காதல் சதுரங்க ஆட்டம் 16

அத்தியாயம் : 16

ன்று மதியம் வந்த செய்தியை கேட்டு அதிர்ச்சியுடன் நின்றான் கார்த்திக் மற்றும் மருத்துவமனையில் பணிபுரிந்த அனைவரும். சற்று நேரத்திற்கு முன்பு டாக்டர். ராஜன் தற்கொலை செய்து கொண்டதாக வந்த செய்தி, அவர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

ஹரிச்சந்திரன் சிகிச்சை விசயமாக உடனடியாக வந்து விளக்கம் அளிக்க வேண்டும். இல்லை, போலீஸில் புகார் அளிக்கப்படும் என்று தகவல் அனுப்பிய சில நிமிடங்களில், அவர் தன்னுயிரை மாய்த்திருந்தார். அப்போதே தெரிந்துவிட்டது. இதற்கு அவர் மட்டும் காரணமல்ல, வேறு யாரோ உடந்தையாக செயல்படுகிறார்கள். உண்மை நிலவரம் தெரிய வந்தால் அவரது உயிருக்கே ஆபத்தாக முடியும். அதனாலேயே மரணத்தை தழுவி விட்டார்…

இறந்த உடல் மருத்துவ உடற்கூறாய்விற்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. செய்வதறியாமல் திகைப்புடன் நின்றனர் மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர்கள்.

கிருத்திகா அச்சத்துடன் புவனாவை அணைத்துக் கொண்டாள். விழிகள் கலங்கி வழிந்தது. கார்த்திக்கின் தோளில் சாய்ந்து கண்ணீர் வடித்தாள். அவனது ஆறுதல்களை ஏற்க மறுத்தாள். “காலை வரைக்கும் உயிரோடு இருந்தவர், இப்போ தற்கொலை பண்ணிட்டு இறந்து போயிருக்கார். கூடிய சீக்கிரம் குற்றவாளியை கைது செய்யும் வழியை பாருங்க. அதுக்கு முன்னாடி ஏதும் அசம்பாவிதம் நிகழ்ந்துடுமோனு பயமா இருக்கு” என்று தழுதழுப்புடன் கூறினாள்.

அவன் மென்மையாக அணைத்து தட்டிக் கொடுத்தான்.

“பயப்படாதே. அவர் உயிரோடு இருந்தா உண்மைகள் வெளியே வந்திரும்னு இப்படி நடந்துக்கறாங்க. கூடிய சீக்கிரம் அவனை கண்டுபிடிச்சு இல்லாம ஆக்கிடலாம்” என்றான். அவளால் பதில் கூற முடியவில்லை. ஏற்கனவே காயத்ரியின் விபத்து. அண்ணனின் மரணம். அதைத் தொடர்ந்து ஹரிச்சந்திரனின் மாரடைப்பும் சிகிச்சையும்… தற்சமயத்து டாக்டர் ராஜனின் மரணம்! இன்னும் நீளுமோ என்கிற அச்சம் தொண்டை வரையில் பற்றியது.

அப்போது வந்த மருத்துவர், “அன்னைக்கு ஆபரேஷன் நடந்த போது ராஜனுடன் வேறு ஒரு மருத்துவரும் இருந்ததாக சொல்றாங்க. டியூட்டி டாக்டரை வேறு வேலையா அனுப்பிட்டு, இந்த வேலையை பார்த்திருக்காங்க. கூட பணி செய்த ரெண்டு நர்ஸுக்கு பணம் கொடுத்து விசயம் வெளியே தெரியக்கூடாதுன்னு மிரட்டி பணிய வச்சுருக்காங்க. அவங்க ரெண்டு பேரையும் வேலையை விட்டு நீக்கிட்டேன். போலீஸ் விசாரணைக்கு தேவைப்படும்னு அவங்களுக்கும் தகவல் கொடுத்துட்டேன்” என்று தெரிவித்தார்.

“நான் அவங்களைப் பார்க்கணும்”

“ம்… வாங்க. அப்பாவுக்கு டெஸ்ட் ரிப்போர்ட் ஈவ்னிங் வந்துடும். அதைப் பார்த்ததும் உடனடியா சிகிச்சையை ஆரம்பிச்சுடலாம். எனக்குத் தெரியாம யாரையும் உள்ளே அனுமதிக்க கூடாதுன்னு கண்டிப்பா சொல்லிட்டேன். சந்தேகப்படும் விதமா யார் தெரிஞ்சாலும், உடனே கையும் களவுமா பிடிக்க சொல்லியிருக்கேன். டாக்டர் ராஜன் மரணம் தற்கொலையா? கொலையா? என்பது உடற்கூறாய்வு ரிப்போர்ட் வந்தால் தெரிய வரும்” என்றார்.

அவன் அமைதியாக தலையசைத்தான்.

“அத்தனை அமைதியான மனுசனுக்குள் இப்படியொரு வில்லங்கம் இருக்கும்னு, நான் எதிர்பார்க்கல கார்த்திக். இன்னும் என்னென்ன பிரச்சனையெல்லாம் பண்ணி வச்சுருக்கார்னு விசாரிச்சா தெரிய வரும். நாளைக்கு மருத்துவமனைக்கும், இங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கும் எந்தவொரு கெட்டப்பெயரும் வந்திடக்கூடாதுன்னு மனசு பதறுது” என்றார். அவரது பேச்சில் உண்மையான அக்கறை இருப்பது தெரிந்தது.

அப்போது அவரது அறை வந்தது. உள்ளே நுழைந்து அனைவரையும் வரச்சொல்லி விட்டு மீண்டும் ஒருமுறை விசாரித்தார்.

யாரும் முகத்தைப் பார்க்கவில்லை. தெரியாது என்றார்கள். அவனது அங்க அடையாளத்தை பற்றி விசாரித்தான். “நல்ல நெடுநெடுவென்று வளர்ந்திருந்தார். பச்சை துணியால் மூக்கு, வாய், கன்னம் பகுதிகளை மறைத்திருந்தார். தலையில் பச்சை நிற தொப்பி, கண்ணில் கருப்பு நிற கண்ணாடி, கை, கால்கள் கையுறை, கருப்புநிற ஷூவால் மறைக்கப்பட்டிருந்தது. நெற்றியில் வலது புறம் ஒரு தழும்பு தெரிந்தது. வெண்ணிறத்தில் இருந்தார். அவரது பேச்சில் ஆங்கிலமும் தமிழும் கலந்தார் போலிருந்தது” என்றார்கள்.

“நேரில் பார்த்தால் அடையாளம் காட்ட முடியுமா?” என்றான் கார்த்திக்.

அவர்கள் மறுப்பாக தலையசைத்தனர். ராஜன் வீட்டிற்கு காவல் துறையினர் சோதனை நடத்தியதில் எதுவுமே சிக்கவில்லை. விசாரணை ஒவ்வொருவரிடமும் ஆரம்பமாகியது.

அன்று மாலை வந்த ரிப்போர்டில் ஹரிச்சந்திரனின் உடலில் இரத்த ஓட்டம் சரிவர நடக்கவில்லை. ஆக்ஸிஜன் ஓட்டம், இரத்தத்தின் அளவு குறைவாக காணப்பட்டது. சுகர் இல்லை. பிரஷர் தற்சமயம் சரியாக இருக்கிறது. அனைத்தையும் பார்த்து விட்டு “மூன்று பாட்டில் இரத்தம் அடைச்சுடலாம். ஆக்ஸிஜன் ஓட்டம் சரியான அளவு வருவது போல் சிகிச்சை அளிக்கலாம். மருந்து மாத்திரையுடன், பிஸியோ தெரபி கொடுத்தா விரைவில் சரியாகிடும்” என்று கூறினார். அதுபோல் செயல்பட துவங்கினார்.

அன்று இரவு மருத்துவமனையில் கொடுக்கப்பட்ட அறையில் கார்த்திக், தங்கை, மனைவியுடன் தங்கியிருந்தான். மறுநாள் உடற்கூராய்வு சான்றிதழில் ராஜன் தூக்கமாத்திரைகளை அளவுக்கு அதிகமாக தின்றதால் உயிரை விட்டிருப்பது தெரிய வந்தது. வீட்டார், நெருங்கிய நண்பர்கள், மருத்துவமனை ஊழியர்கள் விசாரணை வட்டத்துக்குள் வந்தனர். கைப்பேசி காவலர் வசமானது. அன்று வந்த மருத்துவர் யார்? எங்கிருக்கிறார்? என்று கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கினார்கள்.

நடக்கும் ஒவ்வொன்றும் திகிலை அதிகப்படுத்தியது. எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்கிற அச்சம் நிம்மதியை பறித்தது. அசோக்கிடம் மனவேதனை தாளாமல் அரற்றினாள் கிருத்திகா. உடனே அவளைக் காண்பதற்காக மருத்துவமனைக்கு வந்து விட்டான். அவனிடம் தனியாக பேசும் பொருட்டு, புவனாவை அறையில் இருக்க சொல்லிவிட்டு கேன்டீனுக்கு வந்தாள். எதிர் எதிர் இருக்கையில் அமர்ந்தார்கள்.

“அசோக், என்னை சுற்றி என்ன நடக்குதுன்னு ஒண்ணுமே தெரியல. நீங்க என்னைப் பற்றிய விவரங்களையெல்லாம் கார்த்திக்கிடம் சொல்லிட்டீங்களா? காயத்ரி அண்ணி, என் அண்ணா விபத்து பற்றிய விவரங்களும் தெரிஞ்சுட்டதா? அவங்க அண்ணி வீட்டாரால் அலுவலகத்தில் பிரச்சனையா இருக்கும் போலிருக்கு… அவர் இங்கு இருக்கும் நேரத்தில் எதுவும் தவறா நடந்திட கூடாதுன்னு உறக்கத்தை தொலைச்சு போலீஸ் விசாரணை, மாமா, அலுவலக வேலைன்னு ஓய்வில்லாம சுத்துறார்.” என்றாள்.

அவன் அமைதியாக இருந்தான்.

“நான் இவ்வளவு பேசியும் நீங்க எதுவுமே சொல்லாம இருக்கறீங்க. சொல்லுங்க அசோக். நான் விவகாரத்து வாங்க வக்கீலை பார்க்க போனது உங்களுக்குத் தெரியும். நீங்க தானே அவரிடம் சொன்னது? அவர் உங்களைப் பார்க்க வந்தாரா அல்லது நீங்க பார்த்து பேசுனீங்களா? அப்போ, என்மேல் பரிதாபப்பட்டு ஏத்துக்கிட்டாரா? உண்மையான பாசத்துடன் இல்லையா?” என்று கேட்டாள் கிருத்திகா.

அவன் சற்று நேரம் அமைதியாக இருந்தான். பின்னர், அவள் கார்த்திக்கை தவறாக எண்ணி விடக்கூடாது, அவர்கள் வாழ்வில் பிரச்சனைகள், குழப்பம் வரக்கூடாது என்று நினைத்து, முந்தைய நிகழ்வுகளை மறைக்காமல் சொல்ல துவங்கினான்.

அன்று கார்த்திக், கிருத்திகாவை பற்றிய நினைவில் ஆழ்ந்த பின்னர், அவளை மறக்க முடியாமல் அவதியுற்றான். அவளது புகைப்படத்தை பார்த்துவிட்டு கண் கலங்கினான். தான் திட்டியதால் அவள் மனமுடைந்து சென்று விட்டாளோ, மறுபடியும் தன்னைப் பார்க்க வராமல் இருந்து விடுவாளோ? போன்ற எண்ணங்கள் எழுந்து அவனைப் பாடாகபடுத்தியது. நிம்மதி என்பதே இல்லாதவன் போல் காணப்பட்டான். உடனடியாக மனையாளை பார்க்கும் ஆவல் எழுந்தது.

அவளது கைப்பேசி எண்ணிற்கு தயக்கத்துடன் அழைப்பு விடுத்தான். அது அணைத்து வைக்கப்பட்டிருந்தது. அச்சமாக இருந்தது அவனுக்கு… மறுநாள் அலுவலகம் போக வேண்டும் என்பதால் உடனடியாக கிளம்பிவிட்டான். ஒரு மணி நேரத்தில் அவளது பாட்டியின் வீட்டிற்கு முன்புறம் சென்று, காரை நிறுத்திவிட்டு இறங்கினான். மாலைநேரம் வீட்டு முன்பகுதியில் குழுமியிருந்த நபர்களை பார்க்கையில் திக்கென்றது. அவளுடைய பாட்டிக்கு ஏதோ ஆகிவிட்டது என்று நினைத்துக்கொண்டு வீட்டை நோக்கி நடந்தான்.

அங்கு அவள் பாட்டிக்கு மோட்ச விளக்கு நடைபெற்றுக் கொண்டிருந்தது. மனம் வலித்தது. கணவன் எனும் முறையில் தன்னிடம் எதையும் தெரிவிக்காமல், இப்படி ஒரேடியாக ஒதுக்கி விட்டாளே… தன்னையும் வேண்டாம் என்று விலகிச் சென்று விடுவாளோ என்று பயமாக இருந்தது. உறவினர்களில் ஒருவராக நின்று அங்கு நடப்பதை பார்த்துக் கொண்டிருந்தான். கிருத்திகா, சிறுபயறு பச்சை நிற காட்டன் புடவையில், கண்ணில் ஜீவனை தொலைத்து, மெலிந்து போய் சோக வடிவாக நின்றாள். அவளைப் பார்க்கையில் மனம் தவியாக தவித்தது. அப்படியே அணைத்துக் கொள்ளும் எண்ணத்தை, அடக்க முடியாமல் சிரமப்பட்டான்.

உணவை முடித்த பின்னர், அசோக் அவனது அம்மா, தங்கை இருவர், ஓரிரு நெருங்கிய உறவினரை தவிர்த்து, அனைவரும் சென்று விட்டனர். நாற்காலியில் தனியாக அமர்ந்திருந்த கார்த்திக்கை பார்த்து விட்டான் அசோக். புன்னகையுடன் விரைந்து சென்றான்.

“நான் அசோக், கிருத்திகாவின் அண்ணனின் நண்பன்” என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான்.

ஏற்கனவே அவனை சாலையில் வைத்து பார்த்திருக்கிறான் கார்த்திக். ஒப்புதலாக தலை அசைத்தான்.

“நான் உங்ககிட்டே பேசணும்”

“ம்…”

“ஒரு நிமிசம் இப்போ வந்திடறேன்” என்று சொல்லிவிட்டு வீட்டுக்குள் சென்றான். தாயாரிடம் தகவல் தெரிவித்துக்கொண்டு வந்தான்.

“பக்கத்துல என்னோட வீடு இருக்கு. அங்கு போய் பேசலாமே?” புரிந்து கொண்டு தலையசைத்தான் கார்த்திக். இருவரும் காரிலேறி அமர்ந்தார்கள். அப்போது நியாபகம் வந்தவனாக, “நீங்க சாப்டீங்களா?” என்று கேட்டான்.

“இல்லை, பசிக்கலை” என்றான்.

அவன் மனநிலை புரிந்தது. தன் வீடு இருக்கும் திசையை கூறிவிட்டு அமைதியாக இருந்தான் அசோக். ஐந்து நிமிடத்தில் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள்.

ஹாலில் கிடந்த சோபாவில் அமர சொன்னான். விரைவாக சமையல் அறைக்குள் புகுந்து உணவை எடுத்து வந்து கொடுத்தான். மறுப்பாக தலையசைத்தான் கார்த்திக்.

“அவள் என்னை வேண்டாம்னு முடிவே பண்ணிட்டாளா?” என படாரென்று கேட்டான். அசோக் பதில் கூற முடியாமல் இருந்தான்.

“என்கிட்டே ஏன் சொல்லலை? நான் என்ன செத்தா போயிட்டேன்… கூப்பிட்டா வர மாட்டேன்னு நினைச்சு பயந்து சொல்லாம விட்டுட்டாளா? இல்லை, எனக்கும் அவளுக்கும் எந்த தொடர்பும் இல்லைன்னு இப்படியெல்லாம் நடந்துக்கறாளா?” என்று ஆற்றாமையுடன் வினவினான்.

“அப்படியெதுவும் இல்லை. நீங்களே ஏதாவது நினைச்சிக்காதிங்க” என்று மறுப்பு தெரிவித்தான் அசோக்.

“எப்படி நினைக்காம இருக்க முடியும்? அவளோட குடும்பத்தில் கடைசியா இருப்பது பாட்டி ஒருவர். அவரும் போயிட்டார். கணவனான என்கிட்ட சொல்லி, கடைசி காரியத்தையாவது அவள் நல்ல முறையில் செய்திருக்க வேண்டாமா? இப்படி யாருமில்லாதவள் போல நடந்துக்கறாளே…” மனம் வெதும்பினான் கார்த்திக். அவன் பேச்சிலே தெரிந்தது. கிருத்திகா அவனை விலக்கி வைத்து நடத்துவதை, ஏற்றுக் கொள்ள முடியாமல் தவிப்பது!

“அவள் அப்படி நடந்துக்கிறதுக்கு காரணமே நீங்க தானே? பிறகும் இப்படி கோவப்படுவதும், வருத்தப்படுவதும் வினோதமாயிருக்கு!” என்றான் அசோக்.

அவனை முறைத்தான் கார்த்திக். “அப்படி நான் என்ன செஞ்சுட்டேன்? அவள் செய்ததை விடவா…” என்று ஆத்திரமாக கேட்டான்.

“நீங்க தானே அவளால் நிம்மதி, சந்தோசத்தை தொலைத்து நடைபிணமான வாழ்க்கை வாழ்வதாக சொன்னீங்க. ‘என் முகத்தில் முழிக்காதே வெளியே போ’ன்னு சொல்லி அவமதிச்சீங்க. உங்க வீட்டு வேலைக்காரியா அவள்? அவள் யார், அவள் படிப்பென்ன? பார்க்க ஆசைப்பட்ட வேலை என்னன்னு ஏதாவது தெரியுமா? வேண்டாம். நான் செல்வதைக் கேட்டு இரக்கப்பட்டு வாழ்க்கை கொடுக்கும் அவசியமில்லை. அவள் அதை ஏத்துக்கவும் மாட்டா… கட்டுன மனைவின்னு பார்க்காம, அவளைக் கனமான வார்த்தைகளால் பேசி காயப்படுத்தினீங்க. காதலியை மறக்க முடியாம தவிச்சு, அவள்கிட்டே உங்க கோபத்தை காமிச்சிங்க. அப்புறம், அவள் போயிட்டான்னு வருத்தப்படுவதில் என்ன இருக்கு? எதுக்காக அவள் கிட்ட உரிமை எடுக்க பார்க்கறீங்க? அவளை உங்களுக்குப் பிடிக்கலையே? போனால் போகட்டும்னு விட்டுட வேண்டியது தானே! கிருத்திகா, இனிமேல் அங்கு வர மாட்டாள். நீங்க உங்க காதலியை கல்யாணம் பண்ணிட்டு சந்தோசமா இருங்க” என்றான் அசோக். கார்த்திக் முகம் பலத்த அதிர்ச்சியை வெளிப்படுத்தியது.

“என் மனைவி எனக்கு வேணும். அவள் இல்லாம என்னாலே போக முடியாது!” என்றான் கார்த்திக்.

“எதுக்கு மறுபடியும் கொடுமை படுத்தவா? அவங்க பாட்டிக்கு உடல்நிலை சரியில்லைன்னு நான்தான் தகவல் தெரிவிச்சு வரச்சொன்னேன். கடைசி வரைக்கும் அவளை நினைச்சுட்டே அவங்க உயிர் பிரிஞ்சது. அவள் வந்து பார்த்துட்டு எப்படி கதறி அழுதா தெரியுமா? ‘நான் என்ன பாவம் செஞ்சேன்னு, எல்லாரும் என்னைத் தனியா விட்டுட்டு போயிட்டாங்க. என்னையும் அழைச்சுட்டு போயிருக்க கூடாதா’ன்னு என் காலை பிடிச்சிட்டு கேட்டப்போ, என் உயிரையே ஒரு கணம் உலுக்கிட்டு! கிருத்திகா ரொம்ப நல்லவள். கடவுள் இப்படியெல்லாம் அவளை சோதிக்க கூடாது” என்றான். விழிகளில் வழிந்த நீரை துடைத்தான்.

கார்த்திக்கின் செவிகளில் மனையாளின் கதறல் வந்து போனது. தொண்டை அடைத்தது. செருமிக்கொண்டு அவளைப் பற்றி விசாரித்தான்.

“கிருத்திகா யார்? எதுக்காக என் வீட்டுக்கு வந்தா? அவளோட படிப்பிற்கும் பார்க்கும் வேலைக்கும் சம்மந்தம் இல்லையே? எதனால நடக்க இருந்த கல்யாணத்தை நிறுத்தினா? அடிக்கடி ஃபோன்ல பேசி வருத்தப்படுவதும், ‘நான் வந்த காரியம் முடிஞ்சதும் மறுபடியும் வந்துடுவேன்’ என்பதும் உங்க கிட்டே தானே? அப்படி அவள் நினைச்சு வந்த காரியம் என்ன? அன்னைக்கு சாலையில் வச்சு உங்ககிட்ட என்ன பேசினா? எதுக்காக அப்படி மறைச்சி பேசணும்? அப்பா கிட்டே எதுக்காக அத்தனை பாசமா, அக்கறையா நடந்துக்கறா?” என்று கேட்டான்.

கார்த்திக்கின் பேச்சு ஒரு கணம் அவனைத் தடுமாற வைத்தது. தாங்கள் பேசியதை அவன் கேட்டிருக்கிறான், பார்த்திருக்கிறான் அதனாலே அத்தனை கடுமையாக நடந்திருக்கிறான். தங்கள் இருவரை பற்றியும் தவறான புரிதல் இருக்கிறதா தெரியவில்லை. அதேநேரம் உண்மை நிலவரம் தெரியாமல், அவனாலும் ஒன்றி வாழ முடியாது என்பது புரிந்தது. கிருத்திகாவின் அனுமதி இல்லாமல் எப்படி சொல்வது என்று அவன் தடுமாறினான்.

“மிஸ்டர் அசோக்! கிருத்திகா என் மனைவி. அவளை விட்டுப் பிரிஞ்சிருக்க என்னாலே முடியாது. ஆரம்பத்தில் இருந்தே அவள் மீது எனக்கு உண்மையான அன்பு உண்டு. ஏற்கனவே, ஒருத்தியை காதலிப்பதாக நினைச்சதால் இவள் மீதான அன்பை மனதிற்குள் மறைச்சு வச்சுருந்தேன். அப்பா கிட்டேயும் ‘என்னைப் பிடிக்கலை. அந்த மாதிரி எண்ணத்துடன் பழகல. நான் வெறும் வேலைக்காரி. இன்னும் கொஞ்ச நாளில் போயிடுவேன்’னு சொன்னா. கல்யாணத்துக்கு முந்தைய இரவு உங்ககிட்ட ஃபோன்ல பேசி அழுததை நானும் கேட்டேன். அவள் மனசுல என்ன இருக்குன்னு எனக்குத் தெரியல.

மறுநாள் திருமண மண்டபத்தில் வச்சு திடீர்னு மயங்கி விழுந்திட்டா. அவள் ஒரு மர்மமாகவே தெரிஞ்சா. எதையோ செய்வதற்கு என்னை பகடையாய் பயன்படுத்தியதா நினைச்சேன். அத்தோடு அவமானம், வீண்பழி, கோபம் அனைத்தும் ஒருசேர, அவளை வார்த்தையால் வதைத்துவிட்டேன். அது எவ்வளவு பெரிய தவறுன்னு இப்போ நல்லாவே தெரியுது. சொல்லுங்க, என் மனைவியை பற்றி இனிமேலும் நான் தெரிந்து கொள்வதில் ஏதாவது தடை இருக்கிறதா?” என்று கேட்டான் கார்த்திக்.

அவனது பதிலில் திருப்தியுற்றான் அசோக். அவளைப் பற்றிய தகவல்களை அதற்கு மேலும் மறைக்க வேண்டாம் என்று முடிவு செய்தான்.

“கிருத்திகா யார்னு தெரியணுமா?”

அவன் “ஆமாம்” என்றான்.

“கிருத்திகா, உங்கள் தங்கை காயத்ரி உங்களுக்காக பார்த்து வச்சுருந்த பெண். உங்க தங்கையை காப்பதற்காக உயிரை விட்டவனின் தங்கை. தன்னுயிரையும் பொருட்படுத்தாமல், உங்க தங்கையை அவள் அப்பாவிடம் ஒப்படைக்க வந்திருக்கும் உன்னதமான குணமுடையவள்!” என்றான்.

இருக்கையை விட்டு அப்படியே எழுந்து விட்டான் கார்த்திகேயன்!

தொடர்கதைக்கான கருத்துகளை கீழே உள்ள லிங்கில் பதிவு செய்யுங்கள்…

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-16.3594/