காதல் சதுரங்க ஆட்டம் 13

அத்தியாயம் : 13

கிருத்திகாவைப் பார்த்து பதினேழு நாட்கள் ஆகிவிட்டன. இத்தனை நாட்களில் அவன் செவியில் விழுந்த வார்த்தைகளும், நேரில் பார்த்த நிகழ்வுகளும், நடந்த சம்பவங்களும் அவனை பேரதிர்சிக்கு உள்ளாக்கியது மட்டுமல்லாமல், மறைத்து வைத்திருந்த பழைய நேசத்தையும் முளை விடச்செய்தது. அவளைக் கண்முன் பார்க்கும் போது முந்தைய வாயாடலும், அவள் மீதான பாசமும் நினைவுக்கு வந்தது. அவளை எப்படியாவது தன்னுடனே தக்க வைத்துவிடும் எண்ணத்தில் வீட்டிற்கு அழைத்தான் கார்த்திக்.

“கிளம்புன்னு சொன்னேன்”

அவள், “இல்லை சார்… நான் வரல” என்றாள்.

‘சார்’ என்ற அழைப்பில் சுருக்கென்று தைத்தது. மறைத்துக்கொண்டு “ஏன்?” என்றான்.

“நான் இத்தனை நாள் போல இங்கேயே…” என்றாள்

“ம்ஹூம்… அது முடியாது. வீட்டுக்கு வேற ஆள் வர்றாங்க. நீ கிளம்பு” என்றான்.

‘எப்பவும் என்னை துரத்தி விடுவதிலே கவனமா இருக்கிறார்’ என்று முனகிக்கொண்டே உதட்டை வளைத்தாள் கிருத்திகா.

அவன், “எப்போதும் எதையாவது காமிச்சு மூடாக்கி விடுவதே வேலையா போச்சு. அப்புறம் ஆசையா பக்கத்தில் வந்தா, கண்ணகி மாதிரி முறைச்சிட்டு திரும்ப வேண்டியது” என்றான். அவள் குனிந்து கொண்டாள்.

“ஒருவேளை இதே வீட்டில் வாழலாம்னு நினைக்கறியோ? எனக்கும் ரொம்ப… ராசியான வீடுதான். அங்கே போனால் அப்பா, தங்கை, பணியாள் இருப்பாங்க. பேசாம இங்கேயே கச்சேரியை ஆரம்பிச்சுடலாமா?” என்று கேட்டுக்கொண்டே மேலும் நெருங்கினான்.

அவளுக்கு பக்கென்றது. ‘இவருக்கு என்னடா ஆச்சு? இன்னைக்கு வந்த நேரத்தில் இருந்து பார்வையும், பேச்சும் ஒரு தினுசாவே இருக்குது. இங்கே வராம அசோக் வீட்டுக்கு போயிருக்க வேண்டியதோ?’ என்று நினைத்து பதட்டத்துடன் நின்றாள்.

“என்ன, அம்மையார் யோசனை எல்லாம் பலமா இருக்கு? ஒருவேளை இங்கே வராம இருந்திருக்கலாமோனு நினைக்கறியோ? ம்கூம்… தப்பும்மா! நீ எங்கே இருந்தாலும் உன்னைத் தேடி கண்டுபிடிச்சு தூக்கிட்டு வந்துருவேன்” என்றான் கார்த்திக்.

அவள் திருடிக் கொண்டு மாட்டியவளை போல திருதிருவென விழித்தாள்.

“ஆஹா! கண்ணாடா இது? அப்படியே கரண்ட் ஷாக் அடிச்ச மாதிரி கவர்ந்து இழுக்குது” என்று சொல்லிக்கொண்டே அவள் மீது மோதினான். அவள் அசைய முடியாமல் சுவரில் சாய்ந்து நின்றாள். மேனியெங்கும் உதறியது. அவனை தள்ளி விட முயன்று, முடியாமல் அவனிடமே மாட்டிக் கொண்டாள் கிருத்திகா. இரண்டு கைகளையும் பின்புறம் வளைத்து தன்மீதே மோதி நிற்கச் செய்தான் கார்த்திக்.

“கல்யாணமாகி ஒரு மாசம் முடிஞ்சிட்டது. இன்னும் ஒண்ணுமே நடக்கல. வா, எல்லாரையும் போல நாமும் தொடங்கி… பிள்ளை குட்டியை பெத்துக்கலாம்” என்று சீண்டலாக கூறினான்.

அச்சத்தில் வயிற்றைப் பார்த்தாள் கிருத்திகா.

“அதுக்கு தான் சொல்றேன் வா” என்றான். அவனது பார்வை மற்றும் சரசமான பேச்சில் உள்ளுக்குள் குளிரெடுத்தது.

“இப்போ வரலை, அப்புறம் பழைய கார்த்திக்கை பார்க்க வேண்டியது வரும்” என்றான்.

அவள் “நீங்க தானே ‘முகத்தில் முழிக்காதே. அறைக்குள் வராதே. மாமாவை பார்க்க கூடாது. மனைவி கிடையாது வேலைக்காரி’ன்னு சொன்னீங்க. பிறகு எதுக்கு இப்போ மட்டும் அழைக்கணும்?” என்று வீம்புடன் கேட்டாள்.

அவளது சிவந்த முகத்தை பார்த்ததும் விழிகள் ரசனையுடன் விரிந்தன.

“ம்… பரவாயில்லையே! இந்த மான் குட்டிக்கும் துள்ளி ஓட தெரியுது. நானும் நடக்கத் தெரியாதுன்னு நினைச்சிட்டேன்?” என்று கிண்டலாக கூறினான்.

அவன் எதற்காக அப்படி பேசுகிறான் என்று தெரியவில்லை. விலக முயன்றும் முடியாமல் நின்றாள் கிருத்திகா.

“கிருத்திகா வான்னு சொன்னால், என் மனைவி உடனே வருவா” என்றான். அவள் விழிகள் பனித்தன.

“உனக்கு உரியதை எல்லாம் ஏற்கனவே மாத்திட்டேன். நீ வர வேண்டியது தான் பாக்கி. இந்த வீட்டிற்கு புது நபர் வரப்போறாங்க. அவங்களையும் நீதான்… நீ மட்டும் தான் கவனிக்கப் போற. அப்புறம் பாரு, என் பொண்டாட்டியோட கவனிப்பு ரெட்டிப்பா எகிறப் போகுது. அதுக்குள்ளே நானும் சாப்பிட்டு ரெடி ஆகிடுறேன்” என்றான். அவனது விழிகளில் இருந்தது புரியவில்லை. யார் வரப் போகிறார்கள் தெரியவில்லை. இனிமேல் என்ன நடக்கப் போகிறதோ அறியவில்லை. யோசனையுடன் அவனையே பார்த்தாள் கிருத்திகா.

“வேலாயுதம்” என்ற அழைப்பில் அவன் வந்து நின்று புன்னகைத்தான்.

“உங்க அம்மா, இன்னையில் இருந்து என்னோட வீட்டில், என் அறையில் தங்கப் போறாங்க. இந்த வீட்டை சுத்தம் பண்ணிட்டு சாவியை அவள் கையில் கொடுத்திரு. நான் இல்லாத நேரத்தில் அவளையும், வீட்டையும் பத்திரமா பார்த்துக்கோ.” என்றான்.

அவள் புருவங்கள் விரிந்தன. ‘என்ன சொல்கிறார் இவர்? வேலாயுதத்தை இவரா என்னைப் பார்த்துக்க ஏற்பாடு செஞ்சார்? பிறகும் எதற்கு அத்தனை கடுமையை காட்டினார்’ புரியவில்லை அவளுக்குப் புதிராக தெரிந்தான் கார்த்திக்.

அவளைத் திரும்பி பார்த்தான். “வா” என்று கைப்பற்றி அழைத்துச் சென்றான். “புவனா” என்ற அழைப்பில் தங்கை விரைந்து வந்தாள். “போய், ஆரத்தி கரைச்சு எடுத்துட்டு வா” என்றான். அவள் புன்னகையுடன் ஓடினாள். சில நிமிடங்களில் மறுபடியும் வந்தாள்.

இருவருக்கும் ஆரத்தி சுற்றினாள். “அண்ணா காசு” என்று கேட்டுக்கொண்டே விரல்களை நீட்டினாள். அவன் உதடுகள் விரிந்தன. “உனக்கு இல்லாமலா…” என்றான். ஐநூறு ரூபாய் நோட்டுகளை எடுத்துக் கையில் வைத்தான்.

“நீங்க உள்ளே போங்க அண்ணா. நான் வந்துடறேன்” என்றாள்.

அவள் கையைப் பற்றி உள்ளே அழைத்து வந்தான். நேராக அப்பாவின் அறைக்குள் நுழைந்தான். வாடி, வதங்கிப் போய் கட்டிலில் கிடப்பவரை பார்க்கையில் மனம் கலங்கியது.

“சார்” என்றாள் கிருத்திகா. அவளது அழைப்பில் மெதுவாக விழிகளைத் திறந்தார். பதினாறு நாட்களுக்கும் பிறகு அவளைப் பார்க்கையில் கண் கலங்கியது. “வாம்மா” என்றார் ஹரிச்சந்திரன். அப்பாவைத் தூக்கி அமர வைத்தான் கார்த்திக். அவரது கால்களைத் தொட்டு கண்ணில் ஒற்றினான்.

“உங்க மருமகளை அழைச்சுட்டு வந்திருக்கேன். இனி எப்பவும் அவள் உங்களோடே இருப்பா. உங்களைப் பத்திரமா பார்த்துப்பா. எதையும் நினைச்சு வருத்தப்படாம சந்தோசமா இருங்க” என்றான்.

அவர் நிம்மதியாக உணர்ந்தார்.

“கிருத்திகா, உன் கையால் சாப்பிட்டு ரொம்ப நாளாகிடுச்சு. போய், உப்புமா ஏதாவது கிளறி எடுத்துட்டு வா. ஆபிஸ் போக நேரமாகுது” என்றான். “அண்ணி எனக்கும்” என்றாள் புவனா. “எனக்கும்மா” என்றார் மாமனார்.

மறுக்க தோன்றாமல் எழுந்து சென்றாள். நடப்பதெல்லாம் நிஜம் தானா என்று தெரியாமல் தடுமாறினாள். கண்ணைத் துடைத்துக்கொண்டே சமையல் அறைக்குள் நுழைந்தாள்.

புவனா “நல்ல அண்ணா” என்று கன்னத்தில் முத்தமிட்டாள்.

ஹரிச்சந்திரன் “நீ நல்லா இருப்பா” என்று ஆசிர்வதித்தார்.

பதினைந்து நிமிடத்தில் சூடான நெய் தோசை, சட்னி, சாம்பாருடன் வந்து நின்றாள். புவனா காஃபியுடன் வந்தாள்.

சட்னியை பார்த்ததும் முந்தைய நினைவில் உதடுகள் துடித்தன.

“என்ன மேனேஜர் மேடம், சட்னியில் உப்பிருக்கா இல்லை, உப்பில சட்னி இருக்கா?” என்று கிண்டலாக கேட்டான். அவர்கள் புரியாமல் பார்த்தனர். அவள் அசடு வழிந்தாள்.

“என்ன அண்ணா சொல்றீங்க?” தங்கை புரியாமல் கேட்டாள். அவன் அன்றைய நிகழ்வை மறைக்காமல் கூறினான்… இருவரும் வாய் விட்டு சிரித்தனர். அவள் நாணத்துடன் சமையல் அறைக்குள் புகுந்து கொண்டாள்.

சூடான உணவை சுவையுடன் உண்டான். கண் கலங்கியது. எத்தனை நாளாகி விட்டது இப்படி நிம்மதியாக சாப்பிட்டு என்று நினைத்துக்கொண்டே உண்டு முடித்தான். தட்டை அவளிடம் கொடுத்து விட்டு, எழுந்து அவளைத் தொடர்ந்தான். மனையாளின் முகத்தை பார்த்துக்கொண்டே கை கழுவி சுத்தம் செய்தான்.

“மேல வா!” என்று தன்னுடைய அறைக்கு அழைத்துச் சென்றான். முதல் நாளைய நினைவில் அவள் தயங்கினாள்.

“இங்கே பார். நீ செஞ்ச தவறுக்கான தண்டனையை கொடுத்தேன். அத்தோடு முடிஞ்சுது. இன்னையில் இருந்து என்னோட அறையில் மட்டுமே தங்குற. உனக்கு பிடிக்குது, பிடிக்கலை என்பதெல்லாம் கிடையாது” என்று கண்டிப்புடன் கூறினான்.

அப்படியும் அவள் வராமல் நிற்பதைக் கண்டு, கைப்பற்றி சுண்டி இழுத்தான் கார்த்திக். மார்பில் விழுந்தவளை அப்படியே ஆரத் தழுவினான். அவன் எண்ணம் புரியாமல் அவளது உள்ளம் தடம் புரண்டது.

“உங்களுக்குத்தான் என்னைப் பிடிக்கவே இல்லையே! பிறகும் ஏன் இப்படி?” என்றாள்.

அவன் பதில் கூறாமல் நின்றான்.

“சாம்பவி …” என்று தயக்கத்துடன் கேட்டாள்.

“எங்க அப்பா அன்னைக்கு ஒரு நாள் சொன்னார். ஆயிரம் பேரை பிடிக்கலாம். காதல் ஒருத்தர் மேல மட்டுமே வரும். முதல்ல பிடித்தத்திற்கும், காதலுக்கும் உள்ள வித்தியாசத்தை புரிஞ்சிக்கோ. உன் மனசுல இருப்பது யார் என்பதை தெரிஞ்சிக்கோ. பின்னால் கஷ்டப்படாதேனு… அவளைத் தானே காதலிச்சேன். அவளிடம் தானே மனம் விட்டுப் பேசினேன். அவளோடு தானே சுற்றி அலைந்தேன். அவளை விரும்பாமலா அப்படியெல்லாம் நடந்துக்கிட்டேன்? ஒருத்தியை உண்மையாக நினைச்சு பழகும் போது, அடுத்தவள் மீது எப்படி காதல் வரும்னு நினைச்சுத்தான், கல்யாண ஏற்பாட்டை ஆரம்பிச்சேன்.

ஆனால், அவளை விடவும் உன்னைத்தான் என் மனம் அதிகமா விரும்பியது. உன்னோடு இருக்கணும். உன்கிட்ட கிண்டல் பண்ணனும், உன் கையால் செய்யும் உணவை உண்ணணும். நான் இருக்கும் நேரமெல்லாம் நீயும் என்னுடனே இருக்கணும்னு ஆசைப்பட்டது. அதுக்குப் பெயர் காதல்னு நான் நினைக்கலை… உன்னை என் மனசுல உயரமான இடத்துல வச்சிருந்தேன். அதை இல்லாம ஆக்கி அழிச்சது நீதான். அன்னைக்கே வாய் திறந்து உண்மையை சொல்லியிருந்தா, எனக்கும் அப்படியொரு அவப்பெயர் ஏற்பட்டிருக்காது. நாமும் மனதால் பிரிஞ்சிருக்க மாட்டோம். இந்த அளவுக்கு முரடனா மாறி உன்னையே வதைத்திருக்கவும் மாட்டேன்” என்று சொல்லிவிட்டு கண் கலங்கினான். தொண்டை அடைத்தது.

“கிருத்திகா, நடந்ததை மாற்ற முடியாது. மறக்கவாவது முயற்சிக்கலாம். இனிமேல் அப்பாவை சார்னு கூப்பிடாதே. அவர் உனக்கு மாமா… நானும் உனக்கு சார் அல்ல” என்றான்.

அவள் மறுப்பாக தலையசைத்தாள்.

“வக்கீலை பார்த்து விவகாரத்து வாங்கிட்டு விலகிப் போயிடலாம்னு கனவு காணாதே. உன் கனவு நான் மட்டுமே!” என்று அழுத்தமாக கூறினான்

‘நான் அங்கு சென்றது, இவருக்கு எப்படி தெரிய வந்தது?’ என்று அதிர்ச்சி மேலோங்க அவனையே பார்த்தாள்.

“நீ அசைஞ்சாலே நான் கண்டுபிடிப்பேன். அதில் இதுவா பெருசு…” என்றான். உள்ளம் தடதடக்க அச்சத்துடன் நின்றாள் கிருத்திகா.

“நீ யார், எதுக்காக இங்க வந்தே? எதனால் அப்பா மேல அத்தனை பாசத்தைக் கொட்டுன? ஏன் என்கிட்ட அப்படியெல்லாம் நடந்துக்கிட்ட? உனக்கு நான் யார்னு எனக்கும் தெரியும்” என்று கூறினான். அவள் மலைப்புடன் நின்றாள்.

“நான் காதலிச்சதா நினைச்சவளும், என்னைக் காதலிச்சவளும் ஆடிய ஆட்டத்தில், உண்மையான பாசம் எதுன்னு தெரியாமலே நான் ஜோக்கரா தோத்து போயிட்டான். இனிமேல், நான் ஆடப் போற சதுரங்க ஆட்டத்தில் அடியோடு இல்லாம ஆகப் போறது யார்னு கூடிய சீக்கிரம் பார்க்கலாம்” என்றான். அவளது விழிகள் பயத்தில் விரிந்தன.

அவன் அட்டகாசமாக சிரித்தான். “என் கொலு பொம்மையை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன். இனிமேல் அவள் மனசு மாறி என்னை மன்னிச்சு ஏற்கும் வரைக்கும் காத்திருப்பேன். என்னை மன்னிச்சிருன்னு ஒரே வார்த்தையில் கேட்டா, இத்தனை நாள் அவள் பட்ட கஷ்டம், ஏக்கம், கண்ணீர் எல்லாம் தீர்ந்து போகாது. அவள் பட்ட அதே வேதனையை நானும் அடையணும். என் தங்கையின் விபத்துக்கு காரணமானவனை சம்ஹாரம் பண்ணணும்? காதல் எனும் பெயரில் என்னைக் காயப்படுத்தியவளை கதற விடணும்? வேலைக்காரியா வந்து வீட்டுக்காரியா மாறிய உன்னை, சதா வார்த்தையால் வதைத்த அண்ணியை அடக்கணும்? என் அப்பாவோட இந்த நிலைமைக்கு காரணமானவனை கொன்னு குழிதோண்டி புதைக்கணும். இத்தனையும் செய்தால் தான் என் மனசு ஆறும்” என்றான். அவனது விழிகள் சிவந்து உடலெங்கும் கோபத்தால் ஆடியது. அவன் தோளைப் பற்றி உலுக்கினாள் கிருத்திகா.

“வேண்டாம் கார்த்திக், அவசரப்படாதீங்க. உங்களுக்கு ஏதாவது ஆகிடுமோன்னு பயமா இருக்கு!” என்றாள். அவன் விழிகள் நீரால் தழும்பி நின்றது. அவளையே கண் கொட்டாமல் பார்த்தான்.

“எனக்கு எதுவும் ஆகாதுடா. பயப்படாதே! இத்தனை நாள் தப்பையும் செஞ்சுட்டு எந்தவித சங்கோசமும் இல்லாம, தைரியமா சுத்திட்டு இருக்கிறாங்களே, அவங்க அத்தனை பேரையும் அடக்கி, இல்லாம ஆக்கி காட்டுறேனா இல்லையா பாரு…” என்றான் கோபமாக.

பின்னர், அவளது கன்னத்தைப் பற்றினான். “நீ என் மனைவிடா! உன்னை விட்டுப் பிரிஞ்சுருக்க என்னால முடியாது. உன்மேல் நான் மறைச்சு வச்சுருந்த பாசத்தைக் கொட்ட எனக்கொரு வாய்ப்புக் கொடு. இல்லை, என் மேலுள்ள கோபத்தை காட்டணும்னு நினைச்சா… என்கிட்டே மட்டுமே காட்டு. நான் தயாராகவே இருக்கேன்” என்றான். அவள் தவிப்புடன் கணவனின் கைகளை பற்றினாள்.

“நாளைக்கு அப்பாவை ஹாஸ்பெட்டலுக்கு அழைச்சிட்டு போகணும். சரியா சாப்பிடாம வீக்கா தெரிகிறார். நீ பார்த்துக்கோ. பயப்படாம, நிம்மதியா சாப்பிட்டு ரெஸ்ட் எடு. ஈவ்னிங் பார்க்கலாம்” என்றான். கண்ணாடியை எடுத்து அணிந்து கொண்டே வெளியேறி சென்று விட்டான்.

கார்த்திக்கிடம் இப்படியொரு மாற்றத்தை எதிர்பாராமல், இனி என்னவெல்லாம் நடக்க போகிறதோ என்கிற அச்சத்தில் இறைவனை துணைக்கு அழைத்தாள் கிருத்திகா. ‘கார்த்திக் எப்படி அனைத்தையும் தெரிஞ்சுக்கிட்டார்? யார் சொல்லி இருப்பாங்க? அவரது அதிரடியால் ஏதாவது ஆகிட்டா என்ன செய்வது?’ என்று நினைத்துக்கொண்டே மாமனாரின் அறைக்குச் சென்றாள்.

தொடர்கதைக்கான கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் தெரிவியுங்கள்….

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-13.3550/