அவளுக்கும் பிடித்து விட்டது. “கார்த்திகேயன்! கிருத்திகா!! பெயர் பொருத்தம் ரொம்ப நல்லா இருக்கு!” என்று சொல்லிக்கொண்டே சிரித்தாள்.

பிரசாத், அசோக் இருவரும் அவளைக் கேலி செய்தனர். நாணத்துடன் ஓடியவளை விடாமல் பரிகாசம் செய்தனர். காயத்ரி தன்னுடைய வருங்கால அண்ணியாருக்காக பரிந்து கொண்டு வந்தாள். அதன் பிறகு அடிக்கடி வருவாள். நால்வரும் சேர்ந்து சுற்றி மகிழ்ந்தார்கள். அண்ணன் இன்னும் சில நாளில் வந்துவிடுவார் எனும் நிலையில் வீடியோ காலில் அழைத்தாள். கிருத்திகாவிற்குத் தெரியாமல் அவளைக் காண்பிக்க முயன்றாள். கார்த்திக்கை பார்த்துவிட்டு அவள் நாணத்துடன் திரும்பி கொண்டாள். ஆண்கள் இருவரும் அடித்த கலாட்டாவில் அவள் அங்கிருந்து ஓடியே விட்டாள். பின்னர், பரிட்சை எழுதுவதற்காக அவள் சென்னைக்கு கிளம்பினாள். தன்னுடைய காரில் அழைத்துச் சென்று கன்னியாகுமரி ரெயில்வே நிலையத்தில் விட்டு வந்தாள் காயத்ரி.

அவளும் ஆரல்வாய்மொழிக்கு சென்று விட்டாள். இந்நிலையில் திருநெல்வேலியில் ஒரு ஃபார்டிக்கு சென்று வருகையில் அவளது கார் விபத்தில் சிக்கி வெடித்தது. ஒரு வாரம் கடந்த நிலையில், ஆயுர்வேத மருத்துவமனையில் இருந்து பிரசாத்தின் கைப்பேசியில் இருந்து தகவல் வந்தது. அசோக், கிருத்திகாவை அழைத்துக்கொண்டு விரைந்தான். அங்கு விபத்தில் அடிபட்டு சுயநினைவிழந்த நிலையில் காயத்ரி இருந்தாள். பிரசாந்த் இறந்து போயிருந்தான்.

அங்குள்ள மருத்துவர் அசோக்கிடம், “காயத்ரிக்கு ஆபத்து, கீர்த்தியிடம் சொல்லி அவங்க அப்பாகிட்ட ஒப்படைச்சிட சொல்லுங்க” என்று சொன்னதாக தெரிவித்தார். அண்ணனுக்காக அழுவதா, அடிபட்டு கிடப்பவளுக்காக கலங்குவதா தெரியவில்லை. கதறியழுதாள் கிருத்திகா.

பிரசாத் உடலை சொந்தவூரில் அடக்கம் செய்தனர். காயத்ரி அப்பாவிற்கு தகவல் கொடுக்க முயன்றனர். அங்கு ஹரிச்சந்திரன் மாரடைப்பில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. வீட்டுப் பணியாட்களிடம் சொல்லும் விசயம் இல்லை. யார் என்ன செய்தார்கள் என்பது, காயத்ரி கண் விழித்து சொன்னால் மட்டுமே சாத்தியம்! அவள் யார் என்று தெரிந்து கொண்டதால், மருத்துவர் தானே ரகசியமாக கவனித்துக் கொள்வதாக கூறி நம்பிக்கையளித்தார். அவர் வீட்டு மாடியறையில் தங்க அனுமதித்தார்.

சிகிச்சை செலவுக்கு தங்களுடைய பூர்வீக வீட்டை விற்ற பணத்தை கொடுத்தாள் கிருத்திகா. அவளும் அங்கேயே தங்கியிருந்தாள். தேர்வு முடிவுகள் வெளியாகின. காயத்ரியை தனியாக விட்டுச் செல்ல மனமின்றி மறுத்து விட்டாள். திடீரென்று ஒருநாள் விழித்தாள் காயத்ரி. அன்றைய நினைவில் அலறினாள். ஓடிச்சென்று தாங்கினாள் கிருத்திகா. “அண்ணி” என்று அவளை அணைத்துக்கொண்டு அழுதாள். எவ்வளவு சமாதானம் கூறியும் அவள் அழுகை குறையவில்லை.

பின்னர், “அப்பா… அப்பா பார்க்கணும். அண்ணா அண்ணா…” என்று சொல்லிவிட்டு மிரட்சியுடன் கட்டிலில் சரிந்தாள். பிரசாத்தை பற்றி கேட்டாள். அவனது மரணத்தை அறிந்து கொண்டு மறுபடியும் மயக்க நிலைக்கு சென்று விட்டாள். “இனி எப்போது வேண்டுமானாலும் அவர்களுக்கு முழு சுயநினைவு திரும்பலாம்” என்றார் மருத்துவர். அதற்கு மேலும் தாமதிக்காமல், அகல்யா கொடுத்த விளம்பரத்தை வாய்ப்பாக கருதி, மேனேஜராக வந்து சேர்ந்தாள்” என்று நடந்ததை சொல்லி முடித்தான்.

அசோக் சொன்னதைக் கேட்டு நொறுங்கி போனான் கார்த்திக். அவனை அணைத்துக்கொண்டு வாய் விட்டு அழுதான். “நான் ஒரு பாவி ஆகிட்டனே! என் தங்கை மேலுள்ள பாசத்தில் அவள் எப்படியெல்லாம் நடந்திருக்கிறா…. அது தெரியாமல் வார்த்தையால் காயப்படுத்திட்டனே! என் கீர்த்தி என்னை மன்னிப்பாளா அசோக்?” என்று கதறினான்.

“கீர்த்தி, ஒருபோதும் உங்களை வெறுக்க மாட்டாள். அவளால் வெறுக்கவும் முடியாது. ஆனால், மனசளவில் ரொம்ப அடி பட்டுட்டா. அன்னைக்கு நீங்க சாம்பவியோடு பேசிட்டு கோபமா நிற்பதை பார்த்து உடைஞ்சு போயிட்டா. ‘நான் விலகிப் போயிடுறன். அவர் இப்படி நிம்மதியில்லாம தவிப்பதை பார்த்துட்டுருக்க என்னாலே முடியாது. அவங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிட்டு சந்தோசமா இருக்கட்டும்’னு சொல்லிட்டு அழுதா” என்றான்.

கார்த்திக்கின் மனம் மனையாளை நினைத்து வேதனை கொண்டது. “எத்தனை கஷ்டப்படுத்திட்டேன்… எவ்வளவு கொடுமையா நடந்துக்கிட்டேன்… வேலைக்காரின்னு சொல்லி அத்தனை பேர் முன்னாடி அவமதிச்சிட்டனே! என்னை மன்னிச்சிடுன்னு கேட்கற தகுதியே எனக்கில்லை அசோக்?” என்று சொல்லிவிட்டு கண்ணீர் வடித்தான்.

“நீங்க அவளைப் பார்த்து பேசினாலே எல்லாம் சரியாகிடும். அவளால் உங்களை மறந்துட்டு தனியா வாழ முடியாது. பயப்படாதீங்க” என்று சமாதானப்படுத்தினான். மறுநாள் தங்கையை பார்க்கச் சென்றான். அவளை வீட்டிற்கு கொண்டு வரும் விசயமாக பேசினான்.

கிருத்திகா வக்கீல் வீட்டிற்கு சென்றது முதல் பேசிய அனைத்தையும் கேட்டு மனமுடைந்து போனான். ‘அவளுடைய வாழ்க்கை அழிஞ்சு போனாலும் பரவாயில்லை. நான் நல்லா இருக்கணும்னு நினைக்கிறாளே. இவளை நான் மனைவியா பெற என்ன தவம் செய்தேன்? கீர்த்தி! எனக்கு நீதாண்டி வேணும். உன்னைப் பிரிஞ்சு என்னாலே வாழ முடியாது. ஒரு வாட்டி பிரிஞ்சது போதும். மறுமுறையும் வேணாம்டி!’ என்று எண்ணி நெஞ்சம் விம்மினான். மறுநாளே அவள் வருவது தெரிந்ததால் பால்கனியில் நின்று பார்த்துக் கொண்டிருந்தான். அவனது காரை பார்த்ததும், அவளது விழிகளில் தெரிந்த மிரட்சியும், விலகலும் உள்ளே வலித்தது. உடைமாற்றி தயாராகி அவளைக் காண சென்றான்.

மனையாளின் நேர் பார்வையும், அதில் இருந்த ஏக்கமும், பாசமும் அவனைக் கட்டிப்போட்டது. அப்படியே அவளை இறுக அணைத்துக்கொள்ளும் ஆசையை அடக்க முடியவில்லை. அவளிடம் இயல்பாக பேச முயன்றான். அவள் மறுத்து விட்டதால் கேலியுடன், அதிரடியையும் காண்பித்து கையோடு அழைத்துச் சென்று விட்டான். அப்பா, தங்கை உடன் இருந்தால் அவள் இயல்பாக மாறிவிடுவாள் என்று அவர்களுடன் பழக விட்டான். தான் நேசித்த பெண் வாழ்க்கையில் ஏற்பட்ட கஷ்டங்கள் மற்றும் தன்னால் ஏற்பட்ட துயரங்கள் அவள் மனதை விட்டு அகலும் வரையில், விலகியிருக்க முடிவு செய்தான். அதனாலே, அன்று அவளிடம் பொறுப்பையும் ஒப்படைத்தான்.

அனைத்தையும் கேட்ட கிருத்திகா, அதிர்ச்சி மேல் அதிர்ச்சி தாக்க செய்வதறியாமல் திகைப்புடன் இருந்தாள்.

“கீர்த்தி, காயத்ரி சொன்னது போல் உன் கணவர் தங்கமான மனுஷன்! அவர் மனசுல நீதான் நிலைச்சுருக்க. இனிமேல் நீயாக விலகினாலும் அவர் உன்னை விடமாட்டார். ஏன்னா, அத்தனை பாசம் உன்மேல வச்சுருக்கார். நீ அவரை விட்டுப் பிரிய நினைக்காம, பழையதெல்லாம் மறந்திட்டு உன் கணவரோடு சந்தோசமா இரு. உங்கள் இணைவும், மகிழ்ச்சியும் அவங்க குடும்பத்தை பழைய நிலைக்கு கொண்டு வரும். என் நண்பனின் ஆத்மாவும் சாந்தியடையும்!” என்றான்.

அவன் கைகளைப் பற்றினாள் கிருத்திகா. “நீங்க எனக்கு செய்திருக்கும் உதவிக்கு நான் எப்படி கைமாறு செய்யப் போறனோ தெரியலயே?” என்று கண் கலங்கினாள்.

அப்போது, “ஏன் தெரியாது. இப்படி ஹாஸ்பெட்டல்னு பார்க்காம, வேற ஒருத்தனோட கைய பிடிச்சுட்டு நிற்கிறயே… அன்னைக்கு இப்படித்தான் நடந்து என் மகள் கல்யாணத்தை நிறுத்தின? இப்போ அவனை விட்டுட்டு இவனோடு போகலாம்னு பார்க்கறியா?” என்றார் சாம்பவியின் அப்பா. அருகில் அவர்களை வெறித்துக்கொண்டு அவளும் நின்றாள்…

தொடர்கதைக்கான கருத்துகளை கீழே உள்ள லிங்கில் பதிவு செய்யுங்கள்…

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-17.3619/