காதல் சதுரங்க ஆட்டம் 15

அத்தியாயம் : 15

கார்த்திகேயனின் பேச்சைக்கேட்டு வாய் திறக்க முடியாமல் இருந்தாள் கிருத்திகா. தான் மட்டுமே அவனை நேசிப்பதாக நினைத்திருக்க, அவனோ தன்னை விடவும் பல மடங்கு அதிகமாக நேசித்திருக்கிறான் என்ற உண்மை, அவனது ஒவ்வொரு வார்த்தையிலும் அப்பட்டமாக வெளிப்பட்டது. ‘என் கார்த்திக்! என் காதலன்!! என் கணவன்!!’ என்ற எண்ணத்தில் நிம்மதி பரவசம் அவளை ஆட்கொண்டது. அவன் கைகளுக்குள் சுகமாக அடங்கினாள் கிருத்திகா. இத்தனை நாள் அடக்கி வைத்திருந்த ஆசை, ஏக்கம், தவிப்பு, காதல் அனைத்தையும் அவளிடம் கொட்ட துவங்கினான் காதல் கள்வன்! அவன் வர்ணித்த ஆரஞ்சு சுளைகள் உதட்டுக்குள் சிக்கி மதிமயங்க செய்தன. முதல் பார்வையில் கொள்ளை கொண்ட மெல்லிய சிற்றிடையும், பொய்கையும் அவனிரு கைகளுக்குள் சிக்கி மேலும் பித்துக் கொள்ள செய்தது…

மறுநாள் காலையில் கணவனின் அணைப்பிற்குள் அடங்கியிருந்தாள் கிருத்திகா. நடப்பவை எல்லாம் கனவா நனவா என்று தெரியாமல் கணவனின் முகத்தையே பார்த்தாள். அவன் வாழ்வில் தன்னால் பிரச்சனை வேண்டாம். ஒரேடியாக பிரிந்து சென்று விடலாம் என்று அவள் தீர்மானித்திருந்தாள். அவனோ தானாக தேடி வந்து அழைத்துச் சென்றது மட்டுமின்றி, ஒவ்வொரு வார்த்தையிலும் காதலை சொட்ட சொட்ட கூறி அவளைத் தன் வசப்படுத்துவதிலே கவனமாக இருக்கிறான்.

‘இத்தனை நாட்கள் இல்லாமல் இப்போ மட்டும் எதுக்காக இப்படியெல்லாம் நடந்துக்கறார்? யார் அவரிடம் நடந்த உண்மைகள் எல்லாவற்றையும் தெரியப்படுத்தி இருப்பாங்க? அசோக் அல்லது மாமா இருவரில் யாராக இருக்கும்?’ என்று தெரியாமல் யோசனையில் மூழ்கினாள்.

அவன் விழிகளைத் திறந்தான். தன்னையே பார்த்துக் கொண்டிருப்பவள் நெற்றியில் முட்டினான். “என்ன காலையிலேயே சைட் அடிச்சிட்டு இருக்க?”

“ம்ஹூம்…”

“பின்னே?”

“இல்லை. என்னைப் பற்றிய விவரங்களையெல்லாம் உங்களுக்கு யார் சொன்னாங்க?” என்று தயக்கத்துடன் வினவினாள்.

கார்த்திக் “அதைக் கேட்கற நேரமாடி இது? நேரமாகுது எழுந்து போய், காலை சமையலை முடிச்சுட்டு, நீயும் ரெடியாகி அப்பாவையும் தயார் செய். ஹாஸ்பெட்டலுக்கு கிளம்பணும்” என்றான்.

அவள் முறைத்தாள். “ராத்திரியெல்லாம் பேசிப் பேசியே தூங்க விடலை. இப்போ ரொம்பத்தான்” என்று சொல்லிவிட்டு உதட்டை சுளித்தாள்.

அவனோ “நாங்க அப்படித்தான் நடந்துக்குவோம். நீங்க அட்ஜஸ்ட் பண்ணிட்டு எழுந்து போக பழகிக்கணும்” என்று சொல்லிவிட்டு அவளது சுளித்த உதடுகளை கவ்வி இழுத்தான். சில நிமிடங்களுக்கு பிறகு “ரொம்பத்தான்…” என்று கூறிக்கொண்டே விடுவித்தான். அவள் “வெவ்வெவ்வே! இன்னைக்கு வருவீங்கல்ல! அப்போ வச்சுக்கறேன்” என்று சொல்லிக்கொண்டு கீழே குதித்தாள். மாற்றுடைகளுடன் குளியல் அறையை நோக்கி விரைந்தாள்.

கார்த்திக் சத்தமாக சிரித்தான். மறுபடியும் விழிகளை மூடி மனையாளுடன் கனவுலகில் சஞ்சாரித்தான். மனம் முழுவதும் நிம்மதியால் தழும்பி வழிந்தது.

காலை உணவை முடித்தனர். கார்த்திக், ஹரிச்சந்திரனை தூக்கிச் சென்று தன்னுடைய காரில் அமர வைத்தான். கோகுல், அகல்யா இருவரும் நேராக அலுவலகத்திலிருந்து வந்து விடுவதாக கூறினார்கள். கிருத்திகாவும், புவனாவும் இரண்டு பக்கமும் ஏறி அமர்ந்தார்கள். கதவை சாற்றிவிட்டு காரை இயக்கினான் கார்த்திக். சரியாக பதினைந்தாவது நிமிடம் மருத்துவ வளாகத்தை அடைந்தனர். வேகமாக இறங்கியவன் ஹரிச்சந்திரனை தூக்கிச் சென்று இருக்கையில் அமர்த்தினான். உடனே உள்ளே சென்று மருத்துவர் சிவராமை பார்க்க வேண்டும் என்று கூறினான்.

ஐந்து நிமிடத்தில் அவர் முன்பு சென்று அமர்ந்தார்கள். “சொல்லுங்க, இவங்களுக்கு என்னாச்சு?” என்று கேட்டார்.

கார்த்திக் மாரடைப்பு வந்து அனுமதித்தது முதல் தற்சமயத்து சிகிச்சை வரையில் தெரிவித்தான். கேட்டுக்கொண்டே அவரை படுக்கையில் கிடத்த சொன்னார். சற்று நேரம் அவரது உடல்நிலை குறித்து பேசினார். உணவு முறை, மெடிசின்… என்று பலவற்றையும் கேட்டுத் தெரிந்து கொண்டார். பின்னர், கார்த்திக்கின் முன்புறம் வந்து அமர்ந்தார்.

“மிஸ்டர் கார்த்திக்! உங்க அப்பாவுக்கு வந்த மாரடைப்பு, இதுக்கு முன்னே சரியாகி இருக்கணும். அவர் சதா படுக்கையில் ஓய்வெடுத்துட்டு இருப்பதால் வந்த தள்ளாட்டமாக இருக்கலாம். சத்தான மருந்து மாத்திரைகளுடன், சரிவிகித உணவை எடுத்துட்டு, பிஸியோதெரபி கொடுத்தால், ரெண்டு மூணு மாசத்தில் முழுவதுமாக குணமாக வாய்ப்பிருக்கு” என்றார்.

அப்போது அகல்யாவுடன், கோகுல் உள்ளே நுழைந்தான். கிருத்திகாவை பார்த்ததும் அவள் முகம் மாறியது. “இவள் எதுக்கு இங்கே வந்துருக்கா? அவளை வெளியே போக சொல்லுங்க” என்று கணவனின் செவியருகில் முணுமுணுத்தாள். அவன் அமைதியாக இருக்குமாறு கை செய்கையில் கூறினான். புவனா எழுந்து நின்றாள். அவன் தங்கையின் இருக்கையில் அமர்ந்தான்.

கிருத்திகா எழ முயன்றாள். கார்த்திக் அவளது கைப்பற்றி அமரச் செய்தான். அகல்யா சீற்றத்துடன் நின்றாள்.

“அப்பாவுக்கு என்ன பிராப்ளம் டாக்டர்?”

“மிஸ்டர் கோகுல், அவங்களுக்கு ஒண்ணும் இல்லை நல்லாத்தான் இருக்காங்க. இது நார்மலா வரக்கூடிய மாரடைப்பு. இத்தனை நாட்களுக்குள் குணமாகாத விசயம், எனக்கே ஆச்சர்யமா இருக்கு!” என்று வியந்தார்.

“என்ன டாக்டர் சொல்றீங்க? பிறகும் ஏன் அப்பா இவ்வளவு நாளா எழுந்து நடக்க முடியாம இருக்காங்க” என்று கேட்டான் கார்த்திக்.

“தெரியலை கார்த்திக். நானும் இப்போ தானே அப்பாவை முதன் முறையா பார்க்கிறேன். இதுக்கு முன்னே அவரை பரிசோதனை பண்ணியது யார்? அந்த டாக்டர் அளித்த மருத்துவ சான்றிதழ்களை தர முடியுமா?” என்று கேட்டார்.

உடனே அவன் கொடுத்தான். அவர் சில நிமிடங்கள் பார்வையிட்டார். “மிஸ்டர் கார்த்திக், எல்லாமே நார்மலா இருக்கு. நானும் இதையே பரிந்துரை செய்யலாம்” என்றார்.

“சார், இதுக்கு முன்னே மாமாவுக்கு சிகிச்சை அளித்தது டாக்டர் ராஜன்! அதாவது, மாமாவுக்கு உடல் நிலை சரியாக கூடாது எனும் ரீதியில் சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கு” என்றாள் கிருத்திகா.

அனைவரும் அவளை அதிர்ச்சியுடன் பார்த்தனர்.

“என்ன சொல்ற கீர்த்தி?”

“ஆமாங்க. டாக்டர் ராஜனை விசாரணை செய்தா, எதனால் அப்படி செய்தார்? யார் செய்ய சொன்னாங்கன்னு தெரிய வரும்” என்றாள்.

“ஆனால், எதுக்காக அவரை சந்தேகப்படணும்.? எதனால் அவர் அப்படி செய்திருப்பதா நினைக்கறீங்க?” புருவங்கள் இடுங்க யோசனையுடன் கேட்டார் சிவராம்.

“சார், மாமாவுக்கு வந்திருப்பது அத்தனை கடுமையான மாரடைப்பு அல்ல. ஆனால், கடுமையா வந்தது போல் பொய்யான ரிப்போர்ட் தயார் செய்து, சிகிச்சை அளிப்பதாக பொய்யுரைத்து பல லட்சம் ரூபாய் பணத்தை பிடுங்கி இருக்காங்க. அத்துடன், பணியாள், செவிலியின் கவனக்குறைவு, உடல்நிலையை சுட்டிக்காட்டி கட்டாய ஓய்வில் இருக்க வச்சுருக்காங்க” என்றாள் கிருத்திகா.

அவர் கவனமாக கேட்டுக்கொண்டார். “உங்களுக்கு எப்படித் தெரியும்?”

“என் அண்ணனின் நண்பனிடம் இது விசயமா பேசினேன். அவர் மருத்துவ சான்றிதழை அனுப்பித் தரச்சொன்னார். நானும் புகைப்படமெடுத்து அனுப்பிக் கொடுத்தேன். அதைப் பார்த்த இதய நிபுணர் மருத்துவர் கிருஷ்ணமூர்த்தி எல்லா விசயத்தையும் விளக்கமா சொன்னார். அத்தோடு, விரைவில் சிகிச்சை அளிக்கா விட்டால், நடக்கும் வாய்ப்பு இல்லாமலே போகலாம் என்றதால், நான் உடனே கிளம்பி வந்தேன். அதுக்குள் என் கணவரும் உங்களைப் பார்க்கணும்னு அழைச்சிட்டு வந்துட்டாங்க” என்றாள்.

‘கணவர்’ என்ற வார்த்தைகள் அகல்யாவை கொதிப்படைய செய்தன.

கிருத்திகா கூறுவதை பொறுமையாக கேட்டார் சிவராம். பின்னர், தன்னுடைய உதவியாளை அழைத்தார். உடனடியாக மின் இதயத்துடிப்பு வரைவு (ECG), இதய காந்த ஒத்ததிர்வு (MRI), இரத்த சோதனைகள், பிளட் பிரசர்… அனைத்தையும் பார்க்க வேண்டும் என்று உத்தரவிட்டார். அன்றைய சிகிச்சையின் போது உடன் இருந்த செவிலிகள் மற்றும் மருத்துவரையும் வரச்சொன்னார்.

“மிஸ்டர் கார்த்திக், நீங்க சொல்ற மாதிரி இருந்தா கண்டிப்பா மாற்று சிகிச்சை மூலம் அவரை குணப்படுத்தலாம். நான் வெளியூருக்கு வேலை விசயமா போயிருந்த நேரம், எனக்கு அடுத்த இடத்தில் இருந்த டாக்டர் ராஜனிடம், மருத்துவமனை நிர்வாகத்தை பார்க்கும் பொறுப்பை ஒப்படைத்திருந்தேன். அந்த நேரத்தில் அவர் இப்படியெல்லாம் நடந்திருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. அவரது செயலுக்காக நான் மன்னிப்பு கேட்கறேன். உங்க அப்பா உடல் நலம் குணமாவது என் பொறுப்பு. இன்னைக்கே அட்மிட் பண்ணிடலாம். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் முடிச்சுடலாம்” என்றார்.

“டாக்டர் ராஜனை நான் பார்க்கணும். யார் பேச்சைக்கேட்டு, எதுக்காக இப்படியெல்லாம் நடந்துக்கிட்டார்னு தெரியணும்” அடக்கப்பட்ட கோபத்துடன் வினவினான் கார்த்திக்.

“கண்டிப்பா, அவரை இப்போதே வரச் சொல்றேன் கார்த்திக். அவர் தவறு செய்தது நிரூபிக்கப்பட்டால், அடுத்த நிமிடம் வேலையில் இருந்து டிஸ்மிஸ் பண்ணுவதோடு மட்டுமில்லாம, போலீஸிலும் புகார் கொடுக்கிறேன்” என்றார்.

அவர் மீதான நம்பிக்கையில் அனைவரும் எழுந்து வெளியேறினர். அகல்யா சீற்றத்துடன் அவர்களை தொடர்ந்தாள். இத்தனை நாட்கள் அலுவலகத்தில் ராணியாக வலம் வந்தாள். திடீரென்று கார்த்திகேயனால் பொறுப்பில் இருந்து விலக்கப்பட்டாள். வீட்டிலும் அவன் கையே ஓங்கி நிற்பது, அவளை அதிக கோபமடைய செய்தது. அதற்கு காரணம் கிருத்திகா என்ற காழ்ப்புணர்ச்சியில், சினத்தை அடக்க முடியாமல் வெம்பினாள்.

ஹரிச்சந்திரனை மருத்துவ பரிசோதனை அறையில் படுக்க வைத்தான் கார்த்திக். “பயப்படாதீங்கப்பா, சீக்கிரமே உடம்புக்கு சரியாகிடும்” என்றான். அவர் தலையசைத்தார்.

மருத்துவரிடம் சற்று நேரம் பேசினான். தங்களுக்கென்று ஒரு அறை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறினான். விடைபெற்று மனையாள், தங்கை நிற்கும் இடத்தை நோக்கி நடந்தான்.

கார்த்திக் அங்கு இல்லாத வாய்ப்பை பயன்படுத்தி, கிருத்திகாவை வீட்டிற்கு துரத்த முடிவு செய்தாள் அகல்யா. அவளை கை தட்டி அழைத்தாள். “ஏய்! அதான் வந்தாச்சு அனுமதிச்சாச்சுல்ல. இனிமேலும் ஏன் இங்கேயே நின்னு வேடிக்கைப் பார்த்துட்டு இருக்க? கிளம்பு! வீட்ல நிறைய வேலை இருக்கு!” என்றாள். அவள் மறுப்பாக தலையசைத்தாள்.

“என்னடி, கார்த்திக் எதுவும் சொல்லாத திமிரில் இவ்வளவு தைரியமா நிற்கிறியா? வீட்டு வேலையாட்கள் முன்னாடியே உன்னை வேலைக்காரின்னு சொல்லி அவமதித்து துரத்தி விட்டார். இங்கேயும் உனக்கந்த அவமானம் தேவையா?” என்று குத்திக் காட்டினாள். அவள் விழிகள் கலங்கியது. கார்த்திக் வருவது தெரிந்தது. ஏதாவது பிரச்சனையாகி விடுமோ எனும் அச்சத்தில், அருகில் நின்ற புவனாவின் கையை இறுக்கமாக பற்றிக் கொண்டாள்.

“சொன்னா கேட்க கூடாதுங்கிற முடிவோடே வந்திருக்கறியா? கார்த்திக் வரட்டும், அவர் கையாலே உன்னைக் கழுத்தை பிடிச்சு வெளியே தள்ள வைக்கிறேன்” என்று சீறினாள் அகல்யா. விழிகள் படபடக்க கணவனை பார்த்தாள் கிருத்திகா. மனையாளின் பயம் கலந்த முகத்தைப் பார்த்துக்கொண்டே வந்தான் கார்த்திக். அவளது கண் கலங்கி, உதடுகள் அச்சத்தால் துடிப்பது தெரிந்தது. கைகள் ஒருவித நடுக்கத்துடன் தங்கையை பற்றி இருந்தது. சந்தேகத்துடன் புவனாவை பார்த்தான். அவள் கண்கள் அகல்யாவை காண்பித்துக் கொடுத்தது. முகம் இறுக அண்ணனை நெருங்கினான்.

“அப்பாவை அட்மிட் பண்ணியாச்சு. டாக்டர் ராஜனையும், ஆபரேஷன் பண்ண உதவிய எல்லாரையும் வரச்சொல்லி இருக்காங்க. அப்பா வீட்டுக்கு வரும் வரைக்கும் நீங்களே அலுவலகத்தை பார்த்துக்கோங்க. தினமும் அலுவலகத்தில் நடக்கும் விசயத்தை எனக்கு தெரியப்படுத்துங்க. நான் இங்கே இருந்தே என் வேலையை பார்த்துக்கறேன். புவனாவும், கிருத்திகாவும் என்னோடு இருக்கட்டும்” என்றான்.

அகல்யா, “புவனாவும் நீங்களும் இருக்க வீணாக அவள் எதுக்கு? வீட்ல வேலையெல்லாம் அப்படியே கிடக்கு. ஏற்கனவே பதினைஞ்சு நாளுக்கு மேலா வேலையே பார்க்கல. கிருத்திகா, நீ உடனே கிளம்பி வீட்டுக்கு போ! நான் ஈவ்னிங் வந்துடறேன்” அவன் முன்பே திமிராக கூறினாள் அகல்யா.

கார்த்திக்கின் முகம் மாறியது. “நீங்க ஹாஸ்பெட்டல அப்பாவின் அருகில் இருந்து அக்கறையா பார்த்துக்க முடியுமா?” என்றான்.

“எனக்கு நிறைய வேலை இருக்கு. அதான் புவனா இருக்கிறாளே…” என்று அலட்சியமாக கூறினாள்.

“ம்… புவனா ஒரு வயசுப்பெண். திடீரென்று மருத்துவரை பார்க்கணும், அப்பாவை கவனிக்கணும், மருந்து வாங்கணும், உணவு வாங்கணும், வீட்டுக்குப் போக வேண்டியது வரும். அப்பாவை பார்க்க, விசாரிக்கன்னு பலர் வரக்கூடும். அவள் மட்டும் எப்படி தனியா இருக்க முடியும்? ஏற்கனவே ஒருத்திக்கு ஆனது போல் இவளுக்கும் ஏதாவது ஆகிட்டா… அப்புறம், உங்களுக்கு எந்த தொல்லையும் இல்லாம நிம்மதியா இருக்கலாம் இல்லையா?” என்று இடக்காக கேட்டான்.

அனைவரும் அதிர்ச்சியுடன் திகில் கலந்த பார்வையை அவள் மீது செலுத்தினர். “எ… என்ன சொல்றீங்க? நான்… நான் யாரையும் எதுவும் பண்ணல?” என்று நடுக்கத்துடன் கூறினாள்.

“ம்… அப்படியா? கூடிய சீக்கிரம் தெரிஞ்சிடும். உங்களுக்கும் அதில் சம்மந்தம் இருப்பதா தெரியவந்தது அப்புறம் நடப்பதே வேறு… பொறுப்பான மூத்த மருமகளா வீட்டு நிர்வாகத்தை மட்டும் பார்த்திட்டு ஒழுங்கா இருங்க. அலுவலகத்தை நானும் அண்ணாவும் பார்த்துப்போம். கிருத்திகா, அப்பாவையும் புவனாவையும் பார்த்துப்பா” என்று கூறினான்.

அவள் வீம்புடன் மறுத்தாள்.

“எங்க அப்பா பெரிய கோடீஸ்வரர். அவர் அலுவலகத்தில் மருமகளான நீங்க அண்ணனுக்கு உதவியா இருந்தது போதும். வேலைக்காரியா நடந்துக்க வேண்டாம். நான் படிச்சதும், பயிற்சிக்கு போனதும், அப்பாவின் அறிவுரையும், அண்ணனின் திறமையும் அலுவலகத்தை மேலும் சிறப்பா கொண்டு போக உதவும். உங்க அப்பாவின் அறிவுரையும், தம்பியின் அவசியற்ற நுழைவும் தேவையில்லாதது. அவர்களை உள்ளே கொண்டு வரத்தான் என் அப்பாவை இந்த நிலைமைக்கு ஆக்குனீங்களா? என்னையும் ரியல் எஸ்டேட் பிஸ்னஸை மட்டும் பார்க்க சொல்லி துரத்தி விட நினைச்சீங்களா?” என்று கேட்டான். அவள் மறுப்பாக தலையசைத்தாள்.

“இது எங்க அப்பா கட்டிக் காப்பாற்றிய கோட்டை. அது என் அண்ணன், நான், தங்கை இருவருக்கு மட்டுமே உரிமையானது. மற்றவருக்கு இடமில்லை. நீங்களா சொல்லி அவர்களை விலக்கி விடுவது நல்லது. இல்லை… என் பாணியில் சொல்ல வேண்டியது வரும். அப்புறம், கிருத்திகா என் மனைவி! அவளை அதிகாரம் பண்ணுவது? காயப்படுத்துவது, வேலைக்காரியை விட கேவலமா நடத்துவதெல்லாம் இத்தோடு நிருத்திக்கோங்க. நம்ம வீட்டு நிர்வாகத்துடன், உங்களுக்கு அலுவலக ரீதியாகவும், அவள் திறம்பட உதவி புரிகிறாள். என் மனைவியை தவறா பேசுவதை இன்னும் ஒருமுறை பார்த்தேன் … பிறகு, என்னோட இன்னொரு முகத்தை பார்க்க வேண்டியது வரும்” என்று கூறினான்.

அவனது குரலில் இருந்த அழுத்தம் சொன்னால் செய்து விடுவான் என்பதை தெளிவாக அறிவுறுத்தியது. கணவனைப் பார்த்தாள் அகல்யா. ‘அவன் இத்தனை பேசுகிறான். நீ அமைதியாக நிற்கிறாயே’ என்பதை போல…

“அண்ணனுக்கும் எனக்கும் இடையில் பிரச்சனையை உண்டு பண்ண நினைச்சா, ஒருபோதும் நடக்காது. இத்தோடு உங்க குணத்தை மாத்திட்டு ஒழுங்கா இருக்கிற வழியை பாருங்க. இல்லைன்னா…” என்று சொல்லிக்கொண்டிருந்த கார்த்திக்கை தொடர்ந்து,

“கழுத்தை பிடிச்சு நானே வெளியே தள்ளிடுவேன்” என்றான் கோகுல். அவள் பேயரைந்தார் போல நின்றாள்.

தொடர்கதைக்கான கருத்துகளை கீழே உள்ள லிங்கில் பதிவு செய்யுங்கள்…

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-15.3583/