காதல் சதுரங்க ஆட்டம் 14

அத்தியாயம் : 14

கார்த்திக் வெளியேறியதும், மாமனாரின் அறைக்குள் சென்றாள் கிருத்திகா. புவனாவிடம் பேசிக்கொண்டிருந்தவர் அவளைப் பார்த்ததும் புன்னகைத்தார். “வாம்மா” என்று அழைத்து அமரச் செய்தார். விடுமுறைக்குச் சென்றதை பற்றி விசாரித்தார். அவள் பாட்டி இறந்து விட்டதை பற்றி கூறிக்கொண்டு கண்ணீர் வடித்தாள். இத்தனை பேர் இருந்தும் போகாமல், அவள் மட்டும் தனிமையில் சென்று அனைத்தையும் முடித்து விட்டு வந்திருக்கிறாளே என்று நினைத்து வருத்தப்பட்டார்.

திருமணம் முடிந்தும் மகனும் போக முடியாமல் ஆகிவிட்டதே. அவனுக்குத் தெரிந்திருந்தால் கட்டாயம் போகாமல் இருந்திருக்க மாட்டான். இனிமேலாவது அவளை நன்முறையில் பார்த்துக் கொள்ள சொல்ல வேண்டும் என்று முடிவு செய்தார்.

புவனா “அண்ணி, உங்களுக்கு நாங்க இருக்கோம். எதையும் நினைச்சி வருத்தப்படாதீங்க” என்றாள். அவர், “ஆமாம்மா, உனக்கு நாங்க எல்லாரும் இருக்கோம். கார்த்திக் உன்னை நல்ல மாதிரி பார்த்துப்பான். கவலைப்படாம சந்தோசமா இரு” என்றார்.

கிருத்திகா, “நான் நல்லா இருக்கேன் மாமா. நீங்க எல்லாரும் இருக்கும் போது எனக்கு என்ன…” என்று சொல்லிவிட்டு கண்ணீரைத் துடைத்தாள். பின்னர், ஹரிச்சந்திரனை பார்த்தாள். “நாளைக்கு ஹாஸ்பெட்டலுக்குப் போகணும்னு சொன்னாங்க மாமா. உங்களை வேறு நல்ல டாக்டரிடம் காட்டி பரிசோதனை செய்யணும்” என்றாள்.

அவர் விழிகள் ஆயாசமாக மூடியது. “இனி ஆனால் என்ன? ஆகாவிட்டால் என்ன?” என்று நிராசையுடன் கூறினார்.

“என்ன மாமா அப்படி சொல்லிட்டீங்க? உங்க பேரனோ, பேத்தியோ வரும் போது, எடுத்துக் கொஞ்ச உடம்பில் வலுவிருக்க வேணாமா? அவனோடு ஓடி விளையாடி, எழுதப் படிக்க சொல்லிக் கொடுத்து, உங்களைப் போல் திறமைசாலியா வளர்க்க வேணாமா?” என்று கேட்டாள். அவர் உடனே எழுந்து நடக்க முயற்சித்தார்.

“மாமா, அவசரப்படாதீங்க. நீங்க நிறைய நாள் படுத்தே இருந்ததால் எலும்புகள் அனைத்தும் வலுவிளந்து போயிருக்கும். கொஞ்சம் கொஞ்சமா நடக்க முயற்சி பண்ணுங்க. சத்தான உணவு சாப்பிடுங்க. டாக்டர் என்ன சொல்றார்னு பார்த்திட்டு வேறு சிகிச்சை பண்ணலாம். கூடிய சீக்கிரம் நீங்க எழுந்து நடமாடணும்” என்றாள். அவளது தன்மீதான அக்கறையில் அவரது உள்ளம் நெகிழ்ச்சி அடைந்தது.

“நீ ரொம்ப நல்லவ. கடவுள் உனக்கு ஒரு குறையும் வைக்க மாட்டார்” என்றார்.

அவள் புன்னகையுடன் காலை உணவை உண்ணச் சென்றாள். அதற்குப் பிறகு அலுவலக பணியுடன், வீட்டு வேலைகள் சரியாக இருந்தது.

மாலையில் வீட்டிற்கு வந்த அகல்யா, அவளைப் பார்த்ததும் புருவத்தை சுருக்கினாள்.

“நீ எப்போது வந்த? பிறகு எதுக்கு மதிய உணவு அனுப்பி விடல? சாப்பிட்டு சும்மாதானே இருந்திருப்ப?” என்று கேட்டுக்கொண்டே முறைத்தாள்.

“இந்த மாசத்துக்கான கணக்கு வழக்கு நாளைக்கு எனக்கு வந்திருக்கணும். அத்தோடு எனக்கு முக்கியமான வேலையிருக்கு. அதுக்கு நீதான் உதவி செய்யணும். நாளைக்கு ஃபைல் எல்லாம் அனுப்பி வைக்கிறேன். யாருக்கும் தெரியாம ஹெஸ்ட் ஹவுஸில் இருந்து பார்த்து தயார் செய்து வை!” என்று அதிகாரமான குரலில் கூறினாள்.

அவள் மறுப்பாக தலையசைத்தாள். “ஏன்?”

“நாளைக்கு மாமாவை ஹாஸ்பெட்டலுக்கு அழைச்சிட்டு போகணும். சமையல், அலுவலக வேலை, ஃபைல் எதுவும் பார்க்க முடியாது” என்று தயக்கத்துடன் கூறினாள். அவளோ கடுமையாக முறைத்தாள்.

“மாமாவா? யாருக்கு யார் மாமா? கார்த்திக், உன்னை வேண்டாம்னு சொல்லி தூக்கி எறிஞ்சிட்டாரே… பிறகும் எந்த உரிமையில் மாமான்னு சொல்ற? அவரைப் பார்த்துக்க எங்களுக்குத் தெரியும், ஒழுங்கா கொடுக்கிற சம்பளத்துக்கு ஏத்த மாதிரி வேலையைப் பாரு. இல்லை சீட்டை கிளிச்சிட்டு, வேற ஆளை உன் இடத்துக்கு கொண்டு வர அதிக நேரமாகாது” என்று சீறினாள்.

கார்த்திக் வந்து விட்டால் பிரச்சனை ஆகி விடுமே என்கிற அச்சத்தில் அங்கும் இங்குமாக பார்த்துக்கொண்டு நின்றாள் கிருத்திகா. புவனா நடப்பவற்றை அப்படியே அப்பாவிடம் சொல்லிக் கொடுத்தாள். அவர் மகனே எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வான் என்பது போல் அமைதியாக இருந்தார்.

சற்று நேரம் கத்திக்கொண்டே அவள் சென்றாள். புவனா வந்து கைப்பற்றினாள். “என்ன அண்ணி, அவங்க இவ்வளவு தூரம் உங்களை அவமதிப்பாக பேசிட்டு போறாங்க. நீங்க பதிலே சொல்லாம அமைதியா இருக்கறீங்க. உங்களுக்கு கோபமே வராதா?” என்று கேட்டாள்.

அவள் புன்னகைத்தாள். “எனக்குன்னு வேற யார் இருக்காங்க. அவங்க எனக்கு வேலை கொடுத்த முதலாளி. அன்னைக்கு அவங்க மட்டும் வேலை கொடுக்காம இருந்திருந்தா… இன்னைக்கு நான் இப்படி, உன்னோடு உட்கார்ந்து பேசிட்டு இருக்க முடியுமா? ஏதோவொரு கோபத்தில் பேசுறாங்க. அதுக்காக நானும் கோபப்பட்டு எதிர்த்து பேசினால் அப்புறம், வீட்ல நிம்மதி என்பதே இல்லாம போயிடும்” என்று கூறினாள்.

“அண்ணி, நிஜமாகவே நீங்க ரொம்ப நல்லவங்க. அண்ணன் கொடுத்து வச்சவர். சாம்பவியை கட்டியிருந்தா அவரும் சந்தோஷமா இருந்திருக்க மாட்டார். நாங்களும்…” என்றாள்.

கிருத்திகா, “அப்படியெல்லாம் சொல்ல கூடாது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு குணம். எல்லாரும் ஒரே மாதிரி இருக்க முடியுமா? அவங்களை விரும்பியது உங்க அண்ணா தானே. நமக்கு பிடிச்சு என்ன ஆகப்போகுது? ஒருவேளை அவங்க அமைதியான சுபாவம் உள்ளவரா இருக்கலாம். கல்யாணமாகி இருந்தால் சரியாகியிருக்கும். இனிமேல் அதைப் பற்றி பேசி ஆவது என்ன?” என்று அவளை சமாதானப்படுத்தினாள்.

பெருமூச்சு விட்டாள் புவனா.

“என் அக்கா காயத்ரி ரொம்ப நல்லவ. திடீர்னு விபத்தில் இறந்து போயிட்டா. எனக்கொரு நல்ல சினேகிதி அவள். காயத்ரி மறைஞ்ச பிறகு, அப்பாவுக்கும் எனக்கும் எது மேலயும் பற்றுதலே இல்லாம போயிடுச்சு. உங்களைப் பார்த்து பேசிய பிறகுதான், அப்பாவுக்கும் எனக்கும் போன மகிழ்ச்சி மீண்டும் வந்தது போலிருந்தது. வீட்டு நிர்வாகம் முதல் வேலை அத்தனையும் அழகா பார்க்கறீங்க. எங்க அம்மா மாதிரி அக்கறையோடு கவனிக்கிறீங்க. உண்மையான அன்போடு நடந்துங்கறீங்க. அப்படிப்பட்ட உங்களை எங்க அண்ணனுக்கு ஏன் முதல்லயே பிடிக்காம போச்சு? எதனால் அத்தனை கோபம், வெறுப்பைக் கொட்டினாங்க?

ஏற்கனவே பெரிய அண்ணி சதா அலுவலத்தை கட்டிக்கிட்டு அழுவாங்க. அம்மா, அக்கா இல்லை. அப்பா நோயாளி. சின்ன அண்ணனும் லவ் மேரேஜ் பண்ணிட்டு, அவரோட வாழ்க்கையை பார்த்துட்டு போக ஆரம்பிச்சிருந்தா. அப்புறம், என்னோட நிலைமை என்னாகுமோ நினைச்சு ரொம்ப பயந்து போயிருந்தேன்? நல்ல வேளையா கடவுள் காப்பாத்திட்டார்” என்றாள்.

அவளது அச்சம் நியாயமானதாக தெரிந்தது. தன்மீதான அவளது பாசமும் மனதிற்கு இதமாக இருந்தது.

“உங்க அண்ணா ரொம்ப நல்லவங்க புவனா. என்கிட்டே ரொம்ப நல்ல மாதிரி பழகுனாங்க. தன்னாலே யாரோட வாழ்க்கையும் பாதிப்படைய வேண்டாம்னு நினைச்சாங்க. அத்தோடு, காதலிச்சிட்டு ஏமாத்துவதும் தவறு தானே? அவங்க நியாயமாகவே நடந்துக்கிட்டாங்க. நான் மட்டும் வராம இருந்தா, எல்லாம் சரியா போயிருக்கும்” என்று தன்மீதே பழியை போட்டுக் கொண்டாள்.

அப்போது இருவரின் உரையாடல்களையும் கேட்டுக்கொண்டு கார்த்திக் வந்தான். ‘எனக்காக எப்படியெல்லாம் பேசுகிறாள். என்னை யாரும் தவறாக எண்ணி விடக்கூடாது. என் வாழ்க்கை அழிஞ்சிடக்கூடாது என்பதில் எத்தனை அக்கறையுடன் இருக்கிறாள். என் மீதுதான் அவளுக்கு எத்தனை பாசம்!! ஏன் கிருத்திகா, கொஞ்ச நாளைக்கு முன்னே என் கண்ணில் படாமல் போனாய்? ஏன் என்னை இப்படி குற்றவாளியா தலை குனிஞ்சு நிற்க வச்சுட்ட? அப்பா சொன்னது போல் யோசிக்காம அவசரப்பட்டுட்டனே…’ என்று நினைத்து வருத்தத்துடன் நின்றான்.

அவனைப் பார்த்த இருவரும் புன்னகையுடன் எழுந்தனர். அவன் பேக்கை மனையாளிடம் கொடுத்தான். “சூடா ஒரு கப் காஃபி எடுத்துட்டு வா!” என்றான்.

அவள் சமையல் அறைக்குச் சென்றாள். அவன் அப்பாவிடம் அன்றைய அலுவலக விசயமாக பேசிக்கொண்டிருந்தான். சூடான காஃபியை அருந்திவிட்டு தன்னுடைய அறைக்குச் சென்றான்.

இரவு உணவை முடித்தனர். அவள் புவனாவுடன் அமர்ந்திருந்தாள். இரவை நினைக்கையில் வயிற்றில் புளியை கரைத்தது. அவளை விட்டு விலகாமல் அமர்ந்து கொண்டாள். அவன் புன்னகையுடன் எழுந்து சென்றான்.

இரவு நேரம் ஒன்பது தாண்டியது. “அண்ணி தூங்க போகலை? அண்ணா, அப்பவே போயாச்சு…” என்றாள்.

அவள் பதில் கூறாமல் இருந்தாள். புரிந்தார் போல் புன்னகைத்தாள். “பயமாயிருக்கா?” என்று கிண்டல் செய்தாள். கிருத்திகா தலையசைத்தாள்.

“அண்ணா ஏதாவது வம்பு பண்ணினா, அப்பாவுக்கு கொடுக்கிற தூக்க மாத்திரையை பால்ல கலந்து கொடுத்து தூங்க வச்சிடுங்க” என்று சொல்லிக்கொண்டே கலகலவென்று நகைத்தாள்.

கிருத்திகா, “அச்சச்சோ!! அவங்க பாவம். ஆளை விடும்மா” என்று சொல்லிவிட்டு எழுந்து ஓடினாள். அவள் விடாமல் சிரித்தாள். மேலே வந்ததும் தயங்கினாள். மெது அடிகளை எடுத்து வைத்து கதவருகில் நின்றாள். கார்த்திக், மடிக்கணினியில் மூழ்கி இருந்தான். “ஏன் இவ்வளவு லேட்? வா!” என்ற அழைப்பில், கதவை சாற்றிவிட்டு உள்ளே நுழைந்தாள்.

அவள் முகத்தில் ஓடிய பாவங்களை பார்த்ததும் முறுவலித்தான். “எங்கிட்டே என்ன பயம்? நான் வேற யாருமா?” என்றான். மடிக்கணினியை அணைத்து மேஜையின் மீது வைத்துவிட்டு அவளை நெருங்கினான். அன்றைய சந்திப்பிற்கும் இன்றும் நிறைய மாற்றம் தெரிந்தது.

“இந்த சினிமாவில் எல்லாம் பட்டுப்புடவை அணிஞ்சு, கைவளையல் குலுங்க, கால்கொலுசு சிணுங்க, தலைகொள்ளா பூவுடன், முகமெல்லாம் குங்கும நிறத்தில் சிவக்க, பால் செம்பை இருகைகளில் ஏந்தி, அச்சத்துடன் கதவைத் தாளிட்டு, அன்ன நடையுடன் கொடி இடை அசைய, பால் சொம்பை என் கைதனில் கொடுத்து, காலைத் தொட்டு பயபக்தியோடு கும்பிட்டு, செங்காந்தள் மலர் போல் நாணம் கலந்த எதிர்பார்ப்புடன், குனிந்த தலை நிமிராமல் நிற்பரே நம் குலத்து பெண்டிர்… அப்படி ஒண்ணுமே கிடையாதா?” என்று செவியருகில் கிசுகிசுத்தான். அவளுக்கு நாணத்தில் முகமெல்லாம் சிவந்தது.

மனையாளின் முகத்தை கண் சிமிட்டாமல் ரசித்தான் கார்த்திக். அவளைப் பற்றி மென்மையாக அணைத்தான். அவளது உடலில் பதட்டமும், அச்சமும் தொற்றிக் கொண்டது. அதேநேரம் சொல்ல முடியாத பாதுகாப்பும், தான் வர வேண்டிய இடத்திற்கு வந்து சேர்ந்து விட்ட நிம்மதியும் பிறந்தது. அவன் மார்பில் முகத்தைப் புதைத்தாள்.

“கிருத்திகா, கார்த்திக் எத்தனை பொருத்தமான பெயர் பார்த்தியா? நீ பிறந்ததே எனக்காக!” என்று கூறினான். அவள் நிமிர்ந்து பார்த்தாள்.

“என்ன அப்படி பார்க்கற? கார்த்திகை மாசம் வருகின்ற கிருத்திகை நட்சத்திரம் அன்று பிறந்தவள் அல்லவா நீ? அதே தினத்தில் உதயமான கார்த்திகேயனுக்கே துணையாக வந்து சேர்ந்து விட்டாயே! அப்போதே தெரிய வேண்டாமா செல்லம்! நீயும் நானும் வேறு வேறு அல்ல… என்னைப் பார்த்து பயப்படும் அவசியம் எப்போதுமே இல்லை” என்றான். அவள் தலையசைத்தாள். படுக்கையை நோக்கி நடந்தான். அவளை அமர வைத்து விட்டு, கப்போட்டை திறந்து ஒரு கவரை எடுத்து வந்தான். அவள் அருகில் அமர்ந்து கொண்டு கையில் கொடுத்தான்.

“இதை திறந்து பார்” என்றான். புரியாமல் பார்த்தாள். விழிகள் பிரகாசமாய் ஜொலித்தன.

“கீர்த்திமா, உன்னைப் பார்த்ததும் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்ததுடா. என்னை அறியாத ஈர்ப்பில் கட்டுண்டு போய் அருகில் வந்தேன். அப்போது காற்றில் பறந்த முந்தானையால் மறைக்கப்பட வேண்டிய அனைத்தும் கண்ணில் அப்பட்டமாக விழுந்து, என் உள்ளத்தை கிளர்ந்து எழ செய்தது. அதுவரையில் எனக்குள் அடக்கி வைக்கப்பட்டிருந்த உணர்வுகள், நான் ஒரு ஆண் மகன் என்பதையே ஞாபகப்படுத்தியது. உன்னை அப்படியொரு தோற்றத்தில் பார்த்ததே என் கண்ணுக்குள் நிறைஞ்சு நின்றது. அதை இப்பவும் மறக்க முடியல.” என்றான். அப்படியே கண்களை மூடி அதே நினைவை மறுபடியும் கொண்டு வந்தான்.

“கையில்லா ரவிக்கை அணிந்து பளபளவென்று மினுங்கிய பொன்னிற தேகம். முகத்தை விலக்க தோன்றாமல் அதிலே குடியிருக்க தூண்டும் கழுத்து வளைவுகள். பிறை போல் அகன்ற நெற்றி. மீண்டும் மீண்டும் பார்த்துக்கொண்டே இருக்கத் தூண்டிய வெண் சங்கு பெண்ணவளின் அழகிய சந்திர வதனம். பார்த்தவுடன் சுண்டி இழுக்கும் ஆம்பல் மலர் போன்ற கரியநிற நயனங்கள். அதற்கு கீழே கடித்து சுவைக்க தோன்றிய சிறிய வடிவிலான நாசி. ஆரஞ்சு பழத்தை பிரித்து எடுத்து தனித்தனியாக ஒட்டினார் போன்ற தேனிதழ்கள்! கன்னம் எனும் கதுப்பு, அது மேலும் உனக்கு எடுப்பு. இருக்கிறதா இல்லையா என்று தெரியாத அளவிற்கு என் இரு கரங்களுக்குள் அடங்கிப் போகும் வகையில் வடிவமைக்கப் பெற்ற மெல்லிய சிற்றிடை. பொன்னால் வரையப்பட்ட ஓவியத்தின் கண்சிமிட்ட முடியா வயிற்றுப் பாகம். அதன் மத்தியில் அமைந்து என்னை ஒரேடியாக சுழற்றி உள்ளேயே இழுத்துச் சென்ற பொய்கை. இன்று வரையில் மீள முடியாத வகையில் எனக்கென்று உருவாக்கப்பட்டு, பிரம்மனால் படைக்கப் பெற்ற ஓவியப்பாவை நீ! உன்னை தூரிகையால் தீட்டி மேலும் மெருகேற்றுவதற்காக பிறந்த ஓவியன் நான்!” என்று ரசனையுடன் கூறினான். அவள் விழிகள் உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலை பார்த்ததும் விரிவதைப் போல் மலைப்புடன் விரிந்தன! அவனது விழிகள் குறுகுறுவென அலைந்து, அவள் மேனியெங்கும் சிவக்க வைத்தன. நாணம் மேலிட இரு கரத்தால் முகத்தை மூடினாள் கிருத்திகா. விரல்களை மெதுவாக விலக்கினான். தாமரை மலர் போல் மலர்ந்து விகசித்த வதனத்தையே விழிகளுக்குள் படம் பிடித்தான் கார்த்திகேயன்!

“கீர்த்திமா, அந்த கவரில் இருக்கும் புடவை உனக்காகவே உருவாக்கப் பெற்றது. அதை அவள் அல்ல வேறு யார் கேட்டாலும் கொடுக்க மாட்டேன். ஹோல்டன் நிறப் பட்டுப்புடவையை பார்த்ததும் உன் ஞாபகமாகவே இருந்தது. அதான், உடனே வாங்கிட்டு வந்து என்னோடே வச்சுக்கிட்டேன். நீ என்னுடன் இல்லா விட்டாலும், அது உன் நினைவாக ஆயுள் வரைக்கும் என்னோடு இருக்கும்!” என்றான்.

தன்மீதான அவனது பாசம் ஒருவித சிலிர்ப்பை ஏற்படுத்தியது.

“கார்த்திக்!” என்றாள். குரலே எழும்பவில்லை அவளுக்கு…

“கீர்த்தி, நீ என்னைக்கு மனசு மாறி என்னோடு சேர்ந்து வாழணும்னு ஆசைப்படுறியோ… அன்னைக்கு இதே புடவையை கட்டிட்டு வா. அதைப் பார்த்தே உன் மனநிலையை ஊகித்து, அடுத்த நிமிடமே உன்னை முழுவதும் எடுத்துப்பேன். அதுவரைக்கும் நமக்குள் இந்த அணைப்பும், முத்தமும் போதும்” என்றான். அவள் விழிகள் அசைவற்று போயின. பேச்சற்ற நிலையில் அவனையே பார்த்தாள் கிருத்திகா.

தொடர்கதைக்கான கருத்துகளை கீழே உள்ள லிங்கில் பதிவு செய்யுங்கள்…

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-14.3564/